அத்தியாயம் – 26
மறுநாள் மாலை மருத்துவர் லலிதாவின் தந்தை குணசீலனை சந்திக்க அழைத்தார். அவருடன் கபிலரும் செல்ல, இருவரும் மருத்துவரை சந்தித்தனர்.
“உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் “ என்று குணசீலனிடம் சொல்ல… கபிலர் எழுந்தார்.
“இவர் என் அக்கா வீட்டுக்காரர்தான் பரவால்ல சொல்லுங்க” என்றார் குணசீலன். அவரின் அந்தப் பாசம் கண்டு கபிலர் ஒரு கணம் நெகிழ்ந்துவிட்டார்.
இருவரையும் ஒரு பார்வை பார்த்த மருத்துவர் “லலிதாவுக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்கா” என்றார்.
“ஆமாம் டாக்டர்”
“மாப்பிள்ளை பேர் என்ன? எங்க வேலை பாக்குறார்”
விவரங்களை சொன்னார் குணசீலன்.
“ஏன் இந்த விவரம்னு தெரிஞ்சுக்கலாமா”
அதற்கு பதிலளிக்காமல் “லலிதாவுக்கு சர்ஜரி செஞ்சதை ராஜனுக்குத் தெரியப் படுத்திருந்திங்களா” என்றார்
“ஆமாம் டாக்டர். நேத்து ராஜனோட அம்மா போன் பண்ணிருந்தாங்க. அவங்ககிட்ட சாமி கும்மிட வந்த இடத்தில் லலிதாவுக்கு வயித்து வலி வந்ததையும் ஹாஸ்பிட்டல அவசரமா ஆப்பரேஷன் செய்ய வேண்டியதாயிருச்சுன்னும் தெரியப்படுத்தினேன். அதில் ஏதாவது தப்பாயிடுச்சா டாக்டர்”
“நீங்க சொன்னது சரி. ஆனால் அவங்க பதிலுக்கு செஞ்சதுதான் தப்பு”
“அவங்க ரொம்ப நல்ல மாதிரி டாக்டர்… நேத்து பேசும்போது கூட ரொம்ப வருத்தப்பட்டாங்களே… உடனே கிளம்பி வரேன்னு சொன்னாங்க. நான்தான் ரெண்டு நாள்ல வீட்டுக்கு வந்ததும் வர சொன்னேன்” என்றார் குழப்பத்துடன்.
“அது அவங்க உங்ககிட்ட சொன்னது. பதிலுக்கு செஞ்சதுன்னு சொன்னிங்களே… அது என்ன டாக்டர்” என்று சரியாக விஷயத்தைப் பிடித்தார் கபிலர்.
“இன்னைக்கு மத்யானம் ஒரு ஆள் டாக்டர் வேஷத்தில் எங்க ஹாஸ்பிட்டலுக்கு வந்திருக்கார். வழக்கமா மத்யானம் கூட்டம் அவ்வளவா இருக்காது. நர்ஸ் ஒண்ணு ரெண்டு பேரைத் தவிர எல்லாரும் சாப்பிடப் போவாங்க. இதை நல்லா நோட் பண்ணிட்டு வந்தவன், லலிதா ரூமுக்குப் போய் டாக்டர்ன்னு சொல்லிட்டு செக் பண்ணிருக்கான்”
“ஆமாம் டாக்டர் மத்தியானம் நர்ஸ் சாப்பிடக் கிளம்பினப்ப நான்தான் லலிதா கூட இருந்தேன். அப்ப ஒரு புது டாக்டர் வந்தாரு. என்கிட்டே மருந்து எழுதி தந்து வாங்கிட்டு வர சொன்னாரு. வாங்கிட்டு வந்து பார்த்தா அவரு அங்க இல்லை” என்றார் குணசீலன்.
“அந்த பிராடுதான்… அவனைக் கூட்டிட்டு வாங்க” என்று அங்கிருந்தவரிடம் சொல்ல அவர்களும் அழைத்து வந்தனர்.
“இதே ஆள்தான் டாக்டர்” என்று குணசீலன் சொன்னார்.
