29 – மீண்டும் வருவாயா?
நேத்ரா அனைத்தும் எடுத்து பேக் பண்ணிவிட்டு விஜயை அழைக்க “என்ன நித்து கிளம்பலாமா?”
அவளோ “கடைசிவரைக்கும் எங்க போறோம் எப்போ ரீட்டர்ன்னு தான் சொல்லல..டிரஸ் எடுத்து வெச்சதாவது போதுமா ஓகே வான்னு பாருங்க..” என
அவன் எட்டி பாத்து விட்டு “ஆஹ்…அதெல்லாம் ஓகே..” என அவள் அவனை முறைக்க அவனோ “நீதானே சொன்ன.. வசந்த் கல்யாணம் முடிஞ்சதும் நான் எங்க கூப்பிட்டாலும் வருவேன்னு.. ஆல்ரெடி உனக்கு அடிபட்டத்துல இரண்டு வாரம் பிளான் தள்ளிபோய்டிச்சு.. இப்போவும் என்ன கேள்வி கேட்டுகிட்டே இருக்க.. வா போலாம்..” என நித்து “நான் இப்போ என்ன வரமாட்டேனா சொன்னேன்.. குழந்தைகளுக்கு எக்ஸாம் டைம்.. சரி எவ்ளோ நாள், எங்க எதுமே கேட்டாலும் சொல்லமாட்டேங்கிறீங்க.. இப்போவரைக்கும் குட்டிஸ் கேட்கல.. கேட்டா நான் என்ன சொல்றது…” என அவன் “அதெல்லாம் உன்கிட்ட யாரும் கேட்கமாட்டாங்க.. நீ வா” என கூறி அழைத்து செல்ல வெளியே வந்ததும் அனைவரும் ஒன்றாக நின்று வழியனுப்பினர்.
அனைவரும் “பாத்துடா. பத்திரமா கூட்டிட்டு போய்ட்டு வா.. குழந்தைகளை நாங்க பாத்துக்கறோம்.. நீங்க பொறுமையா வாங்க..” என
ஜீவி “ஆமாப்பா.. வீட்ல எல்லாரையும் நாங்க பாத்துக்கறோம்..”
ஜீவா “நீங்க மம்மிய பாத்துக்கோங்க..” என இருவரும் பெரிய மனிதர்கள் தோரணையில் சொல்ல அவனும் சிரித்துவிட்டு இருவருக்கும் முத்தமிட அவர்களும் தந்தையிடம் கொஞ்சிவிட்டு தாயிடம் வர “செல்லோ இரண்டு பேரும் ஒழுங்கா எக்ஸாம்ஸ் பண்ணுங்க… சமத்தா இருக்கணும்…ஓகே வா?” என
“ஓகே மா..” என இருவரும் கட்டிக்கொண்டனர். பின் அனைவரிடமும் கூறிவிட்டு கிளம்ப
விஜய் “டேய் கொஞ்ச தூரம் நான் டிரைவ் பண்றேன்.. அப்புறம் நீ ஓட்டிக்கோ..” என சரி எனக்கூறி வசந்த் மற்றும் வாணி இருவரும் பின்னால் அமர்ந்துகொள்ள மெதுவாக நித்து “டி வாணி எங்க போறோம்?” என கேட்க அவளோ “சாரி மை டியர்..அண்ணா சொல்லக்கூடாது சொல்லிருக்காங்க..” என கடுப்பான நித்து அவளை முறைத்துவிட்டு “பெரிய இவ.. எனக்கு அப்புறம் தானே டி உனக்கு அண்ணா வந்தாங்க.. பாத்துக்கறேன்.. நீ சொல்லாட்டி என்ன..என் அண்ணாகிட்ட கேட்டுக்கறேன்.. வசந்த் அண்ணா..”
