Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள் திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 3

திருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 3

முன்பு மருதாம்பாள் பஸ் ஏறிய இடத்திலேயே இறங்கி விடுகிறாள். அப்போது முகங்கள் தெளிவாகத் தெரியாமல் மங்கும் நேரம். அவர்கள் லாரிகளும் பஸ்களும் போகும் கடைத் தெருவைத் தாண்டி நடக்கின்றனர். அவர்கள் ஊர் மாதா கோயிலை விடப் பெரிதாக ஒரு மாதாகோயில் உச்சியில் விளக்கொளிரத் தெரிகிறது.

மருதாம்பா கடையில் பொட்டுக் கடலையும் மொந்தன் பழமும் வாங்கிக் கொள்கிறாள். அந்தத் தெருக்களைத் தாண்டி, மணலும் முட்செடிகளுமான பரப்பைக் கடந்து, வேறு தெருக்கள் வழியே நடக்கின்றனர். ஒழுங்கில்லாத வீடுகள். சில வீடுகள் மஞ்சள் வண்ணச் சுவர்களும், மூங்கில் பிளாச்சு ‘கேட்டு’ மாகப் புதியவை என்று பறை சாற்றுகின்றன. இடை இடையே சாக்கடை, குப்பை மேடு, கடை, ஓட்டுவில்லை வீடுகள், தென்னங்கிடுகுகளான தடுப்புக்கள், இடைவிடாது எதிரே குறுக்கிடும் சைக்கிள் ஒலிகள் ஆகிய காட்சிகளை வியப்புடன் பார்த்துக் கொண்டு அவர்கள் நடக்கின்றனர்.

பொன்னாச்சி தனது இரண்டொரு துணிகளையும் தம்பியின் சராயையும் ஒரு கித்தான், பைக்குள் வைத்து எடுத்துக் கொண்டிருக்கிறாள். அவள் சிறுமியாகத் தாயுடன் தூத்துக்குடியில் வாழ்ந்த காலத்து வீட்டை நினைவுக்குக் கொண்டு வர முயலுகிறாள். அதை கோல்டன்புரம் என்று சொல்வார்கள். எதிரே முட்செடிக் காடாக இருக்கும். அவள் வீட்டு வாயிலில் தம்பியைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பாள். அவள் அம்மா தண்ணீர் கொண்டு வரப் போவாள். லாரி வாசலில் வரும். லாரியில் இருந்து தலையில் துவாலை கட்டிக் கொண்டு ஒருவர் வந்து உள்ளேயிருந்து மண்வெட்டியையும், கூடையையும் எடுத்துப் போவார். அவர் அப்பச்சி. அவரிடம் அவளுக்கு மிகவும் பயம். அவருடைய கண்கள் சிவப்பாக இருக்கும். பெரிய மீசை வைத்திருப்பார். கட்டம் போட்ட லுங்கி உடுத்தியிருப்பார். அம்மாவை அடிப்பார். அவளையும் கூட அவர் அடித்து வெளியே தள்ளினார். ஒரு நாள் இரவு, அந்த முட்செடியிலிருந்து தலைவிருச்சிப் பிசாசு ஒன்று துரத்தி வருவது போல் அவள் பயந்து போய் அம்மாவைக் கட்டிக் கொண்டாள்.

அந்த அப்பச்சி… அவரை அவள் பார்க்கப் போகிறாள். அவர் உடல் நலமில்லாமல் படுத்திருக்கிறார்.

“சவத்துமாடன். அவனொரு மாப்பிள்ளை, இந்த வீட்டுக்கு!” என்று மாமியின் நாவில் அடிக்கடி வசைக்கு ஆளாகும் அப்பச்சியை அவள் பார்க்கப் போகிறாள். “அவ தளுக்கும், மினுக்கும் கண்டிராக்டானாலும், கணக்கவுள்ளயானாலும், சீலயவுக்குறவ…” என்ற ஏச்சுக்காளாகும் பெண் பிள்ளையான சின்னாச்சி இன்று மாமியிடம் மரியாதைக்குரியவளாக வந்து கூட்டிப் போகிறாள்.

அவள் உண்மையில் அப்படித் தளுக்கு மினுக்காகவேயில்லை. முடியை எண்ணெய் தொட்டுக் கோதிச் செருகியிருக்கிறாள். புதுமை மங்கிய நீலச்சேலை, வெண்மையாகத் தான் பிறப்பெடுத்திருந்தேன் என்று சொல்லும் ரவிக்கை. முகத்தில் எலும்பு முட்டிக் கண்கள் குழியில் இடுக்கிக் கிடக்கின்றன. எப்படியிருந்தாலும் இடைவிடாத மாமியின் இடிச்சொற்களிலிருந்து அவர்களை விடுவிடுத்திருக்கிறாள் அவள்.

அவர்கள் வீடு வெளியிலிருந்து பார்க்கக் காரைக்கட்டுச் சுற்றுச் சுவரும் வாயிலுமாக இருக்கிறது. வாயிலுள் நுழைந்து எதிரே தெரியும் வீட்டைச் சுற்றி அவர்கள் செல்கின்றனர். அந்த முற்றத்தில் ஒரு முட்டைச் சிம்னி விளக்கை வைத்துக் கொண்டு ஒரு பெண் பிள்ளை கல்லுரலில் உளுந்து ஆட்டிக் கொண்டிருக்கிறாள். திண்ணை போன்ற மேட்டில் ஒரு ஆண் காலோடு தலை போர்த்த வண்ணம் உட்கார்ந்து இருமிக் கொண்டிருக்கிறான். அங்கேயே சில குழந்தைகள் ஓடிப்பிடித்து விளையாடுகிறார்கள். வரிசையாக உள்ள வாயில் கதவுகளில் ஒன்று பூட்டிக் கிடக்கிறது. நேர் எதிரே உள்ள மூன்றாவது வாயிலை நோக்கி மருதாம்பா வருகிறாள்.

