Tamil Madhura மதுராந்தகியின் காதல் மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 16

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 16

இரண்டாம் பாகம்

 

அத்தியாயம் – 6. சிவபோத அடியார்

 

     வாழ்வில் எத்தனையோ தோல்விகளை மனிதர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அது எந்தவிதமான தோல்வியாக இருந்தாலும் சரி, அதற்குள்ளானவர்களைத் தாக்காமல் இருப்பதில்லை. ஆனால் அந்தத் தாக்குதல்கள் எல்லாவற்றிலும் மிகக் கொடுமையான தாக்குதலை அளிக்கக்கூடிய தோல்வி ஒன்று உண்டென்றால் அது காதல் தோல்விதான் என்று கூசாமல் கூறமுடியும். அது ஓரளவு உண்மையுந்தான். ஏனென்றால் இளம் பிராயத்தில் மற்றெல்லாவற்றையும்விட, காதல்தான் அவர்களுக்கு வழிபடும் இறைவனாக விளங்குகிறது. அந்த வழிபாட்டில் தோல்வியடைந்தால் அவர்கள் உள்ளம் உடைந்து போகாமல் என்ன செய்யும்? அத்தகைய உள்ளச் சிதறலின் காரணமாகப் புத்தி பேதலித்துப் போவோர் கூட உண்டு. பேதை வானவியின் அறிவும் அவ்வாறுதான் பேதலித்துப் போய்விட்டது. அது தானாகப் பேதலித்தது என்று கூறுவதுகூடத் தவறு. அவளே வரவழைத்துக் கொண்டாள் என்றுதான் சொல்லவேண்டும்.

எப்படியானால் என்ன? வானவிக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. பைத்தியம் என்றால், சாதாரணப் பைத்தியமா, என்ன? மிகப் பெரிய பைத்தியம். அபாயகரமான பைத்தியங்கூட. அன்று ஒருநாள் மாமன்னர் வீரராசேந்திர தேவர் வேங்கிப் போரை முடித்துக்கொண்டு திரும்பியதும், “இனி குந்தள விக்கிரமாதித்தனுடன் தொடர்பு கொண்டால், பழைய பாதாளச்சிறையில் நீ வாழ்நாள் முழுவதும் உழல நேரிடும்,” என்று எச்சரித்தார் அல்லவா? அதே பாதாளச்சிறையில் இல்லாவிட்டாலும், சோழகேரளன் அரண்மனையில் ஒரு தனி அறையில் சிறை வைக்கும் அளவுக்கு வானவியின் பைத்தியம் முற்றிப்போயிருந்தது. ஆம், எப்பொழுது பார்த்தாலும் ஒரே கூச்சல், ஒரே பிரலாபம். யார் எதிர்ப்பட்டாலும் அவர்களைத் திட்டுவது, அடிப்பது, கடிப்பது போன்ற அபாயச் செயல்கள்; அரண்மனையில் ஒரு நல்ல பொருள் இல்லாமல் உடைப்பது; அந்தப்புரத்திலுள்ள மாதர்களின் பெட்டிகளைக் குடைந்து, விலையுயர்ந்த துணிமணிகளையெல்லாம் வெளியே எடுத்துப் போட்டுக் கிழிப்பது; அல்லது எரிப்பது; இப்படிப்பட்ட செயல்களையெல்லாம் செய்ய ஆரம்பித்து விட்டதால், அவளைச் சிறையில் அடைப்பதுபோல் ஓர் அறையில் தள்ளிப் பூட்டச் செய்வதையன்றி வேறு வழி இருக்கவில்லை சோழதேவருக்கு.

சோழநாட்டு இளவரசிக்குப் பைத்தியமென்றால் அதற்குச் செய்யப்படும் வைத்தியத்துக்கு ஒரு கங்கு-கரை இருக்குமா? சோழநாட்டின் சிறந்த மருத்துவர்களெல்லாம் வந்து பலவகை மருந்துகளைக் கொடுத்து வானவியின் பைத்தியத்தைப் போக்க முயன்றனர்; மந்திர தந்திரங்களில் வல்லவர்கள் வந்து, பேயென்றும் பைசாசமென்றும் சொல்லி, பூசைகள் போட்டு, வேப்பிலை அடித்து அதை விரட்டிவிட முயன்றனர். ஆனால் இவர்கள் எவராலும் அந்தப் பைத்தியத்தை அசைக்கமுடியவில்லை. அரசாங்கப் பொருட்சாலையிலுள்ள பொருள்கள் விரயமானதுதான் மிச்சம்; வைத்தியம் செய்ய வந்தவர்கள் வானவியின் கையால் அடியும், பல்லால் கடியும் பெற்றுக் கொண்டதுதான் மிச்சம். அவளுடைய பைத்தியம் என்னவோ நாள்தோறும் அதிகரித்துக் கொண்டேதான் போயிற்று.

