Tamil Madhura

உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 1 youtube

உன்னையே எண்ணியே வாழ்கிறேன் - 1 |Unnaiye Enniye Vaazhkiren - 1| Tamil audio novel | Tamil novel

வணக்கம் தோழமைகளே!
 
நம்ம எழுத்தாளர்  ஆர்த்தி ரவி அவர்கள் ‘இனி எந்தன் உயிரும் உனதே’ கதையின் பன்னிரெண்டாம் அத்தியாயம் படித்துவிட்டு இந்தக் கதையில் வருவது போல ஒன்றை எண்ணிக் கொண்டு  ஒரு மண்டலம் பயிற்சி செய்தால் பலிக்குமா என்று  கேள்வி கேட்டிருந்தார்கள். அவர் மட்டுமல்லாமல் வேறு சில வாசக நண்பர்களும் அதே கேள்வியை எழுப்பியிருந்தார்கள். ஆனாலும் ஆர்த்தி ரவி அடைய நினைத்ததாகக் குறிப்பிட்டிருந்த விஷயம்  என்னை ரொம்பவே பாதித்தது. அவருக்கு பதில்  என்னிடம் இல்லை.
எனவே சோதனை முயற்சியாக ஒரு சிறிய கதை இத்தனை நாட்களில் முடிக்க வேண்டும் என்று கோல் செட் செய்து கொண்டேன். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு தானே பதம்.
வருடக் கடைசி வேலைகள் வழக்கம்போல பின்னிப் பெடலெடுத்தாலும் இந்தக் கதையை எழுதி முடித்தே ஆகவேண்டும் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். அடுத்தகட்டமாக  விரைவாகப்  பதிவுகள் தர உத்தேசம். 
 
என்னை மிகவும் பாதித்த ஒரு வித்யாசமான  திரைப்படத்தின் கருவைத் தழுவி கதை சொல்ல முயற்சித்திருக்கிறேன். அது என்ன திரைப்படம் என்று கடைசி அத்தியாயத்தில் சொல்கிறேன். நீங்களும் படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். 
அன்புடன்,
தமிழ் மதுரா 

உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 1

 

ரியாக ஏழு வருடங்களுக்கு முன்பு, ஓஎம்ஆர் ரோடு என்று செல்லமாக அழைக்கப்படும் மகாபலிபுரம் சாலையின் முன்பு அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் நின்றிருந்த கண்ணாடிக் கட்டடம். பணத்தை இறைத்துக் கட்டியிருந்த அந்த கட்டடத்தின் இரண்டு தளங்களை ஆக்கிரமித்திருந்த ஆர் ஆர் நிறுவனம். முன்னுச்சி முடி ஏற ஆரம்பித்திருந்த ஜெயேந்தர், மிஸ்டர் இந்தியாவில் கலந்து கொள்வதற்குத் தயாராவதைப் போல எப்பொழுதும் ஜிம்மில் பயிற்சியிலேயே  இருக்கும் ராபர்ட், மாநிறத்தில் கொஞ்சம் புசு புசுவென்று இருந்தாலும் ஒவ்வொரு செயலிலும் கனிவை வெளிப்படுத்தும் ரஞ்சனி என்று தினுசு தினுசாக அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் இருந்தாலும் நான்காவது மற்றும் அந்த நிறுவனத்தின் தூண் என்று அனைவரும் சுட்டிக் காட்டுவது ஈஸ்வரைத்தான்.

நல்ல உயரம், கருப்பு என்று தாராளமாக சொல்லலாம். பார்த்தவுடன் தெரியும் தென் தமிழக ஜாடை. கட்டுக்கோப்பான உடல், நாசுக்கான உடல்மொழி, பேச்சு சாதுரியம் என்று அனைவரையும் கட்டிப்போட்ட காளை. ஒரே கல்லூரி மற்றும் அலுவலக வேலை காரணமாக இணைந்த இந்த நால்வரும் ஒரு சமயத்தில் செக்கு மாட்டு வாழ்க்கையிலிருந்து விடுபட அட்வென்சரஸாக தேர்ந்தெடுத்ததுதான் ‘ராக்  அண்ட் ரோல்’ நிறுவனம்.

