Tamil Madhura ஆழக்கடலில் தேடிய முத்து ஆழக்கடலில் தேடிய முத்து – 1

ஆழக்கடலில் தேடிய முத்து – 1

அத்தியாயம் 1:

 

கொச்சியில் உங்களுக்கு என்ன பிடிக்கும்? ‘ஹி ஹி  புட்டு கடலைக்குழம்பு’ என்று சொன்னால் ‘என் இனமடா நீ’ என்று சொல்ல ஒரு க்ரூப்பே  இருக்கிறது. அதில் நானும் அடக்கம். ஆனால் இந்தக் கதையில் அதை பார்க்கப் போவதில்லை. அரேபியர்கள், சீனர்கள், ஐரோப்பியர்கள் அனைவரும் தங்கள் வருகையை ஆழமாகப் பதித்துச் சென்ற இந்தக் கடற்கரை நகரில் நடக்கும் ஒரு கற்பனை சம்பவத்தைத் தான் பார்க்கப் போகிறோம். ஆரம்பிக்கலாமா….

 

ஃபோர்ட் கொச்சியின் சந்தடி நிறைந்த தெருக்களில் அதுவும் ஒன்று.  தொலைவில் அலையடிக்கும் கடலின் ஓலம் மெல்லிய இசை போல் காற்றில் கலந்து ஒலித்தது.  தெருவின் இருபுறமும் சரிந்து விழும் நிலையில் இருந்தும் கம்பீரமாக காட்சியளிக்கும் பழைய கட்டிடங்கள் வரிசையாக நின்றன.  சுவர்கள் வெளிறிப்போய், பெயிண்ட் உரிந்து போனாலும் அவை கால வெள்ளத்தில் நீங்கா அடையாளங்களாக கம்பீரமாக நின்றன. இந்த தெருவுக்குள் நுழைந்தாலே வேறு ஒரு யுகத்திற்குள் வந்துவிட்டது போன்ற மாயை ஏற்படும். பரபரப்பான நவீன கொச்சியிலிருந்து விலகி அமைதியும் பழமையும் கலந்த ஒரு வினோதமான சூழ்நிலை நிலவியது.

 

தெருவின் இரு மருங்கிலும் பழம்பொருள் அங்காடிகள் அணிவகுத்து நின்றன. அனைத்து கடைகளின் முகப்புகளும் கலைக்கூடத்தை நினைவுபடுத்துவது போல் கண்ணை கவரும் வண்ணத்தில் காட்சி அளித்தது. பழங்கால மர நாற்காலிகள், அலங்கார மேஜைகள், பழமையான விளக்குகள், வெண்கல சிலைகள், மண்பாண்ட ஜாடிகள், ஓவியங்கள், தொங்கும் விளக்குகள் சுற்றி இருக்க நடுவே நடனமாடும் நர்த்தன கணபதி, மற்றும் கண்களை கவரும் பலவிதமான கைவினைப் பொருட்கள் என அங்காடிகள் நிறைந்திருந்தது. 

 

அனைத்து கடைகளின் பெயர்களும் பழமையான ஆங்கில எழுத்துருக்களில் மரப்பலகையில் பொறிக்கப்பட்டிருந்தது.  சில கடைகளின் பெயர்கள் “Legacy Lane Curios”, “The Old Curiosity Shop”, “Time Treasures”  என்றும் பல கடைகள் தங்களை “Treasure Trove of Traditions”  என்று பெருமையுடன் அழைத்துக்கொண்டன.

 

“Treasure Trove of Traditions” மற்ற பழம்பொருள் அங்காடிகளை விட சற்று பெரியது. கடையின் முகப்பில் சில பழமையான மர இருக்கைகளும் ஒரு மரத்தாலான தொங்கும் ஊஞ்சலும் போடப்பட்டிருந்தது. கடையின் உரிமையாளர் ரங்கன், 55 வயது இருக்கும், சாந்தமான முகம், எடுப்பான தோற்றம், நெற்றியில் விபூதி,  பாரம்பரிய கதர் வேட்டி சட்டையில் கம்பீரமாக காட்சி அளித்தார்.

 

ரங்கனும், அவருடைய புதல்வன் பவனும் கடையை திறக்க காலை 9 மணி போல் வந்தனர். மகன் பைக்கில் வருவதற்கு சற்று முன்னரே வந்திருந்த ரங்கன் கடையின் ஷட்டரை திறந்தார். 

