Tamil Madhura

உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 9

பிரேமா ப்ளீஸ் இன்னும் ஒரு முறை நீ ஈஸ்வரை மீட் பண்ணியே ஆகணும்” ராபர்ட் கெஞ்சும் குரலில் கேட்டான்.

“என்னால முடியாது ராபர்ட்”

“இப்படி சொல்லக் கூடாது பிரேமா. இப்படி பாதியில் விட்டா நாங்க என்ன செய்வோம். இது உன் தொழில் தர்மமே  கிடையாது”

“பிரெண்ட் கிட்டேயே டிராமா போடுற நீ என் தொழில் தர்மத்தைப்  பத்திப்  பேசக் கூடாது. ”

“சரி… உன்னோட சம்பளம் இப்ப பத்து லட்சம். சொல்லு எப்ப மறுபடியும் நடிக்க வர்ற”

முறைத்தாள் பிரேமா

“இருபது லட்சம். அதுக்கு மேல நினைக்கிறது கூட பே…..ரா…..சை”

“உன் பணமே எனக்கு வேண்டாம்”

“இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் அவனை மீட் பண்ணு. ஈஸ்வர்கிட்ட என்னவோ மாற்றம் தெரியுது. இன்னும் ஒரு தடவை மீட் பண்ணால் முழுசா வெளிவந்துடுவான் பிரேமா. ஒரு சேவையா நினைச்சு இதை செய்யக் கூடாதா?”

“உனக்கு ஒரு பொண்ணு இருக்குல்ல”

“ஆமாம் அதுக்கென்ன இப்ப. நான் ஒண்ணும் உன்னை டேட் பண்ணக் கூப்பிடலையே…”

முறைத்தவள்  “பொண்ணு பொறந்தப்ப உனக்கு எப்படி இருந்தது. தயவு செய்து  சொல்லு”

விளையாட்டுத்தனத்தை நிறுத்திவிட்டு சொன்னான் “பயம்மா இருந்தது. குழந்தை பொறந்தா ராத்திரி எல்லாம் அழும், டையப்பர் வாங்கியே சம்பளம் காலியாயிடும்னு பிரெண்ட்ஸ் சொல்லிருந்தாங்க. அதெல்லாம் நினைவில் வந்து போச்சு”

“ராபர்ட்… நான் இந்த முறை நீ சொல்லித் தந்ததை ஒப்பிக்காம  உணர்வுப் பூர்வமா நடந்துக்கணும்னு நினைக்கறேன். அதுக்கு ஹெல்ப் பண்ணு” என்றாள் நேர்கொண்ட பார்வையுடன்.

“என் பொண்ணு பொறந்தப்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது… ”

“பத்தாது… நீ இன்னும் உண்மையை சொல்லல… உன் மகளை முதலில் பாத்தப்ப நீ எப்படி பீல் பண்ண… ”

கண்களை மூடிக் கொண்டு கற்பனையில் நான்சியைக் கையில் வாங்கிய தருணத்தை நினைத்தான் ராபர்ட். “அம்மா, அக்கா, மனைவின்னு என்னை சுத்திப் பெண்கள் அன்பைப் பொழிஞ்சிருக்காங்க. என் பொண்ணும் அதில் ஒருத்தின்னு நினைச்சேன். அவளைக் கையில் வாங்கின போது….

வாங்கி முதல் முதலில் பார்த்தப்ப நானே  அன்புமயமானதா  உணர்ந்தேன். அன்பு வேற நான் வேறன்னு அந்த நொடி என்னால நினைக்க முடியல. அந்த அன்பு என் மனைவி மேலயும் திரும்புச்சு.

இப்ப கூட ஜாய்ஸ்ம், நான்சியும்   என் மேல வெறுப்பில் இருக்காங்க… என்கிட்டே பேசுறது கூட இல்லை. இருந்தாலும் என்னால அவளை வெறுக்க முடியல”

“ராபர்ட் சூப்பர்…. எவ்வளவு அழகா சொல்ற… உன்னோட இந்த அன்பை  உன்னோட பாமிலி கிட்டக்  காட்டேன்”

“காட்டலாம் ஆனால் அவங்க நம்பணுமே”

“நம்பி உனக்கு என்னாகப் போகுது. நான் அன்பு செலுத்துறேன் பதிலுக்கு நீயும் அதே அன்பை எனக்குக் தான்னு சொல்றது கூட ஒரு பண்டமாற்று வியாபாரம்தானே.

