ஆர். சண்முகசுந்தரம் – ‘நாகம்மாள் – 3’

பத்து வருஷமாகக் கொண்டாடாதிருந்த மாரியம்மன் உற்சவம் இந்த வருஷம் கொண்டாட்ப்படுகிறது. கற்கள் கீழே விழுந்தும் வங்கு பறித்தும் க்ஷ£ண தசை அடைந்திருந்த கோவிலின் சுவர்கள் மண்ணும் சுண்ணாம்பும் அடிக்கப்பட்டு பளிச்சென்றிருந்தன. நாலு பக்கத்தின் உச்சியிலும் வேப்பிலைக் கொத்துக்கள் சொருகப்பட்டிருந்தன. கோவிலுக்கு முன்பாக தென்னோலையில் மேயப்பட்ட பசும் பந்தல் மிக அழகாயிருந்தது. பந்தல் கூரையின் அடிப்புறத்தில் வண்ணான் மாத்து கட்டப்பட்டிருந்தது. சுவாமியின் சந்நிதானத்திற்கு நேர் எதிராக வெளிப்புறத்தில் பூவோடு வைக்கும் முக்கோணப் பாச்சா மரக்கம்பம் நடப்பட்டிருந்தது. கம்பத்துச்சியில், மஞ்சள் துணியில் நவதானியங்களுடன் ஒரு செப்புக் காசும் வைத்துக் கட்டப்பட்டிருந்தது. பாதை பூராவுமே தண்ணீர் தெளித்துக் குளுகுளுவெனச் செய்திருந்தார்கள்.

     ஊர் முழுவதும் இதே பேச்சுத்தான். ஒவ்வொரு வீட்டிலும் சபைகள் கூடி அடுத்தநாள் எடுத்துச் செல்கிற மாவிளக்குத் தட்டங்களைப் பற்றியும் தங்கள் வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தினர்களுக்குச் செய்யப் போகும் பலகாரங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள். மணியக்காரர் வீட்டில் அன்று மத்தியானம் ஊர்ப் பிரமுகர்களெல்லாம் கூடியிருந்தார்கள். வெகுகாலமாக இருந்து வந்த விபூதித் தகராறையும் இப்பொழுது ஒத்தி வைத்து விட்டார்கள். பூஜை பண்ணி பண்டாரம், விபூதியை விருந்தினர்களுக்குக் கொடுத்துவிட்டு விபூதித் தட்டை கீழே வைத்து விடுவது, பின்பு இஷ்டப்பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. மணியக்காரர் தலையாரியைக் கூப்பிட்டு எல்லோருக்கும் தாகத்திற்கு இளநீர் கொண்டு வரும்படி சொன்னார். அவன் சாலையோரத்தில் சாலையிலேயே வெட்டிக் குவித்திருந்த இளநீர்க் காயை எடுத்துவந்து அங்குள்ளவர்களுக்கெல்லாம் சீவிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

     அதே சமயம் பொன்னபண்டாரத்தின் வீட்டிலும் அந்த மாதிரி தான் ஒரு காட்சி நடந்து கொண்டிருந்தது. நாலைந்து வீட்டுப் பண்டாரங்களும், உள்ளூர் நாடார்களும், தோட்டி தலையாரிகளும், பழங்காலத்தில் பூஜை செய்து வந்த முறை மறைந்து, ஜனங்கள் ஆத்தாளை மறந்ததால், அவள் காட்டும் கோபம் இப்படியிருக்கிற தென்றும் இதை விக்கினமின்றி நிறைவேற்றுவதோடு, தங்களுக்கு இத்தனை நாளாக நிறுத்தி வைத்திருந்த வரவு இனங்களோடு சேர்த்துக் கொஞ்சம் அதிகமாகவே செய்யச் சொல்லி மணியக்காரரிடம் கேட்பதென்றும் முடிவு செய்தார்கள். இதே மாதிரிதான் பட்டியிலும் களத்திலும் காட்டிலும், பெரியவர்களும் சின்னவர்களும் பொங்கலைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள்.

