Tamil Madhura கதை மதுரம் 2019,கல்யாணக் கனவுகள்,தொடர்கள்,யாழ் சத்யா யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 19

யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 19

கனவு – 19

 

அடுத்த நாள் எழுந்து காலைக் கடன்களை முடித்தவன் தேநீர் தயாரித்து அருந்திவிட்டு, முதல் வேலையாக வைஷாலி கொடுத்த பையைத் திறந்து பார்த்தால் முழுவதும் டயரிகள் தான் இருந்தன. எழுமாற்றாக ஒன்றை எடுத்துப் பிரித்தான்.

 

“10.04.2015

சஞ்சு… நான் இன்றைக்கு தலைமுடியை வெட்டிட்டன். எப்ப தலை இழுக்கப் போனாலும் தலை பின்னும் போது அவந்தி ஞாபகமாகவே இருக்குடா… கடவுள் அவளை வாழ வைச்சு அவளுக்குப் பதிலாக என்ர உயிரை எடுத்திருக்கலாம்…”

 

கண்கள் கலங்க வேறொரு டயரியைப் புரட்டினான்.

 

“22.10.2018

இன்றைக்கு ஃபாங்கில சரியான வேலை கூட சஞ்சு… சரியா களைச்சுப் போனன். உனக்கு நிறைய எழுதக் கூட உடம்பில தெம்பில்லை… நான் தூங்கப் போறன். குட்நைட்டா…”

 

“10.01.2019

ஹப்பி பேர்த்டே சஞ்சு… எப்பிடி இருக்கிறாய்? எத்தினை பிள்ளையள் உனக்கு? எல்லாரையும் பார்க்க வேணும் போல இருக்குடா. நீ சின்ன வயசில இருந்த போல குட்டியா ஒரு பொடியனை நீ தூக்கி வைச்சிருக்கிறது போல கனவு கண்டேன்… நாங்க பள்ளிக்கூடம் படிக்கிற காலத்தில கொண்டாடின உன்ர பிறந்தநாள் எல்லாம் ஞாபகம் வருது. உன்னை ரொம்ப மிஸ் பண்ணுறேன்டா சஞ்சு…”

 

“27.02.2013.

இன்றைக்கு முரளி என்னை அடிச்சிட்டான் சஞ்சு… ரொம்ப வலிக்குதுடா…”

 

“05.03.2013.

என்னால முரளியைப் புரிஞ்சு கொள்ளவே முடியலை சஞ்சு… லவ் என்றால் என்ன? கல்யாணம் என்றால் என்ன என்று எதுவும் விளங்கேல்ல. எனக்கென்றா அவன் என்னை ஒரு செக்ஸ் டோல் போல நடத்துற ஒரு ஃபீல் தான் வருதுடா. இது தான் எல்லா வீட்டிலும் நடக்கிற விசயம் என்று நினைச்சுப் பொறுத்துக் கொண்டு இருக்கிறன்…”

 

“17.05.2018

அம்மா கடிதம் போட்டிருக்கிறா சஞ்சு… எனக்கு வேற யாரையும் பிடிச்சிருந்தால் கல்யாணம் செய்யட்டாம். தங்களுக்கு அதில பூரண சம்மதமாம். எனக்கும் இப்பிடித் தனியாக வாழ ரொம்பக் கஷ்டமாக இருக்கு சஞ்சு… எப்ப எவன் என்ன சொல்லுவான், தப்பாக நடக்க ட்ரை பண்ணுவான் என்று பயந்து பயந்து வாழ வேண்டியிருக்கு. இது எனக்கு மட்டுமில்லடா, எங்கட நாட்டில துணையில்லாமல் வாழ நினைக்கிற எல்லாப் பொம்பிளையளுக்குமான பிரச்சினை தான்.

 

ஆனா அதுக்காக எல்லாம் என்னால இன்னொரு கலியாணம் செய்ய முடியாதுடா. நான் முரளியை எவ்வளவு லவ் பண்ணினனான் என்று உனக்குத் தெரியும் தானே. அவனோடயே என்னால ஒரு தாம்பாத்ய வாழ்க்கையைச் சந்தோசமாக வாழ முடியலை. அப்பிடியிருக்க இன்னொருத்தனை என்னால நினைச்சுப் பார்க்கக் கூட முடியாதுடா.

