Tamil Madhura ஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-22

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-22

22 – மீண்டும் வருவாயா?

அடுத்து வந்த தினங்களில் அனைவரும் திருமண வேளையில் தீவிரமாக இறங்கிவிட எல்லோரும் ஒன்று சேர்ந்த மகிழ்ச்சியில் குழந்தைகளும் புது உறவுகளுடன் இணைத்துவிட நேத்ரா, ஜீவன் இருவர் மட்டும் தங்களுக்குள் விலகியே இருந்தனர். நேத்ரா வந்தால் ஜீவன் விலகி சென்றுவிடுவது, யாரேனும் இவர்களை சேர்த்து வைத்து கிண்டல் செய்தால் பதில் தராமல் விரக்தி புன்னகையுடன் செல்வது என ஜீவனின் செயல் வெளிப்படையாக அனைவர்க்கும் தெரிந்தது. வெளியே செல்லும் போது வசந்த் “டேய் ஜீவன், உனக்கு என்னடா பிரச்சனை?”

ஜீவன் “எனக்கென்னடா, நல்லாத்தானே இருக்கேன்.”

“சும்மா சொல்லாதடா. நான் கேக்கறது உனக்கு புரியும். உனக்கும் நேத்ராக்கும் இடைல என்ன பிரச்சனை. ஜீவன் எதோ கூற வரும்முன் தடுத்து இரு, நான் சொல்லிடறேன் அவ கேக்கறது, சொல்றது எல்லாம் நீ செய்ற. குழந்தைங்க எங்க முன்னாடி எல்லாம் நீங்க இரண்டு பெரும் நார்மலா தான் பேசிக்கிறிங்க. ஆனாலும் அதுல உயிர் இல்லடா. எங்களுக்கு தெரியாதா?  இதுக்கு முன்னாடி நீ அவகிட்ட எப்படி பேசுன, இருந்தேன்னு.”

ஜீவன் அமைதியாக இருக்க வசந்த் ” இந்த கேள்வி எனக்கு மட்டுமில்லை, நம்ம வீட்டுல எல்லாருக்குமே தான் இருக்கு. யாரும் தனியா எல்லாம் சொல்லல. நீ அவள கூப்பிடறதுல இருந்து புரியுது, கல்யாணம் ஆன புதுசுல வெளிப்படையா எல்லார்கிட்டயும் என் பொண்டாட்டிய நான் மட்டும் ஸ்பெஷல தான் கூப்பிடுவேன் சொல்லிட்டு நித்ரா, நித்துன்னு கூப்பிடுவ. எங்களை ஏன் சின்ன பசங்களை கூட கூப்பிடக்கூடாதுனு சொல்லி நீ சின்ன பையன் மாதிரி சண்டை போட்ட. ஆனா இப்போ எல்லாம் நீ அவளை நேத்ரானு தான் கூப்பிட்ற. நீ அப்டி கூப்பிடும்போது எல்லாம் அவ முகமே வாடிடுது. எல்லாரும் உன்னை கவனிச்சிட்டு தான்டா இருக்காங்க. நீங்களா தனிமைல பேசி சரி ஆவிங்கனு தான் அப்பா உங்களை கூட இருக்கறதுக்கு கம்பெல் பண்ணலனு சொல்லறாரு. ஆனா நீ என்னடான்னா  எவ்ளோ நாள் ஆனாலும் அப்டியே தான் இருக்க.”

ஜீவன் பெருமூச்சுடன் “அவ விட்டுட்டு போனதை பத்தி கேட்டு கொஞ்சம் சண்டை. அதுனால தான்” என அவன் பொதுவாக கூற

வசந்த் “உனக்கு என்ன பைத்தியமாடா. இங்க எவ்ளோ பிரச்சனை, குழப்பம், நீயுமில்லாம அந்த புள்ளைக்கு சப்போர்ட்ன்னு யாருமே இல்லாம இருந்த சமயம் அது. எல்லாத்தையும் தாண்டி நீதான் வேணும், உனக்காக மட்டும் தான் லைப்னு நீ கண்டிப்பா வருவேன்னு நம்பிக்கையோட இருந்த ஒரே ஜீவன் அவதான். அவளை பாத்து ஏன் போனேனு கேக்கவும், இப்போவும் அத காரணம் காட்டி சண்டை போடவும்  உனக்கு எப்படி மனசு வருது. நேத்ரா வீட்டை விட்டுட்டு போகும்போது இருந்த பிரச்சனை எல்லாம் உனக்கு மறந்து போட்ச்சா? நீ திரும்பி வந்ததும் அவளை தேடி போயிருக்க வேண்டியது தானே. அத நீ பண்ணாம இப்போ அவளை குறை சொல்றியா?” என கத்த

 

ஜீவன் “நான் அவளை தேடி போனேன். அவ காணாம போன இரண்டேமாசத்துல அவளை தேடி இருந்த இடத்துக்கு போனேன். அங்கிருந்து அவ என்னை விட்டுட்டு போய்ட்டா. அதைதான் நான் அவகிட்ட கேட்டேன்.” என கூற இது வசந்திற்கு அதிர்ச்சியாக இருந்தது.

