Tamil Madhura காதலினால் அல்ல! ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 17

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 17

17
 

  • புத்தம் புதிய சோப்பை அப்போதுதான் பிரித்தாள். ஷவரிலிருந்து வந்த குளிர் நீரில் நனைத்த போது அந்த சோப் புதிய எலுமிச்சம் பழ வாசனையை விடுவித்தது. உடம்பெல்லாம் பூசிக் கொண்ட போது நுரை நுரையாயாகப் பொங்கி வழிந்தது. அன்றைய பிற்பகல், இரவு வியர்வையெல்லாம் அதில் வழிந்து போய் தோலில் நறுமணம் ஏறிய போது அகிலாவுக்கு ஆனந்தமாக இருந்தது.

 

  • அன்றாட வாழ்வில் குளிக்கும் நேரம் போன்ற ஆனந்தமான நேரம் வேறு ஏதும் இல்லை. கதவை அடைத்துக் கொண்டு விட்டால் பிறர் கண் படாமல் தனக்கே தனக்கு என்று சொந்த உலகத்தைப் படைத்துக் கொள்ளலாம். சுவரை வெறித்துப் பார்த்துக் கொண்டு மனதுக்குள் வேண்டிய காட்சிகளைப் படைத்துக் கொள்ளலாம். குளிக்கும் நேரத்தில் எல்லா சாதாரண மனிதர்களும் கலைஞர்கள்தான்.

 

  • அகிலா தன் கழுத்துச் சங்கிலியின் சிறிய பதக்கத்தை வருடியவாறு சுவரில் கொஞ்சம் சாய்ந்து கொண்டு தண்ணீரை வழிய விட்டுக் கொண்டிருந்தாள். அது தலையில் கொட்டி கூந்தலில் இறங்கி தோள் வழியாக உடம்பு எங்கணும் பாய்ந்தது. தண்ணீரும் ஒரு மருந்துதான் என அகிலா எண்ணினாள். இப்படிப் பிறந்த மேனியான தோலில் பட்டு வழிந்தவுடன் எப்படி சுகப் படுத்துகிறது! இன்றைய மத்தியான வெயிலின் புண்களும் திறந்த வெளியின் தூசுகளும் அகன்று தோல் புதுப் பிறவி எடுத்துக் கொண்டிருந்தது.

 

  • இந்த விடுதியில் நிம்மதியாகக் குளிப்பதற்கு இரவு நல்ல நேரம். காலையிலும் பகலிலும் யாராவது காத்திருந்து அவசரப் படுத்திக் கொண்டே இருப்பார்கள். ஆனால் இரவில் அந்த அவசரம் இல்லை. நீண்ட நேரம் குளிக்கலாம். அப்போது நீர் அழுத்தமும் அதிகமாக இருக்கும். ஷவரை அருவியாகக் கருதிக் கொண்டு பாடலாம். நீரை வழிய விட்டவாறு கேசத்தைக் கோதிக் கொண்டு ஜலக்ரீடைக் கனவுகள் காணலாம்.

 

  • ஆனால் அகிலாவின் அந்த இனிய கனவுகளூடே நினைவுகளும் இடைப்பட்டு அவளை வருத்திக் கொண்டிருந்தன. ஏன் இப்படி நடந்து கொண்டேன்? ஏன் இப்படி விட்டுக் கொடுக்காமல் முரட்டுத் தனமாகப் பேசினேன்? ஏன் நயந்து வந்தவனை அப்படி முரட்டுத் தனமாகத் தள்ளினேன்? என்று பல கேள்விகளைத் தனக்குள் கேட்டுக் கொண்டாள்.

 

  • கணேசனை அவளுக்கு வெகுவாகப் பிடித்திருந்தது. மனம் அவனுக்காக ஆசைப் பட்டது. அவன் பேச்சுக்கும் பார்வைக்கும் அன்புப் பிடிக்கும் ஏங்கிக் கூட நின்றது. ஆனால் அப்படியெல்லாம் ஆசைப் படுவது குற்றம் என்றும் அதே மனம் சொல்லியது. அந்த எச்சரிக்கைதான் இன்று வென்றது.

 

  • வென்ற பின் இப்போது வேகிறது. எத்தனை ஆசையாக என்னிடம் பேசவந்தான்! ஏன், வரச் சொல்லி சூசகமாகச் சொன்னதே நான்தானே! அப்படிச் சொன்னபிறகு நடனப் பயிற்சி நடந்த நேரத்திலெல்லாம் அவன் வந்திருப்பானா, வந்திருப்பானா என்று இந்த மனம் கிடந்து ஏங்கவில்லையா? அப்படியெல்லாம் ஏங்கி எதிர்பார்த்து அவன் நேரில் வந்து நின்ற போது ஏன் சுமுகமாகப் பேச முடியவில்லை? ‘வந்ததற்கு நன்றி, எனக்காகக் காத்திருந்ததற்கு நன்றி, என்னோடு உட்கார்ந்து பேசுவதற்கு நன்றி’ என்று மகிழ்ந்து சொல்ல வேண்டியதற்கு பதிலாக ‘ஏன் இங்கு வந்தாய்? என்னோடு உனக்கென்ன பேச்சு? நீ யார் நான் யார்?’ என்ற தொனியில் வெடுக்கென்று பேசி விரட்டத்தான் முடிந்தது.

