Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள்,பார்த்திபன் கனவு கல்கியின் பார்த்திபன் கனவு – 66

கல்கியின் பார்த்திபன் கனவு – 66

அத்தியாயம் 66
சக்கரவர்த்தி கட்டளை

நெருங்கி வந்த படகுகளைப் பார்த்தபடி சற்று நேரம் திகைத்து நின்ற விக்கிரமன், சட்டென்று உயிர் வந்தவனைப் போல் துடித்துப் பொன்னனைப் பார்த்து, “பொன்னா! எடு வாளை!” என்று கூவினான். பொன்னனும் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். விக்கிரமனுடைய குரல் கேட்டதும், அவன் விரைந்து விக்கிரமன் அருகில் வந்து, “மகாராஜா! எனக்கு ஒரு வரம் கொடுக்க வேண்டும்” என்றான். “வரங்கேட்க நல்ல சமயம் பார்த்தாய், பொன்னா! சீக்கிரம் கேட்டுவிடு. ஆனால், என்னிடம் என்ன இருக்கிறது நீ கேட்பதற்கு?” என்று சிறிது வியப்புடன் கூறினான் விக்கிரமன். “மகாராஜா! மாரப்பபூபதியின் ஆட்களுடன் தாங்கள் சண்டையிடக்கூடாது. அவர்கள் ரொம்பப் பேர், நாமோ இரண்டு பேர்தான்…” “பொன்னா! நீதானா இப்படிப் பேசுகிறாய்? உனக்கும் சோழ நாட்டு வீர வாசனை அடித்துவிட்டதா?” என்றான் விக்கிரமன். “இல்லை, மகாராஜா! என் உயிருக்கு நான் பயப்படவில்லை. இந்த அற்ப உயிரை எந்த விநாடியும் விட்டுவிடச் சித்தமாயிருக்கிறேன். ஆனால் வேறு காரணங்கள் இருக்கின்றன. நாம் இப்போது சண்டையிட்டால் எல்லாம் கெட்டுப் போய்விடும். மகாராஜா! தங்களுடைய அன்னை அருள்மொழித் தேவியைப் பார்க்க வேண்டாமா? இன்னொரு முக்கிய விஷயம். தங்களுடைய மூதாதைகளின் வீரவாளைக் கொண்டு முதன் முதலில் உங்களுடைய சொந்தக் குடிகளையா கொல்லுவீர்கள்?” என்று பொன்னன் கேட்டபோது, விக்கிரமனுடைய முகம் வாடியது.

 

“சரி பொன்னா! போதும், இனிமேல் ஒன்றும் சொல்ல வேண்டாம். நான் வாளைத் தொடவில்லை” என்றான். பிறகு குந்தவியைப் பார்த்து, “தேவி! இந்தப் பெட்டியைப் பத்திரமாய் வைத்திருக்க வேண்டும். மறுபடியும் சந்திக்க நேர்ந்தால் கொடுக்க வேண்டும்” என்றான். ஆனால் குந்தவியின் செவிகளில் அவன் கூறியது விழுந்ததோ, என்னமோ தெரியாது. அவளுடைய முகத்தில் கோபம் கொதித்துக் கொண்டிருந்தது. ஆவேசம் வந்தவள் போல் நெருங்கி வந்த படகுகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். படகுகள் கரையை அடைந்தன. மாரப்ப பூபதி முதலில் படகிலிருந்து குதித்தான். மரியாதையாகக் குந்தவி தேவியை அணுகி, “பெருமாட்டி! தங்கள் அனுமதியில்லாமல் இங்கே வந்ததற்காக மன்னிக்க வேண்டும். சக்கரவர்த்தியின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக வந்தேன்” என்றான். குந்தவி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, “எந்தச் சக்கரவர்த்தி? என்ன கட்டளை?” என்றாள். “தங்களுடைய சகோதரர் மகேந்திர பல்லவரின் கட்டளைதான். செண்பகத் தீவிலிருந்து வந்திருக்கும் ஒற்றனைக் கைப்பற்றி ஜாக்கிரதையாகக் காஞ்சிக்கு அனுப்பும்படிக் கட்டளை இதோ பாருங்கள்!” என்று மாரப்பன் ஓர் ஓலையை நீட்டினான். அதில் மகேந்திரனின் முத்திரையுடன் மேற்கண்ட விதமான கட்டளை எழுதியிருந்தது. அதைப் பார்த்துவிட்டுக் குந்தவி, “செண்பகத்தீவின் ஒற்றன் யார்?” என்று கேட்டாள். “இதோ நிற்கிறானே, இவன் தான், தேவி!” “இல்லை; இவர் ஒற்றன் இல்லை. நீர் திரும்பிப் போகலாம்.”

