Tamil Madhura காதலினால் அல்ல! ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 32 (நிறைவுப் பகுதி)

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 32 (நிறைவுப் பகுதி)

32
 

  • காலையில் இரண்டு மணி நேர விரிவுரையையும் அதைத் தொடர்ந்து இரண்டு மணி நேரம் கணினி பயிற்சி வகுப்பையும் முடித்துக் கொண்டு 12 மணிக்கு மண்டபத்தை விட்டு வெளியே வந்தாள் அகிலா. நண்பகல் வெயில் சுட்டெரித்தது. விரிவுரை மண்டபத்தின் இதமான குளிர் சாதனத்திலும் மிதமான விளக்கொளியிலும் நான்கு மணி நேரம் தொடர்ந்து இருந்துவிட்டு வந்தவளுக்கு பளீரென்ற வெயிலில் கண்கள் கூசின. இரண்டு நாட்களுக்கு முன் மழை பெய்ததற்குப் பிறகு வளாகத்தில் இப்படித்தான் வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. மழையும் வெயிலுமாக திடீரென்று மாறி மாறி வருகின்ற இந்த பினாங்குத் தீவின் பருவ நிலை அகிலாவுக்குக் கொஞ்சம் விசித்திரமாக இருந்தது. வெயில் நாட்களில் கொஞ்சமும் காற்றின் அசைவே இல்லாத வெப்பமாக இருக்கிறது. கடல் சூழ்ந்த தீவில் இருக்கிறோம் என்ற உணர்வே இருப்பதில்லை.

 

  • எங்கே போவது என்று யோசித்தவாறு அகிலா கொஞ்ச நேரம் யோசித்தவாறு நின்றிருந்தாள். வயிறு பசித்தது. காலையிலும் ஒன்றும் பசியாறவில்லை. சாப்பிடப் போக வேண்டும். ஆனால் தனியாகப் போகத் தயக்கமாக இருந்தது. மாலதிக்குக் காலையில் விரிவுரைகள் இல்லை. ஆகவே நூல் நிலையத்துக்குப் போவேன் என்று சொல்லியிருந்தாள். அங்கு போனால் அவளைப் பிடித்து இருவருமாக சாப்பிடப் போகலாம் என்று நினைத்து நூல் நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

 

  • சாலை நெடுகிலும் காட்டுத் தீ மரங்களில் பூக்கள் கொத்துக் கொத்தாகப் பூத்திருந்தன. வெயிலில்தான் இவை இப்படிப் பூக்கின்றன. இந்த வளாகத்தில் இரண்டு வண்ணங்களில் அவை இருந்தன. ஒன்று இரத்தச் சிவப்பு. இன்னொன்று இளஞ்சிவப்பு. இரண்டுமே கிளைகளின் நுனிகளில் புஸ்ஸென்று பூத்து கிளையையே மூடிவிடும். கீழே உதிர்ந்திருக்கும் போது கம்பளமாக இருக்கும். அவற்றை மிதித்து நடக்க அகிலாவுக்குக் கால் கூசியது.

 

  • வளாகம் முழுதும் உள்ள அங்சானா மரங்களில் கூட சிறு சிறு பூக்கள் பூத்து இப்படித்தான் உதிர்ந்திருக்கின்றன. கார்கள் அவற்றின் மீது ஓடி அரைக்கும் வரை அழகான கம்பளமாக இருக்கும். அப்புறம் சிதறிப் பொடிப்பொடியாகி மழை வந்தால் சேறும் ஆகிவிடும். இந்தப் பூக்கள் கிளைகளில் இரண்டு மூன்று நாட்கள்தான் தங்குகின்றன. அப்புறம் கிளைகளில் இலைகள் மட்டும்தான் மிச்சமிருக்கும்.

 

  • துணை வேந்தர் இல்லத்தின் அருகிலும் நுண்கலைப் பிரிவுக் கட்டத்தின் எதிரிலும் உள்ள இரண்டு ஒற்றைக் கொன்றை மரங்களிலும் கூட இப்போது பூக்கள் குலை குலையாகப் பூத்திருக்கின்றன. கண்ணைப் பிரிக்கும் மஞ்சள் வண்ணத்தில் யாரோ பூக்கார அம்மாள் வியாபாரத்துக்காகக் கவனமாக அடுக்கிக் கட்டி தொங்கவிட்டிருப்பது போல… சீன லேன்டர்ன் விளக்குகள் போல… அன்றைக்கு ஷங்ரிலா ஹோட்டலில் பார்த்த சரவிளக்குகள் போல…

 

  • ஷங்ரிலாவை நினைத்தவுடன் கடற்கரைக்குச் சாப்பிடப் போய் மோட்டார் சைக்கிளில் கணேசனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு மழையில் நனைந்து திரும்பி வந்த சிருங்காரமான நினைவுகள் வந்தன. அதைத் தொடர்ந்து அவனைப் பார்த்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன என்ற எண்ணம் வந்தது. ஏன் இப்படி நினைவுகள் துருத்திக் கொண்டு வருகின்றன?