 

எனக்கு இப்பிடியே தனியாக இருக்கிறது தான் பெட்டராகப் படுது. ஆனால் என்ன, நீ பக்கத்தில இருந்தால் நல்லாருக்கும்டா. எனக்கு நீ இருக்கிறாய் என்ற நம்பிக்கையே என்னை என்ன கஷ்டம் வந்தாலும் அதையெல்லாம் கடந்து வாழ வைச்சிடும். ரியலி மிஸ் யூடா சஞ்சு…”

 

கண்கள் கலங்க எழுமாறாக சில டயரிகளைப் புரட்டிப் பார்த்தவன் ஆண்டு ரீதியாக அவற்றை வரிசைப்படுத்தி விட்டு ஆரம்பத்திலிருந்து வாசிக்க ஆரம்பித்தான்.

 

சஞ்சயனைத் திட்டி அனுப்பியதும் அதைத் தாங்க முடியாது தவித்துக் கொண்டிருந்தாள் வைஷாலி. தனது வாழ்க்கை மீது தனக்கிருக்கும் கோபத்தை, தன் வாழ்க்கையின் நலனையே எப்போதும் சிந்திக்கும் ஆருயிர் தோழனிடம் காட்டியது தாமதமாகத்தான் அவளுக்குப் புரிந்தது. தன்னையே நொந்து கொண்டு வைஷாலியும் பழைய நினைவுகளில் தான் ஆழ்ந்திருந்தாள்.

 

முரளிதரன் கூட அவள் வாழ்க்கை, எத்தனையோ வருடக் கனவு. சின்ன வயதில் விளையாட்டாய் முரளிதரனை மனதில் வரித்திருந்தாலும் கூட, விபரம் புரிய ஆரம்பித்ததும் கல்யாண வாழ்க்கை பற்றிய ஆயிரம் கனவுகள் வரிசை கட்டி நின்றன. திரைப் படங்களும் கதைப் புத்தகங்களும் அவள் கல்யாணக் கனவுகளை வண்ணமாக்க நன்றாகவே உதவி புரிந்தன எனலாம்.

 

தனக்காய் பிறந்த ராஜகுமாரன் முரளி தான் என்று இவள் முழு மனதாய் நம்பியிருந்த வேளையில் அவனும் இவள் காதலை ஏற்றுக் கொண்டு கல்யாணம் வரை வந்த பிறகும் இவளால் ஏதோ முழுமையான மகிழ்ச்சியை அடைய முடியவில்லை. முரளிதரன் விருப்பங்களுக்குத் தலையாட்டித் தலையாட்டி தஞ்சாவூர் பொம்மைக்கே பாடம் எடுக்கும் நிலையில் இருந்தவளுக்கு மனதெங்கும் ஒரு ஒட்டாமையும் வெறுமையும் அவள் கட்டுப்பாட்டை மீறி பரவத் தொடங்கியது.

 

வைஷாலி முரளிதரனை மிகவும் நேசித்தாள் தான். அதே நேசத்தை, அவள் காட்டிய அதே பாசத்தை அவனிடம் எதிர்பார்த்த போது அவளுக்கு எஞ்சியது என்னவோ ஏமாற்றம் தான். திருமணமான முதல் நாளே அவள் மனதில் பெரிதாய் ஒரு விரிசல் விழுந்தது அவள் இதயத்தில்.

 

திருமண வேலைகளுக்கு அலைந்து திரிந்ததில் அந்த மாதம் முழுவதுமே ஓய்வு ஒழிச்சல் இல்லை அவளுக்கு. திருமணத்தன்று கேட்கவும் வேண்டுமா? சடங்குகளாலும் மாலையில் ரிசப்சனில் புகைப்படங்கள் எடுப்பதற்கென்று நின்றே களைத்துப் போயிருந்தாள். எப்போதடா இந்த அலங்காரங்களையெல்லாம் கலைத்து விட்டுப் படுக்கையில் வீழ்வோம் என்ற மனனிலைக்கு வந்திருந்தாள்.

