“கண்ணால் கண்டதும் பொய்; காதால் கேட்டதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்;” என்று ஒரு முதுமொழி வழங்குகின்றது. மக்கள் இதன் உண்மையை உணர்ந்து நடக்காத காரணத்தினால் உலகத்தில் எத்தனையோ தவறுகள் நேரிட்டு விடுகின்றன. பேதை கல்யாணி இப்போது அப்படிப்பட்ட தவறுதான் செய்தாள். கண்ணால் கண்டதை நம்பிவிட்டாள். நம்பினால் தான் என்ன? அதற்காக அப்படிப் பைத்தியம் பிடித்துவிட வேண்டுமா? ஐயோ, கல்யாணி! என்ன காரியம் செய்து விட்டாய்? என்ன விபரீதத்துக்குக் காரணம் ஆனாய்? – ஆனால் உன்னைச் சொல்லித்தான் என்ன பயன்? விதியின் சதியாலோசனைக்கு நீ என்ன செய்வாய்?
கல்யாணி செய்த தவறு எத்தகையது என்பதை நாம் தெரிந்து கொள்வதற்கு, சற்றுப் பின்னோக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது. கொஞ்சம் சென்னை வரையில் பிரயாணம் செய்து அங்கே நடந்தவற்றைக் கவனித்தல் அவசியமாயிருக்கிறது.
“சங்கீத சதாரம்” எதிர்பாராத காரணத்தினால் நடுவில் தடைப்பட்டு நின்ற இரவுக்குப் பிறகு இரண்டு மூன்று தினங்கள் வரையில், அந்த நாடகக் கம்பெனியைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் போலீஸ் கண்காணிப்புக்கும் விசாரணைக்கும் உட்பட்டிருந்தார்கள். ஆனால் என்ன விசாரணை செய்துங்கூட அவர்களிடமிருந்து எவ்விதத் தகவலும் தெரிந்து கொள்ள முடியவில்லை. தாங்கள் சென்னைக்கு வரும் வழியில் தற்செயலாக ரயிலில் வந்து சேர்ந்தவன் முத்தையன் என்றும், தங்களிடம் “பலராம்” என்று பெயர் கொடுத்திருந்தான் என்றும், சிறந்த நடிப்புத் திறமை அவனிடம் இருந்தபடியால் தங்கள் கம்பெனியில் சேர்த்துக் கொண்டதாகவும் மற்றபடி அவனைப் பற்றித் தங்களுக்கு ஒன்றுமே தெரியாதென்றும் சொல்லிவிட்டார்கள். உண்மையிலேயே, அவர்களில் ஒருவனைத் தவிர மற்றவர்களுக்குத் தெரிந்திருந்ததே அவ்வளவுதான் அல்லவா?
ஆகவே கமலபதி ஒருவன் தான் விசாரணையின் போது பொய் சொல்ல வேண்டியதாயிருந்தது. அது விஷயத்தில் அவன் கொஞ்சங்கூடத் தயக்கம் காட்டாமல் அழுத்தமான பொய்யாகவே சொல்லிச் சமாளித்துக் கொண்டான். அவன் விஷயத்தில் விசேஷ கவனம் செலுத்துவதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லாதபடியால் சந்தேகமும் ஏற்படவில்லை.
இரண்டு மூன்று நாளைக்குப் பிறகு, போலீஸார் நாடகக் கம்பெனியின் கண்காணிப்பை நிறுத்திவிட்டார்கள். அதில் ஒன்றும் பிரயோஜனமில்லையென்று அவர்களுக்கு நிச்சயமாகி விட்டது. அவ்வாறே அவர்கள் அபிராமியையும் ஒரு நாள் விசாரணை செய்து விட்டு அவளிடமிருந்து ஓடிப்போனவனைப் பற்றி எவ்விதத் தகவலும் தெரிந்து கொள்ள வழியில்லையென்று விட்டு விட்டார்கள். அந்த அநாதைப் பெண்ணிடம் சகோதரி சாரதாமணிதேவி முன்னைவிடப் பதின்மடங்கு விசுவாசம் காட்டித் தேறுதல் கூறி வந்தார். ஆனாலும் அபிராமியின் உள்ளத்தில் ஒரு கணமேனும் அமைதி ஏற்படவேயில்லை. சில சமயம் தன்னுடைய அண்ணனின் சாமர்த்தியத்தை நினைத்து அவள் வியப்படைவாள்; அப்போது அவளுக்கு மிகவும் பெருமையாய்க்கூட இருக்கும். அவன் உண்மையிலேயே கள்ளனாயிருந்து, நாடகத்திலும் கள்ளன் வேஷம் போட்டதை நினைத்துப் புன்னகை கொள்வாள். அவனுடைய நடிப்பை நினைக்கும்போது அவளுக்குச் சிரிப்புக் கூட வரும். ஆனால் இரண்டு மாதமாக அவன் சென்னை நகரில் தங்கியிருந்தும் தன்னை வந்து பார்க்கவில்லையென்பதை எண்ணி உள்ளம் நைவாள். பிறகு, தான் மூர்ச்சையடைந்து விழுந்தபடியால் தான் அவன் இன்னான் எனத் தெரிந்ததென்பதையும், அதனால் தான் அவன் ஓட வேண்டியிருந்த தென்பதையும் எண்ணும் போது, அவளுடைய நெஞ்சு வெடித்து விடும் போலிருக்கும். “ஐயோ! இந்தப் பாவியினால் முத்தையனுக்கு எப்போதும் துன்பந்தானா?” என்று எண்ணி உருகுவாள். அவன் மறுபடி தப்பித்துக் கொண்டு போனதை நினைக்கும் போது அவளுக்கு உற்சாகம் உண்டாகிவிடும்.
