மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய்- 34

34

சுஜி கேட்டதையே வேறு வார்த்தைகளால் நல்லசிவத்திடம் சுந்தரம் கேட்க, உண்மையைப் புரிந்த நல்லசிவம் தன்னையும் தன் தங்கை இதில் அவரே அறியாமல் வசமாக மாட்டி விட்டு இருப்பதை உணர்ந்தார். சுமாராகப் படித்தாலும் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து வாழ்க்கையில் கஷ்டமே இல்லாமல் அனுபவித்துக் கொண்டு இருக்கும் தனது மகளைப் பார்த்தார். நல்ல மதிப்பெண் வாங்கியும் சுஜியைப் படிக்க விடாமல் ஒரு பொறுக்கிக்குத் திருமணம் செய்து தர நினைத்தது அவரது மனதை உறுத்தியது.

சுஜியின் வார்த்தைகள் தூங்கிக் கொண்டு இருந்த அவரது மனசாட்சியை துயில் எழுப்பி விட்டிருந்தது. நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்த தன் தங்கையை சுந்தரம் கல்யாணம் பண்ணி, அவளுக்கு வாழ்வு தந்ததற்கு, அவள் சுஜாதாவுக்கு செய்த கொடுமையை நேரிலே பார்த்த அவருக்கு அடங்காத ஆத்திரம். அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை என்று பார்த்தார். இல்லை என்றால் நாகரத்தினத்தை வீட்டு வாசலில் அடி எடுத்து வைக்க விட்டு இருக்க மாட்டார். கண்ணை மூடினால் பால் வடியும் சுஜியின் முகம் அளவு கடந்த கோவத்தோடு அவரிடம் நியாயம் கேட்டது.

வீட்டிலும் மாதவனின் செயல் அவரைக் கஷ்டப்படுத்தியது. ஒரு முடிவுக்கு வந்தவராக மனைவியை அழைத்த அவர், “கேசவனுக்கு போன் போட்டு நான் வர சொன்னேன்னு சொல்லு” என்றார்.

அன்று கேசவன் வந்ததால் தான் ஒரு வகையில் சுஜாதா இன்று கல்லூரியில் படித்து பட்டம் பெற முடிந்தது. இந்த விஷயம் சுஜி அறியாதது.

சுஜியின் கதையைக் கேட்டு கண்கள் கலங்கி விட்டன ரோசிக்கு.

“அப்பறம் எப்படி சுஜி கல்யாணத்துல இருந்து தப்பிச்ச?”

“எங்க அப்பா சொல்லுவாரு ரோசி, நியாயமான ஆசைகள் கண்டிப்பா நிறைவேறும்னு. படிக்கணுங்குற என்னோட ஆச நியாயமானது தான் போல இருக்கு. அந்த ஆளு ஏதோ தகராறுல ஜெயிலுக்குப் போய்ட்டான். அதுனால கல்யாணம் தள்ளிப் போச்சு. எப்படியோ உங்க கூட வந்து சேர்ந்துட்டேன்”

“மாதவன் உனக்கு மாப்பிள்ளை பார்த்து இருந்தா, அப்பறம் ஏன் உன் பின்னாடியே சுத்துறான்? நீ இங்க படிக்குற விஷயத்த வேற யாருக்குமே அவன் சொல்லல போல இருக்கு. மாதவனுக்கும், இந்த மாப்பிள்ளை விஷயத்துக்கும் இடைல என்னமோ நடந்து இருக்கு.”

சுற்று பேச்சை நிறுத்திவிட்டு யோசித்த ரோஸி பின்னர் சொன்னாள், “மாதவனோட அப்பா கிட்ட டிராமா பண்ண மாதிரி மாதவன் கிட்டயும் உன்னோட சித்தி ஏதாவது டிராமா பண்ணி இருக்கப் போறாங்க. அது சரி. மாதவன் ஏன் அனிதாவக் கல்யாணம் பண்ணிக்கலையாம்?”

தெரியாது என்று தலையை ஆட்டினாள் சுஜி.

“அதுக்கும் உன் விஷயத்துக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கும் சுஜி. சரி, நான் கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு. மாதவன் உன்னப் பார்த்தாலே உருகுறான். இல்லன்னு சொல்லாதே. மாதவன் உன்கிட்ட நடந்துக்குற முறைய நாங்க எல்லோரும் பார்த்துட்டுத் தானே இருக்கோம். நீ மட்டும் தலையாட்டினா உன்ன உள்ளங்கையிலேயே வச்சுத் தாங்குவான் போல இருக்கு. ஏன் நீ மாதவனக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது”

“மாதவன் என்னோட முறை பையன். அதுனால என் கிட்ட அதிக உரிமை எடுத்துக்குறான். அதை தவிர அவனுக்கு குற்ற உணர்ச்சி வேற. எனக்கு அந்த மாப்பிள்ளையக் கல்யாணம் பண்ணி வைக்குறதுக்கு தானும் ஒரு காரணம்னு மனசு குத்துது போல இருக்கு. அதப் போய் காதல்னு நெனைக்குறான். மத்தபடி வேற ஒண்ணுமில்ல”

“குற்ற உணர்ச்சியோ இல்ல என்னவோ… நல்ல பையன். நல்லா படிச்சு இருக்கான். பணக்காரன் வேற. நிஜமாவே உன்ன நல்லபடியா வச்சுக்குவான் சுஜி. நீ அவன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லுறது பைத்தியக்காரத்தனம்”.