“அப்ப நா வாரனக்கா!” என்று கூறியவனாகச் சிவந்தகனி அங்கேயே விடைபெற்றுத் திரும்பிப் போகிறான்.

திண்ணையில் இங்கேயும் காலோடு தலை போர்த்து உருவம் ஒன்று உட்கார்ந்திருப்பதைப் பொன்னாச்சி புரிந்து கொள்கிறாள்.

சின்னம்மா வெறுமே சாத்தியிருக்கும் வாயிற்கதவைத் திறந்து சிம்னி விளக்கைத் தேடி ஏற்ற ஐந்து நிமிடங்களாகின்றன.

“பிள்ளிய வந்திருக்காவ, ஏதே… ஒங்கப்பச்சி கும்பிடுக…”

பொன்னாச்சி, அந்தச் சிம்னி விளக்கொளியில் தந்தையைப் பார்த்துக் குழம்பியவளாக நிற்கிறாள். தாடியும், நார் பறந்தாற் போன்ற முடியுமாக, அழுக்குத் துணியால் மேலும் கீழும் போர்த்திக் கொண்டு கும்பலாக அமர்ந்திருக்கும் இவரா அப்பச்சி…?

கால்களைத் தொட்டுப் பணிவுடன் கும்பிடுகிறாள். பச்சையையும் கும்பிடச் சொல்கிறாள்.

“எங்க இந்தப் பிள்ளயவ? ஏட்டி, பாஞ்சாலி? சரசி? பானையில பொட்டுத் தண்ணி இல்ல. குடி தண்ணியுமில்ல, கொடத்துல. ஏலே நல்லகண்ணு? அக்காளெங்கேலே?”

ஆடிக் கொண்டிருந்த பையன் வருகிறான். “பாஞ்சாலி ஆச்சிகூட சினிமாவுக்குப் போயிட்டு வந்தா. எனக்கு மிட்டாய் வாங்கித் தாரன்னியே?…” என்று அவள் சேலையைப் பிடித்து இழுக்கிறான்.

“தம்பியக் கூப்பிடு; இதப்பாரு பொன்னாச்சிக்கா, இது அண்ணெ…” என்று கூறிப் பொட்டுக் கடலையும் பழமும் கொடுக்கிறாள். அப்போது சரசி பிரிந்த தலையும் கிழிந்த பாவாடையுமாக வெளியிலிருந்து ஓடி வருகிறாள்.

“பாஞ்சாலி வந்தா கூப்பிடுடீ? பொட்டுத் தண்ணியில்ல. கேணிலேந்து ஒரு நடை தண்ணி கொண்டாரச் சொல்லுடி?…” கயிற்றையும் வாளியையும், பானையையும் பாஞ்சாலி வந்து தூக்கிக் கொண்டு சென்றதும் உள்ளே விளக்குடன் நுழைகிறாள் மருதாம்பா. சற்றைக்கெல்லாம் திடுக்கிட்டவளாக அவள், “ஏளா, உள்ளாற யாரு வந்தது? நா நேத்துதான் வெறவு வாங்கிப் போட்டுப் போன? ஒத்தக் குச்சியக் கூடக் காணம்?” என்று கூக்குரலிடுகிறாள். ஆனால் அந்த ஓலம் எந்த எதிரொலியையும் கிளப்பவில்லை. கொடக் கொடக்கென்று உளுந்துதான் மசிந்து கொண்டிருக்கிறது. பாறையில் முட்டி மோதி எதிரொலிக்கும் கடலலை போல் அவள் மீண்டும் மீண்டும் ஓலமிடுவாள். அப்பன் எதுவுமே பேசவில்லை. மருதாம்பா சரசியின் முதுகிலும் நல்லகண்ணுவின் முதுகிலும் ஆளுக்கு இரண்டடி வைக்கிறாள்.

“கதவைப் பூட்டிட்டுப் போன்னு சொன்னேனில்ல? மூதி தெருவுல ஆடப் போயிடறா! தொறந்த வீடுன்னா எந்த நாயும், களுதையும் எச்சிப் பொறுக்க வரும்… சவங்க…” என்று வசை பாடத் தொடங்குகிறாள்.

அவளுடைய சந்தேகத்துக்கு, அயல் பக்கத்துக்காரிகள் ஆளாகிறார்கள். அவள் சாடைமாடையாகச் சொன்ன பிறகும் மாவாட்டுபவள் சும்மா இருப்பாளா? மாவை வழித்து விட்டு வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வருகிறாள். பொன்னாச்சி இத்தகைய விறகுச் சண்டைகளைக் கேட்டுக் கேட்டுக் காது புளித்துப் போனவள். ஒளிமயமான கனவுகளைச் சரேலென்று மேகங்கள் மூடினாற் போல் ஒரு சோர்வு ஆட்கொள்ளுகிறது. அவளுடைய அப்பச்சியை இவ்வாறு செயலிழந்த துணிச் சுருளாக அவள் கற்பனை செய்திருக்கவில்லை.

இரவு மருதாம்பா ஏதும் சமைக்கவில்லை. விறகு பறி போய்விட்டது. ஆற்றாமையில் திண்ணையிலிருந்த புருசனையும், பொறுப்பில்லாத குழந்தைகளையும் திட்டி ஓயவில்லை. மழை அடித்து ஓய்ந்தாலும் நினைத்து நினைத்துச் சாரல் அடிக்கக் காற்று வீசுவதைப் போல் கிளம்புகிறது.

