Tamil Madhura

ஆழக்கடலில் தேடிய முத்து – 2

அத்தியாயம் 2:

 

ரங்கன் வழக்கம்போல் வியாபாரத்திற்காக பழம்பொருட்கள் ஏலம் எடுக்க தயாராகிக் கொண்டிருந்தார். போர்துக்கீஸ், டச்சு, சேர, ஏன்  சோழ பாண்டிய மன்னர்களின் காலத்து நாணயங்கள், சிலைகள், பொம்மைகள், உலோகத்தில் செய்யப்பட்ட பாத்திரங்கள், ஆங்கிலேயர் காலத்து பியானோ என்று பல பொருட்கள் அரசாங்கத்தின் சார்பிலும், தனியார் நிறுவனங்களும் நடத்தும். அங்கு சென்று கடைக்குத் தேவையானவற்றை அள்ளி வருவார். வீடுகளையும் கட்டுமானங்களையும் புதுப்பிக்கும்போது கிடைக்கும் மர வேலைப்படுகளை எல்லாம் சற்று பாலிஷ் போட்டு வாங்கி வந்த விலையை விட பத்து மடங்கு அதிகமாக விற்கலாம். 

 

இது போன்ற ஏலத்தில் கலந்து கொள்வது  அவருக்குப் பல வருடங்களாகப் பழக்கமான ஒன்று. உறுப்பினர் சந்தா கூட கட்டி வருகிறார். சும்மா சொல்லக் கூடாது ஒவ்வொரு முறையும்  ஏதாவது ஓர் அரிய பொருள் கிடைப்பதுண்டு. 

 

இன்று  ஏலம் கொச்சிக்கு அருகில் இருந்த ஒரு பழைய பண்ணை வீட்டில் நடைபெறுவதாக இருந்தது. அதனால் கடைக்கு வந்த சூட்டுடன்  காலையிலேயே கிளம்பத் தயாரானார் ரங்கன். 

 

கீழே கடையில் வேலை செய்பவர்களை வியாபாரத்தை கவனிக்க சொல்லிவிட்டு, மாடிக்கு அழைத்தார். அங்கே மைசூர் அரண்மனையில் இருப்பதை போன்று நாற்காலிகளையும் சோபாவினையும் வரவேற்பறையில் போட்டிருந்தனர். அதனைத்தாண்டித்தான் ரங்கன் தனக்கான பெர்சனல் அறையை வடிவமைத்திருந்தார். 

 

அறைக்குள் பவனிடம் அன்று முடிக்க வேண்டிய வேலைகளை பட்டியலிட்டார். மாடியில் இருக்கும் எக்ஸ்க்ளூசிவ் பொருட்களை எடுத்து பூட்டிவிட்டு, வேட்டி சட்டையைச் சரிசெய்து, பணப்பையை எடுத்து வைத்துக்கொண்டு கிளம்பும்போது மாடிக்கு யாரோ ஒரு வாடிக்கையாளர் வந்திருப்பதாக இன்டெர்காமில் தகவல் சொன்னார்கள். .

 

வெளியே சென்று பார்த்தால் ஒரு வெளிநாட்டவர் நின்று கொண்டிருந்தார். பார்த்தாலே வசதியானவர் என்று தெரிந்தது. நல்ல உயரமாக, நீல நிற கண்கள், நேர்த்தியான உடை அணிந்திருந்தார்.

 

“குட் மார்னிங், ஐ அம் லாரன்ஸ். ஐ ஹேவ் ஆன் அப்பாயின்மெண்ட் வித் மிஸ்டர். ரங்கன்” என்றார் அவர் ஆங்கிலத்தில்.

 

அப்பாவிடம் அப்பாயிண்ட்மென்ட்டா? அதெல்லாம் ரங்கன் நினைவில் இருக்குமா? இருந்தாலும் பண்பாடு மறவாதவன் என்பதால் 

 

“குட் மார்னிங் சார், உள்ளே வாருங்கள் ப்ளீஸ்” பவன் அவரை வரவேற்று உள்ளே அழைத்தான். “அப்பா, லாரன்ஸ் சார் வந்திருக்காங்க.”