 

ஒரே வீட்டில் இருந்து தானே வருகிறோம் சேர்ந்தே காரில் வந்திருக்கலாம். ஆனால் மகனோ வெளியே சென்றுவர பைக் வேண்டும் என்று  அடம் பிடித்து தனியே வருகிறான். காரில் டிராபிக்கில் மாட்டி அவர் கூட வந்துவிட்டார். கடையும் திறந்தாகிவிட்டது. அதன் பின்னரே அவன் வருகிறான். எப்போதுதான் பொறுப்பு வருமோ என்றெண்ணி பெருமூச்சு விட்டார் ரங்கன். 

 

பவன் நவீன இளைஞனைப் போல ஸ்டைலாக மொபைல் போனில் கண்ணைப் பதித்தபடியே  கடையினுள் நுழைந்தான். பவன் வந்தபோது ரங்கனோ அந்தக் காலத்தில் பெரியவர்கள் வழி நடத்தியபடி  உள்ளே நுழைந்ததும் சுவாமி படத்திற்கு முன்பு கைகூப்பி கண்களை மூடி சில நிமிடங்கள் பிரார்த்தனையில் இருந்தார். 

 

வரிசையாக பழமையான பெயின்டிங் கலெக்ஷன்ஸ் இருபுறமும் இருக்க அவற்றிற்கு நடுவே அவர்களது குலதெய்வம் படமும் இடம் பெற்றிருந்தது. ரங்கன் எங்கு சென்றாலும் குலதெய்வத்தை வணங்காமல் செல்வதில்லை. 

 

எர்ணாகுளம் மாவட்டத்தில் இருக்கும் ஏழுங்காட்டு பகவதி கோவில் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா. எங்கே கேரளா முழுவதும் இருக்கும் அம்மன்கள் எல்லாரும் பகவதி தானே என்கிறீர்களா? சரி அதில் ஒரு பகவதியின் தங்கைதான் ரங்கனின் குலதெய்வம். பகவதியின் தங்கை இன்னொரு பகவதி. 

 

“குட் மார்னிங் அப்பா” என்றான் பவன் போனிலிருந்து பார்வையை கஷ்டப்பட்டு திரும்பியபடி.

 

“குட் மார்னிங் டா” ரங்கன் புன்னகையுடன் பதிலளித்தார்.

 

 “இன்னும் தூக்கம் முழிச்ச மாதிரி இல்லையே முகம்?”

 

 “நேத்து நைட் லேட்டா தான் தூங்குனேன் அப்பா.  கொஞ்சம் வேலை இருந்தது.”

 

ரங்கன் எதுவும் பேசாமல் கடையை சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.  பவன் கடையின் முன் இருந்த நாற்காலிகளை வரிசைப் படுத்திவிட்டு,  வெளியே போடப்பட்டிருந்த பழங்கால விளம்பர பலகையை துடைத்து சுத்தம் செய்தான்.

 

“இன்னைக்கு என்ன ஸ்பெஷல் அப்பா?”  விளம்பர பலகையை துடைத்தபடி கேட்டான்.

 

“ஸ்பெஷல்ன்னு புதுசா ஒன்னும் இல்ல.  நம்ம கடையில எல்லாமே ஸ்பெஷல் பீஸ்தான்” ரங்கன் சிரித்தார்

 

. “மேல இருக்கற புது கலெக்ஷன்ஸ இன்னைக்கு எடுத்து வைக்கலாம்ன்னு இருக்கேன்.  நீ கீழ் பகுதி பாத்துக்கோ” என்றார்.

 

அவர்கள் கடை பத்தாததால் இரண்டு மூன்று கட்டடங்கள் தள்ளி குடோன்  ஒன்றில் அவர்கள் புதிதாக வாங்கும் பொருட்களை சேமித்து வைத்திருக்கின்றனர். ஏதாவது புதிய பொருட்களை ஏலத்தில் எடுக்கும்போது அங்கேதான் செப்பனிட்டு எடுத்து வந்து விற்பனைக்கு வைப்பார்கள். அதிக விலை, சிறப்பு பொருட்கள் மாடியில். சாதாரண விலை பொருட்கள் கீழ் பகுதியில் என்று பிரித்திருந்தனர். 

 

“ஓகே அப்பா” என்றான் பவன். இருவரும் அவரவர் வேலைகளில் மூழ்கினர். கடையின் அமைதியான காலை நேரம் மெல்ல வியாபார பரபரப்புக்கு தயாராகிக் கொண்டிருந்தது.

