Tamil Madhura யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 13

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 13

பனி 13

 

சிவபெருமாளின் வீட்டிற்குச் செல்ல ஜீப்பில் ஏறியவன் தன் நண்பன் ஒருவனிடம்

 

“வீட்டில் யாரு யாரு இருக்காங்க?, மற்றவர்கள் எல்லோருமே போயிட்டாங்களா? இல்லை கொஞ்சம் பேர் சரி வீட்டில் இருக்காங்களா?” என்று கேட்க,

 

“மச்சான் நமளுக்கு கிடைச்ச தகவல் படி அவங்க வீட்டு ஆம்பிளைங்க எல்லாருமே அடக்கம் பன்ன போயிட்டாங்க, வீட்டில் யாரும் இல்லை. முக்கியமான விஷயம் அவன் பொண்ணு வேணி பத்து வருஷத்துக்கு அப்பொறமா ஊருக்கு வந்துருக்காளாம்” என்றான்.

 

“சிவபெருமாளோட பொண்ணா?” என்று கேட்க,

 

“ஆமாடா, அந்த பொண்ணுன்னா அந்த வீட்டில் எல்லாருக்குமே உயிர். அந்த பொண்ணுக்கு சின்ன காயம் பட்டாலும் அவங்க எல்லாருமே துடிச்சுபோயிருவாங்க. அதுவும் அந்த சிவபெருமாள் சொல்லவே தேவையில்லை” என்றான் இன்னொருவன்.

 

“அப்போ நம்ம டார்கட் இனிமேல் அந்த பொண்ணு தான்” என்றார் மகாலிங்கம்.

 

“அந்த பொண்ணு இப்போ வீட்டில் தான் இருக்கும். அந்த பொண்ணை இன்றைக்கே தூக்கிட்டா, சிவபெருமாள் பொட்டிக்குள்ளேயே அடங்கிருவான்” என்றான் ஒருவன்.

 

ஆதி அனைத்தையும் கேட்டுக் கொண்டே வந்தான். ஏனோ அவன் மனம் ஒரு நிலையில் இருக்கவில்லை. தன் மாமா இறந்ததிற்காகவே இவன் மனம் இவ்வாறு இருக்கின்றது என்றது தவறாக யூகித்துக் கொண்டான்.

 

அவர்களின் அந்த ஜீப் சிங்கம்பெட்டியில் நடுநாயகமாக வீற்றிருந்த அந்த கம்பீரமான பெரிய வீட்டின் முன் நின்றது. அனைவருமே வீட்டின் பின்புறம் இருந்ததால் இவர்கள் வந்ததை கவனிக்கவில்லை.

 

தன் சித்தப்பாவின் நினைவுகள் அதிகமாகத் தாக்க தாயை அணைத்துக் கொண்டு அழுதாள். கிருஷி தூரத்தில் தனது அன்னையை அணைத்துக் கொண்டு அழுதாள். அவள் தாவணி அணிந்து முதுகுப்புறம் தெரிய இருந்ததால் அவனால் அவள் யாரென்று பார்க்க முடியவில்லை.

 

அவன் நண்பர்களில் ஒருவன்

 

“தாவணி உடுத்த பொண்ணு தான் சிவபெருமாளோட பொண்ணு” என்று கூற

 

ஆதி தன் கையை நீட்ட அதைப் புரிந்துக் கொண்ட ஒருவன் அவன் கையில் அறுவாளைக் கொடுத்தான்.

 

ஆதி அவளிடம் கோபமாக அறுவாளுடன் நெருங்கினான். தன் அன்னையை அணைத்து அழுதுக் கொண்டு இருந்தவளை தன் கையால் இழுத்த உடனேயே அறுவாளை வெட்டுவதற்காக ஓங்கினான்.

 

கனகா, “வேணி” என்று கத்த மற்றவர்களும் கத்தினர்.

 

மகாலிங்கமும் “வெட்டு தேவ்” என்று கத்தினார்.

 

கிருஷி, தேவ் இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இருவரின் கண்களிலும் அனுமதி இன்றி கண்ணீர் சுரந்தது.  இருவரின் கண்களும் ஏமாற்றம், வலி, தோல்வி, இன்னும் எண்ணிலடங்கா உணர்வுகளை வெளிப்படுத்தின.

