Tamil Madhura காதலினால் அல்ல! ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 21

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 21

21
 

  • வளாகத்தில் முதல் பருவப் பரிட்சைக் காய்ச்சல் தணிந்து விடுமுறைக்கு வீடு திரும்பும் காய்ச்சல் அனைவரையும் பிடித்துக் கொண்டிருந்தது. குறிப்பாக முதலாண்டு மாணவர்கள் வீடு திரும்பத் துடித்துக் கொண்டிருந்தார்கள். வீடு, குடும்பம், பழைய பள்ளி மாணவர்கள், அம்மாவின் சமையல் என்ற எண்ணங்கள் இன்னும் பலமாக ஒட்டிக் கொண்டிருப்பது அவர்களிடையேதான். இரண்டாமாண்டில் இந்தத் தீவிரம் கொஞ்சம் தணியும். மூன்றாம் ஆண்டில் வீட்டுப் பாசம் ரொம்பத் தணிந்துவிடும். விடுமுறையில் பயிற்சிக்குச் செல்ல வேண்டும், புரோஜெக்ட் செய்ய வேண்டும் என்று பல மாணவர்கள் வளாகத்திலேயே தங்கி விடுவதும் உண்டு.

 

  • இந்த முதல் பருவத்தின் கடைசி வாரங்கள் எக்கச்சக்கமான நெருக்குதல் மிக்க வாரங்களாக இருந்தன. முதலில் இந்தியக் கலாச்சார சங்கத்தின் மாணவர்கள் கலை விழா அவளை இடுப்பை முறித்தது. பரத நாட்டியம் ஆடுவது என்பது பெரிதாக இருக்கவில்லை. ஆனால் கலை விழாவிற்கு டிக்கெட்டுகளை அலைந்து விற்க வேண்டியிருந்தது. அவர்கள் தயாரித்த நினைவு மலருக்கு விளம்பரங்கள் தேடி அலைய வேண்டியிருந்தது. ஆனால் எல்லாவற்றையும் கணேசனின் துணையோடு செய்தது ஆறுதலாக இருந்தது.

 

  • கலை விழாவுக்கு அரங்கம் நிறைந்த கூட்டம் வந்திருந்தது. மாண்பு மிகு அமைச்சர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு வந்து தலைமை உரையாற்றினார். மாணவர் விவகாரங்களுக்கான உதவித் துணை வேந்தர் டத்தோ சலீம் வந்திருந்து வாழ்த்துரையாற்றினார். மாணவர் உபகாரச் சம்பள நிதிக்கு பத்தாயிரம் வெள்ளி திரண்டது. அமைச்சர் மேலும் பத்தாயிரம் வெள்ளி தருவதாக அறிவித்தார். நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாக்கி வந்திருந்த குளுகோர் வட்டாரத்து இளைஞர்கள் ஆரவாரமாகக் கைதட்டிச் சீட்டியடித்து நிகழ்ச்சியைக் கலகலப்பாக்கிக் கொண்டிருந்தார்கள்.

 

  • ஏற்பாட்டுக் குழுவின் மாணவர்கள் சீருடை போல பெரிய பூப்போட்ட பாத்தேக் முழுக்கை சட்டை அணிந்திருந்தார்கள். மாணவிகள் அனைவரும் தழையத் தழைய சேலை கட்டியிருந்தார்கள். அரங்கின் முன்னால் பெரிய குத்து விளக்கு ஏற்றி வைத்து வண்ண அரிசி மாவில் கோலமும் போட்டிருந்தார்கள். அந்த சையட் புத்ரா அரங்கு அன்று தோரணமும் மாவிலையும் கட்டப்பட்டு முழுக்க முழுக்க ஒரு உற்சாகமான இந்தியச் சூழ்நிலையில் இருந்தது.

 

  • கலை நிகழ்ச்சி முடிந்து மாணவர்கள் வெளியே வந்த போது பேராசிரியர் முருகேசுவை தற்செயலாகச் சந்தித்தாள் அகிலா.