தொழிலில் போட்டி போட்டாலும் நால்வருக்கும் இருந்த ஒரே ஒற்றுமை மிகவும் நல்லவர்கள் என்று தங்களை நினைத்துக் கொள்பவர்கள். இனி அலுவலகத்திற்குள் செல்லலாம்

மீட்டிங் ஹாலில் ஆரவாரத்திற்கு மத்தியில் ராபர்ட்  உரையாற்றிக் கொண்டிருந்தான் “நன்றி நன்றி… இது எங்கள் வெற்றியல்ல, நம் நிறுவனத்தின் வெற்றி. இந்த அவார்ட் கிடைப்பதற்கு நம் ஒவ்வொருவரின் முயற்சியும் காரணம் என்றாலும் பெரும்பங்கு வகித்த எங்களது சகா, தோஸ்து, உயிர் நண்பன், அழகான ராட்சசன் ஈஸ்வரை உரையாற்ற அழைக்கிறேன்”

பழுப்பு நிற சட்டையில் காதில் இருக்கும் ஒரு சிறு கடுக்கனுடன்  இளைஞர்களின் அடையாளமாய் இருந்த ஈஸ்வர் எழுந்தான் “நன்றி நன்றி நன்றி…. மை டியர் டார்லிங்க்ஸ்… நம்மோடது ஒரு சிறிய விளம்பர நிறுவனம். இதில் முக்கியமா கவனத்தில் கொள்ள வேண்டிய  விஷயம் கனெக்ட்.

இந்த உலகத்தில் மூணே மூணு விஷயத்தை டச் பண்ணும்போது மட்டும் தான் வாடிக்கையாளர்கள் தானா வந்து விழுவாங்க. அது லவ், டைம் அண்ட் டெத். உண்மையா சொல்லப்போனால் இந்த மூணு விஷயங்கள்தான் மனுஷங்களை  கனெக்ட் பண்ணுது.

லவ்வை  தன் கூடவே வச்சுக்கணும்னு ஏங்குறான். நேரமே பத்தலை அப்படியே டைம்  ஓடாம அப்படியே உறைஞ்சுடனும்னு  விருப்பப்படுறான். அப்பறம் கடைசியா சொன்ன மரணம்  பக்கத்தில் கூட வரக்கூடாதுன்னு பயத்தில் சூ,சூன்னு விரட்டறான்.

நல்லா கவனிச்சுப் பார்த்தா லவ் , டைம், டெத் இதை வச்சு செய்யும் ப்ராடெக்ட் எல்லாம் வெற்றிதான். நம்ம விளம்பரம் எல்லாம் இந்த இந்த த்ரீ பாய்ண்ட்ஸ ஹைலைட் பண்ணினால் போதும். கண்டிப்பா சக்ஸஸ் ஆகும்”

மேலும் சிலமணி நேரங்கள் ஊழியர்களுடன் செலவழித்து விட்டு தனது இருக்கைக்கு வந்தான்.

“ஈஸ்வர் உன்னோட லாபத்தில்  பாதியை அநாதை இல்லத்துக்கு எழுதி வச்சிருக்க… பைத்தியமாடா உனக்கு”

“இதுக்கு எதுக்கு பைத்தியமா இருக்கணும். எவனோ ஒரு பொறம்போக்கு பொறுப்பில்லாம பெத்ததுக்கு குழந்தைங்க எதுக்குடா கஷ்டப்படணும்” பேசிக்கொண்டிருந்த பொழுது தொலைப்பேசி அழைப்பு வர எடுத்தான்

“அம்மா… சொல்றதைக் கேளும்மா… இப்பத்தானே கம்பனி முன்னேறிட்டு இருக்கு. இந்த சமயத்தில் எதுக்கும்மா வீணா…”

“அம்மா….” சில நிமிடம் கழித்து அலைப்பேசியை வைத்தவன்

“எனக்குக் கல்யாணம் பிக்ஸ் ஆயிருச்சுடா…. ” என்றான் வெட்கத்துடன்.

