Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள் கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 28

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 28

அத்தியாயம் 28 – சந்திப்பு

     பஞ்சநதம் பிள்ளை ஜீவியவந்தராயிருந்த காலத்தில் கல்யாணி தன்னுடைய இருதயமாகிய கோட்டையை கண்ணுங் கருத்துமாய்ப் பாதுகாத்து வந்தாள். அதில் முத்தையன் பிரவேசிப்பதற்கு அவள் இடங்கொடுக்கவில்லை. அவ்வாறு இடங்கொடுப்பது பாவம் என்று அவள் கருதினாள். ஆகவே, முத்தையனுடைய நினைவு வரும்போதெல்லாம் சட்டென்று வேறு குடும்ப காரியங்களில் மனத்தைச் செலுத்தி அந்த நினைவை போக்கடித்துக் கொள்வாள். “ஸ்வாமி பாவ எண்ணம் என் மனத்தில் தோன்றாமல் காப்பாற்று” என்று கடவுளை வேண்டுவாள். சீதை, தமயந்தி, நளாயினி முதலிய கற்பரசிகளை நினைத்து, மனத்தை உறுதிப்படுத்திக் கொள்வாள். இப்படிச் சதா விழிப்புடனிருந்து மனத்தைக் கட்டுப்படுத்தி வைப்பதிலேயே கவனமாயிருந்தவளுடைய முகத்தில் பஞ்சநதம் பிள்ளை சிரிப்பையும் குதுகலத்தையும் காணாமற் போனது வியப்பில்லையல்லவா?

புருஷன் உயிர் வாழ்ந்த காலத்தில் கல்யாணி தன்னுடைய உள்ளத்தை எவ்வளவு தூரம் கட்டுப்படுத்தி வைத்திருந்தாளோ, அவ்வளவுக்கு அவருடைய மரணத்திற்குப் பிறகு அதைக் கட்டில்லாமல் சுயேச்சையாக விட்டுவிட்டாள். அதிலும் அவர் தன்னை விவாக பந்தத்திலிருந்து விடுதலை செய்வதாகச் சொல்லி விட்டபடியால், இனி முத்தையனைப் பற்றி நினைப்பதில் யாதொரு தவறுமில்லையென்று அவள் கருதினாள். அப்படிக் கட்டவிழ்த்து விடப்பட்ட அவளுடைய உள்ளம் தட்சணமே முத்தையனைச் சென்று அடைந்து, பிறகு அவனை விட்டு அசையவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தது. கனவிலும் முத்தையனுடைய நினைவைத் தவிர வேறு நினைவே அவளுக்கு இல்லாமல் போயிற்று.

*****

     முத்தையன் இப்போது எங்கே இருக்கிறான், என்ன செய்கிறான் என்று அறிய அவள் அளவில்லாத ஆவல் கொண்டாள். ஒரு வேளை அவன் கல்யாணம் செய்து கொண்டிருப்பானோ என்ற நினைவு தோன்றும்போது, அவளுடைய நெஞ்சில் யாரோ ஈட்டியினால் குத்துவது போன்றிருக்கும்.

“இருக்காது; ஒரு நாளும் இருக்காது” என்று எண்ணி மனத்தைத் திடப்படுத்திக் கொள்வாள். “அவன் எங்கேயோ? நாம் எங்கேயோ? இனிமேல் எங்கே அவனைக் காணப் போகிறோம்?” என்று எண்ணி ஒரு சமயம் ஏக்கமுறுவாள். “இல்லை! இல்லை! கட்டாயம் இந்த ஜன்மத்தில் அவனை மறுபடியும் பார்க்கத்தான் போகிறேன். அவனிடம் நான் கொண்ட அன்பு உண்மையானதானால், அவனை எப்படிப் பார்க்காமலிருக்க முடியும்?” என்று தேற்றிக் கொள்வாள். “அந்தக் காலத்திலேயே ‘நீ பணக்காரி; நான் ஏழை’ என்று சொல்லிக் காட்டினானே! இப்போது பெரிய பணக்காரியாகி விட்டேனே! அதனால் அவனுடைய வெறுப்பு அதிகமாகுமோ என்னமோ?” என்று ஒரு சமயம் பீதியடைவாள். “அதெல்லாம் இல்லை. இதற்குள் முத்தையன் தன் மேல் தவறு என்று உணர்ந்திருப்பான். ‘இவ்வளவு செல்வமும் உன்னுடையது; உன் இஷ்டம் போல் செய்யலாம்’ என்று நான் சொல்வேன். உடனே அவனுடைய மனது இளகிவிடும்” என்று இன்னொரு சமயம் உற்சாகப்படுவாள்.

