42
தனது சந்தேகத்தைக் கேட்டு விட வேண்டியதுதான் என்று நினைத்த சுஜி,
“உங்களுக்குப் பணத்தாசை கிடையாதுன்னு எனக்குத் தெரியும். ஆனா ஏன் எங்க அப்பாகிட்ட இருந்து அந்த நிலப் பத்திரத்தை வாங்குனிங்க?”
“என்ன சுஜி இப்படி கேட்டுட்ட?… எனக்கு உங்கப்பா வரதட்சணை தர வேண்டாமா?… அதுதான் வாங்கிட்டேன்.”
“நீங்க அப்படிப்பட்ட ஆளு இல்லன்னு தெரியும்.”
“எப்படிப்பட்ட ஆளு இல்ல”
“உங்க வீட்டுல மத்தவங்க எப்படியோ, உங்களுக்கு நிச்சயமா பணத்தாசை இல்ல. வரதட்சணை வாங்க மாட்டிங்க”
“எப்படி இவ்வளவு உறுதியா சொல்லுற?”.
சற்று முக வாட்டத்துடன், “இல்ல உங்களுக்குப் பணத்தாசை இருந்திருந்தா அனிதாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருந்திருப்பிங்க. அவ வேற உங்களோட படிச்சு உங்க துறைலையே இருக்கா. உங்களுக்கு நல்ல வாழ்க்கையா இருந்திருக்கும்.”
“பைத்தியம். நல்ல வாழ்க்கைக்குத் தேவை மனசு முழுக்க காதலும் அன்பும்தான். அந்த காதலே தன்னோட துணையோட வர சின்ன சின்ன விரிசல்களை பெவிகால் போட்டு ஒட்டிடும். அப்பறம் என்ன சொன்ன? பணத்தாசை இல்லைன்னா… அம்மா தாயே இப்படி எல்லாம் தப்பு தப்பா நெனைக்காதே. நான் உன்னைக் கல்யாணம் பண்ணிகிட்டதுல ஒரு சுயநலமும் இருக்கு. என்னன்னு கேளேன். “
“என்ன?”
“நானோ ITல இருக்கேன். ஒரு வேள லேஆஃப் ஆயிட்டா, நீ கண்டிப்பா Bayareaல, El Camino realல சுஜாதா பவன்னு ஒரு ஹோட்டல் ஆரம்பிச்சாவது என்னைக் கண்கலங்காம பாத்துக்குவ. சமையல நீ பாத்துகிட்டா, கல்லாவ நான் பாத்துக்குவேன். தாலி கட்டுனதால மூணு வேளையும் இட்லி தோசைக்கு பஞ்சம் இல்ல. sunnyvale மக்கள் சாம்பாரும், Cupertino மக்கள் ஒரு வாய் காபியும் தர மாட்டாங்களா?. நம்ம பிளான் எப்பூடி?” என்று நகைச்சுவையாக சொல்லி அவளை சிரிக்க வைத்தான்.
“பேச்ச மாத்தாதிங்க அத்தான். எதுனால பத்திரத்த வாங்குனிங்க?”
“உனக்காகத்தான் சுஜி”
“எனக்காகவா”
“ஆமா சுஜி நீ எங்க வீட்டுக்கு வரும் போது ஒண்ணும் கொண்டு வரலன்னு பேச்சு வரக்கூடாதில்ல. அது உனக்கும் உன் அப்பாவுக்கும் ஏதாவது மரியாதை குறைவு ஏற்பட வழி செஞ்சுட்டா… எங்க அம்மா, அப்பா, தங்கச்சி, அண்ணி யாரும் உன்னைக் குறைவா நெனச்சுடக் கூடாதுன்னு தான் வாங்கினேன். இப்ப யாரும் ஒண்ணும் சொல்லலன்னாலும் வருங்காலத்துல அப்படி ஒரு பேச்சு வந்துட்டா? உன்னைய இனிமே யாரும் குறைவா நடத்துற சுழ்நிலைய அனுமதிக்க மாட்டேன்”.
தனக்காக அவன் கெட்ட பேர் வாங்கினாலும் பரவாயில்லை என்று எண்ணி செய்தது சுஜியை அசைத்து விட்டது. ரோஸிடம் தான் வருத்தப்பட்டதற்கு இவ்வளவு சீக்கிரம் விடிவு வரும் என்று சுஜி நினைக்கவே இல்லை.
