Tamil Madhura சிறுகதைகள் கடைசி பெஞ்ச்

கடைசி பெஞ்ச்

School2

நான் இப்ப வாய்ஸ் ஓவர் போடப் போறேன். அதனால நீங்களும் அதே பாணியில் படிக்கவும்.

சித்திரை பொறி பறக்க, கத்திரி வெயிலடிக்கும் அழகு மதுரைதான் என் ஊர். அப்பா டிபார்மென்ட் ஸ்டோர் வச்சிருக்கார். நான் ஒரே பொண்ணு. ரொம்பச் செல்லம்.

இருந்தாலும்  இன்னைக்குக் காலைல கூட வீட்டில் ஒரு பெரிய சண்டை போட்டுட்டுத்தான் ஸ்கூலுக்கு கிளம்பிருக்கேன். ச்சே ச்சே  வீட்டில் ஒரு பிரச்சனையும் இல்லை. எனக்கு பிரச்சனையே ஸ்கூல்தான்.

‘மாதரசி பெண்கள் மேல்நிலை பள்ளி’ கேள்விப் பட்டிருக்கிங்களா அங்கதான் நான் படிக்கிறேன். எங்க வீட்ட்லேருந்து நாலாவது கட்டிடம் எங்க ஸ்கூல்.  நான் மட்டுமில்ல எங்க பெரியம்மா பொண்ணு, அத்தை பொண்ணு, மாமா பொண்ணு எல்லாரும் அந்த பள்ளிதான். ஒரு விதத்தில் எங்க குடும்ப ஸ்கூல்.

மாதரசில ஒரு வித்யாசமான நடைமுறை இருக்கு. ஆங்கிலப் பெயர் வரிசைப்படிதான் உக்காரவைப்பாங்க. அதில் என்ன பிரச்சனையா?

ஒவ்வொரு வருஷமும்  அனிதா, அகிலா எல்லாரும் முதல் பெஞ்சில் உக்காருவாங்க, ஆனால் வீரலட்சுமியாகிய நானும், பிச்சம்மா, சுமதி எல்லாரும் கட்டக்கடைசி பெஞ்சு.  எத்தனை வருஷம் இந்த அநியாயத்தை பொறுத்துக்கிறது? இதை மாத்தணும்னா ஒண்ணு ஸ்கூல் மாறணும் இல்லை என் பேரு மாறணும். எங்கப்பாவோ குடும்ப ஸ்கூல்னு மாத்த மாட்டேன்னு சொல்லிட்டாங்க .

“அப்ப என் பேரையாவது  அனுஷ்கான்னு மாத்திடுங்க” என்றேன் அம்மாவிடம்.

“பேரு மாத்தணுமா.. அதெல்லாம் நடக்காது”

“ஏன் நடக்காது போன வருஷம் கார்த்திகா அக்கா பேரை மாத்துனிங்கல்ல”

“கூறு கெட்டவளே… அக்கா கல்யாணமானதும் மாமா பேரை சேர்த்து மாத்தினோம். கல்யாணத்துக்கப்பறம் பேரை மாத்துறதும் வீம்புக்குப் பேரை மாத்துறதும்  ஒண்ணா”

“பேரை மாத்தக் கல்யாணம்தான்  பண்ணிக்கணும்னா… எனக்கு உடனே கல்யாணம் பண்ணி வச்சுடுங்க”

“எடு விளக்கமாத்த… ” அம்மா எகிற

“பாரும்மா… ஒண்ணு ஸ்கூல மாத்து இல்லை பேரை அனுஷ்கான்னு  மாத்து. இல்லைன்னா அடுத்த வருஷதிலேருந்து ஸ்கூலுக்கு போகமாட்டேன்” வீம்பாய் முறைத்துக்கொண்டேதான் வந்தேன்.

எனக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்திருக்கும் பிச்சம்மா “உனக்கு என்னடி இந்த பெஞ்சில் குறை. காலைல பின்னாடி உக்காந்துகிட்டே டீச்சருக்குத் தெரியாம டிபன் சாப்பிடலாம், மத்யானம் குட்டித் தூக்கமே போடலாம், ஹோம்வொர்க் எல்லாம் இங்கயே உக்காந்து செய்யலாம்.

முதல் பெஞ்சில் இருக்குறவ இதெல்லாம் நெனச்சாவது பாக்க  முடியுமா.  டீச்சருங்க வேற அவளுங்க நோட்டையும் புக்கையும்தான் வாங்கிப் பாப்பாங்க. எப்பவுமே அலெர்ட்டா இருக்கணும். முதல் பெஞ்சுக்காரி ஒவ்வொருத்தியும் இந்த இடத்துக்கு வர  ஏங்குறா.. நீ என்னடான்னா” அலுத்துக் கொண்டாள்.

நான் எதற்கும் மசியவில்லை. வீட்டில் பெயர் மாற்றியே ஆகவேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றேன்.

“உன் பெஞ்சை  மாத்த சொல்லி இன்னைக்கு கூட உங்க ஹெட் மாஸ்டர்ட்ட சொல்லிருக்கேம்மா… ” என்ற அப்பாவின் கெஞ்சல்  என்னை இம்மியளவு கூட  அசைக்கவில்லை.

