சாவியின் ‘ஊரார்’ – 05

5

சாமியாருக்கு மெட்ராஸ் புதிதல்ல. ரயிலை விட்டு இறங்கியதும் நேராக மூர்மார்க்கெட்டுக்குப் போனார். பத்து ஆண்டுகளுக்கு முன் பார்த்த மூர்மார்க்கெட் அப்படியே இருந்தது. சிவப்புச் செங்கல் சுவர்கள், எதிரே ராஜா சத்திரம், மர நிழலில் நாலு சக்கர வண்டியில், பெரிய கண்ணாடி ஜாடியில் ரோஸ் கலர் சர்பத், அதைச் சுற்றி துண்டு போட்ட எலுமிச்சம் பழங்கள், ஐஸ், பழைய ஃபௌண்ட்டன் பேனாக் கடை. லாட்டரிச் சீட்டு விற்கும் பையன், தேள்கடி, பாம்புக் கடி மருந்து, மூலிகைக்குச்சிகள், முதலியன.

சாமியார் மலிவு விலையில் ஒரு ஜோடி செருப்பு வாங்கிக் கொண்டார்.

இடது புறம் திரும்பினார். “வான் கோழி புலவ்-ரெடி” என்ற எழுத்துக்களுடன் மிலிடரி ஓட்டல் ஒன்று பச்சை ட்யூப் விளக்குடன் வரவேற்றது.

பழைய கிராமபோன் பெட்டி ஒலிபெருக்கிக் குழாயுடன் ஈனசுரத்தில் ‘கீ’ தளர்ந்து போய் ‘தீன கருணாகரனே’ பாடிக்கொண்டிருந்தது.

லீவில் வந்துள்ள இராணுவ சேவகர்கள் மூன்று பேர் பழைய டிரங்குப் பெட்டியைப் புரட்டிப் பார்த்துப் பேரம் செய்து கொண்டிருந்தார்கள்.

சாமியார் மெயின் கட்டடத்தின் படிகளில் ஏறி உள் வட்டம், வெளி வட்டம் இரண்டையும் சுற்றினார்.

குமாருவுக்கு வேண்டிய பாடப் புத்தகம், பென்சில், பேனா, திருக்குறள் மலிவுப்பதிப்பு எல்லாம் கிடைத்தன.

நடந்தார். செருப்பு கடித்தது. அதை எடுத்து பைக்குள் போட்டுக் கொண்டு வெறும் காலுடன் நடந்தார்.

திரும்பத் திரும்ப மனித முகங்களைப் பார்த்து அலுத்துப் போயிருந்ததால் மிருகக் காட்சிச் சாலைக்குப் போனார். மிருகங்கள் அதிகமில்லை. இருந்த சில மிருகங்களும் நாளொரு எலும்பும் பொழுதொரு தோலுமாக ‘வளர்ந்து’ கொண்டிருந்தன.

கூண்டுக்குள் ஒரு புலி, செத்துப் போனது போல், தூங்கிக் கொண்டிருந்தது. மூச்சு விட்டுக் கொண்டிருப்பது ஒட்டிய வயிறு உப்பி வடிவதிலிருந்து தெரிந்தது.

புலியைப் பார்த்தபோது அவுட்போஸ்ட் பழனியின் நினைவு வந்தது சாமியாருக்கு.

மயில் பார்த்தார். முருகன் நினைவு வரவே, நேராகத் திரும்பி நடந்து, நடந்து, நடந்தே கந்தசாமி கோயிலை அடைந்தார். அர்ச்சனை நடந்து கொண்டிருந்தது. ஓதுவார் நின்றபடியே கணீரென்ற குரலில் திருப்புகழ் பாடிக் கொண்டிருந்தார். சாமியாருக்குத் தண்டபாணி தேசிகர் நினைவு வந்தது.

‘என்னமாய்ப் பாடுவார்?’

விபூதியைப் பூசிக் கொண்டு வள்ளி தேவானையைச் சேவித்துவிட்டு கந்த கோட்டத்தை வலம் வந்து வெளியேறினர். பக்கத்திலிருந்த புத்தகக்கடையில் கந்தர் அனுபூதி, அபிராமி அந்தாதி இரண்டையும் வாங்கிக் கொண்டார்.