வசந்த் “எப்போடா, எப்படி? நாங்களும் கூட தானே இருந்தோம். அப்போவே கண்டுபுடிச்சேன்னா அவ ஏன் திரும்ப போனா? என்ன பதில் சொன்னா? எப்போ இதை நீ அவகிட்ட கேட்ட?” என அவன் கேள்விக்கணைகளை தொடுக்க ஜீவன் குழந்தைகளை வசந்த் வீட்டிற்கு அனுப்பிவிட்டு நேத்ராவுடன் பேசிய அன்றைய நிகழ்வை நினைவுகூர்ந்தான்.

 

[வஸந்தை அனுப்பி விட்டு உள்ளே வந்து ஜீவன் அமர நேத்ராவும் எதிரே அமர்ந்திருக்க ஐந்து நிமிடம் அவளை இமைக்காமல் பார்க்க அவன் கண்களில் பல கேள்விகள். அதை உணர்ந்ததாலோ என்னவோ நேத்ரா மிகவும் அசௌகரியமாக உணர்ந்தாள்.

அவளை மேலும் வாட்டாமல் ஜீவன் “சொல்லு, ஏன் ஜீவி பொறந்ததை யாருக்குமே தெரியப்படுத்தல. உங்க அம்மா அப்பா யாருமே கூட நான் வந்து உன்னை கேட்டபோது கூட உன்னை பத்தி தான் சொன்னாங்க. குழந்தையை பத்தி ஏன் சொல்லல?”

நேத்ரா “உங்களுக்கு நடந்த பிரச்சனை தெரியும்னு நினைக்கிறேன். எனக்கு நம்பிக்கை இருந்தது நீங்க உயிரோட வருவீங்கன்னு. ஆனா யாரும் அதை ஏத்துக்க தயாராயில்லை. நீங்க வருவீங்கன்னு நம்புன எனக்கு எப்போ வருவீங்கன்னு சொல்ல தெரில. ஒருவேளை ரொம்ப காலம் ஆச்சுன்னா நம்ம பொண்ணு பொறந்ததால தான் முடிவே பண்ணிருப்பாங்க, ஏதேதோ பேசிருப்பாங்க. அது அவளை பாதிக்குமோன்னு தோணுச்சு. அதான் வெளிப்படையா எல்லாருக்கும் தெரிஞ்சமாதிரி நமக்கு பையன் பொறந்தது மட்டும் இருக்கட்டும். ஜீவிதாவை பத்தி யாருகிட்டேயும் சொல்லவேண்டாம். ஒருவேளை எப்படியாவது தெரியவந்தா அப்போ பாத்துக்கலாம்னு வீட்ல எல்லார்கிட்டேயும் குழந்தை பொறந்த அடுத்த நாளே சொல்லிட்டேன். அதனால தான் அவங்களும் சொல்லிருக்கமாட்டாங்க.”

 

ஜீவன் அதை கேட்டுவிட்டு “ஏன் விட்டுட்டு போன?” என்றான்

நேத்ரா “விஜய், அன்னைக்கு இருந்த சூழ்நிலை அந்தமாதிரி..” என அவள் முடிக்குமுன் அவளை கையமர்த்தி

“இங்கிருந்து போனதை பத்தி கேட்கல. உன்னை தேடி வந்தது தெரிஞ்சும் மதுரைல இருந்து ஏன் போன?” என வினவ அவள் அதிர்ச்சியாக அவனை பார்க்க அவனே தொடர்ந்து “நான் கண்டிப்பா வருவேன்னு நம்புன ஒருத்தி நீ. ஆனா நான் இங்க வந்தப்புறம் நீ இல்லைன்னு தெரிஞ்சதும், நடந்த பிரச்சனைய கேட்டதும் உங்க அம்மா வீட்டுக்கு உன்னை தேடி வந்தேன். அங்கேயும் நீ இல்ல, நீ எழுதுன லெட்டர் மட்டும் தான். எப்படி ஒடைஞ்சுபோனேன் தெரியுமா. உன்னை நான் ரொம்ப மிஸ் பண்ணேன் என்று அவனுக்கு என்னவானது, அவன் இறந்ததாக வந்த செய்தி, ஏற்பட்ட காயம், இராணுவத்தில் இருந்து வந்தது, இங்கே வந்து அனைவரிடமும் இவளை பற்றி கேட்டு இல்லை என்றான பின் அவர்களை விட்டு விலகி வந்து தனியே குழந்தையுடன் இருப்பது என அனைத்தும் கூறினான்.