 

  • இந்த இரண்டு நாட்களாக அகிலாவின் மனதைக் கப்பியுள்ள இருள் இன்னும் கலையவில்லை. விழித்திருக்கும் நேரமெல்லாம் ஒரு இளம் பெண் விஷமருந்தி மருத்துவ மனைக் கட்டிலில் அலங்கோலமாகப் படுத்திருக்கும் காட்சிதான் வந்தது. அந்தப் பெண்ணின் கோர முடிவிற்கு எப்படியோ தானும் ஒரு காரணம் என்ற எண்ணம் வந்து நெஞ்சைத் திடும் திடும் என்று உலுக்கியது.

 

  • என்ன ஆயிற்று கணேசனுக்கு? போய் நாட்கள் நான்கு ஆகிவிட்டன. ஜெசிக்கா வந்து செய்தி சொல்லியே இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் அவனைக் காணவில்லை. கிள்ளானில் நிலைமை ரொம்ப மோசமாகிவிட்டதா? குடும்பத்தில் பூகம்பங்கள் வெடித்திருக்குமா? மல்லிகா நிலைமை எப்படி? பிழைத்திருப்பாளா? ஏன் இப்படி என்னை இருளில் விட்டுப் போனான்? எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மனம் துடித்தாலும் எந்தக் கேள்விக்கும் பூரணமான விடை கிடைக்கவில்லை. நேற்று இதைப் பற்றி மாலதியிடம் பேசும் போதும் அகிலா மீண்டும் அழுதாள். மாலதிக்கு தோளைப் பிடித்து ஆறுதல் சொல்ல முடிந்ததே தவிர விடைகள் ஏதும் சொல்ல முடியவில்லை.

 

  • நூல் நிலையத்தை அடைந்து மாலதியைத் தேடிப் பிடித்த போது அவள் புத்தகத்தின் மீது கவிழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.

 

  • அவளை உலுக்கி “இப்படித்தான் படிக்கிறிங்கிளா மாலதி?” என்று கேட்டாள்.

 

  • “சீ! படு போரிங்கா இருக்கு இந்தப் பாடம். தூக்கமும் வருது, துக்கமும் வருது!” என்று சொன்னவாறு மாலதி புத்தகத்தை அடையாளம் வைத்து மூடிவிட்டு எழுந்து வந்தாள். நூல் நிலையத்தை விட்டு வெளியே வந்து கேன்டீனை நோக்கி நடந்து கொண்டிருந்த போது மாலதி கேட்டாள்: “அப்புறம், உங்க ஆளு சேதியெல்லாம் சொன்னாரா?”

 

  • அகிலா அதிர்ச்சியடைந்தாள். “எந்த ஆளு?”

 

  • “அதான், உங்க கணேசன்!”

 

  • “கணேசனா? இன்னும் வரவே இல்லியே!”

 

  • மாலதி அவளை அதிசயமாகப் பார்த்தாள். “நேத்து ராத்திரி அவர கேம்பஸ்ல பார்த்தேனே! மோட்டார் சைக்கிள்ல போனாரே! எப்படியும் நேத்தே உன்னை வந்து பாத்திருப்பாருன்னு நெனச்சனே!” என்றாள்.

 

  • அகிலாவுக்கு திகீரென்றது. நேற்று இரவே வந்து விட்டானா? அப்புறம் ஏன் என்னைப் பார்க்க வரவில்லை? சென்ற நான்கு நாட்கள் அவனைப் பார்க்காதிருந்த ஏக்கம் அவனை உடனே பார்த்துவிட வேண்டுமென்று துடிக்க வைத்தது. எங்கே எப்போது எப்படி என்றெல்லாம் மாலதியைத் துளைத்தெடுத்தாள்.

 

  • “ராத்திரி பூமி புத்ரா பேங்க் ஏடிஎம் மெஷின்ல காசெடுக்கப் போயிருந்தேன். அப்ப அவர் மோட்டார் சைக்கிள்ள போனதப் பார்த்தேன். ஆனா அவர் என்னைப் பாக்கில!” என்றாள்.

 

  • “எப்படியிருந்தார்?”

 

  • “ராத்திரியில சரியா தெரியில அகிலா. ஆனா ரொம்ப சோர்வா இருக்கிற மாறிதான் தெரிஞ்சது! கொஞ்சம் தாடி வளந்த மாதிரியும் இருந்தது!”

 

  • அவனுடைய துயரமான கோலத்தை எண்ணி மனம் சோகப் பட்டது. அவனுக்குப் பக்கத்தில் இருந்து அவன் தோள்களைத் தழுவி ஆறுதல் சொல்ல வேண்டும் போலவும் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக கிள்ளானில் என்ன நடந்தது, மல்லிகாவின் நிலைமை என்ன என்று கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவளைப் பிய்த்துத் தின்றது. ஆனால்… ஏன் என்னைப் பார்க்க வரவில்லை? நேற்றிரவு திரும்பியவன் இன்று காலை முழுவதும் தன் பக்கம் திரும்பாமல்… ஏன் இந்த அலட்சியம்? ஒரு வேளை…

 

  • கேன்டீனில் சாப்பிட அமர்ந்த போது கேட்டாள்: “அவர்தான்னு நிச்சயமா தெரியுமா மாலதி? வேற யாரையாவது பாத்திட்டு…”

 

  • “சீ! அவர்தான் அகிலா. கணேசன்தான். எனக்குத் தெரியாதா என்ன? தெளிவாப் பாத்தேன்!” என்று உறுதிப் படுத்தினாள்.