 

ஆதியின் மனம்,

‘நீ உயிருக்கு உயிரா நேசிச்ச உன் காதலியையே வெட்டப் போயிட்டையே’ என்று கதற

 

‘இவ சிவபெருமாளோட பொண்ணா’ என்று அதிர்ந்தான்.

 

கிருஷி கூற முடியா வலியை சுமந்துக் கொண்டு இருந்தாள்.

 

‘தன்னைக் காக்க இருந்தவனே தன்னை அழிக்க தன் முன் நின்று இருக்கிறானே’ என்று கத்தி அழுதது அவள் மனது.

 

“வெட்டு தேவ்” என்ற தன் சித்தப்பாவின் குரலில் தன்னிலை அடைந்தவனின் கைகள் நடுங்க ஆரம்பித்தன.

 

அவனால் அவள் கண்களை விட்டு தன் பார்வையை அகற்ற முடியவில்லை. இருவரும் இதே நிலையில் இருக்க,

 

“அண்ணா அவங்க அடக்கம் பன்னிட்டு வாராங்களாம்” என்று ஒருவன் கத்த,

 

மகாலிங்கம் தேவின் கைகளை பிடித்து இழுக்க தன்னை சமன்படுத்தியவன் தன் கண்களை மூடித் திறந்து அவளை ஒரு முறை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றான்.

 

கிருஷியால் அவ் அதிர்ச்சியில் இருந்து மீளமுடியவில்லை. அவ்விடத்திலேயே ‘தொப்’ என்று அமர்ந்தாள். அவளை அணைத்துக் கொண்டு அவள் அம்மா, சித்தி, தங்கை என அழ, நந்தினி அவளைப் பார்த்துக் கண்ணீர் வடித்தாள்.

 

சிறிது நேரத்தில் ஆண்கள் அனைவரும் வருகை தர நடந்ததைக் கேள்வியுற்றவர்கள் கோபத்தின் உச்சியில் இருந்தனர்.

 

கிருஷியின் அருகில் வந்த பெருமாள்,

“வேணி மா பயப்படாதடா, ஒன்னும் இல்லை அப்பா அண்ணா எல்லாரும் இருக்கோம் இல்லையா? தைரியமா இரு” என்று அவள் கூந்தலை வருடிக் கொடுக்க அவள் மௌனமாகவே இருந்தாள்.

 

அவள் வெட்ட வருகை தந்ததன்  அதிர்ச்சியிலேயே இருக்கிறாள் என்று எண்ணிய தாய் அவளை அறைக்கு அழைத்துச் சென்றாள். அவளை கட்டிலில் உறங்க வைத்து கதவை சாற்றி ஹாலிற்குச் சென்றார்.

 

கிருஷி எழுந்து உடனேயே கதவைச் சாற்றி மௌனமாக கண்ணீர் வடிக்க, மனமோ கதறி அழுதது. அதே நேரம் அவளுக்கு பவி அழைப்பை ஏற்படுத்தினாள்.

 

அதை ஏற்றவள் சிறிது நேரம் அமைதியாக இருக்க,

 

“என்னடி ஊருக்கு போனதுக்கு அப்பொறமா எல்லோரையும் மறந்துட்டியா? ஆனால் ஒன்னு ஆதி அண்ணாவை மட்டும் மறக்காமல் இருப்ப” என்று நிலமை தெரியாமல் பேச,

 

“பவி பிளீஸ்” என்று அவள் கெஞ்ச, அவள் வெட்கப்பட்டு கெஞ்சுவதாக தவறாக உணர்ந்த பவி,

 

“இப்போ டைமைப் பார்த்தியா 11.36, அண்ணா உனக்கு 12.36 க்கு தானே உனக்கு புரொபோஸ் பன்னுனாரு, நீங்க இரண்டு பேரும் காதலிச்சு 23 மணி நேரம் டி” என்று பவி கூற

 

“நிறுத்துறியா அந்த தேவோட புராணத்தை” என்று கத்தினாள் கிருஷி.

 

அவள் பேச்சில் அதிர்ந்த பவி “கிருஷி என்னடி ஆச்சு? யேன்டி இப்படி பேசுற? உங்க இரண்டு பேருக்கும் அதற்குள்ள பிரச்சனை வந்திருச்சா?” என்று வருத்தமாக கேட்க,

 

“பவி அவன் என்னை ஏமாத்திட்டான் டி, அவன் என்னை ஏமாத்திட்டான்” என்று அழுதாள்.

