Tamil Madhura கதைகள்,தமிழ் க்ளாசிக் நாவல்கள்,தொடர்கள் வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 08

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 08

  • அதைக் கேட்ட மகாராஜன் வெகுநேரம் வரையில் ஆழ்ந்து யோசனை செய்தபின் பேசத்தொடங்கி, “இதற்குமுன் இருந்த சிப்பந்திகள் தமது வேலையை ஒழுங்காகச் செய்யவில்லை என்று நான் கவர்னர் ஜெனரலுக்கு எழுதி, மகா மேதாவியும் சட்ட நிபுணருமான இந்த மனிதரை வரவழைத்து திவானாக நியமித்து, இனி நம்முடைய ராஜ்ஜிய நிர்வாகம் ஒழுங்காகவும் நீதியாகவும் நடைபெறும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். முன்பு சிப்பந்திகள் சொற்ப சொற்பமாகத் திருடினார்கள். அவர்கள் இன்னின்னார் என்பதும் எளிதில் தெரிந்தது. இப்போது ஜனங் களுடைய பொருளை இவ்வளவு அபரிமிதமாகக் கொள்ளையடிக்கிறது இன்னார் என்பது தெரியவே இல்லை. அவர்கள் தாசில்தார் முதலிய உத்தியோகஸ்தர்களை நியமித்து, சொந்தக் கட்டிடம் கட்டி, பட்டப்பகலில் நாற்காலி மேஜைகள் போட்டுக்கொண்டு பங்கா விசிறி வெண்சாமரம் முதலிய விசேஷ மரியாதைகளுடன்கோடி கோடியாய் எல்லா ஜனங்களும் அறியக் கொள்ளையடிக்கிறார்கள்; ஆனால் எல்லா வரவு செலவு ஆதாயங்களுக்கும் ஓர் இம்மியளவும் பிசகாமல் கணக்கு வைத்திருக்கிறார்கள்; எல்லா வற்றிற்கும் தாக்கீதுகளும் சட்ட ஆதாரமும் காட்டுகிறார்கள். இவ் விதமான இந்திரஜாலக் கொள்ளை இந்த உலகத்தில் வேறே எந்த தேசத்திலும் இறந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகிய எதிலும் நடக்கத் தகுந்ததேயல்ல. ஆனால் இன்னார்தான் இதற்கு உத்தரவாதி என்பது இன்னம் தெரியவில்லை. தக்க சாட்சிகளைக் கொண்டு மெய்ப்பிக்காமல், எவர் மீதும் எந்தக் குற்றத்தையும் சுமத்துவது சட்ட விரோதமாகையால், தாசில்தார் முதலிய சிப்பந்திகள் எல்லோரையும் நாம் விடுதலை செய்திருக்கிறோம். இவர்களால் ஏற்படுத்தப்பட்ட வரிகளையெல்லாம் இன்று முதல் நீக்கிவிட்டோம். இவர்களுடைய சச்சேரிக் கட்டடத்தையும் அதற் குள்ளிருக்கும் பொருள்களையும் சர்க்காருக்குச் சொந்தமாக்கிக் கொள்கிறோம். இது சம்பந்தமாக இந்த திவானினால் பிறப்பிக்கப்பட்டுள்ள சகலமான தஸ்தாவேஜுகளும், ரசீதுகளும் உண்மை யிலேயே இவரால்தான் அனுப்பப்பட்டவை என்பதற்குப் போதுமான சாட்சியம் இல்லை. அதுவுமன்றி இந்தப் பத்து வருஷகாலமாக இவருடைய நடத்தையையும் நாணயத்தையும் நாம் ரகசியத்தில் கவனித்து வந்ததில், இவர் இத்தகைய பிரம் மாண்டமான கொள்ளையில் இறங்கி இருப்பாரென்று நினைப்பதற்கு என் மனம் சம்மதிக்கவில்லை. ஆயினும், இந்த சமஸ் தானத்தின் சர்வ அதிகாரத்தையும் நான் இவரை நம்பி இவரிடம் ஒப்புவித்திருக்கையில் இவருடைய கண்ணிற்கெதிரில் இப்படிப் பட்ட அபாரமான பகல் கொள்ளை நடப்பதை இவர் கண்டு பிடிக்காமல் அஜாக்கிரதையாக இருந்தது இவர்மீது பெருத்த குற்றமாகிறது. இதனால் பொது ஜனங்கள் கோடிக்கணக்கில் பொருள் நஷ்டத்திற்கும் இதர துன்பங்களுக்கும் இலக்காகி இருக்கிறார்கள். இவர் சம்பந்தப்பட்டோ, அல்லது, இவருடைய அஜாக்கிரதையினாலோ நடந்துள்ள இவ்வளவு பெரிய அட்டூழியத்திற்கு இவரை மன்னித்து விடுவது தவறு. ஆகையால் இந்த திவானுக்கு நாம் பத்து வருஷ காலத்திற்குக் கடுங்காவல் தண்டனை கொடுப்பதோடு, இவருடைய சொத்துகள் முழுதையும்பறிமுதல் செய்து சர்க்கார் வசப்படுத்தவும் உத்தரவு செய்கிறோம்” என்று கூறி முடித்தான்.