 

  • “நேற்று திரும்பிட்டவரு ஏன் இன்னும் என்னை வந்து பார்க்கல?”

 

  • மாலதி கொஞ்சம் மௌனமாயிருந்து சொன்னாள். “எத்தனையோ வேலைகள் இருக்கலாம். எல்லாம் முடிஞ்சி வந்து பாப்பாரு பாரேன்!”

 

  • அகிலாவுக்கு அது அத்தனை சாதாரணமானதென்று தோன்றவில்லை. கணேசனை உள்ளுக்குள் ஏதோ ஒன்றிருந்து வருத்துகிறது. இந்த நான்கு நாட்களில் கிள்ளானில் நடந்தவை அவனை மாற்றியிருக்கின்றன. அது என்ன மாற்றம்? எப்படித் தெரிந்து கொள்வது? இதயம் திகில் கொண்டது.

 

  • கணேசனிடம் விரிவாகப் பேசவேண்டுமென்று எண்ணினாள். எப்படியென்று தெரியவில்லை. தானாக அவனைத் தேடிப் போக முடியாது. அதற்குத் தேவையில்லை. அது சரியில்லை. அவன் வரும் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் மனசு காத்திருக்கப் பொறுமையில்லாமல் அலைக்கழித்தது.

 

  • மாலதி மௌனத்தைக் கலைத்துப் பேசினாள்: “அந்தப் பொண்ணப் பத்தி உங்கிட்ட இதுக்கு மிந்தி சொல்லியிருக்காரா அகிலா!”

 

  • “எந்தப் பொண்ணு?”

 

  • “அதான், விஷங் குடிச்சிச்சே, அந்த பொண்ணு!”

 

  • “மல்லிகான்னு அத்தை பொண்ணு ஒருத்தி இருக்கான்னு சொல்லியிருக்காரு.”

 

  • “ரெண்டு பேருக்கும் காதல்னு சொல்லியிருக்காரா?”

 

  • “இல்ல! அந்தப் பொண்ணு தனக்கு தங்கச்சி மாதிரின்னுதான் சொல்லியிருக்கார்”

 

  • மாலதி மௌனமாகச் சாப்பிட்டாள். அவள் மௌனத்தில் ஏதோ ஒரு அர்த்தம் இருப்பதாக அகிலாவுக்குத் தோன்றியது.

 

  • “என்ன நெனைக்கிறிங்க மாலதி?”

 

  • “இல்ல, அண்ணனோட காதல் சேதி கேட்டு விஷங்குடிக்கிற தங்கச்சி உண்டா இந்த ஒலகத்திலன்னு யோசிக்கிறேன்!”

 

  • அகிலாவும் பலமுறை யோசித்து விட்டாள். மல்லிகாவின் பேச்சு வரும்போதெல்லாம் அதை அலட்சியமாகத்தான் உதறியிருக்கிறான். ஆனால் இப்போது வந்திருக்கும் செய்தி வேறாக இருக்கிறது. அப்படியானால் கணேசன் இத்தனை நாள் தன்னை ஏமாற்றினானா? தன்னிடம் பச்சை பச்சையாகப் பொய் சொன்னானா? கணேசனா? அந்தக் காதல் வழியும் கனிந்த கண்களுடைய என் கணேசனா? அவனாலும் ஏமாற்ற முடியுமா?

 

  • தனிமையில், இரவில், தான் கனிந்திருக்கும் வேளையில் “இவளுக்கு என்ன தெரியும், முட்டாள்?” என்று உள்ளுக்குள் நினைந்து கொண்டு “அவ என் தங்கச்சி மாதிரி!” என்று பொய் சொன்னானா? தன் உணர்வுகளோடு விளையாடினானா? இன்று அந்தப் பொய்கள் அவனுடைய அந்தப் பழைய காதலியின் தற்கொலை முயற்சியால் வெளிப்பட்டு விட தன்னைப் பார்க்க வெட்கி மறைந்திருக்கிறானா? நான் அவ்வளவு ஏமாளியாகவா ஆகிவிட்டேன்? என்னை ஒரு பொம்மைபோல ஆட்டி வைத்திருக்கிறானா? அவன் கையில் உள்ள சூத்திரக் கயிறுகள் என்னைப் பிணித்திருப்பதை அறியாமல்தான் இத்தனை நாள் ஆடியிருக்கிறேனா? இதற்காகத்தான் அன்பான அம்மாவையும் அப்பாவையும் பகைத்துக்கொள்ளத் துணிந்தேனா? மாலதிக்குத் தெரியாமல் மனம் உள்ளுக்குள் அழுதது.

 

  • “இன்னைக்குக் கோயிலுக்கு வாரியா?” என்று கேட்டாள் மாலதி.

 

  • தூக்கத்திலிருந்து விழித்தவள் போல “என்ன சொன்னிங்க மாலதி?” என்று கேட்டாள் அகிலா.

 

  • “இன்னைக்கு வெள்ளிக் கிழமையாச்சே, கோயிலுக்குப் போகலாமான்னு கேட்டேன்!”