“ரொம்ப தேங்க்ஸ் மது”
“அப்பா கோவம் போய்டுச்சுன்னு நினைக்கிறேன். மாதவன் மதுவாச்சே… கவலைப்படாதே, அதுக்கு ஈடா எதாவது உங்க அப்பாவுக்குச் செஞ்சுடுவேன்”
விமானம் கிளம்பி நீண்ட நேரம் ஆயிருந்ததால், உணவு வந்தது. அனைவரும் உணவினை உண்ட பின் உறங்க ஆரம்பித்தனர். இருவரைத் தவிர.
“அப்பறம் இன்னொரு கேள்வி கேட்கணும்”
“ஐயோ, கேள்வியின் நாயகியே… கேளு ஆனா பதில் வேணும்னா என் பக்கத்துல உட்காரணும்”.
தன் இருவருக்கும் இடையே இருந்த தடுப்பினை எடுத்தான். சுஜியும் மறுக்காமல் நெருங்கி அமர்ந்தாள். தன் கைப்பையில் இருந்து அந்தக் கடிதத்தை நீட்டிய சுஜி,
“என்னத்தான் இது? நான் நன்றி சொல்லி எழுதுன கடிதம். எனக்கு படிக்க பண உதவி பண்ணவருக்கு. மூர்த்தி மாமா கிட்ட நான் கொடுத்த கடிதம் உங்க கிட்ட எப்படி வந்தது?”
மாதவன் பதில் பேசாமல் முதன் முறையாக சுஜியிடம் மௌனம் சாதிக்க,
“நான் சொல்லட்டுமா… என்னைய ஸ்காலர்ஷிப்ல படிக்குறதா நம்பவச்சுட்டு, நீங்க யாருக்கும் தெரியாம மூர்த்தி மாமா மூலமா பீஸ் கட்டி இருக்கீங்க. உங்க அப்பாவுக்கு இது தெரிஞ்சா என்னாகும்? என்னோட அப்பா எப்படி இதுக்கு சம்மதிச்சார்?”
“நோ சுஜி. அவங்கள ஒண்ணும் சொல்லாத. இந்த விஷயம் எனக்கும் மூர்த்தி அங்கிளுக்கும் மட்டும் தான் தெரியும். எங்கப்பா ஒண்ணும் சொல்ல முடியாது. ஏன்னா நான் என் சம்பளத்துல இருந்துதான் உனக்கு பணம் கட்டினேன்”
“இத முன்னாடியே என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல”
இல்லை என்று தலையை அசைத்தவன், “இதை யாருக்கும் சொல்லனும்னு நான் நெனைக்கல. ஏன் உனக்குக் கூட தெரிய வேண்டாம்னு நெனச்சேன். நம்ம கல்யாணம் நடக்க நீ சம்மதிக்கலேன்னா கூட இத சொல்லி இருக்க மாட்டேன். நம்ம கல்யாணம் அன்பினால நடக்குறதா இருக்கணும் சுஜி. இத காமிச்சு பேரம் பேசின மாதிரி இருக்கக் கூடாது. அதுக்கும் மேல இது உன் படிப்ப கெடுத்ததுக்கு ஒரு வகைல பிரயசித்தம்னு வச்சுக்கோயேன்.. நல்லா மார்க் வாங்கின நீ காலேஜ் கூட போக கஷ்டப்பட்டது என்னால தானே?”
“இல்லைத்தான் நான் இதைத்தான் படிக்கணும். இதை படிச்சாத்தான் என் லைப் நல்லா இருக்கும்னு இருந்திருக்கு. நல்ல கணவனைப் போல, நல்ல படிப்பும் ஒரு வரம் தான். இந்தப் படிப்புக்கு சேர்ந்தப்ப எப்படியோ. இப்ப இந்தத் துறைய விட வேற துறைல போனா இந்த அளவு ஆத்மதிருப்தி இருந்திருக்குமான்னு சந்தேகம் தான். அப்பறம் அதிதில மட்டும் படிக்காட்டி இப்படி வெளிநாட்டுக்குப் போய் படிக்க முடியுமா? அதுனால நடந்தது எல்லாம் நன்மைக்குத்தான்”
மாதவனின் அன்பு அவளைப் பிரமிக்க செய்தது. “மது, மது அத்தான், என் மேல எப்படி இவ்வளவு லவ் உங்களுக்கு. ஒரு சராசரியான பொண்ணுதான் நான். எப்ப என்னைய லவ் பண்ண ஆரம்பிச்சிங்க. ப்ளீஸ் சொல்லுங்களேன் தெரிஞ்சுக்கணும் போல இருக்கு”
துரையின் குரலில் கேலியாக, “சுசாத்தா, சுசாத்தா. எனக்கு உன்ன மாதிரி ஒரு சிவத்த புள்ளையத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ரொம்ப நாளா ஆச. அப்பத்தான் நல்ல நல்ல புள்ளங்களா பொறக்குமாம். நம்ம கோடங்கி சொல்லிப்புட்டான்”
சுஜி விழுந்து விழுந்து சிரிக்க, மாதவனுக்கோ ஆத்திரம். “இப்ப சிரி. அன்னைக்கு ஒரே ஆத்திரம். அந்த டம்ளர தூக்கிப் போட்ட மாதிரி அவன தூக்கிப் போடணும்னு. ஆனா முடியல. அவனால ஒரே ஒரு நன்மை அதுனாலதான் விட்டு வச்சேன்”
“அது என்ன நன்மை?”
