Tamil Madhura புறநானூற்றுக் கதைகள் கண் திறந்தது! – புறநானூற்றுச் சிறுகதை

கண் திறந்தது! – புறநானூற்றுச் சிறுகதை

 

ரண்மனைக்கு எதிரே திறந்தவெளியில் ஒரு பெரிய யானை துதிக்கையை ஆட்டிக்கொண்டு நின்றது. சுற்றிலும் அரண்மனை வீரர்கள் நின்று கொண்டிருந்தனர். யானையின் அருகே பாகன் கையில் அங்குசத்தோடு நின்றான். பக்கத்திலிருந்த மேடை மேல் அமைச்சர்களுக்கும், மந்திரச் சுற்றத்தினருக்கும் நடுவில் ஓர் இருக்கை மீது சோழ மன்னன் கிள்ளிவளவன் சினத்தோடு வீற்றிருந்தான். புயலுக்கு முந்திய அமைதிபோல் ஓசைக்கு முன்பிருக்கும் ஒடுக்கம் போல் அவன் முகத்தில் வெறிமிக்க செயலைச் செய்வதற்கு முன்னறிவிப்பு போன்ற ஒருவிதக் குரூரம் படிந்திருந்தது. 

 

ஏதோ ஒரு சோக நாடகத்தின் மிக உச்சமான சோக கட்டத்தில் அரங்கேறி நிற்கும் பாத்திரங்களைப்போல் அங்கிருந்தோர் நின்று கொண்டிருந்தனர். ஒருவர் முகத்திலாவது ஈயாடவில்லை. சாக்காட்டின் அமைதியும் பயங்கரமும் அங்கே குடி கொண்டிருந்தன

“கொண்டு வாருங்கள் அந்த மடையனின் குழந்தைகளை!’ 

கிள்ளிவளவன் இடி முழக்கம் போன்ற குரலில் ஏவலர்களுக்குக் கட்டளையிட்டான். 

காவலர்கள் ஓடினார்கள். கால் நாழிகையில் இரண்டு சிறுவர்களை அங்கே இழுத்துக்கொண்டு வந்தனர். சிறுவர் களுக்குப் பத்து வயதுக்கு மேல் இராது. அவர்களுடைய தோற்றம் அநாதரவாக விடப்பட்டவர்கள் என்பதைக் கூறியது. எண்ணெய் படியாது பரட்டை யடைந்து கிடந்த தலை கிழிந்தும், அழுக்குப் படிந்தும் பல நாட்களாக மாற்றப்படாமல் உடலிலேயே கிடந்த உடை குழிந்து, கருத்து மிரள மிரளப் பார்க்கும் விழிகள் மெலிந்த உடல். 

முற்றத்தில் யானைக்கு அருகில் கொண்டுவந்து நிறுத்தப் பட்டதும் சிறுவர்கள் யானையைக் கண்டு பயந்து அழத் தொடங்கிவிட்டனர். கண்ணைக் கசக்கிக் கொண்டு அழுதபடியே திசைக்கொருவராக ஓடினர். பக்கத்திலிருந்த காவலர்கள் அவர்களை ஓடவிடாமல் மீண்டும் பிடித்துக் கொண்டுவந்து யானைக்குப் பக்கத்தில் நிறுத்தினர். சிறுவர்களைக் காவலர்கள் ஓடிவிடாமல் கையில் இறுக்கிப் பிடித்துக்கொண்டு நின்றதால் அவர்கள் முன்னிலும் பெரிய குரலில் வீறிட்டழுதனர். காவலர் கைப்பிடிகளிலிருந்து திமிறி ஓட முயன்றனர். 

வெகு நேரம் சிறுவர்கள் எவ்வளவோ கத்தி விறைத்தனர்! முரண்டினர். காவலர்களிடம் அவர்கள் முயற்சி பலிக்கவில்லை . கடைசியில் அழுகை நின்றது. அழுகையோடு பயமும் நின்று விட்டதோ என்னவோ, கண்களைக் கசக்கிக்கொண்டு மெல்ல விழித்து யானையை ஏறஇறங்கப் பார்த்தனர். மருண்டு மருண்டு 

 

நோக்கிய அந்த இளம் பார்வைகளில் அச்சமும் தயக்கமும் நிறைந்திருந்தன. கன்னங்கரேலென்று பூதாகாரமாகத் தெரியும். அந்தக் கருப்பு மாலை போன்ற மிருகத்தைச் சின்னஞ் சிறுமலர் விழிகள் நான்கு விழுங்குவது போல் அண்ணாந்து பார்க்க முயன்று கொண்டிருந்தன. 

