மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 29

29

ரு இயந்திரத்தை போல காரை ஓட்டி வீட்டுக்கு வந்த மாதவனுக்கு ஒன்றும் புரியவில்லை. எப்படி வீட்டுக்கு வந்தான் என்று யாராவது கேட்டால் அவனால் பதில் சொல்ல முடியாது.

இவ்வளவு நாட்களாக தான் பாடுபட்டது இந்த வார்த்தைகளைக் கேட்பதற்கா? அண்ணனாம், நிச்சயமாம்; யார் காதில் பூ சுற்றுகிறாள். மணவறைக்கு வருவதற்கு முதல் நிமிடம் கூட தம்பதியினர் மாறுவதில்லையா… மூன்று வருடமாக நினைவுக்கே வராத அண்ணன், தான் மணந்து கொள்ள கேட்டதும் வந்து விட்டானா?

சுஜிக்கு முதலிலேயே தன் மீது ஒரு பெரிய விருப்பம், காதல் போன்றது இல்லை என்பது மாதவனும் அறிந்ததே. சொல்லப் போனால் மாதவனின் பக்கமே சுஜி வரமாட்டாள். மினியின் வீட்டில் அவன் இருக்கிறான் என்று தெரிந்தாலே, முடிந்த அளவு சீக்கிரம் ஓடி விடுவாள். தானே இழுத்து வைத்து பேசினாலும், இரண்டொரு வார்த்தைகளில் பதில் சொல்லி விட்டு வேலை இருக்கிறது என்று கிளம்பி விடுவாள். ஆனால் ராகேஷிடம் மட்டும் நன்றாக பேசுவாள். அவன் அடிக்கும் ஜோக் அனைத்துக்கும் விழுந்து விழுந்து சிரிப்பாள். என்னிடம் ஏன் வார்த்தைக்கே பஞ்சம் ஆகிப் போனது. சொல்லப் போனால் ராகேஷாவது தெரிந்த பையன் தான். நான் அவளது சொந்தக்காரன் அல்லவா. ஒருவேளை ராகேஷ் தெரிந்த பையனுக்கும் மேலா? அன்று அனிதாவால் தண்டனைக்கு உள்ளான சுஜிக்கும், ராகேஷுக்கும் தங்களை அறியாமல் ஒரு ஈர்ப்பு உண்டாகி விட்டதா? ஆனால் சுஜியின் விழிகள் அவனிடம் சொல்லியது வேறாயிற்றே. யோசித்து, யோசித்து மாதவனுக்குத் தலை குடைச்சல் வந்ததுதான் மிச்சம்.

எல்லாம் நாகரத்தினம் அத்தையால் வந்தது. அறியாத வயதில் சுந்தரத்தைப் பற்றியும் விக்கி சுஜி பற்றியும் வெறுப்பினை வளர்த்து விட்டிருந்தார். அதனை நம்பிய தானும், சிறு வயதில் சுஜியின் முடியைப் பிடித்து இழுத்தும், திட்டியும் ஆத்திரத்தைக் காட்டி விட, அவளது மனது தன் மேல் ஒட்டாமலேயே போய் விட்டது. முதல் கோணல் முற்றிலும் கோணலாகிவிட்டது.

என்னை மணக்க பெண்களா இல்லை? அனிதாவே எவ்வளவு கெஞ்சினாள். தன்னால் ஏற்பட்ட தவறுக்கு, சுஜியிடம் தானே நேரில் போய் மன்னிப்பு கேட்கிறேன், என்று சொன்னாளே. அவள் அப்பாவோ, ஒருபடி மேலே போய் அப்பாவிடம் இருக்கும் வியாபாரத் தொடர்பையே முறித்துக் கொண்டார். அப்பா அனிதாவை மணக்க சொல்லி சண்டை போட்டபோதும் கூட, வீட்டை விட்டு வெளியேறத் தோன்றியதே தவிர, வேறு யாரையும் மணக்கத் தோன்றவில்லையே. எவ்வளவோ அழகான பெண்கள் இருக்க, சுஜியின் பின்னே ஓடுகிறதே எனது இதயம். அவளுக்கு என் மீது வெறுப்பு என்று தெரிந்தும், அதனை மாற்றி அவளது உள்ளத்தை வெல்ல நினைக்கிறதே தவிர அவளைத் தன் மனதை விட்டுத் தள்ள நினைக்க மறுக்கிறதே.

