38
காலம் அப்படியே உறைந்து விடக் கூடாதா என்று சுஜி எண்ணினாள். எண்ணியது எல்லாம் நடந்து விடுமா என்ன? அவள் கிளம்ப வேண்டிய நேரம் நெருங்கவே கிளம்ப ஆரம்பித்தாள்.
விடியும் முன்பே குளித்துவிட்டு, ஆகாய நீல நிறத்தில் புடவை அணிந்து கொண்டு, முகத்தில் குங்குமம் திருநீறுடன், எழுப்பி விட்ட சுஜியைப் பார்த்ததுமே மாதவனுக்கு உற்சாகம் பொங்கிற்று. இடுப்பைக் கட்டிக்கொண்டு எழுந்திருக்கவே அடம் பிடித்த மாதவனை எழுப்பி குளியல் அறைக்குத் தள்ளி விடுவதற்குள் போதும் போதும் என்றாயிற்று சுஜிக்கு. எது சொன்னாலும், நீ ஊருக்குப் போனப்பறம் நான் என்ன செய்வேன் என்று கூறியே தனது காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் மாதவனைக் கண்டால் சிரிப்புத்தான் வந்தது சுஜிக்கு. இவ்வளவு நாள் எல்லாம் தெரிந்த ஒரு பெரிய மனிதனாக அவள் கண்ணுக்குத் தோன்றிய மாதவனின் இந்தக் குழந்தை போன்ற பிடிவாத குணம், அவள் அறியாதது.
பாத்ரூமில் மாதவனைத் தள்ளி கதவைச் சாத்தியவள், அறையை ஒழுங்குபடுத்த ஆரம்பித்தாள். மாதவனுக்குப் பொருத்தமான ஒரு இளம் நீல ஜீன்சும், நல்ல நேவி ப்ளூவில் மெல்லிய கண்ணை உறுத்தாத லைட் ப்ளூ குறுக்குக் கோடு போட்ட போலோ ஷர்ட்டும் எடுத்து வைத்தாள். இரண்டு நிமிடங்கள் கூட ஆயிருக்காது, பின்னால் இருந்து அவளை வளைத்தன இரு கரங்கள்.
சற்று தீவிரமான முகத்துடன் மாதவன் மனைவியிடம், “சுஜி கேசவனும், எங்க அப்பாவும் நல்லா பேசுறாங்கன்னு நெனைக்காதே. உன்கிட்ட நாலு வருஷத்துல பஹரிகால சேரணும்னு ஒப்பந்தம் போட்டு இருக்காங்க. நீ வரலேன்னா என்னைய கோர்ட்டுல நிறுத்திடுவாங்க. அதுனால என்ன நெனச்சு கனவு கண்டுட்டு இருக்காம, முடிஞ்ச அளவு சீக்கிரம் படிச்சு முடிச்சுட்டு வந்துடு என்ன?”
பயத்துடன் தலையாட்டினாள் சுஜி. செல்ல சீண்டல்கள் செய்த பின் மாதவன் மெதுவாக அழும் குரலில், “சுஜி நாளைக்கு நீ ஊருக்குப் போனவுடனே யார் எனக்கு இப்படி டிரஸ் எல்லாம் எடுத்து வைப்பாங்க சொல்லு?” என்றான்.
“ஹ்ம்ம்… இவ்வளவு நாள் யாரு எடுத்து வச்சாங்களோ, அவங்களே எடுத்து வைப்பாங்க. இப்ப குளிச்சுட்டு நீங்க கிளம்பல, நான் வீட்டுலையே டாடா காட்டிட்டு கிளம்பிடுவேன்”
“ச்சே… நம்ம பொண்ணுங்களுக்கு வழக்கமா வர பசலை வந்து, நான் இங்கேயே உங்க கூடவே இருக்குறேன் அத்தான்னு சொல்லுவேன்னு எதிர்பார்த்தேன்”
“சொல்லுவேன், சொல்லுவேன் இந்த கட்டைல ரெண்டு போட்டு உங்கள பாத்ரூம்ல தள்ளுவேன்” என்றபடி கையில் வைத்திருந்த ஒரு சிறிய ஜன்னலில் இருந்து உடைந்த மர சட்டத்தைக் காண்பித்தாள் சுஜி.
