Tamil Madhura சிறுகதைகள் சேதுபதி விசுவநாதனின் ‘ஏக்கம்’ – சிறுகதை

சேதுபதி விசுவநாதனின் ‘ஏக்கம்’ – சிறுகதை

பச்சை பசேல் என்று வயல்வெளி நிறைந்த ஊர். அதிகாலை நேரத்தில் பறவைகள் தங்களின் உணவுக்காக கூட்டை விட்டு வெளியே வந்து கொண்டிருந்த நேரம்.

கைகளில் தூக்குபோசியில் சோறும் வெங்காயமும் தலையில் வேலை உபகரணங்களையும் தூக்கி கொண்டு வேலைக்கு சென்று கொண்டிருந்தனர் ஊர்மக்கள்.

தொலைபேசியும் தொலைகாட்சியும் இல்லாத அந்த நாட்களில் செவி வழிச் செய்திகள் சென்ற காலம்.

வயல்களில் வேலை பரபரப்பாக நடந்து கொண்டிருக்க நாட்டுப்புற பாடல்களால் மக்கள் களைப்பு தெரியாமல் வேலை செய்தனர்.

நண்பகல் வேலையில் வயலின் ஓரத்தில் நின்று ஒரு சத்தம். “கருப்பையா வேகமாக இங்க வா” என்று தபால்காரர் அழைத்தார்.

“ஏய்ய்ய்ய் கருப்பையா. இங்கே வாவோய்ய். தாபல்காரகவோ கூப்பிடுறாக” என்று மாறி மாறி சிலர் கூவ, கருப்பையா முகத்திலும் பார்வதியின் முகத்திலும் மகிழ்ச்சி பொங்கியது.

வேகமாக வரப்புகளில் ஓடினர் இருவரும். “சின்ன புள்ளைங்க மாதிரி ரெண்டும் எப்படி ஓடுதுக பாரு” என்று சிலர் கேளி செய்தனர்.

“பின்ன என்னப்பா. அவக மவன் கிட்ட இருந்து கடுதாசி வந்தா சும்மா இருக்க முடியுமா?” என்று கூறினார் ஒருவர்.

மூச்சிரைக்க ஓடி வந்த இருவரும் தபால்காரரை பார்த்து, ” ஐயா எம்புள்ள கடுதாசி போட்டுருங்கானா? எப்போ வரானாம்? சொல்லுங்கயா” என்று கருப்பையா கேட்க மூச்சு வாங்க பேசினார்.

“சாமி எம்புள்ள என்ன எழுதி இருக்கான்? சொல்லுங்க சாமி” என்று பார்வதியும் முகத்தில் ஆர்வம் பொங்க கேட்டாள்.

இவரின் நிலைமை பார்த்த தபால் காரருக்கு மனதில் பெரிய கவலையை உண்டாக்கியது.

“ஐயா சொல்லுங்க. ஏன் அமைதியா இருக்கீங்க” என்று கருப்பையா கேட்க,

“அது வந்து கருப்பையா” என இழுத்தார் தபால்காரர்.

“சொல்லுங்க சாமி. எம்புள்ள கடுதாசி போடலாயா?” என்று ஏக்கத்துடன் கேட்டாள் பார்வதி.

“உன் மவன் கிட்ட இருந்து கடுதாசி வரல கருப்பையா. பட்டாளத்து பெரிய ஆபிஸர் கிட்ட இருந்து தான் தந்தி வந்துருக்கு” என்று தபால்காரர் வாடிய முகத்துடன் கூற,

“எனக்கு எதுக்கு அவர் தந்தி அனுப்பனும்? என்ன ஐயா போட்டுருக்காரு?” என்று குழப்பத்துடன் கேட்டார் கருப்பையா.

“அது வந்து…, என்னை மன்னிச்சிடு கருப்பையா. நமது நாட்டு எல்லையில ரெண்டு நாளா பக்கத்து நாட்டு காரங்க கூட சண்டை நடந்துட்டு இருக்கு. அதுல உன் மவன சுட்டு கொன்னுட்டாங்க” என்று செய்தியை கேட்டதுமே,

“அய்யோ கடவுளே” என்று கதறிக்கொண்டு விழுந்தாள் பார்வதி.

தலையில் அடித்து கொண்டு “எல்லாம் போச்சே” என்று கத்த, வயலில் இருந்த அனைவரும் வேகமாக ஓடி வந்தனர்.

“ஏய் என்னப்பா ஆச்சு” என்று கேட்கும் முன்பே இருவரின் கதறலும் மற்றவர்களுக்கு உணர்த்தியது.