என்ன செய்வது? காதல் என்பது பெண்ணின் உள்ளம் அறிந்த பின்பா வருவது? இல்லை இவள் கண்டிப்பாக தனக்கு மனைவி ஆவாள் என்று கணக்கு போட்ட பின் தனது மனதைக் கொடுக்க முடியுமா? இதற்கு முடிவுதான் என்ன?

இவ்வாறு நினைத்தபடியே மாதவன் படுத்திருக்க, அறையின் கதவினைத் தட்டி விட்டு யாரோ உள்ளே நுழைந்தார்கள். படுத்தவாறே முகத்தினைத் திருப்பிப் பார்த்தான். கேசவன் நின்றுக் கொண்டிருந்தான்.

கேசவன், மாதவனின் அண்ணன். பட்டப் படிப்பு முடித்துவிட்டு அப்பாவுக்குத் தொழிலில் உதவியாக இருக்கிறான். தனது புத்தி சாதுர்யத்தால் அனைவரின் நன்மதிப்பையும் பெற்றவன். தற்போது கிராமத்தில் உள்ள நிலங்களின் பிரச்சனைகளைத் தீர்க்கும் பொருட்டு அவர்களின் தந்தை நல்லசிவம் அவனை அனுப்பி இருந்தார். பஹரிகாவை ஆரம்பித்தவுடன் அவன் இங்கு வந்து விடுவான். கிராமத்தில் நிலபுலன்களைக் கவனித்துக் கொண்டிருந்தவன் எப்போது இங்கு வந்தான்?

“மாது முழுச்சு தானே இருக்க? உன்னை அப்பா பார்க்கணுமாம். கீழே வர சொல்லுறார்”

தானே கேசவனைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைத்து இருந்தான். அவனே வந்தது நல்லதாகப் போயிற்று. கேசவனுக்கு அனுபவ அறிவு மிக அதிகம். அனிதாவை கல்யாணம் செய்ய மறுத்த போதும் சரி, திருமணத்திற்கு வற்புறுத்திய வீட்டினரிடம் கோபித்துக் கொண்டு சென்னையில் தங்கி இருந்த போதும் சரி, தனக்கும் வீட்டுக்கும் ஒரு பாலமாக செயல்பட்டு, பிரச்சனையை சுமுகமாகத் தீர்த்து வைத்தவன். இப்போது அவனால் மட்டுமே தன் பிரச்சனையைத் தீர்க்க முடியும்.

“கேசவா கொஞ்சம் உட்காரு உன் கூட பேசணும்”.

“அதுக்கு முன்னாடி என் கேள்விக்குப் பதில் சொல்லு, உன் கழுத்துல போட்டிருந்த நம்ம குடும்ப செயின் எப்படி சுஜாதா கழுத்துக்குப் போச்சு?”

ந்த சம்பவத்துக்குப் பின் சுஜி மாதவனைச் சந்திக்கவில்லை. உணவுத்திருவிழாவின் பலனாக அதிதிக்கும், பஹரிகாவுக்கும் வணிகத் தொடர்பும் அதிகரித்தது. பஹரிகாவுக்கு வேண்டிய சமைத்த உணவுப் பொருட்களைத் தயார் செய்யும் பொறுப்பு அதிதியிடம் கொடுக்கப்பட்டது. இவை அனைத்திற்கும் மாதவன் வந்தாலும் சுஜியை தனியே சந்திக்கவோ பேசவோ முயற்சி செய்யவில்லை. சுஜிக்கு இது வருத்தம் தான். சிறு செடியாக இருந்தபோதே பிடுங்கி எரிந்து இருக்கலாம். மனதில் சற்று வேரோடி இருந்த அவனது நினைப்பு பிடுங்க முயற்சி செய்த போதெல்லாம் குருதியைக் கிளறி விட்டது. சுஜியின் மனது உள்ளே தாள முடியாத கவலையைச் சுமந்து இருந்தாலும், வெளியே வலுக்கட்டாயமான ஒரு சிரிப்புடன் வளைய வந்துக் கொண்டு இருந்தாள். நிர்வாகத்தின் வழியே அனைவரும் வெளிநாட்டு பல்கலைகழகங்களுக்கும் விண்ணப்பித்தனர். கட்டணம் அதிகம் என்று தெரிந்தாலும், கல்லை விட்டுத்தான் பார்ப்போமே என்ற எண்ணம். அனைவரின் படிப்பும் முடிந்து அதிதியின் பல்வேறு கிளைகளில் வேலை செய்ய ஆரம்பித்தனர். மும்பையில் மேற்படிப்பு படிப்பது பற்றி ஒரு தகவலும் தெரியவில்லை.