“அடிப்பாவி, கல்யாணம் ஆகி ஒரு நாள் கூட முழுசா முடியல. நீ என்னடான்னா புருஷன கட்டயால அடிக்குறேன்னு சொல்லுற”
“இந்த அடி புடின்னுகுற வேலைய எல்லாம் என்கிட்ட வச்சுக்காதிங்க”
“அடி புடின்னு இந்த மேடத்தை சொல்லக் கூடாதா? நீ கல்யாணத்துக்கு முன்னாடி என்னைய திட்டிட்டு மட்டும் தான் இருந்த. லைசென்ஸ் வாங்கினவுடனே கட்டயால அடிக்க வர. இது உனக்கே நியாயமா இருக்கா? இதக் கேட்பாரு யாருமே இல்லையா? ஆம்பிள்ளைங்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டம் செல்லுமான்னு கேட்டு நம்ம மேடம் லத்திகா சரணுக்கு மெயில் பண்ணனும்” இல்லாத கண்ணீரைச் சுண்டி விட்டபடி பாத்ரூமுக்கு சென்றான் மாதவன்.
இன்று ஒரு நாள்தானே நாளை யாரிடம் போய் அடம் பிடிப்பான்? கண்ணீரை அடக்கிக்கொண்டாள் சுஜி. மாதவன் பார்த்தால் வருத்தப்படுவான்.
வெளியே யாரோ காலிங் பெல் அடிக்கும் சத்தம் தொடர்ந்து கேட்க, பல் விளக்கிக் கொண்டிருந்த மாதவன் குளியல் அறையில் இருந்து வேகமாக வெளியே வந்தான். கதவைத் திறக்காமல் பெட்டியைக் குடைந்துக் கொண்டிருந்த சுஜியைப் பார்த்து, பார்வையாலே என்ன என்று வினவினான்.
தலை குனிந்த சுஜி, “நான் வேற சாரி மாத்தணும்”
அவளது கசங்கிய பருத்தி சேலையைப் பார்த்த மாதவன் சிரித்தபடியே, “சுடிதார் ஏதாவது போட்டுக்கோ சுஜி” என்றான்.
வந்திருந்தது கேசவன் தான். அவர்களை அழைத்துக் கொண்டு ஏர்போர்ட் போக வந்திருந்தான். சுஜி அவளுக்கு ராசியான, அதிதியின் நேர்முகத் தேர்வன்று அணிந்திருந்த லவெண்டர் நிற சுடிதாரை அணிந்திருக்க, பேசிக் கொண்டிருந்த மாதவன் சட்டென்று பேசுவதை நிறுத்திவிட்டு அவளையே பார்த்தான்.
“டேய் மாது போதும்டா பார்த்தது. லேட் ஆகுது பார். போய் குளிச்சுட்டு உன் திங்க்ஸ் விட்டுப்போயிருந்தா எடுத்துட்டு வா. அப்பறமா ஊருக்குப் போனவுடனே அது மறந்துடுச்சு, இது மறந்துடுச்சுன்னு போன்ல சொன்ன எனக்குக் கெட்ட கோவம் வரும்” என்றான் கேசவன்.
“டோன்ட் வொர்ரி கேசவா போன வாரமே எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டேன்” என்று பதிலளித்தான் நம் மாது.
“அவர் எங்கே போறார் பெரியத்தான்?”
“கடவுளே! நீ இன்னும் சுஜி கிட்ட சொல்லவே இல்லையாடா?”
“பேசவே டைம் இல்ல கேசவா”
“ஏன்டா, எதை தள்ளிப் போடுறதுன்னு இல்ல” மாதவனைக் கடிந்துக் கொண்டவன்,
“சுஜி நீ மட்டுமா சான்பிரான்சிஸ்கோ கிளம்புறன்னு நெனச்ச? உன் கூட உனக்கு உதவியா மாதவனும் வரான்மா.” என்று சொல்லி சந்தோஷ அதிர்ச்சி கொடுத்தான்.
“என்னைய விட்டுட்டு வரப் போறாரா?”