முன் வாசலுக்கு நேராக உள்ள வீட்டிலிருந்து ரேடியோப் பாட்டு ஒலிக்கிறது. பச்சை அந்தப் பக்கம் செல்கிறான். இந்த முற்றத்தின் பக்கமாக உள்ள ‘சன்னலின் அருகே நின்று அங்கே பார்க்கிறான். ஒரு ஆச்சி, டிரான்ஸிஸ்டர் பெட்டியைத் திருகி, பாட்டு வைக்கிறாள். அவனைக் கண்டதும், “இப்படி வாலே, ஒம்பேரென்ன?” என்று அவள் அழைக்கிறாள்.

பச்சை நாணிக் கோணிக் கொண்டு உள்ளே செல்கிறான். அந்த முன்னறையில் ஒரு பனநார்க்கட்டிலில் ஆச்சி அமர்ந்திருக்கிறாள். அங்கே இன்னொரு பெரிய பெஞ்சி இருக்கிறது. ஒரு புறம் சுவரில் புத்தகங்கள் நோட்டுக்கள் தெரியும் ஷெல்ஃப்; அதன் மேல், சுவரில் உயரே ஒரு படம் இருக்கிறது. படத்தில் இளையவனாக, அரும்பு மீசையும் நேர்ப் பார்வையுமாக ஒரு பிள்ளை விளங்குகிறான். அந்தப் படத்துக்கு மஞ்சளும் நீலமும் கலந்த பட்டு நூல் மாலை போட்டிருக்கிறார்கள்.

பச்சை அந்தப் படத்தையே பார்க்கையில், ஆச்சி அவனிடம் “படிக்கிறியாலே?” என்று கேட்கிறாள். ரேடியோவில் பாட்டு இல்லை. பேச்சு வருகிறது. அதை அணைத்துவிட்டு, ஒரு காகிதப்பையில் இருந்து வேர்க்கடலையை எடுத்து உரித்துத் தின்கிறாள்.

அவனிடமும் இரண்டு கடலையைப் போட்டவாறே மீண்டும், “படிக்கிறியாலே? கேட்டதும் வதில் சொல்லு?” என்று கேட்கிறாள்.

“படிச்சேன், இப்ப நிறுத்திட்டே…”

“ஏ…? சோலிக்குப் போறியா?”

“மாமன் அளத்துல சோலி எடுப்பே. தம்பாட்டளம்.”

“எம்புட்டு?”

“ரெண்டேக்கரு…”

அவள் உதட்டைப் பிதுக்குகிறாள். “அக்காளும் சோலிக்குப் போகுமா?”

“இல்லே… வீட்டுவேல எல்லாம் செய்யும். எப்பன்னாலும், உப்பு வாரிப் போட வரும்.”

“இங்கேயே இருக்கப் போறியளா?”

பையன் தெரியாது என்று தலையசைக்கிறான்.

இதற்குள் அடுத்த வீட்டுக்காரி பெருங்குரலெடுத்து ஏசுவது செவியில் விழுகிறது. பையன் முற்றத்துக்கு வருகிறான். பொன்னாச்சியும் அங்கு நிற்கிறாள். பாஞ்சாலி தண்ணீர் கொண்டு வந்து வைத்துவிட்டு வாயிற்படியிலேயே நிற்கிறாள். குஞ்சுகளைப் பின் தள்ளிவிட்டு இரண்டு பெட்டைகள் ஒன்றையொன்று தாக்கிக் கொள்வது போல் இருவரும் வாய்ச் சண்டை போடுகின்றனர்.

ஒருவழியாக ஓய்ந்து எல்லோரும் முடங்குகின்றனர். குழந்தைகள் எல்லோரும் பொட்டுக்கடலை, பழத்துடன் உறங்கிவிட்டனர். உள்ளே சின்னம்மாவும் படுத்து உறங்கிவிட்டாள்.

பொன்னாச்சிக்கு உறக்கம் வரவில்லை. அன்று பகலே அவள் சரியாக உணவு கொள்ளவில்லை. பசி, குடைகிறது. அவளுக்குப் பல நாட்களில் இப்படித்தான் ஏதேனும் தின்ன வேண்டும் போல் பசி கிண்டும். பல்லைக் கடித்துக் கொண்டு திரும்பித் திரும்பிப் படுத்து உறங்க முயலுகிறாள்.

பொழுது விடிந்தால் அடுப்புக்கு வைக்க ஒரு குச்சி இல்லை. மருதாம்பாவுக்கு சோறு எதுவும் பொங்க நேரமில்லை. பொன்னாச்சியை எழுப்பி, “ஏத்தா ஒங்கையில் இருக்கிற துட்டுல ரெண்டு வெறவும் அரிசியும் வாங்கி ஒல போட்டு பொங்கிக்கோ. நா அளத்துக்கு போவணும். கங்காணியிட்டக் கேட்டு எதினாச்சிம் துட்டு வாங்கி வார. நேராச்சி இப்ப” என்று கிளம்ப ஆயத்தமாகிறாள். பொன்னாச்சி திகைத்து விழிக்கிறாள்.

மாமி, மூன்று ரூபாய் கோயில்காரர் வீட்டிலிருந்து கடன் வாங்கி வந்து அவளுக்குக் கொடுப்பதைப் பார்த்திருக்கிறாள். சின்னம்மாவின் சொரூபம் வெளியாகிறது!

இந்தப் புதிய இடத்தில் அவள் எங்கிருந்து விறகு வாங்குவாள்?

“அரிசி…?”