சிறிது நேரத்தில் முற்றிலும் அழுகையையும் பயத்தையும் மறந்துவிட்ட சிறுவர்கள் தங்களுக்குள் சிரித்து விளையாடி மழலை மொழிகளால் யானையைப் பற்றிப் பேசிக் கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். 

இந்த மாறுதல் எதனால் ஏற்பட்டது? வேறு வழியில்லை என்பதனால் ஏற்பட்ட தைரியமா இது? அல்லது இளமையின் புரிய முடியாத குண இயல்பா? துன்பத்தை விரைவாக உணர்வது போலவே விரைவாக மறந்துவிடுவதுதான் குழந்தை இயல்போ? 

உண்மையில் அவர்களையும் அந்த யானையையும் எதற்காக அங்கே நிறுத்தியிருக்கிறார்கள் என்பது மட்டும் அந்தச் சிறுவர்களின் உள்ளத்திற்குப் புரிந்தால் ? 

… – ஐயோ! சிறுவர்களின் உள்ளங்கள் என்ன பாடுபடும் தன் பகைவனாகிய மலையமானின் மக்கள் என்பதற்காக அந்தச் சிறுவர்களை யானைக்காலில் இட்டுக் கொல்வதற்காக அல்லவா சிறைப்பிடித்துக் கொண்டு வந்திருக்கிறான் கிள்ளிவளவன் 

இன்னும் சிறிது நேரத்தில் தங்களை மிதித்துக் கொல்லு வதற்காகக் கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருக்கும் அந்த யானையைப் பற்றிச் சிரித்து விளையாடிக் குழந்தைப் பருவத்துக்கே உரிய கோணங்கிகளைச் செய்து ஒருவருக்கொருவர் அழகு காட்டிக் கொண்டிருந்தனர் மலையமான் பெற்றெடுத்த செல்வங்கள். 

அவைகளைப் பார்த்தவர்கள் உருகாமல் இருக்க முடியாது. அரசியல் பகை காரணமாகத் தனக்கும் மலையமானுக்கும் இடையேயிருந்த குரோதத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக அவன் மக்களைக் கொன்று தீர்க்க வேண்டும் என்ற குரூரமான ஆசை கிள்ளிவளவனுக்கு எப்படித்தான் உண்டாயிற்றோ? ஏன் தான் உண்டாயிற்றோ ? மனிதனுக்கு வயதும் அறிவும் வளர வளர, அந்த அனுபவத்தையும் அறிவையும் கொண்டு தன் துன்பத்தை உணரவும், மற்றவர்களுக்குத் துன்பம் செய்யவும்தான் அவன் பழகிக் கொள்கிறான்! இதை நினைக்கும் போது மனிதர்கள் குழந்தைகளாகவே இருந்துவிட்டால் இந்த உலகம் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது

அங்குள்ள அறிவாளிகளின் மனத்தில் இத்தகைய சிந்தனைகள் தோன்றின. ஆனால் ஒருவருக்காவது கிள்ளி வளவனைத் தடுத்து அறிவுரை கூறும் துணிவு ஏற்படவில்லை. மலையமான் மேலிருக்கும் பகைமைக்காக ஒரு பாவமுமறியாத அவன் மக்களைப் பிடித்துவந்து யானைக்காலில் இடுவது சிறிதும் நியாயமில்லை என்பதை அமைச்சர் முதலிய யாவரும் உணர்ந்திருந்தும் அரசனிடம் எடுத்துக் கூறுவதற்கு அஞ்சினர்

உரிய நேரம் வந்தது. கிள்ளிவளவன் ஆத்திரத்தோடு காவலர்களுக்குக் கட்டளையிட்டான். 

“உம்ம்ம் ஏன் தாமதிக்கிறீர்கள்? ஆகட்டும். இந்த அற்பச் சிறுவர்களை யானைக் காலில் இட்டு இடறுங்கள்! அந்த மலையமான், பெற்ற பாசத்தால் துடித்துச் சாகட்டும். அதுதான் 

அவனுக்குச் சரியான பாடம்.” 

“இல்லை இல்லை! இது அவனுக்குச் சரியான பாடமில்லை. வளவா ! உன்னுடைய கோழைத்தனத்துக்குத்தான் சரியான சான்று.” 

புருவங்கள் நெரிய நெற்றிச்சுருக்கங்கள் சினத்தின் அளவைக் காட்ட, அனல் கக்கும் விழிகளால் கூட்டத்தை நோக்கினான் கிள்ளிவளவன். அமைச்சர்கள் முதலியவர்களும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தனர். 

கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஒரு மூலையிலிருந்து – கோவூர்கிழார் அரசனை நோக்கி வந்தார். துடுக்குத்தனமாக எதிர்த்துப் பேசிய அவரை அரசன் என்ன செய்யப் போகிறானோ என்ற திகில் மற்றவர்கள் மனத்தில் தோன்றியது. வளவன் அமைதியும், ஆத்திரமும் மாறி மாறி நிற்கும் விழிகளால் அவரை ஊடுருவிப் பார்த்தான். 

”வளவா பாம்பை அடிக்க முடியாமல் தவறவிட்டுவிட்டு, அந்த ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும் பாம்புப் புற்றின் மேல் காட்டி அதை உடைக்க முயல்வது போல் இருக்கிறது உன் செயல். ஒரு புறாவுக்காகத் தன் உடலையே அறுத்துக் கொடுக்க முன்வந்த சிபிச் சக்கரவர்த்தியின் மரபிலே தோன்றியவன் அல்லவா நீ? இந்தக் குழந்தைகள் மலையமானின் இரத்தம் ஓடுகிற உடலை உடையவர்கள் என்பதைத் தவிர வேறு என்ன பாவம் செய்தார்கள்? இதோ பார் நீ யானைக்காலில் இட்டுக் கொல்லப் போகிறாய் என்பதையே உணராமல், சிரித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்! இவர்களுடைய பச்சிளங் குருதி நீதி நிறைந்த இந்தச் சோழ நாட்டு அரண்மனை முற்றத்தில் படிந்து களங்கத்தை உண்டாக்க வேண்டும் என்றுதான் நீ கருதுகிறாயா? நான் சொல்லிவிட்டேன். உன் விருப்பம் போல் இனி நீ செய்யலாம்.” 

படிப்படியாகக் கிள்ளிவளவனுடைய முகம் மாறியது. கண்களில் உணர்ச்சி மாறியது. அவன் அந்தக் குழந்தைகளைப் பார்த்தான். குழந்தைகள் அவனைப் பார்த்துச் சிரித்தன. அந்தப் புனிதம் நிறைந்த குழந்தைச் சிரிப்பின் சக்தி அவனையும் சிரிக்கச் செய்துவிட்டது. யானையைக் கொண்டு போய் விடுமாறு கட்டளை இட்டான். குழந்தைகளைத் தழுவி உச்சி மோந்தான். 

அறிவு செய்ய முடியாத காரியத்தை அன்பு செய்துவிட்டது. புலவரின் உரையும் குழந்தைகளின் சிரிப்பும் கிள்ளிவளவனின் கண்களைத் திறந்துவிட்டன. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தோற்றவன் வெற்றி! – புறநானூற்றுச் சிறுகதைதோற்றவன் வெற்றி! – புறநானூற்றுச் சிறுகதை

  ‘வெண்ணிப் பறந்தலை’ என்ற இடத்தில் நிகழ்ந்த அந்தப் பயங்கரமான போரில் கரிகாலன் வெற்றி அடைந்தான். அந்த வெற்றியைக் கொண்டாடும் விழா அன்று அவையில் சிறப்பாக நிகழ்ந்து கொண்டிருந்தது! பாவாணர் பலர் அவன் வெற்றி மங்கலச் சிறப்பைப் பாடல்களாகக் கூறிப் பாராட்டிப்

அன்றும் இன்றும் – புறநானூற்றுச் சிறுகதைஅன்றும் இன்றும் – புறநானூற்றுச் சிறுகதை

  அன்று பெளர்ணமி. வான்வெளியின் நிலப்பரப்பில் முழு நிலா தன் ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தது. விண்மீன்கள் மினுமினுத்ததுக் கொண்டிருந்தன. அழகான பெண்ணின் சிவந்த மேனியில் சந்தனக் குழம்பு பூசினால் தெரியும், மங்கலான காந்தியைப் போல நிலா ஒளியில் மலைச் சிகரங்கள் தென்பட்டன. 

ஓர் அறிவுரை – புறநானூற்றுச் சிறுகதைஓர் அறிவுரை – புறநானூற்றுச் சிறுகதை

  ”அறிவுடை நம்பீ! இந்தச் செயல் உனக்கே நன்றாக இருக்கின்றதா?”  “நீங்கள் எந்தச் செயலைக் குறிப்பிடுகிறீர்கள் பிசிராந்தையாரே?”  ”அரசாட்சியில் உள்ளவர்களுக்கு மக்களை அடக்கி ஆளவும் அதிகாரம் செய்யவும் தெரிந்தால் மட்டும் போதாது. மக்களின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்து கொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும்.”