Tamil Madhura

உன்னையே எண்ணியே வாழ்கிறேன் – 8

லுவலகம் இருக்கும் தெருவிலேயே இருந்த மிகச்சிறிய தள்ளுவண்டிக் கடை. மினுக் மினுக்கென கண்சிமிட்டிய தெருவிளக்கு. அதனையே நம்பி வியாபாரம் செய்யும் குடும்பம். அந்த விளக்கொளியில் குண்டானிலிருந்த இட்லிகளில் ஈ மொய்த்தது கண்டு சிலர் ஒதுங்கிச் செல்ல, கொஞ்சம் கூட அசூயை இன்றி அந்த இட்லிகளை  சட்டினி தொட்டு விழுங்கிக் கொண்டிருந்தான் ஈஸ்வர்.

அருகிலிருந்த மரத்தின் பின் நின்று ஈஸ்வரை பிரேமாவுக்குக் காண்பித்துத் தந்தான் ராபர்ட்.

“ராபர்ட் உன் கம்பனியோட நிதி நிலமை மோசம்னு நீ சொன்னப்ப கூட  நான்  நம்பல. ஆனா இந்த நிமிஷத்திலிருந்து முழுசா  நம்புறேன். ஈஸ்வர் நல்ல சாப்பாடு சாப்பிடுறதுக்காகவாவது நல்லா நடிக்க ட்ரை பண்ணுறேன்”

“குட் தட்ஸ் மை கேர்ள்”

“ராபர்ட் எனக்கு இந்த மாதிரி ஒரு சிச்சுவேஷனில் நடிச்சுப் பழக்கமில்ல. சொதப்பிட்டா என்ன பண்றது”

“உனக்கு எக்ஸ்பிரஷன் வரலைன்னு தானே ராத்திரி நேரமா பாத்து  டிராமா அரேன்ஜ் பண்ணது. நல்லா நடிச்சுட்டு  என்னை வந்து மீட் பண்ணு”  என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நழுவினான் ராபர்ட்.

ஈஸ்வரின் தட்டிலிருந்த இட்லிகளை மறைத்தவண்ணம் ஒரு கை தன் கையிலிருந்த கடிதத்தை நீட்டியது.

“இதென்ன ஈஸ்வர். நீ குட்பை சொன்னா நான் உடனே விலகிடனுமா?”

அதனை சொல்லி முடிப்பதற்குள் ஈஸ்வரின் கண்களில் இருந்த வெறுமையைக் கண்டு பிரேமாவின் கண்களிலிருந்து நீர் வழிய ஆரம்பித்தது “என்னை இங்கேயே இரு இல்லை இங்கிருந்து போன்னு சொல்ல உனக்கு உரிமை கிடையாது. நான் உனக்குள்ள இன்னமும் இருக்கேன் ஈஸ்வர். என்னை உணர்ந்து பாரு, ஒரு தடவை என்னை உணர்ந்துட்டேன்னா உன் வாழ்க்கையே புத்தம் புதுசா மாறும்”

“வில் யூ ஸ்டாப் இட்…  என்னை டார்ச்சர் பண்ண எங்கிருந்துதான் வர்றிங்க எல்லாரும்” தட்டைக் கீழே தூக்கி எறிந்துவிட்டு வேகமாய் அங்கிருந்து அகன்றான் ஈஸ்வர்.

“கண்டிப்பா என்னை நம்பினான். என் வார்த்தைகள் அவன் கண்ணில் ஒரு ஸ்பார்க்கைக் கிளப்புச்சு” மாரா அங்கிருந்த ராபர்ட் அண்ட் கோவிடம் சத்தியம் செய்தாள்

“என்னை நானே பெருமையா சொல்லிக்கிறதில்லை ஆனால் என்னைப் பார்த்ததுமே ஒரு ஸ்பார்க் கிளம்பும்னு நிறைய பேர் சொல்லிருக்காங்க” என்று மேலும் தனக்கு சாதகமான பாயிண்ட்சை அடுக்கினாள். அவள் பேசியதைக் கேட்டுத் தலையாட்டினான் ஜெய். வேறென்ன செய்ய முடியும். அவள் முன்னேதான் வேறு யாரும் பேச முடிவதில்லையே.

“அது மாரா முதலில் மீட் பண்ணதால்  இருக்கும். நான் தீப்பொறி பறக்க பேசினதுதான் அவனை ஒரு ஆட்டு ஆட்டுச்சு. ஈஸ்வர்கிட்ட ஏதாவது மாற்றம் தெரிஞ்சா அது காலத்தால்தான்னு எல்லாருகிட்டயும் ரஞ்சனி எடுத்து சொல்லப் போறாங்க பாரேன்.