 

  • அந்தத் தீர்மானம் திவானுக்கு இடிவிழுந்தது போலாய் விட்டது. சகிக்க இயலாத வேதனையும் கலக்கமும் கலவரமும் தோன்றி அவரை வதைக்கலாயின. அவரது உடம்பு கை கால்கள் யாவும் வெட வெட வென்று நடுங்கிப்பதறுகின்றன. வெட்கமும் துக்கமும் ஒருபுறத்தில் பொங்கி எழுகின்றன. மூளை கிறுகிறு வென்று சுழலுகிறது. புத்தி தடுமாறுகிறது. நாக்கு குழறிப் போகிறது. உடம்பு குபிரென்று வியர்த்துவிடுகிறது. கண்களில் கண்ணீர் ததும்புகிறது. அவர் அப்படியே மயங்கிக் கீழே சாயப் போன சமயத்தில் அவருக்குப் பின்னால் நின்ற சேவகர்கள் இருவர் அவர் கீழே விழாதபடி அப்படியே பிடித்து நிறுத்திக் கொண்டனர். உடனே திவான் அரசனைப் பார்த்து, மெதுவான குரலில் பேசத்தொடங்கி, ‘’மகாராஜனே! எனக்குத் தாங்கள் கொடுப்பது மகா கொடுமையான தண்டனை. தாங்கள் ஒரு குற்றத்தையும் செய்யாதவனான என்னைத் தண்டிப்பதோடு, என் வீட்டிலுள்ள என்னைச் சேர்ந்த நிரபராதிகளான என் ஜனங்களையும் தண்டிக்கிறீர்கள். எங்கள் வீட்டில் வயோதிகர்களான என் தாயும், தகப்பனாரும் இருக்கிறார்கள். மேலும் என் தம்பிமார், என் சம்சாராம், தங்கைகள் முதலிய சுமார் பத்து ஜனங்கள் இருக்கிறார்கள். என் சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்தால், அவர்கள் ஏழ்மை நிலைமையடைந்து பிச்சை எடுத்துத்தான் ஜீவனம் செய்ய நேரும். யாரோ மோசக்காரர்கள் செய்த குற்றத்திற்காக என்னையும் என்னைச் சேர்ந்தவர்களையும் தாங்கள் இவ்விதம் தண்டிப்பது கொஞ்சமும் தெய்வ சம்மதமாகாது’’என்று நிரம்பவும் பரிதாபகரமாகவும் மன நைவோடும் பணிவாகவும் கூறினார்.

 

  • அதைக் கேட்ட மகாராஜன், ‘’ஐயா! இது மன்னிக்கத்தக்க அற்ப சொற்பமான குற்ற மென்று நீர் நினைக்கிறீரா? இந்த உலகத்தில் வேறே எந்த திவானுடைய தர்பாரிலும் இப்படிப் பட்ட ஜெகஜாலக்கொள்ளை நடந்திருக்காது என்பதும், இனி நடக்காது என்பதும் நிச்சயம். உம்முடைய அஜாக்கிரதையினால் இந்த சமஸ்தானத்திற்கும் எனக்கும் ஏற்பட்ட அவமானமும்பழிப்பும் இந்த உலகம் உள்ள வரையில் அழியாது என்பது நிச்சயமான சங்கதி. அப்பேர்ப்பட்ட தீராத மானக்கேட்டை உண்டாக்கி வைத்தவரான உம்மை நாம் மரண தண்டனைக்கே ஆளாக்க வேண்டும். அதற்கு சட்டம் இடந்தரவில்லை. ஆகையால், நாம் உம்மை இவ்வளவோடு விடுகிறோம். யாரடா ஜெவான்கள்! இவரைக் கொண்டு போங்கள்’’என்றான். அந்த முடிவான உத்தரவைக் கேட்டவுடன் திவான் கண்ணிர் விடுத்துக் கோவெனக் கதறிஅழ ஆரம்பித்தார். அவரது உடம்பு காற்றிலசையும் நாணல் போலத் துவண்டு வளைந்து அங்குமிங்கும் சாய்கிறது. அங்கே கூடியிருந்த நகரத்து ஜனங்கள் எல்லோரையும் திவான் நிரம்பவும் பரிதாபகரமான பார்வையாகப் பார்க்கிறார்; வெட்கத்தினால் குன்றிப் போய்க் கீழே குனிகிறார். ஜனங்களோ தாங்கள் என்ன சொல்வது என்பதை அறியாதவர்களாய்த் தவித்துப் பதறி நிற்கிறார்கள். பாராக்காரர்கள் இருவர் திவானுக்கருகில் வந்து அவரைத் தொட்டு இழுக்க எத்தனிக்கிறார்கள். அந்தச் சமயத்தில் ஜனக்கும்பலுக்குள்ளிருந்து ஒரு மனிதன் வெளிப்பட்டு அவசரமாக வழி செய்துகொண்டு பைத்தியம் பிடித்தவன்போல சபைக்குள் நுழைந்து மகாராஜனுக்கு எதிரில் தைரியமாகப் போய் நின்று இரண்டு கைகளையும் எடுத்துக் குவித்து நிரம்பவும் பணிவாகக் குனிந்து வணங்கி, “மகாராஜனே! நான் இந்த சமஸ்தானத் திலுள்ள பிரஜைகளுள் ஒருவன். இந்தப் பத்து வருஷகாலமாக நம்முடைய சமஸ்தானத்தில் நடந்து வந்த விநோதக் கொள்ளையின் விஷயத்தில் தாங்கள் இப்போது வெளியிட்ட தீர்மான சம்பந்தமாக நான் ஒரு விக்ஞாபனம் செய்துகொள்ளப் பிரியப்படுகிறேன். மகாராஜன் கருணை கூர்ந்து அதற்கு அநுமதி கொடுக்கவேண்டும்’’ என்றான்.

