ஜெயேந்தர் மாராவிடம் ஈஸ்வர் எழுதிய கடிதத்தைப் படிக்கத் தந்தான்.
“மரணமே… நீ யாரும் பதலளிக்க விரும்பாத அழைப்பு. சிலர் உன்னை வரவேற்கலாம். ஆனால் பலருக்கு நீ தருவது மனவலியை மட்டுமே. இப்படி இருக்கும்போது உன்னை பெரிதாகப் பார்த்து எல்லாரும் பயப்படணும்னே இதெல்லாம் செய்றியா… ச்சீ, ச்சீ மனங்களை ஒடித்து அதில் மதிப்பு தேடுவது உனக்குப் பெருமையா. என்னைப் பொறுத்தவரை நீ ஒரு காகிதப் புலி”
கடிதத்தை முழுவதுமாகப் படித்தாள் மாரா. “என்ன இது இப்படி திட்டி திட்டி லெட்டர் எழுதிருக்கான். ”
“இதென்ன உன் நடிப்பைப் புகழ்ந்து வந்த ஃபேன் லெட்டரா… மரணத்துக்கு திட்டித் திட்டித்தான் லெட்டர் வரும்”
“அதுதான் எனக்கு புரியல ஜெய். மரணமில்லாம இருந்தால் அதை விடக் கொடுமையான தண்டனை இல்லையே. ஓய்ந்து போன உடம்புக்குத் தரும் விடுதலைதான் மரணம்னு ஏன் யாரும் புரிஞ்சுக்கிறதில்லை”
அவளுக்கு பதிலளிக்க முடியாது ஜெய்க்கு இருமல் வர, குளியலறைக்கு ஓடினான்.
பக்கத்து அறையில் ரஞ்சனி ஹோரசுக்கு ட்ரைனிங் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
“நான் எப்படி பேசணும்.. கோவமா ஆக்ரோஷமா ஈஸ்வர்கிட்ட சண்டை போடணுமா… உங்க ஆபிஸுல நான் கத்தும்போது அவனும் பதிலுக்குக் கத்தினா பிரச்சினை வராதே”
“நிறுத்து நிறுத்து நீ ஏன் அவன்கிட்ட சண்டை போடணும்”
“என்னை மரக்கட்டை, பாறை மண்ணாத்தைன்னு கன்னா பின்னான்னு லெட்டர்ல எழுதினால் திட்டாம குணம்மா சொல்லுவாங்களா”
“உன்னை எப்பத் திட்டினான்”
“மேடம் நான்தான் டைம்… நேரம்… என்னைத்தானே அவன் லெட்டர்ல திட்டிருக்கான். நான் பதிலுக்கு அவனைத் திட்டினால் தானே சமமாகும்”
“ஹோ இந்த அளவுக்கு பாத்திரமாவே மாறாத. உனக்குக் குடுக்கப் போற அஞ்சு லட்சத்துக்கும் சேர்த்து நடிக்காதே. அளவோட நடி அது போதும். அவன்கிட்ட என்ன பேசணும்னு இந்த பேப்பர்ல எழுதிருக்கேன். படிச்சுப்பாரு… அதை மட்டும் சொன்னாப் போதும்”
டைனிங் ஹாலில் அமர்ந்து ராபர்ட் பிரேமாவுக்கு அவள் பதிலளிக்க வேண்டிய கடிதத்தைத் தந்தான்.
“ராபர்ட், மாராவுக்கும் ஹோவுக்கும் திட்டி திட்டி எழுதிருந்தான் எனக்கு என்ன எழுதிருக்கானோ…” என்றபடி பிரித்தவள் கடிதத்திலிருந்த வார்த்தைகளைக் கண்டு திகைத்தாள்.
“டியர் லவ் குட் பை” அதில் எழுதியிருந்ததை உரக்கப் படித்தாள்.
“ரெண்டே வரிதானா… இதுக்கு நான் என்ன பதில் சொல்றது. எனக்கு டயலாக் கூட கம்மியாத்தான் இருக்கும் போலிருக்கு”
“இது சரிவருமான்னு பாரு… அவனை மீட் பண்ணதும் உன்னோட குட்பையை உன்னால ஒத்துக்க முடியாதுன்னு ஸ்ட்ராங்கா சொல்லு. ‘யார் உன்னை விரும்பணும் யாரை நீ விரும்பணும்னு சொல்லாதே. அன்புதான் உன்னைத் தேர்ந்தெடுக்குமே தவிர உனக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை’ன்னு உணர்த்து.
