யாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 13

கனவு – 13

 

புகைப்படங்களைப் பார்த்து முடித்த சஞ்சயன் பழைய ஞாபகங்களிலிருந்து தன்னை மீட்டெடுத்துத் தனது அலுவலக வேலையைச் செய்து முடித்தவன் தூங்கச் சென்றான். வைஷாலியும் தனது வீட்டில் தூக்கம் வராது பழைய நினைவுகளில் தான் உழன்று கொண்டிருந்தாள்.

 

நெல்லியடி மத்திய கல்லூரி விளையாட்டு மைதானம் மாணவச் செல்வங்களால் நிறைந்திருந்தது. ஆங்காங்கே குழுக்களாகப் பிரிந்து உரிய வயதுக்கேற்ற விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். இன்னும் ஒரு வாரத்தில் விளையாட்டுப் போட்டி என்றிருக்க நாள் முழுவதும் விளையாட்டு மைதானத்திலேயே கழிய சந்தோசமாகப் பயிற்சியில் கலந்து கொண்டிருந்தனர்.

 

வைஷாலியும் இப்போது இந்தப் பாடசாலையில் தான் கல்வி கற்றுக் கொண்டிருக்கிறாள். கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையில் வைஷாலி, சஞ்சயன், முரளிதரன் மூவரும் பத்துப் பாடங்களுக்கும் அதிசிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆனால் முரளிதரன் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடம் பிடித்துத் தான் எப்போதுமே சிறப்புத்தான் என்று மறுபடியும் நிரூபித்திருந்தான்.

 

உயர்தரத்திற்கு முரளிதரனும் வைஷாலியும் கணிதத் துறையைத் தேர்ந்தெடுத்திருக்க, சஞ்சயன் உயிரியல் துறையைத் தெரிவு செய்திருந்தான். சிறு வயதில் இருந்தே மருத்துவராவது தான் அவன் கனவு. வைஷாலியைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? முரளிதரன் கணிதத்துறையைத் தெரிவு செய்தமையால் அவளும் அதையே பின்பற்றினாள். அவள் படித்த பாடசாலையில் கணிதத்துறை இல்லை என்பதால் இங்கே மாற்றலாகி வந்திருந்தாள்.

 

உயர்தரம் இரண்டாம் வருடத்தில் இருந்தார்கள். இன்னும் சில மாதங்களில் உயர்தரப் பரீட்சை. அத்தோடு இவர்கள் பள்ளி வாழ்க்கையும் முடிந்து விடும். அதனாலேயே இந்தத் தடவை விளையாட்டுப் போட்டியில் மிகச் சிரத்தையோடு பங்கு பற்றிக் கொண்டிருந்தனர்.

 

வைஷாலிக்குப் பெரிதாக விளையாட்டுக்களில் ஆர்வம் இல்லை. அதனால் விளையாட்டுப் போட்டியின் போது இடைவேளை நேரத்தில் நடைபெறும் சிறப்பு உடற்பயிற்சி நிகழ்ச்சிக்கு அணித் தலைவியாக மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தாள்.

 

சூரியன் தனது வேலையைக் காட்ட உடற்பயிற்சியும் சேர்ந்து வியர்த்து விறுவிறுக்கக் களைத்துப் போய் தண்ணீர்ப் போத்தலைத் தேடியவள், அதை வகுப்பறையிலேயே மறந்து விட்டு விட்டு வந்திருப்பதை எண்ணித் தன்னையே நொந்து கொண்டாள். இவர்களுக்கு  பொறுப்பான ஆசிரியரிடம் சென்றவள்,

 

“ரீச்சர்… தண்ணிப் போத்தலை வகுப்பில விட்டிட்டு வந்திட்டன். அதைப் போய் எடுத்துக் கொண்டு மற்றப் பிள்ளையளுக்கும் யூஸ் கரைச்சுக் கொண்டு வாறன்…”

 

அவரும் மற்றைய மாணவர்களையும் சிறிது ஓய்வெடுக்க சொல்லி இவளைப் போய் வர அனுமதி தந்தார். வகுப்பறைக்குச் சென்ற வைஷாலி, பெரிய வாளி ஒன்றில் குடி தண்ணீரை நிறைத்து நெல்லிகிரஸ்சை ஊற்றி சீனியும் போட்டுப் பெரிய கரண்டியால் கரைக்க ஆரம்பித்தாள். அப்போது பின்னாலிருந்து,

 

“வைஷாலி..!”