 

  • அதைக் கேட்ட அரசன் திடுக்கிட்டு வியப்பும் ஆவலும் அடைந்தவனாய் நிமிர்ந்து அந்த மனிதனைப் பார்த்தான். பக்கங்களிலும் எதிரிலும் இலக்ஷக்கணக்கில் கூடியிருந்த உத்தியோகஸ்தர்களும் குடிஜனங்களும் அந்த மனிதன் எதைப்பற்றிப் பிரஸ் தாபிப்பானோ என்ற ஆவலும், ஆச்சரியமும் அடைந்து, அவனது வாயையே கவனமாய்ப் பார்க்கலாயினார். சபா மண்டபம்முழுவதும் நிச்சப்தமே குடிகொண்டது. மகாராஜன் அவனைப் பார்த்து, என்ன விண்ணப்பம்? சொல், கேட்கலாம்’’ என்றார்.

 

  • அந்த மனிதன், “மகாராஜனே! இந்த சமஸ்தானத்தில் சென்ற ஒன்பது வருஷகாலத்தில் தங்களுடைய உத்தரவுப்படி ஒழுங்காக வசூலிக்கப்பட்ட வரிகளில், செலவுகள் போக, ஆதாயம் எவ்வளவு என்பதைத் தாங்கள் கணக்கிட்டுப் பார்த்தீர்களா?* என்றான்.

 

  • அரசன்: பார்த்தோம். இந்த ஒன்பது வருஷத்தில் மொத்த ஆதாயம் 50 ஆயிரம் ரூபாய்.

 

  • அந்த மனிதன்: திவானுடைய கச்சேரியில் எத்தனை சிப்பந்திகள் வேலை பார்க்கிறார்கள்?

 

  • திவான்: என்னையும் சேர்த்து 753 சிப்பந்திகள் இருக்கிறார்கள்.

 