 

“மச்சி என்ன பேசுற நீ?” என்று கேட்க,

 

“மச்சி அவன் வேறு யாரும் இல்லை டி, எங்களோட பகை குடும்பத்தோட வாரிசு. ராஜேஸ்வரி அம்மாவோட பையன் தேவ்.. அவன் தான் ஆதி” என்று அழுதாள்.

 

“என்னடி சொல்ற? உனக்கு யாரு சொன்னா? மறந்தே போயிட்டேன் நேற்று எதுக்கு அவசரமா ஊருக்கு கிளம்பின? நான் போன் பன்னப்ப கூட நீ எடுக்கவே இல்லையே” என்று பதட்டமாக கேட்க,

 

கிருஷி நேற்று நடந்த அனைத்தையும்  கூறினாள்.

 

“உன் சித்தப்பாவை அவங்க கொன்னுட்டாங்களா?” என்று கூறும் போதே பவியின் கண்களும் கலங்கிவிட்டன்.

 

கிருஷியின் சித்தப்பா இவள் மீது வைத்திருந்த பாசத்தைப் பற்றி அவள் அறிந்தவள் ஆயிற்றே. பெற்ற மகளை விட இவள் மேல் அல்லவா உயிராய் இருந்தார். அப்படிப்பட்டவர் இறந்ததை தன்னாலேயே தாங்கமுடியவில்லை. கிருஷி எவ்வாறு தாங்கிக் கொள்வாள் என்று நினைக்கும் போதே நெஞ்சே அடைத்தது.

 

“ஆமா டி, இன்றைக்கு அந்த ஆதி அவங்க மாமாவை கொன்னதுக்காக என்னையே வெட்ட வந்துட்டான் டி” என்று கிருஷி அழுதாள்.

 

“என்ன டி சொல்ற?” என்று கேட்க,

 

இன்று நடந்ததைக் கூறினாள்.

 

“அவன் என்னை ஏமாத்திட்டான்” என்று மீண்டும் அழ

 

“லூசு டி நீ, உன்னை அண்ணா பழிவாங்கனும், உன்னை ஏமாத்தனும்னு நினைச்சா அவரு அதை சென்னையிலேயே பன்னி இருப்பாரு. இங்கே உனக்கு பாதுகாப்பே இல்லையே, ஆனால் அங்கே எல்லாரு முன்னாடியும் வெட்ட வந்தவரு உன்னை பார்த்து அதிர்ச்சியாகிட்டு வெட்டாமல் தானே இருந்தாரு. அப்போ நீ தான் சிவபெருமாளோட பொண்ணுன்னு அவரும் எதிர்பார்க்க இல்லை” என்றாள்.

 

“இல்லை டி, அவன் அப்பாவை பழிவாங்க என்னை பகடைகாயா யூஸ் பன்னி இருக்கான்” என்று கிருஷி கூற

 

“நீ பக்கத்துல இருந்தால் உன் கன்னம் பழுத்து இருந்திருக்கும். பைத்தியக்காரி, அப்படி பார்த்தால் நீ கூடதான் அண்ணாவோட குடும்பத்தை பழிவாங்க காதலிக்கிறது போல நடிச்சிருக்கனு சொல்லலாம்” என்று கூற

 

“பவி” என்று அவள் கத்த

 

“கத்தாத கிருஷி, உனக்கு சொன்னா கசக்குது, அண்ணனுக்கு சொன்னா இனிக்குதா?” என்று கேட்டாள் பவி.

 

மறுபுறம் விசும்பல் மட்டுமே கேட்டது.