 

என்ற குரல் கேட்கவும் திடுக்கிட்டுப் போய் வாளிக்குள்ளேயே கரண்டியைத் தவற விட்டு விட்டுத் திரும்பிப் பார்த்தாள். முரளிதரன் தான் நின்று கொண்டிருந்தான்.

 

‘நான் தான் இப்போது இவன் பக்கமே பார்ப்பதில்லையே… இப்போ என்ன சொல்லித் திட்ட வந்தான்?’

 

என்று மனதுக்குள் எண்ணியபடி நெஞ்சம் படபடக்க அவனையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் பயத்தை அவன் உணர்ந்திருந்தாலும் அதைப் பொருட்படுத்தாது அவளிற்கு மிக அருகே வந்தவன் ஒரு எட்னா சொக்லேட் ஃபாரை நீட்டினான். இவளோ வாங்குவதா? விடுவதா? என்று மொழி புரியாத குழந்தையாய் அவனை நோக்க,

 

“ஐ லவ் யூ ஷாலி…!”

 

என்றவன் குரல் வெறும் பிரமையோ என எண்ணிக் கண்களை ஒரு நொடி மூடித் திறந்தாள். அவளின் குழப்பம் புரிந்தவனாய் அவள் முகத்தின் எதிரே சொடக்குப் போட்டவன்,

 

“நீ என்னை சின்ன வயசில இருந்து விரும்பிறாய் என்று எனக்குத் தெரியும். முந்தி உன்னை ஹேர்ட் பண்ணினதுக்கு ஸொரி… இப்போ எனக்கும் உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு… லவ் யூ வைஷாலி…”

 

என்றவன் அவள் கரத்தை ஏந்தி அவள் உள்ளங்கையில் சொக்லேட்டை வைத்து விட்டு வகுப்பறைக்கு வந்த அடையாளமே தெரியாமல் விடுவிடுவென திரும்பிச் சென்றான். வைஷாலிக்குத் தான் காண்பது கனவா? நிஜமா? என்பதைக் கூட உணர்ந்து கொள்ள முடியாத அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தாள்.

 

குளிர்பானம் கரைத்த வாளியை இவள் தனியாகத் தூக்கி வருவது கடினம் என வேறு இரு மாணவிகளும் வகுப்பறைக்கு வர இவளும் சுயநிலைக்கு வரப் பெற்றவளாக மைதானத்தை அடைந்தாள். மற்றைய மாணவிகளுக்கு குளிர்பானம் வழங்க இவள் அந்த இடைவேளையைப் பயன்படுத்திக் கொண்டு சஞ்சயனிடம் ஓடினாள்.

 

உயரம் பாய்ந்து பழகிக் கொண்டிருந்தவன் இவள் ஓடி வருவதைக் கண்டதும் இவளிடம் வந்தான். முகம் சிவந்து, கண்கள் கலங்கி, நெற்றியெல்லாம் பொட்டுப் பொட்டாய் வியர்த்திருந்தவளைக் கலக்கத்துடன் ஏறிட்டவன்,

 

“என்ன நடந்தது வைஷூ? ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்?”

 

“சஞ்சு… சஞ்சு…!”

 

“சொல்லுடி லூசு… என்ன நடந்துச்சு?”

 

“நான் தண்ணி எடுக்க வகுப்புக்குப் போனான். அப்ப முரளி வந்து…”

 

“என்ன…? உன்னட்ட ஏதும் தப்பா நடந்தவனா? அவனை… என்ன செய்யிறன் பார்… எங்க இப்ப அவன்…?”

 

“டேய்…. டேய்…! அவன் தப்பா ஒன்றும் நடக்கேல்ல… அது வந்து…..”