மருந்தும், மந்திரமும் பயனளிக்காமற் போய்விடவே, மனவசிய வல்லுநர் பலர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நோயின் உண்மைக் காரணத்தைக் கண்டறிந்துவிட்டனர். ஆயின் அவர்கள் சொன்ன சிகிச்சையைச் செய்ய மாமன்னர் உடன்படவில்லை. மனவசிய வல்லுநார்கள் வானவியின் பைத்தியம் காதல் பைத்தியமென்றும், அது தெளிய வேண்டுமென்றால், அவள் காதலித்த காளையையே அவளுக்குக் கடிமணம் புரிந்து வைக்க வேண்டுமென்றும் அறிவித்தனர். ஆனால் வானவி காதலித்த காளை பகைநாட்டு இளவரசன் அல்லவா? அதிலும் ஒருதடவை திருமண ஓலையுடன் வந்து அவரால் விரட்டப்பட்டவன் அல்லவா? அவனுக்குத் தமது மகளை மணம் செய்து வைக்கச் சோழதேவர் எங்கணம் மனம் கொள்ளுவார்? தவிர, ஒரு தடவை விரட்டியடித்தவனைக் கெஞ்சி அழைத்து மகளை மணந்துகொள்ளுமாறு வேண்டினால், சோழ நாட்டின் பெருமை என்னாகும்?

ஆதலின் சோழதேவர், தொண்டை மண்டல அரசப் பிரதிநிதியாக இருந்த தமது மூத்த மைந்தன் மதுராந்தகனுக்கும், பாண்டி மண்டலத்தில் அரசப் பிரதிநிதியாக இருந்த இளைய மைந்தன் கங்கைகொண்ட சோழனுக்கும் *ஓலைகள் அனுப்பி, அம்மண்டலங்களில் வானவியின் பைத்தியத்தைப் போக்கக் கூடியவர்கள் யாரேனும் இருந்தால் அழைத்து வருமாறு செய்தி விடுத்தார்.

(*திண்டறல் மைந்தனாகிய கங்கைகொண்ட சோழனை ஏழுயர் யானைச் சோழ பாண்டியெனென்று ஈண்டுயர் மணிமுடி இசைபெறச் சூட்டி பாண்டி மண்டலங் கொடுத்தருளி… (S.I.I. Vol.V-No.976).)

அவ்வாறே சோழ பாண்டியன் என்ற அபிடேகப் பெயருடன் பாண்டி மண்டலத்தில் சோழநாட்டின் பிரதிநிதியாக இருந்த கங்கைகொண்ட சோழன் அங்கிருந்து மருத்துவர்களும், மந்திரவாதிகளும் அடங்கிய ஒரு சிறு படையைத் திரட்டிக் கொண்டு சோழ நாட்டுக்கு வந்தான். ஆனால் அவர்களும் தங்கள் வல்லமை முழுவதையும் காட்டிச் சில திங்கள் முயன்றும் வானவியின் பைத்தியத்தைத் தெளிவிக்க முடியவில்லை; தோல்வியுடன் திரும்பிச் சென்றனர்.

அடுத்ததாக மதுராந்தகனை எதிர்பார்த்தார் சோழதேவர். ஆனால் இரண்டு திங்களுக்கு அதிகமாகியும் அவன் யாரையும் அழைத்துக் கொண்டு வரவும் இல்லை; தந்தையின் ஓலைக்கு மறுஓலை அனுப்பவும் இல்லை. மாமன்னருக்கு மகளைப்பற்றிய கவலையே பெருங்கவலையாகிவிட்டது. என்னதான் பைத்தியமாக இருந்த அவளை அடைத்துப் போட்டுப் பிறருக்கு அவளால் தீங்கு ஏற்படாதவாறு பாதுகாப்புச் செய்துவிட்டாலும், அரண்மனையில் இப்படி ஒரு பைத்தியத்தை வைத்துக் கொண்டிருப்பது அரசகுடும்பத்துக்கு இழுக்கல்லவா? சோழ நாட்டுக்கே ஓர் அவமானமில்லையா? நாட்டின் அவமானம் நாடாளும் மன்னருக்கு மட்டும்தானா? அவர் மக்களுக்கும் உரித்தானதில்லையா? இது ஏன் மதுராந்தகனுக்குத் தோன்றவில்லை? ‘சிறிதும் பொறுப்பற்றவனாகத் தன் ஓலைக்கு மறுமொழிகூட அனுப்பாது வாளா இருக்கிறானே?…’