“பாஞ்சாலி வரும். அவ வாங்கிக் குடுப்பா. தம்பி இருக்கானே? பின்னால கிணறு காட்டிக் குடுக்கும். ஒண்ணே முக்கா ரூவாக்கு அரிசி வாங்கிப் பொங்கு. இந்தப் பிள்ளங்களுக்கும் போடு. நா வார. ஒரு சுடு தண்ணி வைக்கக் கூட லாவன்னா இல்லை…” பொன்னாச்சி மலைத்து நிற்கையிலேயே கூரையில் செருகியிருக்கும் பன ஓலையைக் கையிலெடுத்து காலுக்கு ஒரு மிதியடி பின்னக் கிழித்தவாறு நடந்து செல்கிறாள். திகைப்பிலிருந்து விடுபட, பொன்னாச்சிக்கு வெகு நேரமாகிறது. அந்த வீட்டுக்காரி இட்டிலிக் கடை போடுபவ போலிருக்கிறது. விடியலிலேயே எங்கிருந்தோ நீர் கொண்டு வருகிறாள். அவள் புருசன் இருமிக் கொண்டே இருக்கிறான். வள்ளியோடொத்த மகளை எழுப்பி அமர்த்தி உரலில் அரைக்க பணிக்கிறாள். இன்னொரு வீட்டுக் கதவு பூட்டுத் திறந்து உட்பக்கம் சாத்தியிருக்கிறது. அதற்குரியவரை அவள் இன்னும் பார்க்கவில்லை.

அவள் செய்வதறியாமல் முற்றத்தில் நின்று கொண்டிருக்கையில் வீட்டுக்கார ஆச்சி, பல்லைச் சாம்பலால் துலக்கிக் கொண்டு அங்கு வருகிறாள். நல்ல உயரம்; பறங்கிப் பழமாய்ச் சிவப்பு. தீர்க்கமான மூக்கும் கண்களுமாக ஒரு காலத்தில் நல்ல அழகாக இருந்திருப்பாள். எள்ளும் அரிசியுமாய்ப் போன கூந்தலை அள்ளிச் செருகியிருக்கிறாள். வளர்த்த காதுகளில் பொன்னகையில்லை. மேல் காதில் மட்டும் வாளியும் முருகும் இருக்கின்றன. நெற்றியில் நீளமாகப் பச்சைக்கோடு, துலங்குகிறது. இடது புறங்கையில் கோலமும், இன்னும் ஏதோ பச்சைக் குத்தும் தெரிகின்றன. மினுமினுக்கும் ஆரஞ்சு வண்ணச் சேலையும் வெண்மையான ரவிக்கையும் அணிந்திருக்கும் அவள் பொன்னாச்சியைப் பார்ப்பதற்காகவே அங்கு வந்திருக்கிறாள் என்று தோன்றுகிறது.

குண்டு முகத்தில் கண்களால் அவளை வியப்புடன் பொன்னாச்சியும் பார்க்கிறாள். முதல் நாளிரவே பாவாடை, ரோஸ் சேலை, ஜாக்கெட் செட்டைப் பத்திரமாக அவிழ்த்து வைத்து விட்டுப் பழைய சேலையைப் பின் கொசுவம் வைத்து உடுத்தியிருக்கிறாள். அந்த ஒரு செட் ஆடைகளே அவளுக்குப் புதுமையாக, முழுதாக இருக்கின்றன. அவளுக்கு மூன்றாண்டுகளுக்கு முன் மங்கல நீராட்டுக்கென்று மாமன் வாங்கித் தந்த சேலை அது. திருச்செந்தூர்க் கடையில் எழுபது ரூபாய்க்கு வாங்கி வந்தார்.

பிறகு, ஒரே ஒரு பழைய பாவாடையும் பாடியும் தான் உள்ளாடைகள்! சாதாரண நாட்களில் அவள் முழுச் சேலையை முரட்டுச் சேலையைத் தான் பின் கொசுவம் வைத்து உடுத்துவது வழக்கம். மூக்குத் துளைகளில் ஈர்க்குகளும், காதுத் துளைகளில் சன்னமாகச் சீவிய நெட்டியும் தான் அணிகள், அவளுக்குக் கைகளில் முழியே கிடையாது. போட்டிருக்கும் பிளாஸ்டிக் வளையல்கள் இரண்டும் மொழு மொழுத்த கைகளில் பதிந்து இருக்கின்றன.

“சின்னாச்சி அளத்துக்குப் போயிட்டாளா?” என்று விசாரிக்கிறாள்.

“ஆமா…”

“தண்ணிகிண்ணி வச்சாளா? சோறாக்கினாளா? ராவுல வறவக் காணமின்னு சொக்குவும் அவளும் சண்ட போட்டாவளே?”

பொன்னாச்சிக்குத் திகில் பிடித்துக் கொள்கிறது. வாயைக் கிளறி வம்புக் கிழுக்கிறாளா? இவளிடம் எப்படிப் பேசுவது? ஊரிலும் இவ்வாறு வாயைக் கிளறுபவர்கள் உண்டு. அவள் ஏதேனும் பேசிவிட்டால் மாமி நார் நாராகக் கிழித்தெறிந்து விடுவாள்.

எனவே மௌனமாக நிற்கிறாள்.

“ஏட்டி பாஞ்சாலி! ரெண்டு வெறவு கொண்டு ஒங்கக்காளுக்குக் குடு! அடுப்புப் பத்தவய்க்கட்டும்!” என்றவள் குரலை மிக மிகத் தாழ்த்தி, “ஒங்கப்ப எடுத்துக் குடுத்து அதுக்கு வார காசுக்கு என்னமேந் தின்னிடுவா. குடிய்க்கவுஞ் செய்வா. இது ஒள்ளதுதே!…” என்று தெரிவிக்கிறாள். பாஞ்சாலி இரண்டு விறகை எடுத்துக் கொண்டு வந்து வீட்டுத் திண்ணையில் வைக்கிறாள்.