 

  • “ரொம்ப அருமையா இருந்ததம்மா உன் நாட்டியம். இந்த மாணவர்கள் டப்பாங்குத்து ஆட்ற வேகத்தில நம்ப கலைகளையே மறந்து போயிடுவாங்ளோன்னு பயந்திருந்தேன். உன்னைப் போல பரத நாட்டியத்தை முறையா தெரிஞ்சிக்கிட்டு ஆட்றவங்களப் பாக்கும் போதுதான் ஆறுதலா இருக்கு” என்றார். அவருக்கு வெட்கத்துடன் நன்றி சொன்னாள். “அப்பாவ விசாரிச்சேன்னு சொல்லு!” என்று சொல்லி அவர் போய்விட்டார்.

 

  • கலை நிகழ்ச்சியால் தேங்கிப் போய்க்கிடந்த எசைன்மென்ட் வேலைகளை முடிக்க இரவும் பகலுமாத உழைக்க வேண்டியிருந்தது. அப்புறம் பரிட்சைகளுக்குத் தயார் செய்ய வேண்டியிருந்தது. நாட்கள் குடைராட்டினம் போல சுழன்றன. கடைசித் தாள் முடிந்த போது ஏற்பட்ட விடுதலை உணர்வுக்கு இணையே இல்லை.

 

  • அகிலா வீட்டுக்குத் திரும்புவதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் கணேசனை விட்டு இன்னும் ஒரு ஐந்தாறு வாரங்களுக்குப் பிரிந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வருத்தமாக இருந்தது. கணேசனும் வீடு திரும்புவதற்கு ஆயத்தமாக இருந்தான். “ஒரு ரெண்டு வாரம் இருந்திட்டுத் திரும்பிடுவேன் அகிலா! எனக்குப் புரோஜெக்ட் வேலைகள் இருக்கு. அதோடு ஐசெக் வேலைகளும் இருக்கு. ஆகவே கேம்பஸ்ல இருந்தாதான் அதெல்லாம் நடக்கும்!” என்றான்.

 

  • தானும் இரண்டு வாரம் தங்கித் திரும்பி விடலாமா என நினைத்தாள். ஆனால் பெற்றோர்கள் பெரும் வேதனை அடைவார்கள் என்று எண்ணினாள். அவளுக்காக நல்ல உணவாக சமைத்துப் போட அம்மா காத்திருக்கிறாள் என்பதை தொலைபேசியில் வீட்டுக்குப் பேசும் போதெல்லாம் அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள். “அங்கெல்லாம் என்ன குப்பை மலாய்க்கார சாப்பாட்டையும் சீனன் சாப்பாட்டையும் சாப்பிட்றியோ தெரியில. வந்து வீட்டில உக்காந்து ஒளுங்கா சாப்பிடு.”

 

  • வீட்டின் ஈர்ப்பு தீவிரமாக இருந்தது. வீட்டின் சுகம் தனி. தன் அறையின், தன் கட்டிலின், தன் தலையணையின் சுகம் தனி. அந்த வாசனைகள் இன்னும் மறக்கவில்லை. தம்பியுடன் அடித்துப் பிடித்து விளையாடும் சுகம் தனி. பள்ளித் தோழிகளைக் கூப்பிட்டு வைத்துக் கொண்டு அரட்டை அடிக்கும் சுகம் தனி. அவை இல்லாமல் போன இந்தப் பல்கலைக் கழக நாட்களில் அவற்றை எண்ண எண்ண ஏக்கம் பெருகியது.

 

  • மாதம் ஒரு முறை பஸ் ஏறி வீட்டுக்குப் போய்விடும் தனக்கே இப்படி என்றால் தூர தூரப் பகுதிகளிலிருந்து வந்து, அடிக்கடி வீடு திரும்ப முடியாத மாணவர்களின் ஏக்கம் எப்படியிருக்கும் என்பதை அகிலாவால் புரிந்து கொள்ள முடிந்தது. குறிப்பாக மலாய் மாணவர்களுக்குக் கம்பத்தின் பிடிப்பு மிக அதிகம். கூடும் போதெல்லாம் தங்கள் கம்பங்களைப் பற்றிய கதைகளையே ஏக்கத்தோடு பேசிக் கொண்டிருப்பதை அவள் கவனித்திருக்கிறாள்.