முத்தையன் பூங்குளத்தில் இல்லை, எங்கேயோ மடத்தில் கணக்குப் பிள்ளையாய்ப் போய்விட்டான் என்ற சமாசாரம் மட்டும் அவளுக்கு அவள் தகப்பனார் மூலமாய்த் தெரிந்திருந்தது. அவன் இருக்குமிடம் எப்படிக் கண்டு பிடிப்பது, அவனை எப்படிச் சந்திப்பது என்பது பற்றி அவள் ஆயிரம் யோசனை செய்தாள். ஆனால் ஒவ்வொன்றிலும், ஏதாவது ஒரு குறை தோன்றிற்று.

இப்படிப்பட்ட நிலைமையிலேதான், கொள்ளிடக் கரைத் திருடனைப் பற்றி வதந்தி அவள் காதில் விழுந்தது. அவனுடைய பெயர் முத்தையன் என்று கேட்டதும், அவள் உடம்பு சிலிர்த்தது. அவனுடைய பூர்வோத்திரத்தைப் பற்றிக் கொஞ்சம் விசாரித்து, மடத்தில் கணக்குப் பிள்ளையாயிருந்தவன் என்று தெரிந்ததும், அவளுடைய சந்தேகங்கள் நிவர்த்தியாயின. அப்போதே, முத்தையனைச் சந்திப்போமா என்ற கவலையும் அவளுக்குத் தீர்ந்து போயிற்று. கட்டாயம் ஒரு நாள் தன்னுடைய வீட்டிலும் அவன் திருட வருவான் என்ற எண்ணம் அவள் மனத்தில் தோன்றி, அது நாளுக்கு நாள் உறுதிப்பட்டு வந்தது. அப்போது எவ்வாறு அவனை வரவேற்பது, என்ன பேசுவது என்றெல்லாம் சிந்திக்கலானாள்.

அப்படி அவன் வருங்காலத்தில் வீட்டில் மனுஷர்கள் அதிகமாக இருக்கக்கூடாதல்லவா? இதற்காகவே, கோபித்துக் கொண்டு ஊருக்குப் போன அவளுடைய தகப்பனாரை அவள் திரும்பிக் கூப்பிடவில்லை. திருச்சிற்றம்பலம் பிள்ளை தம்முடைய இளைய சம்சாரம், குழந்தைகளுடன் தாமரை ஓடைக்கே வந்துவிடத் தயாராயிருந்தார் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தும், அதைப் பற்றி அவள் பிரஸ்தாபிக்கவில்லை.

முத்தையனை எதிர்பார்த்து அவள் இராத்திரியில் அநேக நாள் தூங்குவதே கிடையாது. அப்படித் தூங்கினாலும், ஏதாவது கொஞ்சம் சத்தம் கேட்டால் திடுக்கென்று எழுந்து விடுவாள். அவன் எப்படி வருவான்? ஓட்டு மேலால் ஏறிக் குதித்து வருவானா? கன்னம் வைத்து வருவானா? அல்லது தீவட்டிக் கொள்ளைக்காரர்களைப் போல் பகிரங்கமாய் வந்து வாசல் கதவை இடித்து, “கதவைத் திற” என்று அதட்டுவானா? – இப்படியெல்லாம் எண்ணமிடுவாள். அப்படி வாசல் கதவை அவன் இடித்து, தான் கையில் விளக்குடன் போய்க் கதவைத் திறந்தால் அவன் எப்படித் திகைத்து நிற்பான் என்பதை நினைத்து நினைத்துத் தானே சிரித்துக் கொள்வாள்.

நிலவு எரிக்கும் இரவு நேரங்களில் அவள் வீட்டு முற்றத்தில் உட்கார்ந்து வானத்தையே பார்த்துக் கொண்டிருப்பாள். “இந்த நிலவு முத்தையன் இருக்கும் இடத்திலும் இருக்குமல்லவா? இந்தச் சந்திரனை அவனும் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருப்பானல்லவா?” என்று எண்ணமிடுவாள். “ஒரு வேளை இந்த நேரத்தில் அவனும் என்னைப் பற்றி நினைக்கக் கூடுமல்லவா?” என்று எண்ணும் போது அவளுக்கு உடல் சிலிர்க்கும்.

