பேசும் முட்டைகள்

பேசும் முட்டைகள்

பச்சை பசேல் என கண்ணை நிறைக்கும் கிராமம் ஆலங்காடு. பெயருக்கேற்ப, ஆலமரங்கள் நிறைந்தது. காடுகள் சூழ்ந்தது. மழைக்காலத்தில் குரல் கொடுக்கும் மலைநதிகள், கோடை காலத்தில் நிழல் தரும் மரங்கள், பசுமை வயல்கள், பசுக்கள் மேயும் மேடுகள். இப்படி இயற்கை எழுதிய கவிதை போல ஒரு கிராமம்.

 

அந்தக் கிராமத்தில் வாழ்ந்தாள் முத்தம்மாள். அவளுக்கு இரண்டு மகள்கள் சிந்து மற்றும் சாந்தி. சிந்து பெரியவள். தாயைப் போலவே சோம்பேறி, கோபக்காரி. சாந்தி சிறியவள். பணிவும், பொறுமையும் நிறைந்தவள். ஆனால், தாயாருக்கு பிடித்தவள் சிந்துதான். ஏனெனில் அவள் அப்படியே தாயை ஜால்ரா போட்டு பிழைப்பவள் . என்ன செய்வது தனது செயல்களுக்கெல்லாம் ஆமாம் சாமி போடுபவரைத்தானே எல்லாருக்கும் பிடிக்கிறது. 

 

வீட்டில் எல்லா வேலைகளும் சாந்திதான் செய்வாள் தண்ணீர் எடுக்க, சமையல் செய்ய, மாடுகளை மேய்க்க. சிந்து சோம்பலாக படுக்கையில் படுத்து, சாந்தியை வேலை செய்ய ஏவுவாள். தாயார் கூட, “சாந்தி, உனக்குத்தான் வேலை எல்லாம் செய்யத் தெரியும். அதனால நீயே செஞ்சுடு . சிந்துவுக்கு வேலை செஞ்சா உடம்புக்கு வந்துடும்!” என்று கூறுவாள்.

 

ஒருநாள், சாந்தி குளத்துக்குத் தண்ணீர் எடுக்க சென்றாள். வழியில், ஒரு மூதாட்டி  வெண்மையான முடி, கண்ணில் கருணை, தளரும் நடை  அவளை அழைத்தாள்.

 

“மகளே, எனக்கு தாகமாக இருக்கிறது. கொஞ்சம் தண்ணீர் தருவாயா?” என்றாள்.

 

சாந்தி, “அம்மா, நிச்சயமாக. இந்தாங்க ” என்று கூறி, தன் வாளியை சுத்தம் செய்து, குளத்திலிருந்து நல்ல தண்ணீரை எடுத்து மூதாட்டிக்கு கொடுத்தாள்.

 

அந்த மூதாட்டி காட்டுப்பக்கத்தில் வாழ்கிறார். அங்கு கோழிப்பண்ணை ஒன்றை வைத்திருப்பதாக கேள்வி. அதைத்தவிர யாருக்கும் ஒன்றும் தெரியாது. 

 

மூதாட்டி புன்னகையுடன், “நீ நல்ல மனம் கொண்டவள். உனக்கு ஒரு பரிசு தர விரும்புகிறேன். நாளை காலை அதோ அங்கு தெரிகிறதே அந்த மரக்கூட்டம் அருகே வா. ஆனால், அங்கு என்ன பார்த்தாலும், யார் என்ன சொன்னாலும் கேள் ஆனால் சிரிக்கக்கூடாது. நான் தலை சீவி ரொம்ப நாள் ஆகிவிட்டது. வரும்போது ஒரு சீப்பு வாங்கி வருகிறாயா?” என்றாள்.

 

அடுத்த நாள், சாந்தி மரக் கூட்டம் அருகே சென்றாள். மூதாட்டி அவளை அழைத்துச் சென்றாள். வழியில், முள்ளி செடிகள் தானாகவே பக்கமாக ஒதுங்கின. காகங்கள், பாம்புகள், மயில்கள்  எல்லாம் பேசின. “வணக்கம், சாந்தி!” 

 

சாந்தி அதிர்ச்சியடைந்தாலும், சிரிக்கவில்லை. அவள் மூதாட்டியின் வீட்டுக்கு  வந்தாள். அங்கே, ஒரு அலமாரி முழுவதும் முட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

 

“இனிப்பு சாப்பிடுகிறாயா சாந்தி” எதுவும் புரியாமல் சாந்தி தலையசைக்க, 

 

மூதாட்டி  வெறும் பானையில் ஒரு முட்டையை போட்டாள். அதிலிருந்து சுவையான பாயசம் வந்தது!

 

பின்னர், சாந்தி தான் வாங்கி வந்திருந்த சீப்பினை அவரிடம் தந்தார். 

 

மூதாட்டி “நினைவு வைத்து வாங்கி வந்திருக்கிறாயே. நான் தலை சீவிட்டு வந்துடுறேன்” தன் தலையை எடுத்தாள், தன் மடியில் வைத்தாள், சீவினாள். சாந்தி அதையும் பார்த்தாள் ஆனால் சிரிக்கவில்லை, திகைக்கவில்லை.

 

மூதாட்டி மகிழ்ச்சியுடன், “நீ என் சொற்களை மதித்தாய். அதற்காக ஒரு பரிசு தரப்போகிறேன். வெளியே கோழிப்பண்ணைக்கு செல். அங்கே கூடைகளில்  பேசும் முட்டைகள் இருக்கின்றன.