அவனோ “சாரி சிஸ்டர்.. உண்மைய சொன்னா இவ அடிப்பா அவன் உதைப்பான்..இதுங்க இரண்டுகிட்டேயும் வாங்க என்னால இப்போதைக்கு முடியாது.. சோ ப்ளீஸ்..” என அவனும் ஜகா வாங்கிவிட கடுப்பானவள் முகத்தை தூக்கிவைத்துக்கொள்ள காரினுள் ஏறிய விஜய் அவளை கண்டு சிரித்துவிட்டு “என்ன யாருமே சொல்லலையா?” என சீண்ட
நேத்ரா “என்னை தவிர நாம எங்க போறோம்னு வீட்ல எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு தானே?” என அவள் சரியாக யூகிக்க விஜய் புன்னகையுடன் “ஆமா டி செல்லம்.. ஆனா யாருமே சொல்லமாட்டாங்க… ரிலாக்ஸ் பேபி.. காலைல உனக்கே தெரியப்போகுது. ஏன் அவசரப்படுற?” என கூற இவளும் “என்னவோ பண்ணுங்க..” என விட்டு விட சிறிது தூரம் சென்றதும் அவனே நித்துவை பின்னால் அழைத்துவந்து மடியில் படுக்க வைத்துக்கொண்டான்..காயங்கள் ஆறிவிட்டது என்றாலும் அவ்வப்போது வலி இருக்க அவளே சமாளித்துக்கொண்டாலும் அவள் முகம் வலியில் சிறிது சுருங்கினாலும் சரியாக அறிந்து ரொம்ப நேரம் உட்கார்ந்தே இருக்கவிடாமல் அவ்வப்போது ரிலாக்ஸ் செய்யவும்,கை கால் வலிக்கும் இடத்தில பிடித்துவிட, படுக்க வைத்துக்கொள்ள என கவனமாக பார்த்துகொண்டான். அதேபோலவே இப்போதும் அவன் கூற இவளும் புன்னகையுடன் அவன் மடியில் படுத்துகொண்டாள்.
விஜய் “நித்து, ஏய் செல்லம்ஸ் எந்திரியேன்..” என அவளை அழைக்க அவள் மெதுவாக கண் விழித்தவள் “ரீச் ஆகிட்டோமா?” என வினவ விஜய் “ம்ம்.. இறங்கு போலாம்.” என்றான்.
காரை விட்டு இறங்கியவள் ஒரு நிமிடம் அதிர்ச்சியா ஆனந்தமா என பிரிக்க முடியா வகையில் “விஜய்.. இங்க..?” என கேள்வியில் நிறுத்த
விஜய் “ம்ம்..எல்லாம் உனக்காக தான்..என்கூட நீ இங்க இருக்கணும்னு நினச்சதானே?”
அவளோ “ஆனா நான் எதுவுமே இதுவரைக்கும் சொல்லலையே.? எப்படி தெரிஞ்சது?”
“அது எனக்கு யாரோ சொன்னாங்க..”
“ப்ளீஸ்..ப்ளீஸ் சொல்லுங்க..” என அவள் சிறுபிள்ளை போல சிணுங்க அதை ரசித்தவன்
அவளது விரல்களை பற்றியவன் ஒரு ஒரு விரலாக சொடுக்கு எடுத்துவிட்டு கொண்டே கூறினான்.. நீயும் ஜீவியும் இங்க கொடைக்கானல்ல இருந்த போது நீ எவ்ளோ பிரச்னைய சந்திச்சிருப்ப…உனக்கு அடிபட்டிருந்த போது ஜீவி சொன்னா ‘என்கூட இருந்தாதான் நீ சேஃப்பா இருப்ப, எந்த பிரச்சனை வந்தாலும் என்கூட இருந்தா அது எல்லாமே போய்டும்னு நீ சொல்லுவேன்னு..’ ஏனோ தோணுச்சு.. அப்டினா நான் உன்கூட இல்லாத சமயத்துல உன்னை சங்கடப்படுத்துற அளவுக்கு என்ன பிரச்சனை வந்திருக்கும்னு…. வாணிகிட்ட கேட்டேன்… நெறையா தெரிஞ்சது.. ஒரு பொண்ணு தாலி இல்லாம குழந்தையோட மட்டும் வந்தா அவளை இந்த சொசைட்டி எப்படி பாக்கும். உன்னை எப்படி எல்லாம் இங்க இருந்தவங்க தப்பா நினச்சு ட்ரீட் பண்ணிருப்பாங்க.. என்னதான் தைரியமா இருந்தாலும் பதில் சொன்னாலும் எவ்ளோ பிரச்சனை எவ்ளோ பேச்சு கேட்கவேண்டியது இருந்திருக்கும்.. எல்லாமே கேட்டேன்..அதான் உன்னை பாத்து இங்க யாரெல்லாம் தப்பா பேசுனாங்களோ அவங்க முன்னாடி உன்னை இப்போ என்கூட கூட்டிட்டு போகணும்னு நினச்சேன்… உனக்கு வந்த எல்லா தப்பான பேரையும் மாத்தணும்னு தோணுச்சு…”
அவளுக்கு மனம் கசிந்தாலும் “ஆனா அவங்க..”