பொன்னாச்சிக்கு நா எழவில்லை.

“ஏட்டி, அரிசி இல்லேன்னா, மூலக்கடையிலே வாங்கிக் குடு!” என்றும் உத்தரவிடுகிறாள். “பய ஒந் தம்பியா? சோலிக்குப் போவானா?”

“போவணும்…”

“சின்னாச்சி கங்காணியிடம் சொல்றன்னிச்சா?”

“ஒண்ணுஞ் சொல்லல. அவுசரமாப் போயிட்டாவ…”

“ஆமா காலமே அதிகப்படி எதுவானாலும் அட்டுச் சொமக்கக் கூலி கெடய்க்குமேண்ணு போயிருப்பா! அவாத என்னவே? ஒன்னப்பச்சிக்குக் கண்ணு சுத்தமாத் தெரியல. அன்னிக்கு அளத்துல சோலியெடுக்கையில் கீழவுழுந்திட்டாராம். பொறவுதா ஒங்களக் கூட்டி வாரமின்னு போனா…”

மருமம் துலங்கிவிட்டது. ஆனால் என்னம்மா வேலை பற்றி எதுவும் சொல்லவில்லையே?

“தம்பிக்குன்னாலும் எதானும் கூலி வேலை கெடச்சாத் தேவலை…”

பொன்னாச்சியின் கண்கள் ஒளிருக்கின்றன. ‘ஒங்களால முடியுமா…’ என்று கேட்கும் ஆவல் அது.

“ஆமா. பய இல்லாட்டி இங்ஙன கவுமுத்து புளியமுத்து ஆடப் போயிருவா! கெட்ட சகவாசமெல்லாஞ் சேர்ந்திடும்…” என்றவள் பாஞ்சாலியைத் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி மூலையில் வாய் கொப்ளிக்கிறாள். காரிக் காரி உமிழ்கிறாள்.

“நீங்க ஏதானும் சோலி வாங்கிக் குடுத்தா, ரொம்ப தயவா இருக்கும், ஆச்சி. சின்னம்மாவுக்கு நாங்க பாரமா இருக்கண்டா…” ஆச்சி சேலை முன்றானையை அவிழ்த்து முகத்தைத் துடைத்துக் கொள்கிறாள்.

“சோலி இப்ப கெடக்காம இல்ல. ‘பனஞ்சோல’ அளத்துலியே சொல்லி வாங்கித்தார. அறவக் கொட்டடியிலோ, எங்கோ தம்பிக்கும், ஒனக்கும் கூட கெடய்க்கும். பனஞ்சோல அளத்துல வேல கெடக்கிறது செரமம்! அங்க கங்காணி மொறயில்ல. கண்ட்ராக்டு, ஒங்க சின்னாச்சி, அப்பன் சோலியெடுத்த அளம் சின்னது. கங்காணிமாரு கெடுபிடி ரொம்ப இருக்கும், நிர்ணயக் கூலின்னு சொல்லுவா. ஆனா கங்காணி வாரத்துக்கு ஒரு ரூபா புடிச்சிட்டுத்தா குடுப்பா. பொறவு அட்வான்சு, போனசு ஒண்ணு கெடையாது. அப்புசி மழை விழுந்திட்டா வேலயுமில்ல. வேல நேரம்னு கண்டிப்புக் கெடையாது. ஏ குடிக்கத் தண்ணி கூடக் கெடையாது. பனஞ்சோல அளம் அப்பிடில்ல, பெரீ…சு. மூவாயிரம் ஏக்கர். வேலக்கி எடுக்கையில அட்வான்சு குடுப்பா. பொறவு தீவாளி சமயத்தில நிக்றகப்ப சேலயொண்ணு போனசாத் தருவா. ஒரு கலியாணம் காச்சின்னா, அளத்துல சோலியெடுக்குற புள்ளக்கி இருநூத்தம்பது ரூபா குடுக்கா…”

பொன்னாச்சிக்குக் கேட்க கேட்க உள்ளம் துள்ளுகிறது. இருளாகக் கவிந்திருக்கும் எதிர்கால வாழ்வில் ஒளியிழைகளை அல்லவோ ஆச்சி காட்டுகிறாள்?

“ஆச்சி! ஒங்கக்கு ரொம்பப் புண்ணியமுண்டு. அந்த அளத்துல எனக்கும் தம்பிக்கும் வேல வாங்கித் தாரும். நாங்க எங்க மாமன் அளத்துல வாருபலவை போட்டு உப்பு வாருறதுதா, என்ன வேலன்னாலும் முசிக்காம செய்யிவம்…”

ஆச்சி கண்களை இடுக்கிக் கொண்டு சிறிது நேரம் யோசனை செய்கிறாள். பிறகு நீண்டதோர் சுவாசத்தை வெளியாக்குகிறாள்.

“இங்கெல்லாம் ‘லோக்கல்’ உப்பில்ல, கல்கத்தா அளம். வரி உப்பு வாருவாக. அதெல்லாம் ஆம்பிளதா வாருபலகை போடுவா.”