இருட்டுக் காலத்தில் அவள் முற்றத்தில் உட்கார்ந்து, வானத்தில் மினுக்கிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருப்பாள். “இந்த நேரத்தில் முத்தையன் கொள்ளிடக் கரையில் எங்கேயோ தன்னந் தனியாய்ப் படுத்திருப்பான்; இந்த நட்சத்திரங்களுடனே அவன் பேசிக் கொண்டிருப்பான்” என்று எண்ணுவாள். அச்சமயம் இரவு நேரங்களில் கொள்ளிடக்கரையில் நரிகள் ஊளையிடுமென்பது அவள் நினைவுக்கு வரும். “ஒரு வேளை இருபது முப்பது நரிகளாகச் சேர்ந்து முத்தையனை வளைத்துக் கொண்டால்…” என்று நினைக்கும் போது அவளுடைய உடம்பெல்லாம் பதறும். சில சமயம் அவளுடைய மனோபாவத்தில், நரிகள் போலீஸ்காரர்களாக மாறிவிடும். “ஐயோ! அப்படி ஒன்றும் நேராமல் இருக்க வேண்டுமே!” என்று அவள் பதை பதைப்பாள்.

முத்தையன் திருடனாய்ப் போனது பற்றி அவளுக்கு அவனிடம் எவ்விதத்திலும் அவமதிப்பு ஏற்படவில்லை. முத்தையன் தப்புக் காரியம் எதுவும் செய்வானென்று அவளால் எண்ண முடியவில்லை. ‘இந்தப் புலிப்பட்டி ரத்தினத்தைப் போன்ற பாதகர்களைக் கொள்ளையடித்தால் என்ன பிசகு’ என்ற நினைவே மேலிட்டிருந்தது.

முத்தையனைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதில் அவள் இப்போது ரொம்பவும் விருப்பம் கொண்டிருந்தாள். காரியஸ்தர் முதலியாரிடமும் அக்கம் பக்கத்தாரிடமும் அடிக்கடி அவனைக் குறித்துப் பேசுவாள். பிரசித்தமான அத்திருடனைப் பற்றி அச்சமயம் எல்லாரும் பேசிக் கொண்டிருந்தார்களாதலால், இவளும் எவ்விதச் சந்தேகத்துக்கும் இடமின்றி அவனைப் பற்றிப் பேசுவது சாத்தியமாயிருந்தது. அவனுடைய பிரதாபங்களை யாராவது வியந்து பேசினால் இவள் அவனை இகழ்ந்து பேசுவாள். யாராவது அவனைத் தூற்றினாலோ, இவள் அவனுக்காக பரிந்து பேசுவாள். “ஆமாம்; உங்கள் வீட்டுக்கு வந்து கொள்ளையடித்தால் தெரியுமே” என்று அவர்கள் சொன்னால், “என் வீட்டுக்கு அவன் வரமாட்டானே? ஓடுகிற ஆண் பிள்ளைகளைக் கண்டால் தான் திருடர்கள் விரட்டுவார்கள்! பெண் பிள்ளைகளைக் கண்டாலே பயந்து ஓடிப் போவார்கள்!” என்பாள்.

முத்தையன் திருடனாகப் போனதன் காரணம் பெரிதும் மிகைப்படுத்தப்பட்ட வதந்தியாகப் பரவியிருந்தது. அவனுடைய தங்கையை பண்டார சந்நிதியே கெடுக்கப் பார்த்தாரென்றும், முத்தையன் அவரைக் குற்றுயிராய்ப் பண்ணி விட்டான் என்றும், இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டார்கள். அபிராமிக்குக் கஷ்டம் நேர்ந்த விஷயம் கல்யாணியின் உள்ளத்தில் சிறிது மகிழ்ச்சியை ஊட்டிற்று. “அந்த அபிராமிக்காகத்தானே என்னை முத்தையன் புறக்கணித்தான்? இப்போது என்ன ஆயிற்று?” என்று ஒரு கணம் உவகையோடு எண்ணினாள். அப்புறம் அந்தப் புத்தி மாறிற்று. “ஐயோ! அந்தப் பெண் இப்போது எங்கே அநாதையாய்த் தவிக்கிறாளோ?” என்று உருகினாள். அவளை அழைத்துக் கொண்டு வந்து தன்னோடு வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டாள். ஆனால் அதனால் என்ன சந்தேகம் உண்டாகுமோ என்னமோ? முதலில் முத்தையனைப் பார்த்து, அவனைத் திருட்டுத் தொழிலை விடச் சொன்ன பிறகு தான், அபிராமியைத் தேட வேண்டுமென்று தீர்மானித்தாள்.