 

  • பருவப் பெண்ணுக்கு இந்தத் தற்காப்பு உணர்வு தேவைதான் என அகிலாவுக்குப் புரிந்தது. அம்மா இதை மறை முகமாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறாள். இந்த விஷயங்கள் பற்றியெல்லாம் எந்த நாளும் அவள் நேராகத் தன்னிடம் பேசியது கிடையாது. ஆனால் மறைமுகமாக நிறையப் பேசியிருக்கிறாள்.

 

  • எட்டு ஒன்பது வயதிலேயே பக்கத்து வீட்டு எதிர்த்த வீட்டுப் பையன்களோடு அவள் பட்டம் விடுவதற்கு ஓடிய போது அம்மா “ஆம்பிள பிள்ளங்களோட உனக்கு என்ன விளையாட்டு?” என்று கோபத்துடன் ஏசியிருக்கிறாள். அது ஏன் என்பது ஒரு காலும் புரிந்ததில்லை. பையன்களும் பெண்களும் எல்லாரும் கூட்டாளிகளாகத்தான் தெரிந்தார்கள். ஆரம்பத்தில் பட்டம் விடும் ஆசை அதிகமாகி அம்மாவின் எச்சரிக்கையை சட்டை பண்ணாமல் அவள் ஓடிய போது அம்மா இழுத்து அடித்திருக்கிறாள். ஆகவே ஆண் பையன்களுடன் போய்ச் சுற்றுவது என்பது அம்மாவைக் கோபப்பட வைக்கின்ற விஷயம், தண்டிக்கப்பட வேண்டிய விஷயம் என்பது எட்டு வயதில் புரிந்து போயிற்று.

 

  • அவள் பருவமடைந்த போது அந்தத் திடீர் உதிர வெளிப்பாட்டில் தன் உடலுக்குள் ஏதோ தீராத நோய் வந்து விட்டதைப் போல அகிலா பயந்து கிடக்கையில் ஏதோ ஒரு வகையில் தான் சாக்கடையில் விழுந்து விட்டது போலக் கருதி அம்மா தீட்டுக் கழிப்புச் சடங்குளெல்லாம் செய்து அவளை ஒரு ஈனப் பிறவியாக்கினாள். பெண்கள் மாதாமாதம் அசிங்கப்பட்டு அந்த அசிங்கத்தை ஒளித்தும் மறைத்தும் வைத்துக் கூச வேண்டிய சாபம் பெற்றவர்கள் என்பதை அம்மா வேலைகள் செய்தவாறு யாருக்கோ சொல்லுவது போல தனக்குச் சொல்லி வைத்திருந்தாள்.

 

  • “இனிமே இந்த ஆம்பளப் பையன்களோட இளிச்சி இளிச்சி பேசாத, ஆமா!” என்று மீண்டும் எச்சரித்தாள். இந்த ஆண்களிடம் தன்னை அபாயத்துக்கு உள்ளாக்குகிற ஏதோ ஒரு மந்திரம் இருக்கிறது என அகிலா எண்ணினாள். அந்த மந்திரம் ஏதும் பெண்களிடம் இல்லை. ஆகவே ஆண்கள் அதிசயித்துப் பார்க்கத் தக்கவர்கள். பயப்படத் தக்கவர்கள். ஒரு மரியாதையுடன் நடத்தப்பட வேண்டியவர்கள் என்று அகிலா கற்றுக் கொண்டாள்.

 

  • ஆனால் தன் வயதை ஒத்த இந்தப் பையன்கள் ஆடுகிற விளையாட்டுகள், பேசுகிற பேச்சுக்கள் இவற்றையெல்லாம் பார்த்தால் தன்னை விட இவர்களுக்கு புத்திசாலித்தனம் மிகக் குறைவு என்று தெரிந்தது. வகுப்பில் கூடப் பெண்களை விட குறைவான மார்க்கே அவர்கள் வாங்கினார்கள். வாத்தியார் சொல்லுகின்ற பாடம் பெண் பிள்ளைகளுக்குப் புரிவது போல இந்தப் பையன்களுக்குப் பட்டென்று புரிவதில்லை. விளையாட்டிலேயே குறியாக உள்ள மண்டுகளாகத்தான் இருந்தார்கள்.