 

“தேவி! இவன் ஒற்றன் இல்லாவிட்டால் வேறு யார்? மனமுவந்து சொல்லவேண்டும்!” என்று மாரப்பன் கள்ள வணக்க ஒடுக்கத்துடன் கூறினான். “பூபதி! யாரைப் பார்த்துக் கேள்வி கேட்கிறாய்? உன்னை மறந்து விட்டாயா?” என்று கண்களில் கனல் பொறி பறக்கக் குந்தவி கேட்டாள். “இல்லை; என்னை நான் மறக்கவில்லை. எனக்கு அவ்வளவாக ஞாபக மறதி மட்டும் கிடையாது. இதோ இவனுடைய முகம்கூடப் பார்த்த முகமாக என் ஞாபகத்தில் இருக்கிறது. ஆம்; இதோ ஞாபகம் வந்துவிட்டது. தேவி! இவன், மகா மேன்மை பொருந்திய தர்ம ராஜாதிராஜ நரசிம்ம பல்லவச் சக்கரவர்த்தியினால் தேசப்பிரஷ்ட தண்டனைக்குள்ளானவன் என்பதாய் ஞாபகம் வருகிறது. இவன் ஒற்றன். இல்லையென்றால், தேசப்பிரஷ்டன்! தேசப்பிரஷ்டமானவன் திரும்பி வந்தால் என்ன தண்டனையென்று தங்களுக்கே தெரியும். தேவி! என் கடமையை நான் செய்ய வேண்டும். தர்ம ராஜாதி ராஜாவான பல்லவச் சக்கரவர்த்தி, தம் சொந்தப் புதல்வியின் வார்த்தைக்காகக்கூட நான் என் கடமையில் தவறுவதை ஒப்புக் கொள்ளமாட்டார்” என்றான். குந்தவியின் உடம்பெல்லாம் நடுங்கிற்று; அவளுடைய மார்பு விம்மிற்று.

 

“சேனாதிபதி! இவர் என் விருந்தினர், இவருக்கு நான் பாதுகாப்பு அளித்திருக்கிறேன். இவருக்கு ஏதாவது நேர்ந்தால்….” என்று கூறி, விக்கிரமனை மறைத்துக் கொள்பவள் போல் அவன் முன்னால் வந்து நின்றாள். மாரப்பன் கலகலவென்று சிரித்தான். “ஆகா! சோழ வம்சத்தின் பெருமையை விளங்க வைக்கப்போகும் வீரசிங்கம் ஒரு பெண்ணின் முந்தானையில் ஒளிந்து கொள்கிறான்!” என்று கூறி மீண்டும் சிரித்தான். நாணத்தினாலும் கோபத்தினாலும் விக்கிரமனுடைய கண்கள் சிவந்தன. அவன் நாலு எட்டாக நடந்து குந்தவிக்கு முன்னால் வந்து நின்று மாரப்பனைப் பார்த்து, “சித்தப்பா! இதோ நான் வரச் சித்தமாயிருக்கிறேன். அழைத்துப் போங்கள்!” என்றான். மாரப்பன் கேலிச் சிரிப்புடனே குந்தவியைப் பார்த்து, “ஏழைமேல் ஏன் இவ்வளவு கோபம்? இவனைக் காப்பாற்றித்தான் ஆகவேண்டுமென்றால், தங்கள் தந்தையையோ தமையனாரையோ வேண்டிக் கொண்டால் போகிறது. சக்கரவர்த்தி கருணையுள்ளவர், இவன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டு கப்பமும் செலுத்த ஒப்புக் கொண்டால் கட்டாயம் மன்னித்து விடுவார்” என்றான். இந்த வார்த்தைகள் தான் எதிர்பார்த்தது போலவே விக்கிரமன், குந்தவி இருவருடைய முகங்களிலும் வேதனை உண்டாக்கியதை அறிந்த மாரப்பனுக்குக் குதூகலம் உண்டாயிற்று. விக்கிரமன் உடனே விரைவாகச் சென்று படகில் ஏறிக் கொண்டான்.