     அன்று இரவு ஏழு மணிக்குத் தப்பட்டைச் சத்தம் ‘டிம், டிம்’ என்று ‘தெரப்பாக’ எழுந்தது. பத்துப் பதினைந்து பறையர்கள் கம்பத்தடியில் உட்கார்ந்து அடித்துக் கொண்டிருந்தார்கள். அந்தச் சத்தத்தைக் கேட்டவுடன் சாப்பாட்டைப் பாதியிலேயே வைத்துவிட்டுக் குழந்தைகள் ஓடி வந்தன. பெரியவர்களும் அவசர அவசரமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். பெண்களெல்லாம் மாலையிலேயே தலைக்குத் தயிர் தேய்த்துக் குளித்து, முகத்திற்கு மஞ்சள் பூசி, மினுமினுப்பாகக் கொண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். வீட்டிற்குள் அடைந்து கிடைக்க முடியாமல் அவசர அவசரமாக சாதம் பரிமாறிக் கொண்டிருந்தனர். பூவோட்டில் நெருப்பு ‘தகதக’வென்று எரிந்து கொண்டிருந்தது. நாச்சப் பண்டாரம் விரதம் கலையாமல் பத்துப் பழங்களையும் ஒரு படி பாலையும் குடித்துவிட்டு, புகையிலையை வாயில் அடக்கிக் கொண்டு பயபக்தியுடன், சுவாமியை எண்ணெய்யாலும், தண்ணீராலும், பாலாலும் ஆனந்தமாக அபிஷேகம் செய்து கொண்டிருந்தான். நெய் விளக்குகள் அம்மன் பக்கத்திலும் எரிந்து கொண்டிருந்தன. கன்னங்கரேல்லென்று கமுகமாயிருந்த அம்மனுக்கு இடுப்பளவு புடவை சுற்றி, கண்ணுக்குக் கண்ணடக்கமும், இடைக்கு ஒட்டியாணமும் இன்னும் சில நகைகளும் அணிவித்திருந்தார்கள். அந்த அம்மனின் தோற்றம் அங்கு பார்த்துக் கொண்டிருந்தவர்களின் மனத்தில் அபார பக்தியை ஏற்படுத்துவதா யிருந்தது. பார்க்கப் பார்க்கச் சனங்கள் வந்து கூடிவிட்டார்கள். “கொட்டுங்கடா!” என்ற சப்தம் கேட்டது. பறையர்கள், “டண், டண்… டணக், டணக்” என்ற இசையில் குச்சியைத் தம்பட்டத்தில் செலுத்தினார்கள். மனதிலே ஒரு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்துவதாயிருந்தது அந்த அடிகளின் இசை. ‘ஜல், ஜல்’ என்று சதங்கைகள் ஒலிக்கக் கம்பத்தைச் சுற்றிச் சிறியவர்களும் பெரியவர்களும் ஆடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்கள் ஆட்டத்திற்குத் தகுந்த பாட்டுக்கள் பாடிக் கொண்டே கம்பத்தைச் சுற்றி வந்தார்கள். வயதானவர்களும் பெண்களும், கோயில் ஓரத்திலும் அரச மரத்தடியிலும் நின்று கொண்டிருந்தனர்.

     அந்த ஆட்டக்காரர்களிலே ஒருவன் அடிக்கடி பறையர்கள் அடிப்பதைக் குற்றம் சொல்லி வந்தான். அதிகாரம் த்வனிக்கும் குரல்; உயரத்திற்கேற்ற பருமன். உருட்டிக் கட்டின வேஷ்டி, சரியான தலைக்கட்டு; அவனைக் கண்டு, கூட இருப்பவர்கள் சந்தோஷம் கொள்வதும், அவன் அதட்டும் போது கொல்லென்று சிரிப்பதுமா யிருந்தார்கள். கம்பத்திற்கு எதிரில் தான் அரசமரக் கட்டிடம். அதன் மீது ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். அவருக்கு வயது அறுபது, எழுபது இருக்கும். அவர் தான் ஊர்ப் பண்ணாடியின் தகப்பனார். வயது அதிகமாகிக் கண்பார்வை மங்கிவிட்ட போதிலும் ரொம்ப உற்சாகமாகவே அவற்றை ரஸித்துக் கொண்டிருந்தார். அருகே போகிறவர்கள் வருகிறவர்களை விடாமல் ஏதோ வாயைக் கிளறிக் கொண்டிருந்தார். “யாரடா சின்னு, இந்த அதிகாரம் பண்ணுறவன்?” என்று அவர் கேட்கவும் பக்கத்திலிருந்தவன், “அது நம்ம கெட்டீப்பனுங்க” என்றான். அந்தப் பெயரைக் கேட்டவுடன், “இப்படி ஏண்டா ரவுசு போடறான்? வெடிய வெடிய அடிக்கிற பறையனுக்கல்ல கஷ்டம் தெரியும்” என்றார். அதோடு அவர், “அவனுக்குக் குடிப்பதற்குக் காசு எங்கிருந்து கிடைக்குதோ?” என்றார்.

