Tamil Madhura குழந்தைகள் கதைகள்,சிறுகதைகள்,தமிழ் மதுரா கிறுக்குசாமி கதை – காட்டுத்தீ

கிறுக்குசாமி கதை – காட்டுத்தீ

அந்த அலுவலகத்தின் பார்க்கிங்கில் ராகவனும் கிருஷ்ணனும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“என்னடா விஷயம் இன்னைக்கு. சாப்பிடக் கூட வராம வேலை செஞ்சுகிட்டு இருந்த” கேட்ட ராகவனிடம் அங்கலாய்த்தான் கிருஷ்ணன்.

“எங்கம்மாவப் பத்தித்தான் உனக்குத் தெரியுமே எதையும் மனசில் வச்சுக்கத் தெரியாது அப்படியே பேசிருவாங்க. அதே வெள்ளந்தி குணத்தில் என்ன சாம்பார் இது வாயில வைக்க விளங்கலன்னு சொல்லிட்டாங்கடா. அதுக்கு என் வைஃப் மூஞ்சியை ஏழு முழத்துக்குத்  தூக்கி வச்சுக்கிட்டு சாப்பாடு கட்டித் தரல. நான் வாய்விட்டு என்னாச்சுன்னு கேட்டு சமாதானப்படுத்தனுமாம். சரிதான் போடின்னு கிளம்பி வந்துட்டேன். ”

“நம்ப அம்மாவுக்குத் தானடா நாம படுற கஷ்டமெல்லாம் தெரியும். கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கெல்லாம் தோசைக்கு எங்கம்மா ரெண்டு சட்டினி அரைச்சு சாப்பிட சொல்லி கெஞ்சும். இப்ப ரெண்டாவது சட்டினி கேட்டா நாந்தான் சட்டினி.மிக்ஸில போட்டு கர கரன்னு அரைச்சுருவா”

“ஒண்ணுமில்லாத உப்பு பெறாத விஷயத்துக்கெல்லாம் வீட்டுல இவங்க பண்ற டார்ச்சர் தாங்க முடியலடா”

“இன்னைக்கு எங்கம்மா பிள்ளைகளைக் கூட்டிட்டு கோவிலுக்கு போயிருக்காங்க. ஏதோ கதை சொல்ற சாமியார் வந்திருக்காராம். ஆபிச விட்டு வரும்போது கூட்டிட்டு வரச் சொல்லி உத்தரவு. நான் கிளம்புறேன். நீ வீட்டுக்கு போயி அமைதியை நிலைநாட்டப் பாரு”

“நானும் உன் கூட வரேண்டா. மாமியார் மருமக பிரச்சனை எல்லாம் நம்ம கண்டுக்காம விட்டுட்டா தன்னாலயே சரியாயிரும்”

இருவரும் கோவிலை அடைந்த போது சிறுவர்களுக்காக கதை சொல்லிக் கொண்டிருந்தார் கிறுக்குசாமி.

ஒரு கிராமத்தில் இரண்டு நண்பர்கள் வாழ்ந்தார்கள். ஒருவன் பெயர் வினோத், இன்னொருவன் சந்திரன்.

ஒருநாள் அவர்கள் இருவரும் காட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். திடீரென்று, வினோத் தரையில் சில புல்லும் உலர்ந்த இலைகளும் இருந்ததைப் பார்த்தான். சிறு வயதினர் சேர்ந்தால் ஒரு கண்மூடித்தனமான குருட்டு தைரியம் வருமே. அந்த தைரியத்தில் ஜாலிக்காக தீக்குச்சி எடுத்து நெருப்பை  பொருத்தி  போட்டுவிட்டான்.

