யானையின் எடை
சிவா மடத்தில் அமைதியாக வேலை செய்து கொண்டிருந்தான். சின்ன வயதிலிருந்து கிறுக்குசாமிக்கு அவனைத் தெரியும். அங்கிருக்கும் பெரிய குடும்பத்தை சேர்ந்தவன். மதுரையில் கட்டிடத் துறையில் ஆர்க்கிடெக்ட் படித்துவிட்டு இப்போது பெங்களூரில் இரண்டு வருடங்களாக வேலை செய்து வருகிறான்.
சிவாவினது பெரிய கூட்டுக் குடும்பம். தாத்தா பாட்டி மூன்று மகன்கள் அவர்கள் பிள்ளைகள் என்று இன்றும் கூட டிவி சீரியலில் காட்டும் நல்ல குடும்பம் கவனிக்கவும் வில்ல குடும்பம் இல்லை.
எல்லாமே 100 சதவிகிதம் நன்றாக இருக்க முடியுமா? முடியாதே… ஒரே ஒரு சின்ன குறை சிவாவுக்கு. வீட்டில் சாம்பார் வைப்பதென்றால் கூட கத்தரிக்காய் சாம்பாரா இல்லை வெண்டைக்காய் சாம்பாரா என்று அவனது பெரியப்பாதான் முடிவெடுப்பார். அது மட்டுமல்ல வீட்டில் குழந்தைகளுக்கு துணி வாங்குவது, வெளியூர் படிக்கலாமா வேண்டாமா இதெல்லாம் பெரியவர்கள்தான்.
“என்ன சிவா, இன்னைக்கு என்ன சொன்னாங்க உங்க வீட்டில். உனக்கு பிடிக்காத பாவக்காய் புளிக்குழம்பைத்தான் மத்யானம் சாப்பிடணும்னு சொல்லிட்டாங்களா? கவலைப்படாதே ராத்திரிக்கு சத்சங்கம் முடிஞ்சதும் சக்கரைப்பொங்கல் பிரசாதம் உனக்காக எக்ஸ்ட்ரா எடுத்து வைக்கிறேன்”
“அட போங்க தாத்தா… அது காரணம் இல்லை”
“வேறென்ன காரணம் சொல்லு?”
“எங்க வீடு பழசாயிருச்சு, இடிச்சுட்டு கட்டணும்னு சொல்லி, இன்னைக்கு பூஜை முடிச்சு முருகன் கிட்ட ஆசீர்வாதம் வாங்கிட்டு நாளைக்கு பிளானை போட ஆரம்பிக்கலாம்னு சொன்னாங்க தாத்தா”
“சரி, நல்ல விஷயம்தானே…”
“நல்ல விஷயம்தான். ஆனால் அதில் நான் ஒரு திருத்தம் சொன்னேன். எங்க வீட்டு வாசலை பாத்திருக்கிங்கல்ல”
நெற்றியை சுருக்கி யோசித்தார். “ஆமாம் தெரு பக்கம் இல்லாம ஒரு சின்ன சந்து வழில போயி உள்ள நுழையனும் தானே”
“அதே தான் தாத்தா. கிழக்கு பக்கம் வாசல் வேணுனு அந்த காலத்தில் கட்டினது. இப்ப நான் ஒரு பிளான் போட்டு முன்னாடி வாசல் வைக்கலாம்னு சொல்றேன் தாத்தா. வாஸ்து படி சரிவராதுன்னு பேசவே விடாம நிராகரிச்சுட்டாங்க”
“இவ்வளவு நாளா அப்படித்தானே இருந்தது. இப்ப எதனால மாத்தணும்னு சொல்ற?”
“ரெண்டு வருஷம் முன்னாடி பெரியப்பா கீழ விழுந்து இடுப்பை உடைச்சுக்கிட்டார். அவரை அந்த சின்ன நடைபாதைல தூக்கிட்டு வந்து வண்டில ஏத்துறதுக்குள்ள நாங்க பட்ட பாடு. அதுவே முன்னாடியே வாசல் இருந்தா பல வேலைகள் சுலபமா இருந்திருக்கும்
இத்தனைக்கும் சவுத் பேசிங் மோசமில்லை தாத்தா. சைட்ல வாசல் இருக்கு, பக்கத்தில் நெருக்கமா வீடு இருக்குறதால இப்பல்லாம் காத்து சரியா வர்றதில்லை.என் பிளான் படி தெருவை பார்த்த மாதிரியே வாசல் வச்சு. இந்த இடத்தில் பெரிய ஜன்னல் வச்சா காற்றும் வெளிச்சமும் நல்லா வரும்”
“நியாயம்தான். ஊருக்கே பிளான் போட்டு தர்ற உனக்கு இதெல்லாம் தெரியாமலா இருக்கும்?”