“அந்தம்மா செஞ்சுட்டுத்தான் வேற வேலை பார்க்கும். என் பேரை அனுஷ்கான்னு மாத்துவியா மாட்டியா”

கடைசியில் லக்ஷ்மி என்ற அப்பத்தாவின் பேரை மாற்ற முடியாது முன்னால் ஒட்டிக் கொண்டிருக்கும் வீரத்தை வேண்டுமானால் மாற்றுகிறேன் என்ற அப்பாவின்   சமாதான உடன்படிக்கையுடன், அந்த வருட முழு ஆண்டுத் தேர்வு விடுமுறையில் பெயர் மாற்றப்பட்டு,  வீரலக்ஷ்மியாகிய நான் வெற்றி கரமாக அன்னலக்ஷ்மி என்று புதிய பெயரோடு பள்ளிக்கு சென்றேன்.

“அன்னலக்ஷ்மி பேரு கூட சுப்பர்டி… இனிமே முதல் பெஞ்சுக்குப் போயிடுவேல்ல ” என்று என் கடைசி பெஞ்ச் தோழியர்கள் வருத்தப்பட்டார்கள்.

புது வகுப்பறை, புது வகுப்பாசிரியை பெயர் வரிசைப்படி எங்கள் அனைவரையும் நிற்க வைத்தார். பெருமையாக மூன்றாவது ஆளாக நின்றேன். ‘எப்படியும் முதல் பெஞ்சுதான்’

“முதல்ல நிக்கிற ஆறு பேரும்  புத்தகப் பையைத் தூக்கிட்டுக்  கடைசி பெஞ்சுக்குப் போங்க”

என் காதில் விழுந்தது என்ன?

“டீச்சர், எங்களை ஏன் கடைசி பெஞ்சுக்குப் போக சொல்றிங்க.  என் பேரு  வீரலட்சுமி இல்லையே  அன்னலட்சுமின்னா முதல் பெஞ்சில் தானே உக்காரணும்  ”

“இந்த வருஷத்திலிருந்து ரூலை மாத்திட்டோம். நிறைய பெற்றோர் கேட்டுக்கிட்டதால அகரவரிசைப்படி முதல்ல இருக்கவங்க கடைசி பெஞ்சிலும், கடைசில இருக்கவங்க முதல் பெஞ்சிலும் உக்கார வைக்க சொல்லிருக்காங்க. சரி சரி பேச்சை வளக்காம போயி கடைசி பெஞ்சில் உக்காரு”

நான் வெறுப்போடு கடைசி பெஞ்சைப் பார்க்க
” ஹய்யா நமக்கும் கடைசி பெஞ்சு”  சந்தோஷத்தோடு அகிலாவும் அனிதாவும் என்னை முந்திக் கொண்டு  ஓடினார்கள்.

“வீரலட்சுமி  முன்னாடியே தெரிஞ்சுதாண்டி பேரை மாத்திருக்கா… நம்மகிட்ட சொல்லிருந்தா நம்மளும் மாத்திருப்போம்ல ” என்ற பிச்சம்மாவின் குரலைக் கேட்டு நொந்தபடி  எனது இருக்கைக்கு சென்றேன்.

அன்னலக்ஷ்மி இருபத்திநாலு மணி நேரத்தில் மறுபடியும்  வீரலக்ஷ்மியாக என்ன வழின்னு தெரிஞ்சா சொல்லுங்களேன் ப்ளீஸ்.

3 thoughts on “கடைசி பெஞ்ச்”

  1. Hi Tamil,
    Ha, ha, ha 🙂 🙂 Refreshing story !!

    Aaga motham, namakku enna vidhichirukko adhu nadandhe theerumnu sollitteenga 🙂 🙂 Poor Veera-Anna-Lakshmi !! Ha, ha, ha 🙂 🙂

    Thanks for giving this lighter moment, Tamil !

  2. Ha ha super veers nee ena try panninalum football mathiri una Ye kuri vaikirangale thangam,pch enna mathiri maduraila piranthu valarntha unaku inthe nilamaya?vidu mathura va mirati unna front row ku math and solliduvom!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்

நாங்கள் அனைவரும் மைசூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் நண்பர்கள். எங்கள் தோழன் விமேஷுக்குத் திருமணம் நிச்சயமாகியிருந்தது. விமேஷ் எங்களைக் கண்டிப்பாக வருமாறு அழைத்துவிட்டு ஒரு வாரத்திற்கு முன்னரே அவனது ஊருக்கு சென்றுவிட்டான். அவன் மைசூரிலிருந்து வெகு தூரத்திலிருந்த

ரெ. கார்த்திகேசுவின் ‘ஒரு சுமாரான கணவன்’ரெ. கார்த்திகேசுவின் ‘ஒரு சுமாரான கணவன்’

“அதோ தெரியிது பாத்தியா, அதுதான் எங்க பினாங்கு!” என்றான் தியாகு. அன்னம்மாள் விழித்து விழித்துப் பார்த்தாள். அந்த அதிகாலை நேரத்தில் தூரத்தில் அக்கரையில் இருந்து பார்க்கும் போது அது ஒரு மாய லோகமாகத் தெரிந்தது. தலை நிலத்தோடு தொப்புள் கொடியாக இருந்த

நடுத்தெரு நமஸ்காரம்!நடுத்தெரு நமஸ்காரம்!

எழுத்தாளர் G. A. பிரபா மேம் அவர்களின் பொற்றாமரை தீபாவளி 2020 இதழில் வெளிவந்த எனது சிறுகதையை இங்கு பதிவிடுகிறேன்.  இதற்கு தலைப்பு தந்த கணேஷ் பாலா சாருக்கு எனது நன்றிகள். கௌசல்யாவுக்கு  படபடவென வியர்த்து வந்தது. சுற்றிலும் எல்லாரும் அவளையே வெறித்துப் பார்ப்பது போல ஒரு உணர்வு.