 

ரங்கன் வரவேற்பறைக்கு வந்தார். லாரன்ஸைப் பார்த்ததும் புன்னகைத்தார். “மிஸ்டர். லாரன்ஸ், ட்ரெஷர் ட்ரவ் ஆஃப் ட்ரெடிஷன்ஸுக்கு வரவேற்கிறோம். ப்ளீஸ் அமருங்கள்” என்று சொல்லி சோபாவைக் காட்டினார்.

 

லாரன்ஸ் அமர்ந்தார். “தேங்க் யூ மிஸ்டர். ரங்கன். நான் இந்திய கலைப்பொருட்கள் சேகரிப்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். என் நண்பர் ஒருவர் உங்கள் கடையைப் பற்றிச் சொன்னார். எனக்கு கொச்சியில் ஒரு நாள் தங்க வேண்டி இருக்கிறது இருக்கிறது. அதனால் உங்கள் கடைக்கு வரலாம் என்று நினைத்தேன். அதுதான் கைடு கிட்ட சொல்லி உங்களது அப்பாயிண்ட்மெண்டை உறுதிப் படுத்த சொன்னேன்” என்றார் லாரன்ஸ்.

 

கைடு இங்கே விளையாடிவிட்டான். நம்ம ஊர் ஆள் செய்த தப்பிற்காக வெளிநாட்டு மனிதர் ஒருவரை மறுநாள் வர சொல்வதா? மனதில் நினைத்தாலும் 

 

“அது எங்களுக்குக் கிடைத்த பெருமை மிஸ்டர். லாரன்ஸ். நிச்சயமாக உங்களுக்குப் பிடித்தமான சேகரிப்புகள் எங்களிடம் உள்ளன. பவன், சாருக்கு காபி கொண்டு வரச் சொல்” என்றார் ரங்கன்.

 

பவனுக்கு  இந்த மாதிரி முக்கியமான வாடிக்கையாளர்களை எப்படி கையாள்வது என்று அவ்வளவாக அனுபவம் இல்லை. முன்பு ஒருமுறை இதே மாதிரி ஒரு வெளிநாட்டு வாடிக்கையாளர் வந்தபோது, பொருட்களைப் பற்றிச் சரியாக விளக்கத் தெரியாமலும், சரியான விலை சொல்லத் தெரியாமலும் சொதப்பி விட்டான். 

 

அதனை அறிந்து ரங்கன்  மிகவும் கோபப்பட்டார். “உனக்கு இன்னும் அனுபவம் பத்தவில்லை. இந்த மாதிரி வாடிக்கையாளர்களை நான் பார்த்துக்கிறேன்” என்று கண்டிப்புடன் சொன்னார். அந்த சம்பவம் பவனுக்கு நினைவுக்கு வந்தது.

 

காபி வந்ததும் லாரன்ஸிடம் கொடுத்தான் பவன். லாரன்ஸ் காபி குடித்துவிட்டு ரங்கனிடம் பேச ஆரம்பித்தார். அரிய வகை வெண்கல சிலைகள், மர வேலைப்பாடுகள், பழமையான ஓவியங்கள் எனப் பல பொருட்கள் பற்றி விசாரித்தார். ரங்கன் பொறுமையாக எல்லாக் கேள்விக்கும் பதில் சொன்னார். தன் கடையில் இருக்கிற சிறப்பு சேகரிப்புகள் பற்றி விவரித்தார். லாரன்ஸ் மிகவும் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். வியாபாரம் சூடு பிடிக்கும் போல இருந்தது.

 

அப்போது ரங்கனுக்கு ஏலம் நடக்கும் பண்ணை வீட்டிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. விற்பனை இன்னும் ஒரு மணி நேரத்தில் தொடங்கப் போவதாகவும், சீக்கிரம் வர முடியுமா என்றும் கேட்டார்கள். ரங்கனுக்குக் கொஞ்சம் தயக்கம். இப்போது லாரன்ஸ் வந்திருக்கிறார். அவரை விட்டுவிட்டுப் போவது சரியாக இருக்காது. அதே சமயம் ஏலத்தையும் தவறவிட முடியாது. வழக்கமாக போவது ரங்கன் தான். இன்று பவனை அனுப்பலாமா என்று யோசித்தார். இதுவரைக்கும் பவன் பார்வையாளனாக சென்றிருக்கிறானே தவிர வாடிக்கையாளராக போனதில்லை. அவனுக்குப் பழம்பொருட்களின் மதிப்பு தெரியுமா, சரியாகப் பேரம் பேசுவானா என்று கொஞ்சம் கவலை. ஆனாலும் வேறு வழி இல்லை.