“பொம்பிளக்கிப் பண்பாட்டு சோலியும், பொட்டி செமக்கிற சோலியுந்தா, என்னைப் போல பொண்டுவ, ராவுல உப்பு அறவக் கொட்டடியிலும் வேலக்கிப் போவாக. நாளொண்ணுக்கு எனக்கு நாலு நாலரை வரை வரும். தம்பிக்கு ரெண்டரை மூனு வரும். இப்ப ரேட் ஒசத்தியிருக்காண்ணு சொன்னா…”

பொன்னாச்சிக்கு அந்தக் கணத்திலேயே பனஞ்சோலை அளத்துக்குப் பறந்து போய்விட வேண்டும் போலிருக்கிறது. ஒரு நாளைக்கு அவளுக்கும் தம்பிக்குமாக ஆறு ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் கூட, மாசத்தில் நூற்றைம்பது ரூபாய்க்கு மேல் வரும். மாமாவின் அளத்தில் மொத்தமாகக் கூட அவ்வளவு தேறாது. மாமிக்கு அவளை எங்கேனும் அளத்தில் வேலைக்கு சேர்க்கலாம் என்ற யோசனை இருந்தாலும் கூட மாமா அதற்கு இடம் கொடுத்ததில்லை. அங்கிருந்து ராமக்காவும் கமலமும் கண்ணாடிக்காரர் அளத்துக்குப் போவார்கள். அவர்களுடன் அனுப்பி வைக்கலாம் என்று மாமி கருத்து தெரிவித்ததுண்டு. ஆனால் மாமா மிகவும் கண்டிப்பானவர். அவள் இங்கே வந்து அளத்தில் வேலை செய்கிறாள் என்று தெரிந்தால் கூடப் புறப்பட்டு வந்து கூட்டிப் போனாலும் ஆச்சரியமில்லை.

ஆனால்… மாசத்தில் நூற்றைம்பது வருமானம்! பொழுது விடிந்து நிதமும் கம்புக்கும் கேழ்வரகுக்கும் அரிசிக்கும் மிளகாய்க்கும் பீராயப் போகவேண்டாம். கடன் சொல்லிக் கடையில் சாமான் வாங்க வேண்டாம். தீபாவளிக்குப் புதிய சேலை போனஸ்… பிறகு கல்யாணம். அவளுடைய கண்களில் நீர்துளித்து விடுகிறது.

கல்யாணம் என்ற ஒன்றைப் பற்றி நினைக்கக் கூட முடியாத நிலை. அளத்தில் வேலை செய்கையில் அங்கேயே சோலி எடுக்கும் ஒரு ஆம்பிள்ளையைக் கட்டினால் இரண்டு பேருக்கும் பணம் கிடைக்குமோ?…

நினைக்கும் போது நெஞ்சு குழையும் நாணம் மேலிட்டு முகம் சிவக்கிறது.

பாஞ்சாலியும் பச்சையும் சென்று அரிசியும் மிளகாய் புளியும் வாங்கி வருகின்றனர்.

அப்பன் எழுந்து மெள்ளப் பின்புறத்துக்கு நடக்கிறார்.

அவள் கையைப் பற்றிக் கொள்ளச் செல்கிறாள்.

“எனக்குப் பழக்கம் தாவுள்ள, நீ போ! வெறவு செவத்தாச்சி குடுத்திச்சா?”

“ஆமா”

“அந்தாச்சி ரொம்ப தங்கமானவுக. முந்நூறு ரூவா கடனிருக்கு அவியக்கிட்ட. எப்படிக் குடுக்கப் போறம்…!” என்று பெருமூச்சு விட்டவாறே நடந்து செல்கிறான். சரசி அப்பனின் கைக்குச்சியை எடுத்துக் கொடுக்கிறாள்.

பொன்னாச்சி வறுமை அறியாதவளல்ல. ஆனால், இங்கு அடிப்பும் கூட இடிந்திருக்கிறது. நீர்ப்பானையும் கூடக் கழுத்தில் ஓட்டையாக இருக்கிறது. துணியைச் சுருட்டி அடைத்திருக்கிறார்கள். பித்தளை என்பது மாதிரிக்குக் கூடக் கிடையாது. அலுமினியம் குண்டான் ஒன்றைத் தவிர உருப்படியாக அப்பச்சியும் சின்னம்மாவும் சாப்பாடு கொண்டு செல்லும் அலுமினியம் தூக்குப் பாத்திரங்கள் தாம் இருக்கின்றன. தண்ணீர் குடிக்கக் கூடப் பித்தளையிலோ வெள்ளோட்டிலோ ஒரு கிளாசு இல்லை. பிளாஸ்டிக் தம்ளர்கள் இரண்டுதாம் அழுக்கேறிக் கிடக்கின்றன. வாளியும் ஒழுகுகிறது. துணிக்கந்தையால் அடைத்திருக்கிறார்கள். அவர்கள் வதியும் அறையும், சமையல் செய்யும் பின் தாழ்வரையும் ஓட்டுக் கட்டிடங்களானாலும் மிகப் பழைய நாளையக் கட்டிடமாக, பந்தல் போல் வெளிச்சத்தை ஒழுக விடுகிறது.

பொன்னாச்சி வீட்டை ஒட்டடை தட்டிப் பெருக்கி, மண்குழைத்துப் பூசி அடுப்பைச் சீராக்குகிறாள். ஒரு சோறு பொங்கி, குழம்பு வைத்து, குழந்தைகளுக்கும் அப்பனுக்கும் போடுகிறாள். பிறகு நல்லக்கண்ணு, மருது, சரசி எல்லோருக்கும் எண்ணெய் தொட்டு முடி சீவி, அழுக்குத் துணிகளை நீர் கொண்டு வந்து கசக்கிப் போடுகிறாள். தம்பி சிவத்தாச்சியிடம் சிநேகம் பிடித்து விட்டான். அவனை எங்கோ கூட்டிச் சென்று பன ஓலை வாங்கி வருகிறாள் ஆச்சி.

