கிறுக்குசாமி கதை – சிங்கத்தின் பிடரி முடி
“தாத்தா, உலகத்திலேயே சுலபமான வேலை என்ன தெரியுமா? அடுத்தவங்களுக்கு அறிவுரை சொல்றது. ஆனா என் நிலைல இருந்து பாத்தாத்தான் என் பிரச்சனை புரியும்” என்று ஆவேசமாக சொன்னாள்
“பத்மா அப்படி என்னதாம்மா உன் பிரச்சனை?”
“இன்னமுமா புரியல என் வகுப்பில் இருக்கும் ஒவ்வொண்ணும் ஒரு வானரம். ஒரு பக்கம் ஒரு கூட்டம் பெஞ்சில் ஏறிக் குதிக்கும், இன்னொரு பக்கம் இன்னொரு கும்பல் என் நாற்காலியைத் தள்ளிவிட்டுக் காலை உடைக்கும். சாப்பாட்டை வகுப்பறை தரைல கொட்டி வைக்கிறாங்க. ஏதாவது பண்டிகைன்னா கூட பரவால்ல, ஆனால் தினமும் பன் பண்றேன்னு பெயரில் எல்லார் மேலயும் கலர் தண்ணியை ஊத்தி விளையாடுவாங்க. அது என் மேலயும் பட்டு தினமும் கட்டிட்டு போற சேலை எல்லாம் நாசமாகுது. சின்ன குழந்தைகள் விளையாட்டுத்தனம்னு நீங்க சொல்லலாம். ஆனால் நான் வாங்குற சம்பளத்துக்கு மாசத்துக்கு அஞ்சாறு புடவை வாங்க முடியுமா?”
குறுக்கிட்டார் பத்மாவின் தந்தை தாணுமாலயன் “சாமி, சிவிக் சென்ஸ் இல்லைன்னு பொண்ணு பீல் பண்ணிட்டு வேலையை ராஜினாமா பண்ணப் போறேன்னு ஒத்தக்கால்ல நிக்கிறாங்க”
“சிவிக் சென்ஸ் இதுதான் இப்போதைக்கு பிரபலமான வார்த்தை போல. ஏம்மா பத்மா வாத்தியார் வேலைன்னா புத்தகத்தில் இருக்கிறதை மட்டும் மாணவர்கள் மண்டைல ஏத்தினா போதும்னு நினைச்சியா? பொறுப்பான இந்தியக் குடிமகனா ஒவ்வொரு குழந்தையும் உருவாக்கிறது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கைலதான் இருக்கு. இந்த விஷயத்தில் பெற்றோர்கள் தப்பா இருந்தால் கூட ஆசிரியர்கள் பொறுப்பு தவறவே கூடாது.
உன்னோட அதிர்ஷ்டம் பசங்க சின்னவங்களா இருக்காங்க. எங்கெங்கே எப்படி எப்படி நடக்கணும்னு நீ தானே இந்தக் குழந்தைகளுக்கு சொல்லித்தரணும்”
“எத்தனை தடவை சொன்னாலும் இவங்களைத் திருத்தவே முடியாது. என்னால அந்தப் பள்ளியில் தொடர முடியாது தாத்தா… நான் ராஜினாமா பண்ணிட்டு சிவில் சர்வீஸ்க்கு படிக்கலாம்னு இருக்கேன்” கொதிப்போடு சொன்னாள்.
“சரி, முருகனுக்கு அபிஷேக நேரம். தீபாராதனை முடிஞ்சதும் நம்ம பேச்சைத் தொடரலாம்” என்று சொல்லிவிட்டு பூஜை வேலைகளை கவனிக்க கிறுக்குசாமி சென்றுவிட்டார்.
பூஜை முடிந்து கிறுக்குசாமி என்ன கதை சொல்லப்போகிறார் என்று ஆவலாக அனைவரும் உட்கார்ந்து கொண்டனர்.