 

“மிஸ்டர். லாரன்ஸ், இன்று ஒரு முக்கியமான ஆக்க்ஷன் இருக்கிறது. என் பையன் பவன் ஏலம் எடுக்கப் போகிறான். நான் இங்கிருந்து கிளம்ப முடியாது போல் இருக்கிறது. நீங்கள் கொஞ்சம் காத்திருப்பீர்களா? அவனிடம் சில தகவல்களை சொல்லிட்டு வருகிறேன்” என்றார் ரங்கன்.

 

லாரன்ஸ் சிரித்தார். “பிரச்சனை இல்லை மிஸ்டர். ரங்கன்” என்றார்.

 

பவனுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. ஏலத்திற்கா? தன்னையா போகச் சொல்கிறார்? அவனுக்கு பொருட்களின் விலையைக் கணிப்பதில்  சுத்தமாக அனுபவம் இல்லை.

 “அப்பா, எனக்கு ஏலம் எடுக்கத் தெரியாதே. நான் எப்படிப் போறது?” தயக்கமாகக் கேட்டான்.

 

“ஒன்றும் பிரச்சனை இல்லை பவன். நான் உனக்கு எல்லாம் சொல்லித்தரேன். நீ தைரியமாப் போயிட்டு வா. இது ஒரு நல்ல வாய்ப்பு. வியாபாரத்தில் இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கணும்” ரங்கன் நம்பிக்கையுடன் சொன்னார்.

 

பின்னர் பவனுக்குச் சில முக்கியமான வியாபாரக் குறிப்புகள் சொன்னார். “இந்த ஆக்க்ஷன்  எடுப்பது ரொம்ப முக்கியம் பவன். நம்ம கடைக்கு புதுசா பொருட்கள் வந்துகிட்டே இருக்கணும். நீ ஏலத்திற்கு போகும்போது கவனமாக இரு. சும்மா பாக்குறது எல்லாத்தையும் வாங்கிறாதே. நம்ம கடைக்கு எது தேவையோ, எது விக்கும் என்று நினைக்கிறாயோ அத மட்டும் வாங்கு. எதுவும் விற்காதுன்னு நினைச்சா வாங்காதே. ரொம்ப விலை ஏற்றி ஏலம் எடுக்காதே. பொருளின் மதிப்பைச் சரியாகக் கணித்து ஏலம் எடு. முக்கியமாக நம்ம வரவு செலவு கணக்குக்குள் இருக்க வேண்டும். நான் உனக்கு கொஞ்சம் பணம் எடுத்து வைத்திருக்கிறேன். இது போதும்” என்றார்.

 

“சரிப்பா, நீங்கள் கவலைப்படாதிங்க. நான் பார்த்துக்கிறேன்” என்றான் பவன் கொஞ்சமும் நம்பிக்கையில்லாமல். மனதுக்குள் ஒரு சின்ன பயம் இருந்தது. ஆனால் அப்பாவின் நம்பிக்கை அவனுக்குக் கொஞ்சம் தைரியம் கொடுத்தது.

 

ஒருவருக்கு நேரம் சரியில்லாத போதுதான் வேண்டாத சிந்தனைகளும் திட்டங்களும் தோன்றும் அதுதானே விநாசகாலே விபரீத புத்தி. நம் பவன் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன…

 

ஏலத்துக்குக்  கிளம்பும்போது பவனுக்குத் தன் காதலி நிஷா ஞாபகம் வந்தாள். அவள் இன்று சாயந்திரம் கடற்கரைக்கு வரச் சொன்னாள்.ஏலத்திற்கு போயிட்டு வரும்போது அவளைப் பார்த்துவிட்டுப் போக நேரமிருக்குமா என்று தெரியவில்லை. 