“துரை அப்படி பேசினவுடனே தான் பளிச்சுன்னு எனக்குப் புரிஞ்சது. அவன் மட்டும் இல்ல, வேற யாரும் உன்னைய பாக்குறது எனக்குப் பிடிக்கலன்னு. ராகேஷ உன்கூட நகை கடைல பாத்துட்டு ஓடி வந்தது நான் நெனச்ச மாதிரி சொந்தக்கார பொண்ணுன்னு அக்கறைல இல்ல. உன் மேல இருக்குற லவ்வுனாலதான்னு”
“அப்ப நகை கடைல பாத்ததுக்கு அப்பறமாத் தான் லவ் பண்ண ஆரம்பிச்சிங்களா?”
“தெரியல கண்ணம்மா. உன்னைய சின்ன வயசுல இருந்தே எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா எப்ப என் காதலியா மனசுக்குள்ள புகுந்தேன்னுதான் தெரியல?”
“புகுந்தேனா?”
“முறைப்படி வந்திருந்தென்ன நுழைஞ்சேன்னு சொல்லலாம் ஆனா எனக்கே தெரியாம காத்து மாதிரி என் மனசுல புகுந்துட்ட. எப்ப தெரியுமா அத கண்டு பிடிச்சேன். துரை உன்ன பொண்ணு பார்க்க வந்தப்ப தான்.”
முதல்ல இருந்து சொல்லுறேன் ஆனா இனிமே இந்த விஷயம் பத்தி நாம பேசக்கூடாது சரியான்னு கேட்டு சுஜியிடம் உறுதிமொழி வாங்கி கொண்டான்.
“உனக்கே தெரியும் அனிதாவுக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணி வைக்க என்னோட அம்மா அப்பாவுக்கு ஆசைன்னு. கொலுசு விஷயத்துக்கு அப்பறம் அனிதா மேல கோவமா பேசாம இருந்தேன். இதை அனிதா தப்பா அர்த்தம் பண்ணிட்டு, உன் மேல எனக்கு ஆசை போல இருக்கு, இந்தக் கல்யாணம் நடக்க ஒரே வழி, உனக்கு கல்யாணம் பண்ணி வைக்குறது தான்னு நெனச்சுட்டு, நாகரத்தினம் அத்தைகிட்ட பணம் கொடுத்து இருக்கா. உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க. அத்தைக்கும் துரைக்கும் வேற பணம் கொடுக்கல், வாங்கல் இருந்திருக்கும் போல இருக்கு. உன்னைய அந்த துரைக்குக் கல்யாணம் பண்ணி வைக்க முடிவுசெஞ்சுட்டாங்க. எங்க அப்பாவுக்கு யார் யார கல்யாணம் பண்ணிட்டா என்ன? பணக்கார அனிதா தனக்கு மருமகளா வரணும்னு ஒரே ஆசைதான். அதுக்கு சரியாய் உன்னைப் பத்தி அத்தையும் தப்பா சொல்லவும் உங்க வீட்டுக்கு வந்தார். நிச்சயத்துக்கு உங்க வீட்டுக்கு வந்தார். ஆனா அப்பாவுக்கும் உங்க அப்பா வீட்டுல இல்லாததது தெரியாது. மாமா ஏதோ அவசர வேலையா காலைல ஊருக்குப் போயிட்டாருன்னு பொய் சொல்லி, அத்தையே தாம்பூலத் தட்டை மாத்திட்டாங்க.
