Tamil Madhura கதைகள்,தமிழ் க்ளாசிக் நாவல்கள்,தொடர்கள் அறிஞர் அண்ணாவின் ”குமாஸ்தாவின் பெண்” 03

அறிஞர் அண்ணாவின் ”குமாஸ்தாவின் பெண்” 03

  • அலமுவும் எங்கள் அம்மாவும் பாலிய சிநேகிதமாம். ஆகவே, அடிக்கடி அவர்கள் வீட்டு விஷயங்களைப் பேசுவதற்குச் சந்தர்ப்பம் கிடைக்க ஆரம்பித்தது. முதலிலே அம்மாதான் ஏதாவது பேச ஆரம்பிப்பார்கள். அந்தச் சுவாரஸ்யமான பேச்சை நான் முடிக்க விடுவதில்லை. கேள்வி மேல் கேள்வி போடுவேன். அது எப்படி, இது எப்படி என்று விசாரிப்பேன்! இப்படிப் பேசிப் பேசிச் சோமசுந்தரத்தைப் பற்றிய பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.

 

  • சோமசுந்தரம் பெயருக்கேற்ற ரூபவான். தங்கமான குணம். நல்ல படிப்பு, இளமை, இவ்வளவும் ஒருங்கே பொருந்தியவன். எவள் ‘கொடுத்து வைத்திருக்கிறாளோ’ அவரது மனைவியாகி மகிழ்ச்சியோடு வாழ்க்கைக்கு எட்டாத கனியானாலும் நினைப்புக்கு எட்டாமற் போகுமா? அது போல் எனக்குச் சோமுவின் மீது எண்ணம் விழுந்தது. இத்தகைய மணாளன் கிடைத்தால் மகிழ்ச்சியோடு வாழலாம். உலகில் எதற்குப் பிறந்தோம். சந்தோஷமாக வாழ்வதற்காகத்தானே ஆனால் சுந்தரம் என்னைக் கண்டு ஆசைப்பட்டாலும் என் வறுமையைக் கண்டால் பயப்படுவார். கதைகளிலே வருவது போல், ஏழைப் பெண்ணாக இருந்தாலும் எனக்கு அவள் தான் வேண்டும் . என்று சொல்லி என்னைக் கலியாணம் செய்து கொண்டால், எவ்வளவு இன்பமான வாழ்வு எனக்குக் கிடைக்கும். எனக்கு அந்த வாழ்வு கிடைத்தால் என் தங்கை சாந்தாவுக்கு எப்படிப் பட்ட மேலான இடத்திலே வரன் தேடுவேன் தெரியுமா? எங்கள் வறுமை ஒடியே போகும். வாட்டம் தீர்ந்து விடும் – இத்தகைய எண்ணங்கள் அலைபோல் மனதில் மோதும். எப்படியோ நான் ஒரு இன்ப மாளிகையை என் மனதில் கட்டி விட்டேன்.

 

  • என் தங்கை சிறு பெண்ணாகையால் அடிக்கடி அலமு அத்தையிடம் போய்ப் பேசுவாள். தோட்டத்திற்குச் சென்று விதவிதமான மலர்களைக் கொண்டு வருவாள். அலமுவும் சாந்தாவிடம் அன்பாக இருக்கவே, இந்தத் தொடர்பு அதிகரித்துக் கொண்டே வந்தது. ஒவ்வொரு நாளும் சோமு என்னைப் பற்றி ஏதாவது பேசாதிருப்பதில்லையாம். அதை அப்படியே சாந்தா வீட்டில், ‘பிளேட் வைப்பாள். சாந்தா கூறுவதைக் கேட்க எனக்குப் பரமானந்தமாக இருக்கும். அப்பா பெருமூச்செறிவார், அம்மா ”அகிலாண்டேஸ் வரியின் கிருபை எப்படியோ, யார் கண்டார்கள்” என்று உருக்கமாகச் சொல்லுவார்கள். சாந்தா குறும்புப். பார்வையுடன் என்னை நோக்கிச் சிரிப்பாள். அவளுடைய கன்னத்தை நான் நோகாதபடி கிள்ளுவேன். இந்த ஆனந்தம் எங்கள் குடும்பக் கவலையைக் கூட ஒரு அளவுக்குக் குறைத்தது. பாம்பும் தேளும் நெளியும் குழியிலே விழுந்தவன் கைக்குக் கிடைத்த வேரைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறபோது, தேன் கூட்டிலிருந்து துளி தேன் சொட்ட அதைச் சுவைத்துச் சந்தோஷப்பட்டான் என்று கதை சொல்வார்களே அதைப் போலிருக்கிறது எனது சந்தோஷம்.

 

  • ”காந்தா, கேட்டாயோ சங்கதி? இன்னிக்கு சுந்தரம் உங்க அக்காவுக்கு ஏன் இன்னும் கலியாணம் ஆகவில்லை என்று கேட்டான்” என்று சாந்தா கூறினாள் ஒரு நாள் . நான் புன் சிரிப்பை அடக்கிக் கொண்டு ஏதோ வேலை செய்வதைப் போல் இருந்து விட்டேன். ’நீ என்ன பதில் சொன்னே’ என்று அம்மா ஆவலுடன் கேட்டார்கள்.