அன்புன்னுறது மழை மாதிரி அது பாராபட்சமில்லாம எல்லார் மேலையும் பொழியும் …

நீ தப்பு பண்ணிருக்கத்தான்… ஆனால் அந்தத் தப்பு  நீ குடும்பத்து  மேல அன்பையும் அக்கறையும் காண்பிக்கிறதை தடுக்க முடியாது”

“இதனால் எல்லாம் அவங்க மனசு மாறி என்னை ஏத்துக்குவாங்கன்னு எனக்கு நம்பிக்கையில்லை”

“காலத்துக்கு காயத்தை ஆற்றும் தன்மை இருக்கு. ஆனால் நீ செஞ்ச தப்பின் அளவு பெருசானதால காயம் ஆற நாளாகும். ஆறினாலும் அதன் வடு அது எப்போதும் இருக்கும்.

ஒரு வேளை இந்த இடைப்பட்ட காலத்தில் உன் மேல இருக்கும் கோவம் மட்டுப்பட்டு,  உன் அன்பை புரிஞ்சுகிட்டு அவங்க ஏத்துகிட்டா… யோசிச்சு பாரு,  எவ்வளவு அழகான வாழ்க்கை உன் கண்ணு முன்னாடி இருக்குன்னு”

கற்பனையில் கண்டுவிட்டு  “நிஜம்தான் பிரேமா… ஆனால் நடக்குமா” என்றான் ஏக்கத்துடன்.

“இப்ப ஒரு டீல் ராபர்ட்… உன் அன்பை வெளிப்படுத்து. உனக்குத்தான் பேச்சு சாதுரியம் அதிகமாச்சே. அதைத் தவிர நான் அப்படித்தான்னு சொல்ற போலிப்பூச்சில்லாத ஒரு ஓப்பன்நெஸ். உன்னை வெளிப்படுத்திக்கவோ இல்லை மனசார மன்னிப்புக் கேக்குறதுக்கோ நீ தயங்குனதே இல்லை.

உன்னோட இந்த நல்ல குணங்களை அங்கீகரிச்சு உன் பொண்ணோ இல்ல உன் மனைவியோ உன்னைப் பார்த்து ஒரு வார்த்தை பேசினால் கூடப் போதும்… ஈஸ்வர் வாழ்க்கைலயும் ஒரு மாற்றம் வரும்னு எனக்கு நம்பிக்கை வந்துடும். நீ சொன்னதை  செய்றேன்”

ள்ளியில் தனது பெண்ணை டிராப் செய்துவிட்டு, ஜாய்ஸ்  காரைத் திருப்பி அண்ணாநகரின் சிக்னலில் நின்ற பொழுது யாரோ காரின் கண்ணாடியைத் தட்டினார்கள்.

நிமிர்ந்து பார்த்து, ஜன்னலைத் தட்டிய ராபர்ட்டை முறைத்தாள் ஜாய்ஸ். ஆனாலும் சிக்னல் விழுந்து விட்டதால் கிளம்பச் சொல்லி ஹார்ன் அடித்த கார்க்காரர்களின் தொல்லை தாங்க முடியாது காரின் லாக்கை ரிலீஸ் செய்தாள். கதவைத் திறந்து உள்ளே அமர்ந்தான் ராபர்ட். காரைக் கிளப்பினாள் ஜாய்ஸ்.

“தாங்க்ஸ் ஜாய்ஸ்”

“அமிஞ்சிக்கரை போற வரைக்கும்தான்  உனக்கு  டைம். அதுக்குள்ளே  வந்த காரியத்தை சொல்லிட்டு இடத்தைக் காலி பண்ணுங்க”

“ஐ ஆம் ஸாரி ஜாய்ஸ்” என்றபடி பூங்கொத்தைத் தந்தான்.

