சூரப்புலி – 5

ஒரு வேலையும் செய்யா மல் வரும்படியிலே பெரும்பகுதியை எடுத்துக்கொள்வதற்கு, இப்படி மற்றவர்களுடைய தன்மையை அறிந்து அவர்களை அடக்கி நடத்தும் திறமையே காரணமாக இருந்தது. 

சூரப்புலிக்குப் புலால் உணவும் எலும்புகளும் நிறையக் கிடைத்தன. “இந்த நாய் எப்படிக் கிடைத்தது?’ என்று முதலாளி சாப்பிட்டுக்கொண்டே கேட்டான். கருப்பன் அது கிடைத்த விவரத் தைச் சொன்னான். “குன்று மேலே தாடிக்காரனோடு இருந்து காவல் காக்க இதைப் பழக்கலாம்” என்றும் அவன் சொன்னான். முதலாளி இதை ஆமோதித்தான். “ஆமாம், எவனாவது இந்தப் பக்கம் வந்தால் மெதுவாக உறுமிக்காட்ட இதைப் பழக்கிவிட்டால் நமக்கு நல்லது. இந்தப் பக்கத்திற்கு இதுவரை யாரும் வரவில்லை. இருந்தாலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.” 

முதலாளி சொன்னதை மற்றவர்கள் ஆமோதித்தார்கள். சூரப்புலியைப் பழக்கும் பொறுப்பும் தாடிக்காரனுக்கு ஏற்பட்டது. கொஞ்ச நாட்களிலே சூரப்புலியும் அவனுடைய எண்ணத்தை அறிந்து நடக்கப் பழகிக் கொண்டது. தினமும் வேளை தவறாமல் நல்ல உணவு ஏராளமாகக் கிடைத்ததால் அது இப்போது மளமளவென்று வளரத் தொடங்கியது. இருந்தாலும், தாடிக்காரனுடைய கை அதன் முதுகின் மேல் தடாலென்று விழும் போதெல்லாம் வலி பொறுக்க முடியாமல் அது கத்துவது நிற்கவில்லை. முதலாளியிடம் இருக்கும் வெறுப்பை யெல்லாம் தாடிக்காரன் சூரப்புலியிடம் காட்டுவான். சூரப்புலியை முதுகில் அடிக்கும்போது முதலாளியை அடிப்பதாக அவன் நினைத்துக் கொள்ளுவானோ என்னவோ? சூரப்புலி கைக்கு எட்டும் போதெல் லாம் அதை அடிப்பதில் அவன் உற்சாகத்தோடிருந்தான். சூரப்புலிக்கு தாடிக்காரனிடத்திலும் மற்றவர்களிடத்திலும் அன்பு பிறக்கவில்லை. இருந்தாலும், கிடைக்கும் சோற்றுக்கு நன்றியாக அது எச்சரிக்கை யாகவே தனது காரியத்தைச் செய்து கொண்டு இருந்தது. அந்தக் கூட்டத்தார் குகையிலே சந்திக்கும்போது சூரப்புலி குன்றின் மேலே ஓர் உயரமான பாறையில் படுத்துக்கொண்டு, நாலு பக்கமும் பார்த் திருக்கும். வேற்று மனிதர் யாராவது தூரத்திலே வருவதாகத் தெரிந் தால் மெதுவாகக் குரைக்கும். அல்லது குகைக்குள்ளே ஓடி வந்து பரபரப்போடு முன்னும் பின்னும் திரியும். அதன் செய்கையிலிருந்து குகைக்குள்ளிருப்பவர்கள் உஷாராகிவிடுவார்கள்; தங்கள் பேச்சை யெல்லாம் நிறுத்திக் கொள்வார்கள். அதனால் அவர்களை யாரும் கண்டுகொள்ள முடியவில்லை. இவ்வாறு சூரப்புலி அவர்களுக்கு உதவியாக இருந்தது. ஆனால், பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவானல்லவா? இந்தத் திருட்டுக்கூட்டமும் ஒரு நாள் அகப்பட்டுக் கொண்டது. சூரப்புலி அங்கு வந்து சேர்ந்து ஏழு மாதங்களாகிவிட்டன. அது நன்றாகக் கொழுத்து வளர்ந்துவிட்டது. ஒரு நாள் அவர்களுக்குப் போதை வெறி அளவு கடந்துவிட்டது. எப்போதும் நிதானம் தவறாமல் இருக்கும் முதலாளியும் அன்று வரம்பை மீறிக் குடித்துவிட்டான். அவர்களுக்குள்ளே பேச்சு வளர்ந்தது. ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக்கொண்டும், கூடி நின்று ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்தார்கள். தாடிக்காரனுக்கு அன்று ஈரல் கறி, தினமும் கிடைப் பதைப்போல இரண்டு மடங்கு கிடைத்துவிட்டது. அதனால் அவனுக்கு உற்சாகம் கரை கடந்துவிட்டது. ஒரு புட்டி சாராயமும் அவன் வயிற்றுக்குள்ளே புகுந்து அதன் வேலையைச் செய்து கொண்டிருந்தது. அவன் சூரப்புலியைப் பக்கத்திலே கூப்பிட்டான். அதைத் தன் இரு கைகளாலும் கட்டிப் பிடித்துக் கொண்டு ஒய்யாரமாக, “ராரி ராரி ராராரோ – என் கண்ணே நீ ராரி ராரி ராராரோ’ என்று தொட்டில் பாட்டுப்பாட ஆரம்பித்துவிட்டான். அதைக் கண்டு மற்றவர்களுக்கும் சூரப்புலியிடம் அக்கறை பிறந்துவிட்டது. ஒருவன் அதன் வாலைப் பிடித்து மேலே தூக்க முயன்றான். ஒருவன், “டேய், என் குழந்தையைத் தொட்டால் உதைப்பேன்’ என்றான். மற்றொருவன் , ” டேய் என் குழந்தைக்குப் பசிக்கிறது. பால் வார்க்க வேண்டும்” என்று சொல்லிக் கொண்டே சூரப்புலியைப் பிடித்து அதன் வாய்க்குள் ஒரு புட்டியில் லிருந்த சாராயத்தை ஊற்றினான். சூரப்புலியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அது பைக் லபக்கென்று இரண்டு வாய் குடித்துவிட்டது. அதன் தொண்டைக்குள் எங்கோ தீப்பற்றி எரிவது போலத் தோன் றிற்று. அது திமிறிக் குதித்துக் கொண்டு வெளியே ஓட முயன்றது. தாடிக்காரன் அதன் முதுகில் ஓங்கி ஒரு புட்டியை வீசினான். பிறகு, அதைத் துரத்திக்கொண்டே குன்றின் மீது தட்டுத் தடுமாறி எறி வந்தான். 