அலுவலகத்தில் அழைப்பதாக செய்தி வந்தது. தான் செய்துக் கொண்டிருந்த வேலையை ரோஸிடம் தொடரச் சொல்லிவிட்டு சென்றாள் சுஜி. நல்ல செய்திதான். சுஜிக்கு கலிபோர்னியாவில் The culinary Institute of Americaவின் Bakery and Pastry degree courseல் இடம் கிடைத்து இருந்தது. 38 மாத கோர்ஸ். முடித்தவுடன் நல்ல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பாஸ்ட்ரி செஃப் ஆக சேர்ந்து விடலாம். ஆனால் கட்டணம்? ஒவ்வொரு செமஸ்டருக்கும் $10,000. அதற்கும் வழி காட்டினாள் மீனாக்ஷி தாயார். நல்ல வேலையில் சேர்ந்து இருந்த விக்கி முதல் தவணை பணம் கட்ட, மற்றொரு பகுதி கட்ட பஹரிகா ஒத்துக்கொண்டது. ஆனால் படிப்பு முடிந்ததும் தாங்கள் தொடங்கப் போகும் பேக்கரி அண்ட் பாஸ்டரி செக்சனில் வந்து சேர வேண்டும் என்ற நிபந்தனையுடன். சுஜியும் அதற்கு ஒத்துக்கொண்டாள். அது விஷயமாக பஹரிகா சென்ற போது கூட மாதவனைப் பார்க்க முடியவில்லை.

கேசவன் தான் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டான். மாதவன் அனைவரிடமும் கலகலப்பாக பழகும் சுபாவம் என்றால், கேசவனோ அளந்து பேசும் ரகம். கேசவனிடம் ஒன்றிரண்டு முறை பேசி இருக்கிறாள் அவ்வளவுதான்.

“என்ன சுஜாதா எப்படி இருக்க?”

“நல்லா இருக்கேன் அத்தான்”

“உன் படிப்ப பத்தி கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோஷமா இருந்தது. நீ அதிதில தான் படிக்குறன்னு முன்னாடியே தெரிஞ்சு இருந்தா வந்து பார்த்து இருப்பேன்”

“பரவாயில்ல அத்தான்”

சுஜியின் உடல் அங்கு இருந்தாலும், அவளது கண்கள் சுற்றி சுற்றி வந்தது. எங்காவது மாதவனைப் பார்க்க மாட்டோமா என்ற ஏக்கம் அதற்கு. கேசவனும் அதனைக் கவனிக்காதவன் போல கவனித்தான். காதல் படுத்தும் பாடு, பொறுப்பான சுஜாதாவைக் கூட விட்டு வைக்கவில்லையே என்று மனதுள்ளே எண்ணியவன்,

“யாரைத் தேடுற சுஜி?” என்று கேட்டு அவளுக்கு அதிர்ச்சி அளித்தான்.

சுஜியும் தயங்கியபடியே, “சின்னத்தான் வரலையா?”

“யாரு? ஓ… மாதவனா…? அவன் ஊருக்குப் போயிருக்கான். ஏதாவது சொல்லணுமா?”