 

  • ”இன்னும் நல்ல இடம் கிடைக்கவில்லை, என்று சொன்னேன்” சாந்தா கூறினாள்.

 

  • ”குட்டி பிகுவோடுதான் பேசியிருக்கா” என்று அம்மா கூறிவிட்டு சிரித்துக் கொண்டே என்னைப் பார்த்தார்கள்.

 

  • ”சதா அவா ஆத்திலே உனக்கு என்னடி வேலை” என்று நான் சாந்தாவைக் கேட்டு அதட்டினேன்.

 

  • ”அது யார் வீடு? அலமு அத்தை வீட்டுக்கு நான் போகாமெ வேறே யார் போவா?” என்று கம்பீரமாகக் கேட்டாள் சாந்தா.

 

  • “அவா உன்னை அழைக்கிறாளோ தாம்பூலம் வைத்து”, என்று நான் கேலி செய்தேன்.

 

  • ”தாம்பூலம், மேளதாளம், சீர்செட்டு, வரிசை எல்லாம் வைத்து உன்னை அழைக்கப் போறாளே அலமு அத்தை. அப்போது செய்யம்மா அதிகாரம்” என்று சாந்தா பதிலுக்குக் கேலி செய்ய ஆரம்பித்தாள்.

 

  • ”வர வர நீ துஷ்டையாகிறாய்” என்று கூறிக்கொண்டே சாந்தாவைப் பிடித்திழுத்து கன்னத்தைத் திருக் எண்ணினேன். அவள் என் பிடிக்கா அகப்படுவாள்!. ஒரே ஒட்டமாக ஓடிப்போய் அலமு வீட்டிலே புகுந்து கொண்டாள். பார்க்கிறேன் நான். சாந்தா சோமுவிடம் ஏதோ பேசிக்கொண்டு விழுந்து விழுந்து சிரிக்கிறாள்.

 

  • காதல் விஷயமாக நான் பல கதைகளில் படித்திருக்கிறேன். துஷ்யந்தன் சகுந்தலையைக் கண்டகதை, நளதமயந்தி கதை , இராமச்சந்திரன் சீதாபிராட்டியார் கதை, சத்தியவான் சாவித்திரி சதை என்று பல படித்துமிருக்கிறேன். ஆனால் அவைகளிலெல்லாம், கடவுள் கை கொடுத்துதவினார் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது. அதேபோல் அபலையாகிய என் பொருட்டு அவர் செய்வாரா? அவ்வளவு அக்கறை ஆண்டவனுக்கு என்னிடம் இருந்தால் எங்கள் வறுமையை முதலில் ஒட்டி விட்டு மறு வேலை பார்க்கமாட்டாரா! அதையே செய்யாதவர் அவருக்கிருக்கிற வேறு எத்தனையோ வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு என் மீது சோமுவுக்கு அன்பு உண்டாகும்படி செய்ய முன் வரவா போகிறார் நடக்கிற விஷயமா? சோமுவுக்கும் எனக்கும் மணம் நடந்தது. கதைகளிலே கூறப்படுவது போல், கஷ்டங்கள் ஏற்பட்டால் கூடப் பொறுத்துக் கொள்ளலாம் என்று நான் எண்ணினேன்.

 

  • வறுமையின் காரணத்தால் எனக்கு உலகின் மற்றைய காட்சிகளைக் காண நேரமோ, வசதியோ கிடையாது. மன மகிழ்ச்சிக்கு வேறு மார்க்கமும் கிடையாது. செல்வான் வீட்டுப் பெண்ணாக இருந்தால். மனக் கவலை தோன்றாதபடி நாடகம், சினிமா பார்க்கலாம். நகை நட்டு போட்டுக்கொண்டு ஆனந்திக்கலாம். கிளப்புக்குப் போய் பந்தாடலாம். கடற்கரைக்குப் போய் உலாவலாம். கிராம போன் கேட்கலாம். உல்லாசத்துக்கு எத்தனையோ வழிகள் உண்டு. எனக்கோ பணமின்றிப் பெறக்கூடிய ஒரே இன்பந்தான் இருந்தது. அதுதான். சோமுவைப் பற்றிய நினைப்பு. அவரைப் பார்ப்பது. அவரைப் பற்றிப் பேசுவது அவர் விஷயமாக தங்கையோ, அம்மாவோ அப்பாவோ பேசினால் காது குளிரக் கேட்பது இதுவே எனக்கிருந்த இன்பம். இந்த இன்பம் விநாடிக்கு விநாடி வளர்ந்தது. நான் பரிபூரணமாக அவருடைய அடிமையாகி விட்டேன். சோமு மிக நல்லவர் என்று சொன்னேனே அது தவறு. என்னைக் கவர்ந்தவன் எப்படி நல்லவனாக முடியும்?

