மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 28

28

ந்த உணவுத் திருவிழா வெற்றிகரமாக முடிந்தது. மதுரா டிவி, வைகை டிவி முதலிவை போட்டி போட்டுக் கொண்டு அதைப் பற்றி பேச, பஹரிகா ஒரே நாளில் ஏகப்பட்ட பேரைச் சென்றடைந்தது. அதிதிக்கும் இது ஒரு நல்ல விளம்பரமாக இருந்தது என்றால் மிகை இல்லை.

பலவிதமான உணவு வகைகள் அனைவரையும் கவர்ந்து இருந்தாலும், சுஜி செய்த திருமலை நாயக்கர் மஹால் கேக் அனைவரின் பாராட்டையும் முழுமையாகப் பெற்றது. வந்திருந்த பெரும்பாலானவர்கள் அதன் அருகே சென்று போட்டோ எடுத்துக் கொண்டனர். மாதவன் மட்டுமின்றி அவனது குடும்பத்தினருக்கும் மிகவும் சந்தோஷம்.

சுஜிக்கு அவனது பெற்றோரைப் பார்க்க சங்கடமாக இருந்தது. என்ன இவள் இங்கு வந்து உட்கார்ந்துக் கொண்டாள் என்று நினைப்பார்களோ என்று. அதைவிட பயம் நாகரத்னத்தின் மீது. அவள் ஏதாவது வில்லத்தனம் செய்து விடுவாளோ என்று. நல்லவேளையாக மாதவனின் தாய், தந்தையைத் தவிர வேறு யாரும் வரவில்லை.

மாதவனின் தந்தைக்கு இந்த உணவுத் திருவிழாவின் பொறுப்பினை, கல்லூரி மாணவர்களிடம் ஒப்படைப்பதில் கொஞ்சமும் இஷ்டமில்லை. கொஞ்சம் பணம் அதிகமாக செலவானாலும், இதில் முன் அனுபவம் இருப்பவர்களிடத்தில் கொடுத்து விட்டால் நிம்மதி, என்ற எண்ணம் அவருக்கு. அவரை வற்புறுத்தியே மாதவன் அதிதிக்கு வாய்ப்பினை வழங்கி இருந்தான். கண்டிப்பாக ஏதாவது குளறுபடி நடக்கும் என்று எண்ணி இருந்தார். தான் எதிர்பார்த்ததைவிட கால்வாசி செலவிலேயே, நினைத்ததைக் காட்டிலும் அதிக விளம்பரம் கிட்டி அவரை குளிர்வித்து இருந்தது. பழனிசாமியைப் பாராட்டியவர், தான் எண்ணியதை வாய்விட்டே சொல்லி விட்டார்.

பழனிசாமி அவரிடம், “இது எல்லாத்துக்கும் காரணம் என்னோட மாணவர்கள் தான். எந்த ஒரு உதவியும் எங்ககிட்ட எதிர்பார்க்காம அவங்களே செஞ்சது இது” என்று கூறி அனைவரையும் அறிமுகப்படுத்தினார்.

“சமையலின் முழு பொறுப்பும் சுஜாதாதான். அந்த கேக் கூட சுஜாதாவின் கைவண்ணம் தான். பெஸ்ட் ஸ்டுடென்ட் ஆப் தி கிளாஸ்” என்று சொல்லி சுஜாதாவையும் அறிமுகப்படுத்தினார்.

அவர்களது பார்வை சுஜியின் கழுத்தில் ஒரு நொடி நிலைத்து பின் மீண்டது. மாதவனின் செயினை கழட்ட மறந்த தன்னை கடிந்துக் கொண்டாள் சுஜி. மாதவனின் அப்பாவும், அம்மாவும் மிகச் சிறிதாக புருவம் சுருக்கினர் அவ்வளவுதான். பின்னர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“சமையல் மிகவும் நன்றாக இருந்தது அம்மா” என்றவர் வேறு ஒன்றும் சொல்லவில்லை. அவளைத் தெரிந்ததாக காட்டிக் கொள்ளவும் இல்லை.