ஆனா அன்னைக்கு உன்கிட்ட மன்னிப்பு கேட்கனும்னு தான் நான் வந்தேன். இந்த பரிசம் போடுற விஷயம் எனக்குத் தெரியவே தெரியாது. நாங்க பரிசம் போட வந்தது தெரியாம ஒரு கத்திரிபூ பாவாடை தாவணி கட்டிட்டு ரொம்ப அழகா கள்ளம் கபடமில்லாம சிரிச்சுட்டு இருந்த. உன் மொகத்துல இருந்து சிரிப்ப வாட விடக் கூடாதுன்னு அப்பவே நெனச்சுட்டேன். அன்னில இருந்து எனக்கு லாவென்டர் கலர் தான் பிடிச்ச கலர். உனக்கு ஏன் அந்த கலர்ல சுடிதார் வாங்கி கொடுத்தேன்னு இப்ப தெரிஞ்சிருக்குமே. கல்யாணம்னு சொன்னதும் திரு திருன்னு முழிச்ச பாரு. என் மனசையே யாரோ புழிஞ்ச மாதிரி இருந்துச்சு. அப்பறம் துரை பேசுறத கேட்டவுடனே என் சுஜிய எப்படி இவன் இப்படி பேசலாம்னு ஒரே ஆத்திரம்.
இன்னொன்னு தெரியுமா, நாங்க கிளம்புறதுக்கு முன்னாடி உன் மொகத்தப் பார்த்தேன். நல்லா ஜிவு ஜிவுன்னு தணல் மாதிரி இருந்துச்சு. நீ கண்டிப்பா அத்தை கூட சண்டை போடுவேன்னு தெரியும். எங்க அப்பாவுக்கு நீ துரைய அங்கிள்ன்னு கூப்பிடவுமே தூக்கி வாரி போட்டுச்சு. ஆனா கல்யாணத்த தடுத்து நிறுத்த அது பத்தாதே. அவரு மனச கலைக்குறதுக்கு உன்னோட கோவம் புரியணும். அதுனாலதான் அவர் என்கிட்ட கொடுத்த பணப் பைய உங்க வீட்டுலையே வச்சுட்டு வந்தேன். அப்பறம் வீட்டுக்கு வந்தப்பத்தான் அம்மா எங்கள வாங்கு வாங்குன்னு வாங்கி விட்டிங்க. அப்பறம் நான் சென்னை வந்து வேலைல சேர்ந்துட்டேன். அப்பாவுக்கு மனசு உறுத்தல் தாங்காம கேசவன விட்டு கல்யாணத்த நிறுத்துனாரு. அதுக்கப்பறம் நடந்தது எல்லாம் உனக்குத் தான் தெரியுமே”
“எனக்கு தெரியாம நெறைய நடந்திருக்கும் போல இருக்கே. ச்சே ஆனாலும் சித்திக்கு ஏன் இப்படி புத்தி போகுது? காசுக்காக ஒரு பொண்ண விக்குற அளவு”
“ரொம்ப கவலைப்படாதே. துரை உங்க வீட்டுக்கு வந்து சுஜாதா இல்லன்னா பரவாயில்ல. உன்னோட பொண்ணு வாணியக் கட்டிக் கொடுன்னு சொல்லி, வாணி கையைப் பிடிச்சு இழுத்து கலாட்டா பண்ணதுல, உன்னோட அன்பு சித்திக்குக் கை உடைஞ்சு போச்சு. தடுக்க வந்த உன்னோட அப்பாவ அவன் தள்ளி விட்டதுல அவர் கால் சுளுக்கிகிச்சு. அத்தைய ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்கோம். அவங்கள பார்த்துக்கத்தான் என்னோட தங்கச்சியும், அண்ணியும் ஊர்ல இருக்காங்க. இனிமே வாய மூடிட்டு இருப்பாங்க. இனிமே துரையும் வேற ஒரு கேசுக்காக ஜெயில் போறான். இந்த தடவை அஞ்சு வருஷம்னு நெனைக்குறேன். அதுனால கவலைபடாம இரு”.
“என்ன மாதிரி மனுஷன் இந்த துரை. பச்ச புள்ள வாணி கையப் புடுச்சு இழுத்துருக்கான். இவன் கைய வெட்டணும். பாவம் சித்தி.”
வாணியின் வயதில் தானே அவளது அந்த சித்தி அவளை அந்த அரைக் கிழவனுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க முயற்சி செய்தாள் என்பதை மறந்து பாவப் பட்டாள் சுஜி. அவளது கூந்தலை மென்மையாகக் கோதினான் மாதவன்.
“ஆமா மது, அவங்க கை தானே அடிபட்டு இருக்கு. நீங்க சொன்ன மாதிரி வாய மூடிட்டு எப்படி இருப்பாங்க?”