அருகில் இருந்தவரிடம், ” பட்டாளத்துல செய்ய வேண்டிய காரியங்கள செஞ்சுட்டு நாளைக்கு காலையில உடம்பு இங்க வந்துருமுனு சொல்லிருக்காங்க‌. அதனால ஆக வேண்டியத பாருங்க” என்று சொல்லிவிட்டு தபால்காரர் கிளம்பினார்.

கருப்பையாவின் அலறலும் பார்வதியின் கதறலும் அனைவரையும் கலங்க செய்தது. விசயம் அனைவருக்கும் தெரிந்தது.
“பட்டாளத்துக்கு போன நம்ம கருப்பையா மவன் சங்கர் செத்துட்டான்” என பக்கத்தில் இருக்கும் ஊருக்கும் உறவினர்களுக்கும் கூறப்பட்டது.

இந்த விசயம் அவளின் மனைவி தேவிகாவிற்கும் சென்றடைந்தது.

“ஏய் தேவி‌. பட்டாளத்துக்கு போன உன் புருஷன் இறந்துட்டாருடி. தபால்காரவுக உன் மாமனார் கிட்ட சொன்னாராம்” என்று அழுதுகொண்டே பக்கத்துவீட்டு தோழி கூற,
அந்த நொடியில் தேவியின் கண்கள் ஒரு கணம் விரிந்து பின் மூடியது. அப்படியே சரிந்தாள் தேவிகா.

பதறிய போயி வீட்டுல இருந்தவங்க அவளை உலுக்கினர். அசையவில்லை. அவளின் முகத்தில் தண்ணீர் தெளித்து முகத்தில் அடித்தனர். கண்களை திறந்தாள் தேவிகா.

“இல்ல. நீங்க பொய் சொல்லுறீங்க. அவர் என்னைய விட்டுட்டு போக மாட்டாரு” என்று அழ ஆரம்பித்தாள் தேவிகா. அருகில் இருந்தவர்களும் அவளை அணைத்து அழுதனர்.

அந்த நேரத்தில் கருப்பையாவும் பார்வதியும் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். வீட்டினுள் நுழைந்த பார்வதி தேவியின் கைகளை பற்றி, ” தேவி நாம மோசம் போயிட்டோம்மா. அந்த கடவுள் நம்மள ஏமாத்திடாரு “என்று அழுதாள்.

வீட்டின் முன் ஊரார் துக்கம் விசாரிக்க வந்தனர். வீட்டின் முன் பந்தல் போடப்பட்டது. வருபவர்களுக்கு தேநீர் உணவு தயாரானது ஒருபுறம்.

மகனிடம் இருந்து கடுதாசி வந்ததாக எண்ணியவர்களுக்கு மகனே பெட்டிக்குள் வைத்து வருகிறான் என்றால் அந்த வலி மிகவும் கொடுமையானது.

தேவிகா அழுது அழுது ஓய்ந்து போனாள். பார்வதியின் உடலிலும் சக்தியற்று போனது.

அந்த நேரத்தில் அனைவரையும் அமைதியாக்கும் ஒரு குரல் ஒலித்தது. அந்த குரல் வந்த திசையை நோக்கி அனைவருக்கும் நிசப்தமாக பார்த்தார்கள்…

மீண்டும் அனைவருக்கும் அழுக ஆரம்பித்தனர். இப்போது தன் மகன் இறந்துவிட்டான் என்பதை விட பார்வதிக்கும், தன் கணவன் இறந்துவிட்டான் என்பதை விட தேவிகாவின் மனதிலும் மிக பெரிய வலி ஏற்பட்டது.

தன் தந்தையின் முகம் காணாத குழந்தையும், தன் குழந்தையின் முகத்தை காண வருவதாக இருந்தவர் இறந்தவராக வருகிறாரே என்ற வலியும் தான் அதிகமானது.

ஆம். அந்த நிசப்தத்தை உருவாக்கிய குரல் சங்கரின் குழந்தையின் அழுகுரல்.
தன் தாய் ஏன் அழுகிறாள்? தாத்தா பாட்டி ஏன் அழுகிறார்கள்? ஊரார் ஏன் நம் வீட்டின் முன்பு கூடுகிறார்கள்? என்று எதுவும் தெரியாத அந்த குழந்தை தன் வயிற்றில் ஏற்பட்ட பசியை போக்க தாயிடம் பால் வேண்டி அழுகிறது.

பால் கொடுக்கும் நிலையில் அவள் இல்லை. பால் பெட்டியில் உணவு அருந்தவும் அந்த குழந்தை தயாராக இல்லை.

கையில் குழந்தையை தாங்கும் நிலையில் கூட தேவிகா இல்லை. அந்த செய்தி கேட்டத்தில் இருந்து வீட்டில் யாரும் சாப்பிடவில்லை. அனைவரும் அழைத்தும் தண்ணீர் கூட குடிக்கவில்லை.