 

இருந்தாலும் முதல் ராத்திரிக்கே உரிய கனவுகளும் ஆசைகளும் அவளுக்கும் இல்லாமல் இல்லை. ஒரு நீண்ட குளியலைப் போட்டு அலுப்பைப் போக்கியவள் தயாராகித் தங்களுக்குரிய அறைக்குச் சென்றாள். முரளிதரனும் அவளுக்காகவே காத்திருந்தவன், அவள் அறைக்குள் நுழைந்ததுமே அவளைக் கட்டியணைத்துக் கொண்டான்.

 

அவளை ஒரு வார்த்தை பேச அனுமதியாது மோகம் கொண்ட புதுமாப்பிள்ளையாக அவன் தனது வேட்கையைத் தீர்த்துக் கொண்ட போது வைஷாலிக்கோ உடல் முழுவதும் வலி உயிர் போனது. அத்தனை நேரம் அவள் கொண்டிருந்த ஆசைகள், எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஒரு நொடியில் எங்கோ காணாமல் போய் ‘இது தான் திருமணமா?’ என்ற விரக்தியின் உச்சத்தில் கொண்டு சென்று நிறுத்தியது.

 

என்னதான் பேசிப் பழகியிருந்தாலும் தன்னவனை என்றாலும் கூட முதன்முதலாக முழுதாய் ஒரு ஆணைப் பார்த்துப் புரிந்து கொண்டு கூடுவதற்கு அவளுக்கு நேரம் தேவைப்பட்டது. ஆனால் முரளியோ அவள் மனதைச் சிறிது கூடப் புரிந்து கொள்ளாமல் தன் பசியைத் தீர்த்துக் கொள்ள இவள் வெறும் இரையாய் மட்டும் ஆகி விட்டாள். தாலி எனும் உரிமத்துக்காகவே காத்திருந்த ஓட்டுநராய் அவன் புகுந்து விளையாட இவள் நிலையோ பரிதாபமாகப் போய் விட்டது.

 

காதலும் காமமும் சரி விகிதத்தில் சேரும் போதே அங்கு இனிய தாம்பத்யம் பிறக்கிறது. ஆனால் இங்கு முரளியின் காமம் அதிகமாகவும், வைஷாலியிடம் காதல் அதிகமாகவும் உரிய விதத்தில் கலக்காததில் முதல் நாளே அவள் மனதில் தாம்பத்யத்தின் மீது ஒரு வெறுப்பு உண்டாகியது. அதன் பலன் தொடர்ந்த நாட்களிலும் அவளால் முரளியோடு ஒன்ற முடியவில்லை.

 

அவனும் இவள் உணர்வுகளைச் சற்றும் யோசிக்காமல் தனக்குத் தேவையான போது இவளை ஒரு போகப் பொருளாய் உபயோகித்து விட்டு மறுபக்கம் திரும்பிப் படுத்துக் கொள்வான். அவன் மீது வைத்த காதலால் அவள் தனக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ அவன் விருப்பத்துக்கு அடிபணிந்து கொண்டிருந்தாள். என்னதான் முரளிதரன் மீது நேசம் குறையவில்லை என்றாலும் நாளடைவில் அவனிடம் தனது விருப்பமின்மையைத் தெரிவிக்க ஆரம்பித்தாள். ஆனால் பலன் என்னவோ பூச்சியம் தான்.

 

ஒருநாள் இரவு சமையலறையைச் சுத்தம் செய்து விட்டு அலுப்போடு படுக்கை அறைக்குள் நுழைந்தாள் வைஷாலி.

 

“யார் அவன்?”

 

முரளியின் திடீர் கேள்வியில் ஒன்றும் புரியாமல் விழித்தாள் இவள்.

 

“யாரைக் கேட்கிறீங்களப்பா?”

 

“அதுதான் வீட்ட வரும் போது ரோட்டில கெக்கபிக்க என்று சிரிச்சுக் கதைச்சுக் கொண்டு வந்தியே… அவனைத்தான் கேட்கிறன்…”

 

“அது எங்கட நியூ ஸ்டாப் முரளி…”

 

“அதுக்கு…? நான் கிட்ட வந்தாலே வேணாம் வேணாம் என்றிட்டு சவம்(பிணம்) போலக் கிடப்பாய். ஆனா என்னைத் தவிரக் கண்டவனோடயெல்லாம் சிரிச்சுக் கதைக்க ஏலும் உனக்கு…”

 

“என்ன சொல்லுறீங்க முரளி… எதுக்கும் எதுக்கும் முடிச்சுப் போடுறீங்க…?”