 

  • இந்த மூன்று மாதங்களில் அவளுக்கு நெருங்கிய தோழியாகிவிட்ட மாலதியும் ஜோகூரில் உள்ள தன் ஊருக்குத் திரும்பத் தயாராகிக் கொண்டிருந்தாள். இருவரும் வீட்டுத் தொலை பேசி எண்களைப் பரிமாறிக் கொண்டார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னரே பரிட்சை முடிந்து பயணமான மாலதியை வழியனுப்பி வைக்க அகிலாவோடு கணேசனும் வந்திருந்தான். மாலதி பஸ் புறப்படும் நேரத்தில் அகிலாவிடம் கண்ணடித்து கணேசனைக் காட்டி “எல்லாம் எனக்குத் தெரியும்! ஆள விட்டுடாத. பத்திரமா முடிச்சி போட்டு வச்சிக்க!” என்று சொல்லிப் போனாள். அது அகிலாவுக்கு வெட்கங் கலந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.

 

  • அகிலா வீட்டுக்குப் புறப்பட்ட அன்று கணேசன் அவளை பஸ் ஏற்றிவிட வந்திருந்தான். தனது பேக்கைத் தூக்கிக் கொண்டு அவனுடைய மோட்டார் சைக்கிள் பின்னால் உட்கார்ந்துதான் குளுகோரில் பஸ் நிற்குமிடத்திற்கு வந்தாள். பஸ்ஸில் அவளுடைய பேக்கைத் தூக்கி வைத்து இருக்கை எண் தேடி அவளை உட்கார வைத்தான்.

 

  • “இனி இந்த அஞ்சாறு வாரம் எப்படிப் போகும்னு எனக்குக் கவலையா இருக்கு அகிலா!” என்றான்.

 

  • “ஏன், உங்களுக்குத்தான் நிறைய வேலை இருக்குன்னு சொன்னிங்கள! அதோட ஐசெக் வேலைகளுக்காக ஜெசிக்கா உங்க கூடவே இருக்கப் போறா! உங்களுக்குப் பொழுது நல்லாப் போயிடும்!” என்றாள் ஒரு குறும்பான சிரிப்புடன்.

 

  • “பாத்தியா! இது பெண்களுக்கே உள்ள சந்தேகம் போல இருக்கு! நான் எவ்வளவு சொன்னாலும் இனிமே என் மேல உனக்கு நம்பிக்கை ஏற்படாது! ஆனா உனக்கு ஒரு சந்தோஷமான விஷயம் சொல்றேன் அகிலா! ஜெசிக்காவுக்கு ஒரு புதிய போய் •பிரன்ட் கிடைச்சிட்ட மாதிரிதான் இருக்கு!” என்றான்.

 

  • “யாரது?”

 

  • “சுதாகரன்! என்னோட மேனேஜ்மென்டில இருக்கார். அவங்க ரெண்டு பேரும் மாணவர் பேரவையிலும் இருக்காங்க. முன்பே பழக்கம். இப்ப நெருக்கம்!”

 

  • நல்லதுதான் என அகிலா நினைத்தாள். பஸ் புறப்பட்ட சமயத்தில் “அடிக்கடி •போன் பண்ணுங்க!” என்று வலியுறுத்திச் சொல்லி விட்டு கை காட்டிப் போனாள். பஸ் பினாங்கு பாலத்தைக் கடக்கையிலேயே கணேசனைப் பிரிந்திருக்கப் போகிறோம் என்ற ஏக்கம் அவளைப் பற்றிக் கொண்டது.

 

  • *** *** ***

 

  • வீட்டுக்குப் போனதிலிருந்தே அவனுடைய தொலைபேசி அழைப்புக்களுக்கு அவள் ஏங்கிக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு முறையும் •போன் மணி அடித்த போது அவனாக இருக்கக் கூடாதா என்று எதிர் பார்த்தாள். அவள் வீடு சேர்ந்த இரண்டாம் நாள் அவன் கூப்பிட்டான். தம்பிதான் அவளை முந்திக் கொண்டு போய் எடுத்து யார் எவர் என்று முழுமையாக விசாரித்து விட்டு “யாரோ ஒன்னோட யுனிவர்சிட்டி •பிரண்டாம்!” என்று அவளிடம் தந்தான்.

 

  • “எனக்கு கோல் வந்தா நீ ஏன் பேரையெல்லாம் விசாரிக்கிற?” என்று அவனிடம் சண்டை பிடித்து விட்டு தணிந்த குரலில் பேசினாள். தம்பி கொஞ்சம் தூரத்தில் உட்கார்ந்து கொண்டு அவள் டெலி•போனுக்குள் கொஞ்சுகின்ற அழகை வேறு வேலை இல்லாமல் கவனித்துக் கொண்டிருந்தான்.

