அந்த பார்க்கில் ஈஸ்வர் வேகமாய் ஓடி மூச்சிரைக்க இரைக்க பாலைப் போட, தனது சின்னஞ்சிறு கைகளால் கிரிக்கெட் பேட்டைப் பிடித்திருந்த அந்த சின்னஞ்சிறுவன் தனது பேட்டினால் ரப்பர் பந்தினை அடிக்க அது பறந்து சென்று வெகு தூரத்தில் விழுந்தது.
“அப்பா சிக்ஸர் சிக்ஸர்” என்று அவன் கத்திக் குதிக்க அவனுடன் சேர்ந்து ஈஸ்வரும் குதித்தான்.
என்றோ நடந்த நிகழ்ச்சி கனவில் வர படுக்கையில் மூச்சு விடமுடியாமல் அலைப்புற்ற ஈஸ்வர் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான். சுற்றிலும் இருட்டு இருட்டு இருட்டு மையின் நிறத்தைத் தவிர எதுவும் பார்க்க முடியவில்லை. அந்தக் கனவின் தாக்கத்தலிருந்து மீள முடியாமல் எழுந்துவிட்டான். ஏதோ எண்ணியவாறு மேஜையில் அமர்ந்த அவன் தனது லெட்டர் பேடை எடுத்து பேனாவால் எழுதத் துவங்கினான். கட கடவெனக் கடிதங்களை எழுதி கவரில் போட்டு ஒட்டியபின் அதே மேஜையில் சாய்ந்து படுத்துக் கொண்டான்.
காலையில் எழுந்ததும் முதல் வேலையாக அவற்றினைப் போஸ்ட் செய்தான்.
ரஞ்சனி, ராபர்ட் மற்றும் ஜெயேந்தர் மூவரும் அந்த துப்பறிவாளன் கணியன் சொல்வதை ஆழ்ந்து கவனித்தனர்.
“உங்க பிரெண்ட் வீட்டில் அவருக்குத் தெரியாம கேமிரா வச்சு அவரை ஃபாலோ பண்ணி திரட்டிய தகவல்கள் இது. அவர் இன்னும் தனது துக்கத்திலிருந்து மீளல.
ஒரு நாளைக்கு ஒரு ரெண்டு மணி நேரம் தூங்கினாருன்னா அதிகம். அப்பக்கூட ரொம்ப டிஸ்டர்ப்டு ஸ்லீப்தான். பாதில எழுந்து அப்படியே மணிகணக்கா உக்காந்திருக்கார். பல நாட்கள் ஒரு வார்த்தை கூட யார்கிட்டயும் பேசுறதில்லை. மனம் விட்டுப் பேசினாலே துன்பம் பாதியா குறையும். அவர் அந்த ஸ்டேஜுக்கு வரவே இல்லை”
“சுத்தமா உணர்வே இல்லையா கணியன்”
“முழுசும் அப்படி சொல்ல முடியாது. ஒண்ணு ரெண்டு தடவை இவரை மாதிரி ஆட்களுக்கு கவுன்ஸிலிங் தரும் இடத்துக்குப் போனார். அங்க போயும் உள்ள போக அவருக்கு தைரியம் இல்லை. கதவு கிட்ட நின்னு அங்க இருக்கும் மற்றவங்க பேசுறதைக் கொஞ்ச நேரம் கேட்கிறார். ஆனால் கொஞ்சம் நேரம்தான். அதுக்கப்பறம் அங்க நிக்க முடியாம வந்துடுறார்”
“அவனால உண்மையை நம்ப முடியல அதுதான் பிரச்சனையே”
“ரொம்ப முக்கியமான விஷயம், உங்களுக்கு உபயோகமானதும் கூட. சில ராத்திரிகளில் எந்திருச்சு உக்காந்து கடிதம் எழுத ஆரம்பிச்சுடுறார். காலைல மறக்காம அதை போஸ்ட்டும் பண்ணிடுறார்”
“லெட்டரா… யாருக்கு எழுதிருக்கான்” மூவரும் கோரசாகக் கேட்டனர்.
“யாருக்குன்னு கேட்கக் கூடாது எதுக்குன்னு கேட்கணும்?”
