கோவிலில் நடந்த பிரச்சனைகளைக் கண்டும் அதில் முழுக்க கவனத்தை செலுத்தமுடியாது சோர்வாக உணர்ந்தாள் லலிதா. அவளது பெற்றோர் பாரியின் பெற்றோருக்கு தைரியம் சொல்ல அவர்களுடன் நிற்க, அவளுக்குத் துணையாக சின்னம்மா அமர்ந்து கொண்டார்.
இதற்கு நடுவே வெங்கடேசனை சரவணன் அடிக்கப் போனதில் தள்ளு முள்ளு நடக்க அங்கு நடந்த களேபரத்தில் சிறுவன் ஒருவன் கீழே விழப்போக, அவனைப் பிடித்தாள் லலிதா படிகளில் உருண்டு கீழே விழ, “ஐயோ லலிதா… “ என்று சின்னம்மா கத்த, எங்கிருந்துதான் வந்தானோ பாரி “லல்லி” என்று இரண்டிரண்டு படியாக இறங்கி வருவதற்குள் கூர்மையான கல் ஒன்று லலிதாவின் வயிற்றில் கீறி விட்டிருந்தது. கைகாலில் சிராய்ப்பு ஏற்பட்டு தோல் வழண்டிருக்க, வயிற்றில் ஏற்பட்ட காயத்திலிருந்து குபுக்கென ரத்தம் கொப்பளித்தது.
ரத்தத்தைக் கண்டதும் அவளைத் தூக்கி வண்டியில் போட்டான். வழியில் ஓடி வந்த கபிலரிடம் “அப்பா லலிதா வயித்தை கல்லு கிழிச்சிருச்சு… சீக்கிரம் வண்டியை எடுங்க” என்றான். அதற்குள் விஷயம் கேள்விப்பட்டு ஓடி வந்த குடும்பத்தினர் கிளம்பிக் கொண்டிருந்த ஜீப்பில் தொத்திக் கொண்டனர்.
“லல்லி… என்னம்மா, உனக்கு என்னாச்சு கண்ணம்மா… இதோ போயிடலாம்டா… “ என்று அவளை மடியில் சாய்த்தவண்ணம் சமாதனப் படுத்திக் கொண்டு உலகையே மறந்திருந்த மகனை அதிர்ச்சியுடன் பார்த்த வண்ணம் வண்டியை ஓட்டினார் கபிலர். பார்வதியும் தெய்வானையும் தங்களது முகங்களைப் பார்த்துக் கொண்டனர்.
“அண்ணி…” என்று அழுதுக்கொண்டே தெய்வானை பார்வதியைப் பார்த்து அதிகம் அழ, எதையோ உணர்ந்து கொண்டதைப் போலப் பார்வதியும் தெய்வானையைக் கட்டிக் கொண்டு கண்ணீர் உகுத்தார்.
“தெய்வானை ஒரு வருஷத்துக்கு முன்னாடி தெய்வம் உன்னைக் கண்ணில் காமிச்சிருக்கக் கூடாதா” என்று புலம்ப.
கடல் பொங்கி கட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிந்து வந்ததைப் போலக் காதல் நெஞ்சம் தன்னை மறைத்துப் போட்டுக் கொண்ட வேஷங்களை களைத்து வெளிவந்தது. தங்களை சுற்றிலும் நடந்ததை உணரும் நிலையில் லல்லியோ பாரியோ இல்லை.
“அம்மாடி லலிதா.. அப்பவே ஒரு மாதிரி இருக்குன்னு சொன்னியேம்மா… ஊருக்குக் கிளம்பிருக்கனுமோ” என்று மகளின் பாதத்தை மடியில் வைத்து கொண்டு வந்த குணசீலன் கண்ணீர் உகுக்க, துரைராஜ் பாரிக்குத் தந்திருந்த சுமோவில் நெருக்கி அடித்துக் கொண்டு அனைவரும் அமர்ந்திருந்தனர்.