கடைசியா நீ அவனுக்குள்ளேதான் இருக்க, அவன் பாக்குற ஒவ்வொரு இடத்திலும் இருக்க உன்னை அவ்வளவு சுலபமா அவனால உதறிட முடியாதுன்னு பன்ச் வச்சு முடி
அவன் மட்டும் உன்னை ஏத்துகிட்டா ஒரு புது வாழ்க்கையே கிடைக்க வாய்ப்பிருக்கு”
மாலை இருட்டும் சமயத்தில் பார்க்கில் வெறிச்சிட்ட பார்வையுடன் அமர்ந்திருந்தான் ஈஸ்வர். சுழன்றடிக்கும் காற்று, மிக மெதுவான தூறல் என்று ஆரம்பித்த வானிலைக்கு பயந்து மக்கள் அனைவரும் வேகமாக வீட்டினுள் முடங்கினர்.
கருப்பு மேக்சி காற்றில் அலைய கருப்பு தொப்பியுடன் தன் அருகே அமர்ந்த வயதான பெண்மணியை கண்டுகொள்ளவே இல்லை ஈஸ்வர்.
“கருத்த வானம்… நல்ல குளிர் உனக்குப் பிடிக்குமா” என்றாள் மாரா.
பதிலில்லை அவனிடம்.
“இந்தக் கருப்பு மரணம் என்னும் காகிதப்புலியை மாதிரி இருக்குல்ல ஈஸ்வர்”
திடுக்கிடல் அவனிடம்… மெதுவாக அவளைப் பார்த்தான்.
“நான் தருவது மனவலி, மரணம் பதிலளிக்க விரும்பா அழைப்பு, காகிதப் புலி இதெல்லாம் நீ என்னைப் பத்தி எழுதினது தானே”
“இதெல்லாம் நான் மரணத்துக்கு எழுதின கடிதம். உங்களுக்கு எப்படி”
கையிலிருந்த கடிதத்தை ஸ்டைலாக எடுத்துக் காண்பித்தாள். “நான் தான் அந்த மரணம். நைஸ் டு மீட் யூ ஈஸ்வர்” என்றாள்.
நம்பாமல் அவளிடமிருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
மழை சற்று வேகமாகத் தூற ஆரம்பித்தது. “மக்களில் பலர் காஸ்மோஸ்க்கு தங்களின் ஆதங்கத்தைக் கடிதமாக வடித்து அனுப்புவது உண்டு. அதில் சிலரைத் தவிர வேறு யாருக்கும் பதில் கிடைப்பதில்லை. அந்த சிலரில் நீயும் ஒருவன். ஏனென்றால் நானும் உன்னிடம் சிலவற்றைத் தெரிவிக்க விரும்பினேன்”
“நான் கேட்க விரும்பல” என்றபடி வேகமாக எழுந்து நடக்கத் தொடங்கினான். அவன் வேகத்துக்கு மாரா கிட்டத்தட்ட ஓடினாள்.
“லெட்டரை எழுதி கேள்வி கேட்ட நீ, நான் சொல்லப்போற பதிலையும் கேட்குறதுதான் சரி”
“நீ சொல்றபடிஎல்லாம் நான் ஆட முடியாது” என்று அவரைப் பார்த்துக் கத்தினான் ஈஸ்வர்.
அவர்களை கடந்த ஒரு சிறுவன் தனது தாயிடம் “அம்மா இந்த அங்கிள் யாருகிட்ட பேசிட்டு இருக்கார்” என்று பயத்துடன் கேட்க
“சிலர் அப்படித்தான் தனியா பேசிக்குவாங்க. இந்த மாதிரி யாரையாவது பார்த்தா ஒதுங்கிப் போயிடனும் புரியுதா” என்ற வண்ணம் அந்த அன்னை குழந்தையைத் தர தரவென இழுத்துக் கொண்டு ஓடினார்.
அதற்குப் பின் அவர்களைக் கடந்து சென்று வேறு இரு நபர்களும் கூட அருகிலிருந்த பெண்மணியைக் கண்டு கொள்ளாமல் அவன் மழையில் நனைவதை விநோதமாகப் பார்த்தபடி சென்றனர். அவை அனைத்தையும் கண்ட ஈஸ்வருக்குத் தான் காண்பது உண்மையா இல்லை எல்லாரும் சொல்வது போல தன் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது.