     “அவனுக்கு எப்படியோ கிடைச்சுப் போகுதுங்க” என்று ஒருவன் சொல்லவும் அருகில் இருந்த எல்லோரும் சிரித்தார்கள்.

     அவனுக்கு எப்படிப் பணம் கிடைக்கிறது? என்ன, ஏதாவது மந்திரம் தந்திரம் கற்று வைத்திருக்கிறானா? அதெல்லாம் ஒன்றுமில்லை; கெட்டியப்பனுக்கு இருந்த காடொன்றையும் தொலைத்து விட்டான். அவன் வேறு ஒன்றும் செலவு செய்யவில்லை; இட்லியும், கள்ளும் அந்தக் காட்டை விலைக்கு வாங்கிவிட்டது! இப்போது வெறும் ஆள். அந்த ‘விடுசூளை’ யாருக்கும் பயன்படமாட்டான். ஊரில் எல்லோரும் அவனை ஒரு மாதிரியாகத்தான் நடத்துவார்கள். அவனிடம் பகைத்துக் கொண்டால் போச்சு; அன்றைக்கு, விரோதித்துக் கொண்டவருக்கு வாழைத் தோட்டமிருந்தால் பத்துப் பன்னிரண்டு தாராவது பிஞ்சோடும் பூவோடும் அறுபட்டுப் போய்விடும். அல்லது தென்னந்தோப்பு உள்ளவராயிருந்தால் இருபது, முப்பது குலையாவது பாளைக் குருத்தோடு காணாமல் போயிருக்கும். அவனிடம் தன்னைப் போன்ற நாலைந்து ஆட்களும் உண்டு. கெட்டியப்பனைப் பற்றி வளர்த்தினால் வளர்ந்து கொண்டே போகும். இப்போது அவனது ஆட்டத்தைப் பார்ப்போம்.

     “என்னுங்க மாப்பிள்ளெ, இந்த பறயர்க அடியெல்லாம் மறந்திட்டானுகள்” என்று கையிலிருந்த கவையை ஓங்கிக் கொண்டு கெட்டியப்பன் தப்பட்டை கொட்டுகிறவர்களை அடிப்பது போலப் போனான்.

     “அடே, கெட்டி, கெட்டி, வாண்டாம்” என்று சத்தம் போட்டுக் கொண்டு பண்ணாடிக் கவுண்டர் ஓடி வந்தார். அதே சமயம், “என்னுங்க சாமி, இந்த விளக்கு ‘புசுபுசு’ன்னு போகுது” என்று சொல்லிக் கொண்டே நாச்சபண்டாரம் வந்தான். “எக்கேடோ கெட்டுப் போங்கடா” என்று சொல்லிக் கொண்டே கெட்டியப்பன் தன் சாளையை நோக்கி நடந்தான்.

ஆர். சண்முகசுந்தரம் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 19கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 19

அத்தியாயம் 19 – கச்சேரியில் கள்வன்      ‘மகா-௱-௱-ஸ்ரீ மகாகனம் பொருந்திய முத்தையப் பிள்ளை அவர்கள் நாளது ஜுலை மீ 20வ புதன் கிழமை இராத்திரி 11 மணிக்கு உம்முடைய வீட்டுக்கு விஜயம் செய்வார்கள். அவர்களை தக்கபடி உபசரித்து வரவேற்பதற்குச் சித்தமாயிருக்க வேண்டியது.

கல்கியின் பார்த்திபன் கனவு – 57கல்கியின் பார்த்திபன் கனவு – 57

அத்தியாயம் 57 பொன்னனும் சிவனடியாரும் சிவனடியாரைப் பார்த்த பொன்னன் ஏன் அவ்வளவு ஆச்சரியமடைந்தான் என்று சொல்ல வேண்டியதில்லை. குதிரையிலிருந்து இறங்கி அந்தச் சிற்ப வீட்டுக்குள் நுழைந்தவர் ஒருவராயும், வெளியில் வந்தவர் இன்னொருவராயும் இருந்ததுதான் காரணம். இரண்டு பேரும் ஒருவர்தானா, வெவ்வேறு மனிதர்களா?