 

  • வீட்டில் கூட அப்பாவை விட அம்மாதான் புத்திசாலியாக இருந்தாள். வீட்டு நிர்வாகம், பண நிர்வாகம் சேமிப்பு, முதலீடு எல்லாம் அம்மாதான் முடிவு செய்தாள். அப்பா அவளிடம் கேட்டுக் கேட்டு நடந்து கொள்வார். “உங்களுக்கு என்னதான் தெரவசு இருக்கு?” என்று அம்மா அவரைத் திட்டக் கூடச் செய்வாள். ஆகவே இவர்களிடம் ஏன் பெண்கள் பயந்து நடக்க வேண்டும் என அகிலாவுக்குப் புரியவில்லை.

 

  • ஆனால் மூன்றாவது மனிதர் வீட்டுக்கு வந்து விட்டால் அம்மா உடனடியாக ஒடுங்கிப் போய்விடுவாள். அப்பாதான் எல்லாம் முன்னின்று பேச வேண்டும். முடிவுகள் எல்லாம் அப்பாதான் செய்ய வேண்டும். அறைக்குள் அம்மா தீர்மானமாகச் செய்கிற முடிவுகளையெல்லாம் அப்பா தானாகச் செய்தது போல வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

  • இந்த வேடங்களில் இருவருமே நன்றாக நடித்தார்கள். இந்த நடிப்பினால்தான் குடும்பத்தில் இணக்கம் தோன்றியது. நல்ல தம்பதிகள், நல்ல குடும்பம் என்று மற்றவர்கள் பேசிக் கொண்டார்கள். கல்யாணம், பிறந்த நாள், குழந்தைப் பேறு, குழந்தை பேர்வைப்பு என்று எந்தக் குடும்ப வைபவமானாலும் அப்பாவையும் அம்மாவையும் முன்னால் கூப்பிட்டு ஆசிர்வாதம் வாங்கினார்கள்.

 

  • வேறு குடும்பங்களைப் பற்றிப் பேசும் போதும் பெண்ணின் அடக்கம் என்பது ஒரு முக்கியமான விஷயமாகத்தான் பேசப்பட்டது. பல பெண்களை “அடக்கமில்லாத பெண்” என அம்மா நிராகரிக்க அகிலா கேட்டிருக்கிறாள். கல்யாண ஏற்பாடுகள் வரும்போது “பொண்ணு அடக்கமானவளான்னு பாத்துக்குங்க!” என்ற பேச்சு முக்கியமாக வரும். “அந்தப் பொம்பிளயா? பெரிய வாயாடியாச்சே!” என்ற கருத்து வரும்.

 

  • பெண்கள் அடக்கமாக இருக்க வேண்டும். ஆண்கள் முன் சுற்றக் கூடாது. அதிகம் பேசக் கூடாது. இவையெல்லாம் அம்மாவிடமிருந்தும் குடும்ப உதாரணங்களிலிருந்தும் சமூகப் பேச்சுக்களிலிருந்தும் அகிலா கற்றுக் கொண்டாள். வீட்டில் கூட விசேஷ காலங்களில் விருந்தினர் வரும் போது ஆண்கள் முன்னால் வரவேற்பறையிலும் பெண்கள் சாப்பாட்டு அறையிலும் சமையலறையிலும் உட்கார்ந்து பேசுவதே வழக்கமாக இருந்தது.

 

  • இதனால் எல்லாம் ஆண்களிடம் இயற்கையாக ஒரு பயம் அகிலாவுக்கு ஏற்பட்டு விட்டது. அவள் படித்தது கலப்புப் பள்ளியாக இருந்தாலும் அங்கும் ஆணுலகமும் பெண்ணுலகமும் தனித்தனியாகவே இயங்கின. ஆண்கள் முரட்டுப் பேச்சு முரட்டு விளையாட்டுகள் என்றும் பெண்கள் மென்மை விளையாட்டுகள், குசுகுசுப் பேச்சுகள், வெகுளிச் சிரிப்புகள் என்றும் தனித்தனி உலகில் இருந்தார்கள்.

 

  • ஒவ்வொருகால் ஆணும் பெண்ணும் கலந்து காதல் அது இது என்று வந்து விட்டால் அது குற்றமாகக் கருதித் தண்டிக்கப் பட்டது. ஆகவே ஆண்களுடன் பழக்கம், காதல் என்பதெல்லாம் குற்றச் செயல்கள் என்ற கருத்தே அவளுக்குள் வளர்ந்து வந்தது. மனம் அந்த ஆசையைத் தூண்டத் தூண்ட இது குற்றம், இது குற்றம் என அடக்கி அடக்கியே பழகிப் போய்விட்டது. குறிப்பாக எந்த ஆண் பிள்ளையுடனும் தனியாக நின்று பேசுவது ஒரு தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்ற கருத்துத் தெளிவாக மனதில் வந்து வேர் பிடித்திருந்தது.