“ உங்களை மருந்து வாங்க சொல்லி வெளிய அனுப்பிட்டு, தூங்கிட்டு இருந்த லலிதாவோட காயத்தை போட்டோ எடுத்துட்டு, அவளோட பைலைத் திருடிட்டு பின்புற வாசல் வழியா கிளம்பிருக்கான். எங்க நர்ஸ் இன்னொருத்தங்க சந்தேகப்பட்டு விசாரிக்கவும் அவங்களைத் தாக்கிட்டுப் போக ட்ரை பண்ணிருக்கான். வார்டு பாயும் மத்தவங்களும் கையும் களவுமா மடக்கிட்டாங்க”
அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போய் பேச முடியாது அமர்ந்திருந்தார் குணசீலன்.
“திருட்டா… ஆனால் லலிதாவோட மருத்துவ பைல் அவனுக்கெதுக்கு” என்று குழப்பமாய் கேட்டார் கபிலர்.
“அதைத்தான் அவன்கிட்ட அடிச்சு உதைச்சுக் கேட்டோம். லலிதாவுக்கு நடந்தது உண்மையிலேயே அப்பன்டிசைட்டிஸ் ஆப்ரேஷனா இல்லை அபார்ஷனான்னு மிஸ்டர்.ராஜனுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் சந்தேகமாம். அதனால ரகசியமா ஒரு ஏஜென்சி கிட்ட சொல்லி துப்பறிய சொல்லிருக்காங்க” என்றார் மருத்துவர்.
அந்த போலி டாக்டரும் அதற்கு சம்மதமாய் தலையாட்டினான். “சார் என்கிட்டே பணம் தந்து ரிப்போர்ட்ஸ் காப்பி எடுத்துட்டு போய் இன்னொரு டாக்டர்கிட்ட தர சொல்லிருந்தாங்க. ரிப்போர்ட் காப்பி எடுக்க முடியாததால் திருடிட்டேன்” என்றான். அவன் அவர்களிடம் தந்த வாட்ஸ் அப் நம்பர் ராஜனுடையது. அதில் ராஜன் பேசி அனுப்பிய சில ஆடியோ மெசேஜும் இருந்தது.
கல்லாய் சமைந்து விட்டார் குணசீலன். இப்படி ஒருவனா… இவனையா என் மகளுக்குக் கணவனாய் தேர்ந்தெடுத்து இருக்கிறேன். நம்பிக்கை தானே வாழ்க்கை. பூமி நாளையும் சுற்றும், பொழுது விடியும் என்ற நம்பிக்கைதானே ஒவ்வொருவரையும் வாழ வைக்கிறது. அதே போன்ற ஒரு நம்பிக்கைதானே கணவன் மனைவி உறவிலும் இருக்க வேண்டும்.
கபிலருக்கு என்ன சொல்லி குணசீலனை சமாதனப் படுத்துவதென்றே தெரியவில்லை. எருது காயத்தின் வலியால் துடித்துக் கொண்டிருக்கும்போது காக்கை அந்தக் காயத்தைக் கொத்தி மகிழுமாம். விஷயம் கேள்விப் பட்டதும் ராஜன் லலிதாவிற்கு அழைத்து உடல் நலத்தை விசாரித்திருந்தால் கூடப் பரவாயில்லை. அதைவிடுத்து சந்தேகப்பட்டு… ச்சே… இதுக்கு அந்தக் குடும்பமும் உடந்தை…
இப்போது டாக்டர் குணசீலனை சற்று கனிவுடன் பார்த்தார். “இங்க பாருங்க சார்… இது அளவு கடந்த காதலால் ஏற்பட்டதுன்னு எடுத்துக்கோங்க. இதைப் பத்தி மருத்துவமனையிலிருந்து விஷயம் கசியக் கூடாதுன்னு சொல்லிருக்கேன். ஆனால் சம்பந்தப் பட்டவங்களுக்கு தெரியுறது அவசியம்னுதான் உங்க கிட்ட சொன்னேன். பெண்கள் கிட்ட பதமா சொல்லுங்க. ஏன்னா லலிதாவாலோ இல்ல அவங்க அம்மாவாலோ இதைத் தாங்க முடியாது”
“என்னாலேயே இதைத் தாங்க முடியல டாக்டர். இவருக்கு என்ன சொல்லி ஆறுதல் சொல்றதுன்னே தெரியல. இன்னும் ரெண்டு மாசத்தில் அந்த பய்யன் கூடத்தான் லலிதாவுக்குக் கல்யாணம் நிச்சியமாயிருக்கு” என்றார் கபிலர்.
