மதிப்பீடு
அழுக்கு போக துவைத்து, கொடியில் காயப்போட்ட தனது வேட்டி காய்ந்து விட்டதா என்று பத்தாவது முறையாக தொட்டுப் பார்த்தார் கிறுக்குசாமி.
அவரை கடுப்பாகப் பார்த்தான் குட்டியப்பன். சில மாதங்களாக அவருக்கு அசிஸ்டெண்ட்டாக இருப்பேன் என்று அடம்பிடித்து வந்து சேர்ந்திருக்கிறான். அவரைப் போலவே, கிறுக்குசாமி 2 வாக மாற இருப்பதுதான் அவனது லட்சியமாம்.
“இதெல்லாம் ஒரு லட்சியமாடா குட்டியப்பா… நான் ஒரு பண்டாரம். நீ ஒரு பரதேசி… வாழும் வரை யாருக்கும் கெடுதல் நினைக்காம வாழ்ந்துட்டு போயி சேரணும். அவ்வளவுதான்”
“சாமி, நீங்களே பண்டாரம், பரதேசின்னு சொல்லலாமா? கேக்குற மக்களுக்கு எவ்வளவு மனசு பாடு படும்?”
“டேய் குட்டியப்பா… என்னடா என்னைப் பத்தி இப்படி சொல்லிட்ட? இந்த வார்த்தைகளுக்கு எல்லாம் நம்ம தமிழ் மொழியில் எவ்வளவு ஆழமான அர்த்தம் இருக்கு தெரியுமா?”
“தெரியாதே… வழக்கமா யாரையும் பாராட்ட இந்த வார்த்தைகளை சொல்றது இல்லையே”
“அந்தக்காலத்தில் பொருட்களை பாதுகாத்து வைக்கிற இடத்தை பண்டக சாலைன்னு சொல்லுவாங்க. அதைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்தவங்க பண்டாரங்க. நிலையா ஒரு இடத்தில் தங்கி அங்கேயே தேங்கிடாம பல தேசங்களுக்கு போயி அறிவுச் செல்வத்தை பல இடங்களுக்குக் கொண்டு சேர்பவங்க பரதேசிங்க”
குட்டியப்பன் யோசிக்க ஆரம்பித்தான் “பண்டாரம்னு பெருமையா சொல்லிக்கிற அளவுக்கு நீங்க என்ன பாதுகாக்குறீங்க”
“இந்த முருகனின் நிழலை நாடி வர்றவங்க புத்தி தீய வழில போகாம பாதுக்காக்க முயற்சிக்கிறேன்”
“நான் ஒண்ணு கேட்டா நீங்க ஏதாவது புரியாதமாதிரி சொல்றீங்க சாமி. பிக் பாஸ் ரசிகரோ”
“அப்படின்னா.. ”
“அதெல்லாம் விளக்கம் தர முடியாது. இந்தாங்க வேஷ்டி காஞ்சுடுச்சு”
வேகமாக அதனை உடுத்திக் கொண்டு “குட்டியப்பா நீயும் கிளம்பி வாடா… ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வரணும்”
“ஏன் சாமி, ஆஸ்பத்திரிக்கு போகத்தான் இத்தனை பாடா” சலித்துக் கொண்டே வந்தான்.
“என்னாச்சு”
“நம்ம பூஞ்சோலையோட பய்யனுக்கு உடம்பு முடியலையாம் டா “
மருத்துவமனையில் பூஞ்சோலையின் மகன் ரூபனுக்கு டிரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்க, கண்களை மூடி அசதியில் படுத்திருந்தான்.
“சாமி, இப்படி பண்ணிட்டான் பாருங்க” அறைக்கு வெளியே கலங்கிய கண்களை சேலையில் துடைத்துக் கொண்டு விம்மினார் பூஞ்சோலை.
“என்னம்மா ஆச்சு?”
“காலேஜுல படிக்கும்போதே வேலை கிடைச்சுருச்சுன்னு சந்தோசமா இருந்தோம் சாமி. அவனுக்கு பிடிக்காமத்தான் அங்க வேலை செஞ்சுட்டு இருந்திருக்கான்.