சூரப்புலிக்குத் தலை சுற்ற ஆரம்பித்தது. அது எப்படியோ தடு மாறித் தடுமாறிக் குன்றின் உச்சியில் வழக்கமாகக் காவலிருக்கும் இடத்திற்கு வந்துவிட்டது. தாடிக்காரனும் அங்கு வந்து சேர்ந்தான். 

அவனைக் கண்டதும் குரப்புலி உர் என்று உறுமிற்று. அவன் அதைப் பொருட்படுத்தாமல் அருகிலே வந்தான். இப்பொழுது சூரப்புலி அவனைக் கண்டு பயப்படவில்லை. அதன் தோற்றத்திலே ஒரு புதிய மாறுதல் இருந்தது. தாடிக்காரன் வழக்கம் போலக் கையை ஒங்கினான். ஒங்கிய கையைத் தாவிப் பிடித்து சூரப்புலி கடித்துவிட்டது. கடிக்கவா பார்க்கிறாய்? குடிகார நாயே’ என்று கூவிக்கொண்டு தாடிக்காரன் ஒரு கல்லை எடுக்கப் போனான். ஆனால், அவனுக்கு குடி வெறி உச்ச நிலைக்குப் போய்விட்டது. அப்படியே விழுந்து தின்றதையொல்லாம் கக்கிக்கொண்டு கிடந்தான். சூரப்புலியும் தனக்கு வழக்கமான இடத்தில் படுத்தது. 