 

“சரி டி, உன் அண்ணன் நல்லவனா இருந்தாலும், இல்லைன்னாலும் எதுவுமே பன்ன முடியாது. எல்லாமே கையை மீறி போயிருச்சு. என் காதல் செத்துரிச்சி டி, என் லக்ஷன் செத்துட்டான் டி, இப்போ தேவ் தான் இங்க இருக்கான். யேன் DSP ஆதி கூட இல்லை” என்று கூறி அழ

 

“கிருஷி” என்று அழுதுக் கொண்டே பவி பேச,

 

“பிளீஸ் பவி, நான் பேசுறேனே?, என் வாழ்க்கையில் யாரையுமே காதலிக்க கூடாதுன்னு நினைச்சேன் டி, என் அப்பா, அம்மா சொல்றவனை கல்யாணம் பன்னனுமனு நினைச்சேன். காதலுக்கு இடமே இல்லைன்னு சொன்ன என்னையே காதலிக்க வச்சான் டி. அவன் காதலை வச்சி தான் நான் உணர்ந்தேன். ஆனால் இப்போ என்னால முடியல்லை டி. காதலிச்சு இன்னும் ஒரு நாள் கூட முழுசா முடியல்லை டி. அதுக்குள்ள என் காதல் புதைந்திருச்சே டி,  அவனை கல்யாணம் பன்ன போறேன்னு சந்தோஷமா இருந்தது. ஆனால் இப்போ என் மனசு சுக்கு நூறா உடைஞ்சி இருக்கு. என்னை காவல் காக்க இருந்தவனே இன்றைக்கு எனக்கு எமனா என் கண்ணு முன்னாடி வந்து இருந்தான் டி. அந்த காதல் எனக்கு வராமலே இருந்து இருக்கலாம். அவனை புருஷனா நினைச்சேனே, அவனுக்காக வாழனும் நினைச்சேன். எல்லாமே நாசமாகிறிச்சு டி. ஒரு உண்டியலில் நாம பணத்தை ஆசையா சேமிச்சு வைப்போம், ஆனால் அந்த காசெல்லாமே செல்லா காசுன்னு சொன்னால் என்னால என்னடி பன்ன முடியும். அந்த காசை போலவே அந்த காதல் செல்லா காதலா மாறிருச்சு, இப்போ இவனை நினைச்ச மனசால் வேறு ஒருத்தனை நினைச்சு பார்க்க முறியாதே டி” என்று அழ

 

“அழாத டி ” என்று பவி கெஞ்ச

 

“எப்படி டி அழாமல் இருக்க முடியும்? நான் என் காதலில் தோத்துட்டேன், என் வாழ்க்கையிலேயும் தோத்துட்டேன், மற்றவர்கள் தன்னோட காதலன், காதலி விட்டுட்டு போயிட்டாங்க, இறந்துட்டாங்கன்னு அவங்க காதலில் தோத்து இருப்பாங்க. ஆனால் நான் அப்படி இல்லையே” என்று அழும் போதே அவளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட,

 

“கிருஷி என்னாச்சு டி பேசு டி” என்று பவி பதறும் போதே கிருஷி மூர்ச்சையாகி சரிந்தாள்.

 

“கிருஷி, கிருஷி பயம்காட்டாமல் பேசு டி” என்று கெஞ்சியும் சத்தம் வராமல் போக,

 

“கிருஷி” என்று கத்தினாள் பவி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 3யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 3

பனி 3   கோலேஜ் இலிருந்து வெளியான ஆதி, விக்ரமன் நேராக ஹொஸ்பிடலிற்குச் சென்று, பி.எம் ஐப் பெற்று அவர்களது அலுவலகத்திற்குச் சென்றனர். தனது சீட்டில் வந்து அமர்ந்த ஆதி,   “எனக்கு அந்த கிளாஸ் ரூமுக்கு வெளியே இருக்கிற ரோடுக்கு

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 10யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 10

பனி 10   மாலை கோலேஜ் முடித்தவுடன் மோலிற்கு செல்லும் போது ஒரு கார் அவளை போலோ செய்வதைக் கவனித்தவள் சற்று வேகமெடுத்துப் போக, அவளை இடமறித்து அந்த கார் அவள் ஸ்கூர்டியின் முன்பு வந்து நின்றது.   காரிலிருந்து ஒருவன்

யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 37யஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’- 37

பனி 37   சிவபெருமாள், “பகைக்காக, கௌரவத்திற்காகவும் தம்பியை கொன்ன எனக்கு அவன் பொண்ணு உயிர் பெரிசு இல்லை ஆதி” என்றார்.   ஆதியோ இதைக் கேட்டு சிலையாக நின்று இருந்தான்.   “என்ன தேவ் அதிர்ச்சியா இருக்கா?, உன் பொன்டாட்டி