மருத்துவமனைக்கு சென்றதும் வேறு யாருக்கும் காத்திருக்காது லலிதாவைக் கையில் ஏந்திக் கொண்டு ஓடினான் பாரி.
அவசரம் புரிந்து தனது அறையிலிருந்து வெளியே வந்த மருத்துவர் லலிதா வலியில் துடிப்பதைப் பார்த்துவிட்டு “எங்கம்மா வலிக்குது” என்றார்
“டாக்டர், கல்லு குத்தி” என்ற பாரியிடம் கையைக் காட்டி அமைதி காக்க சொல்லிவிட்டு லலிதாவைப் பார்த்தார்.
“வயிறு.. இந்த இடத்தில்…” லலிதா திக்கித் திணறிக் காட்டினாள். “காலைல இருந்து வலி இப்ப அதிகம்…. அ…ம்… மா… “ என்று டாக்டர் தொட்டதும் வலியில் துடிக்க
“டாக்டர் கையை எடுங்க லல்லிக்கு வலிக்குது” என்று கதறும் ஆண்மகனை ஒரு பார்வை பார்த்துவிட்டு
“நர்ஸ்… உடனே ஆப்ரேஷன் தியேட்டரை ரெடி பண்ணு. அப்பண்டிசைட்டிஸ் மாதிரி இருக்கு. அர்ஜென்ட்டா சர்ஜரி பண்ணனும்” என்று உள்ளே சென்றார். பரபரப்பு அனைவரையும் தொற்றிக் கொண்டது.
“என்னால முடிஞ்சா அளவுக்கு முயற்சி பண்றேன். நேரம் மட்டும் தவறியிருந்தா காப்பாத்துறது கஷ்டம்” என்று டாக்டர் சொன்னதும்.
“நோ…. டாக்டர்… அப்படி மட்டும் சொல்லிடாதிங்க… என் லல்லி பொழைச்சுப்பா…. “ என்றவன் லலிதாவிடம் ஓடிப் போய் வெறிப்பிடித்தவன் போல அவளது முகத்தைத் தன்னிடம் திருப்பி
“நீ ஆசைப்பட்டு கேட்ட மாம்பழக் கலர் சேலை என்கிட்டத்தான் இருக்கு. திரும்பி வா… அந்த சேலையைக் கட்டிக்கிட்டு என்னோட மனைவியா என் வீட்டுக்குள்ள வருவ… வரணும்… இதைத்தான் இத்தனை நாளா அந்த இயற்கைக்கு தினமும் எழுதிட்டு இருக்கேன். மனப்பூர்வமா கேட்குற எதையும் இயற்கை தரும்னு எனக்குக் கத்துத் தந்தது நீதான். இதையும் உறுதியா நம்புறேன்” என்று அவளிடம் சொல்லிவிட்டே அறுவை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தான். ‘மீண்டு வருவேன்’ என்ற தீர்க்கத்துடன் அவனிடம் பார்வையால் விடை பெற்றாள் லலிதா.
பாரியின் உயிர் வலியை, லலிதாவின் காதலை இருவரின் பெற்றோரும் கண்டனர். லலிதா வேறொருவனுக்கு நிச்சியக்கப் பட்டவள் என்ற உணர்வே பாரியிடம் இல்லை. பாரியின் திருமணம் பற்றிய நினைவு கூட லலிதாவிடம் காணப்படவில்லை. நாடகம் போட்ட மனம் ரெண்டும் தங்களது வேஷம் களைந்தன.
நாடகம் முடிந்த பின்னாலும்
நடிப்பின்னும் தொடர்வது என்ன
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே
உயிரே வா
அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவர்களிடம் வந்தார் மருத்துவர் “சரியான நேரத்தில் கொண்டு வந்திங்க இன்னும் கொஞ்ச நேரம் போயிருந்தா சீரியஸ் கேசாயிருக்கும்” என்றார்.