அந்த தீ வேகமாக பரவத் தொடங்கியது. அதைப் பார்த்த சந்திரன் நடுங்கிவிட்டான். அருகே ஓடிக்கொண்டிருந்த சிறிய ஆற்றைச் சுட்டிக் காட்டி சந்திரன் சொன்னான்:

“வினோத், தீ எரியத் தொடங்கியிருக்கிறது. நீர் கொண்டு வந்து உடனே அணைச்சுருவோம். இல்லை இது முழுக் காட்டையும் எரித்துவிடும்.”

ஆனால் வினோத் சிரித்தான்.
“சின்ன தீ தான்! தன்னாலேயே அணைஞ்சுரும்” என்று அலட்சியமாக விட்டுவிட்டான்.

சிறிது நேரத்தில் தீ பெரிதாகி, பறவைகள், மிருகங்கள் எல்லாம் ஓடின. காடு முழுவதும் அச்சம்.
இப்போது தான் வினோத் பயந்தான்.

சந்திரன் சீக்கிரமாக ஓடி நீரை கொண்டு வந்து தீயில் ஊற்றினான். ஆனால் அப்போது நண்பர்கள் இருவரின் உழைப்பும் பலனளிக்கவில்லை. தீயைப் பார்த்து அருகில் இருந்த அனைவரும் ஒன்று சேர்ந்து கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் வைத்து தண்ணீரை எடுத்து தீயை அணைக்க தொடங்கினார். தீயணைப்பு நிலையத்தில் இருந்து தகவல் கேட்டு விரைந்து அந்த இடதிற்கு வந்து விட்டனர். இப்படி பலர் சேர்ந்தும் கடினமாக உழைத்த பிறகே அந்த தீ அணைந்தது.

அந்த நாள் வினோத் உணர்ந்தான்:
“சிறிய தீயையும் நாம் சிரித்து அலட்சியப்படுத்தக் கூடாது. உடனே சரி செய்தால் மட்டுமே  நம்மையும், பிறரையும் காப்பாற்றலாம்.”

அதனால் குழந்தைகளே! நம்ம சின்ன தப்பு தானே அப்படின்னு அலட்சியமா இருக்காம உடனே சரி செஞ்சுடணும். இன்னைக்கு வீட்டுப்பாடம் செய்ய வேண்டாம் டீச்சர் கிட்ட பொய் சொல்லிக்கலாம். அம்மா கிட்ட புஸ்தகம் வாங்க வேணும்னு ஏமாத்தி காசு வாங்கலாம் இதெல்லாம் சிறிய தீ. பின் நாட்களில் பெருசாகும். சரியா

வீட்ல பாத்தா உங்க அம்மாக்கள் எல்லாம் சின்ன தலைவலிதான், காலு வலிதான் அப்படின்னு கைல கிடைக்கிற களிம்பை தடவிட்டு உக்காருவாங்க. அவங்களுக்கும் இது சின்ன விஷயம்னு சொல்லாம வைத்தியர்கிட்ட கூட்டிட்டு போயி வைத்தியம் பாத்துக்க சொல்லணும். “

இப்படி கதையை கிறுக்குசாமி சொல்லி முடித்தபோது கிருஷ்ணன் மனதினுள் முடிவு செய்து கொண்டான் “சின்ன சண்டை  தானேன்னு தள்ளி போடாம இன்னைக்கு வீட்டில் அம்மாட்டயும் , அவகிட்டயும் பேசி இந்தப் பிரச்சனைக்கு ஏதாவது தீர்வு கண்டுபிடிக்கணும்”.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

பாங்கர் கோட்டைபாங்கர் கோட்டை

    இந்திய அகழ்வாராய்ச்சி அமைப்பே, அங்கு எச்சரிக்கைப் பலகை ஒன்று வைத்திருக்கிறது, ‘சூரியன் மறைந்த பிறகு யாரும் இந்தக் கோட்டையின் எல்லைக்குள் இருக்கக் கூடாது’ என்று. இதனால், இந்தியாவின் அமானுஷ்ய இடங்கள் பட்டியலில் இந்தக் கோட்டையே முதலிடம் வகிக்கிறது. இந்த