இன்னைக்கு நான் சொல்லப் போறது எத்தியோப்பியாவில் சொல்ற ஒரு நாட்டுப்புற கதை. எல்லா திசைகளிலும் இருக்கும் நல்லதை வாழ்க்கையில் கடைபிடிக்கலாம்.
லீயான்னு ஒரு பொண்ணு எத்தியோப்பிய காட்டுப்பகுதியில் இருக்கும் கிராமத்தில் வசிச்சா.
லீயாவுக்கு திருமணமானது. ஆனால் கணவனுக்கு முதல் தாரம் இறந்து போயிட்டதால இரண்டாவதா லீயாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டான். முதல் தாரத்துக்கு ஒரு சிறிய மகன் இருந்தான். அவன் லீயாவை ஏத்துக்கவே இல்லை. அவள் தரும் உணவைத் தொட்டுப்பாக்கக் கூட இல்லை.
லீயா மிகவும் வருத்தமடைந்தாள். அவளால் அந்தக் குழந்தையின் நம்பிக்கையைப் பெற முடியவில்லை. பல மாதங்கள் முயன்றும், அவன் மனதை மாற்ற முடியவில்லை.
அந்த கிராமத்தில் ஒரு வயதான மருத்துவர் இருந்தார். அவரின் கைகளுக்கு எந்த வியாதியையும் குணப்படுத்தும் வல்லமை இருப்பதாக அனைவரும் நம்பினர்.
ஒரு நாள், அவள் கிராமத்தின் மருத்துவரிடம் சென்று நடந்ததை சொன்னாள். “அந்தக் குழந்தை என்னை ஏற்க வேண்டும். அதற்கு உங்களிடம் ஏதாவது மருந்து இருக்கிறதா?” என்று கேட்டாள்.
“மருந்து உண்டு. ஆனால் அதற்கு ஒரு முக்கியமான பொருள் தேவை. நீ ஒரு உயிருள்ள சிங்கத்தின் பிடரியில் இருந்து ஒரு முடியை கொண்டு வர வேண்டும்.”
லீயா அதிர்ச்சியடைந்தாள். “சிங்கமா? அது என்னை கொன்றுவிடும்!”
“நீ உண்மையாகவே அந்தக் குழந்தையை நேசிக்கிறாய் என்றால், இந்த சோதனையை கடக்க வேண்டும்,” என்றார்.
அடுத்த நாள், லீயா சிங்கம் வாழும் மலைக்குப் போனாள். அவள் சோறு மற்றும் இறைச்சி குழம்பு கொண்டு சென்று, ஒரு பாறையின் அருகே வைத்துவிட்டு, அமைதியாக திரும்பினாள். சலிக்காமல் தினமும் இதையே செய்தாள். சிங்கம் உணவை சாப்பிடத் தொடங்கியது. சில வாரங்களில், சிங்கம் அவளிடம் நெருக்கமாக வந்தது.
ஒரு நாள், அவள் மெதுவாக சிங்கத்தின் அருகே சென்று, “அன்பான சிங்கமே, உன்னுடைய ஒரு பிடரி முடியைத் தர முடியுமா?” என்று கேட்டாள். சிங்கம் சம்மதிப்பதை போல அமைதியாக இருந்தது. அவள் மெதுவாக ஒரு முடியை வெட்டினாள்.
மருத்துவரிடம் ஓடி சென்றாள். “அய்யா நான் சிங்கத்தின் பிடரி முடியைக் நான் கொண்டுவந்துவிட்டேன்!” என்றாள்.
“இந்த முடி உயிரோடு இருக்கும் சிங்கத்தின் பிடரியில் இருந்து தானே எடுத்தாய்? எப்படி எடுத்தாய் என்று சொல்ல முடியுமா”
இத்தனை மாதங்களாக தான் எவ்வாறு சிங்கத்தின் நம்பிக்கையைப் பெற்றேன். அதன் சம்மதத்துடன் முடியை எடுத்தேன் என்று பெருமிதத்துடன் சொன்னாள்
அனைத்தையும் பொறுமையாக கேட்ட வைத்தியர் முடியை எடுத்தார். அதை பக்கத்தில் இருந்த அடுப்பில் போட்டு எரித்தார்.