 

  • சோமுவின் மீது எனக்கு வளர்ந்து வந்த காதல் என் மனதில் ஆழமாகப் பதிய ஆரம்பித்து விட்டது. சில சமயங்களில் அவருடைய தரிசனத்திற்காக நான் ஏங்கித் தவிப்பதுண்டு. முக்கியமாக அவர் பூசை செய்யச் சென்றுவிட்டால், குறைந்தது இரண்டு மணி நேரமாகும் வாசலுக்கு வர. அதுவரை அவரைக் காண முடியாமல் நான் படும்பாட்டை அவர் எப்படி அறிவார்? காதல் பலப்பட்டது. கலக்கமும் அதிகரித்தது. நான் அவர் மீது மையல் கொண்டு என்ன பயன்? சோமு எந்தச் சீமாட்டி வீட்டுச் சிங்காரிக்குக் கணவனாகப் போகிறாரோ? என் எண்ணம் எப்படி ஈடேறும்? கடைசியில் என் கருத்து ஈடேறவில்லையானால் என் மனம் உடைந்து விடுமே, அதற்கென்ன செய்வது?

 

  • இத்தகைய கலக்கத்தினால் பல இரவுகளில் நான் அழுததுண்டு. பெரியதோர் ஆபத்தில் சிக்கிக்கொண்டதை உணர்ந்தேன். சோமுவின் மன நிலையோ எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ள மார்க்கமுமில்லை. அவர் தமது ‘பக்தி’யைக் காட்டிக்கொள்ள கட்டுக்கட்டாக விபூதி பூசிக்கொண்டு காலணா அளவுள்ள சந்தனப் பொட்டிட்டுக் கொண்டிருந்தார். என் விஷயமாக அவர் என்ன கருத்துக் கொண்டிருக்கிறார் என்பதைக் காட்ட ஒரு அடையாளம் தென்படவில்லை. பல வஸ்துக்களை அவர் பார்ப்பது போல் என்னைப் பார்த்தாரே தவிர, அவருடைய பார்வையிலே தனி விசேஷம் இருக்கவில்லை. கண்ணால் பேசியிருக்கலாம், மனம் இருந்தால். அவரே பக்தர்களின் பாடலைக் கேட்டுக் கேட்டு, மெளனமாக இருக்கும் பழக்கங்கொண்ட தேவனைப் போல், என் கண்களின் வேண்டுகோளைக் கண்டும், அசையாத உள்ளங் கொண்டவராகவே இருந்தார். நான் அப்படியொன்றும் அழகற்றவளுமல்ல!

 

  என் மனக் குறையைத் தீர்க்க யார் முன்வருவார்கள்? ஒரு சமயம் எனது ஆழ்ந்த இருதயப் பூர்வமான காதல். சோமுவுக்குத் தெரிய நேரிட்டால், என்னை மகிழ்விக்க இசைவாரோ? ஆனால் எப்படி அவரிடம் என் காதலைத் தெரிவிப்பது? மிக சாந்த குண சீலராகிய சோமு என்னைப் பற்றி தவறாகக் கருதிவிட்டால் என்ன செய்வது? வீட்டிலே அம்மா அப்பாதான் என்ன சொல்லமாட்டார்கள்? ஊராரும் ஏசுவார்களோ? நான் என்ன செய்வேன்? சோமுவை மறந்து விடவும் முடியவில்லை . மன நிலையை அவருக்குத் தெரிவிக்க மார்க்கமும் தோன்றவில்லை. நான் தத்தளித்தேன். சாந்தாவுக்கு இவைகளை நான் கூறவில்லை. ஆனால் பெருமூச்சும் கண் அடிக்கடி எதிர் வீட்டின் மீது ஏக்கத்தோடு செல்வதும், இரவில் என் தலையணை நனைந்து போவதும், என் மனதில் இருந்த எண்ணங்களைச் சாந்தாவுக்குத் தெரிவித்துவிட்டன. அவளோ சிறு பெண்! அவளால் என்ன செய்ய முடியும்!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 33ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 33

34 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் ஆதர்ஷ் திரும்பி வந்ததும் அக்சரா ஆதர்ஷ் இருவரும் சில விஷயம் பேசி முடிவுக்கு வந்தனர். மறுநாள் ஜெயேந்திரன் வீட்டிற்கு இருவரும் சென்று அனைவரும் உணவருந்தி விட்ட பின் ஆதர்ஷ் தன் முடிவைப்பற்றி கூறினான். முதலில்

ஒகே என் கள்வனின் மடியில் – 10ஒகே என் கள்வனின் மடியில் – 10

ஹாய் பிரெண்ட்ஸ், சென்ற பகுதிக்கு நீங்கள் அளித்த வரவேற்புக்கு மிக்க நன்றி. இனி வில்லனைப் பார்ப்போமா…. ஒகே என் கள்வனின் மடியில் – 10 அன்புடன், தமிழ் மதுரா