ஆனால், அது அன்று காவல் காக்கவில்லை. வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டு கிடந்தது. பல நாட்களாக அந்தப் பக்கத்தில் வந்து தேடிக்கொண்டிருந்த போலீஸ்காரர்களுக்கு அன்று வெற்றி கிடைத்துவிட்டது. அந்தப் பகுதியிலேதான் திருட்டுச் சாராயம் காய்ச்சுகிறார்களென்று அவர்களுக்குத் தகவல் கிடைத்திருந்தது. அதனால், சாதாரண உடையிலே வந்து அந்தப் பகுதியில் புகுந்து பல தடவை தேடிப் பார்த்தார்கள். சூரப்புலியின் எச்சரிக்கையால், அவர்கள் முயற்சி இதுவரையிலும் பலிக்கவில்லை. 

அன்று சூரப்புலி சாராய மயக்கத்தால் பேசாமல் படுத்திருந்தது. குகைக்குள்ளே ஆரவாரம் ஓயவே இல்லை. அந்த ஆரவாரத்தைக் கேட்டுப் போலீஸ்காரர்கள் குகைக்குள் வந்து சுலபமாக முதலாம் ளியையும் அவனுடனிருந்தவர்களையும் பிடித்துக் கைது செய்துவிட் டார்கள். குகைக்குள்ளிருந்த பொருள்களையும் கைப்பற்றி எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். 

மறு நாள் காலையில் தான் தாடிக்காரன் மயக்கம் தெளிந்து எழுந் தான். கையிலே சூரப்புலி கடித்திருப்பதும் நன்றாகத் தெரிந்தது. அவன் கோபத்தோடு சூரப்புலியை அடிக்க ஓடினான். சூரப்புல் குகையை நோக்கிக் கத்திக்கொண்டு ஓடிற்று. தாடிக்காரன் அதைப் பின் தொடர்ந்து போனான். 

அங்கே போனதும் அவனுக்கு விஷயமெல்லாம் விளங்கிவிட்டது. குகையில் ஒரு பொருளும் இருக்கவில்லை. போலீசார் தான் அவற்றைக் கைப்பற்றியிருக்க வேண்டும் என்று அவன் யூகித்து அறிந்து கொன் டான். வேறு யாரும் இப்படித் தாழிகளையும் மிடாக்களையும் பானைக ை யும் மற்ற பொருள்களோடு சேர்த்து எடுத்துச் செல்லமாட்டார்கள். இது நிச்சயமானவுடனே முதலாளியும் மற்றவர்களும் கைது செய்யப்பட்ட டிருப்பார்கள் என்பதும் அவனுக்கு விளங்கிவிட்டது. 

சூரப்புலிமீது அவனுக்கு அடங்காத கோபம் உண்டாயிற்று. அது தன் கடமையைச் செய்யவில்லை என்று அவன் முடிவு செய்தான். அதற்குச் சரியான தண்டனை கொடுக்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றிற்று. தான் தப்பித்துக்கொண்டாலும் இனிமேல் ஈரல் கறி கிடைக்காதென்று அவனுக்கு என்றுமில்லாத கோபம் வந்துவிட்டது.

தாடிக்காரன் மெதுவாகச் சூரப்புலியைக் கூப்பிட்டான். அங்கே கிடந்த எலும்புத் துண்டுகளைக் கையிலெடுத்து ஆசை காட்டினான். சூரப்புலி மெதுவாக அருகே வந்தது. சட்டென்று அவன் அதைப் பிடித்து ஒரு கயிற்றில் கட்டிவிட்டான். சூரப்புலி சந்தேகத்தோடு பார்த்தது. 