ஒரு வினாடி திகைத்து விழித்துவிட்டு பின்னர் பாதையில் கவனம் செலுத்தினாள் ஜாய்ஸ்.

“உன்னால் என்னை மன்னிக்க முடியாதுன்னு நல்லா தெரியும்”

“நீ செஞ்ச தப்பு எந்த மனைவியும் மன்னிக்கக் கூடியதில்லை”

“ஆமாம்… நான் உன் மனசை உடைச்சுட்டேன், உன் சந்தோஷத்தை திருடிட்டேன், எல்லாத்துக்கும் மேல நம்பிக்கை… என் மேல நீ வச்சிருந்த நம்பிக்கைக்கு துரோகம் செஞ்சுட்டேன், ஏமாத்திட்டேன். எனக்கு மன்னிப்பே கிடையாதுன்னு தெரியும். ஆனால் உன்னைப் பிரிஞ்சதிலிருந்து இத்தனை வருஷமும் உன் கணவனாத்தான் இருக்கேன்”

அந்த விவரமெல்லாம் ஜாய்சுக்கே  தெரியுமே… “உங்களுக்கு என்ன வேணும்னு சீக்கிரம் சொல்றிங்களா”

“ஒண்ணும் வேண்டாம். என் இதயப்பூர்வமான மன்னிப்பை நான் தெரிவிக்கணும்னு நினைச்சேன். அவ்வளவுதான்” என்றான்.

இது ஒரு புதுவகையான ட்ரிக்கோ என்று விழித்தாள் ஜாய்ஸ்.

“ஜாய்ஸ் இருபது  வருஷத்துக்கு முன்னாடி இதே தேதியில்தான் உன்னைச்  சர்ச் கொயர்ல   பார்த்தேன். அப்பவே உன்னை எனக்குப் பிடிச்சுருச்சு. ஆனால் ஸ்டேடஸ்ல என்னை விடப்  பல படிகள் மேல இருந்த…

எட்டாத உயரத்தில் இருந்த உன்னை எப்படியாவது கல்யாணம் பண்ணிக்கணும்னு ஒரு வெறி அதுதான் என் படிப்பை, தகுதியை வளத்துக்க ஒரு தூண்டுகோலா இருந்தது. வெறித்தனமா முன்னேறி நான் அடைய நினைச்ச அன்பைக் கைப்பற்றினேன்.

கல்யாணமும் பண்ணிட்டு ஒரு குழந்தையும் பொறந்தாச்சு. இந்த சமயத்தில் நான் எதனால அந்தத் தப்பைப் பண்ணேன்னு இன்னமும் எனக்குப் புரியல.

நான் நினைக்கும் ஒரே காரணம் எனக்குள்ள ஒளிஞ்சிருந்த மிருகத்துக்குத் தீனி போட வேண்டி இருந்தது. அந்த மிருகத்தின் வேட்கை உனக்குத் தெரிஞ்சால் என்னை எவ்வளவு கேவலமா நினைப்ப. என்னை நீ வெறுத்துட்டா… அதுக்கு மேல அந்த மிருகம் கட்டுப்பாடிழந்து உன்னைக் காயப்படுத்திட்டா… இதனால்தான் ஒரு வடிகாலா என்னைப் பத்தித் தெரியாத ஒரு இடத்தில் அந்தக் குப்பையை ஒளிச்சுக்கட்டிட்டு வந்துடலாம்னு நினைச்சேன்.

நீ இருந்தாலும் நான் வேறு இடம் போனதுக்குக் காரணம் என்னால உன்ன ஹர்ட் பண்ண முடியாதுன்னுறதுதான். இதை நீ நம்பலைன்னாலும் இதுதான் நிஜம்.

ஆனாலும் எந்த காரணமா இருந்தாலும் நான் காதலைக் கொச்சைப் படுத்திட்டேன். உன்னைக் கல்யாணம் பண்ணிக்கக் காட்டிய வேகத்தைத்  தக்க வைக்கிறதில் காட்டல.