“ஏன் எரித்தீர்கள்? எவ்வளவு சிரமப்பட்டு உயிரையே பணயம் வைத்து இந்த முடியை எடுத்தேன் தெரியுமா?” என்று லீயா கதறினாள்.
“லீயா,” என்றார். “நீ பயங்கரமான சிங்கத்தின் நம்பிக்கையையே சில மாதங்களில் பெற்றாய். ஒரு சிறு குழந்தையின் அன்பை பெற எதுக்கு மருந்தை தேடுகிறாய். அந்த சிறுவனின் நம்பிக்கையைப் பெற உன்னிடம் தேவையான பொறுமையும், அன்பும் இருக்கின்றன.” என்று கனிவாக சொன்னார்.
அந்த நொடியிலிருந்து லீயா மெதுவாக, ஆனால் உறுதியுடன், அந்தக் குழந்தையின் நம்பிக்கையைப் பெறத் தொடங்கினாள். அவளது அன்பும், பொறுமையும், இறுதியில் அந்தக் குழந்தையின் மனதை வென்றது.
கதையினை சொல்லி முடித்ததும் கிறுக்குசாமி அங்கிருந்தவர்களை பார்த்து “இங்க பாருங்க குழந்தைகளே! இது ஒரு நாட்டுப்புற கதை. கதைகளில் சிங்கம் பேசும், யானை பறக்கும். இதை உதாரணமா எடுத்துக்கிட்டு, சிங்கத்த சாந்தமாக்க யாரும் முயற்சி செய்யக்கூடாது. சாப்பாட்டை எடுத்துட்டு சிங்கத்தின் அன்பைப் பெற பக்கத்தில் போனிங்கன்னா அன்னைக்கு சிங்கத்துக்கு நம்மதான் காலை டிஃபனா மாறிடுவோம். சரியா?”
என்று முத்தாய்ப்பாய் சொல்லி கதையை முடித்தார் கிறுக்குசாமி.
அனைவரும் பூஜை முடித்துவிட்டுக் கிளம்ப ஆரம்பித்தனர். தந்தையுடன் வந்து திருநீறு பூசிக்கொண்டு பத்மா புன்சிரிப்புடன் சொன்னாள்
“தாத்தா இன்னைக்கு சொன்ன கதை எனக்குத்தான்னு தெரியும். இனிமே மாணவர்கள் கிட்ட டென்ஷன காமிக்காம முக்கியமா கத்தாம இருக்கப்போறேன். நான் டென்ஷன் ஆறது இவனுக்கு ரொம்ப குஷியாகுதுன்னு நினைக்கிறேன். மேல மேல என்னை வெறுப்பாக்குறானுங்க .இவனுங்களையே சேலஞ்சா எடுத்துக்கிட்டு பொறுமையா அப்பறம் கண்டிப்பா சொல்லி இந்தப் பசங்களை திருத்த டிசைட் பண்ணிருக்கேன்.
அந்த லீயா கதைல சொன்ன மாதிரி சிங்கத்தியே திருத்த முயற்சி பண்ணல, ஆனால் இவங்களை ஒழுங்கு படுத்தினால்தான் சிவில் சர்வீஸ் முடிச்சு சொசைட்டியை சரி பண்ணலாம்னு ஒரு தைரியம் வரும்”
“பிரச்சனையை கண்டு பயப்படாம அதை சமாளிக்க வழி தேடுறியே இது இதுதான்மா வின்னிங் ஸ்பிரிட். ஒரு அதிகாரி மாதிரியே சிந்திக்க ஆரம்பிச்சுட்டியே. இனி உனக்கு வெற்றி மட்டும்தான்” என்று ஆசீர்வதித்து வழியனுப்பி வைத்தார் கிறுக்குசாமி.