 

“அப்ப… என்ன நடந்துச்சு… சொல்லித் துலையன்டி… மனுசரை டென்சனாக்காதை…”

 

அவளோ கன்னமெல்லாம் இரத்தமெனச் சிவக்க வெட்கப்பட்டவாறே, அதே நேரம் கண்கள் கலங்கி நீர் துளிக்க,

 

“முரளியும் என்னை விரும்பிறாராம்…”

 

“என்னடி சொல்லுறாய்…? உண்மையாவோ…? கொங்கிராயுலேசன்ஸ் மை டியர் பிரெண்ட். பக்கி… அதுக்கேன்டி அழுகிறாய்?”

 

“தெரியேல்லடா… முரளிக்கும் என்னைப் பிடிக்கும் என்று நான் சத்தியமாக எதிர்பார்க்கேல்ல… ரொம்ப சந்தோசமாகத்தான் இருக்கு… அதே நேரம் நெஞ்செல்லாம் படபடவென்று அடிக்குது… ஒரே பயமாக இருக்குடா… முரளியைப் பார்த்துக் கதைக்கவே வெட்கமாக இருக்கு… எனக்கு என்ன செய்யிற என்றே தெரியேல்லடா… முரளி வகுப்பை விட்டுப் போன பிறகும் எனக்குக் கைகால் எல்லாம் நடுங்கத் தொடங்கிட்டுது… அதுதான் உன்னட்ட ஓடி வந்தனான்…”

 

“ரிலாக்ஸ் வைஷூ… நீ இதை இப்போ எதிர்பார்க்காதபடியால் தான் உனக்கு எப்பிடி ரியாக்ட் பண்ணுற என்று தெரியாமல் இருக்கு. ஜஸ்ட் என்ஜோய் த மொமென்ட்டி… அது சரி… எனக்கு எப்போ ரீட் வைக்கப் போறாய்?”

 

“சும்மா போடா… ஒரு மண்ணும் இல்லை. எனக்கு நேரம் போகுது. ரீச்சர் தேடப் போறா… நான் போய்ட்டு வாறன்… பிறகு கதைக்கிறன்டா…”

 

மகிழ்ச்சியோடு உரைத்தவள் சிட்டெனப் பறந்தாள். நண்பர்கள் இருவரும் அறியாத ஒன்று, இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த அனைத்தையும் அருகிருந்த மரத்தின் மறைவில் நின்ற முரளிதரன் கேட்டுக் கொண்டிருந்தது தான். அப்போதே ஒரு தீர்மானத்துக்கு வந்த முரளிதரன் அன்றே பாடசாலை முடிய சஞ்சயனைத் தனிமையில் சந்தித்தான்.

 

முரளியைக் கண்டதுமே அவனைத் தோளோடு தோள் சேர்த்துக் கட்டியணைத்தவன்,

 

“அப்ப எப்ப மச்சான் பார்ட்டி? லவ்லி கிறீம் கவுஸ்க்குப் போவமா? இல்லை கொத்துரொட்டியா? வைஷூக்கு ஒரு மாதிரி ஓகே சொல்லிட்டியாமே… வாழ்த்துகள் நண்பா…”

 

முரளியின் கையைப் பிடித்துக் குலுக்கவும் அவனோ முகம் இறுக சஞ்சயன் கையை விடுவித்தவன்,

 

“உனக்கு யார் சொன்னது?”

 

“என்ன கேள்வியடா இது? வைஷூ தான்…”

 

“அப்போ அவளுக்கும் உனக்கும் இடையில எந்த ரகசியமும் இல்லையோ…?”

 

“என்னடா இது புதுசா கேட்கிறாய்? சின்ன வயசில இருந்தே நானும் அவளும் ப்ரெண்ட் என்றது ஊரறிஞ்ச உண்மை தானேடா…”

 

“ப்ரெண்ட் என்றால்… என்ன மாதிரியான ப்ரெண்ட்? அவளுக்கு நான் முக்கியமா…? இல்லை நீ முக்கியமா…? நான் லவ்வைச் சொன்ன அடுத்த செக்கனே உன்னட்ட ஓடி வந்து சொல்லுறாளே… இனிமேல் இப்பிடித்தான் எங்களுக்க நடக்கிற எல்லாத்தையும் உன்னட்ட வந்து சொல்லிட்டு இருப்பாளா? நான் கிஸ் பண்ணினாலும் வந்து சொல்லுவாளா? அவள் தான் வந்து சொல்லுறாள் என்றால் நீயும் வெட்கமில்லாமல் கேட்டிட்டு இருக்கிறியே… ச்சை…”