“அபிராமி! இந்தப் பையன் உன்னுடைய அண்ணனின் சிநேகிதன் என்று சொல்கிறான். முகத்தைப் பார்த்தால் பொய் சொல்லப்பட்டவனாகத் தோன்றவில்லை. உன் அண்ணன் உனக்கு ஏதோ சமாசாரம் சொல்லியிருக்கிறானாம். இதோ பக்கத்து அறையில் உட்கார்ந்து பேசுங்கள். சரியாகப் பதினைந்து நிமிஷம் கொடுத்திருக்கிறேன்” என்று சகோதரி சாரதாமணி கூறினார்.
இப்படி அவர் சொல்லி வரும்போதே அபிராமி ஆவல் ததும்பும் கண்களால் கமலபதியை நோக்கினாள். அடுத்த அறைக்குள் சென்றதும், “அம்மாள், சொன்னது நிஜந்தானா? நீங்கள் என் அண்ணனின் சிநேகிதரா? எனக்குக் கூட உங்களை எங்கேயோ பார்த்த நினைவாயிருக்கிறதே!” என்றாள்.
“ஆமாம்; பத்து நாளைக்கு முன்பு என்னுடைய விதவைத் தங்கைக்கு இந்த வித்யாலயத்தில் ஒரு இடம் கிடைக்குமா? என்று பார்ப்பதற்காக வந்தேன். அது உங்களுடைய தலைவிக்கு ஞாபகம் இல்லை. உனக்கு நினைவு இருப்பதாகத் தோன்றுகிறது” என்றான் கமலபதி.
“ஐயோ பாவம், அப்படி ஒரு தங்கை உங்களுக்கு இருக்கிறாளா? அவளை வித்யாலயத்தில் சேர்த்து விட்டீர்களா?”
“இல்லை; வித்யாலயத்தில் சேர்ப்பதற்குள் அவள் செத்துப் போனாள். நானே கொன்றுவிட்டேன்” என்று சொல்லிவிட்டு கமலபதி சிரித்தான்.
“இந்த ஆசாமிக்குப் பைத்தியம் போல அல்லவா இருக்கிறது?” என்று அபிராமி எண்ணி, அவனை வெருண்ட கண்களுடன் நோக்கினாள்.
“இல்லை அம்மா! எனக்குப் பைத்தியமில்லை. உண்மையில் என்னுடைய தங்கையைப் பத்து நாளைக்கு முன்பு தான் நான் சிருஷ்டித்தேன். உடனே அவளை விதவையாக்கினேன். அவளால் ஆகவேண்டிய காரியம் முடிந்ததும், கொன்றே விட்டேன். அப்படி அவளை நான் சிருஷ்டித்தது, என்னுடைய ஆத்ம சிநேகிதன் ஒருவனுடைய தங்கையைத் தேடுவதற்காகத்தான். உன்னை இங்கே கண்டு பிடித்ததும்…”
“நிஜமாகவா சொல்கிறீர்கள்? என்னைத் தேடும்படி என் அண்ணன் உங்களை அனுப்பினானா? என் ஞாபகம் அவனுக்கு இருந்ததா?”
“உன் ஞாபகத்தைத் தவிர வேறு ஞாபகமே அவனுக்குக் கிடையாது, அம்மா! உண்மையில், உன்னைத் தேடிக் கொண்டு தான் அவன் சென்னைப் பட்டணத்துக்கு வந்தது. வந்த இடத்திலே நாடகக் கம்பெனியில் சேர்ந்தான்…”
“என்ன யோசிக்கிறாய்?” என்று கமலபதி கேட்டான்.
“உங்களைப் பார்த்ததிலிருந்து, ஏதோ ஞாபகம் தொண்டையிலிருக்கிறது, மனத்திற்கு வர மாட்டேனென்கிறது. அன்று இந்த வித்யாலயத்தில் உங்களைப் பார்த்த ஞாபகமே எனக்கில்லை. வேறு எங்கேயோ பார்த்தது போலிருக்கிறது. உங்களுக்கு நினைவில்லையா?”
“ஆமாம்; இன்னும் ஒரு இடத்தில் பார்த்திருக்கிறாய். அதுவும் சமீபத்தில் தான்…நான் தான் சதாரம்” என்றான் கமலபதி.
“ஓஹோ?” என்று சொல்லி அபிராமி சிரித்தாள். பளிச்சென்று அவளுக்கு ஞாபகம் வந்து விட்டது. அவனுடைய ஸ்திரீ வேஷத்தை நினைத்த போது அவளுக்குத் தாங்கமுடியாமல் சிரிப்பு வந்தது. பக்கத்து அறையில் இருந்த சாரதாமணி கோபித்துக் கொள்ளப் போகிறாரே என்று பயந்து வாயை மூடிக்கொண்டாள்.
கமலபதி அவளுக்கு ஆறுதல் கூறி தைரியம் சொன்னான். “இப்போது ஒன்றும் மோசம் போய்விடவில்லை, அபிராமி! உன் அண்ணனை தப்புவிக்கும் பொறுப்பு என்னுடையது. இந்த நிமிஷத்தில் அவன் எங்கேயிருக்கிறான் என்று எனக்குத் தெரியும். இன்னும் இரண்டு நாளில் அவ்விடத்துக்குக் கிளம்பப் போகிறேன். எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டேன். அடுத்த மாதம் இந்த நாளில் உன் அண்ணன் இந்த நாட்டிலேயே இருக்க மாட்டான். அதற்கு நான் ஆயிற்று! நீ கவலைப்படாதே!” என்றான்.