பல்லைக் கடித்த ரஞ்சனி “ஹோ… கடுப்பைக் கிளப்பாதேடா. டையலாகில் எழுதித் தந்ததைத் தவிர ஓவர் ஆக்ட் பண்ணி என்ன குழப்பம் பண்ணப் போறியோன்னு ஒவ்வொரு தரமும் டென்ஷனில் நிக்கிறேன்”

ப்ரேமாவிடமிருந்து பதில் வராதது கண்டு ராபர்ட் “பிரேமா கூட சூப்பர். அன்பு அவனை அசைக்காம இருந்தால்தான் சந்தேகம்”

பதிலுக்கு அங்கு எதிரொலியில்லை.

“இருந்தும் இன்னொருதடவை நீங்க மூணு பேரும் அவனை மீட் பண்ணால் அவன் சீக்கிரம் குணமாயிடுவான்னு நம்புறோம்” என்றான் ராபர்ட்.

“இன்னொரு தடவையா… ”

“எஸ்… இந்த தடவை நாங்க ஒரு வீடியோ கூட எடுக்கலாம்னு இருக்கோம்” என்றாள் ரஞ்சனி

“முன்னாடியே இதையெல்லாம் சொல்லலையே”

“இப்பத்தான் யோசிச்சோம்.  ஈஸ்வருக்கு  உங்க பாத்திரத்து மேல நம்பிக்கை வர்றதுக்காக  ஒரு வீடியோ பண்ணி அதில் உங்க படத்தை ரிமூவ் பண்ணிட்டு, யாரு கூட பேசினன்னு கேட்டா இன்னும் ஸ்ட்ராங்கா உங்களை நம்புவான்ல”

“குட் ஐடியா… ஆனால் யாரு செய்வா… விஷயம் நிறைய பேருக்குத் தெரியக் கூடாதுன்னு சொன்னிங்களே” என்றான் ஹோரஸ்.

“ஆமாம் பட் வேற வழியில்லை. கணியன் கிட்ட சொல்லி யாரையாவது ஏற்பாடு பண்ணனும்”

“ஹா ஹா..  ஹோ உன் ஏரியா… ” என்றாள் மாரா.

“நீ விடியோ எடிட்டிங் கூட பண்ணுவியா” என்று ஜெய் கேட்க

திருதிருவென அவனைப் பார்த்தவன் “ஆனால் அதுக்குத் தனி சார்ஜ்”

தலையில் அடித்துக் கொண்ட ரஞ்சனி “தர்றோம்… ஆனால் கிளீன் வொர்க்கா இருக்கணும்”

“அசந்து போற மாதிரி செஞ்சு தர்றேன்”

‘ஹோ… சொதப்பிடாத டா” என்றான் ஜெய்.

இடையிட்டு “நான் இந்த ஆட்டத்துக்கு வரல” என்றாள் பிரேமா.

அனைவரும் திகைப்புடன் பார்க்க

“என்னால ஈஸ்வர்கிட்ட நடிக்க முடியாது” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டாள்.

“பிரேமா” என்றழைத்துக் கொண்டே செல்ல முயன்ற ராபர்ட்டைக் கைகளைக் காட்டித் தடுத்த மாரா. “அவ அப்படித்தான். உப்பு சப்பில்லாத காரணத்துக்காகக் கோச்சுட்டுப் போவா…  அப்பறம் அதைவிட கேவலமான ஏதோ ஒரு காரணத்தை சொல்லிட்டு  மறுபடியும் வருவா. இதெல்லாம் எங்களுக்குப் பழக்கமாயிடுச்சு”

“ஒரு வேளை அவ வராம போயிட்டா…”

“நான் எதுக்கு இருக்கேன். நானே அந்த ரோலையும்  பண்ணுறேன். எனக்குள்ள எத்தனை அம்பிகாபதி அமராவதி, ரோமியோ ஜூலியட், ஷாஜஹான் மும்தாஜ் இருக்காங்கன்னு உனக்கெல்லாம் தெரியுமா. அதையெல்லாம் உங்களுக்குக் காட்டுறேன்” என்று மாரா சொல்ல

“மாராகிட்ட கொடுத்துட்டாலும் …  ராபர்ட்… பிரேமா மட்டும் வரல உங்க ட்ராமாவுக்கு மூடுவிழாதான்” என்றான் ஹோ கிண்டலாக.

காயத்திரி வீட்டிற்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தாள். இருட்டிவிட்டது இனி யாரும் வரப்போவதில்லை. கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பும் சமயம் அவளது அறை வாசலில் “ஹ்ம்ம்” என்று கனைப்புச் சத்தம் கேட்டு நிமிர்ந்தாள். அங்கு ஈஸ்வர் நின்றுக் கொண்டிருந்தான்.

“வேலை நேரம் முடிஞ்சுருச்சா… இனி பேச முடியாதா”

மெல்லிய புன்னகையோடு அவனைப் பார்த்தவள் “பரவால்ல… உட்காருங்க மிஸ்டர். ஈஸ்வர்” என்றாள்.

