இரவும் நிலவும் – 5
தங்கை அகல்யாவை என்ன சொல்லி சமாளிக்க என்று புரியாமல் மிகுந்த குழப்பத்துடன் அமர்ந்திருந்தான் நவநீதன்.
அகல்யா மட்டுமாக காலையிலேயே வீட்டிற்கு வருகை தந்திருந்தாள். அன்னை, தந்தை மீது அவனுக்கிருக்கும் கோபமும், வருத்தமும் குடும்பத்தில் அனைவருக்கும் தெரியும் என்பதால், ஏதேனும் காரியம் சாதிக்க வேண்டுமெனில் தங்கை மட்டும் அவனை நாடி வருவது ஒன்றும் புதிதல்ல!
அப்படி அவள் சாதித்துக் கொண்டதும் நிறைய தான்! அவள்மீது அவனுக்கிருக்கும் பாசம், அவள் கேட்பதற்கு அவனை தலையசைக்க வைத்துவிடும். ஆனால், இந்த விஷயத்தில்?
அவள் வருகை தந்ததும், வழக்கம்போல என்னவோ தன்னை வைத்துச் சாதிக்க நினைக்கிறாள் என்று வாஞ்சையாகத் தான் நினைத்தான்! ஆனால், இப்படி கேட்பாள், அதற்காக வெகு பிடிவாதமும் செய்வாள் என அவன் எண்ணிப் பார்க்கவில்லை.
அவனே விலகி வைக்க நினைத்து, அதை வெகு சிரமத்திற்கிடையில் சாதித்துக் கொண்டும் இருக்கிறான். இப்பொழுது தங்கை அதை உடைக்கச் சொல்லவும் என்ன செய்வதென்ற புரியாத மனநிலையில் அவன் இருந்தான்.
“அண்ணா… பிளீஸ்ணா” கலங்கிய விழிகளோடு அகல்யா கெஞ்சினாள்.
அவளின் கண்ணில் கண்ணீர் வழிவதை அவனால் தாங்கவே முடியவில்லை. இதயம் பிசைந்தது. இந்த சின்னவள் மீது அவனுக்கு என்றுமே கோபமோ வருத்தமோ இருந்ததே இல்லை. இன்னும் சொல்லப்போனால், அவனுக்குப் பெற்றவர்கள் மீதிருக்கும் அதிக வருத்தமே இந்த சின்னவளோடு தன்னால் வளர முடியாமல் போய்விட்டதே என்பதால் தானே! அவனுடைய தனிமை, ஏக்கம் எல்லாமே இரண்டாம் பட்சம் தான்!
“என்ன குட்டிம்மா…” புரிந்து கொள்ள மறுக்கிறாளே என்ற இயலாமையுடன் தங்கையிடம் கேட்டான். கூடவே சூழலை விளக்கும் பொருட்டு, “இது சரியா வரும்ன்னு தோணலைம்மா” வலி நிறைந்து ஒலித்தது அவனது குரல்.
அண்ணனின் வலியைக் குரலிலேயே உணர்ந்தவள் விசும்பினாள். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவனோ, “சும்மா சும்மா அழாதே குட்டிம்மா. எனக்குக் கோபம் தான் வருது” என்றான். அவனது குரல் இறுகிப்போய் ஒலித்தது.
அகல்யா பிறந்தபோதிருந்தே பலவீனமான குழந்தை. குறைப் பிரசவத்தில்தான் பிறந்தாள். பிறந்தபோது அவளது எடை இரண்டு கிலோ கூட இல்லை. வயிற்றுப்போக்கு, நிமோனியா போன்ற நோய்த் தொற்றுகள் வேறு தாக்கிவிட, பெற்றவர்கள் பெரிதும் பயந்து போயினர். அதிலிருந்து அவளைப் போராடி மீட்ட பிறகும், அவளை மிகுந்த பக்குவத்துடன் தான் பார்த்துக் கொண்டனர். அவளை வளர்ப்பதென்பது பெரும் சவாலாகத்தான் இருந்தது. மற்ற பிள்ளைகள் போல அல்லாமல்… உட்கார, தவழ, நடக்க, பேச என எல்லாவற்றிற்கும் வெகு காலம் பிடித்தது. அவளைப் பொத்தி பொத்தி வளர்க்க வேண்டிய சூழல். அதனால் தான் அவள் மீது எல்லாருக்குமே கரிசனம் அதிகம். இறுகியே இருக்கும் நவநீதன் உட்பட!
“சரி அழலை” அவசரமாகக் கண்ணைத் துடைத்துக் கொண்டவள், “உங்களுக்கும் அண்ணியை பிடிச்சிருக்கு தானே!” என்று தலையசைத்துக் கேட்டாள்.