 

“எல்லாம் என்னைச் சொல்ல வேணும்… வேற பொம்பிளை கிடைக்காமல் உன்னைக் கட்டினன் பாரு…. அனுபவிக்கிறன்…”

 

வைஷாலிக்கோ அழுவதா, சிரிப்பதா நிலைமை. அன்றிலிருந்து சிரிப்பதையே நிறுத்தினாள். வெளி ஆடவரோடு முடிந்தளவு பேச்சைக் குறைத்தாள். ஆனால் இதிலெல்லாம் திருப்திப்பட்டால் அவன் முரளியல்லவே.

 

அன்றொரு நாள் அவர்களோடு படித்த ஒரு நண்பனின் திருமணத்திற்குச் சென்றிருந்தார்கள். மாப்பிள்ளை பொறியியலாளன், மணப்பெண் வைத்தியர். வீட்டுக்கு வந்ததுமே பழஞ்சேலை கிழிந்தது போல முரளி புறுபுறுக்க ஆரம்பித்தான்.

 

“அவனைப் பார்… என்ன மாதிரி வடிவான படிச்ச டொக்டர் பெட்டையாகக் கட்டியிருக்கிறான்… என்ர தலைவிதி… உன்னைப் போய்க் கட்டி அனுபவிக்கிறன்…”

 

“ஏன் முரளி இப்பிடியெல்லாம் கதைக்கிறியள்? நீங்கள் சொல்லித்தானே நான் ரெண்டாம் தரம் ஏஎல் எடுக்கேல்ல…”

 

“ஓ… அப்ப நீ கம்பஸ் போகாததுக்கு நான் தான் காரணம் என்று சொல்ல வாறியோ? கடைசில என்ர தலைல பழியைப் போடுறாய் என்ன? வெளில உப்பிடித்தான் சொல்லிட்டுத் திரியிறாய் போல…”

 

“ஐயோ… நான் அப்பிடிச் சொல்ல வரேல்லையப்பா… நான் யாரிட்டயும் உங்களைப் பத்திக் குறை சொன்னதில்லை…”

 

“பொய் சொல்லாதை. நான் அடிச்சனான் என்று என்ர அம்மாட்டச் சொல்லியிருக்கிறாய்… அவ என்னைக் கூப்பிட்டு வகுப்பெடுக்கிறா… இனி இந்த வீட்டில நடக்கிற விசயம் எதுவும் வெளில யாருக்கும் மூச்சு விட்டியோ உன்னைக் கொன்று புதைச்சிடுவன்… தரித்திரம்… உன்னைக் கட்டித்தான்டி எனக்கு எல்லாக் கஷ்டமும்….”

 

வைஷாலி கதைத்து வேலையில்லை என்று வாயை மூடிக் கொண்டாள். மேலும் வாயைத் திறந்தால் அடிஉதை நிச்சயம் தானே. அது தெரிந்தும் ஏன் உடலையும் புண்ணாக்கிக் கொள்வான்? மனதுதான் சுக்குநூறாய் உடைந்து போய் கிடக்கிறதே.

 

வேறொரு நாள் இவள் வங்கியில் கணக்கெடுப்பு நடக்கிறது என்று தாமதமாக வர வேண்டிய நிலை ஏற்பட்டது. முரளியை வங்கிக்கு வந்து அழைத்து வரச் சொல்ல அவனோ போகவில்லை. வங்கி முகாமையாளர் காரில் கொண்டு வந்து அவளை இரவு பத்து மணி போல இறக்கி விட்டுச் சென்றார்.

 

“கலியாணம் கட்டின குடும்பப் பொம்பிளை இப்பிடி ராத்திரி நேரத்தில எவனோடயோ காரில வந்து இறங்கிறியே… வெட்கமாக இல்லை உனக்கு…”

 

“நான் உங்களைக் கூட்டி வர வரச் சொன்னான் தானே முரளி… நீங்க வரேல்ல என்றதும் தான் மனேஜர் கொண்டு வந்து விட்டவர்.”

