கிறுக்குசாமி கதை – அஞ்சுவது யாதொன்றும் இல்லை
“சாமி, துண்ணூறு” என்றபடி மகன் ராஜேஷை அழைத்து வந்து நின்றாள் வடிவு.
“என்னம்மா, பரிட்சை வந்துடுச்சா?” என்றபடி வந்தார் கிறுக்குசாமி.
“ஆமா சாமி, இவனுக்கு ஒரு படத்தில் காமிப்பாங்களே அதே மாதிரி ஸ்கூல் பயம், டீச்சர் பயம், கணக்கு பாடம் பயம், அறிவியல் பயம் , ஆங்கிலம் பயம், புத்தகம் பயம், பரிட்சை பயம்… இப்படி அடுக்கிக்கிட்டே போகலாம்” பெருமூச்சு விட்டாள் வடிவு.
முழு ஆண்டு தேர்வுக்கு பயந்து துண்ணூறு பூசிக்கொண்டு செல்பவன் இப்போது காலாண்டு தேர்வு வந்தாலே பயம் என்று வந்து நிற்கின்றான்.
“உனக்கு ஏண்டா இவ்வளவு பயம் வருது?”
“மத்ததெல்லாம் கூட ஓகே. ஆனால் பரிட்சைன்னு சொன்னாலே பயம் வந்துருது”
“அதுதான் ஏன்? ஒழுங்கா தினமும் பாடத்தை படிச்சிருந்தா எதுக்கு பயம்?”
“அதுதான் தாத்தா… மார்க்கு குறைஞ்சா டீச்சர் தண்டனை தர்றாங்க, வீட்டுல அப்பாகிட்ட அடி வாங்கணும், அம்மா தினமும் மண்டைல கொட்டி பாடம் நடத்துவாங்க. இதையெல்லாம் நினைச்சாலே கவலை வந்துருது. ஏன் தாத்தா இந்த பரிட்சை எல்லாம் வச்சு எங்களைக் கொல்லுறாங்க”
அதுதான் அதுதான் காரணம். “இன்னைக்கு ஒரு சிங்கக்குட்டி கதை தயார் பண்ணி வச்சிருந்தேன். உனக்குத்தான் காய்ச்சல் வந்துருக்கே இன்னொரு நாள் பாக்கலாம்”
“தாத்தா தாத்தா… டாக்டர் இன்னைக்கு மருந்து கொடுத்தாரு. அவரு சூப்பர் டாக்டர். நல்லா வைத்தியம் பாப்பாரு. இப்ப காய்ச்சல் குறைஞ்சுருச்சு பாருங்க” கிறுக்குசாமியின் கைகளை எடுத்து தனது கழுத்தில் வைத்துக் காண்பித்தான்.
“ப்ளீஸ் கதை சொல்லுங்க தாத்தா”
“சரி, கதை சொல்லனும்னா இனிமே பயப்படாம இருப்பேன்னு சொல்லு”
“முதல்ல கதையை சொல்லுங்க”
ஒரு பெரிய காட்டுல சிங்கக் குட்டி ஒண்ணு வாழ்ந்தது. அதன் பெயர் சூரன்.
சூரன் மிகவும் சின்னவன்,இன்னும் கர்ஜிக்க கூடத் தெரியாது.
ஆனால் ஒரு விஷயம். அவன் எப்போதும் அஞ்சிக் கொண்டே இருப்பான். பயப்படுறதுக்கு இன்னொரு பெயர்தான் அஞ்சுறது.
காற்று வீசினாலே “அய்யோ! யாராவது வந்துவிட்டார்களோ? ” என்று நடுங்குவான்.
இலைக் குலுங்கினாலும் “பூதம் வந்துவிட்டதோ?” என்று பயப்படுவான்.
தண்ணீரில் தனது பிரதிபலிப்பைக் கண்டாலும் “மற்றொரு விலங்கு வந்துவிட்டதோ?” என்று ஓடிவிடுவான்.
இதைப் பார்த்து மற்ற விலங்குகள் எல்லாம் “பயந்தாங்கோலிக்கு பெயர் சூரன்” என்று கேலி செய்து சிரித்துக்கொண்டே இருப்பார்கள்.
ஒருநாள் சூரன் மனம் நொந்தான்.
“என்னாலே எதுவும் செய்ய முடியாதா? நான் எப்போதுமே அஞ்சிக் கொண்டே வாழ வேண்டுமா?”
அந்த நேரத்தில் அவனது தாய் சிங்கம் வந்தாள்.
அவள் சொன்னாள். “கண்ணே, இந்த உலகத்தில் அஞ்சவேண்டியது ஒன்றும் இல்லை. அஞ்சும் விஷயங்கள் நிஜத்தில் இல்லை. பயம் என்பது நம் மனதில்தான் உண்டு. நாம் தைரியமாக நின்றால் பயம் ஓடிவிடும்.”