 

  • அந்த உணர்வுதான் இன்று கணேசனை அப்படி மறுக்க வைத்தது என அவளுக்குத் தோன்றியது. இந்த எச்சரிக்கை உணர்வுகளின் ஏகப் பிரதிநிதியாக அம்மாதான் மனசுக்குள் இருந்தாள். ‘அம்மாவுக்கு இது தெரிந்தால் என்ன ஆகும்?’ என்ற நினைவே பயமாக இருந்தது. அம்மாவுக்கு நல்ல பிள்ளையாக இருக்க வேண்டுமானால் அவளுக்குத் தெரியாமல் இந்த மாதிரித் திருட்டுத் தனங்களில் ஈடுபடக் கூடாது என்ற பெரும் எச்சரிக்கை உணர்வு அப்போது மிகுந்திருந்தது.

 

  • இருந்தும் இது ஒரு திருட்டா என்பது அவளுக்குப் புரியவில்லை. இதில் என்ன திருட்டு உள்ளது? இதில் என்ன ஒளிவு மறைவு உள்ளது?

 

  • முதலில் கணேசனை இப்படித் தனியாக இரவில் சந்தித்துப் பேசுவது என்பது முறையல்ல என்ற குற்ற உணர்ச்சி இருந்தது. அதைத் தான் விரும்பி எதிர்பார்த்தது என்பது மேலும் ஒரு குற்றமாக இருந்தது. அவனுடைய பல்கலைக் கழக விசாரணையைப் பற்றி அவன் பேசியது தவறாகத் தெரியவில்லை. ஆனால் “வா இந்த வெற்றியைக் கொண்டாடலாம்!” என அவன் கூப்பிட்டது தவறாகத் தெரிந்தது. அப்படி அவன் கூப்பிட்டதைத் தான் விரும்பியது இன்னொரு குற்றமாக இருந்தது. “தனியாகப் போய்ச் சாப்பிடலாம்” என்ற அழைப்பு ஏதோ ஒரு குற்றச் செயலுக்குத் தன்னை அவன் அழைப்பது போலத் தோன்றியது. ஆகவே அதைச் சரிப்படுத்த “என் தோழிகளோடு வருகிறேன்!” என்று சொல்ல வேண்டியதாயிற்று.

 

  • “நான் என் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு போய் விடுதியில் விடுகிறேன்!” என்று அவன் சொன்னதும் ஏதோ ஒரு குற்றச் செயலுக்கு அழைப்பு விடுப்பது போலத்தான் இருந்தது. அதைக் கேட்டதும் அவன் தோள் தழுவி ஏறிப் போகலாம் என்ற கிளுகிளுப்பு தனக்கு உண்டானது மேலும் ஒரு பெரிய குற்றமாகத் தெரிந்தது. “வேண்டாம்! அம்மாவுக்குத் தெரிந்தால் ஏசுவாள்!” என்று ஒரு உள்ளுணர்வு சொல்லிற்று.

 

  • ஆயிற்று. எல்லாவற்றையும் மறுத்து எல்லாப் பாவங்களையும் முறியடித்து வந்தாயிற்று. அவன் கோரிக்கை விடுத்த எந்தக் குற்றச் செயலுக்கும் இணங்கவில்லை. தன் மனம் இழுத்து மயக்க முயன்ற எந்தத் தீச் செயலுக்கும் மயங்கவில்லை. ஆகவே இதன் முடிவில் வெற்றி எனக்குத்தான். நான் அப்பழுக்கு இல்லாதவளாக வந்திருக்கிறேன்.

 

  • ஷவரிலிருந்து தண்ணீரைத் தன் திறந்த மேனித் தோலின் மீது வழிய விட்டுக் கொண்டிருந்த அகிலாவுக்கு மனசு மட்டும் அந்த வெற்றிக் களிப்பில் எக்களிக்க மறுத்தது. இந்த வெற்றியில் ஏதோ போலித் தனம் இருப்பதாகத் தோன்றியது. இதில் ஏதோ இழப்பு இருப்பதாகத் தோன்றியது. வெறுமை உணர்வுதான் மனசில் வந்து தங்கியது.

 

  • தன் பெண்மை கெட்டுப் போகாமல் இருக்கத் தான் வேலிகள் போட்டுக் கொள்ள வேண்டியது சரிதான். ஆனால் தான் வேலிகளுக்கு மேல் செங்கல் வைத்து சிமிந்தி பூசி சுவரே கட்டிக் கொண்டது போல் இருந்தது. எந்த ஆணிடமிருந்தும் சுவாசக் காற்று கூடத் தன் மேனியில் படக்கூடாது என்று தடுப்புப் போட்டுக் கொண்டதாக எண்ணினாள்.