பிறகு, தாடிக்காரன் நிதானமாக ஒரு பெரிய மரக்கொம்பை எடுத்து வந்தான். விறகுக்காக அது குகைக்கு வெளியே அடுப்படி யில் கிடந்தது. அதைக் கொண்டு சூரப்புலியின் மண்டையிலே ஓங்கி யடித்தான். அடிக்குத் தப்புவதற்காக அது எட்டிப் பாய்ந்தது. ஆனால் கட்டிக் கிடக்கும் அதனால் ஓட முடியுமா? தலைக்கு வந்த அடி அதன் 

பின்னங்கால்கள் இரண்டின் மேலும் பலமாக விழுந்தது. கால் எலும்பு கள் இரண்டும் நடுப்பகுதியில் முழங்கால்களுக்கு மேலே ஒடிந்து தொங்கின. சூரப்புலி வீல் என்று துயரந் தாங்காது கத்திற்று. பின்னங்கால்கள் ஒடிந்து போனதால் அதனால் தாடிக்காரனைத் தாக்கவும் முடியவில்லை. முன்னங்கால்களால் மட்டும் அது நடக்க முடியுமா? அது புலம்பிக்கொண்டு படுத்துக் கிடந்தது. 

தாடிக்காரன், “இப்படியே கிடந்து சாவு,” என்று உறுமிவிட்டு அங்கிருந்து மறைந்து போனான். 

பொறுக்க முடியாத வேதனையோடு சூரப்புலி கத்திக்கொண்டும் புலம்பிக்கொண்டும் குகைக்குள்ளே கிடந்தது. அதனால் நகரவே முடிய வில்லை. முன்னங்கால்களைக் கொண்டு நீந்துவது போல நகர முயன்றாலும் ஒடிந்த கால்களிலிருந்து வேதனை அதிகரித்தது. மேலும், கழுத்திலே கயிறு கொண்டு கட்டிக் கிடப்பதால் அந்த இடத்தை விட்டு வெளியே வரவும் முடியாதல்லவா? அதனால், அது என்ன செய்வதென்று தோன்றாமல் தவித்துக்கொண்டு கிடந்தது. 

மூன்று நாட்கள் இரவு பகலாகச் சூரப்புலி இப்படி வேதனையோடு வாடிற்று. அழுது புலம்பி அதன் தொண்டை வரண்டுவிட்டது கொஞ்சம் தண்ணீர் கிடைத்தாலும் அதற்குச் சிறிது ஆறுதலாக இருக்கும். பக்கத்திலேயே ஓடை இருந்தும் அங்கு போக முடிய வில்லை. வயிற்றுப் பசியும் சேர்ந்து கொண்டு சூரப்புலியை வாட்டிற்று. சூரப்புலி தன் தலையைப் பின்னங்கால்களின் பக்கமாக நீட்டி அவற் றை நாக்கால் நக்க முயன்றது. அப்படிச் செய்வதால் ஒடிந்த பகுதி யில் வலி மேலும் அதிகமாயிற்றே ஒழியக் குறையவில்லை. சூரப்புலி யின் புலம்பலும் அழுகைக் குரலும் எப்போதும் கேட்டுக்கொண்டே இருந்தன. அதன் உள்ளத்திலே மறுபடியும் மனிதகுலத்தின் மீது அளவு கடந்த வெறுப்பு மேலோங்கிற்று. அந்தக் குகையைப் பயன்படுத்திய மனிதர்கள் எல்லோரிடத்திலும் அதற்குக் கோபம் பொங்கியது. தாடிக்காரனிடம் சொல்லவொண்ணாத வெறுப்பும் ஆத்திரமும் அதன் உள்ளத்திலே கொந்தளித்தன. அன்று சூரப்புலி தன் கடமையைச் செய்யாததற்கு யார் காரணம்? அந்த மனிதர்கள் சாராயத்தை அதன் வாயில் ஊற்றாமலிருந்தால் அது தன் கடமையில் தவறியிருக்காது. அதன் வாயில் போதைப் பொருளை வலிய ஊற்றி அதன் அறிவை யிழக்கும்படி செய்துவிட்டுப் பிறகு அதன் மேலே கோபம் கொள்வது நியாயமாகுமா? தாடிக்காரன் மிகுந்த கொடுமைக்காரன்.