“சொல்லு நித்ரா.. நீ இல்லாத இடம் கூட எனக்கு வேண்டாம்னு நான் தூக்கி எறிஞ்சுட்டு வந்தேன். நீ ஏன் போன? ஜீவாகிட்ட சொல்லும் போது அவனை சமாதானப்படுத்திட்டு ஒரு ஸ்டேஜ்க்கு மேல எனக்கும் அவனுக்கும் இருக்கற ஒரே சந்தோசம், ஆறுதலே உன்னை பத்தி பேசுறது தான். அம்மா இதை எப்படிப்பா பண்ணுவாங்க சொல்லுவாங்கனு கேட்டுட்டே இருப்பான். அவனுக்கு சொல்லிட்டு அவனை விட நான் உன்னை மிஸ் பண்ணி பீல் பண்ணிருக்கேன். அப்போ ஜீவா சொல்லுவான் “அம்மா வந்துடுவாங்கப்பா பீல் பண்ணாதீங்க. அம்மாக்கு நீங்க அப்டி இருந்தா புடிக்காதில்லைன்னு” என்று கூற அவன் கண்கள் கலங்க இப்போது அவன் அந்த வேதனையில் உணர்ச்சிகளை அடக்க போராட கைகள் நடுங்க அவனிடம் எழுந்துவந்தவள் “விஜய், ப்ளீஸ்.. நான் வேணும்னு எதுவும் பண்ணல.” என  அவனை வயிற்றோடு அணைத்துக்கொண்டாள். அவனுக்கும் அந்த ஆறுதல் தேவைப்பட இறுகி அணைத்துக்கொண்டவன் சற்று பொறுத்து விலகியவன் அவளை அருகே அமர்த்திக்கொண்டு கூறினான்.

“என்னால அதைத்தான் ஏத்துக்கவே முடில. நீ காரணம் இல்லாம எதுவும் பண்ணமாட்டேனு நம்பிக்கை இருக்கு. ஆனா உன்னை தேடி நான் வந்தும் என்னை விட்டு விலகி போக என்ன காரணம் நித்து. ஒண்ணு என் மேல இருந்த நம்பிக்கை போயிருக்கணும். இல்லை என்னைவிட்டு நீ விலகனும்னு நினைச்சிருக்கணும். இது இரண்டத்தையுமே உன்கிட்ட இருந்து என்னால ஏத்துக்க முடியாதுனு தான் அடுத்து உன்னை டிஸ்டர்ப் பண்ணாம தேடாம விட்டுட்டேன். சொல்லு இது இல்லமா வேற என்ன காரணம்.?” என அவன் மீண்டும் வினவ

நேத்ரா தவிப்புடன் “விஜய், நான் என்னவெல்லாம் யோசிச்சேன் ஏன் அப்டி போனேன்னு அங்க நடந்தது என்னனு முழுசா கேட்டாதா உங்களுக்கு புரியும். நான் எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்றேன்.”

ஜீவா “இல்லை வேண்டாம். எனக்கு தேவை பதில். நீ ஆயிரம் யோசிச்சிருப்ப.. அதெல்லாம் நான் கேட்கற நிலமைல இல்ல. அவசியமும் இல்ல. எனக்கு தேவை திரும்ப நீ விட்டு போனதுக்கும், தேடிவராததுக்கும் இதுதான் காரணம்னு ஒண்ணு யோசிச்சிருப்ப. அதை வெச்சு தானே முடிவெடுத்திருப்ப. எனக்கு அதுதான் வேணும். அதை மட்டும் சொல்லு என பிடிவாதமாக நிற்க அவளும் எவ்வளவோ கூற முற்பட்டும் அவன் விடாப்பிடியாக நிற்க அவள் தவிப்புடன் பதில் கூற “விஜய், ஒருவேளை உங்களுக்கு வேற கல்யாணம் பண்ணிவெக்க எல்லாரும் முடிவுல இருந்திருந்தா நான் வந்ததுல திரும்ப குழப்பம் வரும். அதுகூட சமாளிச்சாலும் வீட்ல மத்தவங்க எல்லாரும் குறையா சொல்றதே நமக்கு பொண்ணு பொறந்தா உங்களுக்கு பிரச்னைங்கிறது.. ஒருவேளை திரும்ப ஏதாவது சொல்லிட்டா அவ பாவம். அதான் கொஞ்சம்..” என முடிக்கும்முன் அவன் சட்டென்று அவள் கையை உதறி விட்டு எழுந்தான்.