 

  • அப்படியெல்லாம் போட்டுக் கொண்டும் இந்த மனம் மட்டும் ஏன் அலைகிறது? இதை அலைப்பது எது? ஆணின் – குறிப்பாக அந்த கணேசனின் – அணுக்கம், பரிவு, தொடல் என்பது வேண்டும் என ஏங்குவது ஏன்? ஏங்கச் செய்வது எது? ஏங்குவது குற்றமா? ஏன் குற்றம்? குற்றம் எனத் தெரிந்தும் என் மனம் அடங்காமல் ஏன் ஏங்குகிறது?

 

  • குழப்பமாக இருந்தது. ஷவரை அடைத்துவிட்டு துண்டை எடுத்து தோளில் போர்த்தி உடம்பை மெதுவாகத் துவட்டினாள். “இன்னொரு நாளைக்குச் சொல்லுகிறேன்! பை பை!” என்று வெடுக்கென்று தான் சொல்லி விட்டுத் திரும்பிய போது அவன் முகம் தொங்கிப் போயிருந்த காட்சி நினைவுக்கு வந்தது. மிகவும் வருத்தி விட்டேன் என்று நினைத்துக் கொண்டாள்.

 

  • அவள் படித்திருந்த எந்தப் புத்தகத்திலும் ஆணும் பெண்ணும் தனியாக ஜோடியாக வெளியே போகக் கூடாது என்றோ உணவு அருந்தக் கூடாது என்றோ சொல்லவில்லை. உண்மையில் புத்தகங்கள் ஆண்-பெண் சமத்துவத்தைத்தான் அதிகம் பேசின. காதல் கதைகள் கூட பாடப் புத்தகங்களில் உண்டு. ஏராளமான “ரோமேன்ஸ்” நாவல்கள் படித்திருக்கிறாள்.

 

  • தன் சமூகத்தின் மூளைச் சலவைக்குத் தான் அதிகம் ஆளாகிவிட்டதாக நினைத்தாள் அகிலா. மனதின் இயற்கையான போக்குக்கு விட்டுக் கொடுக்காமல் பிடிவாதமாக மூக்கணாங்கயிறு போட்டுக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்தாள்.

 

  • இப்போது நான் பல்கலைக் கழகத்தில் இருக்கிறேன். பெரிய பெண். பட்டப் படிப்பில் உள்ளவள். உண்மையில் என் அம்மாவை விட அதிகம் அறிவுள்ளவள். இப்போது சுதந்திரத்தைப் பேணலாம். அம்மாவின் அறிவுரைகள் அம்மாவின் காலத்துக்கும் வாழ்க்கை முறைக்கும் சரி. எனக்கும் அது ஒத்து வருமா? என் வானம் அம்மாவை விடப் பெரிது. என் சிறகுகள் இன்னும் நீளமானவை. நான் அம்மா போல கூண்டுக்குள்ளிருந்து பயந்து பயந்து எட்டிப் பார்த்து வாழத் தேவையில்லை.

 

  • எவ்வளவு ஆசைகளோடு காத்திருந்திருப்பான். அத்தனையையும் உடைத்து விட்டேன். கொஞ்சம் இதமாகப் பேசியிருக்க வேண்டும். அவனோடு போய் ஒரு நாள் உணவு அருந்தி வரச் சம்மதித்திருக்கலாம். இதில் தவறு ஒன்றுமில்லை. இதிலிருந்து வரும் எந்தத் தீய விளைவிலிருந்தும் என்னைக் காத்துக் கொள்ள எனக்குத் தெரியும். என்னால் முடியும். ஆனால் என் முரட்டுத் தனமான தற்காப்புப் பயிற்சி அதை நிராகரித்து விடு என்று சொல்லியதைக் கேட்டு நிராகரித்து விட்டேன். ஆனால் அடுத்தமுறை கேட்டால்…!

 

  • அடுத்த முறை கேட்டால் சரியென்று சம்மதிக்க வேண்டும். வெள்ளன போய் வெள்ளன திரும்பி விடுவோம் என நிபந்தனை விதிக்கலாம். முதல் சந்திப்பிலேயே அதிகம் பேசக் கூடாது. காதல் கீதல் என்ற பேச்சு எழுந்தால் நேரமாகிறது போகலாம் எனப் புறப்பட்டு விட வேண்டும்.