 

இருவரும் கொஞ்ச நாள் காதலித்துக்கொண்டு இருக்கிறார்கள். நிஷா நவீன பெண். ட்ரெண்டியாக உடை உடுத்துவாள். பவன் கூட பைக்கில் ஊர் சுற்றப் பிடிக்கும். பழம்பொருள் கடை, பழைய சாமான்கள் என்றால் அவளுக்கு கொஞ்சம் சலிப்பு. ஆனாலும் பவனை ரொம்பப் பிடிக்கும்.

 

பவன் பைக் எடுத்துக்கொண்டு ஏலம் நடக்கும் பண்ணை வீட்டை நோக்கிப் போனான். போகும் வழியில் நிஷாவைப் பார்த்தான். அவன் அலைப்பேசியில் சொன்னதால் கடற்கரை சாலையில் அவனுக்காகக் காத்துக்கொண்டு இருந்தாள். 

 

பார்த்ததும் என்னவோ புதிதாய் அவளை பார்ப்பது மாதிரி  “ஹே நிஷா, என்ன இங்கே வெயிட் பண்ணிட்டு இருக்க?” என்று கேட்டான்.

 

“என்ன பவன் இது? சாயந்திரம் கடற்கரைக்கு வரச் சொன்னால் இப்பவே என்னைக் கிளம்பி வரச்சொல்லிட்டு என்ன விளையாட்டு இது ?” நிஷா கொஞ்சம் கோபமாகவே கேட்டாள்

 

“இல்லை நிஷா, நான் ஏலம் எடுக்க போய்ட்டு இருக்கேன். சாயந்திரம் வர முடியாது. அதான் உன்னைப் பார்த்துட்டுப் போகலாம் என்று வந்தேன்” பவன் சொன்னான்.

 

“ஏலம் எடுக்கவா? நீயா? உன் அப்பா எங்கே?” நிஷா ஆச்சரியமாகக் கேட்டாள்.

 

“ஆமாம் நிஷா, அப்பாவுக்கு ஒரு முக்கியமான வாடிக்கையாளர் வந்துட்டார். அதான் அப்பா  என்ன போகச் சொன்னார்” என்றான் பவன் பெருமையாக.

 

“ஓ அப்படியா, ஆல் தி பெஸ்ட் பவன். நல்ல பொருட்கள் வாங்கிட்டு வா. சரி அப்போ சாயந்திரம் மீட்டிங்கை  கேன்சல் பண்ணிடலாமா?” கொஞ்சம் ஏமாற்றத்துடன் கேட்டாள்.

 

பவனுக்கு நிஷாவைப் பிரிய மனமில்லை. “கொஞ்சம் வெயிட் பண்ணு நிஷா. சீக்கிரம்  வந்துடுறேன். போன் பண்ணா சாய்ந்தரமும் வரவேல்ல” என்றான் கெஞ்சும் குரலில்.

 

நிஷா சிரித்தாள். “சரி ஓகே, நான் வெயிட் பண்றேன். சீக்கிரம் வந்துடு” என்றாள்.

 

பவன் நிஷாவுடன் பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை. லேட்டாகக் கிளம்பிவிட்டோமோ என்று ஒரு சின்ன பதட்டம் இருந்தது.

 

பண்ணை வீட்டை நெருங்கும் போது மணி 11:30 இருக்கும். ஏலம் 10 மணிக்கு ஆரம்பித்தது என்று ரங்கன் சொல்லி இருந்தார். ரொம்ப லேட் ஆகிவிட்டது என்று பவனுக்குப் புரிந்தது. வேகமாக பைக் ஓட்டி பண்ணை வீட்டுக்குப் போனான்.

 

அழகான பெரிய பண்ணை வீடு.  வாசலில் நிறைய கார்கள், பைக்குகள் நிறுத்தி இருந்தாங்க. பல சிறிய கடைகள், டீ காபி விற்கும் இடம் எல்லாவற்றையும் கடந்து ஆக்ஷன் நடைபெறும் கூடத்திற்கு விரைந்தான்.  உள்ளே வியாபாரம் சூடு பிடித்து  இருக்கும் போல. பலகாரக் கடைகளில் கூட்டமில்லை.