 

  • வெள்ளிக் கிழமைகளில் குளுகோரில் உள்ள அம்மன் கோயிலுக்கு பெரும்பாலான இந்து மாணவர்கள் போவார்கள். போகவேண்டும் என்றுதான் தோன்றியது. ஆனால் ஒரு வேளை கணேசன் தன்னைத் தேடி வந்தால் என்ற எண்ணம் எழுந்தது. இல்லை. அவன் தேடி வருவான் என்று காத்திருக்க வேண்டாம். நேற்று இரவிலிருந்து என்னைத் தேடி வரவில்லை. ஒரு வேளை இனி என்றுமே தேடி வர மாட்டான். அவனுக்காகக் காத்திருக்கத் தேவையில்லை.

 

  • இப்போது உள்ள குழப்பத்துக்குக் கோயிலுக்குப் போவது நல்லதுதான். கொஞ்சமாவது ஆறுதல் கிடைக்கும்.

 

  • “சரி மாலதி. கோயிலுக்குப் போகலாம். நீங்க வந்து கூப்பிடுங்க!” என்றாள்.

 

  • *** *** ***

 

  • கணகணவென மணிச் சத்தத்துடன் தீபத்தெட்டு மேலெழுந்து அம்பாளின் முகத்தைப் பிரகாசப் படுத்தியது. அகிலா கை தூக்கிக் கும்பிட்டாள். மனதுக்கு இதமாக இருந்தது. மனப் படபடப்புகளை கொஞ்ச நேரமாவது மறந்திருக்க முடிந்தது.

 

  • கோயிலில் வெள்ளிக் கிழமை கூட்டம் அதிகமாகத்தான் இருந்தது. பல்கலைக் கழக மாணவ மாணவியர் கூட்டமாக வந்திருந்தார்கள். மாணவர்கள் ஜிப்பாவில் வந்திருந்து திருநீறும் சந்தன குங்குமப் பொட்டுகளும் வைத்துக் கொண்டு இந்துக்களுக்கான அடையாளங்களோடு இருக்க இந்த ஒரு நாள்தான் அவர்களுக்குச் சந்தர்ப்பம். இதை பயன் படுத்திக் கொள்ள அவர்கள் எப்போதும் ஆர்வம் காட்டுவார்கள். மாணவிகள் பெரும் பாலோர் பஞ்சாபி ஆடைகளிலும் சிலர் சேலையிலும் வந்திருந்தனர். அகிலா அடக்கமான சேலை அணிந்து வந்திருந்தாள்.

 

  • கணேசன் அங்கு எங்காவது இருக்கிறானா என அகிலா பலமுறை சுற்றிப் பார்த்து விட்டாள். அவனைக் காணவில்லை. பலமுறை அவளோடு அவன் இந்தக் கோயிலுக்கு வெள்ளிக் கிழமைகளில் வந்திருக்கிறான். அவள் சேலையில் தன் ஜிப்பா உரச அணுகி நின்றிருக்கிறான். அப்போதெல்லாம் இந்த வேளைகள் பூரணத்துவம் பெற்றது போல அவளுக்குத் தோன்றும்.

 

  • ஆனால் இன்று அவள் தனியாக இருந்தாள். தோழியர்கள் பலர் இருந்தும் சூழ்நிலை பூரணமாகவில்லை. கண்கள் தேடியதைவிட இதயம் அதிகமாகத் தேடியது. ஏன் காணவில்லை? ஏன் என்னைத் தேடி வரவில்லை? கிள்ளானிலிருந்து என்ன மர்மங்களைச் சுமந்து வந்திருக்கிறான்? ஏன் என்னிடம் பகிர்ந்து கொள்ளவில்லை? ஏன் என்னிடமிருந்து ஒளிந்திருக்கிறான்?

 

  • விபூதி வாங்கிக் கொண்டு சந்தனம் குங்குமமும் வாங்கிக் கொண்டு கூட்டம் இறுக்கம் தளர்ந்து பிரிந்தது. “சுத்திக் கும்பிட்டு வந்திடலாம் அகிலா” என்று மாலதி முன்னால் நடந்தாள். அகிலா அவளைப் பின் தொடர்ந்தாள்.

 

  • விநாயகர் சிலை வைக்கப் பட்டிருக்கும் அரசமரத்துக்கு அடியில் விநாயகரை வணங்கிவிட்டு மரத்தை அவள் சுற்றி வந்த போது இருட்டிலிருந்து “அகிலா” என்ற குரல் கேட்டது. யார் குரல் என்று பளிச்சென்று தெரிந்துவிட்டது. இதற்காகவே இத்தனை நேரம் காத்திருந்தவளைப் போல “கணேஷ்!” என்றாள்.

 

  • ஐந்து நாள் தாடி அவன் தாடையில் அடர்த்தியாக இருந்தது. முகம் சோம்பியிருந்தது. தொளதொளப்பான ஜிப்பா அணிந்திருந்தான். முகத்தில் கொஞ்சமும் செழிப்பில்லை.

 

  • “எப்ப வந்திங்க கணேஷ்? ஏன் என்னப் பாக்க வரல?” அவள் குரல் தளுதளுத்தது. அழுது விடுவோம் போலத் தோன்றியது. தலை குனிந்து கொண்டாள். அவன் அவள் கைகளைப் பிடித்தான்.

 

  • “உங்கிட்ட நெறயப் பேச வேண்டியிருக்கு. இங்க முடியாது. என்னோட வா அகிலா!” என்றான்.