“அப்பன்டிசைட்டிஸ் அவ்வளவு பயங்கரமானதா”
“பர்ஸ்ட் ஆயிருந்தா உயிர் பிழைக்கிறது கஷ்டம். ஆனால் நீங்கதான் சரியான நேரத்துக்கு வந்துட்டிங்களே. பேஷன்ட் மயக்கத்தில்தான் இருக்காங்க. சிஸ்டர் சொன்னதும் போயி பாருங்க” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் மருத்துவர்.
“ஏற்கனவே வயிறு வலிக்குதுன்னு அக்கா சொல்லிட்டு இருந்தா… ரொம்ப இளைச்சு வேற போயிட்டா. இதுனாலதானாம்மா” என்று ப்ரீதா கேட்க
“இதுவும் காரணமா இருக்கலாம்” என்று பாரியைப் பார்த்தவண்ணம் தெய்வானை சொல்ல, பாரி கண்கள் கலங்க கீழே குனிந்து கொண்டான். இருந்தும் அப்போதிருந்த மனநிலையில் லலிதாவின் பெற்றோரிடம் அவனால் பேச முடியவில்லை.
ஆனால் அமுதா என்னவானால், அந்தத் திருமணம் என்னவாயிற்று எதுவும் அவனது நினைவில் வரவில்லை. அவனுக்கு மட்டுமல்ல அங்கிருந்த இரு குடும்பத்தினருக்கும் நினைவில் நிற்கவில்லை. ஆனால் லலிதாவிற்கு அறுவை சிகிச்சை நடந்த சமயத்தில்தான் கோவிலில் அமுதா வெங்கடேசன் திருமணப் பஞ்சாயத்து நடந்து கொண்டிருந்தது. தீர்ப்பு வந்ததும், அமுதாவின் அப்பா துறையிடமிருந்து கபிலருக்கு அழைப்பு வந்த உடன்தான் கோவிலே அவர்களுக்கு நினைவுக்கு வந்தது.
துரையும் நடந்ததை அவர்களிடம் சொல்லாமல் எடுத்தவுடன் லலிதாவைப் பற்றி விசாரித்தார். தனது பேரப்பிள்ளையைக் காப்பாற்றப் போய்தானே அந்தப் பெண் அடிபட்டுக் கொண்டாள்.
“ஆழமா கல்லு குத்திருக்கும் போலிருக்கு. டாக்டர் சிகிச்சை தந்திருக்கார். அந்தப் பொண்ணு மயக்கத்திலிருக்கு” என்றார் அவரிடம் கபிலர். அதற்கு மேல் எதற்கு மற்ற விவரங்கள் எல்லாம். தேவையில்லை என்றே அவருக்குப் பட்டது.
அந்தப் பக்கம் பேசியதைக் கேட்டுவிட்டு “இன்னைக்கு வேண்டாம் மாப்பிள்ளை. நான் லல்லி அப்பாகிட்ட நீங்க நன்றி சொன்னதா சொல்லிடுறேன். லலிதாவை டிஸ்சார்ஜ் பண்ணதும் நம்ம வீட்டுக்குத்தான் கூட்டிட்டு போறதா இருக்கேன். இன்னும் ரெண்டு நாள் கழிச்சு பாக்க வாங்க” என்றார். மற்றபடி கபிலரும் அமுதாவைப் பற்றிக் கேட்கவில்லை, துரையும் சொல்லவில்லை.
லலிதாவை அவள் குடும்பத்தினர் பார்த்துவிட்டு வந்ததும் பாரி அறைக்கு உள்ளே சென்றான். மயக்கதிலிருந்த அவளது கைகளை லேசாக வருடினான்.
‘கோடி பேரில் உன்ன மட்டும்… அறிவேனே தொடுகிற மொழியிலே’ என்று சொல்வதைப் போல அவளது கண்கள் லேசாகத் திறந்தது.