 

“வண்டியை நிறுத்திவிட்டு ஓட்டமும் நடையுமாக உள்ளே சென்றான். பெரிய ஹால். நிறைய பேர் நாற்காலியில் அமர்ந்து இருந்தார்கள். மேடையில் ஏலம் நடத்துபவர் மைகை பிடித்துக்  கொண்டு விலையை சொல்லி சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். சுற்றிலும் நிறைய பழம்பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மர நாற்காலிகள், மேசைகள், ஓவியங்கள், விளக்குகள், சிலைகள் என்று ஏகப்பட்ட சாமான்கள். நல்ல கூட்டம். உள்ளூர் வியாபாரிகள், பழம்பொருள் சேகரிப்பாளர்கள், வெளிநாட்டினர் என்று பலதரப்பட்ட மக்கள் இருந்தார்கள்.

 

பவன் தயக்கத்துடன் உள்ளே நுழைந்தான். எல்லார் பார்வையும் அவன் மேல் விழுந்தது போன்ற உணர்வு. தாமதமாக வந்ததை எல்லாரும் கவனித்துவிட்டார்களோ என்று கொஞ்சம் சங்கடமாக இருந்தது. சட்டென்று ஒரு நாற்காலியில் அமர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தான். ஏலம் வேகமாக போய்க்கொண்டிருந்தது. ஏற்கனவே நிறைய பொருட்கள் விலை போயிருக்கும் போல.

 

மேடையில் இருந்தவர் ஒரு பழைய மர நாற்காலியைக் காட்டி விலை சொல்லிக்கொண்டிருந்தார். “இந்த நாற்காலி மிகவும் பழமையானது. நல்ல வேலைப்பாடு செய்த நாற்காலி. யாராவது விலை சொல்லுங்கள்…” மக்கள் போட்டி போட்டு விலை சொன்னார்கள். பவன் அமைதியாக வேடிக்கை பார்த்தான். அவனுக்கு இன்னும் ஏலம் எடுக்கிற எண்ணம் தோன்றவில்லை. என்ன வாங்கலாம், எப்படி விலை சொல்ல வேண்டும் என்று எதுவும் புரியவில்லை.

 

கொஞ்ச நேரம் கழித்து அந்த நபர் ஒரு பழைய விளக்கை தூக்கி காட்டினார். “இதப் பாருங்க, ஒரு வித்தியாசமான விளக்கு. பழைய காலத்து வடிவமைப்பு. வீட்டுக்கு நன்றாக இருக்கும். விலை சொல்லுங்க…” 

 

இந்த விளக்கு பவனுக்கு கொஞ்சம் பிடித்திருந்தது. சும்மா ஒரு முயற்சி செய்து பார்க்கலாமா என்று தோன்றியது. மெதுவாக கையை தூக்கி ஒரு விலை சொன்னான். அவன் சொன்ன விலைக்கு யாரும் போட்டி போடவில்லை. அந்த விளக்கு பவனுக்கே ஏலம் போனது. ₹2000 ரூபாய்க்கு ஒரு விளக்கு. சந்தோஷமா, கஷ்டமா என்று அவனுக்கே தெரியவில்லை. அப்பா சொல்லித்தராமல் ஏலம் எடுத்தது சரியா தவறா என்ற குழப்பம்.

 

அடுத்து சில ஓவியங்கள், மண்பாண்ட ஜாடிகள் ஏலம் போயின. பவன் வெறுமனே பார்வையாளனாக அமர்ந்து இருந்தான். அவனுக்கு பெரிதாக எதுவும் வாங்க வேண்டும் என்று தோன்றவில்லை. ரங்கன் என்னதான் வாங்க சொன்னார் என்று யோசித்தான். கடைக்கு புதிதாக ஏதாவது இருக்க வேண்டும், விற்கிற மாதிரி இருக்க வேண்டும், விலை குறைவாக இருக்க வேண்டும்… இப்படி பல நிபந்தனைகள்.

 

அப்போது ஏலம் போடுபவர் ஒரு பெரிய மரப்பெட்டியை மேடைக்கு கொண்டு வந்தார். பெட்டி கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. பழமையான வடிவமைப்பு, பழைமையை பறைசாற்றும்  நிறம். பெட்டியின் மேல் வினோதமான வேலைப்பாடுகள் இருந்தன. யாரோ மிகவும் கஷ்டப்பட்டு செதுக்கி இருக்கிறார்கள் என்று பார்த்தாலே தெரிந்தது. அந்தப் பெட்டிக்கு ஒரு மர்மமான தோற்றம் இருந்தது.