 

முரளிதரன் பேசப் பேசத் திகைத்துப் போய் நின்றிருந்தான் சஞ்சயன். பதில் பேச வார்த்தைகள் வர மாட்டேன் என்றது. வைஷாலி, சஞ்சயன் இரு குடும்பத்தவர்களும் கூட நெருங்கிய நண்பர்களாக இருந்ததால் இன்று வரை இவர்கள் நட்புக்கு எந்த வித  பிரச்சினையும் வந்ததில்லை. யாரும் இவர்கள் உறவைக் கொச்சைப்படுத்தியோ களங்கப்படுத்தியோ பேசியதில்லை.

 

அவ்வாறிருக்க இப்போது முரளிதரன் பேசியவற்றைத் தாங்க முடியாது துடித்துப் போனான் சஞ்சயன். அப்போதும்  அவன் மனம் முரளிதரன் எண்ணம் இவ்வாறிருப்பதை வைஷாலி அறிந்தால் அவள் மனது எவ்வளவு வேதனைப்படும் என்பதில் தான் எண்ணம் சென்றது.

 

“என்ன முரளி இப்பிடிக் கதைக்கிறாய்? அவ சாதாரணமாகத் தான் சொன்னா. எந்த விசயத்தைச் சொல்ல வேணும், எதைச் சொல்லக் கூடாது என்ற விவஸ்தை இல்லாத பொண்ணா அவ? ப்ளீஸ்… இப்பிடிக் கதையாதையடா… கஷ்டமாக இருக்கு… வைஷூ உன்னில உயிரையே வைச்சிருக்கிறாள். அவ என்ன செய்தாலும் அது ஏதோ விதத்தில உனக்காகத் தான் இருக்கும். அப்படியிருக்க நீ இப்பிடிக் கதைக்கிறது தப்பு முரளி… வைஷூக்கு நீ இப்பிடிச் சொன்னது தெரிஞ்சாலே ரொம்ப வேதனைப்படுவாடா…”

 

“எனக்கு அதெல்லாம் தெரியாது சஞ்சு… வைஷாலி எனக்கு மட்டும்தான் சொந்தமாக இருக்க வேணும். நீயும் அவளும் இவ்வளவு குளோஸ் ப்ரெண்ட்ஸ் ஆக இருக்கிறது எனக்குப் பிடிக்கேல்ல. என்னோட வைஷாலிட லவ் தொடர வேணும் என்றா நீ அவளை விட்டு விலத்த வேணும். இப்பிடி எடுத்ததுக்கும் அவள் உன்னட்ட ஓடி வாறதும், அவளுக்கு ஒன்றென்றால் நீ துடிக்கிறதையும் இனியும் என்னால பார்த்துச் சகிக்க முடியாது.

 

இனி வைஷாலியைப் பார்த்துக் கொள்ள நானிருக்கிறன். அதால நீ உன்ர வேலையை மட்டும் பார்த்திட்டுப் போ. இனி அவளோட கதைக்கிற வாடிக்கை வைச்சிராதை… வைஷாலிக்கு நான் வேணுமா? இல்லை நீ வேணுமா? என்று நீயே முடிவெடுத்துக் கொள்ளு. வைஷாலிட சந்தோசம் இனி உன்ர கையில தான்…”

 

கூறி விட்டு சஞ்சயன் பதிலைக் கூட எதிர்பாராது சென்றவனையே வேதனையோடு பார்த்திருந்தான் சஞ்சயன். அவனைப் பொறுத்தவரை இதிலே யோசிக்க என்ன இருக்கிறது? வைஷாலிக்கு முரளிதரன் தான் முக்கியம் என்று அவன் அறியாததா? இனிக் கொஞ்சம் கொஞ்சமாக அவளை விட்டு விலக வேண்டியது தான் என்று முடிவெடுத்தவனாய் அதைச் செயற்படுத்தும் வழியை யோசித்தான்.