 

  • மீண்டும் மனம் தற்காப்புப் பயிற்சியில் ஈடுபடுவதை அறிந்து சிரித்துக் கொண்டாள். “கொஞ்சம் விட்டுக் கொடு மனமே!’ என்று சொல்லிக் கொண்டாள். கொஞ்சம் இணக்கமாக இருக்கக் கற்றுக் கொள். கொஞ்சம் சிரித்துப் பேசு. அன்பு அரும்புவதற்கு வெளி கொடு. அந்த அன்பு காதலாக ஆனால்தான் என்ன? அது அரும்புவதும் மலர்வதும் காலத்தையும் சந்தர்ப்பத்தையும் இன்னும் எத்தனையோ ஆயிரம் விஷயங்களையும் பொருத்திருக்கிறது.

 

  • அந்த ஆண் நல்ல குணம் உள்ளவனா? தன்னோடு ஒத்த சிந்தனைகள் உள்ளவனா? ஒத்த விருப்பங்கள் உள்ளவனா? ஒத்த உணர்வுகள் உள்ளவனா? ஏற்ற வயது? உயரம்? சமூக அந்தஸ்து? எல்லாவற்றையும் பொறுத்துத்தானே இணைவது அமையும்! ஆனால் முதலில் அணுக விட்டால்தானே இதையெல்லாம் தெரிந்து கொள்ள முடியும்?

 

  • தன்னைச் சுற்றியுள்ள சுவரை அகற்றிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள். அடுத்த முறை அவன் தன்னை நாடி வரும் போது… நாடி வருவானா என்பது தெரியவில்லை. இன்று மனதை முற்றாக முறித்து விட்டேனோ என்று கவலைப் பட்டாள்.

 

  • உடம்பை முற்றாகத் துடைத்துக் கொண்டு துவாலையைக் கொண்டையில் ஈரம் உறிஞ்ச முடிந்து கொண்டு அறைக்கு வந்தாள். நைட்டியை மாட்டிக் கொண்டு தலை முடியை மீண்டும் ஈரம் போகக் கசக்கிக் கசக்கித் துவட்டிக் கொண்டிருந்த போது கணேசன் நிச்சயம் மீண்டும் தன்னைத் தேடி வருவான் என்றுதான் பட்டது. ஆண்கள் சபலம் உள்ளவர்கள். மீண்டும் மீண்டும் ஆசைப் படுவார்கள். பெண்களின் நிராகரிப்பு அவர்கள் முரட்டுத் தோலில் அவ்வளவாக உறைப்பதில்லை. ஆகவே வருவான்.

 

  • *** *** ***

 

  • அவன் வரவில்லை. அந்த வாரம் இரவு நடனப் பயிற்சிக்குப் போய்த் திரும்பும் போது அவன் போன வாரம் போலக் காத்திருப்பானா என்று நப்பாசையுடன் பார்த்தாள். இல்லை. இரவில் மர நிழலில் உள்வாங்கி நிற்கிறானா எனப் போகிற போக்கில் மீண்டும் ஒரு முறை பார்த்தாள். இல்லை.

 

  • அடுத்த இரண்டு வாரங்களில் அவன் மோட்டார் சைக்கிளில் அங்குமிங்கும் போவதை தூரத்தில் இருந்து பார்த்தாள். அவ்வளவுதான். அவன் பார்த்ததாகத் தெரியவில்லை. பார்த்திருந்தாலும் பார்த்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை. ஒரு முறை ஜெசிக்கா அவன் மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து தோளைத் தழுவிப் போனதையும் பார்த்தாள்.

 

  • “ஜெசிக்கா என் •பிரண்டுதான். ஆனா விசேஷமான •பிரண்ட் ஒண்ணும் இல்ல! எல்லாரையும் போலத்தான் சாதாரண •பிரண்ட்!” என்று அவன் சொன்னது நினைவு வந்தது. அப்படியும் இருக்கலாம். ஐசெக் சங்கத்தின் வேலையாக எங்காவது போவார்கள். தோளைப் பிடிக்காமல் மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து போக முடியாது. ஆகவே இதையெல்லாம் பெரிதாக எண்ண ஒன்றுமில்லை.

 

  • ஆனால் இறுக்கமாகத்தான் பிடித்திருந்தாள். அது விழாமல் இருக்கப் பிடித்த பிடியல்ல. ஒரு கேர்ல் •பிரன்டின் அன்புப் பிடி போலத்தான் இருந்தது. அப்படியும் இருக்கலாம். நான் வேண்டாம் என்று விரட்டி விட்ட பிறகு “சாதாரண •பிரண்ட்”, “விசேஷமான •பிரண்ட்” ஆக மாறியிருக்கலாம். அதைக் கேட்கவோ கவனிக்கவோ வருத்தப் படவோ நான் யார் என்று கேட்டுக் கொண்டாள். ஆனால் கணேசனைத் தூரத்தில் பார்க்கும் போது கூட தன் இருதய இயக்கம் சில துடிப்புக்கள் கூடி விடுவதை அவளால் தவிர்க்க முடியவில்லை.