 

அவற்றில் ‘என்னை எடு’ என்று சொல்வதை மட்டும் எடு. ‘என்னை எடுக்காதே’ என்றால் விட்டு விடு. அவற்றை வழியில் உடைத்தால், அதில் உனக்கு பரிசுகள் இருக்கும்,” என்றாள்.

 

சாந்தி கோழி பண்ணைக்கு  சென்றாள். அங்கு இரண்டு கூடைகள் இருந்தன. ஒன்றில் சாதாரண மூட்டைகளும் மற்றொன்றில் தங்க மூட்டைகளும் இருந்தன. 

 

சாந்தி அருகில் வந்தவுடன் சில சாதாரண முட்டைகள் “என்னை எடு” என்றன. சில தங்கம் போல ஒளிரும் முட்டைகள் “என்னை எடுக்காதே” என்றன. சாந்தி பணிவுடன் என்னை எடு என்று சொன்ன முட்டைகளை மட்டும் எடுத்தாள்.

 

பாட்டியிடம் விடை பெற்றுக் கொண்டு அவர் சொன்னபடி வழியில், அவள் ஒரு முட்டையை உடைத்தாள். அதிலிருந்து பட்டுப் புடவைகள், தங்க நகைகள் மற்றும் அவற்றை ஏற்றிச் செல்ல வண்டி எல்லாம் வந்தன. எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாள். 

 

சிந்து  மற்றும் தாயார் அதைப் பார்த்து மகிழ்ச்சியாக இருப்பது போல நடித்தனர். “உனக்கு எப்படி இதெல்லாம் கிடைத்தது” என்று கேட்டனர். சாந்தி உண்மையைச் சொன்னாள்.

 

அடுத்த நாள், தாயார் சிந்துவை  அனுப்பினார். “நீயும் அந்த பாட்டியிடம் சென்று செல்வம் வாங்கி வா,” என்றாள்.

 

சிந்து சாந்தி கூறிய அடையாளங்களை வைத்துக் கொண்டு  மரக்கூட்டம் சென்றாள். மூதாட்டி அவளையும் வரவேற்றாள். “நீ என்ன பார்த்தாலும்  சிரிக்கக்கூடாது,” என்றாள்.

 

சிந்து, காகங்கள் பேசும் போது, முள் செடிகள் நகரும் போது, மூதாட்டி பாயசம் செய்வது, தலைமுடி சீவுவது எல்லாம் பார்த்து கத்தி சிரித்தாள்.

 

“சாந்திக்கு மட்டும் பரிசு தந்தீர்கள் எனக்கு கிடையாதா?” என்று வாதாடினாள்.

 

மூதாட்டி அமைதியாக, “நீ இதுவரை என் சொற்களை மதிக்கவில்லை. பரவாயில்லை கோழி கூடத்துக்குச் செல். ‘என்னை எடு’ என்ற முட்டைகளை மட்டும் எடு,” என்றாள்.

 

சிந்து பாட்டி சொன்னதை அலட்சியப்படுத்தி  “என்னை எடுக்காதே” என்று சொன்ன  தங்க முட்டைகளை எடுத்துக் கொண்டு, எங்கே  அவரிடம் காட்டினால் பிடிங்கிவிடுவாரோ என்று கொல்லைப்புறக் கதவைத் திறந்து அந்தப் பாதையில் ஓடினாள் .

 

வீடு செல்வதற்கு முன் வழியில், பொறுமையின்றி எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் போட்டு  உடைத்தாள். அதிலிருந்து பாம்புகள், நத்தை, கொசுக்கள், தவளைகள்  எல்லாம் வெளியே வந்தன.நாலா புறமும் ஓடின. அவற்றிடமிருந்து தப்பிக்க சிந்து ஓட்டமாய் ஓடி வீட்டினை வந்தடைந்தாள்.  வீடு வந்ததும் தாயாரிடம் நடந்தது எல்லாம் சொல்லி அழுதாள்.

 

சாந்தி, தன் அன்பும், பணிவும் கொண்டு, செல்வம் மட்டுமல்ல, மனநிறைவு பெற்றாள். 

 

சிந்து, தன் சோம்பல் மற்றும் சொல்பேச்சு கேட்பதற்கான மனப்பான்மை இல்லாமை காரணமாக, தண்டனை பெற்றாள்.

 

தாயார், உணர்ந்து, “அந்த  பாட்டி நல்லதுதான் சொன்னார். சாந்தி மாதிரி பொறுமையோடு கேட்டிருந்தால் நமக்கும் நல்லது நடந்திருக்கும்,” என்று வருத்தப்பட்டாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சிறைப்பறவைசிறைப்பறவை

  அந்த சிறிய ஜன்னலின் வழியே சுளீரென்று வெயில் அறையில் அமர்ந்திருந்த என் மேல் பட்டது. வெயில் சட்டையில் ஊடுருவித்  தோலை சுட, அந்த ஜன்னலின் வெளியே தெரிந்த தெள்ளிய நீல வானைப் பார்த்தேன். போன வருடம் இந்நேரம் நானும் என் தம்பியும்

சூரப்புலி – 3சூரப்புலி – 3

அக்குரல் அடங்கிய பிறகும் மலைச் சாரலிலே எதிரொலி வெகுநேரம் வரையிலும் கேட்டுக்கொண்டே இருந்தது. அந்தக் குரலைக் கேட்டதும் கானகமே கொஞ்ச நேரம் பயந்து மெளனமாக இருந்தது போலத் தோன்றிற்று. அந்தக் குரலைக் கேட்டு எல்லாப் பிராணிகளும் திகைத்துப்போய் ஊமையாகி விட்டனவோ என்னவோ?