சோழதேவருக்குத் தமது மூத்த மைந்தன் மீது அளவற்ற சினம் உண்டாயிற்று. அவன் தனக்கு அடங்கி நடப்பதில்லை; தனது கட்டளைகளுக்கு உரிய மதிப்பு அளிப்பதில்லை என்ற மனக்குறை அவருக்கு எப்போதுமே உண்டு. இத்தடவை அது உச்ச நிலையை அடைந்துவிட்டது. உடனேயே அவர் மகனை எச்சரிப்பதுபோல் மற்றோர் ஓலையைத் தொண்டை மண்டலத்துக்கு அனுப்பினார்.

இந்த ஓலைக்கு மதுராந்தகனிடமிருந்து மறுமொழி வந்தது. ஆயினும் அது சோழதேவருக்கு முற்றிலும் திருப்தி அளிக்கும் விடையாக இருக்கவில்லை. அவனுடைய தந்தைக்கு அடங்காத் தன்மை அதில் நன்கு பிரதிபலிக்கத்தான் செய்தது. அவன் எழுதியிருந்தான்: “செய்வதையும் செய்துவிட்டு நீங்கள் என்மீது சினம் கொள்வதில் பொருள் இல்லை. வானவிக்குப் பைத்தியம் ஏற்பட நீங்களே முற்றிலும் காரணமாக இருந்தீர்கள். அவள் விக்கிரமாதித்தன் மீது கொண்டிருந்த அளவற்ற காதலையும், அவனோடு ஈராண்டு காலம் தனித்து வாழ்ந்ததையும் சற்றேனும் எண்ணிப் பாராமல், பெரிய தந்தை இராசேந்திர தேவர் அவனுக்கு அளித்திருந்த உறுதிமொழியையும் புறம்படுத்தி, குந்தளத்து இளவரசன் முறையாகத் திருமண ஓலையுடனும், அரசாங்க வரிசைகளுடனும் வந்தபோது அவமதித்து விரட்டினீர்கள். இந்தக் காதல் தோல்விதான் அவளுக்கு சித்தக் கலக்கத்தை உண்டாக்கியிருக்கிறது என்பதை எடுத்துக் காட்டி அதைப் போக்க, அவளை விக்கிரமாதித்தனுக்கு மணம் செய்து வைப்பது ஒன்றுதான் வழி என்று உளக்கலை வல்லுநர்கள் கூறியதையும் மனத்தில் கொள்ளாமல், இன்னும் மருத்துவம் என்றும், மாந்தரிகம் என்றும் பொருளையும், காலத்தையும் விரயம் செய்யத் துணியும் உங்கள் நோக்கம் எனக்குச் சற்றும் விளங்கவில்லை.”

முடங்கல் மேலும் தொடர்ந்தது:

“நான், ஆளும் மன்னராகிய உங்களுக்கு அடங்கியவன் என்பது மெய்தான். ஆயினும் தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்க முயலும் உங்கள் தவற்றை எடுத்துக் காட்டவேண்டியதும் என் கடமை என்று தோன்றியதால் இதை எழுதலானேன். தவறு இருப்பின் பொறுத்தருள்க. பணத்துக்கும் பரிசிலுக்கும் ஆசைப்பட்டு மருத்துவர்களிடையே யிருந்தும், மந்திர தந்திரங்கள் கற்றவர்களிடையேயிருந்தும், ஒரு பெரும்படை திரண்டு வரச் சித்தமாக இருக்கிறது. ஆயினும் அத்தகைய சோற்றுப்படையை திரட்டிவர நான் விரும்பவில்லை. உங்கள் மன நிறைவுக்காக ஒன்று வேண்டுமானால் செய்கிறேன். இங்கே சிவபோத அடியார் என்றொரு துறவி இருக்கிறார். குழந்தைப் பிராயத்திலேயே துறவை ஏற்று இமயத்தில் பலகாலம் தவமியற்றிய பின்னர் இப்போது உலக மக்களுக்குத் தமது தவத்தின் திறனால் நன்மைகள் பயக்க அவர் நாடுதோறும் சுற்றி வருவதாக மக்கள் சொல்லிக் கொள்ளுகிறார்கள். அவர் சிலநாட்கள் திருநீறு மந்திரித்துக் கொடுத்தால் எந்தவிதமான உடல் நோயும், எந்தவிதமான மனநோயும் நீங்கி விடுவதாகவும் கூறுகிறார்கள். இதெல்லாம் எத்தனை தூரம் மெய்யோ, நான் அறியேன். ஆயினும் பாராட்டத் தகுந்த பண்பு ஒன்று அவரிடம் இருக்கிறது. தமது உதவிகளுக்கு உணவையன்றி வேறு எதையும் அவர் ஊதியமாகப் பெற்றுக்கொள்வதில்லை. அத்துறவியை அழைத்து வரட்டுமா? உங்கள் ஓலை கண்டு ஆவன செய்கிறேன். அதோடு அவருடைய வருகையால் நல்ல பயன் கிட்டினாலும் சரி, தீய பயன் கிட்டினாலும் சரி, அதற்கு நான் எவ்வகையிலும் பொறுப்பாக மாட்டேன் என்பதையும் முதலிலே கூறிவிட விரும்புகிறேன்.”

மகனின் ஓலையைப் படித்ததும் சோழதேவருக்கு முன்னிலும் அதிகமான சினம் ஒருபுறம் எழுந்ததெனினும், துறவிகளிடம் அவருக்கு ஏற்பட்டிருந்த மட்டற்ற பக்தியால் மகளின் மனநோயை இறைவனது அருளைப் பெற்றவர்களால் நிச்சயம் போக்கிவிட முடியும் என்ற உறுதியும் மற்றொருபுறம் எழுந்து மகிழ்ச்சியை அளித்தது. சிவபோத அடியாரை உரிய மரியாதைகளுடன் அழைத்து வருமாறு அன்றே அவர் மதுராந்தகனுக்கு மறுஓலை அனுப்பினார்.

சில நாட்களுக்குப் பிறகு அத்துறவியுடன் கங்கைகொண்ட சோழபுரம் வந்தடைந்தான் மதுராந்தகன்,

அடியாரைப் பார்த்ததும் சோழ தேவருக்கு அங்கமெல்லாம் பூரித்தது. அத்தனை அருள்வடிவாக அவர் தோற்றமளித்தார். வயதின் முதிர்ச்சியை அவருடைய வெண்ணிறச் சடை முடியும், அடர்ந்து வளர்ந்து முகத்தில் பாதியை மூடியிருந்த மீசை-தாடியும் எடுத்துக்காட்டிய போதிலும், தவவலியால் உரம் பெற்றிருந்த உடற்கட்டு இளமையையே பிரதிபலித்தது. சிவபோத அடியாரை துறவிகளுக்குறிய மரியாதையுடன் வரவேற்று, ஆசனத்தில் அமர்த்தி பாத பூஜைகள் செய்து வணங்கிப் பணிவுடன் தமது குறையை வெளியிட்டார் வீரராசேந்திரர்.

“எல்லாம் அவன் செயல்; எல்லாம் வேலன் செயல். நம்மிடம் என்ன வல்லமை அப்பா இருக்கிறது? உலகை ஆளும் இறைவன் உன் மகளுக்கு எவ்வழி விதித்திருக்கிறானோ, அவ்வழிதான் யாவும் நடக்கும். இருப்பினும் ஒரு மண்டல காலம் நான் அவளுக்குத் திருநீறு மந்திரித்துக் கொடுக்கிறேன். இறைவனின் திருஉள்ளம் இரங்குகிறதா பார்க்கலாம்!” என்றார் சிவபோத அடியார்.

பின்னர் வானவியை அடைத்துப் போட்டிருக்கும் அறைக்குத் தம்மை அழைத்துப் போக பணிந்தார் அவர். அங்கு சென்றதும் “கதவைத் திறவுங்கள்!” என்றார்.