  • அந்த மனிதன் : மகாராஜனே! இந்த சமஸ்தானத்து அரசராகிய தங்களால் கிரமப்படி நியமிக்கப்பட்ட சிப்பந்திகள் 753 தான். அரூபியாக இருக்கும் திவான் லொடபட சிங் பகதூரினால் நியமிக்கப்பட்டிருக்கும் சிப்பந்திகளோ 3748 பேர்கள். 753 சிப்பந்தி களுக்கு ஆகும் செலவைவிட 3748சிப்பந்திகளுக்குப் பல மடங்கு அதிகமாகவே செலவு பிடித்திருக்கும். அப்படி இருந்தும், அந்த, திவான் லொடபட சிங் பகதூர் மூன்று கோடியே முப்பத்தைந்து லக்ஷத்துப் பதினாயிரத்து அறுநூற்று முப்பத்தொன்பது ரூபாயும் சில்லரையும் மிச்சப்படுத்தி இருக்கிறார். தங்கள் திவானோ அரை லக்ஷம் ரூபாய்தான் மிச்சப்படுத்தி இருக்கிறார். தங்களுடைய திவான் நியாயமான துறைகளிலும், பயங்கரமான ஸ்தாபனங்களிலும் வரிகள் விதித்து சட்டப் பூர்வமாக வசூலித்திருக்கிறார். அரூபியான லொடபட சிங் பகதூரோ ரகஸியமாகவும், புதுமை யாகவும் கேவலம் அற்ப சொற்பமான விஷயங்களுக் கெல்லாம் வரிகள் விதித்து, இன்னாரால் இத்தனை ஏற்பாடுகளும் செய்யப் படுகின்றன என்ற குறிப்பே எவருக்கும் தெரியாதபடி மறைந்திருந்து, கடவுளின் திருஷ்டி எவ்வளவு பூடகமாக இருக்கிறதோ, அது போல, அவர் சகலமான காரியங்களையும் அத்யாச்சரியகரமாக நடத்தி வந்திருக்கிறார். அவரது அபரிமிதமான செலவையும், ஆதாயத்தையும் பார்த்தால், அவர் ஜனங்களிடம்அற்ப இலாகாக்களில் வசூலித்தது பிரம்மாண்டமான தொகையா யிருக்கும் என்பது பரிஷ்காரமாகத் தெரியும் விஷயம். தங்கள் திவானால் ஏற்படுத்தப்பட்டுள்ள வரிகளோ நிரம்பவும் பளுவாய் இருக்கிறதென்று ஜனங்கள் உணர்ந்து அதைப்பற்றிப் பலவிதமாகப் பிரஸ்தாபிக்கிறார்கள். திவான் லொடபட சிங் பகதூரின் வரிகளையோ ஜனங்கள் அவ்வளவாய் உணர்ந்ததாகவே தெரிய வில்லை. தங்கள் திவான் சட்டத்தைக் கரைகடந்த மேதாவி என்றும், ராஜாங்க நிர்வாகத்தில் மகா நிபுணர் என்றும் கவர்னர் ஜெனரலால் புகழப்பட்டவர். அப்படி இருந்தும், அரூபியான நமது திவான் லொடபட சிங் பகதூர் இவரை வெகு சுலபத்தில் ஜெயித்து, இவர் காரியத்திற்கு ஆகாத ஏட்டுச்சுரைக்காய் என்று ருஜுப்படுத்தி விட்டார். இவர் எப்போதும் சட்டம், சாட்சியம் ஆகிய இரண்டையுமே முக்கியமாக எண்ணி, உயிரற்ற இயந்திரம் போல வேலை செய்கிறவரேயன்றி, தம்முடைய பகுத்தறிவை உபயோகப் படுத்தி, யுக்தா யுக்தமறிந்து, ஜீவகாருண்யம், பச்சாதாபம் முதலிய குணங்களைக் கலந்துகொண்டு சட்டங்களை உபயோகப்படுத்தத் தெரிந்து கொள்ளாதவர். இவருக்கு நல்ல புத்தி புகட்டவேண்டும் என்று நமது திவான் லொடபட சிங் பகதூர் அரூபியாக இருந்து இத்தனை காரியங்களையும் மகா அற்புதமாக இயற்றிக் காட்டி இருக்கிறார் என்பது நன்றாகத் தெரிகிறது. ஒரு மனிதன் சாட்சிகள் இல்லாமலும், அல்லது, பொய்ச் சாட்சிகளை உண்டாக்கிக் கொண்டும், சட்டத்தில் அகப்பட்டுக்கொள்ளாமல், எவ்வளவோ அபாரமான காரியங்களை எல்லாம் எத்தனை வருஷ காலம் வரையில் வேண்டுமானாலும் செய்வது சாத்தியமான விஷயம் என்பது இப்போது நன்றாக விளங்கிவிட்டது. ஒருவனுடைய சொத்தை இன்னொருவன் அக்கிரமமாக அபகரித்துக் கொள்ளுகிறான். ஆனால் அதற்கு சாட்சிகள் இல்லை. ஆகவே, சட்டத்தின் படி பார்த்தால் அது குற்றமாகிறதில்லை. நியாயப்படி பார்த்தால் அது குற்றமே. ஆகையால் சட்டப்படி செய்யப்படும் காரிய மெல்லாம் நியாய சம்மதமானது என்று நாம் எண்ணிவிட முடியாது. இவ்வளவு பெரிய சமஸ்தானத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள இந்த திவான் சட்டம் ஒன்றையே முற்றிலும் பின்பற்றி நடப்பது போதுமானதே யல்ல. இவர் தம்மாலேன்றவரையில் ஜீவகாருண்யத்தையும் நீதியையும் அநுசரித்து சகலமான நடவடிக்கைகளையும் நடத்தி இருக்கவேண்டும். ஒருவன் செய்த குற்றத்தை மெய்ப்பிக்க சாட்சியில்லை என்ற காரணத்தினாலேயே, வாதியின் வழக்கை அலட்சியமாக மதித்துத் தள்ளி விடுவது அடாது. அப்படி இவர் அந்த வழக்கைத் தள்ளுவதால், அந்த வாதிக்கு, தன்னுடைய குடும்ப வாழ்க்கையே சீர்குலைந்து போகலாம். அவனைச் சார்ந்த மனிதர்கள் ஜீவனோ பாயத்திற்கு வகையின்றி இறந்து போகலாம். இன்னும் அதிலிருந்து கணக்கற்ற துன்பங்களும் துயரமும் நேரலாம். அப்படி இவர் இராஜ நிர்வாகம் செய்தால், இவர் எத்தனை வழக்குகளில் அநியாயமாக நடந்துகொள்ள நேர்ந்ததோ, அத்தனை வழக்குகளிலும் இவருக்கு ஏராளமான பகைவர்கள் ஏற்படுவதும் சகஜமே. அவர்களுள் நமது திவான் லொடபட சிங் பகதூரைப்போன்ற யுக்திமான்கள் பலர் இருப்பார்களானால், சட்டமொன்றையே ஆதாரமாகக் கொண்டு தெப்பம்போல மிதக்கும் இந்த உயிரற்ற இராஜாங்க நிர்வாகத்தை ஒரே நொடியில் தலைகீழாய்க் கவிழ்த்து விடுவார்கள் என்பதை நான் எடுத்துச்சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. மகாராஜனே! இப்போது தாங்கள் வெளியிட்ட தீர்மானத்தில், முக்கியமான இரண்டொரு விஷயங்கள் சொல்லப்படவில்லை. இந்த நகரத்துக் குடிமக்களுள் நானும் ஒருவன். அரூபியாக இருந்து இந்தப் பத்துவருஷ காலமாய் எங்களிடத்திலிருந்து திவான் லொடபட சிங் பகதூர் சட்டத்திற்குப் புறம்பாக லக்ஷக்கணக்கில் பொருளை வசூலித்திருக்கிறார். அவரால் ஏற்படுத்தப்பட்ட கச்சேரியிலிருந்து அபகரிக்கப்பட்ட பொருளைத் தங்கள் கஜானாவில் சேர்க்கும்படி உத்தரவு செய்தீர்கள். எங்களிடமிருந்து வசூல் செய்யப்பட் டிருக்கும் பொருளெல்லாம் எங்களிடம் வந்து சேரும்படி தாங்கள் உத்தரவு பிறப்பிக்கவேண்டும். அதுவுமன்றி, இனியும் தாங்கள் இந்த ராஜ்யத்தை இப்படி சட்ட ஆதாரம் ஒன்றையே வைத்துக் கொண்டு நடத்திக்கொண்டுபோனால், மறுபடி இந்த நகரத்தில் இதுபோன்ற ஜெகஜாலக் கொள்ளைகள் நடக்காமல் எங்களைப் பாதுகாப்பதற்குத் தாங்கள் என்னவிதமான உபாயம் தேட உத்தேசிக்கிறீர்கள் என்பதும் சொல்லப்படவில்லை. இப்படிப் பட்ட அக்கிரமங்களுக்கு உள்படாமல் இந்த ஊரில் எப்படிஇருந்து காலந்தள்ளப் போகிறோம் என்ற பயம் தோன்றி எங்கள் மனசை வதைப்பதால், நான் துணிந்து இந்த விண்ணப்பத்தைத் தங்களிடம் செய்து கொள்ளுகிறேன்’’என்றான்.