ஒண்ணுமே புரியலையாம். அதனால திட்டிருக்காங்க, இளக்காரமா பேசிருக்காங்க, எல்லாரும் சேர்ந்து சாப்பிடப் போனாக் கூட இவனை கூப்பிட மாட்டாங்களாம். லெட்டர் ஏதாவது அனுப்பினால் இவனுக்கு அனுப்ப மாட்டாங்களாம்.
வேலை செய்ய ஏதாவது தேவைப்பட்டால் கேட்டாக் கூட பதில் சொல்லாம ஒதுக்கி வச்சிருக்காங்க. இதெல்லாம் இவனோட மேனேஜருக்கும் தெரியும். ஆனால் அவர் சரி செய்ய ஒரு முயற்சியும் எடுக்களையாம்.
வருசக்கடைசியில் இவனுக்கு வேலைக்கான ரிப்போர்ட் தரும்போது ரொம்ப குறைச்சலா மார்க் போட்டு தந்துட்டாராம். இந்த முறை ஆள் குறைப்பில் இவனையும் அந்த மார்க் அடிப்படையில் நீக்கிட்டாங்க. இதனால மனசு கஷ்டமாயி தப்பான முடிவெடுத்துட்டான்” கண்கள் கலங்கினார்.
“ஒருத்தரை தனிமைப்படுத்தி அவங்க வாழ்க்கையைக் கெடுக்கணும்னு ஒரு குழுவா வேலை செஞ்சிருக்காங்க. இவங்களோட நரித்தனத்தால ரூபன் திறமை இல்லாதவன்னு முத்திரை குத்தியாச்சு” சுருக்கமாக சொன்னார்.
“அதுக்குப் பலன் என்னவோ எங்களோட கண்ணீர்தான். இவங்களை எல்லாம் எதுவும் செய்ய முடியாதா சாமி”
அவரது கேள்விக்கு பதில் தெரியாமல் திகைத்தார் கிறுக்குசாமி .
குட்டியப்பன் முந்திக் கொண்டு “கவலைப்படாதீங்க பூஞ்சோலையம்மா. கெடுதல் செய்த கும்பலுக்கு பதில் கெடுதல்தான். தண்டனை தள்ளி போகுது அவ்வளவுதான்”
“பூஞ்சோலை இப்ப உன் மகன் மனசு சரியாறது முக்கியமா இல்லை அவனுங்களுக்கு தண்டனை தர்றது முக்கியமா?”
“மனசு சரியாகுறதுதான். இப்படி அடுத்தவங்க பேச்சுக்கெல்லாம் நம்ம தப்பான முடிவெடுத்தா எப்படி சாமி” கவலைப் பெருமூச்சு விட்டார்.
ரூபன் இப்போது எழுந்திருந்தான். அவனுக்கு சாத்துக்குடி ஜூஸ் பிழிந்து கொடுத்தார் பூஞ்சோலை.
“ரூபன்” ஆரம்பித்தார் கிறுக்குசாமி.
“தாத்தா… போதும்… அறிவுரை மட்டும் சொல்லிறாதிங்க. எல்லாரு கிட்டயும் கேட்டு கேட்டு காதே புண்ணாயிருச்சு”
“ஏ அதெல்லாம் சொல்ல வரலப்பா”
“அப்பறம் எதுக்கு இந்தப்பக்கம் வந்தீங்க. டாக்டருக்கு துண்ணூரு பூசவா”
“அதுக்கில்லா.. இந்தப் பக்கம் வந்ததே நல்ல சமயல்காரனைப் பாக்கத்தான்”
“கதை விடாதீங்க தாத்தா. ஏற்கனவே ஒருத்தனை மடத்தில் பாத்தேனே”
“அவனுக்கு திறமை இல்லை, சமயல் எப்படி செய்யணும்னு தெரியல, முட்டாளா இருக்கான்”
“என்ன தாத்தா சொல்றீங்க… அந்தப் பய்யன் கேட்டரிங்ல கோல்ட் மெடலிஸ்ட். விதவிதமா சமைக்கத் தெரிஞ்சவன். இன்னைக்கு 5 ஸ்டார் ஹோட்டல்ல போயி வேலைக்கு சேர்ந்தா ஒரு லட்ச ரூபாய் சம்பளம் தந்து எடுத்துக்குவாங்க” திகைத்து போய் சொன்னான் ரூபன்.