அவளுக்குப் பெட்டி முடையத் தெரியும் போலிருக்கிறது. நாரைக் கிழிப்பதைப் பொன்னாச்சி வேடிக்கை பார்க்கிறாள்.

அப்போது “ஆச்சி இருக்காவளா?” என்ற குரலொளி கேட்கிறது.

கரேலென்று குண்டாக, காதில் வயிரக்கடுக்கன்கள் மின்ன, மேலே வெள்ளைவெளேரென்று சட்டையும் உருமாலும் அணிந்து ஒரு பெரியவர் வந்திருக்கிறார். தலை முன்புறம் வழுக்கையாகி, காதோரங்களில் வெண்மையாக நரைத்திருக்கிறது.

வாயிற்படிக்கு நேராக முற்றத்தில் பொன்னாச்சி தான் நிற்கிறாள். அவளைப் பார்த்துத்தான் அவர் கேட்டிருக்கிறார். அவள் சரேலென்று விலகிக் கொள்கிறாள். ஆள் ஒருவன் ஒரு சாக்கை (பத்துப்படி அரிசியோ தானியமோ இருக்கும் என்று தோன்றுகிறது) கொண்டு வந்து முன்புறம் இறக்குகிறான்.

“ஆரு இவிய? புதுசா இருக்கு?” என்று கேட்டாவாறு அவர் மெத்தை நாற்காலியில் அமர்ந்து ஆச்சி கொடுக்கும் விசிறியால் விசிறிக் கொள்கிறார்.

“கண்ணுசாமி இல்ல அவன் பிள்ளியதா. ஊரிலேந்து நேத்து கூட்டியாந்தா. அவனுக்குத்தா கண்ணு தெரியல. சோலியுமில்லே…”

“அப்பிடியா?”

“ஆமா நா நெனச்சிட்ட நாச்சப்பங்கிட்டியோ, ஆறுமுவங்கிட்டியோ கூலி எழுதிக்கிடச் சொல்லணுமின்னு. நீரே வந்தீரு…”

“முத்தன் அரிசி குத்தி வந்திருக்குன்னா. அன்னியே நீ சொன்னியே, சம்பா அரிசி வேணுமின்னு, சரி எடுத்திட்டு வருவமின்னு வந்த. அளத்துக் கோயில்ல கிருத்திக பூசைக்கு இன்னக்கிப் பெரியவிய போவணுமின்னா. அதும் சொல்லிட்டு இப்பிடி வந்தே. கோயில்ல முன் மண்டபம் கட்டிய பெறவு நீ பார்க்கலியே? பெரிய மண்டபம் ட்யூப் லைட்டெல்லாம் போட்டு, வள்ளி கல்யாண சித்திரமெழுதியிருக்கா. அளத்துக்காரவா ஒரு கலியாணம் காச்சின்னு திருச்செந்தூர் போகண்டா…”

அவள் எங்கோ பார்த்துக் கொண்டு ஓலை கிழிக்கிறாள்.

“தா பாஞ்சாலி? செம்பில நல்ல தண்ணி கொண்டா?”

அவள் தண்ணீர் கொண்டு வந்ததும் வாயிலிருக்கும் சக்கைகளை முற்றத்து மூலையில் சுவரில் வாரியடிக்கத் துப்புகிறார். பிறகு தண்ணீரால் வாயை அலசிக் கழுவிக் கொப்பளிக்கிறார் – மீண்டும் போய் உட்காருகிறார்.

“பெரியவிய ஒடம்பு ரொம்பத் தளந்து போச்சி. ஆரு வந்து கலியாணம் காச்சின்னாலும், சாவு செலவுண்ணாலும் கோயில் காரியம்னாலும் ஏன்னு கேக்குறதேயில்ல. பத்து இருவது தூக்கிக் கொடுக்கா. நேத்து கேட்டாவ. ‘செந்திலாண்டவங் கோயிலுக்கு மண்டபம் கட்டிய பெறகு செங்கமலம் வந்தாளா’ண்ணு. வரலான்னா ஏன் கூட்டி வந்து காட்டலேம்பாக, அதான் சொல்லிட்டுப் போலாமின்னு வந்தே. நாளக்கிக் கிருத்திகைப் பூசை. அதோடு பால் குளத்தாச்சி இறந்துபோன நாளு. அம்மங் கோயிலிலும் பூசயுண்டு, காரு அனுப்பிச்சிக் குடுக்கவா?”

“நா ஒரு கோயிலுக்கும் வரல. இவளுக்கு அளத்துல ஒரு கூலி போட்டுக் கொடுக்கணும்…”

“அதுக்கென்ன? நாச்சப்பங்கிட்டச் சொல்லிவிட்டுப் போற. காலம அளத்துக்குப் போனா எடுத்துக்கறா. பொறவு எப்ப வார, நீ?”

“எனக்குச் சாமியே இல்ல. என் சாமி செத்துப் போச்சு. எனக்குக் கோயிலுமில்லே…”

“அது சரி, சாமி செத்துப் போச்சுண்ணா மறுபேச்சு என்ன இருக்கு…?”

பொன்னாச்சி சன்னலில் தெரியாத வண்ணம் பின்னே முற்றத்தில்தான் நிற்கிறாள். அவர் எழுந்து போகிறார். வாயிலில் ரிக்ஷா அதுகாறும் நின்றிருப்பதை அறிவித்துக் கொண்டு அது திரும்பிப் போகிறது.

“ஏட்டி, பாஞ்சாலி? ஒங்கக்காளக் கூப்பிடுடீ?”

அவள் அழைக்க வேண்டிய அவசியமே இருக்கவில்லை. பொன்னாச்சியே உள்ளே செல்கிறாள்.