“லல்லி” தொண்டை அடைத்தது பாரிக்கு
“மா..ம்..ப..ழ சே..லை… என..க்கு..த்..தான்” என்றாள் திணறலுடன்.
எந்த அளவுக்குத் தான் அவளுடைய உயிரில் உணர்வில் கலந்திருக்கிறோம் என்ற நினைப்புடன் “உனக்குத்தான்… உனக்கு மட்டும்தான் வேற யாருக்கும் தரமாட்டேன். நீ உடுத்திக்க அது காத்திருக்கு. பீரோலையே பாதுகாப்பா இருக்கு” என்றான்.
“சீக்கிரம் வேணும்” என்றாள்
“நீ அவ்வளவு சீக்கிரம் குணம் ஆறியோ அவ்வளவு சீக்கிரம் கட்டிக்கலாம். புடவையையும், என்னையும்” கண்ணடித்தான்.
அடப்பாவி என்ற லலிதாவின் பார்வையைக் கண்டு “இங்க பாரு லல்லி… லவ்வை ஏன் முன்னாடியே சொல்லலைன்னு சொல்லாதே. இது பத்தில்லாம் இன்னொரு நாள் பேசலாம். இப்ப தூங்கு” என்று சொல்லிவிட்டு அருகிலேயே அமர்ந்திருந்தான்.
“என்னங்க உங்க மாப்பிள்ளை மாதிரியே என் பொன்னுக்கும் தங்கமா தாங்குற புருஷன் கிடைச்சா நல்லாருக்கும்” என்று தங்களிடம் பேசிய செவிலியிடம் ஆமாமென்றும் சொல்ல முடியாது இல்லை என்றும் மறுக்க முடியாது திணறிக் கொண்டிருந்தது குணசீலனும் தெய்வானையும்தான்.
நான் முன்பே சொல்லியிருந்த மாதிரி குணசீலன் வாக்கு தருவது, கொள்கைகளை கடைபிடிப்பது போன்ற விஷயங்களில் எல்லாம் தீவிரமானவர். பாரியின் காதலை அவரது தகப்பன் மனம் ஏற்றுக் கொண்டது. ஏனென்றால் அவளது மகளுக்கு அவனைவிட மனதுக்குப் பொருத்தமான ஒருவனை அவரால் தேட முடியாது என்பதை உணர்ந்தே இருந்தார். ஆனால் ராஜனுக்கு தந்த வாக்கு. திருமண நிச்சயம். அதை நினைக்கும்போது கலக்கமாகவே இருந்தது. காதலர்களுக்கு மனம் இணைவதுதான் தலையாயப் பிரச்சனை. ஆனால் பெற்றவர்களுக்கு… ஊர்ப் பேச்சை, உற்றார் கோபத்தை பிள்ளைகளுக்கு பதில் எதிர்கொண்டு கவசமாய்க் காப்பது அவர்கள்தானே.
அதுவும் ராஜன் வேறு தன் மகள் மேல் வீண் ஆசை வளர்த்திருந்தான் என்றால்… என் மகள் லலிதா துரோகியாகிவிடுவாளே… ஒரு துரோகத்தின் மீது தொடங்கப் படும் வாழ்க்கை எப்படி நல்லவிதமாய் அமையும். இது எதையும் நினைக்கவே பயமாக இருந்தது குணசீலனுக்கு.
அவரை உணர்ந்தவராய் கபிலர் “குழப்பம் வேண்டாம். பிரச்சனையை ரெண்டு வாரம் ஆறப் போடுங்க… எல்லாம் சரியாயிடும்” என்றார்.