 

  • நடனப் பயிற்சி மிக மும்முரமாக இருந்தது. எவ்வளவு நன்றாக ஆடினாலும் பேராசிரியர் கௌஸ் விரட்டிக் கொண்டே இருந்தார். ஆனால் நடக்கின்ற தவறுகளுக்கு அவரே பெரும்பாலும் காரணமாக இருந்தார். தான் சொன்ன அடிகளைத் தானே மறந்து விட்டு ஆடி மற்றவர்களையும் திரும்பத் திரும்ப ஆட வைத்துக் கொண்டிருந்தார். வயதாகிக் கொண்டிருக்கும் காலத்தில் இவர் ஆடாமல் மற்றவர்களை ஆடவிட்டால் என்ன என்று அகிலா மனதுக்குள் அவர் மீது கோபப் பட்டாள். ஆனால் நடனம் நன்றாக விறுவிறுப்பாக உருவெடுத்துக் கொண்டு வந்தது.

 

  • கணேசனின் விசாரணைக்கு அடுத்த வாரத்தில் ராஜனும் அவன் நண்பர்கள் இருவரும் பல்கலைக் கழகத்தை விட்டு ஓராண்டுக்குத் தள்ளி வைக்கப் பட்டிருப்பதான செய்தி வளாகம் முழுவதும் காட்டுத் தீ போல பரவியது. தங்கள் சமூக மாணவர்கள் சிலர் இப்படி தண்டிக்கப்பட்டிருப்பது இந்திய மாணவர்களுக்கிடையே வருத்தத்தை எழுப்பினாலும் ராஜனுக்காகவும் அவன் நண்பர்களுக்காகவும் தனிப்பட யாரும் வருந்தியதாகத் தெரியவில்லை. பரசுராமனுக்கும் பொய்ப் புகார் கொடுத்ததற்காக 100 ரிங்கிட் அபராதம் மட்டும் விதித்திருந்தார்கள். அவன் இறுதியில் உண்மையைச் சொல்லி இந்த விவகாரத்தைத் தீர்த்து வைத்ததற்காக அவனுக்குக் கருணை காட்டப் பட்டிருந்தது. பல்கலைக் கழகத்தின் நடவடிக்கையைப் பாராட்டி “பெரித்தா கேம்பஸ்” இதழில் ஜெசிக்கா தலையங்கம் எழுதியிருந்தாள்.

 

  • பட்டமளிப்பு விழாவுக்காகப் பல்கலைக் கழகம் களை கட்டிக் கொண்டிருந்தது. சையட் புத்ரா பட்டமளிப்பு மண்டபத்தை அலங்கரிக்கத் தொடங்கியிருந்தார்கள். பட்டமளிப்பு விழாவுக்காக வரும் ஆயிரக் கணக்கான பெற்றோர்களுக்காகவும் உறவினர்களுக்காகவும் சுற்று வட்டாரத்தில் மாணவர்கள் கடைகள் அமைக்கத் தொடங்கியிருந்தார்கள்.

 

  • ஒரு நாள் இரவில் அகிலா நடனப் பயிற்சி முடிந்து போகிற வழியில் அந்த மண்டபத்துக்குள் எட்டிப் பார்த்தாள். மண்பானைகளில் நடப்பட்ட நூற்றுக் கணக்கான சாமந்திப் பூச்செடிகள் அரங்கத்தைச் சுற்றிலும் அடுக்கப்பட்டிருந்தன. அரங்கத்தில் வேந்தர், துணை வேந்தர் மற்ற பேராசிரியர்கள் உட்கார நாற்காலிகள் அடுக்கிக் கொண்டிருந்தார்கள். சிவப்புக் கம்பளம் விரித்திருந்தார்கள். 2,200 பேர் உட்காரக் கூடிய அந்த மண்டபம் அப்போது ஆளில்லாமல் “ஓ”வென்றிருந்தது.

 

  • ஆனால் பட்டமளிப்பு நாளன்று இந்த இடம் “ஓஹோ”வென்றிருக்கும். பட்டதாரிகளின் வெல்வெட் கவுன்கள் ஆயிரக் கணக்கில் படபடக்கும். அவர்கள் தோளிலும் மார்பிலும் தங்கள் பட்டத்திற்கேற்ப வெவ்வேறு வண்ணங்களில் பட்டைகள் அணிந்திருப்பார்கள். அவர்களின் பலகைத் தொப்பிகள் குஞ்சம் அலைய தலையை மறைத்திருக்கும். பேராசிரியர்கள் பெயர் சொல்லிக் கூப்பிட அவர்கள் வரிசையாக கலை, அறிவியல், சமூகவியல், கட்டவியல், பொறியியல், மருத்துவம் என்று தங்கள் உழைப்புகளின் அறுவடையை வேந்தரின் கைகளிலிருந்தோ இணைவேந்தரின் கைகளிலிருந்தோ பெற்றுக் கொள்வார்கள்.