“பின்ன மினி வீட்டுல போய் அப்புடி கத்திட்டு வந்தாங்களே, உன் பிரெண்ட் மருமகளா போன உடனே அவங்கள சும்மாவா விட்டு வைப்பா? இனி அவங்களுக்கு கஷ்டகாலம்தான்”.
சுஜியின் கைகளைத் தன் கைகளுக்குள் அடக்கியவன், “சுஜி நான் உன்னைப் பத்தி இவ்வளவு சொல்லுறேன். ஏதாவது வாயத் திறந்து சொன்னியா நீ? நான் தான் இந்த மூணு வருஷமா மெழுகுவர்த்தி மாதிரி உன்னைய நெனச்சு உருகி இருந்திருக்கேன். நீ என்னைப் பத்தி என்ன நெனச்ச சுஜி. சரியான ரோடு சைடு ரோமியோன்னா?”
“கண்டிப்பா இல்ல. ஆனா உங்கள ஒரு குறும்புக்கார விளையாட்டு பிள்ளைன்னு நெனச்சேன். அதுக்கு மேல எங்க குடும்ப சூழ்நிலை என்னோட மனசுல அனாவசியமான கற்பனைகளை வளர்க்க விடல. இத சொல்ல எனக்கு கஷ்டமாத் தான் இருக்கு. ஆனா உங்ககிட்ட நான் பொய் சொல்ல விரும்பல. வாழ்க்கைல சின்ன விஷயத்த அடையுறது கூட எனக்கு கஷ்டமா இருக்குறப்ப, என்னோட கனவுகள் பூராவும் நாளைய பத்தின கவலையால தான் நிரம்பி இருந்ததே தவிர காதலால இல்ல. நான் மட்டும் இல்ல என் நண்பர்கள் வட்டாரம் கூட அப்படித்தான். நாங்க எல்லோரும் கஷ்டப் படுற குடும்பத்துல இருந்து வந்தவுங்க. நானும் கூட அதுனால ரொம்ப ரொம்ப பிராக்டிகலா மாறிட்டேன். அதிகமா எதையுமே ஆசைப்பட்டதில்ல. அதுதான் மினி சொன்ன மாதிரி, என்னைய உள்மனசுல பாதிச்ச உங்க கல்யாணம் கூட என்னைய பெருசா பாதிக்கலையோ என்னவோ. மன்னிச்சுக்கோங்க மது, நீங்க என்ன விரும்பினேன்னு சொன்னப்ப கூட இது எனக்கு கிடச்ச வரமா? இல்ல வலையான்னு புரியாம ரொம்ப குழம்பித்தான் போனேன்”
அவளை சிறு வயதில் இருந்து அறிந்திருந்தாலும், இன்று சுஜியின் வாயில் இருந்தே அவளது வாழ்க்கையைப் பற்றி வந்ததும் மாதவனின் கண்களும் கலங்கி விட்டன. இவ்வளவு கஷ்டத்திற்கும் ஒரு முக்கியமான காரணம் அவன் அத்தை அல்லவா. “கவலை படாதே ஸ்வீட்டி நான் இருக்குற வரைக்கும் இந்த கண்ணுல இருந்து தண்ணி வர விட மாட்டேன்”
“ச்சே மதும்மா என்ன பேச்சு இது?” சுஜி கண்கலங்க,
“சரி இப்படி சொல்லுறேன். உன்னைய எப்போதுமே சந்தோஷமா வச்சுக்குறேன். போதுமா. இப்படி பார்க்காதே சுஜி. நான் அப்பறம் ஏதாவது செய்யப் போக, மிட்டுவும், ராதுவும் எனக்குன்னு கேப்பாங்க.”
“ஏ ஜொள்ளு, யாரது மிட்டு, ராது?”
“ஏர் ஹோஸ்டஸ் மித்ராவும் பக்கத்துல உட்கார்ந்து இருந்த ராதிகாவும் தான் அது. செல்லமா மிட்டு, ராது”.
“பிளேன்ல ஏறி அர நாள் கூட ஆகல, அதுக்குள்ளே செல்லப் பேர் சொல்லிக் கூப்பிடுற அளவுக்கு வந்தாச்சா?”