சூரன் அதை மனதில் கொண்டான். இனிமே அஞ்ச மாட்டேன் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
அடுத்த நாள் மீண்டும் மரத்தில் இலை குலுங்கியது. இந்த முறை அவன் ஓடவில்லை. அவன் நின்று பார்த்தான்.
அடடா! சின்ன பறவை ஒன்று மரத்திலிருந்து தாவிப் பறக்கிறது.அதனால்தான் இலை அசையுது. இதுக்கு போயா நடுங்கினோம்?
அந்த இரவு நிலவின் வெளிச்சத்தில் காற்று வீசியது. பக்கத்தில் இருந்த பாறையில் அவன் நிழலைக் கண்டான். பயப்படாமல் காலை அசைத்தான் நிழலும் காலை அசைத்தது. இந்த முறை அவன் சிரித்தான்.
“அது நான் தான். நான் ஏன் என்னைக் கண்டு பயப்பட வேண்டும்?” என்று நினைத்தான்.
தான் பயந்த ஒவ்வொன்றையும் இப்போது அறிவைக் கொண்டு காரணத்தைக் கண்டறிய முயன்றான். கடைசியில் பயத்திற்கு காரணம் தன்னுடைய மனம்தான் என்று உணர்ந்தான்.
சில வருடங்களில் சூரன் பெரிய சிங்கமாக வளர்ந்தான். இப்போது அவனைப் பார்த்தாலே மற்ற விலங்குகள் எல்லாம் ஓடிவிடும்.
அவன் மனதில் ஒரே ஒரு வரிதான் இருந்தது. “அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை!”
சொல்லி முடித்தார் கிறுக்குசாமி. “டேய் குட்டிப்பயலே. நிஜமாவே சொன்னால் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இப்போது மட்டும் இல்லை, இனிமேல் நம்மை பயப் படுத்துவதற்கு ஒன்றும் வராது. சரியா”
“சரி தாத்தா. அப்ப பரிட்சை எதுக்கு தேவையில்லாம எழுதணும்?”
“டேய் ராஜா… இன்னைக்கு டாக்டர்கிட்ட போயிட்டு வந்தேல்ல. அவரு மருந்து பேரு, என்னென்ன நோய்க்கு எப்படி வைத்தியம் பாக்கணும் இதெல்லாம் கத்துகிட்டு வந்தாத்தானே தைரியமா போயி வைத்தியம் பாத்துக்குவோம். அவரு காலேஜுல இதெல்லாம் ஒழுங்கா படிச்சாரா இல்லை உன்னை மாதிரி கிரிக்கெட் விளையாண்டாரான்னு எப்படி தெரிஞ்சுக்கிறது. அதுக்குத்தான் தேர்வு நடத்துறாங்க. ”
“ஓ அதுனாலதான் பரிட்சை வைக்கிறாங்களா?”
“அதேதான். நீ உன்னை அடிக்க ஒரு காரணம் தேடி பரிட்சை வைக்கிறாங்கன்னு நினைச்சியா? உங்க ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு துறைலயும் சிறந்தவங்களா மாத்திறதுக்காகத்தான் ஆசிரியர்கள் பாடம் சொல்லித்தராங்க. அந்த ஆசிரியர் சொல்லித்தர பாடத்தையெல்லாம் படிச்சு தேர்வடையணும்னுதான் ஒவ்வொரு டீச்சரின் எண்ணமே தவிர, ஃபெயில் ஆக்கி பிரம்படி தரணும்னு ஆசைப்பட மாட்டாங்க.
ஒவ்வொரு வகுப்புலயும் அந்தந்த பாடத்தை புரிஞ்சுகிட்டன்னு தெரிஞ்சதும் அடுத்த வகுப்புக்கு அனுப்பி அடுத்த நிலை பாடம் நடத்துறாங்க அவ்வளவுதான். ஒரு கிளாஸ்ல 50 மாணவர்கள் படிச்சா உனக்கு ஒரு பாடம் மட்டும்தான் படிச்சு தேர்வு எழுதணும். அதில் பாசாகனும். உங்க டீச்சருக்கோ 50 மாணவர்களும் படிச்சு நல்ல மதிப்பெண் வாங்கணும். அதுதான் உங்க டீச்சருக்கு தேர்வு”
“அப்ப நான் நல்லா பரிட்சை எழுதலைன்னா டீச்சரை திட்டுவாங்களா? அதுனாலதான் எங்க டீச்சருக்கு மார்க் கம்மியா வாங்கினா கோபம் வருதா?
“அதே தான். இங்க உன்னோட வேலைதான் ரொம்ப சுலபம், உன்னோட பாடப்புத்தகத்தில் இருக்குறதை நல்லா புரிஞ்சு படிக்கணும். அது சம்பந்தமா கேக்குற கேள்விக்கு தைரியமா பதில் சொல்லணும்”
“சரி தாத்தா”
“நல்ல பையன். இப்ப என் கூட சேர்ந்து சொல்லு
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை!”