 

  • பல்கலைக் கழகத்தின் உச்ச கட்டமான இந்த மாபெரும் வைபவத்தில் முதலாண்டிலேயே தானும் ஓரளவு பங்கு பெற வாய்ப்புக் கிடைத்திருப்பது அகிலாவுக்குப் பெருமையாக இருந்தது. பட்டமளிப்பு விழாவுக்கு முதல் நாள் இரவில் வேந்தருக்கு அளிக்கப்படும் ஆடம்பர விருந்தில் நடனமாடுவது தான் பல்கலைக் கழகத்திற்கு அர்ப்பணிக்கும் சேவை என்று நினைத்தாள். மேலும் பட்டமளிப்பு விழா அன்று ரோஜா மலர்கள் விற்பதற்கு இந்திய மாணவர்கள் அமைத்திருந்த ஒரு குழுவில் அவளும் சேர்ந்திருந்தாள். ஆகவே இந்த ஆண்டுப் பட்டதாரிகளிடையேயும் அவர்கள் பெற்றோர்களிடையே கலந்து பழகலாம். அந்தப் பரபரப்பில் பங்கு கொள்ளலாம்.

 

  • எல்லாவற்றிற்கும் உச்ச கட்டமாக இன்னும் நான்கு ஆண்டுகளில் இதே அரங்கத்தில் தானும் பட்டம் வாங்கலாம். பட்டமளிப்பு கவுனின் வெல்வெட் துணியின் ஸ்பரிசத்தை அனுபவிக்கலாம். இரண்டாயிரம் பேர் பார்த்திருக்க, தன் பெற்றோர்கள் அவர்களிடையே பெருமையுடன் அமர்ந்திருக்க, இந்தப் பல்கலைக் கழகத்தின் உயர் பேராசிரியர்கள் முன்னிலையில் வேந்தர் முன் கம்பீரமாக நின்று கணினித்துறை இளங்கலைப் பட்டதாரி என்ற தகுதியைப் பெற்றுக் கொள்ளலாம்.

 

  • மனம் பெருமிதப் பட்டது. ஆனால் அதைக் காண கணேசன் அங்கிருக்க மாட்டான் என்ற நினைவு வந்தது. இன்னும் இரண்டாண்டுகளில் அவன் பட்டம் வாங்கி வெளியேறிவிடுவான். பின் அவன் யாரோ நான் யாரோ!

 

  • இப்போது மட்டுமென்ன! அவன் யாரோ நான் யாரோதான்!

 

  • கணேசன், உங்களுக்கு இரண்டாவது சந்தர்ப்பத்தில் நம்பிக்கையில்லையா? ஒரு முறை தோற்றால் மறு முறை முயலலாம் என்பது தெரியாதா? ஏன் என்னைப் பார்க்க வரவில்லை கணேசன்?

 

  • ***

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 8ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 8

8  அகிலாவுக்குப் பாடங்களில் மனம் ஒட்டவில்லை. விரிவுரை நடந்து கொண்டிருக்கும் போதெல்லாம் அவள் நினைவுகள் எங்கெங்கோ ஏங்கி அலைந்து கொண்டிருந்தன. கணேசனின் தொங்கிய முகம் அவள் மனதில் நிழலாடிக் கொண்டே இருந்தது. அவனுக்கு நேர்ந்துள்ள இந்த இக்கட்டுக்குத் தானே காரணம் என்ற

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 21ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 21

21  வளாகத்தில் முதல் பருவப் பரிட்சைக் காய்ச்சல் தணிந்து விடுமுறைக்கு வீடு திரும்பும் காய்ச்சல் அனைவரையும் பிடித்துக் கொண்டிருந்தது. குறிப்பாக முதலாண்டு மாணவர்கள் வீடு திரும்பத் துடித்துக் கொண்டிருந்தார்கள். வீடு, குடும்பம், பழைய பள்ளி மாணவர்கள், அம்மாவின் சமையல் என்ற எண்ணங்கள்

ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 7ரெ.கார்த்திகேசுவின் ‘காதலினால் அல்ல!’ – 7

7  எட்டே முக்கால் மணிக்கு ஜெசிக்காவின் மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து மாணவர் விவகாரப் பிரிவுக் கட்டத்தின் முன்னால் அகிலா வந்து இறங்கியபோது கணேசன் ஏற்கனவே அங்கு காத்திருந்தான். அவர்களைக் கண்டதும் புன்னகைத்தவாறே அவர்களிடம் சென்றான்.   விசாரணை ஒன்பது மணிக்கு