 

  • “சரி. இருங்க. மாலதி கிட்ட சொல்லிட்டு வந்திர்ரேன்!”

 

  • அவனை விட்டு முன்னே போய்விட்ட மாலதியைத் தேடி ஓடினாள். அவன் வந்திருப்பதைச் சொன்னாள். “ஆமா, நான் பார்த்தேன்!” என்றாள் மாலதி குறும்புச் சிரிப்புடன்.

 

  • “நீ போ மாலதி! நான் அவரோடயே திரும்பி வந்திர்ரேன்!”

 

  • மாலதி சரியென்று போனாள்.

 

  • *** *** ***

 

  • “வாழ்க்கையில நாம் விரும்பிறதப் போல பெரும்பாலான விஷயங்கள் நடக்கிறதில்ல! அதினால இனிமே எதுக்காகவும் ஆசைப்பட்டுத் திட்டம் போடக் கூடாதுன்னு முடிவு செஞ்சிட்டேன் அகிலா!” என்றான் கணேசன்.

 

  • எஸ்பிளனேடில் மிருதுவான காற்று வீசிக் கொண்டிருந்தது. நாள் முழுவதும் காய்ந்த வெயிலுக்கு அது ஒன்றுதான் ஒத்தடம் கொடுப்பது போல இருந்தது. அலைகள் மிக மெதுவாக வந்து அந்த கற்சுவரின் மீது உராய்ந்து கொண்டிருந்தன. கூட்டம் வழக்கம் போல இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும் இருந்த மன நிலையில் கூட்டத்தை அவர்கள் கவனிக்கவில்லை.

 

  • கோயிலிலிருந்து அவளைத் தன் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு அவன் அவளை நேராக இங்கு கொண்டு வந்தான். அவன் தோள்களை முன்பு போல கட்டிப் பிடிக்காவிட்டாலும் அழுத்தமாகப் பிடித்துக் கொண்டுதான் வந்தாள் அகிலா. வரும் வழி முழிவதும் அவன் ஒன்றுமே பேசவில்லை.

 

  • எஸ்பிளனேடில் மோட்டார் சைக்கிளைப் பூட்டி வைத்து விட்டு இந்தத் தடுப்புச் சுவரின் மேல் வந்து உட்கார்ந்தும் மௌனமாகத்தான் இருந்தான். அவள்தான் அதைக் கலைத்தாள். “என்ன நடந்திச்சின்னு சொல்லுங்க கணேஷ். இப்படி மௌனமாகவே இருந்தா எப்படி? என்னை ரொம்பக் கலவரப் படுத்திறிங்க!” என்றாள்.

 

  • “மன்னிச்சுக்க அகிலா. எங்கிருந்து ஆரம்பிக்கிறதுன்னு தெரியல. ஜெசிக்காவப் பாத்த போது உங்கிட்ட சில விஷயங்கள சொல்லிட்டதா எங்கிட்ட சொன்னா!”

 

  • “எப்ப ஜெசிக்காவப் பாத்திங்க?”

 

  • “நேத்து ராத்திரி! நான் வந்து சேர்ந்த வொடனே!”

 

  • ஜெசிக்காவப் பார்க்க அவனுக்கு நேரமிருந்திருக்கிறது. தன்னைப் பார்க்க நேரமில்லாமல் போனதா?

 

  • “ஏன் என்ன வந்து பாக்கல கணேஷ்?”

 

  • அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். “பார்க்க ரொம்ப தயக்கமா இருந்திச்சி அகிலா. தைரியம் வரல!” என்றான்.

 

  • “என்னப் பாக்க ஏன் தைரியம் வேணும் உங்களுக்கு?”

 

  • “பாக்கிறதுக்கு இல்ல. உங்கிட்ட சொல்ல இருக்கிற விஷயங்களுக்காக!”

 

  • அவளுக்குப் புரியவில்லை. அவன் தொடர்ந்து சொல்லுவான் என எதிர் பார்த்தாள். சொல்லவில்லை. இருட்டிக் கிடந்த கடலைப் பார்த்தவாறிருந்தான்.

 

  • “சரி. மல்லிகா எப்படி இருக்காங்க? அதையாவது சொல்லுங்க!”

 

  • “இன்னும் ஆஸ்பத்திரியிலதான் இருக்கு. இன்னும் சரியா சாப்பிட முடியில. தண்ணி அல்லது சூப்தான் சாப்பிட முடியிது. திரவ ஆகாரங்கள மட்டும்தான் சாப்பிட முடியுது. கெட்டி ஆகாரம் சாப்பிட முடியில. ரொம்ப இளைச்சிப் போயிட்டா!”

 

  • அவன் குரலில் இருந்த சோகம் அவளையும் கப்பிக் கொண்டது. எவ்வளவு மாற்றமாக இருக்கிறது அவன் பேச்சு! சில மாதங்களுக்கு முன் இதே இடத்திற்கு வந்திருந்த போது எவ்வளவு காதல் ஒழுகப் பேசினான்! அந்த இரவு எவ்வளவு பிரகாசமாக இருந்தது! இந்த விளக்குகள் எவ்வளவு சிருங்காரமாக இருந்தன! ஏன் அத்தனையும் இவ்வளவு சீக்கிரத்தில் மங்கிப் போய்விட்டன? என்னை விட்டு விலகிக் கொண்டிருக்கிறானா? இது பிரிவுக்கு முகமனா?