அதற்குள் அண்ணியாமே! “ஆக முடிவே செஞ்சிட்டு தான் பேச வந்திருக்க…” என்றான் சின்ன சிரிப்புடன். அவளது பேச்சிலும், சிறுபிள்ளைத்தனமான சேட்டைகளிலும் கோபம் சற்று மட்டுப்பட்டது.
“அண்ணா கெஞ்ச விடாதீங்க…” லேசாக முறைத்தாள் அகல்யா.
“ஆஹா… நான் கெஞ்ச விடறேனா? ரொம்ப நல்லா இருக்கு. காலேஜுக்கு மட்டம் போட்டுட்டு வந்து பேசற அளவுக்கு இது முக்கியமான விஷயமா?” பதிலுக்கு மூத்தவனும் முறைத்தான்.
“பின்ன இதைவிட வேற என்னதான் உங்களுக்கு முக்கியமான விஷயமா இருக்கும்? உங்களுக்கு எப்படியோ தெரியாதுப்பா. எனக்கு இது ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். நான் என்ன டிரஸ் போடணும், யாரையெல்லாம் இன்வைட் பண்ணனும், பிரண்ட்ஸோட சேர்ந்து என்ன அலப்பறை செய்யணும்ன்னு இப்ப இருந்தே பிளான் போட ஆரம்பிச்சுட்டேன்”
தங்கை வளர்ந்தும் வளராத சிறு குழந்தை தான்! எப்பொழுதுமே… இந்த செல்லத்தைக் கண்ணுக்குள் பொத்தி வளர்த்து ஆளாக்கினார்கள் என்பதற்காகவே அவன் தன் பெற்றோர்களை முழுதாக மன்னிக்கா விட்டாலும், கொஞ்சம் மதிப்பதுண்டு. அதாவது சின்ன வயதில் செய்தது போல முகம் திருப்பி, அவர்களைக் கண்டாலே விலகிப் போய்விடுவது என்பது மாறி, கொஞ்சம் நின்றான். அவர்கள் ஏதேனும் கேட்டால் தலையசைவில் பதில் சொன்னான். அவ்வளவு தான் அவர்களுக்கும் அவனுக்குமேயான பந்தம்!
கைகளை விரித்து, கண்களை உருட்டி, தலையை ஆட்டி திருமண திட்டங்களை மூச்சு விடாமல் அடக்கிக் கொண்டிருந்த தங்கையிடம், மறுக்க வேண்டியதாக இருக்கிறதே என்று அவனுக்கு வெகு உறுத்தல். “இது… இந்த கல்யாணமெல்லாம்… சரியா வரும்ன்னு தோணலை குட்டிம்மா” என்றான் யோசனையோடு.
இதே பல்லவியை அவனும் இதோடு குறைந்தபட்சம் பதினாறு முறையாவது பாடியிருப்பான். ஆனால், எதிரில் இருப்பவள் புரிந்து கொள்ள முயற்சி எடுக்க வேண்டுமே? சோகங்கள்!
வழக்கம்போல, அவள் அதை அலட்சியம் செய்து, “உங்களுக்கு அண்ணியை பிடிச்சிருக்குன்னு எனக்குத் தெரியும். நானும் அம்மாவும் தான் ஹாஸ்பிட்டல்ல பார்த்தோமே…” என்றாள் அகல்யா.
உணர்வுகள் துடைத்திருந்தது நவீனின் முகம்! அவனுக்குமே தான் எந்தளவு சுபிக்ஷா மீதான பிடிப்பில் ஆழமாக இருக்கிறோம் என்று உணர்த்திய நாளாயிற்றே! அதன்பிறகு தானே தனக்கே தனக்கான கடிவாளத்தை இறுக்கிப் பிடித்ததும். அதன்பிறகு அவளை முழுவதுமாக தவிர்த்ததும்!
ஆழ்ந்து உள்ளிழுத்து வெளியிட்ட பெருமூச்சுடன், “அது வேற இது வேற குட்டிம்மா. உனக்கு என்னைப்பத்தி தெரியும் தானே” என்று தங்கையை ஆழ்ந்து பார்த்து கேட்டான்.
“அதெல்லாம் அண்ணி வந்தா எல்லாம் சரியாயிடும்…” ஆருடம் சொல்வது போல அறிவித்தாள் சின்னவள்.
அகல்யா சிறு பெண். அவளுக்கு தன் அண்ணன் மட்டும் தான் முக்கியம்! ஆக, அதற்காக எதையும் செய்வாள். ஆனால், அவனால் அப்படி இருக்க முடியாதே! திருமணம் ஒன்று நடந்தால், சுபிக்ஷா அவனோடு ஒன்றிப்போக மிகவும் சிரமப்படுவாள் என்று அவன் மனம் அவனை எச்சரித்தது. இந்த பேச்சை எப்படித் தவிர்க்கலாம் என அவன் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.