 

  • எவரும் எதிர்பாராவிதம் அவன் நிரம்புவம் துணிவாகிப் பேசியதைக் கேட்ட அரசனும், திவானும், மற்ற ஜனங்களும் முற்றிலும் திகைத்து பிரமித்து ஸ்தம்பித்துப் போயினார். திவான் தனது சிறுமையையும் அறியாமையையும் உணர்ந்து வெட்கிக் குன்றித் தலைகுனிந்து நின்றார். அதுபோலவே மகாராஜனும் ஒரு விதமான கிலேசத்தையும் இழிவையும் உணர்ந்து தனது மனத்தில் பொங்கியெழுந்த கோபத்தை அடக்கிக்கொண்டு அந்த மனிதனைப் பார்த்து, “ஐயா! நீர் பேசுவதைப் பார்த்தால், இந்த திவான் சில வழக்குகளில் நீதித் தவறாக நடந்துகொண்டதை நீர் அறிந்து கொண்டு பேசுகிறது போலத் தோன்றுகிறதே” என்றான்.

 

  • அந்த மனிதன், “ஆம்; சுமார் பத்து வருஷங்களுக்கு முன் நான் ஒரு தாசில்தாரிடம் சமயல்காரனாக இருந்தேன். இந்த திவான் வேலைக்கு வந்தவுடன் அந்தத் தாசில்தாரையும் வேறு பலரையும் உத்தியோகத்திலிருந்து விலக்கிவிட்டார். அதனால் என்னுடைய சமயல் உத்தியோகமும் போய்விட்டது. நான் நாணயமான வழியில் ஜீவனம் செய்ய வேண்டு மென்று இவ்வளவு பெரிய பட்டணத்தில் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தேன். எனக்கு ஒரு வேலையும் கிடைக்கவில்லை. என் பெண்சாதி வியாதியால்பட்டு மருந்துக்கும் கஞ்சிக்கும் வகை யின்றி படுத்த படுக்கையாகக் கிடந்தாள். சிறிய குழந்தைகள் பசியால் துடித்துப் பறந்தன’’என்றான்.

 

  • உடனே திவான் நமது சமயற்காரனை நோக்கி, “ஒகோ! நீயா! உன்னுடைய வழக்கு எனக்கு நன்றாக நினைவிருக்கிறது! நீ மைசூர்பாகு செய்து விற்றபோது யாரோ சூதாடிகள் வந்து எல்லா வற்றையும் அபகரித்துக்கொண்டு போனதாக நீ பிராது கொடுத்தாய். சாட்சிகள் இல்லை. ஆகையால், அந்த வழக்கை நான் தள்ளி விட்டேன்’’என்றார்.