சிவப்புப் பட்டைக் கரை போட்ட பிள்ளையார் துண்டு ஒன்று, நல்ல சாம்பிராணி கொஞ்சம் வாங்கிக் கொண்டதும் பஸ் ஏறி வள்ளுவர் கோட்டம் போனார். சிற்பங்கள் நிறைந்த அந்தப் பெரிய தேர், வள்ளுவர் சிலை, விசால மண்டபம், வழவழப்பான தரை, குறள் வாசகங்கள் இவ்வளவும் பார்த்தபோது தமிழ் உணர்வு மேலோங்கி உணர்ச்சி வசப்பட்டுப் போனார்.

‘இனி ஒரு முறை வள்ளுவனும் பிறந்து விட முடியாது, அவனுக்கு இப்படி ஒரு மண்டபமும் யாரும் கட்டிவிட முடியாது’ என்று எண்ணிக் கொண்டார்.

அங்கிருந்து ஜெமினியை அடைந்தார். மேம்பாலம் சென்னையின் ஜாடையை மாற்றியிருந்தது. பாலம் இல்லாதபோது அந்த இடம் எப்படி இருந்தது என்பதை எண்ணிப் பார்த்தார். அப்புறம், காதலன் என்ற பெயரில் கிழவன், குமரியைக் கட்டிப் பிடித்துக் குலவும் கண்ணராவி பானர்கள் வரிசை. இவற்றுக்கிடையில் ஆதி சங்கரர்.

டிரைவ்-இன், ஸ்டெல்லா எல்லாவற்றையும் கடந்து ‘சோழா’ ஓட்டல்வரை போனார். வலது பக்கம் திரும்பி சோவியத் கல்ச்சரைத் தாண்டி ஒரு தெருவில் புகுந்து இன்னொரு சந்தில் திரும்பி கடைசியாக ஒரு பங்களாவுக்குள் நுழைந்தார்.

சாமியாருக்குத் தெரிந்த பணக்கார முதலியார் பங்களா அது. ஒரு அல்சேஷன், ஒரு வெள்ளை பாமரேனியன், மாம்பழக் கலரில் ஒரு கூர்க்கா, பெரிய நாகலிங்க மரம், ஒரு ஹெரால்ட், ஒரு அம்பாசிடர், வயதான புஷ்டி மீசை டிரைவர், கான்வென்ட்டுக்குப் போகிற குழந்தை, டிபன்பாக்ஸ் – இவ்வளவும் அவர் கண்ணில் பட்டன; பட்டனர்.

“முதலியார் இருக்காரா?”

“ஹாஹாம்” என்றான் கூர்க்கா.

சாமியாரைக் கண்டதும் அந்தப் பழைய டிரைவர் ஓடி வந்து அவரை உள்ளே அழைத்துச் சென்றான்.

போர்ட்டிகோ அருகில் ஃபௌண்ட்டன் பீச்சிக் கொண்டிருந்தது. குட்டி பாமரேனியன் வாலை ஆட்டிக் கொண்டே கீச்சுக் குரலில் குரைத்தது. அரைத் தூக்கத்திலிருந்த அல்சேஷன் ஓடி வந்து சாமியாரை மோப்பம் பார்த்து விட்டுப் போயிற்று. உள்ளேயிருந்த முதலியார், சாமியாரைப் பார்த்துவிட்டு வாசலுக்கு விரைந்து வந்தார்.

“எப்ப வந்தீங்க? லெட்டர் போடக் கூடாதா? ஸ்டேஷனுக்குக் கார் அனுப்பியிருப்பேனே” என்றார்.

“இந்தக் கட்டைக்கு அது வளக்க மில்லையே. திடீர்னு நெனைச்சேன். புறப்பட்டு வந்துட்டேன். எல்லாரும் சௌக்கியமா?”

“அம்மாவுக்குதான் உடம்பு சரியில்லை. எனக்கும் மனக்கவலை அதிகமாயிடுச்சு. ப்ளட் ப்ரெஷர் இருக்குது. பிஸினஸ் சரியில்லே. மூத்த மகளுக்குக் கல்யாணம் செய்யணும். பல இடம் பார்த்துட்டேன். ஒண்ணும் சரிப்பட்டு வர்லே. சாமியார்தான் ஜாதகம் பார்த்துச் சொல்லணும். அம்மாவுக்கும் ஏதாவது மருந்து கொடுத்துட்டுப் போகணும். உங்களைப் பார்க்கணும்னு நானே அவ கிட்டே சொல்லிக் கிட்டிருந்தேன். தெய்வமே வந்துட்டுது…” என்றார்.