இது என் முட்டாள்தனம்தானே. அதுக்கு நீ ஏன் கஷ்டப்படணும் ஜாய்ஸ். நீ இத்தனை வருஷமும் தனியா இருக்குறது எனக்கு வலிக்குது. இன்னொரு வாழ்க்கை அமைச்சுக்கோ ஜாய்ஸ். இதை மனசார சொல்றேன். குழந்தை பொறுப்பைக் கூட நானே ஏத்துக்குறேன்”

காரை ஓரத்தில் நிறுத்தினாள்ஜாய்ஸ் “அவுட்… இறங்கி என் மூஞ்சிலையே முழிக்காம ஓடிடு”

“ஜாய்ஸ்”

“இருபது வருஷமா லவ் பண்ணானாம். நான் மட்டும் அன்னைக்கு பாக்கலையா… நீ நேரா சைட் அடிச்சேன்னா நான் உனக்கே  தெரியாம உன்னை சைட் அடிச்சேன்.

உங்க வீட்டில்  பொண்ணு கேட்டதும் எங்கப்பா ஒண்ணும் உன் உயரத்தைப் பாத்து மயங்கி என்னைத் தந்துடல. எங்கப்பாட்ட உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சண்டை போட்டதால்தான் நம்ம கல்யாணம் நடந்துச்சு.

எங்கப்பாவையே பகைச்சுட்டு  உன்னை நம்பி வந்தேனே… எல்லாரு  முன்னாடியும் தலை குனிய வச்சுட்டயேடா…  ஊர்ல சொந்தக்காரங்க எல்லாம் உன் வீடியோவைப் பத்தி பேசிப் பேசி…. வெளிய போகவே பயம்மா இருக்கு. மனுஷங்க  யாரும் இல்லாத இடத்துக்கு நானும் என் பொண்ணும் ஓடிப் போயிரணும்  போலிருக்கு. எல்லாத்தையும் செஞ்சுட்டு… நான் இப்ப ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கனுமாம்” அவள் கேவலோடு சொல்லி முடித்தாள்.

“ஜாய்ஸ்… ஐ அம் ஸாரி… ” அவள் உள்ளத்தில் உள்ளதைக் கொட்டிவிட்டுக் குமுறிக்   குமுறி அழுவதைக் கண்டு ராபர்ட்டின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“இந்தக் கறை என் வாழ்க்கை முழுசும் மறையாதுதான். ஆனால் என் தப்புக்காக உங்களை தண்டனை அனுபவிக்க விடுறது நியாயமில்லை. இந்தப் பிரச்சனை குறைய ஒரே வழி சொல்லவா…”

“என்ன சொல்லப்போற… செத்துடுன்னா”

“பல்லை உடைப்பேன். பொண்ணு இருக்கா அவளை நல்லா பாத்துக்கனும்னு அக்கறை உனக்கும் எனக்கும்தான் இருக்கும்.

நீ என்னை மன்னிக்காட்டியும் பரவால்ல ஊர் வாயில் விழாதே. பைத்தியக்காரத்தனம் எதையாவது பண்ணிக்காதே. அப்பறம் நானும் உன் பின்னாடியே வந்துருவேன். ப்ராமிஸ்…

நான் வேணும்னா வெளிநாட்டில் ஒரு வேலை பாத்துக்குறேன். நான்சியை கூப்பிட்டுட்டு கிளம்பிடலாம். ஒரு அம்மா அப்பாவா பொண்ணு கூட இருக்கலாம். உங்க ரெண்டு பேருக்கும் ஒரு பாதுகாவலனா இருக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடு. இந்தப் ப்ளானைப் பத்தி  யோசிச்சுட்டு  உன் பதிலை சொல்லு”

இறங்கிக் கொண்டான். ஜாய்ஸ் என்ன சொல்வாள் என்று அவனுக்குத் தெரியவில்லை ஆனால் நீண்ட நாள் கழித்து கோபமாய் குமுறியிருக்கிறாள். அந்த சந்திப்பைப் பற்றி பிரேமாவிடம் பகிர்ந்து கொண்டான்.