“அவங்க யாரோ தான்.. ப்ரூப் பண்ணனும்னு அவசியம் இல்ல தான்.ஆனாலும் பொண்ணோ பையனோ ஒருத்தர் பிரச்னையோட வந்தா நம்மால முடிஞ்ச உதவி செய்யாட்டியும் போகுது, அவங்களை கேவலமா ஜட்ஜ் பண்ணி அதை சொல்லிகாட்டி கஷ்டப்படுத்தாம இருக்கலாம்ல. அந்த பழக்கம் அவங்களுக்கு வரணும்.. சும்மா வாய்க்கு வந்தது எல்லாம் பேசணும்னு நினைக்கிறவங்கள கொஞ்சமாவது யோசிச்சு பேசணும்னு நினைக்கவெக்கணும்ல.. அதுக்கு தான். அதோடஎன் நித்துவை கஷ்டப்படுத்துனவங்களை நான் மன்னிப்பு கேட்கவெக்காம விடமாட்டேன்.” என அவன் கூற அதில் கண்ட உறுதி தனக்காக அவன் இவ்வளவு யோசிப்பது கண்டு அவள் கண் கலங்க விஜய் “ஏய் என்ன கண்ணுல வேர்க்கிது..?” என கிண்டல் செய்ய
அவளும் சட்டென சிரித்துவிட “சரி அது மட்டும்தான் காரணமா?” என அவள் இன்னும் ஏதோ எதிர்பார்த்து கேட்க
அவனும் சட்டென சிரித்துவிட அவளை திருப்பி பின்னால் இருந்து அணைத்துக்கொண்டவன் “இன்னொன்னு நீ இங்க இருக்கும்போது உன்னையே அறியாம நெறையா சமயம் சொல்லிருக்கியாம்.. இங்க விஜய் இருந்தா ரொம்ப நல்லா இருந்திருக்கும்.. அவருக்கு இந்த மாதிரி பால்ஸ் பிடிக்கும்.. இப்டி நடக்க பிடிக்கும்.. இதை ரசிக்க பிடிக்கும்னு.. பாக்குற ஒவ்வொரு விஷயத்துலையும் நீ என்னை எதிர்பார்ப்பனு..சொன்னாங்க..” என்கூட கிட்டத்தட்ட கனவுலையே இங்க நீ வாழ்ந்திருக்கேன்னு தோணுச்சு..அதான் என் பொண்டாட்டி இத்தனை வருஷம் கனவுல பாத்து ரசிச்சு எதிர்பார்த்த எல்லாத்தையும் நிஜமாக்கணும்னு உடனே கிளம்பிட்டேன்.” என கூற தலையை மட்டும் திருப்பி அவனது கண்களை கண்டவள் பூரிப்பில் “லவ் யூ சோ மச்..” என
அவனும் குஷியாகி அவளது கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான்.