“மகள் நட்சத்திரம் என்ன சொன்னீங்க?”

“மூலம்…”

“ஜாதகத்தை எடுத்துட்டு வாங்க பாப்பம்… அம்மாவுக்கு?…”

“அம்மாவுக்கு மூலம்…”

“நட்சத்திரமா?”

“இல்லே, வியாதி…”

“மூலத்துக்குக் கைகண்ட மருந்து வெச்சிருக்கேன். சூரணம் தரேன். தேன்லெ குளைச்சு ஒரு மண்டலம் சாப்பிடச் சொல்லுங்க. மூலம் நிர்மூலமாயிடும்” என்றார்.

பெண் ஜாதகத்தை வாங்கிப் பார்த்தார். விரல்களை மடக்கிக் கணக்குப் போட்டார்.

ஏழு ஏழு ஏழு… எட்டு, எட்டு, எட்டாவது வீட்டிலே சனி இருக்கான். இன்னும் ரெண்டு மாசத்துலே சரியாயிடும். நாற்பது நாளைக்கு நவக்கிரகம் சுத்தி சனி பகவானுக்கு விளக்கேத்தி வெச்சா எல்லாம் சரியாயிடும். அப்புறம்… நான் புறப்படட்டுமா?” என்று எழுந்தார் சாமியார்.

“எங்கே இவ்வளவு அவசரமாப் புறப்பட்டுட்டீங்க? இப்பத்தானே வந்தீங்க? வண்டி அனுப்பவா? ஹார்லிக்ஸ் சாப்பிடறீங்களா?”

“வேணாம். வைத்தியம் செஞ்ச இடத்திலே தண்ணி கூடக் குடிக்கமாட்டேன். உங்களுக்குத்தான் தெரியுமே என்னைப்பத்தி…”

“திடீர்னு மெட்ராஸுக்கு வந்திருக்கிங்க… ஏதாவது விசேஷம் உண்டா?”

“நான் தங்கியிருக்கிற மரத்தடியிலே ஒரு பிள்ளையார் ரொம்பக் காலமா ஆகாசம் பார்த்துக்கிட்டிருக்காரு. அவருக்கு ஒரு கூரை போடணும். அது விசயமா சிவாஜி கணேசனைப் பாத்து ஏதாவது கேக்கலாம்னு வந்தேன்.”

“இதுக்கெதுக்கு அங்கெல்லாம் போறீங்க? இவ்வளவு தானே விஷயம்? எவ்வளவு தொகை வேணும்? சொல்லுங்க!” என்றார்.

“மூவாயிரம் இருந்தால் ‘கேட்’டோட கோயிலைக் கட்டி முடிச்சுடலாம்.”

“இந்தாங்க, இப்பவே எடுத்துட்டுப்போங்க. நல்ல காரியத்துக்குப் பணம் கொடுக்கக் கொடுத்து வச்சிருக்கணுமே.”

மனைவியை அழைத்தார். ஆப்பிள் கொண்டுவரச் சொன்னார். வெற்றிலை பாக்குத் தட்டில் பணத்தையும் ஆப்பிளையும் வைத்துச் சாமியாரிடம் கொடுத்து விட்டுக் காலில் வீழ்ந்து வணங்கினார். “இன்னும் தேவைப்பட்டாலும் லெட்டர் போடுங்க. அனுப்பி வைக்கிறேன்” என்றார்.

“பணம் கொடுத்தது போதாது. கும்பாபிஷேகத்துக்கு வந்து நடத்தி வைக்கணும். சின்னப்ப தேவரைக் கூப்பிடலாமான்னு பாக்கறேன்.”

“கூப்பிடுங்க. அவர் முருகன் கோயில்னா வருவாரு. எதுக்கும் ஜாரிச்சுப் பாருங்க”

சாமியார் வந்த காரியம் எளிதில் முடிந்து விட்டது.

