Tamil Madhura

மன்னிப்பு – 1

மன்னிப்பு, எனக்குப் பிடிக்காத வார்த்தை

1

நோ இது நடக்கக் கூடாது. நான் எந்திரிக்கணும். செய்தாக வேண்டுமே! என்ன செய்யலாம் சீக்கிரம் சீக்கிரம் க்விக் வசு…  நினைத்துக் கொண்டிருக்கும்போதே என் கண்கள் தன்னால் மூடியது.

“வசுமதி, வசுமதி, வசுமதி” என்று யாரோ கோர்ட்டில் டவாலி அழைப்பது போல அழைத்தார்கள்.

எனது உறக்கத்தை அது கலைத்தது. கண் விழித்துப் பார்த்தபோது கண்களைக் கூச வைக்கும் வெளிச்சம். ஆனாலும் எனக்குக் கண்கள் கூசவில்லை. எங்கு நோக்கினும் வெள்ளுடை தேவதையாய் அமர்ந்து கொண்டும், எழுதிக் கொண்டும், படித்துக் கொண்டும், யோசித்துக் கொண்டும்…

“வசுமதி, ஆர் யூ ஆல்ரைட்?” என்று அதில் ஒரு பெண் தேவதை கேட்டாள்.

இவள்தான் எவ்வளவு சாந்தம், அமைதி.

“தாங்க்ஸ் வசுமதி” என்றாள் அவள்.

இப்படியா மனசுல நினைக்கிறேன்னு சத்தமா பேசுவேன் என்னைக் கடிந்து கொண்டேன்.

“உங்களை ரொம்பத் திட்டிக்காதிங்க. இந்த இடத்தில் நீங்க மனசில் நினைச்சாலே எங்களுக்குக் கேட்கும்”

“இந்த இடம்னா… ”

“ஆஃப்டர் லைஃப்”

‘என்னது ஆஃப்டர் லைஃப்பா!!! அப்ப நான் செத்துட்டேனா?’ மனதுக்குள் அதிர்ந்தேன்.

“கிட்டத்தட்ட, நான் ரேயா. உங்க அட்டெண்டர். வர்றீங்களா எங்க மேடம் கூப்பிடுறாங்க”

‘மேடம் னா?’ மனசிலேயே நினைத்துக் கொண்டேன். அதுதான் மனசில் நினைச்சாலே இவங்களுக்குத் தெரிஞ்சுடுமாமே. அப்பறம் எதுக்கு பேசணும்.

“சித்ரா மேடம்  உங்களோட டாக்குமெண்ட்ஸ் எல்லாம் செக் பண்ணி உங்களை எங்க அனுப்புறதுன்னு டிசைட் பண்ணுவாங்க”

‘எங்க அனுப்புறதுன்னா? என்னென்ன இடம் இங்க இருக்கு. அதாவது பாசிபிள் டெஸ்ட்டினேஷன். ஒரு வேளை சொர்க்கம் நரகம் இப்படி ஏதாவது?’

“பனிஷ்மெண்ட் ஏரியா வழியாத்தான் போறோம். கீழ பாருங்க”  மிதந்து கொண்டே கீழே பார்த்தேன்.

ஒருவனை கூர்மையான ஈட்டி போன்ற ஒரு பொருளால் குத்திக் கொண்டிருந்தனர்

“இவன் அளவுக்கு அதிகமா வட்டி வாங்கி வதைச்சான். பலர் செத்துப் போயிட்டாங்க. அதனாலதான் இவனை எல்லாரும் வதைக்கிறோம்”

ஒரு மிருகம் ஒன்று ஒருவனைத் துரத்தித் துரத்தி முட்டியது. அந்த இடமே ரத்தக்களரியாய் மாறியும் அந்த நபர் சாகவும் இல்லை மிருகம் முட்டி தனது கொம்பால் கிழிப்பதை நிறுத்தவும் இல்லை.

“அந்த வட்டி வாங்குற நபரை எதிர்த்துப் போட்ட கேஸ் எல்லாத்தாயும் இந்த நீதிபதி தள்ளுபடி செஞ்சுட்டார். இவர் முறைப்படி நீதி வழங்கி இருந்தா எல்லாரையும் காப்பாத்தி இருக்கலாம்”

அவ்வளவுதானா தண்டனைகள்?

“எண்ணைக் கொப்பரை, ரீசன்ட்டா ஒரு இருநூறு வருஷமா பற பறன்னு பறந்து, மேலிடத்தில் கேட்டு அப்ரூவல் வாங்கி, பாலியல் பலாத்காரம் செஞ்சவங்களுக்கு ஸ்பெசல்லா ஒரு தண்டனை உண்டாக்கி இருக்கோம். சித்ரா மேடம் டிசைன் பண்ணது. அழகான பதுமைகள் எல்லாம் அவனைக் கட்டித் தழுவும், காதல் பண்ணும்”

“ஏம்மா இதெல்லாம் ஒரு தண்டனையா?இது அவனுக்கு அவார்டு” என்றேன் கடுப்பாக, கொஞ்சம் சத்தமாகக் கூட.