“உன் மனைவியின் குமுறல் கூட அன்பின் வெளிப்பாடுதான். நீ பாசாயிட்ட ராபர்ட் நான் ஈஸ்வர ரெண்டாவது முறை சந்திக்க ஒத்துக்குறேன்” என்றாள்.

 

ந்த லிப்ட்டில் நுழைந்தான் ஈஸ்வர். அவன் பின்னோடு யாரோ நுழைய, கதவு சாத்தியது. மெதுவாகத் திரும்பியவனின் கண்களில் ‘காலமா’க முன்பு ஒரு நாள் அறிமுகப்படுத்திக்கொண்ட ஹோரஸ் பட்டான்.

“உன் ரூமிலிருந்த விஷயம் எல்லாம் குப்பைத் தொட்டிக்குப் போயிருக்கும்னு நினைச்சேன், ஆனால் நீ இன்னும் மாறலை…  உனக்கு கிப்ட் தந்திருக்கேன் ஈஸ்வர் ஆனால்  நீ அதை அழிச்சுட்டு இருக்கியே” என்றான் ஹோ சினத்துடன்.

ஹோரசின் சட்டையைப் பிடித்துத் தன்னருகில் இழுத்த ஈஸ்வர் “எனக்கு உன்னோட கிப்ட் தேவையில்லை. ஏன்னா என் மகனுக்கு அது கிடைக்கல. அவனுக்குக் கிடைக்காதது எனக்கும் வேண்டாம்” என்று உரக்கக் கத்தியவண்ணம் ஹோரசைக் கீழே தள்ளிவிட்டான். லிப்ட் நின்றதும் கீழே கிடந்தவனைத் திரும்பிப் பார்க்காமல் சென்றான் ஈஸ்வர். நடந்த விஷயங்களைத் துல்லியமாகப் படம் பிடித்துக் கொண்டிருந்தது கேமிரா ஒன்று.

லிப்ட்டிலிருந்து இறங்கியதும் பதற்றம் குறையாது ரோட்டில் நடந்த ஈஸ்வர் அருகிலிருந்த பஸ் ஸ்டாப்பில் காலியாய் ஒரு பஸ் நிற்கவும் ஏறிக்கொண்டான். மிகச் சிலரைத் தவிர வேறு யாரும் அதில் பயணம் செய்யவில்லை. டிரைவரும் கண்டக்டரும் கதை பேசியபடி இருக்க, பயணச்சீட்டு பெற்றுக் கொண்டு கடைசி இருக்கைக்குச்  சென்றான்.

அடுத்த ஸ்டாப்பில் தன் பக்கத்தில் யாரோ அமருவதை உணர்ந்து திரும்பிப் பார்த்தவனைக் கண்டு மாரா புன்னகைத்தாள்.

“இப்ப எதுக்கு இங்க வந்திருக்க… என்னைக் கூட்டிட்டு போகவா…”

“இல்ல இல்ல… நானும் உன்னை மாதிரி கடற்கரை சாலைக் காற்றை அனுபவிச்சுட்டே பயணம் செய்யப்போறேன்”

சற்று நேரத்திற்குப் பின் மெதுவாக ஆரம்பித்தாள் “அம்மா வயிற்றில் இருக்கும் வரைக்கும் குழந்தை பாதுகாப்பா உணருது. அந்த இடத்தை விட்டு வெளியே வரவே அது விரும்புறதில்லை. அதுக்குக் காரணம் வெளி உலகத்தைக் கண்டு அதுக்கு ஏற்பட்ட பயம். தெரியாததால் உண்டான பயம்தான் அதை வெறுக்க வைக்குது. ஆனால் அது அம்மா வயத்திலேயே இருக்க முடியாதில்லையா. ஒரு நாள் வெளியே வந்துதானே ஆகணும்” என்று தனது பிரசங்கத்தை ஆரம்பித்தாள்.

“ஸ்டாப் ஸ்டாப்… அவன்  கடவுளின் கைல இருக்கான்… பிறப்பு இறப்பெல்லாம் இறைவனின் திருவிளையாடல். அவன் கடவுளுக்குப் பிரியமான ரோஜா… &$$$& லைப் இஸ் லைக் அ ட்ரீம்…. %&^&^ இந்தப் புண்ணாக்கெல்லாம் என்கிட்டே வேணாம்.