 

“Treasure Trove of Traditions” கடையின் உட்புறம் நுழைந்தவுடன் பழங்காலத்து மரச்சாமான்களின் வாசனை மூக்கைத் துளைத்தது. தேக்கு மரத்தின் நறுமணம், மெழுகு பாலிஷ் வாசனை, பழைய காலத்து துணிகளின் நறுமணம் என வினோதமான கலவையான நுகர்வு வாசனை அனுபவம் புதுமையாக இருந்தது. கடையின் உள்பகுதி மங்கலான வெளிச்சத்தில் காட்சியளித்தது. கடையின் கூரையில் இருந்து தொங்கும் சிறிய விளக்குகள் சில பொருட்கள் மீது மட்டும் வெளிச்சம் பாய்ச்சியது.  அந்த மங்கிய வெளிச்சத்தில் பழம்பொருட்கள் மர்மம் நிறைந்த பொக்கிஷங்கள் போல மினுக்கியது.

 

பவன், கடையின் இடதுபுறத்தில்  இருந்த மேஜை அருகே அமர்ந்து மடிக்கணினியில் தீவிரமாக ஆன்லைனில் அவன் டிசைன் செய்த வெப்சைட் ஆர்டர்களை எண்ணிக் கொண்டிருந்தான்.  

 

தந்தை பழமையான வியாபார முறைகளை பின்பற்றுபவராக இருக்க, மகன் நவீன யுகத்திற்கு ஏற்றவாறு வியாபாரத்தை மாற்ற சிந்தித்து செயலாற்றிக் கொண்டிருந்தான்.

 

வாசலில் கார் ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்டதும் வாடிக்கையாளர்கள் வந்துவிட்டார்கள் என்பதை உணர்ந்து இருவரும் நிமிர்ந்து வாசலை நோக்கி பார்த்தனர்.  நடுத்தர வயது தம்பதியினர் இரண்டு குழந்தைகளுடன் கடைக்குள் தயக்கத்துடன் நுழைந்தனர்.  குழந்தைகள் புது இடத்தின் ஆச்சரியம் விலகாமல் பெரிய கண்கள் விரிய கடையை சுற்றிப் பார்த்து பொருட்களை தொட்டு பார்க்க ஆரம்பித்தனர்.

 

“வாங்க…வாங்க…” ரங்கன் அவர்களை கனிவுடன் வரவேற்றார்.  “என்ன வேண்டும் உங்களுக்கு?”

 

“சும்மா பார்க்கத்தான் வந்தோம்”  என்றார் அந்த பெண். “உங்க கடை ரொம்ப அழகா இருக்கு.  எங்கள் வீட்டு வரவேற்பறைக்கு ஏதாவது பழமையான ஹோம் டெக்கரேஷன்ஸ் வாங்கலாமான்னு பார்க்கிறோம்.”

 

“தாராளமா பாருங்கள்.  உங்களுக்கு பிடித்த மாதிரி நிறைய பொருட்கள் இங்கே இருக்கிறது” ரங்கன் புன்னகையுடன் பதிலளித்தார்.

 

அந்த தம்பதியினர் கடையை மெதுவாக சுற்றி பார்க்கத் தொடங்கினர்.  பெண் மரத்தாலான சிறிய அலங்காரப் பொருட்களை எடுத்து அதன் விலையை விசாரித்தார்.  குழந்தைகள் மர பொம்மைகளை பார்த்து குஷியில் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.  கடை மெல்ல மெல்ல தன் வியாபாரக்  களை கட்டத்  தொடங்கியது.

 

சிறிது நேரத்தில் இரண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கடைக்குள் நுழைந்தனர். அவர்கள் இருவரும் நல்ல உயரம், வெளிர் நிற முடி, கழுத்தில் தொங்கும் கேமராக்களுடன் இருந்தனர்.  அவர்கள் கடையினுள் நுழைந்தது நேராக ஒரு வெண்கல நந்தி சிலையின் அருகே சென்று அதை உற்று நோக்கினார்கள்.

 

“எக்ஸ்கியூஸ் மீ”  சுற்றுலாப்பயணியில் ஒருவர் ரங்கனை நோக்கி கேட்டார்.  “இந்த சிலை எவ்வளவு பழமையானது?  இதனுடைய வரலாறு என்ன?”