“இவனாவது உன்னைய விட்டுட்டு வரதாவது. மேனேஜர் கிட்ட பெரிய சண்ட போட்டுல்ல அங்க சிலிகான் வேலில ப்ராஜெக்ட் வாங்கி இருக்கான். நீ படிச்சு முடிச்சு, பஹரிகாவுல நாங்க போட்ட உன்னோட டம்மி அக்ரிமெண்ட்டை மதிச்சு வந்தாத்தான் உண்டு.”
“என்ன டம்மி அக்ரிமெண்ட்டா?”
“பின்ன இந்த மாதிரி தம்பிய வச்சுட்டு, நாலு வருஷம் கழிச்சு நீ ஜாயின் பண்ணலேன்னா, உன் மேல கேசா போட முடியும் ? என்ன சுஜி தேடுற?”
“பெரியத்தான் இங்க ஒரு பெரிய கட்ட இருந்தது. அது எங்க போச்சுன்னு பாருங்க?”
‘ஐயோ… என்னைய காப்பாத்து கேசவா” என்று அலறியபடி குளியல் அறையில் போய் புகுந்துக் கொண்டான் மாதவன்.
கேசவனுக்கு மாதவன், சுஜி மணவாழ்க்கை பெரும் மனநிம்மதியைத் தந்தது. இவர்களுக்கு அடிப்படையான புரிதல் இருக்கிறது. ஒன்றிரண்டு உரசல்கள் வந்தாலும் மிகவும் மகிழ்ச்சியாகவே வாழ்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.
“சுஜி, இதுல முக்கியமான டாக்குமென்ட்ஸ் எல்லாம் இருக்கு. ரூம்ல மாதவனோட பீரோல வச்சுடும்மா” என்றபடி கேசவன் சில காகிதங்களைத் தந்தான்.
பீரோவைத் திறந்து லாக்கரில் அனைத்தையும் வைத்த சுஜியின் கை தவறி மாதவனின் துணிகள் சில கீழே விழுந்தது. எல்லா துணிகளுக்கு அடியே நீட்டிக்கொண்டு இருந்த அந்தக் கடிதம் அவளது கவனத்தைக் கவர, அதனை எடுத்துப் பார்த்துவிட்டு பத்திரமாக தனது கைப்பையில் வைத்துக் கொண்டாள்.
மாதவனும் தன்னுடனே வரப் போகிறான் என்பதே அவளுக்கு பெரும் நிம்மதியைத் தர, பெட்டி படுக்கையோடு மாதவனும் சுஜியும் விமான நிலையம் வந்து சேர்ந்தனர்.
சற்று நேரம் அவகாசம் இருக்க, அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்த சுஜியின் கண்கள் வாயிலைப் பார்த்தவுடன் மிகப் பெரிதாக விரிந்தது. அங்கு மினி வந்துகொண்டிருந்தாள். அலைச்சலின் காரணமாக அவளது கண்கள் சிவந்திருக்க, முடி கலைந்து பார்க்கவே சோர்வாகத் தெரிந்தாள். வேகமாக சென்று சுஜியினைக் கட்டிக் கொண்ட மினி கன்னங்களில் மிக அழுத்தமான முத்தம் ஒன்றைக் கொடுத்தாள்.
“எப்படி மினி வந்த? உன்னைப் பார்க்காமப் போயிடுவோமேன்னு கவலைப் பட்டுட்டு இருந்தேன்” என்றாள் சுஜி.
“பஸ்ல தான். நம்ம ரதிமீனா ட்ராவல்ஸ். வாசல்ல இறங்கிட்டேன். வெயிட் பண்ணிட்டு இருந்த விக்கியோட வந்துட்டேன்” என்றாள்.
“மது… இங்கப் பாருங்களேன் யார் வந்திருக்காங்கன்னு” என்று உற்சாகத்தோடு சுஜி சொல்ல, அப்போதுதான் அந்தக் காரியத்தைச் செய்தான் மாதவன்.
கோவமாக மினியிடம் முகத்தைத் திருப்பியவன் போய் வேறு இடத்தில் உட்கார்ந்து கொண்டான்.
விக்கித்துப் போய் நின்றாள் சுஜி.