அவன் மீண்டும் எதுவோ மறுத்து சொல்லுமுன், “பிளீஸ் அண்ணா…” எனக் கண்ணை சுருக்கி கெஞ்சத் தொடங்கிவிட்டாள். தங்கை மூலம் காரியம் சாதிக்க நினைக்கும் அன்னையின் புத்திசாலித்தனம் அவனுக்கு புரியாமலில்லை.
தன் மறுப்பு இவளிடம் செல்லுபடியாகாது என்று புரிந்தவன், சிறு புன்னகையுடன், “அவளும் அவங்க குடும்பமும் முழு மனசோட சம்மதிச்சா மட்டும்…” என அனுமதி தந்தான். அவளிடம் ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழியே இருக்கவில்லை அவனுக்கு. செல்ல மிரட்டல், கெஞ்சல், அழுகை, சோகம் என அத்தனை அவதாரங்களையும் தங்கை மாற்றி மாற்றி எடுத்துக்கொண்டே இருக்கும்போது அவனாலும் வேறு என்ன செய்ய முடியும்?
இப்படி அவன் முழுதாக மறுக்க நினைத்த விஷயத்தைத் தங்கை தன் பிடிவாதத்தால் சாதித்துக் கொண்டாளே என அவனுக்கு மனம் சோர்ந்தது. ஆனால், சுபிக்ஷாவை மறுக்கத் தான் நினைத்தானே ஒழிய, மறக்க நினைக்கவில்லை. அது அவனது சக்திக்கும் அப்பாற்பட்டது என்பதைத் தெளிவாகவே தெரிந்தும் வைத்திருந்தான்.
இப்பொழுது நவநீதனுக்கு மீதமிருக்கும் ஒரே வழி சுபிக்ஷா தான்! தன் நிலைமையைச் சொன்னால் அவள் புரிந்து கொள்வாள் என நம்பினான்.
நவநீதன் அடுத்த முறை சுபிக்ஷாவை சந்திக்கும் போது, அவளிடம் சென்று பேச்சு கொடுத்தான். இத்தனை நாட்களாக நெருங்கவே விடாதவன், இப்பொழுது தானாக வந்து ஏன் பேசுகிறான் என்று புரியாமல் அவள் குழம்பிப் போனாள். அதோடு நாம் பேச நினைக்கும் போது, இவனிடம் பேச ஏங்கிய போது எல்லாம் எதுவுமே பேசாமல் முறுக்கிக்கொண்டு போனவன் தானே… இப்பொழுது இவன் பேசினால் நான் பேச வேண்டுமாக்கும்! என்று வீம்பும் வந்தது.
அவளின் கடுப்பு அவள் முகத்திலேயே தெரிய, “ரொம்ப முக்கியமா பேசணும்…” என்றான் அழுத்தமாக. அவள் பெயரைக் கூட உச்சரிக்கவில்லை. பொதுப்படையான அதிகார தொனியில் வெளிவந்த பேச்சில் அவளுக்கு உள்ளே எரிந்தது.
வேண்டுமென்றே அவனை நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்த்தாள்; அவளின் அலட்சியம் புரிய, அதற்குக் காரணமும் அவனுக்குத் தெளிவாகவே தெரிந்திருந்தது. கடினமான குரலில், “நான் எப்பவுமே இப்படித்தான் இருப்பேன். என்னோட இந்த குணத்தை புரிஞ்சுக்கிட்டவங்க மட்டும் தான் என் சர்க்கிள்ல இருப்பாங்க…” என்றான் தெளிவாக.
என்ன சொல்ல வருகிறான் என்று அவளுக்கு புரியவேயில்லை! அவள் அவனைப் புரிந்து கொள்ள வேண்டுமா? புரிந்து கொண்டால் தான் அவனது வட்டத்திற்குள் அனுமதிப்பானா? அவ்வாறுதான் சொல்ல வருகிறானா? இல்லை, நீ என்னைப் புரிந்து கொண்டதே இல்லை. அதனால் தான் என் வட்டத்தில் உன்னை இணைக்கவேயில்லை என்று சொல்கிறானா?
அவளது குழப்பமான முகத்தை ஆழப் பார்த்துக் கொண்டிருந்தான். அவளின் விழிகளின் உள்ளே எதைத் தேட முயற்சிக்கிறான் என்பது போலத் தோன்ற சுபிக்ஷா பதற்றமானாள். இப்ப ஏன் இப்படி பார்த்துத் தொலைக்கிறான்? ஒருவேளை, நான் அண்ணாகிட்ட சொன்ன விஷயம் இவன் வரைக்கும் போயிருக்குமோ? அண்ணன் விசாரிக்கிறேன், தெரிஞ்சுக்கிறேன்னு சொல்லி எதுவும் சொதப்பிட்டானோ? தமையன் வருண் மீது கோபம் கோபமாய் வந்தது.