தேவிகாவின் மடியில் குழந்தை வைக்கப்பட்டு அதற்கு தாய்ப்பால் குடிக்க வைத்தனர் சிலர். அந்த நொடியில் கூட தேவியின் வேதனை அதிகரித்து கொண்டே இருந்தது.

வெளியில் இருந்து பெரிய சத்தம் போட்டு கொண்டு, ‍”இதுக்கு தானா உனக்கு கல்யாணம் பண்ணி வச்சோம். அய்யோ ” என்று அழுது கொண்டே உள்ளே வந்தாள் தேவிகாவின் தாய்.

“அம்மாமாமாமா. அவரு என்னை விட்டு போயிட்டாருமா. நானும் போறேன்மா” என்று கதறினாள் தேவி

இருள் சூழ ஊரார் கலைந்து செல்ல தொடங்கினர்‌. உறவினர்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். மது அருந்துதல் துக்க வீட்டில் சகஜம் தானே. அப்போதும் சலசலப்பு ஏற்பட்டது.

ஆனால் தேவிகாவின் அழுகையும் பார்வதியின் அழுகையும் மட்டும் குறையவில்லை.

அப்படியே அந்த இரவு முடிந்தது.
நேற்று ஊரே வேலைக்கு சென்று கொண்டிருந்தது. இன்று அனைவருக்கும் சங்கரின் வீட்டில்.

பக்கத்து ஊரார், பட்டாளத்துக்கு தன் மகனை அனுப்பியவர்கள், பட்டாளத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் பலர் வந்தனர். லீவுக்கு வந்தவர்களும் வந்திருந்தனர்.

காலை ஏழு மணிக்கு தீடீரென ஒரு சப்தம் கேட்டது. பெரிய வண்டி வரும் சப்தம்.

ஆம்.இராணுவ வாகனம். ஊரை நோக்கி வந்தது. ஊரின் தலைவாசலுக்கு அனைவருக்கும் ஓடி வந்தனர்.

வேகமாக இறங்கிய இராணுவ வீரர்கள் ஊராரை வாகனங்களில் ஏற தடுத்தனர்.

“அய்யோ இதுக்கு தானா உன்ன பெத்தேன்.உன்ன இப்படி ஊருக்குள்ள வர்ரதை பாக்க தானா நான் உயிரோட இருக்கேன்” என்று தலையில் அடித்து கொண்டு கூறினார் கருப்பையா.

ஊராரின் அழுகை. உறவினர்கள் கதறல் ஊரின் மறுமுனை வரை ஒலித்தது.

வண்டியின் கதவை திறக்க பலர் முற்பட்டனர். ஆனால் இராணுவ வீரர்கள் விடவில்லை. அப்போது சலசலப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கு உயர் இராணுவ அதிகாரி ஒருவர், ” தயவுசெய்து யாரும் சண்டை போடாதீங்க. சங்கர் இராணுவ வீரர். அவருக்கு இராணுவ மரியாதையுடன் அவரை இங்கு அழைத்து வந்து இருக்கோம். அப்படி தான் அவரின் உடலும் அவர் வீட்டில் கொண்டு வந்து வைக்கப்படும். அதனால யாரும் வண்டியில ஏற முயற்சி செய்ய வேண்டாம்” என்று கேட்டு கொண்டார்.

ஊராரும் அவரின் பேச்சுக்காக மரியாதை கொடுக்கவில்லை. சங்கரின் தியாகத்துக்காக அமைதிகாத்தனர்.

வாகனத்தின் கதவு திறக்கப்பட்டது. மீண்டும் அழுகையின் சத்தம் அதிகரித்தது. வண்டியில் இருந்து முதலில் இறங்கினான் ரவி.

சங்கரின் உடலை தாங்கி எட்டு வீரர்கள் இராணுவ முறையில் நடக்க, மற்றவர்கள் பின் தொடர்ந்தனர். அழுகை சத்தம் அதிகரித்தது கொண்டே இருந்தது.

தான் ஓடி விளையாடி, ரசித்து வாழ்ந்த ஊரில் பலரை அழ வைத்துவிட்டு நுழைகிறான் சங்கர்.

ஊர் பெண்கள இராணுவ வீரர்கள் முன் வந்து நெஞ்சில் அடித்து அழுதனர்.

கருப்பையாவை இருவர் தாங்கி பிடித்து, அழைத்து வருகின்றனர்.

இறந்த பின்னும் இராணுவ உடையில் மிடுக்காக தெரிந்தான் சங்கர்.

வீட்டின் அருகே அவன் வரும் வேலையில்,

“அய்யோ சங்கரு. உன்னை இப்படி பாக்க தானா பத்து மாசம் பெத்து வளத்தேன். இதுக்கா இந்த பாவி வயித்துல வந்து பொறந்த” என்று தன் வயிற்றை அடித்து அழுதாள்.