“நம்ம என்ன செய்ய முடியும். சந்தேகப்படுறது ஆண்களின் குணமாயிடுச்சு. அந்த ராமனே சந்தேகப்பட்டு , பத்தினித் தன்மையை நீரூபிக்க சீதையைத் தீக்குளிக்க சொல்லலையா” என்றார் மருத்துவர்.
அதுவரை அமைதியாக நடந்ததை ஜீரணிக்க முயன்று கொண்டிருந்த குணசீலன் தெளிவு பெற்றவராக
“ராமன் வேணும்னா தீக்குளிக்க சொல்லிருக்கலாம். ஜனகன் ஒரு நாளும் பெண்ணைத் தீக்குளிக்க சொல்ல மாட்டான்” என்றார்.
மற்றவர்கள் புரியாமல் பார்க்க “ஜனகன் சீதையைத் தீக்குளிக்க சொல்லிருக்க மாட்டான். ஏன்னா கணவனின் காதலை விட பெத்தவங்க மகள் மேல வச்சிருக்குற பாசமும் நம்பிக்கையும் அதிகம்.
என் பொண்ணோட மருத்துவ சான்றிதழ் எல்லாம் தந்து அவளோட புனிதத்தன்மையை நீரூபிச்சு ஒரு வாழ்க்கை வாழ வைக்கிறதை விட என் மகளாவே என் வீட்டில் இருக்கட்டும். பெத்தவங்க காப்பாத்த வழியில்லாமலா பொண்ணைக் கட்டித் தராங்க” குணசீலனுக்கு முகமே சிவந்துவிட்டது.
அவருக்கு சாமானியத்தில் கோபம் வராது. வந்தால் அவ்வளவுதான். இப்போது முடிவு வேறு எடுத்து விட்டார். இனி ராஜனே காலில் வந்து விழுந்தாலும் அதை மாற்ற முடியாது.
“குணசீலன்… உங்க முடிவை வரவேற்கிறேன். இந்த ராஜனோட குணம் கல்யாணத்துக்கு முன்னாடியே தெரிஞ்சது நல்லது. சந்தேகம் ஒரு நோய். அதை ஒரு குறைபாடுன்னு புத்திமதி சொல்லி லலிதாவை ராஜனோட இணைச்சுடாதிங்க.
ஆனால் நான் கூட பாரிதான் உங்க மருமகன்னு நினைச்சேன். ஏன்னா பாரி நேத்து துடிச்சது பார்க்கும்போது அவரோட ஆழமான அன்பின் வெளிப்பாடாத்தான் எனக்குத் தெரிஞ்சது. ஒரு வேளை லலிதாவுக்கு வேற மாப்பிள்ளை பாக்குறதா இருந்தால் பாரியை விட வேற நல்ல ஆள் கிடைக்காது. கபிலர் உங்களுக்கும் லலிதாவை விடத் தங்கமான பொண்ணு கிடைக்காது” என்றார் டாக்டர்.
“எனக்கும் இதில் பரிபூரண சம்மதம். ஆனால் லலிதாவோட அப்பாவின் முடிவுதான் இதில் முக்கியம்” என்றார் கபிலர்.
இருவரும் லலிதாவின் அறைக்கு வந்ததும் அங்கிருந்தவர்கள் கேள்வியோடு அவர்களைப் பார்த்தனர்.
குணசீலன் தடுமாற, கபிலர் அவரைக் கையமர்த்திவிட்டு “டாக்டர் கொஞ்ச நாள் லலிதா ரெஸ்ட் எடுக்கனும்னு சொல்லிருக்கார். கல்யாணத்தைத் தள்ளிப் போட்டால் நல்லதுன்னு சொன்னார்”
“சாதாரண ஆபரேஷனுக்கு எதுக்குக் கல்யாணத்தைத் தள்ளிப் போடணும்” என்று மற்றவர்கள் கேட்க…
“அதுவந்து லலிதா… ராஜனோட கல்யாணத்தை நிறுத்திட்டு, லலிதா – பாரி கல்யாணம் பேசி முடிக்க வேண்டாமா” என்று பட்டென உடைத்தார் குணசீலன். அங்கிருந்த அனைவரின் முகத்திலும் சிரிப்பு. சந்தோஷ வெள்ளம் அங்கு கரைபுரண்டு ஓடியது.