 

  • “விஷம் சாப்பிட்ற அளவுக்கு என்ன நடந்திச்சி கணேஷ்? உங்க அத்தை மகளுக்கு உங்க மேல இவ்வளவு ஆசை இருக்குன்னு நீங்க எங்கிட்ட சொல்லவே இல்லியே!”

 

  • “எனக்குத் தெரியில அகிலா! தெரிஞ்சிருந்தாலும் அத அலட்சியப் படுத்தப் பார்த்தேன். அவ எங்கிட்ட சொன்ன போதும் அத விளையாட்டா எடுத்துக்கிட்டேன். அவ கிட்ட சொல்லித் திருத்த முடியும்னு நெனச்சேன்”

 

  • “உங்களுக்கு..?”

 

  • “எனக்கு அவ மேல கொஞ்சமும் ஆசையில்ல அகிலா. நான் சொல்றத சத்தியமா நம்பு. அன்பு இருக்கு, ஆனா ஆசை இல்ல. என்னைக்குமே இருந்ததில்ல. இப்போதும் இல்ல. ஆனா அவ மனசில அந்த ஆசை இப்படி மரம் போல வளந்திருக்கிறது எனக்குத் தெரியாமப் போச்சி!”

 

  • கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார்கள். பின் அவனே பேசினான்: “மல்லிகாவுக்கு இனிமே பல கஷ்டங்கள் இருக்கு. அவளுக்கு ஏற்பட்டிருக்கிற சில பாதிப்புகள் நிரந்தரமா இருக்கக் கூடும்னு டாக்டர்ங்க சொல்றாங்க. விஷத்தினால ஏற்பட்ட வலிப்பும் மூச்சுத் திணறலும் வந்திருக்கு. அதனால மூளைக்கு இரத்தம் போகாம அவள் உடம்பு ஒரு பக்கம் விளங்காமப் போச்சி. ஒரு கையைத் தூக்கவே முடியில. முகத்தில ஒரு பக்கம் இழுத்துக்கிச்சி. பேச்சுகூட குழறி குழறித்தான் வருது” தயங்கிச் சொன்னான்: “கண்கள்ள பார்வை கூட ரொம்ப மங்கலாகத்தான் இருக்கு!”

 

  • “ஐயோ!” என்றாள் அகிலா.

 

  • “சொல்லு அகிலா. இப்படி ஆயிட்ட பெண்ண யாரு கட்டிக்குவாங்க?”

 

  • ஏன் அந்தக் கேள்வியைக் கேட்கிறான் என அகிலாவுக்கு விளங்கவில்லை. என்ன சொல்வதென்று தெரியவில்லை. பேசாமல் இருந்தாள்.

 

  • “அகிலா! நான் ரொம்ப ஆசப்பட்டுட்டேன். எனக்குன்னு விதிக்கப் பட்டிருந்த வரையறைகளை மீறி என்னுடைய விருப்பத்துக்கு என் வாழ்க்கைய அமைக்கணும்னு அளவுக்கு மீறி ஆசைப் பட்டுட்டேன். அந்த மீறல்களுக்கெல்லாம் எனக்குப் பெரிய தண்டனை கிடைச்சிப் போச்சி!”

 

  • “என்னத்த மீறிட்டிங்க கணேஷ்? ஏன் அப்படிச் சொல்றிங்க?”

 

  • “என்னுடைய சூழ்நிலைகள என்னுடைய குடும்பத்தார்கள் முன்னமே வரையறுத்து வச்சிருந்தாங்க. குறிப்பா என் அத்தை. அப்புறம் எங்கப்பா. ஆனா அதையெல்லாம் உடைச்சி மீறணும்னு நெனச்சேன். புதுசா என் மனசுக்கு ஏத்தாப்பில ஒரு வாழ்க்கைய அமைச்சிக்கணும்னு தீர்மானம் பண்ணினேன். உன்ன சந்திச்ச போது அதுக்கு ஒரு அருமையான வாய்ப்பு கிடைச்சதாத் தெரிஞ்சிச்சி. அதினாலதான் உன்ன அத்தன பலமா நான் பிடிச்சிக்கிட்டேன்!”

 

  • நானும் அப்படித்தான் என அகிலா நினைத்தாள். நானும்தான் எனக்கு விதிக்கப்பட்ட வரையறைகளை உடைக்க நினைத்தேன். அதற்காகத்தான் உன்னைப் பற்றினேன். ஆனால்..

 

  • “ஆனா, இந்த அப்பாவிப் பொண்ண அந்தக் கணக்கில சேர்க்க மறந்திட்டேன் அகிலா! அவள் நான் போட்ட கணக்கையெல்லாம் மாத்திட்டா!”

 

  • “அப்படின்னா?”

 

  • அவன் முகத்தையே பார்த்திருந்தாள். ‘ஆகவே, என்ன செய்வது? சொல் கணேஷ். சொல். இன்னும் என்னை மர்மத்திலும் படபடப்பிலும் வைத்திருக்காதே!’ என்று அவள் மனம் கூவிக் கொண்டிருந்தது.