புரியாமல் “எதுக்கு” என்றனர்
“டைம், லவ் அண்ட் டெத்”
தாடையைத் தடவியவாறு சொன்னான் ஜெய் “அவன் இந்த மூணு விஷயங்கள்தான் மனித வாழ்க்கையைக் கட்டமைக்குதுன்னு சொல்லுவான்”
கணியன் கடிந்தங்களை நீட்டினார் “அப்படியா… அந்தக் கடிதங்கள் இங்க இருக்கு படிச்சுப் பாருங்க…
முதலாவது டைம்க்கு எழுதின கடிதம்
காலம் காயத்தை ஆற்றும்னு சொல்வாங்க. ஆனால் அவங்க எப்படி நீ எல்லாத்தையும் அழிப்பாய்னு ஏன் பேசுறதில்லை. எத்தனை சாம்ராஜ்யங்களை சுக்குநூறாக்கியிருக்க. எப்படி நீ அழகை சாம்பலாக்குவாய்னு யாரும் சொல்றதேயில்லையே. என்னைப் பொறுத்தவரை நீ ஒரு ப்ரோயஜனமில்லாத கற்பாறை. நீ இருக்கியா இல்லையான்னே தெரியல”
“இதென்னடா கிறுக்குத்தனமா ஒரு லெட்டர்” என்றான் ஜெய்.
“கிறிஸ்துமஸ்க்கு சாந்தாகிளாஸ்க்கு நாங்க லெட்டர் எழுதுவோம். அது மாதிரி இருக்கு” என்றான் ராபர்ட்.
“இது ஈஸ்வரோட குமுறல். காலம் பாட்டுக்கு ஓடுது இருந்தும் அவனோட மனக்காயம் கொஞ்சம் கூடக் குறையலன்னு சொல்றான். எனக்கு வருத்தமா இருக்கு. நம்ம அவனோட சோகத்தை குறைக்க முடிஞ்சா எவ்வளவு நல்லாருக்கும்” என்றாள் ரஞ்சனி.
இவர்கள் பேசிக் கொண்டிருந்த அதே ஈஸ்வர் கவுன்செல்லிங் ரூமில் மற்ற சிலர் தங்களது துன்பத்தை பகிர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தவண்ணம் நின்றிருந்தான். ஒவ்வொருவரும் இழப்பினைப் பற்றிப் பேசப் பேச அவனது உடல் நடுங்க ஆரம்பித்தது.
அவனது பாலன்ஸ் இழந்து பக்கத்திலருந்த நாற்காலியில் அமர நினைத்து அதனைத் தவறி கீழே தள்ளிவிட்டான். அங்கிருந்தவர்கள் அனைவரும் ஓசை கேட்டுத் திரும்பிப் பார்த்தனர். கவுன்சிலிங் தந்துக் கொண்டிருந்த யுவதியும் அவனைப் பார்த்துவிட்டு
“எங்களோடு இணைந்து கொள்கிறீர்களா சார். துன்பம் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும்பொழுது பாதியாகக் குறையும்” என்றாள்.
பிடிவாதமாகத் தலையாட்டி மறுத்தவன் வேகமாக அந்த இடத்தை விட்டு ஓட்டமும் நடையுமாக வெளியேறினான்.
***
‘க்ளிக்’ கதவு திறந்த அடையாளமாக எழுந்த சத்தம். உள்ளே நுழைந்த ராபர்ட் கதவருகே நிற்கும் தன் அன்னையை முன்பே எதிர்பார்த்தவன் போல மெதுவாகத் திறந்தான். அவனைப் பார்த்ததும் முறைத்தாள் அவனது அன்னை கிரேஸ்.
“இந்த சத்தம் எப்படி நீ திறக்கும் போது மட்டும் வருது. நானும் இடைவிடாம ஜெபிச்சுப் பார்க்குறேன் சாத்தான் இந்தக் கதவைத் திறக்க மாட்டிங்கிறான்”
“அப்படியா… ஒருவேளை ஏசப்பா நீ வீட்டுக்குள்ளயே இருந்தால்தான் ‘சேஃப்’னு நினைகிறாரோ” காலணியை கழற்றியவாறு சொன்னான்.
கிரேஸின் முகத்தில் சிந்தனை ரேகை “அப்படித்தான் இருக்கும். ஏசப்பா எனக்கு நல்லதுதான் செய்வார்”
“சாப்பிட்டியா…”
மிகவும் யோசித்தார் அன்னை.
“நமக்கு சாப்பிட சிக்கன் பிரியாணி வாங்கிட்டு வந்திருக்கேன். ரெண்டு பேருக்கும் தட்டை எடுத்து வை”
காலையில் அன்னைக்கு வாங்கி வைத்து விட்டு சென்ற உணவு அப்படியே இருப்பது கண்டு பிரித்துப் பார்த்தான். ஊசிப் போன சாம்பார் வாடையை சகிக்க முடியாது குப்பையில் கொட்டினான்.