“என் மகன் அவனோட சம்மதத்தை நம்ம எல்லார் முன்னாடியும் சொன்னால்தான் நான் சம்மதிப்பேன்” என்று செல்லமாய் முரண்டு பிடித்தார் பார்வதி.
“கல்யாணத்தை மட்டும் லலிதா உடம்பு தேறின உடனேயே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வச்சுக்கலாம்னு மாமாட்ட சொல்லுங்கம்மா” என்று லலிதாவைப் பார்த்தவண்ணம் சொன்னான் பாரி.
“அப்படியே நம்ம பிள்ளை தப்பு செஞ்சிருந்தாலும் இப்ப என்னய்யா… நம்ம பிள்ளை இல்லைன்னு ஆயிருமா… அந்த சமயத்தில் கை கொடுத்துத் தேத்தாம நம்மளும் ஊருக்கு பயந்து அவங்களைக் கை விடுறது தப்பு” என்று கபிலர் சமாதனப் படுத்தியும் அமுதாவின் தந்தை துரை பணியவில்லை.
“மாப்பிள்ளை… அமுதா வெங்கடேசன் ரெண்டு பேருக்கும் முதிர்ச்சி இல்லை. இந்த சமயத்தில் கை கொடுத்தால் கடைசி வரை நம்ம கையைப் பிடிச்சுட்டேதான் நடப்பாங்க. ரெண்டும் இந்த உலகத்தில் தனியா வாழப் பழகட்டும். பின்னாடி பாத்துக்கலாம்”
“இந்த மாதிரி முயற்சி எல்லாம் தேவையா” கபிலர் கேட்டும்.
“இதில் ஜெயிச்சா நம்ம வீட்டில் சேர்த்துப்பாங்க. தோத்தா ஊரே கைகொட்டி சிரிக்கும்னு அமுதாவுக்குத் தெரியும். அவங்க வீட்டுக்குப் போன மூணே வாரத்தில் நிலைமையைத் தெரிஞ்சுட்டு பக்கத்தில் ஒரு கடைல வேலைக்கு சேந்திருக்காம்”
“தெரியும் துரை… நம்ம பாரியோட பிரெண்டு கடைதான். அவன்தான் வேலைக்கு சேத்துவிட்டான். அதைக் கேட்டதும் மனசு பொறுக்காமத்தான் வந்தேன். நம்ம பிள்ளை வெயில் படாம வளர்ந்தது. வாடிப் போயிறக் கூடாதே”
“அப்படி வளர்த்ததுதான் தப்பு மாப்பிள்ளை. ஊரில் ஒவ்வொருத்தரும் ஒரு வேளை சோத்துக்கு எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னு பிள்ளைகளுக்கு சொல்லி வளர்க்கணும். நம்ம படுற பாட்டை பெண் பிள்ளைகளுக்கும் சொல்லணும். பொத்தி பொத்தி வளர்த்தா வெளில நடக்குறது எதுவும் அவங்களுக்குத் தெரியாது” என்ற துரையின் கண்களில் கண்ணீர்.
“என்ன கொஞ்ச நாள் கஷ்டப்படுவா… அப்பறம் ஜெய்ச்சுட்டு வரட்டும். நம்ம பிள்ளைங்க கிட்ட தோக்குறதை விட சந்தோஷம் வேற என்ன இருக்கு மாப்பிள்ளை” என்றார் துரை.
“சரி இன்னைக்கு உங்க தங்கச்சியைக் கூப்பிட்டுட்டு பத்திரிகை வைக்க வரேன். கல்யாணத்துக்குக் கண்டிப்பா வரணும்” என்றார் கபிலர்.
வாசலுக்கு வந்ததும் “அப்பறம் அந்த வண்டி” என்று இழுத்தார் கபிலர்.