 

  • நமது சமயற்காரன் சிரித்துக்கொண்டு “ஆம். ஆம். அந்த மனிதன் நான்தான். தாங்கள் என் வழக்கைத் தள்ளிய பிறகு நான்மகாராஜனிடம் நேரில் வந்து என் நியாயத்தைச் சொல்லிக் கொள்ள எத்தனித்தேன். மகாராஜன் பெரிய மனிதர்களுக்குத் தான் பேட்டி கொடுப்பதென்றும், என்னைப் போன்ற அற்ப மனிதர்களை அருகில் வரவிடுவதில்லை என்றும் சேவகர்கள் சொல்லி விட்டார்கள். அதன் பிறகு என் வழக்கைக் காகிதத்தில் எழுதி நான் அதை மகாராஜனுக்கு அனுப்பினேன். திவான் செய்ததே சரியான தீர்மானமென்று சொல்லி நம் அரசர் என்னுடைய மனுவைத் தள்ளி விட்டார். என்னுடைய குடும்பத்தின் பரிதாபகரமான நிலைமையையும், அந்தக் கொள்ளையினால், எனக்கு நேரக்கூடிய பலாபலன்களையும் நான் திவானிடத்திலும், மகாராஜனிடத்திலும் தெரிவித்தேனானாலும், அவர்களுடைய மனம் சட்டமொன்றையே கவனித்ததன்றி ஜீவகாருண்யம் என்பதை எள்ளளவும் கொள்ளவில்லை. ஒரு தகப்பன் செயலற்றவையாயிருக்கும் தன் சொந்தக் குழந்தைகளை எப்படிக் காப்பாற்றுவானோ அதுபோல, மகாராஜன் குடிகளைக் காப்பாற்ற வேண்டு மென்பது நம்முடைய முன்னோர் கடைப் பிடித்துவந்த கொள்கை. ஒரு குழந்தை, “பட்டினி கிடந்து சாகிறே’’ னென்றால், அதன் தகப்பனுடைய மனம் இரங்காமலிருக்குமா? என்னுடைய வரலாற்றைக் கேட்டுக் கல்லும் கரைந்துருகும். அப்படி இருந்தும், தங்கள் இருவருக்கும் மனம் கொஞ்சமும் இரங்கவில்லை. இந்த திவானுடைய வீட்டுவாசலில் இருந்த பாராக்காரனுடைய மனம் உடனே இளகித் தவித்தது. அவன் எனக்கு உடனே எட்டணா பணத்தைக் கொடுக்க வந்தான். நான் நியாயமான வழியில் சம்பாதிக்க வேண்டுமென்றும், பிறருடைய பொருளை உழைப்பின்றி அபகரிக்கக் கூடாதென்றும் சொல்லி அதை வாங்க மறுத்து விட்டேன். அவன் தன் மனைவியை அழைத்துக் கொண்டு ஏராளமான சாமன்களை எடுத்துக்கொண்டு எனக்குத் தெரியாமல் போய் என் வீட்டிலிருந்த குழந்தைகளிடம், நான் கொடுக்கச் சொன்னதாக நடித்து அவைகளைக் கொடுத்து விட்டு வந்து விட்டான். அன்றையதினம் அந்த மனிதர் அப்படிச் செய்திரா விட்டால், என் குடும்பத்தார் எல்லோரும் மாண்டிருப்பார்கள். நம்முடைய தேசத்தில் அரசர் இருக்கிறார், திவான் இருக்கிறார்; நான் அவர்களிடம் என் குடும்ப நிலைமையைத் தெளிவாகத்தெரிவித்தேன்; கேள்வி முறையில்லாமல் போய்விட்டது. ஆகவே, இது கேள்வி முறையற்ற தர்பார் என்றும், சாட்சியம், சட்டங்கள் ஆகிய இரண்டிற்கும் இடங்கொடாமல், தோட்டி முதல் மகாராஜன் வரையில் கொள்ளை அடிக்கலாம் என்பதை மெய்ப்பித்துக் காட்டினால், அப்போதாவது இந்த நிர்வாகம் திருந்தாதா என்ற எண்ணத்தினாலேயே நமது திவான் லொடபட சிங் பகதூர் அரூபி யாக இருந்து இப்படிப்பட்ட அதிதீரச் செய்கைகளைச் செய்து காட்டி இருக்கிறார் என்றே நாம் எண்ணிக்கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன்’’என்றான்.

 

  • அதைக் கேட்ட மகாராஜன் திடுக்கிட்டு திக் பிரமை கொண்டான். அவனது மனத்தில் அபாரமான கோபமும் பதை பதைப்பும் பொங்கி எழுந்தன. கண்கள் கோவைப் பழமாய் சிவந்தன. மீசைகள் துடிக்கின்றன. கை கால்கள் பதறுகின்றன. அது போலவே மற்ற ஜனங்களும், உத்தியோகஸ்தர்களும், நமது சமயற்காரன் மீது ஆத்திரமும் அருவருப்பும் கொண்டு அவனைக் கசக்கிச்சாறு பிழிந்துவிட நினைப்பவர்போல முறைத்து முறைத்துக் கோபத்தோடு அவனைப் பார்க்கின்றனர்.