 

  • மாலதி ஒரு முறை ஜோகூரிலிருந்து கூப்பிட்டுப் பேசினாள். பல்கலைக் கழகத்தில் இருந்த போதெல்லாம் வீட்டு நினைப்பாக இருந்தது போல வீட்டுக்கு வந்த பின் பல்கலைக் கழக நினைவாக இருக்கிறதென்றாள். தனக்கும் அப்படித்தான் இருக்கிறதென்றாள் அகிலா. “பல்கலைக் கழக நெனைப்பா அல்லது கணேசன் நினைப்பா?” என்று மாலதி கேட்டது கிளர்ச்சியூட்டுதாக இருந்தது.

 

  • கணேசன் அந்த வாரம் அவளை மூன்று முறை தொலைபேசியில் கூப்பிட்டு விட்டான். இரண்டு முறை பினாங்கிலிருந்து! மூன்றாம் முறை தான் கிள்ளானில் அத்தை வீட்டிலிருந்து பேசுவதாகக் கூறினான்.

 

  • “எப்படி இருக்காங்க உங்க அத்த மக?” என்று கேட்டாள் அகிலா.

 

  • “அதுக்கென்ன. நல்லா சாப்பிட்டுட்டு குண்டாதான் இருக்குது!” என்றான். அப்புறம் அர்த்தமில்லாத சில்லறைக் கதைகள் நெடு நேரம் பேசினார்கள். பொழுது போகமாட்டேனென்கிறது, போரடிக்கிறது என்று பரிமாறிக் கொண்டார்கள். விஷயமில்லாத இனிப்புப் பேச்சில் இருபது நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை அவர்களால் பேச முடிந்தது.

 

  • அகிலா நீண்ட நேரம் •போனில் பேசுவதை அம்மா கொஞ்சம் உற்றுப் பார்த்தாள். மகள் சாப்பாடு உட்பட எந்த விஷயத்திலும் உற்சாகமில்லாமல் டெலி•போனையே எதிர் பார்த்துக் கொண்டிருப்பது அவளுக்கு சந்தேகத்தை விளைவித்தது.

 

  • மகனைக் கூப்பிட்டு “அக்கா யாரோட பேசுது?” என்று கேட்டாள்.

 

  • “தெரிலம்மா! யாரோ அவங்க யுனிவர்சிட்டி •பிரண்டாம்!”

 

  • “ஆம்பிளயா பொம்பளயா?”

 

  • “ஆம்பிள!”

 

  • “பேரென்ன?”

 

  • “தெரியில! எனக்குக் கோல் வந்தா நீ ஏன் அதையெல்லாம் கேக்கிறன்னு அக்கா என்னப் பிடிச்சி ஏசுது!” என்றான்.

 

  • சாப்பிடும் போது அம்மா அந்தப் பேச்சை எடுத்தாள். “யாரோடம்மா அவ்வளவு நேரம் பேசிக்கிட்டிருக்க?”

 

  • அகிலா தயங்கிச் சொன்னாள்: “என் கூட படிக்கிற •பிரண்டம்மா!”

 

  • “பொம்பிள பிள்ளயா?”

 

  • “இல்ல. பையன்தான். ஏன் பேசக் கூடாதா?”

 

  • “பேசலாம். என்னா எப்படி சௌரியமான்னு கேட்டா போதாதா? என்ன அவ்வளவு நீளமா பேச வேண்டியிருக்குது?”

 

  • அப்பா குறுக்கிட்டார். “அது என்ன வனஜா நீ இத்தனை குறுக்கு விசாரணை பண்ற? ஒண்ணாப் படிக்கிறவங்க, பாடத்த பத்தி எவ்வளவோ பேசுவாங்க!”

 

  • அம்மா முகத்தைக் கொஞ்சம் கடுமையாக வைத்துக் கொண்டு அமைதியாகச் சாப்பிட்டாள். அகிலா மௌனமாக இருந்தாள். தான் எதிர்பார்த்ததை விட வேகமாக இந்த விஷயம் சபைக்கு வரப் போகிறது என அவளுக்குத் தோன்றியது.