‘கடைசில மரணம் அழகானது தவிர்க்கமுடியாதது அதை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும்’ அப்படின்னு தானே முடிக்கப் போற. அதைத் தவிர வேற ஏதாவது சொல்லப் போறியா…”

இல்லை என்று தலையாட்டினாள் மாரா. “அப்படின்னா என்னைத் தொல்லை பண்ணாதே. எதையும் ஏற்றுக் கொண்டே ஆகணும், இதுதான் இயற்கை நியதின்னு ஒவ்வொரு உயிரையும் கையாலாகாத நிலையில் நிறுத்தி வைக்கிறது கூட ஒரு வன்முறைதான்” என்றபடி பஸ் நின்ற ஏதோ ஒரு ஸ்டாப்பில் இறங்கி நடக்கத் துவங்கினான்.

கால்போன போக்கில் அலைந்து விட்டு பின் ஒரு தெருவிளக்கில் சாய்ந்தபடி இருளில் கடலை வெறித்துக் கொண்டிருந்தவனிடம் “ஹாய் ஈஸ்வர்” என்றவண்ணம் அருகில் வந்தாள் பிரேமா.

“அடக்கடவுளே… ஒரு இண்டர்வலே இல்லாம இப்படி வருதுங்களே”  பல்லைக் கடித்தான்.

“ஹாய்”

“அன்னைக்கு மாதிரி அழ வந்திருந்தா சீக்கிரம் அழுதுட்டுப்போ”

“இன்னைக்கு அழமாட்டேன். ஏன்னா எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத விஷயத்தை செய்றதுதான் என் வழக்கம்” என்றாள்.

“என்னை நியாபகம் இருக்கா ஈஸ்வர். உன் கூடவே எத்தனை நாள் இருந்திருக்கேன். நான் உனக்கு நல்லதுதான் செய்வேன். என்னை நம்பு”

வெறிகொண்ட பார்வையோடு அவளை நோக்கியவன் “நம்பறதா… உன்னையா…”

“எஸ்”

“இடியட் நான் உன்னை எவ்வளவு நம்பினேன். ஆனால் நீ எத்தனை பெரிய நம்பிக்கை துரோகம் செஞ்ச…

உன்னை தினமும் என் மகனோட  சின்னஞ்சிறு கண்களில் பார்த்தேன். உன்னோட குரலை அவனோட சிரிப்பில் கேட்டேன். அவன் அப்பான்னு கூப்பிடும் ஒவ்வொரு தரமும் உன்னை முழுமையா உணர்ந்தேன். ஆனால் நீ எனக்கு துரோகம் செஞ்சுட்ட . சேர்த்து வச்சு ஒரு நாள்  என் இதயத்தை சுக்கல் சுக்கலா உடைச்சுட்ட”

“இல்லை ஈஸ்வர்… நான் எல்லா இடத்திலும் இருக்கேன். இருட்டிலும், வெளிச்சத்திலும், சூரிய ஒளியிலும், கடும் குளிரிலும் எல்லா இடத்திலும் இருக்கேன். நானில்லாம எந்த ஒரு உயிரும் முழுமை அடையுறதில்லை.

அப்ப உன் மகனின்   சிரிப்பில் இருந்தது போலவே இப்ப உன்னோட வலியிலும் இருக்கேன். அன்பில மட்டுமில்ல வெறுப்பிலும் நான்தான் இருக்கேன். இந்த உலகம் முழுசும் நிறைஞ்சு இயங்க வச்சுட்டு இருக்குறது நான் நான் நான் மட்டுமே… நானில்லாம இந்த உலகத்தால் ஒரு செகண்ட் கூட இயங்க முடியாது. என்னை விலக்கிட்டு வாழ நினைக்காதே ஈஸ்வர்.

ப்ளீஸ் அந்த ஒரு தப்பை மட்டும் பண்ணிடாதே” என்று அவள் எரிமலையாய் குமுறியதைக் கேட்டவண்ணம் பேச்சற்று நின்றான் ஈஸ்வர்.