 

குந்தவி விக்கிரமனை மிகுந்த ஆவலுடன் நோக்கினான். தன்னை அவன் திரும்பிப் பார்ப்பானென்றும், தன் கண்களினால் அவனுக்குத் தைரியம் கூறலாமென்றும் அவள் எண்ணியிருக்கலாம். ஆனால் விக்கிரமன் திரும்பிப் பார்க்கவேயில்லை. மாரப்பன் இந்த நாடகத்தைச் சிறிது கவனித்து விட்டுப் பிறகு பொன்னன்மீது தன் பார்வையைச் செலுத்தினான். “அடே படகோட்டி! நீயும் வா; ஏறு படகில்” என்றான். “அவன் ஏன் வரவேண்டும்? பொன்னனைப் பிடிப்பதற்கும் கட்டளையிருக்கிறதா?” என்று குந்தவி கேட்டு மாரப்பனைக் கண்களால் எரித்து விடுபவள் போல் பார்த்தாள். மாரப்பன் அந்தப் பார்வையைச் சகிக்க முடியாமல், “கட்டளையில்லை தேவி! ஆனால், இந்த ஒற்றனுக்கு தேசப் பிரஷ்டனுக்கு இவன் ஒத்தாசை செய்திருகிறான்…” என்றான். “பொன்னன் என்னுடைய ஆள்; எனக்குப் படகோட்ட வந்திருக்கிறான். அவனைக் கொண்டு போக உனக்கு அதிகாரமில்லை, ஜாக்கிரதை!” என்றாள் குந்தவி. மாரப்பன் அவளுடைய தொனியைக் கேட்டுத் தயங்கினான். குந்தவி மறுபடியும், “தேசப் பிரஷ்டனுக்கு உதவி செய்ததற்காகப் பிடிப்பதென்றால், என்னை முதலில் பிடிக்க வேண்டும்!” என்றாள். “ஆம்; தேவி! சக்கரவர்த்தியின் கட்டளை வந்தால் அதுவும் செய்வேன்” என்றான் மாரப்பன். பிறகு அவன் படகோட்டிகளைப் பார்த்து, “விடுங்கள்” என்றான். படகுகள் உறையூரை நோக்கி விரைந்து சென்றன

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

கல்கியின் பார்த்திபன் கனவு – 39கல்கியின் பார்த்திபன் கனவு – 39

அத்தியாயம் 39 சந்திப்பு மாமல்லபுரத்தில் கலைத் திருவிழா வழக்கம் போல் நடந்து கொண்டிருந்தது. இவ்வருஷம் சக்கரவர்த்தி திருவிழாவுக்கு விஜயம் செய்யவில்லை. சில காலமாகச் சக்கரவர்த்தி ஏதோ துக்கத்தில் ஆழ்ந்திருப்பதாகவும், அதனால் தான் கலைவிழாவுக்கு வரவில்லையென்றும் ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். வேறு சிலர்,

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 1திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 1

முன்னுரை      1978 ஆம் ஆண்டு ஜனவரி மாதம். அந்நாட்களில் நான் தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி வரையிலுமாக நீண்டிருக்கும் கடற்கரை ஊர்களில் வாழும் மீனவர் வாழ்க்கையை ஆராய்ந்து, ஓர் புதினம் எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது இலக்கியக் கூட்டமொன்றில் சிறந்த எழுத்தாளரும், திறனாய்வாளருமாகிய

கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 22கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 22

அத்தியாயம் 22 – நிலவும் இருளும்      முத்தையன் பண நோட்டுக்களைக் கையில் அலட்சியமாய்ச் சுருட்டி எடுத்துக்கொண்டு, லயன் கரையிலிருந்து படுகையில் இறங்கித் தண்ணீர் துறையை நோக்கி நடந்தான். தண்ணீர்த் துறையை அடைந்ததும், நீர்க்கரையோடு கிழக்கு நோக்கி நடக்கலானான். அன்று பௌர்ணமி. கிழக்கே