 

  • “என்ன மன்னிச்சிடு அகிலா! ஏதாகிலும் ஒரு வகையில உன்னை நான் ஏமாற்றியிருந்தா என்ன மன்னிச்சிடு. இனி நான் மல்லிகாவுக்குத்தான் வாழ்வு கொடுக்கணும். என்னை விட்டா இனி அவளுக்கு வாழ்வு அமையாது. அதினால அத்தையும் உடைஞ்சு போவா. என் பெற்றோர் குடும்பமும் சிதைஞ்சி போவும்! என்ன மன்னிச்சிடு அகிலா! என்ன மறந்திடு! என்ன மறந்திடு!” அழுதான்.

 

  • அகிலாவின் கண்களிலும் நீர் ஊறியது. அவனுக்கு என்ன பதிலைச் சொல்வதென்று அவளுக்குத் தெரியவில்லை. இது இவ்வளவு எளிதானதா? “சரி, சரி, அதனாலென்ன? வேண்டான்னா மறந்திட்டா போச்சி!” என்று சொல்லிவிட முடியுமா? விரும்பினால் ஏற்றிக் கொள்ளவும் விரும்பாவிட்டால் அணைத்துவிடவும் இது என்ன வெறும் மெழுகு வர்த்தியா?

 

  • ஏன் இவன் என் வாழ்வின் குறுக்கே வந்தான் என ஒரு கணம் நினைத்துப் பார்த்தாள். நான் அமைதியானவளாக, என்னுடைய கல்வியையே முதன்மையாக எண்ணித்தானே இந்தப் பினாங்குக்கு வந்தேன்! அநதப் பாதையில் ஏன் இந்தப் புயல்? விதி இவனை என் வாழ்வின் குறுக்கே கொண்டு வந்து போட்டதா? அவனே தேடி வந்தானா? அல்லது நான் தேடி அவனை அடைந்தேனா? இந்தக் கட்டத்தில் அது ஒன்றும் விளங்கவில்லை. எப்படியோ அது நடந்தது. ஒரு விதை, ஒரு முளை, ஒரு தளிர், ஒரு இலை, ஒரு செடியென்று படிப்படியாக வளர்ந்து விட்டது.

 

  • இப்போது அதைப் பிடுங்கிப் போட்டு விடு என்கிறான். இன்னொருத்தியின் விதி இங்கே குறுக்கே வந்து விட்டது. எப்படி வந்தது? நான் முகம் பார்க்காத, நான் அறிந்திராத, என் வாழ்க்கையில் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாத இளம் பெண் என் வாழ்க்கையைப் பாதிக்கிறாள். எந்த நியதி இவளையும் என்னையும் பிணைத்தது? எந்த வலையால் ஒரு கோடியில் நானும் கண்ணுக்குத் தெரியாத இன்னொரு கோடியில் அவளுமாக அகப்பட்டுக் கொண்டிருக்கிறோம்?

 

  • “எனக்குத் தெரியும் அகிலா! நான் எவ்வளவு பெரிய துரோகின்னு நீ நெனைப்பேன்னு எனக்குத் தெரியும். நானே என்னை மன்னிக்க முடியில! உன் வாழ்க்கையில நான் குறுக்கே வந்திருக்கக் கூடாது. என்னை இப்படி உன்மீது திணிச்சிருக்கக் கூடாது. உன் மனத்தோட நான் விளையாடி இருக்கக் கூடாது. என்னை மன்னிச்சிடு!”

 

  • யார் யாரை மன்னிப்பது? எதற்காக மன்னிப்புக் கோர வேண்டும்? இதில் யார் குற்றம் செய்தார்கள்? நாமெல்லாம் இந்த வாழ்க்கை மேடையில் ஆட்டுவிக்கப் படுகிறோம். இந்த நாடகத்தில் சிலர் ஜெயிக்கிறார்கள். சிலர் தோற்கிறார்கள். ஜெயித்தவர்கள் கெக்கலித்துச் சிரிக்கிறார்கள். மற்றவர்கள் அழுகிறார்கள், உன்னையும் என்னையும் போலத்தான் கணேஷ்!

 

  • வானம் இருண்டு வந்தது. இன்றைக்கும் மழை வரப் போகிறதா? நான் இன்பமாக இருப்பதாக நினைக்கும் போதெல்லாம் மழைதான் வந்து கெடுக்கிறது.

 

  • “என்ன சொல்ற அகிலா?” கணேசன் கேட்டான்.

 

  • “மழை வர்ர மாதிரி இருக்குது! என்னத் திரும்ப கொண்டு போய் விட்டிடுங்க!”

 

  • “நான் சொன்னதுக்கு நீ ஒரு பதிலும் சொல்லியே!”

 

  • யோசித்தாள். ஏன் அவசரமாக பதில் சொல்ல வேண்டும்? அவசரத்தால் என்ன நன்மை விளையும்? ஏன் திடீர்த் தீர்வுகளைத் தேட வேண்டும்?

 

  • “நாம ரெண்டு பேருமே இப்ப ரொம்ப உணர்ச்சி வசப்பட்டிருக்கோம், கணேஷ். என்ன கொஞ்சம் யோசிக்க விடுங்க! அதுக்கப்புறம் இன்னொரு முறை சந்திச்சி இதப் பத்திப் பேசுவோமே!” என்றாள். அவள் முகத்தைக் கொஞ்ச நேரம் ஏறிட்டுப் பார்த்தான். அவள் என்ன சொல்கிறாள் என்பது தனக்குப் புரியவில்லை என்பது போலப் பார்த்தான்.