ஆனால் சின்னம்மாவின் பார்வையோ வேறு மாதிரி இருந்தது. மூங்கில் பூத்தால் இப்படி அசம்பாவிதங்கள் நிகழும் என்று சொன்னது உண்மையாகிவிட்டதே என்று வருத்தப் பட்ட பார்வதியிடம்
“அடப்போடி… எதுக்கெடுத்தாலும் தடங்கல், சகுனத் தடைன்னு பேசிகிட்டு… மழை வெள்ளம் வந்ததால்தான் பாரி லலிதா சந்திச்சாங்க… மூங்கில் பூத்ததாலத்தான் கோவிலுக்கு வந்த… கோவிலுக்கு வந்ததாலத்தான் லலிதாவைப் பார்த்த… அமுதாவோட மனசும் புரிஞ்சது. அமுதாவுக்கும் பாரிக்கும் ஒத்துவராதுன்னு நம்ம எல்லாருக்கும் தெரிஞ்சது. அமுதா கல்யாணத்துக்கு ஒரு நாள் முன்னாடி இப்படி செஞ்சிருந்தா என்ன செஞ்சிருப்ப… “ என்று கேள்வி கேட்டார்.
“பொங்கல் பானை உடைஞ்சதுன்னு வருத்தப்படுவியா.. இல்லை உடையாத வெண்கலப்பானையில் தெய்வாம்சமா ஒரு பொண்ணு கைல பொங்கல் செஞ்சதது நினைச்சு சந்தோஷப் படுவியா… முன்னாடி நீ தேர்ந்தெடுத்தது மண் பானை. சீக்கிரம் உடைஞ்சுடுச்சு. பூஜைக்கு அந்த வராஹியே பார்த்து வெண்கலப் பானையைத் தேர்ந்தெடுத்திருக்கு. பைத்தியக்காரி இதுதான் கடவுள் போட்ட முடிச்சு. அதை மாத்த நினைச்சா நடக்குமா” என்று சொல்ல
“நீங்க வேற சின்னம்மா… அமுதா இப்ப பிரச்சனையே இல்லை. நம்ம எல்லாரும் ஒரே மனசோட பாரி லலிதா கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னாலும் லலிதாவுக்குப் பாத்திருக்குற மாப்பிள்ளைக்கு என்ன பதில் சொல்ல…” என்று தனது ஆதங்கத்தைச் சொன்னார் பார்வதி.
“அந்தப் பிள்ளைங்க மனசு ஒண்ணு பட்டிருந்தாலும் பெத்தவங்க முடிவுக்குக் கட்டுப்பட்டு இத்தனை நாள் வெளிய காட்டாம இருந்தாங்க. இப்ப அந்தக் கடவுளே பூஜை வச்சு ரெண்டு பேரையும் ஒண்ணு சேர்த்திருக்கு. உங்க மனசையும் மாத்திருக்கு. அதே மாதிரி ஏதாவது அற்புதம் நடக்கும் இந்தத் தடையும் விலகும்னு என் மனசு சொல்லுது. ஏன்னா சாமிகிட்ட மனசார பிரார்த்தனை பண்ணா அது நிறைவேறும்னு எங்கம்மா சொல்லுவாங்க” என்றார்.
“நீங்க சாமின்னு சொல்றதைத்தான் என் பொண்ணு இயற்கைன்னு சொல்லுவா… உறுதியா நினைச்சால் அதை அடைய அவங்கவங்க மனசே வழி காட்டும்னு சொல்லுவா… “ என்றார் தெய்வானை.
“அதானே எண்ணம் போல் வாழ்வு. பாரி லலிதா கல்யாணம் உறுதியா நடக்கும்னு நான் நம்புறேன். ஆனால் அமுதா இவங்க வாழ்க்கையை விட்டு விலகின மாதிரி லலிதாவுக்குப் பாத்திருக்குற பையன் விலகுவானான்னு தெரியல. அப்படி அவன் விலகலைன்னா இந்தக் காதல் என்னவாகும் நினைக்கவே பயம்மா இருக்கு” என்றார் பார்வதி.