 

“அடுத்தது இந்த மரப்பெட்டி. ரொம்ப பழமையான பெட்டி. போர்த்துகீசியர் காலத்துப் பெட்டி என்று சொல்கிறார்கள். உள்ளே என்ன இருக்கு என்று தெரியவில்லை. சீல் பண்ணி இருக்கு. யார் அதிக விலை சொல்கிறீர்களோ அவர்களுக்கு இது சொந்தம்” என்று ஏலம் போடுபவர் சொன்னார்.

 

பெட்டி வந்ததும் மக்கள் கொஞ்சம் ஆர்வமானார்கள். யாரோ இரண்டு மூன்று பேர் பெட்டியை அருகே போய் பார்த்தார்கள். விலை சொல்லலாமா வேண்டாமா என்று யோசிப்பது போல் இருந்தது. பவனுக்கும் அந்த பெட்டி ஏனோ மிகவும் பிடித்திருந்தது. அதில் என்ன இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஒரு ஆர்வம். மர்மமான பொருள் என்றால் கடையில் விற்கும் என்று ஒரு நம்பிக்கை. தன்னையும் அறியாமல் ஏலம் எடுக்க கையை தூக்கினான்.

 

“₹5000” பவன் சொன்னான். அவன் சொன்னதும் சில பேர் திரும்பி பார்த்தார்கள். யாரோ புதுசா ஒருத்தன் வந்துருக்கான்னு பார்ப்பது போல இருந்தது. வேறு யாரும் போட்டிக்கு விலை சொல்லவில்லை. ஏலம் போடுபவர் திரும்பத் திரும்ப விலை கேட்டார். யாரும் வரவில்லை. “₹5000, ஒரு முறை… இரண்டு முறை… மூன்று முறை… பெட்டி இவருக்கு சொந்தம்” என்று  சுத்தியலைத் தட்டி முடித்துவிட்டார்.

 

பவன் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தான். நிஜமாகவே பெட்டி நமக்கு கிடைத்துவிட்டதா என்று ஒரு நிமிடம் நம்ப முடியவில்லை. ₹5000 ரூபாய்க்கு ஒரு பெட்டி. உள்ள என்ன இருக்குன்னு தெரியாம வாங்கிவிட்டோமே என்று  ஒரு சின்ன பயம் இருந்தது. ஆனால் அதே சமயம் புதிதாக ஒரு பொருள் வாங்கி இருக்கிறோம் என்று ஒரு சந்தோஷம். அப்பா கிட்ட எப்படி சமாளிக்க போகிறோம் என்று தெரியவில்லை.

 

ஏலம் முடிந்ததும் பவன் பணம் கட்டி பெட்டியை வாங்கினான். விளக்கு, பெட்டி என்று இரண்டு பொருள் ஏலம் எடுத்திருக்கான். முதல் ஏலம் ஒரு சுமாரான அனுபவம் தான்.

 

அதே நேரம் கொச்சியில் இருந்து தூரத்து கிராமத்தில் இருந்த ரங்கனின் அம்மா, அவர்கள் வீட்டில் மதிய உணவு முடித்துவிட்டு கொஞ்ச நேரம் ஓய்வெடுக்க எண்ணி தலைசாய்த்தார். திடீரென்று ஒரு கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுந்தார்…. கனவில் வானுயர சிலையாக நிற்கும் அனுமன்  கோபமாக  முறைத்துப் பார்க்கிறார்… அவரை சுற்றிலும் கரிய நிறத்தில்  கடல் கடல் கடல்….  வானம் இருண்டு சூறாவளி காற்று அடிக்கிறது… அதில் பாய்மரக் கப்பல் ஒன்று தத்தளித்துத் துடிக்கிறது.. 

 

கனவு மிகவும் பயங்கரமாக இருந்தது. மனதுக்கு ஏதோ சரியில்லை என்று  பட்டது. “ஏதோ கெட்டது நடக்கப் போகுது” அவர் மனதிற்குள் ஒரு பயம் வந்து உலுக்கிற்று.