“ஒனக்கு அதிட்டந்தா. இவ பழைய கணக்கவுள்ள. கும்பிடப்போன தெய்வம் குறுக்க வந்தாப்பில வந்தா. நாளக்கு சின்னாச்சிய பொழுதோடு கூட்டிட்டுப் போயி, அட்வான்ச வாங்கிக்கிங்க… இருவத்தஞ்சும் இருவத்தஞ்சும் அம்பது ரூவா கொடுப்பா…”

பொன்னாச்சிக்கு அந்த அம்மைக்கு எப்படி நன்றி கூறுவதென்று புரியவில்லை. அந்தக் கணக்கப்பிள்ளை இவளுக்கு உறவு போலும்!

மலர்க்குவியல் பூரித்தாற் போல் முகம் உவகையால் பொங்குகிறது.

வாயில் திண்ணையில் சாய்ந்திருக்கும் தந்தையைத் தொட்டு, “அப்பாச்சி, அந்த ஆச்சி எனக்கும் தம்பிக்கும் பனஞ்சோலை அளத்துல வேலக்கிச் சொல்லிருக்கா. நாளக்கிச் சின்னாச்சியக் கூட்டிட்டுப் போயி அட்வான்சு வாங்கிக்குமின்னு சொல்றாவ. அம்பது ரூவா குடுப்பாவளாம்…” என்று பூரிக்கிறாள்.

அப்பச்சியின் கண்டத்திலிருந்து கொப்புளம் உடைந்தாற் போல் விம்மல் ஒலிக்கிறது. அவள் தலையைக் காய்த்துப் போன கையால் தடவுகிறார். பேச்சு எழவில்லை.

அவள் மாகாளியம்மனை நினைத்துக் கொள்கிறாள்; திருச்செந்தூர் ஆண்டவனை நினைக்கிறாள். “மாமன் வந்து சண்டையொன்றும் போட்டுவிடக் கூடாதே…” என்ற நினைப்பும் ஓடி மறைகிறது. முதல் கூலியில் ஒவ்வொரு ரூவாய் எடுத்து வைக்க வேண்டும்.

சின்னம்மா வீடு திரும்பும் போது நன்றாக இருட்டி விடுகிறது. ஒரு பெட்டியில் அரிசியும், விறகுக் கட்டுமாக அவள் வருகிறாள்.

கண்கள் ஆழத்தில் இருக்கின்றன. சுமையை இறக்கி விட்டு நீர் வாங்கிக் குடிக்கிறாள்.

“எனக்குந் தம்பிக்கும் பனஞ்சோலை அளத்துல வேலைக்குச் சொல்லியிருக்கா அத்தாச்சி. நாளாக்கிக் கூட்டிப் போகச் சொன்னாவ. அட்வான்ஸ் தருவாகளாம்?”

“ஆரு வந்திருந்தா?”

“ஒரு கரத்த ஆளு. கடுக்கன் போட்டிருந்தா…”

“சரித்தா முத்திருளாண்டி…”

“அந்த அளம் நீங்க போற தாவுலதா இருக்கா சின்னம்மா?”

“இல்ல அன்னிக்கு பஸ்ஸில வந்தமில்ல? அங்கிட்டுப் போயி வடக்க திரும்பணும். அந்த அளத்துக்கு செவந்தியாபுரம், சோலக்குளம் ஆளுவதா நெரயப் போவா. இங்கேந்து ஆருபோறான்னு பார்க்கணும்…”

வாழ்க்கை வண்ணமயமான கனவுகளுடன் பொன்னாச்சியை அழைப்பதாகத் தோன்றுகிறது. அந்தக் கனவுகளுடன் உறங்கிப் போகிறாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஜெயகாந்தனின் சிறுகதைகள் – தொகுப்பு – 1ஜெயகாந்தனின் சிறுகதைகள் – தொகுப்பு – 1

10. யந்திரம்   முத்தாயியை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனென்றால் நீங்கள் எங்கள் காலனியில் வாழ்பவரல்ல; வாழ்ந்திருந்தாலும், அல்லது வாழ்ந்துகொண்டிருந்தாலும் உங்களுக்கு அவளைத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு ஐந்து வயதுக்குமேல் பத்து வயதுக்குள் ஒரு மகன் அல்லது மகளிருந்தால் அந்தப்

கல்கியின் ‘பரிசல் துறை’-4கல்கியின் ‘பரிசல் துறை’-4

4 குமரி போனதும் கொஞ்ச நேரம் பழனி பரவச நிலையிலிருந்தான். அவனுடைய உடம்பிலும் உள்ளத்திலும் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டிருந்தது. ஆனால் மறுபடியும் வாசலில் காலடிச் சத்தம் கேட்கவே, பழனி பரவச நிலையிலிருந்து கீழிறங்கினான். “யாராயிருக்கலாம்?” என்று யோசிப்பதற்குள்ளே, காளிக் கவுண்டன் உள்ளே

கல்கியின் பார்த்திபன் கனவு – 19கல்கியின் பார்த்திபன் கனவு – 19

அத்தியாயம் 19 தந்தையும் மகளும் குந்தவி தாயில்லாப் பெண். அவளுடைய அன்னையும் பாண்டிய ராஜகுமாரியும் நரசிம்மவர்மரின் பட்ட மகிஷியுமான வானமாதேவி, குந்தவி ஏழு வயதுக் குழந்தையாயிருந்தபோதே சுவர்க்கமடைந்தாள். இந்தத் துக்கத்தை அவள் அதிகமாக அறியாத வண்ணம் சில காலம் சிவகாமி அம்மை