 

இந்த சம்பவம் நடந்து சில வாரங்களில் தான் அவந்தியின் இழப்பு நேர்ந்தது. வைஷாலி, சஞ்சயனின் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி சஞ்சயனை வைஷாலி வாழ்க்கையை விட்டே விலக வழி சமைத்தது. அவந்தியின் இழப்பை ஜீரணிக்க முடியாத இருவராலும் உரிய முறையில் உயர்தரப் பரீட்சையில் கவனம் செலுத்த முடியவில்லை.

 

சஞ்சயனின் மருத்துவக் கனவு கனவாகவே ஆகி விட, அவனுக்கு மருத்துவம் படிக்க அனுமதி கிடைக்கவில்லை. மறுபடியும் அடுத்த வருடம் பரீட்சை எடுத்திருந்தால் நிச்சயமாக இடம் கிடைத்திருக்கும் தான். அதற்குரிய திறமை அவனிடம் இருந்தது. வயம்ப பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்கவே வைஷாலியை விட்டுத் தூரமாய் விலகினால் போதும் என்ற எண்ணம் மட்டுமே கொண்டிருந்தவன் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அஞ்ஞாத வாசத்தை ஆரம்பித்தான்.

 

வைஷாலிக்குத் திரும்பப் பரீட்சை எடுக்கும் எண்ணம் இருந்தது. ஆனால் முரளிதரனோ தடுத்து விட்டான்.

 

“இங்க பார் வைஷூ…! நான் மொரட்டுவ கம்பஸ்க்கு வந்திட்டன். நீ திரும்ப சோதினை எடுத்தாலும் எந்த கம்பஸ் கிடைக்குமோ தெரியாது. உன்னை வேற எங்கேயும் அனுப்பிட்டு என்னால நிம்மதியாக இங்க இருந்து படிக்கவும் ஏலாது… நீ ஊரிலேயே ஏதாவது பிரைவேட்டாப் படி… அல்லது ஏதாவது வேலைக்குப் போ…”

 

முரளி சொல் மிக்க மந்திரம் இல்லை என அவன் வாக்கை வேத வாக்காக மேற் கொண்டு, வைஷாலி வேலைக்கு முயன்றதில் இலங்கை வங்கியில் வேலையும் கிடைக்க அவளும் அதிலேயே மகிழ்ச்சி அடைந்தவளாக வாழ்க்கையை ஓட்டினாள்.

 

வைஷாலி, முரளிதரன் காதலுக்கு இருவர் வீட்டிலும் பச்சைக்கொடி காட்டியதால் பல்கலைக்கழக விடுமுறை நாட்களில் முரளிதரன் ஊருக்கு வரும் நாட்களில் இருவரும் யாரோ ஒருவர் வீட்டில் சந்தித்துக் கொள்வார்கள். எங்கேயாவது வெளியே செல்வதும் உண்டு. அதேபோல எப்போதாவது வைஷாலி கொழும்பு சென்றாலும் முரளியைச் சென்று பார்த்து விட்டு வருவாள்.

 

ஆரம்பத்தில் இருவருக்குள்ளும் எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. முரளிதரனின் தலையாட்டி பொம்மையாக வைஷாலி இருந்தமையால் அவர்களுக்குள் பெரிதாகச் சண்டைகள் வந்ததில்லை. மற்றைய காதலர்கள் போல ஊடலோ, கூடலோ எதுவுமற்று தினமும் தொலைபேசியில் நலம் விசாரிப்பதும் நேரில் சந்திக்கும் போது பரிசுகள் பரிமாறிக் கொள்வதுமாய் நாட்கள் அழகாகவே நகர்ந்தன.

எப்போதுமே வாழ்வில் தென்றல் காற்று மட்டும் வீசிக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா என்ன? நிஷாவும் கஜாவும் இடையிடையே வந்து புரட்டிப் போட்டு வாழ்க்கை என்பது இன்ப துன்பம், ஏற்ற இறக்கம் எல்லாம் நிறைந்தது என்று காட்டத்தானே செய்கின்றன. அதற்கு இவர்கள் வாழ்வு மட்டும் என்ன விதிவிலக்கா?