சங்கரின் உடல் வருவதை பார்த்த தேவிகா மீண்டும் மூர்ச்சையானாள்.
தன் ஆயுள் முழுவதும் உடன் வருவேன் என்று கரம் பிடித்தவன் இன்று கைவிட்டானே என்ற வலி அவளை மூர்ச்சையாக்கியது.

சங்கரின் உடல் அவன் வீட்டின் முன்பு பந்தலுக்கு கீழே வைக்கப்பட்டது. இராணுவ வீரர்கள் ஒரு ஓரத்தில் சென்று நின்றனர்.

மயக்கம் தெளிந்த தேவிகா சங்கரின் தலைமாட்டில் அமர வைக்கப்பட்டாள்.அவன் கால் பகுதியை தவிர்த்து, மற்ற பகுதிகளை பெண்கள் சூழ்ந்து அழுதனர்.

“நான் செஞ்ச பாவமோ என்னன்னு தெரியல. இப்படி எம்புள்ளைய பாக்க வஞ்சுட்டானே” என்று அழுதார் கருப்பையா. அவரின் சகோதரர்களும் கண்ணீருடன் கருப்பையாவை அணைத்தனர்.

“சாமி எந்திரிடா. ஊருக்கு வரதா சொன்னீயே.இப்படி வரதா சொல்லலையேடா” என்று பார்வதி அழுதாள்.

“என்னங்க எந்திரிச்சு என்னை பாருங்க. நான் உங்களை மச்சானு கூப்ட புடிக்குமுனு சொல்வீங்களே. எந்திரிங்க மச்சா. பாருங்க மச்சா. கடைசி வரைக்கும் இருப்பேன் சொல்வீங்களே. இப்போ என்னைய மட்டும் தனியா விட்டுட்டு போயிடீங்களே” என்று அவன் தலையை பிடித்து கொண்டு கதறினாள் தேவி.

“அக்கா அக்கானு சுத்தி சுத்தி வருவியே. உம்புள்ளைக்கு தாய்மாமன் நான் இருக்கேன். நீ எதுக்கு கவலைபடுறனு சொல்லி கேட்பியே. இனி யாருடா இருக்கா எம்புள்ளைக்கு” என்று அவள் குறையை கூறி அழுதாள் சங்கரின் அக்கா.

சங்கரின் நண்பர்கள் அவன் பிரிவை தாங்காமல் அழுதனர். ஊரார் வருத்தமாக நின்று இருந்தனர்.

தெரிந்தவர்கள் அவன் உடலுக்கு மாலை போட்டு அஞ்சலி செலுத்தினர்.

சுற்றி நின்ற இராணுவ வீரர்களும் மிகுந்த வருத்தத்துடன் இருந்தனர்.

ஆனால் அங்கும் பொறாமை இருக்கவே செய்தது.

ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளின் மனதில் ஒரு பட்டாளத்தான் இறந்துவிட்டான் என்ற வலி இருந்தாலும், சங்கரை காணும் போது அவர்களுக்கு கிடைக்காத அந்த விருது அவனுக்கு கிடைத்தது என்று எண்ணி பெருமையும், வருத்தமும் பொறாமையும் இருந்தது.

ரவி இராணுவ உடையில் இருந்தாலும் அங்கு பலர் இருந்தாலும் தன் உயிர் நண்பனை பிணமாக கிடப்பதை அவனால் காண முடியவில்லை. அவன் நினைவுகளை நினைத்து கதறிக்கொண்டு இருந்தான்.

கிராமபுற இறப்பு ஆயிற்றே. ஒப்பாரி பாடலில் ஊரே கலங்கி இருந்தது.

ரவியை பார்த்த தேவிகா, “கூடவே இருந்து பாத்துப்பீங்களே அண்ணா. அவர விட்டு எங்க போனீங்க. ரவி இருக்கும் போது எனக்கு ஒன்னும் ஆகாது. அவன் இருக்கான் என்னை நல்லா பாத்துக்கனு சொன்னாரே. அவர சுடும் போது எங்க போனிங்க” என்று அவனை கேட்டு அழுதாள்.

“கூட இருந்தும் என்னோட நண்பன காப்பத முடியாத பாவி ஆயிட்டேன்மா” என்று அழுதான் ரவி.

மொத்த கூட்டமும் சங்கரின் இழப்பை எண்ணி சோகமாய் இருந்தது.

இந்த கூட்டத்திலும் துவக்கத்திலும் ஒருவர் மட்டும் ஆனந்தமாக இருந்தார்.