நாளாக ஆக, முத்தையனைப் பார்க்க வேண்டுமென்ற அவளுடைய ஆவல் அளவிலடங்காமல் பெருகிற்று. “முத்தையா! முத்தையா! நீ எங்கெங்கேயோ, யார் யார் வீட்டுக்கெல்லாம் திருடப் போகிறாயே? இந்தப் பாவியின் வீட்டுக்கு வரக்கூடாதா?” என்று அவளுடைய இருதயம் கதறியது.

*****

இப்படிப்பட்ட நிலையில்தான், ஒரு நாள் இராத்திரி முத்தையன் உண்மையாகவே அவளுடைய வீடு ஏறிக்குதித்து வந்தான். அவளைப் பார்த்து அவன் பிரமித்து நின்றான். அந்த சந்தர்ப்பத்தில் அவனுடன் என்ன பேச வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் கல்யாணி எத்தனையோ நாளாக யோசித்து வைத்திருந்தாளாதலால், பளிச்சென்று “முத்தையா! உனக்கு என் நகைகள் தானா வேண்டும்?” என்று கேட்டாள்.

அதன் பிறகு அவள் தொடர்ந்து சொல்ல எண்ணியிருந்த வார்த்தைகளெல்லாம் அவளுடைய நெஞ்சிலேயே அமுங்கிப் போயின. அவற்றைச் சொல்ல அவளுக்குச் சந்தர்ப்பமே கிடைக்கவில்லை.

கல்யாணியைப் பார்த்ததும் ஒரு கணம் திகைத்துப் போன முத்தையன் அடுத்த கணத்தில் சொல்ல முடியாத அவமானம் அடைந்தான். “ஆகா! இவள் வீட்டிலா திருட வந்தோம்?” என்று நினைத்த போது அவன் உடம்பும் உள்ளமும் குன்றிப் போயின. தட்சணமே அவன் வந்த வேகத்துடனே திரும்பினான். ஒரு தாவுத் தாவிக் கூரை மீதேறி அடுத்த கணம் மாயமாய் மறைந்து போனான்.

ஓடு நொறுங்கிய சத்தமும் கொல்லையில் இரண்டு தடவை விஸில் அடித்த சத்தமும் மட்டும் கேட்காமலிருந்திருந்தால் கல்யாணி இது அவ்வளவும் தன்னுடைய மனப்பிராந்தியில் ஏற்பட்ட சம்பவங்களே என்று எண்ணியிருப்பாள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 38கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 38

அத்தியாயம் 38 – “ஐயோ! என் அண்ணன்!” அன்றிரவு வழக்கம் போல், “சங்கீத சதாரம்” நாடகம் நடந்து கொண்டிருந்தது. கமலபதி சதாரம் வேஷத்தில் மேடையில் வந்து நடித்துக் கொண்டிருந்த போது, தற்செயலாக அவனுடைய பார்வை அபிராமியின் மீது விழுந்தது. ஒரு நிமிஷம்

கல்கியின் பார்த்திபன் கனவு – 20கல்கியின் பார்த்திபன் கனவு – 20

அத்தியாயம் 20 துறைமுகத்தில் அன்றிரவு குந்தவி சரியாகத் தூங்கவில்லை. சோழ ராஜகுமாரனுடைய சோகமும் கம்பீரமும் பொருந்திய முகம் அவள் மனக்கண்ணின் முன்னால் இடைவிடாமல் தோன்றி அவளுக்குத் தூக்கம் வராமல் செய்தது. நள்ளிரவுக்குப் பிறகு சற்றுக் கண்ணயர்ந்த போது, என்னவெல்லாமோ பயங்கரமான கனவுகள்

சாவியின் ஆப்பிள் பசி – 24சாவியின் ஆப்பிள் பசி – 24

ஷூட்டிங் முடிந்ததும் சாமண்ணா சோர்வுடன் ஸெட்டுக்கு வெளியே வந்தபோது, அங்கே இன்னும் சகுந்தலா காத்திருப்பதைப் பார்த்தான். கண்கள் சற்று இடுங்கின. “இங்கேயா இருக்கீங்க?” என்றான். “ஆமாம் சாமு! உங்களுக்காகக் காத்துக்கிட்டு” என்றாள். “எனக்கா! எனக்கு எங்கேஜ்மெண்ட் இருக்கே!” சகுந்தலா முகம் சுண்டியது.