 

ரங்கன் அவர்களுக்கு அந்த சிலையின் தனித்தன்மைகளையும் சிறப்புகளையும் விளக்க ஆரம்பித்தார். “இது பல நூற்றாண்டுகள் பழமையான வெண்கல சிலை.  இது தென்னிந்திய கலை வேலைப்பாடு. கோவில்களில் நந்தியாக இருக்கும் சிலை இது.  வெண்கலத்தில் ரொம்ப நேர்த்தியாக செதுக்கி இருக்கிறார்கள் பாருங்கள்”

 

சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் ரங்கன் சொல்வதை கூர்ந்து கேட்டனர். சிலையின் ஒவ்வொரு வளைவுகளையும் வேலைப்பாடுகளையும் கைகளால் தொட்டு பார்த்தனர்.  தங்களது கேமராக்களில் சிலையையும் கடையையும் மாறி மாறி படம் எடுத்துக்கொண்டனர்.  விலை பேசி ஒரு சிறிய மர பொம்மையை நினைவுப் பொருளாக  வாங்கிக்கொண்டு நன்றி சொல்லிவிட்டு சென்றனர்.

 

மத்தியான வேளை நெருங்க நெருங்க கடையின்  கூட்டம் கொஞ்சம் அதிகமாகத்  தொடங்கியது.  உள்ளூர் மக்களும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மாறி மாறி கடைக்குள் ஆர்வத்துடன் வந்த வண்ணம் இருந்தனர்.  அதில் சிலர் வீட்டுக்கு தேவையான அலங்காரப் பொருட்கள் வாங்கினர். மற்றும் சிலர் தங்களுக்கு வேண்டிய பரிசுப் பொருட்களை வாங்கி சென்றனர்.  ஒரு சிலர் கடையில் இருந்த அரிய வகை பொருட்களை வேடிக்கை பார்த்துவிட்டு சென்றனர்.

 

சாலையின் ஓரத்தில் கார் ஒன்று வந்து மெதுவாக நின்றது. கார் கதவு திறக்கும் சத்தம் கேட்டு வசதியான தோற்றம் கொண்ட ஒருவர் காரிலிருந்து இறங்கி நேராக கடைக்குள் நுழைந்து ரங்கனை நெருங்கி பேச ஆரம்பித்தார்.

 

“நான் ஒரு ஹோட்டல் அலங்கார நிறுவனத்திலிருந்து வருகிறேன்.  உங்க கடையில் பழமையான அலங்காரப் பொருட்கள் நிறைய இருப்பதாக கேள்விப்பட்டேன்.  நான்  பொருட்களை பார்க்கலாமா?”  என்று கேட்டார்.

 

“வாங்க…வாங்க…உங்களுக்கு மேல் பகுதியில் நிறைய ரேர் கலெக்ஷன்ஸ்  இருக்கிறது.  வாங்க போகலாம்”  என்று ரங்கன் அவரை கடையின் மேல் தளத்திற்கு அழைத்து சென்றார்.

 

கடையின் மேல் தளம் முழுவதும் இன்னும் விலை உயர்ந்த மற்றும் பழமை வாய்ந்த பொருட்கள் நிறைந்து காணப்பட்டது.  பெரிய மர பீரோக்கள், வேலைப்பாடு நிறைந்த கண்ணாடிகள், பழங்காலத்து ஓவியங்கள்,  அரிய வகை வெண்கல சிலைகள், பலவிதமான பழமையான விளக்குகள் என அந்த மேல் தளமே ஒரு அருங்காட்சியகம் போல கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

 

ரங்கன் ஒவ்வொரு பழம் பொருட்களையும் எடுத்து அதன் தனித்துவத்தையும்,  வரலாற்றையும் அந்த அலங்கார நிறுவனம் காரரிடம் விளக்க ஆரம்பித்தார். “இது பாருங்கள்,  இது டச்சு காலத்து பீரோ.  முழுவதும் தேக்கு மரத்தில் கைகளால் செய்யப்பட்டது.  அந்த காலத்தில் இது ரொம்ப வசதியானவர்கள் வீட்டில் மட்டும் தான் இருக்கும். இப்போது இது ரொம்பவும் அரிதான பொருள்…”

 

மற்றொரு ஒவியத்தை கையில் எடுத்து காண்பித்து, “இது ராஜ ரவிவர்மா பாணியில் வரையப்பட்ட ஓவியம். இது ஒரிஜினல் ஓவியமா அல்லது அவருடைய பாணியை பின்பற்றி வரைந்த ஓவியமா என்று நிபுணர்கள்  தான் சொல்ல வேண்டும். ஆனால் பெயிண்டிங் ரொம்பவும் அழகாக இருக்கிறது பாருங்கள்…”

 

அலங்கார நிறுவன பிரதிநிதி ஒவ்வொரு பழம் பொருட்களையும் கூர்ந்து கவனித்தார்.  தனக்கு தேவையான சில பொருட்களை புகைப்படம் எடுத்துக்கொண்டார்.  ஒவ்வொரு பொருட்களின்  விலை விவரங்களையும் ரங்கனிடம் கேட்டறிந்தார்.  அவர் தனது ஹோட்டலுக்காக மொத்தமாக அலங்காரப் பொருட்களை வாங்க வந்திருந்தார்.  மேல் தளத்தில் வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

 

கீழ் தளத்தில் பவன் வாடிக்கையாளர்களை கவனித்தபடி விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டான்.  நடுத்தர வயது பெண்மணி ஒருவர் மர நாற்காலியை பார்த்தபடி அதன் அழகில் மயங்கி நின்றார்.