சங்கரின் குழந்தை தான் அந்த ஆனந்தமாவர். என்ன நடக்கிறது என்று தெரியாமல் தன் கைகளையும் கால்களையும் ஆட்டிக்கொண்டு முகத்தில் புன்னகையுடன் இருந்தது அந்த குழந்தை.

யாரு அழுதாலும் எழுந்து கேட்க முடியாத நிலையில் தான் சங்கர் இருந்தான்.ஆனால் அவன் உடல் மட்டும் அனைவரிடமும் ஏதோ சொல்ல முயன்றது.

கருப்பையாவுக்கும் பார்வதிக்கும் திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் கழித்து பிறந்தவள் தான் மல்லிகா. ஆண் குழந்தை வேண்டும் என்று கோவில் கோவிலாக சென்று வேண்டி பிறந்தவன் தான் சங்கர்.

படிக்கும் காலத்தில் அருமையாக படித்தவன். சிறு வயதிலேயே திறமையாக படித்தவன். ஆனால் பதினான்கு வயதில் எல்லாருக்கும் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் அவனுக்கும் ஏற்பட்டது. படிப்பில் நாட்டம் குறைந்தது.

எப்படியோ பன்னிரண்டு வரை முடித்துவிட்டான். மேலே படிக்க வைக்க வசதியில்லை கருப்பையாவுக்கு.

ஊரில் சண்டை போட்டுக்கொண்டு, பெரியவர்களை மதிக்காமல், வேலைக்கும் செல்லாமல் ஊரை சுற்றி கொண்டு இருந்தான் சங்கர்.உடன் தனது நண்பன் ரவியும்.

“எலே கருப்பையா. உம்மவன் வாய்க்கா மேட்டுல பொண்ணுங்க கிட்ட வம்பிலுத்துட்டு இருக்கான். இன்னொரு தடவ சொல்ல மாட்டோம். பாத்து புள்ளைய பத்திரம் பண்ணிக” என்று சிலர் எச்சரிக்கை செய்தனர்.

“அம்மா சீக்கரம் சோறு போடுமா.வெளியே போகனும்” என்று சொல்லி வீட்டினுள் வந்தவனை அடித்து துவைத்தார் கருப்பையா.

“ஏன்டா எனக்குனு வந்து பொறந்த. செத்து ஒழி. என் மானத்தை வாங்க வந்த நாயி நீ” என்று அடித்தார் கருப்பையா.

பார்வதியோ, “அடிக்காதீங்க. நமக்கு அவன் கடவுள் கொடுத்த வரம், ஏதோ அவன் நேரம் சரியில்ல. சொன்னா புரிச்சுப்பான்” என்று சொல்லி கணவனை தடுத்தாள்.

ரவி வீட்டுலயும் இதே நிலைமை தான்.

இப்படியே சில நாட்கள் சென்றது.

மீண்டும் பிரச்சினை பெரிதாகியது. ரவியின் அப்பாவும் கருப்பையாவும் சேர்ந்து இருவரையும் திட்டிக்கொண்டு இருந்தனர்.

“இவனுகனால ஊர்ல நம்ம மானமே போச்சு கருப்பையா. இவனுகல பெத்ததுட்டு எவனெவனோ திட்டுறான் நம்மல” என்றார் ரவியின் அப்பா.

அப்போது சங்கர், “நாளைக்கு டவுன்ல பட்டாளத்துக்கு ஆள் எடுக்கறாங்க. நாங்க போறோம் அங்க” என்று சொல்ல

“ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து ஊரு பேரையே கெடுத்தீங்க. இப்ப நாட்டு பேரையும் கெடுத்துராதீங்க” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றனர்.

அப்பாவிடம் திட்டு வாங்காமல் இருக்க பட்டாளத்துக்கு சென்றவர்கள் தான் ரவியும் சங்கரும்.

இராணுவத்தில் சேர்ந்த இரண்டு வருடத்தில் சங்கருக்கு திருமணம் ஆனது. தேவிகாவின் கரம் பிடித்த சங்கரின் நாட்கள் இனிமையானவை. அவர்களின் காதலின் சாட்சியே அந்த குழந்தை.

விடுமுறைக்கு வீட்டிற்கு வந்துவிட்டு திருப்பிய சில நாட்களில் தேவிகா கருவுற்ற விசயத்தை தபால் மூலமே அறிந்தவன் சங்கர். மீண்டும் தன் மனைவியை பார்க்க வந்தான் அவள் எட்டு மாதமாக இருக்கும்.

அப்போது தேவிகா கேட்டாள், “என்னங்க எனக்கு பிரசவம் நடக்கும் போது நீங்க கூட இருக்கனும்” என்று,

“எனக்கு 15 நாள் தான் லீவு. பிரசவம் நடக்கறப்போ இருக்கறது கஷ்டம். ஆனா சீக்கிரம் என் மகனை பார்க்க வந்துடுவேன்” என்று சொல்லிவிட்டு அவள் வயிற்றில் முத்தமிட்டான் சங்கர்.