 

  • உடனே அரசன் மிகுந்த கோபாவேசத்தோடு சமயற்காரனை நோக்கி, “அடேய் என்ன சொன்னாய்? நானா பொருளை அபகரித்தவன்? இதுவரையில் நீ பேசியதைக் கேட்டு நீ மகா புத்திமானென்று நான் நினைத்தேன். கடைசியாக நீ சொன்னதி லிருந்து நீ பைத்தியக் காரனென்றே இப்போது நினைக்க வேண்டி யிருக்கிறது. யாரடா சேவகர்கள்? இந்தத் துடுக்கனை முதலில் வெளியில் கொண்டுபோய் விடுங்கள்’’என்றார். உடனே நாலா பக்கங்களிலிருந்து சேவகர்கள் அம்புகள் போல அவன்மீது பாய்ந்து அவனை இறுகப் பிடித்துக் கொண்டனர்.

 

  • அவன் ஓங்கிய குரலில் பேசத்தொடங்கி, “மகாராஜனே! நான் வெளியில் போய்விடுகிறேன். ஆனால், ஜனங்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் தஸ்தாவேஜாக மாறித் தங்கள் பெட்டியில் இருக்கிறது என்று மெய்ப்பிக்கவில்லை. தங்களுக்கு தைரியமிருந்தால் பெட்டியைத் திறந்து காட்டுங்கள்’ என்று கூறினான். அதைக் கேட்ட அரசன் தாங்க வொண்ணாத பதைப்பும்ஆவேசமும் கொண்டவனாய், அவனைச் சிறிது நேரம் நிறுத்தும் படி கூறிவிட்டுத் தமது சிம்மாசனத்தின் அடியில் வைக்கப் பட்டிருந்த கைப் பெட்டியை எடுத்து எல்லா ஜனங்களுக்கும் எதிரில் காட்டியபடி திறந்து மூடியை விலக்கினான். அதற்கு தன்னால் வைக்கப்படாத பல புதிய தஸ்தாவேஜிகள் இருந்ததைக் கண்ட அரசன் ‘ஆ’ என்ன ஆச்சரியம்’ என்று துள்ளிக் குதித்து, அவைகளை எடுத்துப் படித்துப் பார்த்தான். அதற்குள் ஒன்பது பத்திரங்கள் இருந்தன. ஒவ்வொரு வருஷத்திலும், மேலக் கோட்டை வாசல் ரெவினியூ தாசில்தாரால் சேர்த்தனுப்பப்பட்ட மிகுதிப் பணத்தை அரசனிடத்திலிருந்து வட்டிக் கடனுக்கு வாங்கிக் கொண்டிருப்பதாக அந்த நகரத்திலுள்ள ஒன்பது பெரிய மனிதர்கள் தனித் தனியாக எழுதிக் கொடுத்து பத்திரங்கள் பெட்டியில் இருக்கவே, அதை உணர்ந்த அரசன் ஸ்தம்பித்து ஊமை போலாய் அப்படியே மயங்கித் தமது சிம்மாதனத்தில் சாய்ந்து விட்டான். அதுபோலவே மற்ற உத்தியோகஸ்தர்களும் வியப்பே வடிவமாக மாறிக் கற்சிலைகள்போல அப்படியப்படியே நின்று விட்டனர். சிறிது நேரத்தில் தெளிவடைந்த அரசன் அந்த ஒன்பது பத்திரங்களிலும் குறிக்கப்பட்டிருந்த பெரிய மனிதர்கள் அங்கே இருக்கிறார்களா என்று விசாரித்து, அவர்கள் இல்லை என்று உணர்ந்து, உடனே அவர்களது மாளிகைகளுக்கு ஆள்களை அனுப்பி அவர்களை வரவழைத்து விசாரிக்க, அவர்கள் தாங்கள் கடன் வாங்கிக்கொண்டிருப்பது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டனர். யார் மூலமாய் அந்தக் கடன் வாங்கப்பட்டதென்ற கேள்விக்கு, அவர்கள், திவானுடைய சேவகர்கள் யாரோ சிலர்

 

  • வந்து, அரசனிடம் வட்டிக்குக் கொடுக்கக்கூடிய பணம் இருப்ப தாகவும், அவர்களுக்குத் தேவையானால் தாங்கள் பணத்தை வாங்கிக்கொண்டு வருவதாகவும், அவர்கள் பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டு அதைப் பெற்றுக் கொள்ளலாமென்றும் கூறிய தாகவும், அது போலவே தாங்கள் பத்திரம் எழுதி சேவகர்களிடம் கொடுத்துவிட்டுப் பணம் பெற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறினர். அவ்வாறு பணம் கொடுத்துப் பத்திரம் எழுதி வாங்கிக் கொண்ட சேவகர்கள் இன்னின்னார் என்ற அடையாளம் தங்களுக்கு அவ்வளவாகத் தெரியாதென்றும் அவர்கள் கூறினர்.