அவள் முகத்தில் குழப்பம் வடிந்து, பதற்றம் கூட அவனுக்கு யோசனையானது. “ஏதாவது பிரச்சினையா?” தன்னையும் மீறி கடினம் மறைந்து அக்கறையுடன் கேட்டான்.
அவன்தான் எப்பொழுது எப்படி மாறுவான் எனத் தெரியாதே! ஆக அவன் மாற்றம் குறித்து எந்த அதிர்வும் அவளுக்கிருக்கவில்லை. தலையை மட்டும் ஒன்றுமில்லை எனது போல அசைத்தாள்.
அவன் ஆசுவாசமாக மூச்சு விடுவதை உள்ளூர வியப்புடன் கவனித்தாள்.
நவநீதன் இப்பொழுது அவளைப் பார்ப்பதைத் தவிர்த்தான். “எனக்கொரு பிரச்சினை. என்னோட கையை மீறி போயிடுச்சு” என்றான் உணர்வுகளற்ற குரலில்.
என்னவாக இருக்கும் என்று அவள் யோசனை செய்கையில் அவனே தொடர்ந்து பேசினான். “என் அம்மாவும் தங்கையும் நம்மளை ஒன்னா பார்த்திருக்காங்க” என்றவன், சிறு இடைவெளி விட்டு, “தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க போல… உன்னோட கல்யாணம் பேசணும்ன்னு ரொம்ப பிடிவாதம் செய்யறாங்க.”
கல்யாண விஷயம் என்பதில் மனம் பேருவகை கொண்டாலும், சொந்த குடும்பத்திற்கும் இவனுக்கும் ஒத்துப் போகாது என்பது போலத் தானே வினோதன் சொன்னார் என அவளுக்குக் குழப்பமானது. அதோடு இதில் இவன் பிரச்சினை என்று எதைச் சொல்கிறான் என்றும் புரியாது பார்த்தாள்.
“என்கிட்ட கேட்டது அகல்யா. என்னோட தங்கை. அவகிட்ட மறுத்துப் பேசும் தைரியம் எனக்கில்லை” என்றான் தங்கையின் நினைவில் குரல் கனிய.
என்றாவது ஒருநாள் என்னை மறுத்துப் பேசுவதற்கும் இவன் தைரியமற்று இருப்பானா? காதல் கொண்ட மனம் ஏங்கித் தவித்தது.
தான் பேசப் பேச ஒவ்வொரு விதமான பாவனைகளைக் காட்டும் சுபிக்ஷா அவனை வெகுவாக ஈர்த்தாள். இவளிடம் எப்படி தன்னால் நேரடியாகச் சொல்ல முடியும்? மனம் நெருப்பில் நிற்பதுபோல தவித்தது. வாழ்க்கை தன்னை ஒவ்வொரு விஷயத்திலுமே வஞ்சிப்பதாகவே அந்த நொடி நவநீதனுக்கு தோன்றியது.
குரலை செருமி, “என்னால என் பக்கம் இருந்து நிறுத்த முடியலை. எப்படியும் கல்யாணம் பேச வருவாங்க. நீ உங்க வீட்டுல உன்கிட்ட கேட்கும்போது வேண்டாம்ன்னு சொல்லிடு” என்றான் மீண்டும் அதே உணர்வுகள் துடைத்த குரலில். எவ்வளவு பெரிய இடியை அவள் தலையில் இறக்கியிருக்கிறோம் என்று அவனுக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை.
சுபிக்ஷாவிற்கு ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. கொஞ்சம் ஸ்தம்பித்துப் போய் தான் இருந்தாள். அவளாக விரும்பி எதிர்பார்க்கும் நிகழ்வுக்கு அவளால் எப்படி மறுப்பு தெரிவிக்க முடியும்? அதுவும் ஏற்கனவே இதற்கான பேச்சை அவள் முன்னெடுத்திருக்கையில்! ஒருவேளை பேச்சை முன்னெடுத்த இடம் தான் தவறோ? முதலில் நவநீதனிடம் பேசிவிட்டு வீட்டில் சொல்லியிருக்க வேண்டுமோ?
ஆனால், இவன் தான் சாதாரண பேச்சு வார்த்தையைக் கூட தவிர்த்து வந்தானே! இவனை இழக்கக்கூடாது என்ற அச்சத்தில் தானே அந்த வழியில் முயற்சித்தேன். அவளுள்ளே பூகம்பமே உருவாகி அவளைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தது.
சுகமதியின் ‘இரவும் நிலவும் – 5’