குறுக்கும் நெடுக்கும் நடந்தவன் சோபாவை எட்டி உதைத்தான். பதறிய நேத்ரா “விஜய் நான் சொல்றத..”

“போதும். இதுக்கு மேல எதுவும் சொல்லி என் கோபத்தை கிளறாத… எப்படி உன்னால என்னை இவளோ சீப்பா நினைக்க முடிஞ்சது. நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்குவேனா? நான் இதை உன்கிட்ட இருந்து சுத்தமா எதிர்பாக்கல.. நமக்கு பெண் குழந்தை பொறந்ததை நீ சொல்லல. அந்த காரணம் கூட நீ சொன்னதை நான் ஏத்துக்கிட்டேன். ஏன்னா அந்த சூழ்நிலை அப்டி. ஆனா நான் வந்த அப்புறம் கூட உன்னையும் நம்ம பொண்ணையும் கண்டுக்காம அம்போன்னு விட்ருவேன்னு நினைச்சியா? என்னை நீ அவ்ளோதான் புரிஞ்சுகிட்டேயா?” என அவன் கத்த

“விஜய்.. அப்டி இல்லை… அந்த அர்த்தத்துல நான் சொல்லல.”

“போதும் நேத்ரா..”

“அதென்ன நேத்ரா இவளோ நாள் அப்டி தான் கூப்பிட்டிங்களா?” என அவளும் காட்டமாக வினவ

“இவளோ நாள் இருந்த மாதிரி இல்லையே. என்னை புரிஞ்சுக்கலையே.. நீயும் மத்தவங்க மாதிரி தான்னு காட்டீட்டேயே? இப்போ எதுக்கு இவளோ நீ இவளோ கோபப்படுற?”

“பின்ன, சொல்லவரதை கேட்காம கத்துறது நீங்க. உங்களை கொஞ்சிட்டா இருப்பாங்க.?”

“ஆமா நான் உன்னை விட்டுட்டு வேற ஒருத்திய கல்யாணம் பண்ணிக்கபோறேன், உன்னை குழந்தையை எல்லாம் கண்டுக்காம தவிக்கவிடபோறேனு நீ பைத்தியக்காரத்தனமா திங்க் பண்ணிருக்க. இதுக்கே எனக்கு பத்திகிட்டு வருது. இதுக்கு நீ இன்னும் விளக்கம் வேற குடுக்கபோறேங்கிற. அதை நான் காது குடுத்து கேட்கணும்ங்கறியா?” என இருவரும் சரிக்கு சரியாக நிற்க

அவள் “சொல்லவரதையே கேட்காம கத்தறவங்களை என்ன பண்ணமுடியும். ஆனா கண்டிப்பா இதுக்காக பீல் பண்ணபோறீங்க.” என கோபமாக உள்ளே சென்றுவிட

இவனும் “போடி, ஏற்கனவே விட்டுட்டு போனதுக்கு, இப்போ நீ சொன்னதுக்கே நல்லா பீல் பண்ணிட்டு சந்தோசமா தான் இருக்கேன். இதுக்குமேல என்ன பெருசா இருக்கு.” ஹாலில் கத்திகொண்டே நின்றான். அதன் பின்னர் தான் குழந்தைகளை அழைத்துவந்து பேசியது அனைத்தும்]

 

வசந்த் ஜீவன் கூறியதை கேட்டவன் “நேத்ரா, என்ன இருந்தாலும் அப்டி நினைச்சது தப்பு தான். ஆனாலும் அவ சொல்லவரதை என்னனு தான் கேளேன்டா.” என்றதும் ஜீவன் திரும்பி முறைக்க வசந்த் தலை கவிழ்ந்தான்.