“இங்கப் பாரு சுஜி குட்டி உன் வீட்டுக்காரன் ஹீரோ மாதிரி இருந்தா இப்படி நாலு பொண்ணுங்க வந்து கடலை போடத்தான் செய்வாங்க. நீ இதெல்லாத்தையும் பரந்த மனசோட ஏத்துக்கப் பழகிக்கணும்”
“பொண்ணுங்க எல்லாரும் நல்லாத்தான் இருக்காங்க. நீங்கதான் ஒரு பொண்ணு விடாம போய் ஜொள்ளு ஊத்திட்டு இருக்கீங்க. நானும் பாக்குறேன் எங்க காலேஜ்ல நீங்க கடலை போடாத ஒரு பொண்ணு இருக்கான்னு சொல்லுங்க? உங்களுக்கு மாதவன்னு பேர் வச்சு இருக்குறதுக்கு பதிலா இன்னும் பொருத்தமா கிருஷ்ணன்னு பேர் வச்சு இருக்கலாம் போல இருக்கே.”
விஷயம் தனக்கே பூமராங் போல திரும்பி வருவதைப் பார்த்த மாதவன் பேச்சை மாற்ற எண்ணினான். “ஆனாலும் நீ சொன்னதுல ஒரு உண்மை இருக்கு. என் முழு பேரு மாதவ கிருஷ்ணன் தான். எங்க தாத்தா வச்சது.”
“இப்படி பொருத்தமா பேரு வச்ச வாய்க்கு சக்கர போடணும்”
“இப்படி ஆளாளுக்கு சக்கர போட்டுத்தான் அவரு diabetesல போயிட்டாரு. சரி ஊர் கதை பேசுனது போதும் நம்ம கதைய பேசுவோம். என்ன சுஜி நான் தான் மடத்தனமா சுடிதார் போட்டுட்டு வர சொன்னா, நீ எனக்கு சேலைதான் பிடிக்கும்னு சொல்லிட்டு நீ நேத்து கட்டியிருந்த சேலைய கட்டிட்டு வந்திருக்கக் கூடாது?”
“ஏன் எனக்கு மஞ்சக் காமாலையான்னு செக் பண்ணவா?”
“கள்ளி, உனக்கு செக் பண்ணாம அதோ அந்த பொண்ணுகிட்ட போய் செக் பண்ண முடியுமா?”
“பண்ணித்தான் பாருங்களேன். அந்த பொண்ணு என்ன பண்ணுதுன்னு பார்க்குறேன். சரியான ஜொள்ளு பார்ட்டி”
“என்ன ஜொள்ளு பார்ட்டியா? நானும் பாக்குறேன் அப்படியே சொல்லிட்டு இருக்க. என்னப் பத்தி என்னதான் நெனச்சுட்டு இருக்க?”
“சொல்லவா… மாதவா உனக்கு,
நெஞ்சமெல்லாம் காதல்,
தேகமெல்லாம் காமம்,
உண்மை சொன்னால் என்னை நேசிப்பாயா?
காதல் கொஞ்சம் கம்மி,
காமம் கொஞ்சம் தூக்கல்,
மஞ்சத்தின் மேல் என்னை மன்னிப்பாயா?
உண்மை சொன்னால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா?”
“அடப்பாவி உன்னையே நெனச்சு உருகுற என்னப் பத்தி நீ என்ன இப்படி சொல்லிட்ட சுஜி. நான் மத்த பொண்ணுங்கள பாக்குறது எல்லாம் யாராவது உன்ன விட அழகா கண்ணுக்குத் தெரியுறாங்கலான்னு பாக்கத்தான்மா. என்ன நம்பு. அப்பறம் ஒரு விஷயம் நீ சொன்ன ரெண்டும் உன் மேல எனக்கு உண்டுதான். அது இல்லாம இருந்தாத்தான் தப்பு. நான் இப்ப எசப்பாட்டு பாடுறேன் கேட்டுக்கோ.
பெண்கள் மேலே மையல் உண்டு
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்
நீ ஒத்தைப் பார்வை பார்க்கும் போது
என் முதுகுத் தண்டில் மின்னல் வெட்டும்.
நீ தானே மழை மேகம் எனக்கு
என் ஹார்மோன் நதியில் வெள்ளப்பெருக்கு.
பாசாங்கு இனி நமக்கெதுக்கு
யார் கேட்க, நம் வாழ்க்கை நாமே வாழ்வதற்கு.”
இப்படியாக மாதவன் அவனது காதல் கண்ணம்மா சுஜியின் மனதிலும், சுஜி அவளது மயக்கும் கண்ணன் மது மனதிலும் முழுவதுமாகப் புகுந்து விட்டார்கள்.
(நிறைவு பெற்றது)