கிரேசுக்கு மனப்பிறழ்வு வந்ததிலிருந்து இப்படித்தான் திருப்பித் திருப்பி பாத்ரூம் போவதும். திடீரென்று ஒரு நாள் முழுக்க செய்த பதார்த்தங்களையே செய்து அடுக்குவதும் தொடர… மனைவியும் மகளும் பிரித்த கவலையில் தாடி வளர்த்துத் திரிந்த ராபர்ட்டும், மகனுடன் தனி உலகத்தில் வாழ்ந்த ஈஸ்வரும் அலறி அடித்துக் கொண்டு அவரை மருத்துவமனையில் சேர்த்தார்கள்.
“அம்மாவுக்கு இந்த நோயை குணப்படுத்த முடியுமான்னு தெரியல. ஆனால் முடிஞ்ச அளவுக்கு சப்போர்ட் பண்ண வேண்டியது நம்ம கடமை” என்று சொன்னது மட்டுமல்லாமல் கூடவே நின்றவன் ஈஸ்வர். அவனது பெற்றோரின் இழப்புக்குப் பின் க்ரேசிடம் கூடுதல் நெருக்கம் அவனுக்கு.
“நம்ம லைப் மட்டும் ஏன் இப்படி இருக்கு ஈஸ்வர். தொழிலில் சாதிக்க முடிஞ்ச நமக்கு குடும்பத்தில் ஏன் இத்தனை அடிகள். நம்ம யாருமே ஒரு நூறு சதவிகிதம் நிறைவான வாழ்க்கை வாழலையே” பெருமூச்செறிந்தான்.
“நூறு சதவிகிதம் நிறைவான வாழ்க்கை என்பது ஒரு கனவுதான். அந்தக் கனவை அடையத்தான் ஒவ்வொருத்தரும் போராடுறோம். மனசைத் தளரவிடாம மேற்கொண்டு என்ன செய்யலாம்னு பாரு”
இப்படி தனக்கு தைரியம் சொன்ன தோழன் இன்று தனியாக நிற்கிறான். அவனுக்கு உதவ முடியாமல் இருப்பது குற்ற உணர்ச்சியைத் தோற்றுவித்தது.
‘ஜாய்ஸ் என்னுடன் இருந்திருந்தா இந்த சூழ்நிலையை எப்படி சமாளிச்சிருப்பேன்…’ என்று யோசிக்க ஆரம்பித்தான். என்ன செய்வது ஒரு வார தாய்லாந்து அனுபவத்திற்கு அவன் தந்த விலை அவனது இல்வாழ்க்கை. இந்தத் துன்பத்தை அவன் தனியாகத்தான் அனுபவிக்க வேண்டும்.
“ராத்திரி எல்லாம் ஓநாய் மனுஷங்க நம்ம வீட்டு முன்னாடி கூட்டம் போட்டு பேசுறாங்க… அதை நம்ம கவனிச்சே ஆகணும். பாதரக் கூப்பிட்டு பிரேயருக்கு ஏற்பாடு பண்ணு”
ராபர்ட் நெற்றியை சுருக்கிக் கொண்டு கேட்டான் “நீ பார்த்தியாம்மா… ”
“ஆமாம் மனுஷக் காலு, ஓநாய் மூஞ்சி, கண்ணு ரெண்டும் தீப்பந்தமாட்டம் எரியுது. நீயெல்லாம் பார்த்தா பயந்துக்குவ”
“ஏன் என் கண்ணில் படல” யோசித்தவண்ணம் கேட்டான்.
மகனின் அருகில் வந்து ரகசியமாய் சொன்னார் “அதுக்குத்தான் உன் கழுத்தில் ஜெபமாலை போட்டிருக்கோம். அதைத் தொலைச்சுடாம பத்திரமா பாத்துக்கோ”
கிரேஸ் கண் சிமிட்டிப் பேசும்போது தனது அன்னையும் பெண்ணும் வேறு வேறல்ல என்று தோன்றியது அவனுக்கு.
தனது ஜெபமாலையை வெளியே எடுத்துப் பார்த்தவனைக் கடிந்து கொண்டு சட்டைக்குள் தள்ளி மறைத்தார் அன்னை.
“வேர்வுல்ப் இருகுறதாலதான் ஏசப்பா உன்னைக் கதவைத் திறக்க விடல. வீட்டில் ஜாக்கிரதையா இருந்துக்கோம்மா” என்றான் அவரைப் போலவே சுற்றும் முற்றும் பார்த்தபடி எச்சரிக்கைக் குரலில்.