 

  • *** *** ***

 

  • அன்று இரவு அவள் அறைக்குள் படுத்துப் படித்துக் கொண்டிருந்த போது அப்பாவின் அறையிலிருந்து அம்மாவும் அப்பாவும் ஏதோ விவாதம் செய்வது இலேசாகக் கேட்டது. என்னவென்று புரியவில்லை. புத்தகத்திலும் மனம் ஒட்டாமல் கணேசன் இப்போது என்ன செய்து கொண்டிருப்பான் என்ற எண்ணத்துடன் கண்களை மட்டும் மேயவிட்டுக் கொண்டிருந்தாள்.

 

  • சற்று நேரத்தில் அம்மா தன் அறைக் கதவைத் தட்டித் திறந்தாள். “அகிலா இப்படி வா கொஞ்ச நேரம்!” என்று கூப்பிட்டாள். அகிலா வெளியே வந்தாள்.

 

  • அப்பா வரவேற்பறையில் உட்கார்ந்திருந்தார். அகிலா அவருக்கு எதிரே போய் உட்கார்ந்தாள். அப்பா சிரித்தவாறே பேசினார்.

 

  • “இல்லம்மா, ஏதோ ஒரு பையனோட டெலி•போன்ல ரொம்ப நேரம் பேசிக்கிட்டே இருக்கன்னு உங்க அம்மா சொல்லுது. அது என்ன விஷயம்னு கேட்டுத் தெரிஞ்சிக்காம அதுக்குத் தூக்கம் வர மாட்டேங்குது. அது கேட்டா நீ சரியா பதில் சொல்ல மாட்டேங்கிறியாம். அதுக்காகத்தான் என்னையும் இதில இழுத்து விட்றிச்சி உங்கம்மா!”

 

  • அகிலா கொஞ்ச நேரம் மௌனமாக இருந்து சொன்னாள். “யுஎஸ்எம்-ல மூன்றாம் ஆண்டு நிர்வாகப் படிப்பு படிக்கிற மாணவர் அப்பா. ரேகிங் சமயத்தில என்னக் காப்பாத்தி அதுக்கப்புறம் விசாரணையில மாட்டி விடுதலையானாருன்னு முன்னமே உங்ககிட்ட சொல்லியிருக்கேனே, அவருதான். கணேசன்னு பேரு!” என்றாள்.

 

  • “அந்தப் பையன் ஏன் இத்தன தடவ உனக்குப் •போன் பண்ணனும்?” அம்மா கோபமாகக் கேட்டாள்.

 

  • “அதுக்கப்புறம் நாங்க நல்ல கூட்டாளிகளாயிட்டோம். அந்த நட்பிலதான் •போன் பண்றாரு!”

 

  • “கூட்டாளின்னா என்ன அர்த்தம்? ஏன் அந்த யுனிவர்சிட்டியில ஒனக்குப் பொம்பிள கூட்டாளிகள் கெடைக்கலியா?”

 

  • “இருக்காங்கம்மா. அவங்களும்தான் கூப்பிட்டுப் பேசிறாங்க! இதுல என்ன குத்தம்னு நீ இப்படிக் கேள்வியெல்லாம் கேக்கிற?”

 

  • “நீ இப்படி ஆம்பிள பசங்களோட சுத்திறதுக்குத்தான் நாங்க உன்னக் கொண்டி யுனிவர்சிட்டியில விட்டமா?” அம்மா பொரிந்தாள். இந்தக் கேள்வி வரும் என்பது ஏற்கனவே அகிலா ஊகித்து வைத்திருந்ததுதான். ஆனால் இப்படி சீறிக் கொண்டு வந்த போது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

 

  • தான் கணேசனோடு மோட்டார் சைக்கிளில் ஏறி சுற்றியது அம்மாவுக்குத் தெரிய வழியில்லைதான். ஆனால் தொலைபேசி அழைப்புகளை அடிப்படையாக வைத்தே பல்கலைக் கழகத்தில் என்னவெல்லாம் நடக்குமென்று சரியாகத்தான் ஊகித்திருக்கிறாள். அவளை மறுத்துப் பேச அகிலாவால் முடியவில்லை.

 

  • “இதுக்கு ஏன் இப்படி கோவமாப் பேசிற வனஜா? அமைதியா கேட்டுத் தெரிஞ்சிக்க வேண்டியதுதானே! அவ இன்னும் என்ன சின்னப் பிள்ளயா? நல்லது கெட்டது தெரிஞ்ச பிள்ளதானே!” என்றார் அப்பா. அகிலா அப்பாவை நன்றியோடு பார்த்தாள்.