சமயங்கிடைத்த போதெல்லாம் சூரப்புலியை ஓங்கியோங்கி அடிப்பது அவன் வழக்கம். அது வலி பொறுக்காமல் சத்தம் போடும்போதெல்லாம் அவன் சிரித்து மகிழ்ந்தான். அப்படிப்பட்டவனுக்கும் அது நன்றி யோடு உழைத்து வந்தது. அவர்கள் சாராயத்தை அதன் வாயில் ஊற்றியிருக்காவிட்டால் அன்றைக்கும் அது அவர்களைப் போலீசாரிடம் மிருந்து காப்பாற்றியிருக்கும். அவர்கள் செய்த தவறுதலுக்காகச் சூரப்புலியைத் தாடிக்காரன் இவ்வாறு கால்கள் ஒடிந்து போகும்படி அடிக்கலாமா? மனிதன் இரக்கமற்றவன். அவன் சுயநலக்காரன். அவனோடு வாழ்வதைப்போலத் துன்பமான காரியம் வேறொன்றுமில்லை. அவனைக் கண்டால் கடித்துப் பழி வாங்க வேண்டும். இவ்வாறு பலப் பல எண்ணங்கள் அதன் உள்ளத்திலே தோன்றி அலை மோதின. தாடிக்காரனைக் கண்டால் பழி வாங்க வேண்டும் என்ற ஆத்திரம் அதன் உள்ளத்திலே எல்லாவற்றிற்கும் மேலாக நெருப்புப்போல் கொழுந்து விட்டது. 

ஆனால் அது எப்படித் தாடிக்காரனைப் பார்க்கப் போகிறது? அவன் இனிமேல் அங்கு வரமாட்டான். சூரப்புலியாலும் அவனைத் தேடிப்போக முடியாது. அது பசியாலும் தாகத்தாலும் உடல் வலியாலும் துன்பப்பட்டு அந்தக் குகைக்குள்ளேயே கிடந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சாக வேண்டியது தான். இதை நினைக்கும் போது சூரப்புலியின் உடம்பெல்லாம் கொதித்தது. அதன் தொண்டை வரண்டது. அது கோவென்று அலறி ஊளையிட்டது. அந்தக் குகைப் பகுதியில் மனித நடமாட்டம் முன்பு பலகாலமாக இருந்ததால் கொடிய வன விலங்குகள் நல்ல வேளையாக அங்கு வரவில்லை. வந் திருந்தால் சூரப்புலி அவற்றிற்கு இரையாகியிருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சூரப்புலி – 6சூரப்புலி – 6

இப்படி அது பல முறை ஊளையிட்டுப் புலம்பிற்று. அந்தப் புலம்பல் எப்படியோ அந்தப் பக்கமாகத் தற்செயலாக மூன்றாம் நாள் மாலையில் சென்ற ஒரு துறவியின் காதில் விழுந்துவிட்டது. அவர் சட்டென்று நின்று உற்றுக் கேட்டார். மறுபடியும் அந்த வேதனைக் குரல் கேட்டது.

தமிழ் மதுராவின் ‘சிறந்த மந்திரி’ – சிறுவர் கதைதமிழ் மதுராவின் ‘சிறந்த மந்திரி’ – சிறுவர் கதை

முன்னொரு காலத்தில் சித்திரநாடு எனும் நாடு இருந்தது. அதில் சித்திரசேனன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். மாதம் மும்மாரி பெய்து வளத்தோடு விளங்கிய நாட்டில் மழை பொய்த்துப் பஞ்சம் வந்தது. மக்கள் அனைவரும் விவசாயம் செய்ய முடியாது தவித்தனர். உழவுத்

இலந்தை மரமே சாட்சி – குழந்தைகள் கதைஇலந்தை மரமே சாட்சி – குழந்தைகள் கதை

குழந்தைகளே நீங்கள் இலந்தை மரம் என்ற வகை மரத்தைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா. இல்லை இலந்தை பழம், இலந்தைவடை ஆகியவற்றை வாங்கி உண்டிருக்கிறீர்களா. உங்களுக்குத் தெரியும் என்றால் அதனைப் பற்றி எழுதி tamilin.kathaigal@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்களேன். சரி  அந்த இலந்தை மரத்தை