ஜீவன் “அவ யோசிச்சேங்கிற பேர்ல லூசு மாதிரி திங்க் பண்ணத உளறுவா அதை நான் கேட்கணுமா? அத்தனை வருஷம் என்கூட வாழ்ந்த வாழ்க்கை, புரிதல்னு எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டு என்னை நம்பாம இருந்திருக்கா. அதுக்கு என்னை விளக்கம் கேட்க சொல்றியா? அவ இங்கிருந்து போய்ட்டானு சொன்னபோது கூட என்னை அவ நம்பியிருக்கானு நினைக்கும் போது அவ்ளோ சந்தோசமா இருக்கும். அவ பிரிவை தாண்டி அவ மனசளவுல என்கூட இருக்கற ஒரு உணர்வு இருக்கும். அவளை தேடி போயி அங்கிருந்து அவ போனப்புறம் கூட என் நித்து காரணம் இல்லாம எதுவும் செய்யமாட்டானு நான் நம்புனதால தான் அவளா வரட்டும்னு தொந்தரவு பண்ணாம இருந்தேன். ஆனா அவ நம்பலைங்கறத என்னால ஏத்துக்க முடிலடா.

 

எந்த பொண்ணும் தன் புருஷன்கிட்டயோ லவர்கிட்டேயோ தான் ரொம்ப சுதந்திரமாவும் வெளிப்படையாவும்  பாதுகாப்பாவும் இருக்கணும்னு விரும்புவாங்க. அப்டித்தான் இருக்கணும். ஆனா இப்போ எல்லாம் அப்டியா இருக்கு. புருஷன் திட்டுவான், கோவிச்சுப்பான், சந்தேகப்படுவான், சங்கடப்படுவானு ஆயிரம் காரணம் சொல்லி அவன்கிட்ட உண்மையா இருக்கமுடியாத நிலைமைய அந்த மாதிரி ஆம்பளைங்களே உருவாக்கிடறாங்க. எந்த பிரச்சனை வந்தாலும் என் புருஷன்கிட்ட சொன்னா அவன் பாத்துப்பான், எனக்காக சப்போர்ட்டா எப்போவுமே அவன் இருப்பான்னு அந்த பொண்ணுங்க நம்புறது அவங்க நம்ம மேல வெக்கிற வெறும் அனுப்புனால மட்டும் வந்திராது. அதைத்தாண்டி நம்மகிட்ட பாக்குற நம்பிக்கை புரிதல் எல்லாமே வெச்சுதான் தானா வரும். நான் இல்லாத போது அவ போனது சரி, நான் வந்த பிறகும் அவ போனான்னு என்கிட்ட அவளுக்கு அந்த நம்பிக்கை போயிருச்சுனு தானே அர்த்தம். நானும் அப்போ மனைவியோட வலிய புரிஞ்சுக்காத அந்த மாதிரி சீப்பான ஆம்பளைங்கள்ல ஒருத்தனாடா? என் நித்து என்னை இப்டி நினைப்பாளா? அதை நினைக்கும் போது தான் எனக்கு கோபம் வலி இயலாமைனு எல்லாமே வருது.” என அவன் பொலம்பிவிட்டு எழுந்து தனியே சென்றான். வசந்த்திற்கும் இவனது கோபம் நியாயம் என பட்டது. ஆனால் எதுவும் கூறவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-19ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-19

19 – மீண்டும் வருவாயா? காலை வீட்டிற்கு வந்தவன் குளித்து தயாராகி வெளியே வந்து அவன் பைக்கை எடுத்தவன் கோவிலுக்கு வரசொல்லிவிட்டு சென்றான். அங்கே அனைத்தும் தயாராக இருக்க வாசுகியிடம் வந்தவன் “அத்தை, நீங்க தான் குழந்தைக்கு பேர் வெக்கணும்” என

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-24ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-24

24 – மீண்டும் வருவாயா? வீட்டிற்கு நேத்ரா வந்ததும் விஜயை சென்று பார்க்க அவன் அறையில் படுத்திருந்தான். இவளும் அருகில் அமர்ந்தவள் அவன் மறுபுறம் திரும்பி படுத்திருந்ததால் அவன் தூங்குகிறான் என எண்ணியவள் சில வினாடி அமைதியாக இருந்தவள் எழுந்து செல்ல

ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-33ஹஷாஸ்ரீயின் ‘மீண்டும் வருவாயா’-33

33 – மீண்டும் வருவாயா? விஜய் “ம்ம்.. எப்போ உன்கிட்ட பேசுனா? என்ன சொன்னா?” “வசந்த் அண்ணா வீட்ல இருந்து வந்த அன்னைக்கு ஈவினிங் நீங்க வெளில போய்ட்டாங்கல… அப்போ பேசுனா. ஜீவா நான் ஜீவி மூணு பேரும் கொஞ்ச நேரம்