ப்பாடி! உங்க அம்மா அப்பாவப் பார்த்ததும் நான் ரொம்ப பயந்துட்டேன்” என்றாள் சுஜி.

விடுதியின் மெயின் கேட் சாத்திவிட்டதால், காரை வெளியே நிறுத்திவிட்டு, சிறிய கதவின் வழியே உள்ளே இருக்கும் கட்டிடத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர் சுஜியும், மாதவனும். நேரம் நள்ளிரவைத் தாண்டி விட்டதால் வெளியே அவர்களைத் தவிர ஒரு ஈ, காக்கா கூட இல்லை. விடுதியின் அறைகளில் அனைவரையும் நித்திரா தேவி தழுவி இருந்தாள். மாணவர்கள் சினிமாவுக்கு சென்று விட, சாப்பிட்ட உடன் தான் சுஜியை விடுதியில் விட்டுவிடுவதாக மாதவன் சொல்லிவிட்டான். எல்லாவற்றையும் முடித்துவிட்டு கிளம்ப நள்ளிரவாகி விட்டது.

பௌர்ணமி நிலவொளியில், செம்பவள உடை அணிந்து அழகான வளையம் காதில் ஆட, அவள் அணிந்திருந்த கல் வைத்த பொட்டுடன் கண்களும் மின்ன மின்ன பேசினாள் சுஜி. உடையின் நிறத்திலே இருந்த அவளது இதழ்களும் வண்டுக்கு அழைப்பு விடுத்தது. அவளது பார்வையில் தனது மனதின் பாதியைத் தொலைத்தவன், மின்னல் சிரிப்பினில் தனது இதயத்தின் மீதியையும் தொலைத்தான்.

மாதவனும் அன்று வெள்ளையில் ஊதா நிற கட்டம் போட்ட சட்டையும், கரு நீல பாண்ட்டும் அணிந்திருந்தான். காலையில் இருந்து வேலை செய்து இருந்தாலும் அந்த களைப்பினை அவனது முகம் அவ்வளவாக காட்டவில்லை. அவனது ரிம்லெஸ் கண்ணாடிக்குள்ளே இருந்த கண்கள் சுஜியை நோட்டமிட்டபடியே வந்தன. இதைப் போல சுஜியுடன் நடந்து செல்ல நினைத்த அவனது ஆசையில் ஒன்று நிறைவேறிவிட்ட மகிழ்ச்சி தெரிந்தது அவனது முகத்தில்.

“ஏன் என்ன ஆச்சு?”

“இவ்வளவு நாள் தப்பிச்சாச்சு. கடைசி சமயத்துல மாட்டிக்கக் கூடாதுன்னு பயம்மா இருந்தது”.

“ஏன் சுஜி பயப்படுற? எப்படி இருந்தாலும் இன்னும் கொஞ்ச நாள்ல உனக்கு காலேஜ் முடிஞ்சுடும், அப்பறம் வீட்டுக்குப் போய் தானே ஆகணும். எவ்வளவு நாள் தான் இப்படி யாருக்கும் தெரியாம ஒளிஞ்சு விளையாட முடியும்?”

“இல்ல இந்த மாசம் வரை சமாளிச்சுட்டாப் போதும் அப்பறம் ரொம்ப தூரமாப் போய்டுவேன்”

அவள் பேசியதை அவ்வளவு நேரம் சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்த மாதவன், அவள் கையை இறுகப் பற்றி,

“என்ன விட்டுட்டு மறுபடி எங்க போற?” என்றான்.

அவன் உடும்பாகப் பற்றிய கையை உதற முடியாது வலியுடன், “என்ன விளையாட்டு இது? கைய விடுங்க வலிக்குது”

மாதவன் சுஜியின் கண்களைப் பார்த்தவாறே கேட்டான். “எங்க போகப் போற? உங்க வீட்டுக்குத் தெரியுமா?”

“இனிமேதான் சொல்லணும்”.

“வேலையா இல்ல படிப்பா?”