விஜய் “சரி வா.. உள்ள போலாம்.. நம்ம கூட இரண்டு வந்ததுங்க… போயி தூங்கிருப்பான்னு நினைக்கிறேன் அந்த தூங்கு மூஞ்சி..” என வசந்த்தை திட்ட
நித்து “பாவம்ங்க அண்ணா.. நைட்டெல்லாம் டிரைவ் பண்ணாருல.. உங்களுக்கு என்ன ரோடுல ஜாலியா ஓட்டிட்டு வந்திட்டீங்க.. அவரு தான் ஹில்ஸ்ல பாத்து ஓட்டிட்டு வந்திருப்பாரு..” என
“அடிப்பாவி.. உனக்காக உடம்பு அழுத்துக்குமே புள்ளைக்குனு நான் பாவம் பாத்து விடிய விடிய உன்னை பத்திரமா அழுங்காம குலுங்காம படுக்க வெச்சுகிட்ட கீழ விழாம பாத்துகிட்டு தூக்கம் கூட கலையாம கூட்டிட்டு வந்தா நான் ஜாலியா பிளான் பண்ணி ஓட்டுனேங்கிரியா? நான் ஹில்ஸ்ல எப்படி ஓட்டுவேன்னு தெரியும்ல? இரு டி திரும்பி போகும்போது உன்னை தூக்கி கார் டிக்கில சுருட்டி போடுறேன்… அப்போதான் உனக்கு என் அருமை தெரியும்..”என அவன் புலம்ப அவனது கோபத்திலும் அன்பை ரசித்தவள் அவனது மூக்கை பிடித்து ஆட்டிவிட்டு “முடிஞ்சா பண்ணுங்க” என சவால் விட்டு விட்டு உள்ளே சென்றாள்..
பின் நால்வரும் சிறிது களைப்பாறி விட்டு மதிய உணவிற்கு பின் சற்று வெளியே சென்றனர். அவன் கூறியது போல அன்று அவளை தவறாக பேசிய பலரும் ஜோடியாக நடந்து வருவதை கண்டு விசாரித்துவிட்டு சிலர் அமைதியாக சென்றனர். சிலர் அவளிடம் மன்னிப்பும் கேட்டனர். அவளை ஆதரித்த பலரும் அவர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தனர். வாணியின் அத்தை மற்றும் அவரின் பையனும் விஷயம் அறிந்து சண்டை போட வந்தவன் கணவன் என்று ஒருவன் அண்ணன் என்று மற்றொருவன் உடனிருக்க அவர்களை பார்த்ததும் சற்று பின்வாங்கியவன் அவர்கள் அழைத்து பேசி மிரட்டிவிட்டு அனுப்பவும் இனி இது ஒத்துவராது என்று வாணியின் சொத்து பத்திரம் வீட்டு சாவி என அனைத்தும் தந்துவிட்டு தாயும் மகனும் சென்றனர்.
இரு ஜோடிகளும் வெளியே தங்களின் துணையுடன் தனிமையில் பொழுதை கழிக்க சென்றனர். நித்துவிற்கு கூறியது போலவே விஜயை தன்னுடன் அழைத்து சென்று தான் ரசித்த அவனுடன் சேர்ந்து ரசிக்க ஆசைப்பட்ட பல இடங்களையும் காட்டவேண்டியதிருந்தது.. அவை அனைத்தும் அவனுக்கும் ரசிக்கும்படியாக இருந்தது.. இறுதியாக அவள் ஒரு இடத்திற்கு அழைத்துச்சென்றாள். அங்கே வந்த விஜய் சற்று தூரம் நடந்துவிட்டு “நித்து இங்க கொஞ்சம் உட்காரலாமா?” என்றான்.
அவளும் வியப்புடன் ஆனால் அமைதியாக அமர்ந்தவள் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்… அவன் என்னவென வினவ அவளோ ஒன்றுமில்லை என தலையசைத்து விட்டு மௌனமாக இருந்தாள்…