“அதில் லலிதாவைக் கூட்டிட்டு ஆஸ்பத்திரி போனப்ப கொஞ்சம் ரத்தம் சீட்டில் எல்லாம் பட்டுருச்சு. அதனால… “
“பரவால்ல மாப்பிள்ளை. நான் கழுவிக்கிறேன்” என்றார் துரை
“அதில்ல மாப்பிள்ளை. அந்த வண்டி என்னமோ பாரிக்குப் பிடிச்சிருச்சு போல… நாமளே வாங்கிக்கலாம்னு சொல்றான்”
சிரித்தவர் “எடுத்துக்கோங்க… ஆனால் காசு வேண்டாம். பாரிக்கு பிராயச்சித்தம் செஞ்சதா இருக்கட்டும்”
“அட… பெரிய வார்த்தை எல்லாம் பேசிட்டு… வண்டி என் மருமகளை சரியான நேரத்துக்கு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டு போய் காப்பாத்திருக்கு. அதைவிட என்ன எங்களுக்கு வேணும்” என்றபடி துரையின் கையில் பணப்பையைத் திணித்தார் கபிலர்
“நீங்க என்ன விலைக்கு பேசி முடிச்சிங்கன்னு பாரி சொன்னான். அதை அப்படியே கொண்டு வந்திருக்கேன். மறுக்காம வாங்கிக்கணும்” என்று வற்புறுத்தி, கையில் துரை வாங்கியபின்னரே அங்கிருந்து சென்றார் கபிலர்.
அடுத்த ஒரு மாதத்தில் நடந்த லலிதா-பாரியின் திருமணத்தில் மாம்பழப் புடவையில் லலிதா அழகில் மின்ன, அவர்கள் புடவை வாங்கிய நெசவாளர்களிடம் தனியாக ஆர்டர் கொடுத்து வாங்கிய புடவைகளில் வண்ணமயமாய் உடுத்திக்கொண்டு அத்தையும், மாமியும், சித்தியும், பெரியமாக்களும், பாட்டிகளும் மணமக்களை வாழ்த்தினார்கள்.
காலை டிபனுக்குப் புதுமையாக எல்லாருக்கும் காஞ்சீபுரம் இட்டிலியும் சேர்த்து பரிமாறப்பட்டது. டீ, காபி நொறுக்குத் தீனிகள் பரிமாறியது டீக்கடை மயிலேதான்.
திருமணம் முடிந்ததும் பாரியின் காதில் “அன்னைக்கு பய்யன் வேஷத்தில் உங்க கூட நம்ம கடைக்கு வந்தது அண்ணிதானே” என்று கேட்டுவிட்டு பாரி அவன் வாயைப் பொத்தவும்
“மாமனார் வீட்டுக்கு வரும்போது அப்படியே கடைக்கும் வரணும்” என்று வேண்டுகோள் வைத்தான்.
அடுத்து சில நாட்கள் கழித்து சரியாக சொன்னால் மார்ச் மாதம் ஐந்தாம் தேதி, சுமோவில் அமர்ந்தவண்ணம் வானில் தெரிந்த நிலவை ரசித்தபடி கை விரல்களைப் பிணைத்தபடி தோளில் சாய்ந்தபடி தெரிந்த ஜோடி ஒன்று ஏகாந்தத்தில் மூழ்கியிருந்தது.
“நான் அன்னைக்கு உங்க வீட்டில் விட்டுட்டு வந்ததும் உன்னை விட்டு விலகியே இருந்தேனே லல்லி… நீ நெருங்கினப்ப கூட உன் கிட்ட கடுமையாவே நடந்துகிட்டேனே… உனக்குக் கோபம் வரலையா”
“கோபம் இல்லை வருத்தம்தான். அதுவும் பொங்கல் வச்ச அன்னைக்கு மறைஞ்சிடுச்சு”
“என்ன காரணமோ” என்று அவள் கைவளையல்களை அசைத்து அவன் சப்தம் எழுப்ப
“அத்தை என்னை பொங்கல் வைக்க அமுதாவுக்கு உதவி பண்ண சொன்னப்ப என்னால மறுக்கவே முடியல… மத்த யாராவது என்னை அமுதா அளவுக்கு அவமானப்படுத்துற மாதிரி பேசியிருந்தா நடந்திருக்குறதே வேற… ஆனால் அதையும் மீறி சகிச்சுகிட்டது என் பாரிக்கு நிச்சயம் பண்ணிருக்க பொண்ணுன்னு ஒரே காரணம்தான்”
“மனசு வலிச்சிருக்குமே” என்றான் பாரி.