பட்டாளத்துக்கு கிளம்பும் போது, தன் மனைவி வயிற்றை தொட்டு, “செல்லம் அப்பா இப்போ ஊருக்கு போறேன். சீக்கிரம் வந்து உங்களை பாக்கறேன். அம்மாக்கு அதிகம் கஷ்டத்த கொடுக்காம நல்லபடியா வெளிய வரனும். சரியா?” என்று சொல்லி விட்டு மீண்டும் முத்தம் கொடுத்தான் தன் மகனுக்கு.

அவன் கடைசியாக கொடுத்த முத்தம் அதுவே.

அப்போது வீட்டை விட்டு சென்றவன் இன்று தான் வந்திருக்கிறான் தன் மகனை காண முடியாத நிலையில்.

அப்போது அவன் உடல் சொல்ல நினைத்தது,

“அப்பா அழாதீங்க. என்னால நீங்க ரொம்ப கஷ்டப்பட்டுடீங்க. என்னால இந்த ஊருக்கு பிரச்சினை, அவமானமுனு சொன்னவங்க கிட்ட சொல்லுங்க, என் மகன் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தான் என்று”. ஆனால் அந்த சங்கரின் உடல் பேசும் வார்த்தைகள் யாருக்கும் புரியாது.

“அம்மா என்னை எப்பவும் விட்டு கொடுக்காம பேசுவ நீ. நான் எப்பவும் நல்லா இருக்கும்னு சொல்லுவ. கடைசி காலத்தில உன்னையும் அப்பாவையும் நல்லா பாத்துகனுமுனு சொல்லுவ. என்னை மன்னிச்சிடும்மா” என்று தன் தலைமாட்டில் அழுத அம்மா நோக்கி சொன்னது அந்த உடல்.

“அக்கா உனக்கும் உம்புள்ளைக்கும் நான் இல்லைனு கவலபடாத. எம்புள்ள இருக்கான். தைரியமா இருக்கா” என்றது.

“டேய் ரவி‌. சின்ன வயசுல இருந்து ஒன்னா இருந்தோம். ஒன்னா படிச்சோம். பட்டாளத்துக்கு போனோம். ஆனா உன்ன விட்டுட்டு இப்போ போயிட்டேன். என்மேல கோவப்படாதடா. என்னால தான் ரொம்ப நாள் நாட்டுக்கு வேலை செய்ய முடியல. நீ செய்யனும்டா” என்றது சங்கரின் பிரேதம், தன் ஆருயிர் நண்பன் அழுது கொண்டு இருக்கும் போது.

“தேவிகா. என்னோட வாழ்க்கைய அழகா மாத்துன. பட்டாளத்துல உன்னோட நினைவோட தான் இருந்தேன்‌. உன்னோட பிரசவ வலிய நான் அங்க அனுபவிச்சேன். உன்ன பாக்கனும்னு வர ஆசைப்பட்டேன். ஆனா இப்படி வருவனு எதிர்பார்க்கல” என்று சொல்ல நினைத்தான் சங்கர்,

“என்னையும் உங்க கூட கூட்டிட்டு போங்க மச்சா. நீங்க இல்லாம என்னால வாழ முடியாது. இல்லனா எந்திரிச்சு வாங்க மச்சா” என்று கண்கள் வீங்கி கருவளையம் உண்டாக அவன் மார்பில் சாய்ந்து கொண்டு அழுது கொண்டிருந்த தேவிகாவிடம்.

ஊருக்கு அவமானம், தொல்லை என்று சொன்ன பலரும் தலைகுனிந்து நின்றனர் அவன் உடல் முன்பு.

இறந்த கிடக்கும் அவன் உடல், ஊரார் வெட்கப்பட வைத்ததை எண்ணி கர்வத்துடனே இருந்தது.

சங்கரின் உடல் தன் குழந்தையை தேடியது. அப்போது நடந்த சம்பவம் எதர்ச்சையாக நடந்த விசயம் போல தெரியவில்லை.

அவன் உடல் தேடிய நேரத்தில், தன் குழந்தையை கையில் வைத்திருந்த பெண்மணி ஒருவர், சங்கரின் மார்பின் மீது படுக்க வைத்தார்.

தன் தந்தையின் மார்பு சூட்டை உணர்ந்து கொண்டது அந்த குழந்தை. அந்த நிமிடத்தில் ஒரு புன்னகை.

கைகளையும் கால்களையும் ஆட்டிக்கொண்டு சிரிப்புடன் அவன் மார்பில் விளையாடியதை கண்டு அங்கு கூடியிருந்த அனைவருமே ஒரு நொடி அமைதியாகினர்.