“இருக்கலாம் ரோசி. ஒண்ணு தெரியுமா? கல்யாணம் வெறும் தாலி கட்டுறது மட்டும் இல்ல… ரெண்டு குடும்பத்து உறவுகளும் கலக்குறது. நான் சின்ன வயசுல மாதவன் வீட்டுக்குப் போயிருக்கேன். எங்க சித்தியோட அம்மா என்னையும், எங்க அண்ணனையும் சமையல் ரூம தவிர வேற எங்கேயும் விட மாட்டாங்க. அப்ப விவரம் புரியாது. அவங்க எங்கள வேலைக்காரங்க மாதிரி நடத்துனது புரிஞ்சதும் நாங்க அவங்க வீட்டு வாசப்படியக் கூட மிதிக்கல. என்னைய எங்க சித்தியும், அவங்க அம்மாவும் சமையல்காரன் பொண்ணுன்னு தான் கேவலமா சொல்லுவாங்க”.

ஒரு சிப் டீயினை அருந்தியபின் மறுபடியும் தொடர்ந்தாள் சுஜி, “அது மட்டுமில்ல, அனிதா மாதிரியான வசதியான பொண்ணு மருமகளா வரணும்னு நினைக்குற மாதவனோட அம்மாவும், அப்பாவும் இந்த சமையல்காரன் பொண்ணை மாதவனுக்குக் கல்யாணம் பண்ணி வைப்பாங்களா? அந்த வீட்டுக்கு வாழப் போனா எனக்கு என்ன மரியாதை கிடைக்கும்? இப்ப நான் மாதவன கல்யாணம் பண்ணிகிட்டா, எங்க அப்பா உரிமையா வந்து எங்க வீட்டுல ரெண்டு நாள் தங்க முடியுமா? என்னையோ, எங்க குடும்பத்தையோ ஒரு வார்த்தை குறைவா பேசினாலும் என்னால அங்க நிம்மதியா குடும்பம் நடத்த முடியுமா?”

இது எதற்கும் ரோசியிடம் பதில் இல்லை. இருந்தாலும் விட்டுக் கொடுக்காமல், “நீ சொல்லுறதப் பார்த்தால் மாதவனோட அம்மா அப்பாவுக்கு பணத்தாசை இருக்கும் போல இருக்கே. சரி எல்லாம் இருக்கட்டும். உனக்கும் மாதவனைப் பிடிக்கும். இது எனக்கு நல்லாத் தெரியும். மாதவனே ஆசைப்பட்டால் நீ கல்யாணம் பண்ணிக்குறதுல என்ன தப்பு? நீயும், மாதவனும் காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டதா நினைச்சுக்கோ. சொந்தக்காரங்கள ரெண்டு பேரும் கொஞ்ச நாள் மறந்துடுங்க. உன் லைப் இனிமேயாவது நல்லா இருக்கும் இல்ல”

சற்று நேரம் கண்ணை மூடி கற்பனையில் ஆழ்ந்தாள் சுஜி. பின் தலையைக் குலுக்கியவள், “ஒண்ண மறந்துட்டுப் பேசுற. என் பிரெண்ட் மினி மாதவனைக் காதலிக்குறா. என்னை விட மாதவனுக்குத் தகுதியானவ அவதான். என்ன, நான் ஊருக்குப் போனதும் ரெண்டு மூணு மாசம் மாதவனுக்கு என் நினைவு இருக்கும். அப்பறம் அவன் வேலையைப் பார்த்துட்டுப் போய்டுவான். மினி அவன் மனச அப்ப போனா ஈஸியா மாத்திடலாம்.”

கண்களில் புதிதாகத் துளிர்க்க ஆரம்பித்த கண்ணீரைக் கண்ணைச் சிமிட்டி அடக்கியவள் தீர்மானமாக சொன்னாள்.

“இப்ப வந்த மாதவனின் காதலை விட, பத்து வருஷமா என்கிட்ட மாறாம பிரியம் காட்டுற மினியோட நட்புதான் எனக்கு முக்கியம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 48ஹஷா ஸ்ரீயின் ‘என்னை உன்னுள் கண்டெடுத்தேன்’ – 48

48 – என்னை உன்னுள் கண்டெடுத்தேன் இவள் அவனருகில் போனதும் “சாரா, எனக்கு பைக்ல போக புடிக்கும். அதுவும் உன்கூடன்னா ரொம்ப.. இதுலையே போலாமா? உனக்கு ஓகே வா?” என வினவ அவள் கண்கள் மட்டுமே அசைந்தது. அவனும் புன்னகையுடன் சோ

KSM by Rosei Kajan – 3KSM by Rosei Kajan – 3

அன்பு வாசகர்களே ! இதோ அடுத்த அத்தியாயம். எனது சைட்டில் எழுதும் துஜிசஜீ யின் ‘இந்நிலவை மன்னிப்பாயோ என் நிலவே!’ கதை நிறைவடைந்து விட்டது. லிங்க் இங்கே நூலகத்தில் கொடுத்துள்ளேன் .    [googleapps domain=”drive” dir=”file/d/1aFGNdWUh8RoWn-pXp57ag9b28Sooll7O/preview” query=”” width=”640″ height=”480″