 

“இந்த நாற்காலி விலை என்ன?” என்று பவனிடம் கேட்டார்.

 

“இது கொஞ்சம் ஸ்பெஷல் பீஸ் மேடம்.  நல்ல வேலைப்பாடு செய்த நாற்காலி.  ₹8000 ஆகும்”  என்றான் பவன்.

 

“₹8000 ரொம்ப அதிகமா இருக்கே.  கொஞ்சம் குறைக்க கூடாதா?”  அந்த பெண்மணி பேரம் பேச ஆரம்பித்தார்.  “₹5000 க்கு கொடுங்கள். நான் உடனே எடுத்துக்கொள்கிறேன்”

 

“சாரி  மேடம்.  அந்த விலைக்கு எல்லாம் கொடுக்க முடியாது.  உங்களுக்கு வேண்டுமென்றால்  கொஞ்சம் குறைத்து ₹7500க்கு தருகிறேன்.  இது ரொம்பவும் தரமான நாற்காலி.  இந்த விலைக்கு வெளியில் கிடைக்காது” பவனும் தன் பங்குக்கு பேரம் பேசினான்.

 

பேரம் பேசுதல் நீண்ட நேரம் நீடித்தது. இறுதியில்  ₹7000 ரூபாய்க்கு பேரம் முடிந்தது.  அந்த பெண்மணி சந்தோஷமாக நாற்காலியை எடுத்துச் சென்றார். “Treasure Trove of Traditions”  கடை அன்றைய வியாபாரம் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க ஆரம்பித்தது.  ரங்கனும், பவனும் அன்றைய விற்பனையை உற்சாகத்துடன் கவனித்துக்கொண்டிருந்தனர்.  அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை அந்த கடைக்குள் சாபம் ஒன்று கருப்பு நிழல் போல பின் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது என்று.  இன்னும் சில தினங்களில் அவர்களது சந்தோஷமான வியாபார நாளை அந்த சாபம் இருள் சூழ்ந்த துக்க நாளாக மாற்றப்போகிறது என்பதை அவர்கள் அப்போது உணரவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

ஆழக்கடலில் தேடிய முத்து – 8ஆழக்கடலில் தேடிய முத்து – 8

அத்தியாயம் 8 :   சற்று நேரத்தில்  பவனுக்கு போன் வந்தது.  எதிர்பார்த்தது போலவே கொச்சி பாரநார்மல் இன்வெஸ்டிகேஷன் டீம் லீடர் தான் பேசினார்.  “நான்  கொச்சி பாரநார்மல் டீம்ல இருந்து கேசவன் நாயர் பேசுறேன்.  உங்க வாய்ஸ் மெசேஜ்  பார்த்தோம். 

ஆழக்கடலில் தேடிய முத்து – 14ஆழக்கடலில் தேடிய முத்து – 14

அத்தியாயம் 14: தோல் வியாதி குணமான பிறகு கேப்டன் ரிக்கார்டோவின் மனதில் ஒருவித அமைதி நிலவியது. வலி குறைந்து உடல் தேறியதும், அவனுடைய பார்வை முத்துமணியூர் கிராமத்தையும், ராமநாதசுவாமி கோவிலையும் வேறு கோணத்தில் பார்க்க ஆரம்பித்தது.  முன்பு அதிகாரத்தோடும், ஆணவத்தோடும் பார்த்தவன்,

ஆழக்கடலில் தேடிய முத்து – 10ஆழக்கடலில் தேடிய முத்து – 10

அத்தியாயம் 10 :   பவன் விழித்தபோது காலை சூரியனின் ஒளி ஜன்னல் வழியே அறைக்குள் நுழைந்து கொண்டிருந்தது.  நேற்று இரவு கனவு இன்னும் அவன் மனதில் நிழலாடியது.  ” Ricardo de Almeida….” அந்த பெயர் திரும்பத் திரும்ப அவன்