 

“நீ ஏன் லேட்டாக வர வேணும். இனி நீ வேலைக்குப் போக வேணாம்… வீட்டிலேயே இரு…”

 

“நோ… முரளி… எனக்குக் கொஞ்சமாவது நிம்மதி கிடைக்கிறது வேலைக்குப் போறதாலதான்… வீட்ட இருந்து அதையும் கெடுக்கேலாது என்னால…”

 

“என்னடி சொல்லுறாய்? அப்ப எவனைப் பாக்க வேலைக்குப் போறாய்…? ஒவ்வொரு நாளும் விதம் விதமாக சாரியைக் கட்டி அலுக்கி மினுக்கிக் கொண்டு திரியேக்கயே எனக்குத் தெரியும்… அங்க எவனோடயோ கொட்டம் அடிக்கத்தான் போறாய் என்று…”

 

“உங்களுக்குப் பைத்தியம் ஏதும் பிடிச்சிட்டாப்பா…? ஏன்தான் இப்பிடிச் சந்தேகப் புத்தியோட கதைக்கிறியளோ தெரியேல்ல…?”

 

“என்னது…? எனக்கு சந்தேகமா? எனக்கு உண்மையாகவே ஒரு சந்தேகம் இருக்குடி… உன்னோடயே ஒட்டிக் கொண்டு அலைஞ்ச சஞ்சுவை விட்டிட்டு நீ ஏன்டி என்னைக் காதலிச்சனீ? அல்லது அவனோட எல்லாம் முடிஞ்சு அலுப்புத் தட்டிட்டுதோ…?”

 

“என்ர கடவுளே…! தயவு செய்து நிப்பாட்டுங்கோ முரளி… இதுக்கு மேல என்னால காது குடுத்துக் கேட்கேலாது…”

 

“உனக்கென்னடி நீ சொல்லுவாய்…? எத்தினை பெட்டையள் கம்பஸில என்னைக் கேட்டவளுகள். நான் அவளுகள் எல்லாரையும் வேணாம் என்றிட்டு உன்னைக் கட்டினன் பாரு… என்னைச் சொல்ல வேணும்…”

 

“உங்களுக்கு என்ன தான் பிரச்சினை முரளி…? ஏன் இப்பிடி தினம் தினம் என்னைப் போட்டுச் சித்திரவதை பண்ணுறியள்?”

 

“நீ தான்டி சனியனே என்ர பிரச்சினை… உனக்கென்ன… நீ வடிவாச் சொல்லலாம் வெளில… ரொம்பப் பெருமையாக… என்ர புருசன் இஞ்சினியர், செம ஹான்ட்ஸமாக இருப்பார் என்று… ஆனா நான் உன்னைப் பத்திச் சொல்லேலுமா வெளில…? உன்ர கலரும் நீயும்… மூஞ்சியாவது ஒழுங்கா இருக்கா? சரி… மெல்லிசா இருந்தாலாவது பரவாயில்லை. குண்டுப் பூசணிக்காய்…. உன்னை வெளில நாலு இடத்துக்குக் கூட்டிட்டுப் போகவே எனக்கு அவமானமாக இருக்கு…”

 

வைஷாலிக்கு மனது வெறுத்துப் போயிற்று. இருந்தும் தாங்க முடியாத ஆதங்கத்துடன்,

 

“ஏன் முரளி… நான் வெள்ளையா? கறுப்பா? குண்டா? ஒல்லியா? எல்லாம் கலியாணத்துக்கு முதல் உங்களுக்குத் தெரியாதா? இவ்வளவு வெறுப்பை என்னில வைச்சுக் கொண்டு எதுக்கு இந்தக் கலியாணத்தைக் கட்டி என்னை இப்பிடித் தினம் தினம் வார்த்தையாலயே கொல்லுறீங்கள்?”

 

“அதுதான்டி நான் செய்த பிழை… நீ தான் எனக்கு ஏதோ வசியம் வைச்சிருக்கிறாய். இல்லை என்றால் உன்னைப் போல ஒருத்தியை நான் எப்பிடிக் கட்டுவன்?”