 

  • “ஆண்களும் பெண்களும் கலந்து படிக்கிற இடத்தில கலந்துதான் பழக வேண்டியிருக்கு. இதை எப்படித் தடுக்கிறதின்னு தெரியில. ஏன் தடுக்கணும்னும் தெரியில! அங்க எல்லாரும் சின்னப் பிள்ளைகளா தடுத்து வைக்கிறதுக்கு?” என்றாள் அகிலா.

 

  • அம்மா சுருதி இறங்கிப் பேசினாள். “நீ சின்னப் பிள்ள இல்லம்மா! அது எனக்குத் தெரியுது. ஆனா என்ன இருந்தாலும் பெண் பிள்ள இல்லியா? அதிகமா ஆம்பிளைகள் இருக்கிற எடத்தில ரொம்ப ஜாக்கிரதையா ஒரு கட்டுப்பாட்டோடதான் இருக்கணும். ஒரு ஆம்பிளயோட நீ சுத்தித் திரியிறது நாளைக்கு எல்லாருக்கும் தெரிய வந்திச்சின்னா அப்புறம் பேர் கெட்டுப் போகும். அப்புறம் என்ன படிச்சி என்ன உத்தியோகம் பார்த்து என்ன பிரயோஜனம்? ஒரு நல்ல இடத்தில கல்யாணம் அமையுமா? எத்தனை கல்யாணத்தில இந்தப் பிரச்சினைகள் வந்திருக்கிறத நான் பாத்திருக்கிறேன்!”

 

  • அம்மாவுக்குத் தன் படிப்பையும் உத்தியோகத்தையும் விட தனது கல்யாணம்தான் பெரிதாக இருந்தது. அவள் உலகத்தில் கல்யாணம் குடும்பம் என்பதே தலையாய விஷயங்கள். அம்மா எந்தக் காலத்திலும் வெளியே போய் வேலை செய்ததில்லை. அவளுக்குத் தெரிந்த அவள் பாராட்டுகிற உலகம் இந்தக் குடும்பம்தான்.

 

  • “கல்யாணத்தப் பத்தி எல்லாம் இப்ப ஏம்மா பேசணும்! படிப்பே இப்பதான ஆரம்பிச்சிருக்கு?”

 

  • “கல்யாணம் அவசரம்னு நான் சொல்லல! ஆனா அது நடக்க வேண்டிய காலம் வரும் போது இதெல்லாம் ஒரு முட்டுக் கட்டையா வரதுக்கு இடங் கொடுக்கக் கூடாதேன்னுதான் அப்படிச் சொல்றேன் அகிலா!”

 

  • அப்பா பேசினார்: “அகிலா! அம்மா கொஞ்சம் பழைய காலத்து ஆளு. ஆனாலும் அது சொல்றதில நெறய உண்மை இருக்கம்மா. பல்கலைக் கழகத்துக்குப் போயிட்டோம்கிறதினால சாதாரணமா நாம் கடைப் பிடிச்சி வந்த கட்டுப்பாடுகள விட்ற கூடாது. அதினால அம்மா பயப்பட்றது சரிதான். ஆனா உனக்கு நல்ல புத்தி இருக்கு. நீ எதுவும் தப்பா செஞ்சிட மாட்டேங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. நீ ஆண்களோட பழகக் கூடாதுன்னு நாங்க ஒண்ணும் உத்திரவு போடல. அப்படி உத்தரவு போட்டா எங்க பொண்ணு மேலயே எங்களுக்கு நம்பிக்கை இல்லைன்னு அர்த்தம். ஆகவே நீ யாரோட வேணுன்னாலும் பழகு. ஆனா ஒரு வேள பல்கலைக் கழகத்தில நீ எந்த ஆணோடயாவது ஒரு நண்பன்கிற அளவுக்கு மேல பழக ஆரம்பிச்சிட்டேன்னா – நான் சொல்றது விளக்குதுதானம்மா? – ஒண்ணு பண்ணு. அந்தப் பையன வீட்டுக்குக் கொண்டு வந்து எங்களுக்கு அறிமுகப் படுத்தி வச்சிரு. நாங்க ஒரு முறை பாத்துப் பேசிப் பழகிட்டா பையன் யாருன்னு தெரிஞ்சிக்கிட்டா எங்களுக்கும் பயமில்லாம இருக்கும்!” என்றார்.