“அதேதான் தாத்தா நானும் சொல்றேன். காது கொடுத்தே கேக்க மாட்டிங்கிறாங்க. வீட்டில் அஞ்சாறு வயசானவங்க இருக்காங்க. எங்க கேசில் வாஸ்துவை விட உடல் நலம் ரொம்ப முக்கியமில்லையா?”
“சில நம்பிக்கைகளை மாத்தறது அவ்வளவு சுலபமில்லை சிவா. உங்க பெரியப்பா ஊருக்கே பெரிய மனுஷன். அவருக்கு யார் எடுத்து சொல்றது”
சிவாவின் முகமே வாடி விட்டது. யோசித்துக் கொண்டே முருகனின் விபூதி பேழையைத் துடைத்துக் கொண்டிருந்தார் கிறுக்குசாமி.
சீன நாட்டின் தெற்குப் பகுதியில், பனிக்காலம் முடிந்து வசந்தம் வந்திருந்தது. அரண்மனையின் தோட்டங்களில் அல்லி மலர்கள் மலர்ந்திருந்தது. அந்த நாளில், அரசர் லீ சான் இந்தியாவிலிருந்து ஒரு விருந்தினரை வரவேற்கச் சென்றார். விருந்தினர், ஒரு வியத்தகு பரிசை கொண்டு வந்திருந்தார். ஒரு பெரிய, அழகான யானை!
உருவம் பெரிதாக, மாறாக கண்கள் மென்மையாக இருந்த அதன் நடையைப் பார்த்து மக்கள் வியந்தார்கள். அரசர் அதை பார்த்ததும், “இது எவ்வளவு எடை இருக்கும்?” என்று கேட்டார்.
மந்திரிகள் குழப்பத்தில். எவ்வளவு எடை என்று எப்படி சொல்ல முடியும். இத்தனை பெரிய மிருகத்தை இதற்கு முன் அவர்கள் பார்த்ததில்லையே. முதலாவது மந்திரி, பண்டிதன் வூ சிங், முன்வந்தார்.
“அரசே, தராசு கொண்டு எடையை காணலாம்.”
அரசர் சிரித்தார் “யானையை தராசில் வைக்க முடியுமா?”
இரண்டாவது மந்திரி, கணிதவியலாளர் ஹான் லீ முன்வந்தார்
“அதன் உயரம், அகலம், நீளம் இந்த அளவுகளைக் கொண்டு கணக்கிடலாம்.”
அரசர் உடனே மறுத்தார் “அளவுகள் எடையை சொல்லாது. யானை ஒரு உயிரினம்.”
மூன்றாவது மந்திரி, ராணுவத் தலைவர் ஷெங். அவரது யோசனைகள் எல்லாமே கரடு முரடானதாகவே இருக்கும்.
“அதை வெட்டி, பாகங்களாக எடுத்து, எடையை காணலாம்.”
அரசர் கோபமாக “அது ஒரு பரிசு! உயிருள்ள யானை! அதை வெட்ட முடியாது!”
அரண்மனை அமைதியாகிவிட்டது. அந்த நேரத்தில், ஒரு மென்மையான குரல் கேட்டது
“அப்பா, நான் சொல்லட்டுமா?”
அரசரின் 12 வயது மகன், லீ யான், நூலகத்தில் இருந்து வந்தான். அவன் கையில் ஒரு பழைய புத்தகம்.
அரசர் சிரித்தார் “நீ இன்னும் குழந்தை. இது பெரியவர்களின் விஷயம்.”
லீ யான் பிடிவாதமாக “நான் குழந்தைதான். ஆனால் யோசிக்க தெரிந்தால் வயது தடையில்லை.”
“சரி, சொல்லு. யானையின் எடையை எப்படிக் காணலாம்?”