“இல்ல விசா எல்லாம் வந்துடுச்சு. அடுத்த வாரம் ஊருக்குப் போகணும். இன்னைக்கு நான் சென்னை கிளம்புறேன். அதான் கிளம்புறதுக்கு முன்னாடி அவர்கிட்ட ஒரு வார்த்தை சொல்லலாம்னு”

“ரொம்ப நல்லது. அவன் மும்பை போய் இருக்கான். நீ சொன்ன விஷயத்தை அவன்கிட்ட நான் சொல்லிடுறேன். கவலைப் படாம பத்திரமா போயிட்டு வா.”

கதவினை நோக்கி சுஜி நடக்கத் தொடங்க, கேசவனின் குரல் அவளைத் தடுத்து நிறுத்தியது. “உன்னோட கேக் போட்டோ எல்லாம் பார்த்தேன் சுஜி, இவ்வளவு திறமை இருக்குற உன்ன படிக்க விடாம தடுக்க நெனைச்சது எங்க தப்புத்தான். ஆனா இதை எல்லாம் மனசுல வச்சுக்காம நீ எங்க இருக்கன்னு அப்பப்ப தகவல் சொல்லு. உனக்கு வேணுங்குற உதவிய எப்ப வேணுன்னாலும் என்கிட்ட தயங்காம கேட்கலாம். உனக்கு அதுக்கு எல்லா உரிமையும் உண்டு. நீ என்னைக்கு இருந்தாலும் எங்க வீட்டு மகாலட்சுமி இல்லையா”

அவன் சாதாரணமாக சொன்னானா இல்லை மனதினுள் ஏதாவது உள்நோக்கம் இருந்ததா எதுவும் புரியவில்லை சுஜிக்கு.

நல்லதுதான் இந்தப் பிரிவு அவளை மாதவனின் மனதில் இருந்து அப்புறப்படுத்தி விடும். கண்ணால் காணாதது கருத்தில் நிலைக்காது. இன்னும் நான்கு வருடம் கழித்து மாதவனைப் பார்க்கும் போது கல்யாணம் முடிந்து ஒன்றிரண்டு குழந்தைகள் கூட பிறந்து இருக்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சாவியின் ‘ஊரார்’ – 06சாவியின் ‘ஊரார்’ – 06

6 குமாருவின் கையில் ஒரு விளையாட்டுத் துப்பாக்கி இருந்தது. அதில் ‘கேப்பு’களை வைத்து ‘டப்டப்’பென்று சுட்டுக்கொண்டிருந்தான். அவன், “கொள்ளைக்காரங்க எதிரிலே வந்தா இதாலேயே சுட்டுடுவேன்” என்று வீரம் பேசினான். “இது ஏதுடா துப்பாக்கி?” “மாமா சேலம் போய் வந்தாரே, அப்ப வாங்கிட்டு

1945 இல் இப்படியெல்லாம் இருந்தது – புத்தகப் பரிந்துரை -சத்யா GP1945 இல் இப்படியெல்லாம் இருந்தது – புத்தகப் பரிந்துரை -சத்யா GP

  “ஒரு எழுத்தாளரின் படைப்பொன்றைப் படித்துப் பரவசமடைவேன். அதன் பின்பு அந்த எழுத்தாளரின் அனைத்து ஆக்கங்களையும் தேடித்தேடி படிப்பேன். அந்த எழுத்தாளரே சிறந்தவர் என்றொரு பிம்பத்தை மனம் கட்டமைக்கும். அது மற்றொரு எழுத்தாளரின் படைப்பைப் படிக்கும் வரை நீடிக்கும். அடுத்த எழுத்தாளரின்

தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 21’தமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 21’

அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் புல்தரையில் அங்கும் இங்குமாய் கூட்டம் நிறைந்திருந்தது. காதம்பரி கல்பனாவுடன் நுழைந்த பொழுது அங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் தங்களது உரையாடலை நிறுத்திவிட்டு காதம்பரியையே வெறித்துப் பார்த்தனர். அவர்கள் பார்வையிலிருந்து எதையுமே அவளால் ஊகிக்க முடியவில்லை. அங்கிருந்த சிலர் உடனிருந்தவர்களிடம்