 

  • அப்பாவின் பேச்சு ஆறுதலாக இருந்தது. “சரிப்பா!” என்றாள் அகிலா. சந்திப்பு முடிந்து அப்பா எழுந்தார். அகிலா படுக்கைக்கு வந்தாள். வரும் வழியில் தம்பி தன் அறைக் கதவை ஒருக்களித்துத் திறந்து வைத்துக் கொண்டிருப்பதைக் கவனித்தாள். இவ்வளவு நேரம் ஒட்டுக் கேட்டிருக்கிறான் என்று தெரிந்தது. தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்த அவனை முறைத்து விட்டு அவன் அறைக் கதவை இறுகச் சாத்திவிட்டு வந்தாள்.

 

  • புத்தகத்தில் அப்புறம் மனம் செல்லவில்லை. புத்தகப் பக்கத்தின் காதை மடித்து வைத்து விட்டு விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தாள். தூக்கம் எளிதில் வரவில்லை.

 

  • அப்பா முப்பது ஆண்டுகளாகப் பள்ளி ஆசிரியர். அந்த அனுபவத்தில்தான் இந்தப் பிரச்சினைக்கு இவ்வளவு எளிதாக, தெளிவாக ஒரு தீர்வைச் சொல்லிவிட்டார். அகிலாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அம்மாவுக்கு இந்த அறிவுரை பிடிக்கவில்லை என்பது அவள் முகத்தில் இன்னும் இறுக்கம் விலகாததிலிருந்து தெரிந்தது.

 

  • அம்மா அப்படியொன்றும் உலகம் தெரியாதவளல்ல. உலகமும் ஆண்-பெண் உறவுகளும் மாறி வருவது தெரிந்துதான் இருக்க வேண்டும். அதனால்தான் அதற்கு மேல் எதிர்ப் பேச்சு பேசாமல் விட்டுக் கொடுத்து விட்டாள். அம்மா வளர்ந்த சூழ்நிலையில் கல்யாணத்திற்கு முன் இந்த ஆண்-பெண் பழக்கம், சிரிப்புப் பேச்சு என்பதெல்லாம் கடுமையான தவறுகள் என்று சொல்லிக் கொடுக்கப் பட்டது அவள் மண்டைக்குள் இன்னமும் சுழன்று கொண்டே இருக்கிறது. ஆனால் அவள் தன்னைச் சுற்றிப் பார்க்கும் போது கல்வி முன்னேற்றத்தினால், நாகரிக முன்னேற்றத்தினால் இந்த பழக்கங்கள் தளர்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறாள். அந்தத் தளர்ந்து விட்ட சூழ்நிலையில் தன் பிள்ளையை மட்டும் பொத்திப் பொத்தி வளர்க்க முடியாது என்பதும் அவளுக்குத் தெரிந்திருக்கிறது. பிடியைத் தளர்த்தத்தான் வேண்டும் என்று முடிவு செய்ததனால்தான் வீட்டை விட்டு வெளியேறிப் பட்டப் படிப்பை மேற்கொள்ள ஆட்சேபம் இல்லாமல் அனுப்பி வைத்தாள்.

 

  • ஆனால் பெற்றோர்களின் பிடி அதிகமாகத் தளர்ந்ததினால் எத்தனையோ பிள்ளைகள் தறிகெட்டுப் போய் விடுகிறார்கள் என்பதையும் அம்மா பார்த்திருக்கிறாள். தன் கன்றும் அப்படிப் போய் விடக்கூடாது என்ற பயமும் அவளுக்கு வருகிறது. ஆகவேதான் தளர்த்திய பிடியை சில சமயம் இறுக்குகிறாள். அகிலாவுக்குப் புரிந்தது.

 

  • தான் அம்மாவின் கட்டுப்பாடுகளையெல்லாம் நிராகரித்துவிட்டுப் போய்விடுகிற அளவுக்கு அறிவாளியாகிவிட்டோம் என்று அகிலா எண்ணவில்லை. படிப்பு வேறு, அம்மா பன்னிப் பன்னி சொல்லுகின்ற வாழ்க்கை நெறிகள் வேறு என்பது அவளுக்குப் புரிந்தது.