அவன் அமர்ந்ததும் “சொல்லுங்க… உங்களை இப்ப என்ன டிஸ்டர்ப் பண்ணுது”

“ஹலூசினேஷன் பத்தி என்ன நினைக்கிறிங்க” என்றான். சொல்லிக் கொண்டிருந்த போதே எழுந்து குறுக்கும் நெடுக்குமாய் நடக்க ஆரம்பித்தான்.

“நீங்க ஒழுங்கா தூங்குறிங்களா?”

“ஓ.. தூங்குவேனே…  ஒரு வாரத்தில் ஆறேழு மணி நேரம் ”

“சரி உக்காருங்க”

அவள் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தவன் “என் கூட சிலர் பேசுறாங்க… ”

“ஒகே”

அறையினை சுற்றிப் பார்த்தவன் அங்கிருந்த பொருட்களை அங்கும் இங்கும் புரட்டினான். ஒரு வாழ்த்து அட்டையினைப் பிரித்துப் பார்த்தான். காயத்திரி தடுக்கவில்லை. அவனது இருப்புக் கொள்ளாமல் தவிக்கும் தன்மை சற்று அடங்கி கட்டுக்குள் வரட்டும் என்று விட்டாள்.

‘நாம் இருவரும் சந்திக்காமலேயே  இருந்திருக்கலாம்’ என்ற அந்த அட்டையின் வாசகத்தைக்கண்டு அவனது முகம் சுருங்கியது.

“ஈஸ்வர் அது என்னோட பெர்சனல் அங்கேயே வச்சுடுங்க”

“இது”

“என் கணவர் தந்தது.  டைவர்ஸுக்கு முன்னாடி”

“உங்களுக்கு….  இதை… ”

“அது என்னோட விஷயம். நான் பாத்துக்குறேன். நீங்க யாரோ பேசுறாங்கன்னு சொன்னிங்களே அதைப் பார்க்கலாமா” என்று சொல்லி அவனை எட்ட நிறுத்தினாள். காயத்திரிக்கு இது தர்மசங்கடமான நிலமை. அவன் கேட்கும் அசட்டுக் கேள்விக்கு பதிலும் தரமுடியாது. ரொம்ப முறைத்தாலும் இவன் தன்னுடைய பிரச்சனையிலிருந்து வெளிவராமல் நத்தைக் கூட்டுக்குள் சுருங்கிவிடுவான்.

“யாரு அவங்க ஈஸ்வர்?”

“நான் பைத்தியம்னு நினைக்க மாட்டிங்களே”

“சொல்லுங்க பாக்கலாம்”

தன் பையிலிருந்த கடிதங்களை எடுத்துத் தந்தான். அதன்பின் மெதுவாக ஆரம்பித்தான் “அன்னைக்கு பார்க்கில் உக்காந்திருந்தேன் அப்ப… ”

காயத்திரி அவனது கதையினைக் கேட்டு முடித்த போது நன்றாக இருட்டிவிட்டது.

“ஈஸ்வர் அந்த பொம்பள மரணம்னு சொன்னிங்களே அவ பதிலுக்கு பதில் என் பாலிஸில இல்லைன்னு சொன்னதா சொன்னிங்களே. ஏன் அப்படி சொன்னான்னு சொல்றிங்களா”

ஈஸ்வரின் கண்கள் கலங்கின “என் மகனோட இறுதி நேரத்தில் நான் சாமியைக் கும்பிடல ஆனால்… ஆனால்… ”

“ஈஸ்வர்…”

“மரணத்துக்கிட்ட கெஞ்சினேன். ப்ளீஸ் அவனுக்கு பதில் என்னை எடுத்துக்கோன்னு கெஞ்சினேன்” கைகளால் தனது முகத்தைப் புதைத்துக் கொண்டான். பார்த்துக் கொண்டிருந்த காயத்திரியின் கண்களிலும் கூட நீர் குளம் நிரம்பியது.

கண்களைத் துடைத்துக் கொண்டவள் “நானும் கூட அப்படித்தான் நினைச்சேன் ஈஸ்வர். ஆனால் சில விஷயங்களை நம்ம மறுக்கவே முடியாதுன்னுற உண்மையை பொய்யாக்கினால் எவ்வளவு நல்லாருக்கும்”

“நான் பைத்தியமா…  எனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கா” அவளை நீதிபதியாக்கிக் கேட்டான்.

“நிச்சயம் இல்லை ஈஸ்வர், உங்க மனசோட ஆதங்கத்துக்கு ஒரு வடிகால் கிடைச்சிருக்கு. அடுத்த தடவை அவங்களைப் பார்க்கும்போது உங்க கோவத்தை வார்த்தைகளால் கொட்டுங்க, மனசிலிருப்பதைக் கேளுங்க” என்று ஊக்குவித்தாள். அவளது ஒவ்வொரு வார்த்தைகளும் ஈஸ்வருக்கு புதிய உத்வேகத்தை அளித்தது.