“ரொம்ப… அப்பறம் பூஜை அன்னைக்கு… நியாயமா என் வாழ்க்கையைத் தட்டி பறிக்க அமுதா வைக்கிற பொங்கல். அதுக்குத் தடங்கல் ஏற்படுற விதத்தில் பானை உடைஞ்சது எனக்கு சந்தோஷத்தை தானே தந்திருக்கணும். அதை எப்படியாவது சரி செஞ்சு பொங்கலை வச்சுடனும்னு தான் என் மனசு வேண்டுச்சு. உங்கம்மா சாதாரணமா பொங்கல் வைக்க செய்ய சொன்ன உதவியே எனக்கு அந்த அளவுக்குக் கடமை உணர்ச்சியைத் தூண்டினபோது, என்னை எங்கப்பாட்ட பத்திரமா ஒப்படைக்கறதா ஒத்துகிட்ட உங்களால் எப்படி துரோகம் செய்ய முடியும். நான் உங்களை லவ் பண்றதா அந்த சமயத்தில் சொல்லிருந்தா என்னென்ன கலாட்டா நடந்திருக்குமோ”
“அதுதான் யோகினி நீங்க உங்க இயற்கை கிட்ட சொல்லி கல்யாணத்தை நடக்க வச்சுட்டிங்களே”
“சரியான நேரத்தில் காதலை நீங்க வெளிபடுத்தலைன்னா நம்ம அப்பா அம்மா மனசு மாறி இருக்கும்னு நினைக்கிறிங்களா”
“சரி விடு, நடந்தது எல்லாமே நமக்கு நன்மையாவே நடந்தது. லல்லி, இன்னைக்கு மார்ச் அஞ்சு… “
“தெரியும்”
“மனசார இயற்கைட்ட கேட்டா அது கண்டிப்பா கிடைக்கும்னு மூணு மாசத்துக்கு முன்னாடி இதே இடத்தில்தான் நீ சொன்ன”
“அதுக்கு நீங்க கூட மார்ச் அஞ்சாம் தேதி அந்த முயற்சி பலிச்சுதா இல்லையான்னு சொல்றேன்னு சொல்லிருந்திங்க. சொல்லுங்க பலிச்சுதா”
“நூறு சதவிகிதம். ஆனால் நீ சொன்ன அந்த தியானம்தான் இன்னும் ட்ரை பண்ணி பாக்கல… இப்பத்தான் பண்ணப் போறேன்” என்றபடி அன்று லலிதா அமர்ந்திருந்ததைப் போல கண்மூடி அமர்ந்து கொண்டான் “புரிஞ்சுது… புரிஞ்சுது… கண்டிப்பா நம்புறேன்” என்று யாரிடமோ பேசுவதைப் போலக் கண்மூடிப் பேசிவிட்டுத் திறந்தான்.
“என்ன புரிஞ்சது”
“இல்ல இன்னும் மூணு வருஷம் கழிச்சு இதே நாள் இங்க குடும்பத்தோட வருவோமே… அப்ப நம்ம ரெட்ட பிள்ளைங்க தியானம் பண்ண விடாதுன்னு இயற்கை சொன்னிச்சே… உனக்குக் கேக்கல”
அவன் காதைப் பிடித்துத் திருகியவள் “ரெட்ட பிள்ளையா… “ என்று கேட்க…
“பின்ன மூங்கிலரிசி கஞ்சி வச்சு தினமும் எங்கம்மாவும் உங்கம்மாவும் எதுக்குத் தராங்கன்னு நினைக்கிற…”
“மூங்கிலரிசியா… “
லலிதாவை அருகே இழுத்து காதில் பாரி ரகசியம் பேசத் துவங்க, அந்த நிலவொளியில் லலிதாவின் முகம் வெட்கத்தில் குங்குமமாய் சிவந்தது.
ஊரு கண்ணே படும்படி உறவாடும் கனவே தொடருதே
நெனவாகும் கனவே அருகிலே உனைத் தூக்கி சொமப்பேன் கருவிலே
மடிவாசம் போதும் உறங்கவே நீ தானே சாகா வரங்களே
தமிழே தமிழே வருவேனே உன் கரமா
கொடியே கொடியே அழுதேன் ஆனந்தமா
அழகா அழகா குயிலாவேன் உன் தோளில்
அழகி அழகி இது போதும் வாழ்நாளில்