“சொல்லி முடிக்கவிடுங்க வசு. அந்த பதுமைகள் எல்லாம் கொதிக்கிற இரும்பில் செஞ்சிருப்போம். தொட்டாலே உடம்பெல்லாம் எரியும், அதுங்க இறுக்கமா கட்டிப்பிடிக்கிறப்ப கொஞ்சம் கொஞ்சமா எரிச்சு கருகிடுவான். புல்லா கருகினதும் மறுபடியும் முழு உடம்போட எந்திரிப்பான். பதுமைகள் தழுவும்”

“சபாஷ் இவனுங்க பலாத்காரம் பண்ணப்ப இப்படித்தானே அந்தப் பொண்ணுங்களுக்கும் இருந்திருக்கும். எந்திரிப்பான், கட்டிப்பிடிக்கும், எரிவான், விழுவான், மறுபடியும் எந்திரிப்பான், கட்டிப்பிடிக்கும், எரிவான், விழுவான், ரிபீட்டு… சூப்பர்… ”

இதில் என் புருசன்னு சொல்ற மானம் கெட்ட நாய்க்கு என்ன பனிஷ்மெண்ட் கிடைக்கும்? யோசித்ததை வார்த்தைகளால் கேட்டேன்

“முறைதவறி நடந்து வாழ்க்கைத் துணைக்கு துரோகம் செஞ்சா… ”

“அதுதான்… இப்ப அந்த ஏரியாதான் ஹவுஸ்புல்லா இருக்கு. தண்டனைக்கு முன்னூறு வருஷம் வெயிட்டிங்ல இருக்காங்க வசுமதி. இவங்களுக்கு க்ரூப் பனிஷ்மெண்ட். துரோகம் செஞ்ச பெண்களை கூட்டம் கூட்டமா  மலை உச்சில இருந்து தள்ளி விட்டு உட்சபட்ச வலியை ஏற்படுத்துற மாதிரி ஷாக் கொடுப்போம்”

“நல்லாருக்க குடும்பத்தைக் கள்ளக்காதலால் பிரிச்சு அடுத்தவன் மனைவியை அபகரிச்சதுக்கு, ஊசியிலேயே ஒவ்வொரு செல்லுலையும் குத்துவோம். அப்பறம் அதை எடுப்போம். அது அதை விட வலிக்கும் மறுபடியும் குத்துவோம்” விளக்கிக் கொண்டே வந்தாள்,

“போதும் ரேயா.. நம்ம உங்க மேடத்தைப் பார்க்கப் போகலாம்”

அந்த மேடம் சித்ரா வெள்ளை நிற ப்ரொபெஷனல் உடையில் இருந்தாள். அவளது மேஜையில் ஏகப்பட்ட பைல்கள். அத்துடன் மானிட்டர், கால்குலேட்டர் மாதிரி ஒன்று என்று எக்கச்சக்கமாக இருந்தன. சித்ரா எனது பைலை எல்லாம் குடைந்து குடைந்து பார்த்தாள்.

“வசுமதி, உன் குழந்தைப் பருவத்தைப் பார்த்தேன். எக்ஸெல்லெண்ட் டாட்டரா இருந்திருக்க. அம்மா அப்பா சொல்பேச்சை கேட்டு, கூடப் பிறந்தவங்களுக்கு நல்லது செஞ்சு, ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு”

மனசுக்கு சந்தோஷமாக இருந்தது.

ஆஃப்டர் மேரேஜ் டாக்குமெண்ட்ஸ் கூட தேளா கொட்டுற மாமனார் மாமியார், அவங்களை உன்கிட்ட தள்ளிவிட்டுட்டு எஸ்கேப் ஆன கோ சிஸ்டர் எல்லாரையும் மேனேஜ் பண்ணிருக்க. உன் கணவனை ரொம்ப நல்லா பாத்துகிட்டிருக்க.குழந்தைகளுக்கு ரொம்ப சப்போர்டிவ் மற்றும் கேரிங்க் அம்மா, வெரி குட் “

‘ம்… ம்… சந்தோசம்… சீக்கிரம் என்னை சொர்க்கத்துக்கு அனுப்பினா நல்லாருக்கும்’

“நீ நினைக்கிறது கேக்குது. ஆனா அதில்தான் கொஞ்சம் சிக்கல்” என்றாள் சித்ரா.

அதிர்ந்தேன். உயிரோட இருந்த ஒவ்வொரு நாளும் அனைவருக்கும் நல்லவளாகவே இருந்திருக்கிறேன். இதற்கு மேலும் என்ன தகுதி வேண்டும்?