சிந்தாதிரிப்பேட்டை நினைவு வந்தது. நடந்தார். சாமிநாயக்கன் சந்திலுள்ள சைக்கிள் ஷாப்பைக் கண்டு பிடித்துவிட்டார்.

அங்கே கமலாவின் புருசன் பீடி குடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். சாமியாரைக் கண்டதும் சட்டென்று பீடியை, தான் உட்கார்ந்திருந்த ஸ்டுலின் கீழ் அழுத்தி விட்டு மரியாதையோடு எழுந்து நின்றான்.

“கபாலி! நல்லாருக்கியா?”

“சாமியார் புண்ணியத்திலே, எப்ப வந்தாப்லே! டீ சாப்பிடலாங்களா? நிக்கறீங்களே, இப்படி உட்காருங்க” ஆசார உபசாரம் செய்தான்.

“வேணாம். நான் ஒண்ணு கேப்பேன். செய்வியா?”

“தயங்காமெ கேளுங்க…”

“கை மேலே சத்தியம் அடிச்சுக் கொடுப்பியா?”

“அதெப்டி?”

“அப்ப நான் வரேன்…”

“வந்த சமாசாரத்தைக் சொல்லாமப் போனா எப்படி?”

“கையடிச்சுக் கொடு.”

“என் பெண்ஜாதி கமலா விசயம் தவிர எதுவானாலும் சொல்லுங்க, செய்யறேன்…”

“எனக்கு வேறெ விவகாரம் என்ன இருக்குது உன் கிட்டே? அவ நல்ல பொண்ணு. ஒரு தப்பும் செய்யாதவ கைவிட்டுடாதே! பாவம், யாரோ உன் மனசைக் கெடுத்திருக்காங்க…”

“அப்ப அவளைப்பத்தி எனக்கு வந்த லெட்டர்…”

அது லெட்டர் இல்லே. மொட்டைக் கடுதாசி. அதெல்லாம் யார் வேலைன்னு எனக்குத் தெரியும். நீ என்னை நம்பு. நாளைக்கே புறப்பட்டுவா. கமலாவை வந்து பாரு. அவ களங்கமில்லாத பொண்ணு. அவளைக்கூட்டி வந்து வச்சுக்க. தொட்டுத் தாலி கட்டினவளைக் கண்கலங்க விடாதே. மகாப் பாவம். இந்தா ஆப்பிள், சாப்பிடு. நான் வந்த காரியத்தைப் பழமாக்கு. நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன். நான் வரேன்” சாமியார் அவசரமாக ரயிலுக்குப் புறப்பட்டு விட்டார்.

ரில் ஒரே ரகளை-

“என்னடா குமாரு! சொல்லேண்டா! கொள்ளைக் கூட்டம்னா? எப்படி வந்தாங்க – என்ன செஞ்சாங்க? கொஞ்சம் விவரமாச் சொல்லுடா” என்றார்.

“அவங்கள்ளே ஒருத்தன் செத்துட்டான். நம் ஊர்க்காரங்க யாரோ கொன்னுட்டாங்களாம். பொணம். வாராவதிக்கடியிலே விழுந்து கெடக்குதாம். ஊர்லெ பேசிக்கிறாங்க” என்றான் குமாரு.

“பள்னி எங்கடா?”

“அவரைக் காணோம், தேடிக்கிட்டிருக்காங்க.”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஒகே என் கள்வனின் மடியில் – 4ஒகே என் கள்வனின் மடியில் – 4

ஹாய் பிரெண்ட்ஸ், போன பதிவுக்கு அளித்த வரவேற்புக்கு நன்றி. காதம்பரியைப் போலவே நீங்களும் வம்சியின் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்துட்டு இருப்பிங்கன்னு தெரியும். இந்தப் பதிவில் அவனோட பதில்தான் பிரதானம். படிச்சுட்டு சூட்டோட சூடா ஒரு வார்த்தை எழுதுவிங்களாம். ஒகே என் கள்வனின்

நிலவு ஒரு பெண்ணாகி – 30நிலவு ஒரு பெண்ணாகி – 30

ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்குக் கமெண்ட்ஸ் செய்த அனைவருக்கும் என் நன்றி. இனி இன்றைய பதிவு. நிலவு ஒரு  பெண்ணாகி – 30 அன்புடன், தமிழ் மதுரா