 

பழைய நினைவுகள் ஆட்டிப் படைக்கத் தூங்க முடியாமல் உழன்று கொண்டிருந்தவளை கைத் தொலைபேசிச் சத்தம் எழும்பி உட்கார வைத்தது. அருகே கிடந்த தொலைபேசியை எடுத்துப் பார்த்தாள். நேரம் அதிகாலை இரண்டு மணி காட்டியது. சஞ்சயன் தான் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான்.

 

“நீ நித்திரை கொள்ளாமல் பழசெல்லாம் நினைச்சிட்டு இருப்பாய் என்று தெரியும். நீதானே சொன்னாய்… முடிஞ்சதை நினைச்சு கவலைப்பட்டுப் பிரியோசனமில்லை… இனி நடக்கிறதைப் பார்க்க வேணும் என்று… ஸோ அதே அட்வைஸ் தான் உனக்கும். நாளைக்கு வேலைக்குப் போக வேணும் எல்லோ… ஸோ கண்ணை இறுக்கி மூடிக் கொண்டு நூறு வரை எண்ணு. நித்திரை வந்துவிடும். குட்நைட் முயல் குட்டி…”

 

அவன் குறுஞ்செய்தியை வாசித்தவள் வதனத்தில் மென்னகை ஒட்டிக் கொண்டது. சஞ்சயன் எப்போதும் இப்படித்தான். அவள் மனதை பிரதிபலிக்கும் கண்ணாடி அவன்.

 

அவனது குறுஞ்செய்தியில் கடைசியில் இருந்த குட்நைட் முயல்குட்டியில் முயல்குட்டியை மட்டும் நீக்கி விட்டு மீதியை அப்படியே பிரதி செய்து சஞ்சயனுக்கே திரும்ப அனுப்பி விட்டுப் படுத்துக் கொண்டு அவன் சொன்னது போலவே நூறு வரை எண்ண ஆரம்பித்தாள்.

 

தான் அனுப்பியதைத் தனக்கே திரும்ப அனுப்பிய அவள் குறும்புத் தனத்தை எண்ணிச் சிரித்தபடி சஞ்சயனும் தூங்க முனைந்தான்.

 

ஒவ்வொரு நாளும் விடியும் என்ற நம்பிக்கையில் தான் தூங்குகிறோம். ஆனால் அந்த விடியல் இந்த நண்பர்கள் வாழ்வில் தரப் போவது வேதனைகள் மட்டும் தானா?

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 28ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 28

28 – மனதை மாற்றிவிட்டாய் மறுநாள் அனைவரும் நண்பகலில் கிளம்ப தயாராக 2 மணி நேர பயணம் தான் என்பதால் ஆதி, சுந்தர் இருவருமே காரை ஒட்டினர். முதலில் சோபனாவும், ஈஸ்வரியும் ஆதியுடன் வண்டியில் வர பிளான் செய்தனர். சுபி, அனு

கபாடபுரம் – 25கபாடபுரம் – 25

25. மீண்டும் கபாடம் நோக்கி   தொடர்ந்து ஒரு திங்கள் காலம் தென்பழந்தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து பல தீவுகளையும், பலவிதமான மனிதர்களையும், பலவிதமான பழக்கவழக்கங்களையும் பலவிதமான ஒழுகலாறுகளையும் அறிந்து முடித்த பின்னர் கபாடபுரம் நோக்கிப் பயணம் திரும்ப முடிவு செய்தார்கள் அவர்கள்.

பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 3பேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 3

“குடிவெறியால் கூத்தாடியவன், என்னிடம் என்ன செய்வது! கீழே வீழ்ந்தான். உடனே எழுந்திருந்தால் மேலும் அடி விழும் என்ற பயம், அவனுக்கு. எனக்கு அவன் நிலையைக் கண்டு சிரிப்புக்கூட வந்தது. எவ்வளவு ஆர்ப்பரித்தான், அடி விழுகிற வரையில். அடி கொடுத்ததும் எவ்வளவு அடக்கம்!