அதுவரை நீரை பார்க்காத கண்களும், கண்கள் நிரம்பாத கண்களும் கலங்கின. அனைவருக்கும் தொண்டை அடைத்தது.

பல இறப்புகளை கண்டுவிட்டு கண்ணீரை மறந்த இராணுவ உயர் அதிகாரியின் கண்களும் தாரை தாரையாக நீரை வார்த்தது.

மெதுவாக அந்த குழந்தை குப்புற விழுந்து, தன் தந்தையின் முகம் பார்த்து, “அப்பா. சொன்னா மாதிரியே சீக்கிரம் வந்துட்ட‌. நீ சொன்ன மாதிரி அம்மாவுக்கு வலி கம்மியா தான் கொடுத்தேன்” என்று சொல்லுவது சிரித்தது.

இதைவிட சங்கரின் உடலுக்கு வேறென்ன வேண்டும். தன் குழந்தையை தன் மார்பில் சுமக்க தானே ஆசைப்பட்டான் சங்கர். இப்போது கிடைத்துவிட்டது அந்த சுகம். ஆனால் அதை உணரும் நிலையில் தான் சங்கரின் உடல் இல்லை.

“பெத்த புள்ளைய இப்படி பாக்க நான் என்ன பாவம் பண்ணினனோ தெரியல. தம்புள்ளய பார்க்க முடியாம போக அவன் என்ன பண்ணினானு புரியல. இதெல்லாம் பார்த்துட்டு இன்னும் இந்த உசுரு இருக்குதே” என்று தலையிலும் மார்பிலும் அடித்து கொண்டு அழுதார் கருப்பையா.

“என்னங்க எந்திரிச்சு நம்ம புள்ளைய ஒரு முறை பாருங்க. ஊருக்கு போகும் போது என் வயித்துல முத்தம் கொடுத்துட்டு போனீங்களே. உங்க பையன் இப்போ உங்க நெஞ்சில இருக்கானே. தூக்கி கொஞ்சுங்க. கண்ணை தெறந்து பாருங்க மச்சா” என்று திக்கி திக்கி அழுதாள் தேவிகா.

ஆனால் சங்கரின் உடல் மட்டும் தான் அசையவில்லையே தவிர,அவனது உயிர் தன் குழந்தையை கொஞ்சி விளையாடிக்கொண்டிருந்தது.

அப்போது,

ஊர் பெரியவர், “கருப்பையா நேரமாச்சு. பையன தூக்கலாம்பா” என்று கூற,

“நா விடமாட்டேன். என் புருஷன இந்த எடத்துல இருந்து கொண்டு போக விடமாட்டேன்” என்று கத்திக்கொண்டு அவனை இறுக அணைத்தாள் தேவிகா.

கடைசிவரை மகனின் காலடியில் கிடக்க நினைத்த பார்வதி, இப்போது மகனின் காலை பிடித்துக்கொண்டாள்.

சங்கரின் உடலை பிடித்து கொண்டவர்கள் நிர்பந்தமாக விலக்கப்பட்டனர்.

உறவினர்கள் உடலை தூக்கினார்கள். முன் வரிசையில் ரவி தாங்கினான். அக்னி சட்டியை கையில் ஏந்த வைத்து நடக்க வைத்தனர்.

பெண்கள் கதறி அழ, தன் உடலுக்கும் ஊருக்கும் உறவுக்கும் உள்ள தொடர்புகளை முடிக்க பயணப்பட்டான் சங்கர்.

அவன் ரசித்து மகிழ்ந்த ஊரின் மரங்கள், வீதிகள் குளம், வாய்க்கால், வயல்வெளி என்று அனைத்தும் அவன் உடலை வழியனுப்பியது.

இடுகாட்டில் அடுக்கி வைக்கப்பட்ட சிதையின் மேல் படுக்க வைக்கப்பட்டது சங்கரின் உடல்.

அப்போது தன் மேலதிகாரி சங்கரின் உடலுக்கு சல்யூட் அடித்தார்.

“என்னை திட்டியவர். சில நேரங்களில் அடித்தவர். தினமும் நான் சல்யூட் அடித்த எனது உயர் அதிகாரி. இன்று எனக்கும் சல்யூட் அடிக்கிறார். எனக்கு கிடைத்த விருதை எண்ணி பெருமை கொள்கிறார்” என்று கர்வம் கொண்டது சங்கரின் உடல்.

சக வீரர்கள் அவனது உடலுக்கு ராணுவ முறையில் இறுதி வணக்கம் செலுத்தினர்.
ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களும் இறுதி மரியாதை செய்தனர்.

ஒரு இராணுவ வீரரின் இறுதி மரியாதையை முதல் முறையாக அந்த ஊர் மக்கள் பார்க்கின்றனர்.