“அவங்களைப் பொருட்படுத்தாதே ஈஸ்வர். அவங்க காலம் முடியும்போதுதான் நான் அவங்க கண்ணுக்குத் தெரிவேன்”
அவளைக் கேள்வியாகப் பார்த்தான்.
“உன் கண்ணில் தெரிவதால உன் முடிவு வந்துட்டதோன்னு நினைக்கிறியா… இப்ப நான் வந்தது நீ எனக்கு எழுதின லெட்டரை உன் கையிலேயே தந்துட்டு நம்ம பிரச்சனையைப் பேசித் தீர்த்துட்டு போகணும்னுதான். நான் உன்னைக் கூட்டிட்டு போகும் நேரம் வரும்போது நம்ம பிரெண்ட்ஸா இருந்தால் என் வேலை சுலபமா இருக்குமே”
அவள் சொல்வதைப் பொருட்படுத்தாமல் சாலையைக் கடந்த ஈஸ்வர் எதிர்புறமிருந்து மாராவை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு இருளில் ஓடி மறைந்தான்.
“என்னால் இந்த சோகத்தைத் தாங்க முடியவில்லை. வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துடலாம்னு ரொம்ப நம்பினேன்” கதறி அழுத தாய்க்கு ஆறுதலாக முதுகைக் கோதி விட்டாள் காயத்திரி அந்த மருத்துவமனையின் தன்னார்வத் தொண்டினை மேற்கொண்டு வருகிறாள். பாரம் சுமப்பவர்களின் சுமையை கரைக்க உதவும் சிறு தொண்டினை செய்து வருவதில் தன்னிறைவு அடையும் ஒரு மங்கை. அவளுக்கு பெரிய படிப்பில்லை. ஆனால் மிகப் பெரிய அன்பு மனமிருந்தது.
அந்த மழை பொழியும் இரவில் சொட்ட சொட்ட நனைந்தபடி அந்த அறையின் வாசலில் நின்ற ஈஸ்வரைக் கண்டவள் “எங்களுடன் இணைய வந்திருக்கிறீர்களா…” என்றாள்.
மையமாய் தலையாட்டினான் ஈஸ்வர்.
“நல்லா நனைஞ்சிருக்கிங்களே… சகாயம் ஒரு துண்டு இருந்தால் எடுத்துட்டு வந்து தா”என்றாள்.
“இல்லை வேணாம்”
“பரவால்ல… வாங்க வந்து உட்காருங்க. என் பெயர் காயத்திரி… உங்க பெயர்”
“ஈஸ்வர்” என்றான்.
“உங்களுக்கு சமீபத்தில் இழப்பு ஏற்பட்டதா”
“ம்…”
“யார்…”
கண்களில் நீர் நிறைய தொண்டை அடைக்க “பை…ய… ன்” அதற்கு மேல் பேச முடியாமல் எழுந்துக் கொண்டான்.
“பரவால்ல ஈஸ்வர் நீங்க எதுவும் சொல்ல வேண்டாம். கொஞ்ச நேரம் இங்க உக்காந்திருங்க அதுவே போதும்” என்றாள்.
அன்று பலரின் கண்ணீரைப் பார்த்த பின் ஈஸ்வரின் மனம் இன்னும் குழப்பத்தில் ஆழ்ந்தது.
அனைவரும் எழுந்து சென்ற பின்னரும் அங்கேயே அவன் அமர்ந்திருப்பதைக் கண்டு காயத்திரி அவனருகே வந்தாள்.
“நல்ல முன்னேற்றம் உங்களிடம்”
“என்ன”
“ஜன்னல் கிட்டயும் கதவு கிட்டயும் நீங்க நிற்கிறதைப் பலநாள் பார்த்திருக்கேன். இன்னைக்குத் துணிஞ்சு உள்ள வந்துட்டிங்க”
அவன் பதில் சொல்லவில்லை.
“என் பெயர் காயத்திரி. என் மகன் அஹானுக்கு மூணு வயசாயிருக்கும்போது ஒரு விபத்தில் பிரிந்தேன். உங்க மகன் பெயரென்ன ஈஸ்வர்”
அவள் சொல்லச் சொல்ல எதைக் கண்டானோ அவனது முகம் வெளிறியது “நோ… நோ… ” என்று வெறி பிடித்தார்போல கத்திவிட்டு அந்த இடத்தை விட்டு தலை தெறிக்க ஓடினான். அவன் சென்ற திசையை அதிர்ச்சியுடன் பார்த்தவாறு நின்றாள் காயத்திரி.