“படிக்கத்தான். பேக்கரில டிரைனிங் எடுக்கப் போறேன் மும்பைல”.

“மத்த ஏற்பாடெல்லாம்”

“பீஸ் அதிதிலையே கட்டிடுவாங்க. ஆனா படிச்சு முடிச்சதும் அஞ்சு வருஷம் வேல செய்ய ஒப்பந்தம் போட்டு இருக்காங்க”.

“இல்ல சுஜி நீ மும்பை போக வேணாம். நான் அனுமதிக்க மாட்டேன்”

“நீங்க என்ன என்னைய அனுமதிக்குறது. நான் கண்டிப்பா போகத்தான் போறேன்”.

“இல்ல சுஜி நீ என்ன சொன்னாலும் சரி. போகக்கூடாது”.

“எனக்கு ஏதாவது நல்ல சான்ஸ் வரும்போது என் வாழ்க்கையக் கெடுக்குறதே உங்க வேலையாப் போச்சு”

“நிறுத்து சுஜி” என்று கோபமாக பேசியவனின் முகம் பார்த்துத் திகைத்து விட்டாள்.

“நானா உன் வாழ்க்கையக் கெடுக்குறேன் நான்… நான்…” என்று சொல்லியவன் சட்டென்று அவளை அணைத்து, தன்னை மேலும் அவள் காயப்படுத்தாது தடுக்கும் பொருட்டு அவளது பூவிதழ்களை முத்தமிட்டு விட்டான்.

அவன் அடித்திருந்தாலும் கூட சமாளிக்கும் திறன் கொண்ட சுஜி, இந்த எதிர்பாராத வகை தாக்குதலால் நிலை குலைந்து விட்டாள்.

சுஜியின் முகத்தைப் பார்த்த மாதவனின் இதழ்களில் ஒரு வெற்றிப் புன்னகை.

“சுஜி! நம்ம ரெண்டு பெரும் கல்யாணம் பண்ணிக்கலாம் சுஜி. ப்ளீஸ் மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதே. இந்த மாதிரி ஷாக் உனக்குத் தர வேண்டாம்னு தான் முறைப்படி வரலாம்னு இருந்தேன்.”

இதற்குள் அவனது தயக்கம் மறைந்திருக்க, அவனது இதழ்கள் சுஜியின் முகமெங்கும் முத்திரை பதிக்க ஆரம்பித்தது.

அவனது வார்த்தைகள் மெதுவாக சுஜியின் அறிவுக்கு எட்ட, நடந்தது எல்லாம் அவளது நினைவுக்கு வந்தது. மாதவனை வேகமாக விலக்கிய சுஜி, அவனைப் பார்த்து கேட்ட கேள்வி மாதவனின் மனதை உலுக்கி விட்டது.

“அண்ணனுக்கு நிச்சயம் செஞ்ச பொண்ணு கிட்ட இப்படி நடக்க உங்களுக்கு வெட்கமா இல்ல?”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

நிலவு ஒரு பெண்ணாகி – 2நிலவு ஒரு பெண்ணாகி – 2

வணக்கம் பிரெண்ட்ஸ், நிலவு ஒரு பெண்ணாகி முதல் பதிவுக்குக் கருத்து தெரிவித்தவர்களுக்கு நன்றி. இரண்டாம் பகுதி உங்களது பார்வைக்கு நிலவு ஒரு பெண்ணாகி – 2 இது ஆத்ரேயனின் இளம்பிராயத்தைக் கூறும் பதிவு. அன்புடன், தமிழ் மதுரா Download WordPress Themes

KSM by Rosei Kajan – 27KSM by Rosei Kajan – 27

அன்பு வாசகர்களே! அடுத்த பதிவு இதோ.. [googleapps domain=”drive” dir=”file/d/1lQynKG3DRvwkfB7q5Ek5jth4t1vnT00M/preview” query=”” width=”640″ height=”480″ /]     Download Best WordPress Themes Free DownloadFree Download WordPress ThemesDownload Best WordPress Themes Free DownloadDownload WordPress Themes