“யானையை ஒரு பெரிய படகில் ஏற்றி, நீரில் விடுங்கள். படகின் இரு புறமும் ஒரு கோடு வரையுங்கள். தண்ணீரில் யானை ஏறியவுடன் எவ்வளவு தூரம் நீர் எட்டியிருக்கிறது என்று பாருங்கள்.
பிறகு யானையை இறக்கி, படகில் கற்கள் அல்லது எடைகள் வைத்து, அதே நீர்மட்டத்தை அடையுங்கள்.
பின்னர் அந்த கற்களை சேர்த்து எடை போட்டு யானையின் எடையை காணலாம்!”
அரசர் நிமிர்ந்து பார்த்தார். மந்திரிகள் ஒருவருக்கொருவர் பார்த்தார்கள்.
பண்டிதன் வூ சிங் மகிழ்ச்சியில் கூக்குரலிட்டான் “அரசே, இது சரியான தீர்வு!”
அரசரும் ஒத்துக்கொண்டார்“செய்து பார்ப்போம்.”
அரண்மனை அருகே ஒரு பெரிய ஏரி. அங்கே ஒரு பெரிய மரப்படகு தயாரிக்கப்பட்டது. யானை மெதுவாக படகில் ஏற்றப்பட்டது. அரண்மனை மக்கள், குழந்தைகள், பெண்கள் அனைவரும் அந்தக் காட்சியை பார்த்தார்கள்.
லீ யான், ஒரு நீல நிறக் கம்பியால், நீர்மட்டத்தில் கோடு வரைந்தான். பிறகு, யானையை படகிலிருந்து இறக்கி, படகில் கற்கள், உலோகங்கள், மரக்கட்டிகள் அனைத்தும் சேர்க்கப்பட்டன. அந்த நீர்மட்டம் மீண்டும் வந்ததும், லீ யான் சொன்னான்.
“இப்போது, எடைகளை கணக்கிடலாம்.”
மந்திரிகள் கணக்கிட்டார்கள். யானையின் எடை ௨௫௦௦ கிலோகிராம்கள்
அரசர் மகிழ்ச்சியுடன் “லீ யான், ஒரு சிறந்த அறிவாளி. உன்னை சிறுவன் என்று நினைத்து உனது யோசனையை புறம் தள்ளி இருந்தால் இழப்பு எனக்குத்தான்”
அரண்மனை மக்களும் மகிழ்ந்தார்கள். யானை, அதன் பெரிய காதுகளை அசைத்து, நீரில் குளித்தது.
அந்த நாளிலிருந்து, அரசர் லீ சான் ஒரு புதிய விதி கொண்டுவந்தார்
“அறிவும் யோசனையும் வயதைக் கடந்து பேசும். யாரும் சிறியவர் அல்ல. யாரும் பெரியவர் அல்ல. யோசிக்கத் தெரிந்தால், தீர்வுகள் பிறக்கின்றன.”
கதையை அன்று சொல்லி முடித்தார் கிறுக்குசாமி. அவரது கண்கள் முன் வரிசையில் இருந்த சிவாவின் குடும்பத்தை அப்படியே ஒரு பார்வை பார்த்துவிட்டு மற்றவர்களை பார்த்தது பெரியப்பாவின் கண்களுக்குத் தப்பவில்லை.
பிரசாதம் அனைவருக்கும் தந்தபோது
“வாங்கய்யா எப்படி இருக்கீங்க?” என்று நலம் விசாரித்தார் கிறுக்குசாமி
“நல்லா இருக்கோம் சாமி. முருகன் கிட்ட உத்தரவு வாங்கிட்டு நாளைக்கு வீட்டை புனரமைக்கும் வேலையை செய்யலாம்னு பாக்குறோம். சிவா கூட புதுசா வாசலை மாத்தி வைக்கலாம்னு சொல்லிருக்கான். அதையும் பரிசீலனை பண்ணிட்டு ஒத்து வந்தால் அதுபடியே கட்டிடலாம். ” பேசிய பெரியப்பாவை திகைப்புடன் பார்த்தான் சிவா.
“நல்லது… சிவாவும் இந்தத் துறையில்தானே வேலை பாக்குறான். அவனோட ஆலோசனையை கேட்கிறது தானே நியாயம். கவலைப்படாதிங்க முருகன் கூடவே துணையிருப்பான்” என்று அனுப்பி வைத்த கிறுக்குசாமி மிக நிறைவாக உணர்ந்தார்.