 

இவனுக்குத் தனது உண்மையான நேசத்தை எப்படிப் புரிய வைப்பது என்று தெரியாமல் திகைத்துப் போய் நின்றாள் வைஷாலி. தினம் தினம் வாழ்க்கை நரகமாயிற்று. என்றாவது ஒருநாள் அவன் தன் உண்மை அன்பைப் புரிந்து கொள்ளுவான், தன்னோடு அன்பாய் நடப்பான் என்ற அவள் நம்பிக்கை சிறிது சிறிதாக ஆட்டம் காணத் தொடங்கியது.

 

தனது கல்யாணக் கனவுகள் சிதைந்ததைப் பற்றிய பழைய ஞாபகங்களில் தூக்கம் வராது உழன்று கொண்டிருந்தவளை வெளிக்கதவை யாரோ விடாமல் தட்டும் சத்தம் நிஜவுலகுக்கு மீட்டு வந்தது. அத்தனை நேரமிருந்த மன உளைச்சல் நொடியில் நீங்க உதட்டில் புன்னகை மலர்ந்தது.

 

‘இவன் ஒருத்தன்… பாசமலர்… நான் கோபத்தில கத்திப்போட்டுச் சாப்பிடாமல் கொள்ளாமல் இருப்பன் என்று நினைச்சுச் சமாதானம் செய்ய வந்திட்டாராக்கும்.’

 

எண்ணியபடி விரிந்த புன்னகையுடன் கதவைத் திறந்தாள் வைஷாலி. அவள் கதவைத் திறப்பதற்காகவே காத்திருந்த அந்த நபர் அவளை வீட்டினுள்ளே தள்ளிக் கதவைத் தாளிட்டுத் திறப்பைக் கையிலெடுத்தபடி வெற்றிச் சிரிப்புடன் அவளைப் பார்த்தான். இந்த ஆளைச் சற்றும் எதிர்பாராத வைஷாலி நாடி நரம்பு எங்கும் பயப்பீதி ஓட அதிர்ந்து போய் நின்றாள்.

 

“ஏன்டி எத்தினை நாளைக்கு எனக்கு ஆட்டம் காட்டலாம் என்று நினைச்சாய்? இன்றைக்கு உன்னை ஒரு வழி பண்ணாமல் விட மாட்டன்…”

 

மதுவாடையோடு தள்ளாடியபடியே அவளை நெருங்கினான்.

 

இந்தக் கொடூரனிடமிருந்து தப்புவாளா வைஷாலி?

2 thoughts on “யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 19”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 14ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 14

14 – மனதை மாற்றிவிட்டாய் அனைவரும் இரவு உணவு வேளையில் இருக்கும்போது சந்திரா கூறினார். “என்னங்க, நாளைக்கு ஈஸ்வரி அண்ணி, சோபனா, சுரேந்தர், சுபத்ரா எல்லாரும் வரங்களாம். அண்ணா மட்டும் ஊர்ல வேலை இருக்குன்னு அப்புறம் வரேனிருக்காங்க. சந்திரசேகரும் “ஓ. ..

கபாடபுரம் – 13கபாடபுரம் – 13

13. நெய்தற்பண்   புன்னைப் பூக்களின் நறுமணத்தோடு – தோட்டத்தின் எங்கோ ஒரு பகுதியிலிருந்து – யாரோ நெஞ்சு உருக உருக நெய்தற்பண்ணை இசைக்கும் ஒலியும் கலந்து வந்தது கடல் அலைகளுக்கும் சோகத்துக்கும் ஏதோ ஓர் ஒலி ஒற்றுமை இருக்கும் போலும்.

சிவகாமியின் சபதம் – இரண்டாம் பாகம்சிவகாமியின் சபதம் – இரண்டாம் பாகம்

வணக்கம் தோழமைகளே, சிவகாமியின் சபதம் – இரண்டாம் பாகம் உங்களுக்காக. [scribd id=380391799 key=key-WkWDTOD8YK4mAiJthoJ1 mode=scroll] அன்புடன், தமிழ் மதுரா