“மச்சி…. பொண்ணு யாருடா…”

“டீட்டெயில போட்டோவோட எடுத்துட்டு அப்பாவும் அம்மாவும் வந்துட்டு இருக்காங்கடா”

“வாவ்… வாவ்… வாவ்… வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கண்ணாலம்” என்று அங்கே ஒரு அருமையான டான்ஸ்  ஆரம்பிக்க வெளியிலிருந்து சத்தம் கேட்டு உள்ளே எட்டிப்பார்த்த மற்றவர்களும் கலந்து கொண்டார்கள்.

“மச்சி ஸ்டார்ட் த பார்ட்டி”

 

இன்று

காலை அலுவலகத்தின் கார் பார்க்கிங்கில் தனது பிஎம்டபிள்யூவை நிறுத்தினாள் ரஞ்சனி. கடந்த ஏழு  வருடங்களில்  இன்னுமும் சதை போட்டிருந்தாள். அவள் நிறுத்தும் வரையில் விடாது தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்த செல்லுக்கு உயிர் கொடுத்தாள். அவளது கணவன்தான் ஆஸ்த்ரேலியாவிற்கு தொழில் விஷயமாய் பயணம் மேற்கொண்டிருந்தான். அங்கிருந்து அழைத்தான்.

“என்னாச்சு ரஞ்சனி. இந்ததடவையாவது பாஸிடிவா முடிவு வந்ததா…”

“இல்லை மானவ்… அடுத்த முறை நிச்சயம்”

“எத்தனை அடுத்த முறை வந்துடுச்சு ரஞ்சு… இவ்வளவு மாத்திரை மருந்து சாப்பிட்டா… உன் உடம்பு என்னாகுறது… எனக்கு நீ வேணும்… ஒரு வாரிசுக்காக உன் ஹெல்தை பலி கொடுக்க இனிமேல் நான் தயாராயில்லை”

“மானவ்…. கூல், கூல்… இதெல்லாம் ஒரு போனில் பேசி முடிவெடுக்க வேண்டிய விஷயமா… ஊருக்கு வாங்க. ஒரு ரெண்டு மாசம் இந்த விஷயத்தை ஆறப் போட்டுட்டு அப்பறம் தொடங்கலாம். ஈஸி டார்லிங், ஈஸி…”

“எதையாவது சொல்லி என் வாயை மூடிடு… இப்ப எதுக்கு ஆபிஸ் போன… வீட்டில் ரெஸ்ட் எடுத்திருக்கலாமே”

“நீயும் வீட்டில் இல்ல. தனியா உக்காந்து எதையாவது யோசிச்சுட்டு இருப்பேன். அதுக்கு ஆபிஸ் வந்துடலாம். அது தவிர ஈஸ்வர இங்க பார்த்துட்டு அப்படியே எதையாவது சாப்பிட வைக்கணும். இல்லைன்னா அவ்வளவுதான்”

“இன்னமும் அப்படியேதான் இருக்கானா… ”

“எஸ் எப்பயாவது ஆபிஸ் வர்றான். வந்து ஸ்டேக்கிங் டவர் வச்சு நாள்கணக்கா அடுக்குவான். அப்பறம் ஒரு நாள் அது அத்தனையும் தள்ளிட்டு வீட்டுக்குப் போய்டுவான். அப்பறம் ரெண்டு மூணு நாள் கழிச்சு மறுபடியும் வந்து முதலிலிருந்து தொடங்குவான். அந்த நாள் எல்லாம் என்ன செய்றான், எங்க போறான் எதுவும் தெரியுறதில்லை”