“இப்பொழுது வேண்டாம், அடிகளே. நான் முதலில் கவசமணிந்த இரு வீரர்களை அறையின் உள்ளே அனுப்பி அவளுடைய கை-கால்களைப் பிணைத்துவிட்டு வரச்செய்கிறேன். தொடர்ந்து விலங்கிட்டுருந்ததன் காரணமாக அவளுடைய கைகளிலும், கால்களிலும் புண் ஏற்பட்டு விட்டமையால் நேற்றுதான் அவற்றை அகற்றச் செய்தேன். விலங்கிடாமல் இருக்கும்போது தாங்கள் உள்ளே செல்வது அபாயமாகும்!” என்றார் வீரராசேந்திரர்.

சிவபோத அடியார் கல கலவென நகைத்தார். அவர் தமது திருநீற்றுப் பையிலிருந்து பிடி திருநீற்றைக் கையிலெடுத்துக் கொண்டு “உங்களுடைய இரும்பு விலங்குகளைவிட வலிமை வாய்ந்தது அப்பனே இது. அச்சமின்றிக் கதவைத் திறக்க கட்டளையிடு!” என்றார்.

சோழ வேந்தருக்கு உள்ளூரப் பயந்தான். இருந்தாலும் அந்தப் பெரியாரின் சொற்களுக்கு மதிப்பளிக்க வேண்டி, கதவைத் திறக்கப் பணிந்தார். கதவு திறக்கப் பட்டதோ, இல்லையோ, ‘வீல்’ என்று கத்தியவாறு இரையைக் கவ்வ வரும் வனவிலங்கைப் போல அடியாரை நோக்கிப் பாய்ந்து வந்தது பைத்தியம். அடியார் “சிவோகம்! சிவோகம்” என்று இறைவனை விளித்தவாறு கையிலிருந்த திருநீற்றை வானவியை நோக்கி ஊதினார்.

கூடியிருந்தோர் வியந்து நிற்க மறுகணம் பைத்தியம் தனது ஆர்ப்பாட்டம் எல்லாம் அடங்கிச் செயலற்று நின்றது. அவளை அப்படியே அவளின் படுக்கைக்கு அழைத்துசென்று படுக்க வைத்துவிட்டு அறைக்கு வெளியே திரும்பிவந்தார் சிவபோத அடிகள். “அப்பனே, என்னப்பன் சிவன் அருள்புரிவான் என்றே தோன்றுகிறது. நீங்கள் அனைவரும் போகலாம். நான் இன்றிலிருந்தே என் மந்திரிப்பைத் தொடங்கி விடுகிறேன்,” என்றார்.

அவருடைய திருநீற்றின் திறமையைக் கண்டு மெய் மறந்தவர்களாய் யாவரும் திரும்பிச் சென்றனர். அவர்கள் சென்ற பிறகு, சிவபோத அடியார் வானவியை அடைத்திருந்த அறைக்குள்ளே வந்து கதவை உட்புறம் மூடித் தாழிட்டார். மறுகணம், “என் அன்பே!” என்று தாவி வந்து அவரை அணைத்துக் கொண்டாள் வானவி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 7மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 7

அத்தியாயம் – 7. மந்திராலோசனை        வேங்கியிலிருந்து வந்த தூதன் உடனே நாடு திரும்ப வேண்டுமென்று விடைபெற்றுச் சென்று விட்டான். எவ்வித அதிர்ச்சியும்மின்றி அச்செய்தியை அமைதியுடன் ஏற்று நின்ற குலோத்துங்கனுக்கும் சோழ தேவர் விடை கொடுத்து அனுப்பினார். அங்கு ஒரு தூணருகில்

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 12மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 12

இரண்டாம் பாகம் அத்தியாயம் – 2. விடுதலையும், அதன் பின் வந்த விளைவும்!        வானவியையும், குந்தள விக்கிரமாதித்தனையும் கங்கை கொண்ட சோழப்புரத்துப் பாதாளச் சிறையிலே பதுக்கி வைத்துக்கொண்டு காலமெனும் புள்ளினம் இருமுறை சிறகு உதிர்த்து விட்டது. வெளி உலக நிகழ்ச்சிகள்

மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 18மாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 18

இரண்டாம் பாகம் அத்தியாயம் – 8. மீண்டும் பாதாளச் சிறை! மீண்டும் போர்!        வீரராசேந்திரரின் உடலிலிருந்த உதிரமெல்லாம் முகத்துக்கு ஏறியிருந்தது. பெயருக்கேற்ப வீரக்களை ததும்பும் அந்த முகம் இபோது அனலென எரிந்தது. கதவு திறக்கப்பட்டதுதான் தாமதம்; “எங்கே அந்தத் துரோகி?