 

  • கணேசனோடு தான் பழகுவதில் தான் எந்தத் தப்பும் பண்ணிவிடவில்லை என தன்னைத் திருப்திப் படுத்திக் கொண்டாள். அவன் அளவோடு தொடவும் தழுவவும் முத்தம் தரவும் இடம் கொடுத்தது தவறில்லை. அவையில்லாமல் காதல் வளர முடியாது. அவற்றைத் தவிர்த்து விட்டு மன உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ள முடியாது. ஆனால் அம்மா இவற்றை எந்த நாளும் ஏற்க மாட்டாள். தான் அந்த அளவுக்குத் தன்னை பூட்டி வைத்துக் கொள்ள முடியாது. ஆனால் இவற்றுக்கெல்லாம் எல்லைகள் இருக்கின்றன. அவற்றைத் தான் வரையறுத்துக் கொள்ள வேண்டும் என அகிலா தீர்மானம் செய்து கொண்டாள்.

 

  • ஆனால் இந்த எல்லைகள் தன்னை ஒத்த வயதினரிடையே விரைவாக மாறி வருகின்றன என்பது அவளுக்குப் புரிந்தது. பல்கலைக் கழகத்தில் மாணவர்களுக்கு உள்ள சுதந்திரம் இந்த எல்லைகளை எல்லாம் உடைக்க அவர்களுக்கு வாய்ப்பளித்திருப்பதையும் பலர் அப்படி உடைப்பதிலேயே பெருமைப் படுவதையும் அவள் பார்த்து விட்டாள். அவற்றைப் பார்த்து அதைப் போல் பின் பற்ற தான் மட்டும் ஏன் சுதந்திரம் எடுத்துக் கொள்ளக்கூடாது, தான் மட்டும் ஏன் அனுபவிக்கக் கூடாது என்று மனது இழுத்துக் கொண்டே இருக்கிறது. அதனால்தான் இன்று போடப்பட்டுள்ளது போலக் குடும்பக் கடிவாளங்கள் தேவையாக இருக்கின்றன.

 

  • தம்பி ஒட்டுக் கேட்டது நல்லதுதான் என அகிலா நினைத்தாள். இந்தக் குடும்பத்தின் அடிப்படை நெறிகள் என்ன என்பதை அவனும் மறைமுகமாகக் கற்றுக் கொண்டிருப்பான். கற்றல் இப்படித்தான் நிகழ்கிறது. நேரடி உபதேசத்தை விடப் பார்த்துக் கேட்டுக் கற்றுக் கொள்வதே நிலைக்கும்.

 

  • விரைவில் கணேசனை அழைத்துக் கொண்டு வந்து அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அறிமுகப் படுத்த வேண்டும் என்ற இனிமையான நினைப்பில் அகிலா தூங்கிப் போனாள்.

 

  ***

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 28ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 28

28  அம்மாவின் முகத்தில் ஏன் இத்தனை கனல் இருக்கிறதென்று அகிலாவுக்குப் புரியவில்லை. தீபாவளியன்று மாலை வரை விருந்தினர் வருகின்ற நேரமெல்லாம் அவர்களோடு புன்னகைத்து உரையாடி உபசரித்துக் கொண்டுதான் இருந்தாள். எல்லாரும் போய் வீடு ஓய்ந்த பிறகு பாத்திரங்களைக் கழுவ ஆரம்பிக்கும் போது

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 13ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 13

13  நாற்காலியில் உட்கார்ந்து சுற்றிலும் கண்களைச் சுழலவிட்ட போது அவனுக்கு பல அதிர்ச்சிகள் காத்திருந்தன. அவன் எதிர்பார்த்தது போலவே டத்தோ சலீம், பேராசிரியர் முருகேசு, ரித்வான், அவனுடைய விடுதித் தலைவர் டாக்டர் ரஹீம் ஆகியோர் இருந்தனர். ஆனால் இன்னொரு பக்கத்தில் அகிலாவும்

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 15ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 15

15  அழுகையோடு கிடந்து சோர்ந்து போய் மத்தியானப் புழுக்கத்தில் கொஞ்சம் தூங்கிவிட்டு எழுந்த போது மணி ஆறரையாகிவிட்டிருந்தது. உடம்பெல்லாம் வேர்த்துக் கிடந்தது. மத்தியானம் கம்ப்யூட்டர் லேபைத் தவறவிட்ட குற்ற உணர்ச்சி மனதில் வந்து நின்றது. ஏன் தவறவிட்டேன்? யாருக்காக இந்த மத்தியான