“முன்னாடியே சொல்லிருக்கியே… அவனுக்கு முதலில் ஒரு செல்போன் வாங்கித்தா…”

“செல்போன் இல்லை, ஒரு பிளாட்டில் குடியிருக்கான், லேன்ட் லைனும் இல்லை. வீட்டுக்குள்ள அடைஞ்சுட்டு என்ன செய்றான்னே தெரியல. யாரு கதவத் தட்டினாலும் திறக்குறதில்லை”

“மீட்டிங் வர்றானா…”

“எங்க… பாதிநாள் ஆபிசுக்கு வரும்போதே பைத்தியக்காரன் மாதிரிதான் வர்றான். ஷேவ் பண்றதில்லை, குளிக்கிறானான்னே தெரியல, துணி கூட அவ்வளவு அழுக்கா இருக்கு. நான் எடுத்து வாஷிங் போட்டு உலர்த்தி மறுபடியும்  அதே  இடத்தில் வச்சுடுவேன், ஜெயும், ராபர்ட்டும் அப்பப்ப பிடிச்சு ஷேவ் பண்ணி முடியை வெட்டி விடுறாங்க… ”

“கிட்டத்தட்ட ஒரு வருஷமா இப்படித்தான் தகராறு பண்ணிட்டு இருக்கான். வைப் இருந்தாலும் பரவால்ல பாத்துக்க சொல்லலாம். அம்மா அப்பாவும் கிடையாது. அவனுக்கு இப்ப யாருமே இல்லாம மன அழுத்தம் ஜாஸ்தியா இருக்கு. பேசாம எங்கேயாவது ஹாஸ்பிட்டல்ல சேர்த்து விடலாம்ல…”

“என்ன சொல்ற மானவ்… ஈஸ்வர பைத்தியம்னா சொல்ற… அவன் பைத்தியம் இல்லடா… செத்து போன மகனுக்காக துக்கம் கொண்டாடுற அப்பன். அவன் எத்தனை நாள் வேணும்னாலும் இப்படி இருக்கட்டும். அவனைப் பார்த்துக்க பிரெண்ட்ஸ் நாங்க இருக்கோம்”

அவனைப் பற்றிக் கவலைப்படும் நண்பர்களைக் கூட சட்டை செய்யாமல் அலுவலகத்தில் தனது அறையில் அமர்ந்து ஸ்டாகிங் பாரை அடுக்கிக் கொண்டிருந்த ஈஸ்வரைப் பார்த்து புதிதாய் வேலைக்கு சேர்ந்தவர்கள் கிண்டலாய் சிரித்துக் கொண்டு சென்றார்கள்.

அதைக் கண்டு மனபாரம் ஏறினாலும் “ஈஸ்வர்… சாப்பிட்டியா…” என்று அன்புடன் அழைத்தவண்ணம் கைகளில் பழச்சாறுடன் நுழைந்தாள் ரஞ்சனி. அதே அறையில் அமர்ந்திருந்த மற்ற இரு தோழர்களும் அவளைப் பார்த்து முறைத்தார்கள்.

“இதேதான் நாங்களும் கேட்டுட்டு இருக்கோம். வாயே திறக்க மாட்டிங்கிறான்”

“சரி விடுங்கடா… ஈஸ்வர் இந்த ஆரஞ்ச் ஜூஸை மட்டும் குடிச்சுட்டு விளையாடுவியாம்… ப்ளீஸ்…” என்று கெஞ்ச… அதனை வாங்கிக் கொண்டான்.

“ஈஸ்வர்… நீ என் பிரெண்ட்தானே நான் சொல்றதைக் கேட்பதானே… இன்னைக்கு சாயந்தரம் என் கூட ஒரு இடத்துக்கு வருவியாம்”

ஒரு வாய் குடித்தவன் மீதியை விசிறியடித்துவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.