 

  • அந்த மகா அற்புதமும் ஆச்சரியகரமுமான வரலாற்றைக் கேட்ட அரசனும், உத்தியோகஸ்தர்கள், ஜனங்களும் முற்றிலும் திக்பிரமை கொண்டு ஒரே குழப்பமும், வியப்பும் உருகொண்டது போல நின்றுவிட்டனர். சிறிது நேரத்தில் அரசன் தமக்கெதிரில் இருந்த சேவகர்களைப் பார்த்து, “அடேய் திவானை விட்டு விடுங்கள் எனக்குத் தெரியாமலே, நான் பணத்தை வட்டிக்குக் கொடுத்ததாக தஸ்தாவேஜிகள் எழுதப்பட்டு, அவைகள் என்னுடைய கைப்பெட்டிக்குள் வந்திருப்பது சாத்தியப்பட்டபோது, திவானுடைய கையெழுத்துடன் தாக்கீதுகள் தயாராவது ஒரு பெரிய காரியமல்ல’’என்றார். உடனே சேவகர்கள் திவானை விட்டு விட்டார்கள்.

 

  அதே காலத்தில் அரசன் எழுந்து தனது ஆசனத்தை விட்டுக் கீழே இறங்கி விரைவாக நமது சமயற்காரனண்டை போய் மிகுந்த மகிழ்ச்சியும் புன்னகையும் தோற்றுவித்துத் தனது கையால் அவரது கையைப் பிடித்து “ஐயா! உங்களை நான் இது வரையில் நிற்கவைத்துப் பேசியதைப்பற்றி நீங்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். உங்களை நான் சாதாரணமான மனிதரென்று நினைத்தது தவறு. நீங்கள் அதிமாநுஷ சக்தியும், அபாரமான புத்தியும், எள்ளளவும் நீதிநெறியும் நடுநிலைமையும் தவறாத உத்தம குணமும் வாய்ந்த ஒரு பெரிய மகானென்றே நினைக்கிறேன். உங்களுக்கு எங்களால் நேரிட்ட தவறை நீங்கள் மனதில் வைத்துக் கொண்டு, எங்களுக்கு நற்புத்தி கற்பித்து, இந்த ராஜ்ஜியத்தை செம்மைப்படுத்த வேண்டு மென்று, நீங்கள் எவராலும் செய்யமுடியாத இப்பேர்ப்பட்ட மகா அற்புதமான செய்கைகளைச் செய்து காட்டியதற்கு, நானும் என் பிரஜைகளும் ஏழேழு தலை முறையிலும் நன்றி விசுவாசத்தோடு உங்களை நினைக்கக் கடமைபட்டவர்களாகி விட்டோம். நீங்கள் இனி நிற்கக்கூடாது. வந்து என் பக்கத்திலுள்ள, திவானுடைய ஆசனத்தில் அமரவேண்டும்’’என்று கூறி மனமார்ந்த பிரேமையோடு உபசரித்து அவனை அழைத்துக்கொண்டு போய் உட்கார வைத்த பின் தானும் தனது சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டு “புண்ணிய மூர்த்தியே என் மனசில் தோன்றும் முக்கியமான ஒரு சந்தேகத்தைத் தாங்கள் நிவர்த்திக்க வேண்டும். இந்த ரெவினியு தாசில்தாரால் அனுப்பப்பட்ட பணம் முழுதும் கணக்குப்படி பத்திரத்தில் இருக்கின்றனவே. நீங்கள் உங்களுடைய சொந்தச் செலவுக்கு என்ன செய்தீர்கள்? ஏதாவது பணம் எடுத்துக் கொண்டீர்களா?’’என்றான்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 31மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 31

31 சற்று நேரத்தில் சித்தி அழைக்கும் சத்தம் கேட்கவே, கீழே சென்றாள் சுஜி. கூடத்தில் பட்டுப் புடவை அணிந்த பெண்கள் அனைவரும் பாயில் உட்கார்ந்து இருக்க, பக்கத்திலே இருந்த சேரில் ஆண்கள் அமர்ந்து இருந்தனர். நடந்து வரும் வழியை ஒருவர் மறைத்துக்

ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 42ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 42

42 – மனதை மாற்றிவிட்டாய் மறுநாள் திவியை பார்க்க சென்றான். கதவை திறந்தவள் விழிவிரித்து பார்க்க அது, ஆச்சரியம், அதிர்ச்சி என அனைத்தும் கலந்து இருந்தது. அவள் அப்டியே நிற்க அவளை நகர்த்திக்கொண்டு உள்ளே வந்து அமர்ந்தான். இவளுக்கு ச்சா. வீட்டுக்கு