“சாமியாருங்களுக்கு எதுக்குடா விதவிதமா சாப்பாடு. நாளு கிழமை சக்கரைப்பொங்கல், புளியோதரை பிரசாதம் சமைக்கிறதைத் தவிர மத்த நாள் எல்லாம் உப்பு உறைப்பு எண்ணை எல்லாம் குறைவா போட்டு சமைக்கணும். இவன் மடத்துக்கு சமைக்கிறதா நினைக்காம ஹோட்டல்ல சமைக்கிற மாதிரி சமைச்சுட்டான்டா. ஒரு மாச மளிகை எல்லாம் ஒரே வாரத்தில் தீர்ந்து போச்சு. அதனால லாயிக்கில்லைன்னு அனுப்பிட்டாங்க”
“என்ன லாயிக்கில்லையா… அவனோட சர்க்கரை பொங்கலுக்காத்தான் ரெண்டு மாசமா சத்சங்கத்துக்கு வந்துட்டு இருந்தேன். நீங்க உங்க பூமர் கதையைக் கேக்கத்தான் நாங்கல்லாம் வர்ரோம்னு நினைச்சிங்களா?” கொதித்தான்.
“என்னமோ உனக்குத்தான் பிடிச்சிருக்குன்னு சொல்ற. மடத்துல பாதி பேருக்கு சர்க்கரை வியாதி. இனிப்பெல்லாம் எங்க சாப்பிடுறது? நிறைய பேருக்கு ரத்தக் கொதிப்பு வேற அதனால புளியோதரையை தொடுறதில்லை. உன்னைப் பாக்கும்போதுதான் தோணுது. அந்த பையன் வேலை போன விரக்தில என்ன செஞ்சுட்டு எந்த ஹாஸ்பிட்டல்ல படுத்திருக்கானோ. நினைச்சாலே கவலையா இருக்கு” முகத்தை சோகமாக வைத்துக் கொண்டார் கிறுக்குசாமி.
“அவன் ஏன் விரக்தியா இருக்கான். சூப்பரா படிச்சிருக்கான். உங்கள மாதிரி அவனோட திறமையை யூஸ் பண்ணத் தெரியாத ஆளுங்களுக்கு பத்திய சமையல் சமைச்சு போடுறதுக்கு பதிலா, அவனோட அருமை தெரிஞ்ச இடத்தில் சேர்ந்து பெரிய இடத்துக்கு வருவான் பாருங்க. அப்பத்தான் உங்களுக்கெல்லாம் புத்தி வரும்” எரிச்சலோடு சொன்னான் ரூபன்.
“ஏதோ உங்க மடத்தில் வேலை போனால் அவனுக்கு வாழ்க்கையே போயிருச்சாக்கும்?”
“அப்படியா சொல்ற… அப்ப நான் அவனைப் பத்தி கவலைப்பட வேண்டாமா?”
பளிச்சென மண்டையில் உரைத்தது ரூபனுக்கு “சரியான பிராடு தாத்தா நீங்க. அறிவுரை சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டு இப்ப கதை சொல்லிருக்கிங்க”
“சரி இந்த பிராடு தாத்தா கவலைப் படுறதா வேண்டாமா?”
“நீங்க அவனைப்பத்தியும் கவலைப்பட வேண்டாம் என்னைப் பத்தியும் கவலைப்படாதிங்க. உடம்பு சரியானதும் என்னோட ஸ்கில்சை மதிக்கிற இடத்தில் வேலைக்கு சேர்ந்துடுவேன். பிறர் செய்யும் மதிப்பீடு என்னை இனிமே பாதிக்காது”
காலையிலிருந்து பதைபதைத்துக் கொண்டிருந்த கிறுக்குசாமியின் மனம் அப்போதுதான் அமைதி பெற்றது. இடுப்பில் முடிந்திருந்த திருநீற்றினை ரூபனுக்கு பூசி விட்டுவிட்டு, பூஞ்சோலையிடம் விடை பெற்றுக் கொண்டு குட்டியப்பனுடன் மடத்துக்குக் கிளம்பினார்.