 

  • “அகிலா! உங்கிட்ட இருந்து மனப் பூர்வமான ஒரு பதிலை என் காதால கேட்காம என் மனசு சமாதானமடையாது. சொல்லு!” என்றான்.

 

  • “கணேஷ். நீங்க என்ன செய்ய வேணும்னு முடிவு பண்ணிட்டிங்க. சொல்ல வேண்டியத சொல்லிட்டிங்க. அதுக்கு என்னிடமிருந்து உங்களுக்கு ஒரு பதிலே தேவையில்லையே!” என்றாள்.

 

  • “இல்ல அகிலா! இந்த முடிவு சரிதானான்னு சொல்லு! இது உனக்கு சம்மதமான்னு சொல்லு! இல்லன்னா என்னுடைய மனப் போராட்டத்துக்கு ஒரு முடிவே இருக்காது!” என்றான்.

 

  • அகிலா கடலைப் பார்த்து யோசித்தவிறிருந்தாள். பின் பேசினாள். “சொல்றேன் கணேஷ். ஆனா ஏன் இப்படி அவசரப் பட்றீங்க? எல்லாரும்தான் இந்த உலகத்தில அவசரப் பட்றாங்க. உங்க அத்தை, உங்க அத்தை பொண்ணு, எங்க அம்மா, எல்லாருக்குமே விடைகள் அவசரமாத்தான் தேவைப் படுது. நீங்களும் அவசரப் படணுமா? என்னையும் அவசரப் படுத்தணுமா?”

 

  • “எனக்கு சமாதானமா இல்ல! என் மனசு அடங்க மாட்டேங்குது. உனக்குத் துரோகம் செஞ்சிட்டேன்னு என்னக் குத்துது” அவள் பதில் சொல்லவில்லை.

 

  • மழைத் துளிகள் விழ ஆரம்பித்தன. நடந்து திரும்பினார்கள். அவள் பின்னால் உட்கார்ந்ததும் மோட்டார் சைக்கிளை உதைத்துக் கிளப்பி நகருமுன் அவன் கேட்டான்.

 

  • “என் மேல கோபமா அகிலா? அதையாவது சொல்லேன்!”

 

  • “கோபப்பட எனக்கு உரிமை இருக்கு! கோபமும் இருக்கு. ஆனா பயப்படாதீங்க, உங்க அத்த மகள் மாதிரி முட்டாள் தனமான காரியத்தில நான் ஈடுபட மாட்டேன்”

 

  • மோட்டார் சைக்கிள் நகர்ந்தது. அவன் தோள்களை உறுதியாகப் பிடித்து உட்கார்ந்திருந்தாள் அகிலா.

 

  • வரும் வழியில் மழை வலுத்தது. அதே மழை. அன்று போலத்தான். அவன் மழைக்கோட்டை எடுத்து முன் பக்கமாகக் கையை நுழைத்துப் போத்திக் கொண்டு அவளுக்கும் ஒரு பகுதியைக் கொடுத்தான். அவள் அவன் இடுப்பை வளைத்துப் பிடித்தாள். மழை உடம்பையெல்லாம் நனைத்து, சேலையையும் ரவிக்கையையும் நனைத்து உடம்போடு ஒட்ட வைத்தது. குளிர் எடுக்க ஆரம்பித்தவுடன் அவனை இன்னும் இறுக்கமாகக் கட்டிப் பிடித்துக் கொண்டாள் அகிலா.

 

  (முடிந்தது)

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 1ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 1

  காதலினால் அல்ல! ரெ.கார்த்திகேசு முன்னுரை காதல் என்பது உன்னதமான பொருள்.   காதல் எழுத்தாளர்களுக்கு என்றும் ஓர் அமுதசுரபியாக இருந்து வந்திருக்கிறது. தமிழர் சமுதாயத்தில் எல்லாத் தலைமுறைகளிலும் காதல் இருந்திருக்கிறது. எல்லாத் தலைமுறைகளிலும் காதலைக் கதையாக்கிச் சொல்பவர்கள் அதிகமாக இருந்திருக்கிறார்கள்.

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 2ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 2

2  எதிர்பார்த்தது போல் அடுத்த வாரத்தில் பல்கலைக் கழக வளாகம் மேலும் களை கட்டியிருந்தது. இரண்டாம் மூன்றாம் நான்காம் ஆண்டு மாணவர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்கள் சீற வளாகத்தை வந்து அடைந்தார்கள். முதல் நாள் பாடங்களின் பதிவுக்காக பரபப்பாக அலைந்தார்கள். அடுத்த

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 10ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 10

10  “இந்தப் பல்கலைக் கழகத்திற்கு இப்ப வருகிற இந்திய மாணவர்களை என்னால புரிஞ்சிக்க முடியல ராகவன்” என்றார் பேராசிரியர் முருகேசு.   கணேசனும் ராகவனும் காலை ஏழரை மணிக்கெல்லாம் அவருடைய அறையில் இருந்தார்கள். சரித்திரத் துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் இருந்த அவரை