அப்போது கர்வம் கொள்கிறது சங்கரின் உடல்.

சாமனியனுக்கு கிடைக்காத விருது.

கோடி கோடியாய் கொடுத்தாலும் கிடைக்காத விருது.

விமர்சனங்கள் செய்ய முடியாத விருது.

அனைத்து இராணுவ வீரனும் ஏங்கும் விருது.

இன்று சங்கருக்கும் கிடைத்தது.

ஆம் கூடி நின்ற இராணுவ வீரர்களை ஏங்க வைத்த அந்த விருது.

இராணுவ அதிகாரி சங்கரின் முன் நின்று அவன் இராணுவ உடையின் மேல் போர்த்தப்பட்ட நம் நாட்டின் தேசிய கொடியை எடுத்தார்.

இவ்வளவு நேரம் தன் உடலில் இந்த விருதை ஏந்தியபடி தன் தந்தையையும் குடும்பத்தையும் பெருமைபட செய்தான் சங்கர். ஆனால் அதன் பெருமை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

ஊராருக்கு தேசிய கொடி போர்த்தப்பட்டது வியப்பாக தான் இருந்தது அவன் உடல் வரும்பொழுது.

தேசிய கொடி மடிக்கப்பட்டு கருப்பையாவின் கைகளில் கொடுக்கப்பட்டது.

சங்கரின் உடல் தீயிற்கு அர்ப்பணிக்க தயாரானது.

தனக்கு கொள்ளிப்போட மகன் வேண்டும் என்று நினைத்து, கடவுளிடம் வேண்டி பெற்ற மகனுக்கு கொள்ளி போட எந்த தந்தையின் மனம் தான் ஏற்றுக் கொள்ளும்.

கருப்பையா கொள்ளி வைத்தார் கதறிக்கொண்டே.

அப்போது இருபத்தியொரு குண்டு முழங்க சங்கரின் உடலுக்கு இராணுவ மரியாதை செலுத்தியது.

நாட்டுக்காக தன்னுயிரை தியாகம் செய்தவன் உடல் சாம்பலாக தயாராகி கொண்டிருந்தது.

அனைவரும் வீட்டை பார்த்து நடக்க ஆரம்பித்தனர். புகையோ வானத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.

கருப்பையா அழுது கொண்டே நடக்கும் வேளையில் அவரின் கைகள் மகன் பெற்ற உயரிய விருதான நாட்டின் தேசிய கொடியை மார்போடு அணைத்தபடியே இருந்தது.

அப்போது அங்கிருந்த சில இளைஞர்கள் மனதில் அந்த விருதை தானும் வாங்க வேண்டும் என்ற விதை விதைக்கப்பட்டது.

                             – சேதுபதி விசுவநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

அமரர் கல்கியின் ‘மாஸ்டர் மெதுவடை’அமரர் கல்கியின் ‘மாஸ்டர் மெதுவடை’

1        அவருடைய உண்மைப் பெயர் அப்பாஸாமி என்பது அநேகம் பேருக்குத் தெரியாது. டிராமா நோட்டிஸுகளிலெல்லாம்,      “மாஸ்டர் மெதுவடை தோன்றுகிறார், உலகமெங்கும் புகழ்பெற்ற தென்னிந்திய ஹாஸ்ய நடிகர் ஜீரணமணி…” என்றுதான் வெளியிட்டு வந்தார்கள். இப்போது ஷுட் செய்யப்பட்டு வந்த தமிழ் டாக்கியின்

ஸ்டாம்பு ஆல்பம் : சுந்தர ராமசாமிஸ்டாம்பு ஆல்பம் : சுந்தர ராமசாமி

ஸ்டாம்பு ஆல்பம் : சுந்தர ராமசாமி (தமிழ்க் கதை) தமிழில் – வல்லிக்கண்ணன்   ராஜப்பாவின் புகழ் மங்கிப்போய்விட்டது. மூன்று நாட்களாக நாகராஜனைச் சுற்றிக் கூட்டம், நாகராஜனுக்குக் கர்வம் வந்து விட்டது என்று ராஜப்பா எல்லாப் பையன்களிடமும் சொன்னான். பையன்கள் அதை

திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்

நாங்கள் அனைவரும் மைசூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் நண்பர்கள். எங்கள் தோழன் விமேஷுக்குத் திருமணம் நிச்சயமாகியிருந்தது. விமேஷ் எங்களைக் கண்டிப்பாக வருமாறு அழைத்துவிட்டு ஒரு வாரத்திற்கு முன்னரே அவனது ஊருக்கு சென்றுவிட்டான். அவன் மைசூரிலிருந்து வெகு தூரத்திலிருந்த