Tamil Madhura

இனி எந்தன் உயிரும் உனதே – 24

அத்தியாயம் – 24

 

முதாவிற்கு பொழுதுபோக்கே சினிமா மற்றும் நாடகங்கள் பார்ப்பது, அந்த நாடகத்தில் தப்பித் தவறி வரும் ஒன்றிரண்டு நல்ல விஷயங்கள் கூட அவள் மனதில் பதியாது. அவள் மனதில் பதிவதெல்லாம் நடிகர்களின்  நடை உடை பாவனைகள், அலங்காரங்கள் இதெல்லாம்தான்.

காதலுக்கு உருகி உருகி கதாநாயகன் பேசுவதும், வீறு கொண்டு ஊரையே எதிர்த்து நின்று சூரியவம்ச பாணியில் ஒரே பாட்டில் முன்னேறி அவர்கள் காதலை எதிர்த்தவர்களுக்குப் பாடம் புகட்டுவதும் அவளுக்கு மிகவும் பிடிக்கும்.

காதலர்களை எதிர்க்கும் உறவினர்களை எதிர்த்து  ரத்தம் கொதிக்க மனோகரா படத்தில் வரும் நடிகர் திலகத்தின் வசனத்தை உல்டா செய்து பேசுவாள். தனது உறவினர்களைத் திட்டி “காதல்னா என்னான்னு தெரியுமாடா மண்ணாத்தை… அது ஒரு பீலிங்… அப்படியே உயிரோடு கலந்து நாடி நரம்பெல்லாம் ஓடும். அவனைப் பார்த்ததும் அப்படியே மனசு வானத்தில் லேசா பறக்கும்… இதெல்லாம் நீ பாத்து வச்சிருக்குற பேமானி மாப்பிள்ளைட்ட சொல்லு… கருமம் அவன் மூஞ்சியைப் பாத்தாலே வாந்திதான் வருது” என்று வசனம் பேசுவாள்.

வீட்டில் இப்படியெல்லாம் பேசினால் விளக்குமாறு பிய்ந்துவிடும் என்று தெரியும் அதனால் அலைப்பேசியில் டப்மாஷ் செய்து விடியோவை தனது நண்பிகளுக்கும் வெங்கடேசுக்கும் இன்னும் சிலருக்கும் அனுப்புவாள். அவர்களும் அதை ஒரு காமெடியாக எடுத்துக் கொண்டு “அமுதா சூப்பரு” என்று பதில் அனுப்ப, அது அவளது டப்மாஷுக்கு மட்டுமே என்பது புரியாமல் அவளது கருத்துக்கும் சேர்த்து என்றே நம்ப ஆரம்பித்தாள்.

 

தனக்கென ஒரு கதாநாயகன் வருவான். அவன் தளபதியைப் போல டிரெஸ்ஸிங் சென்சுடன், தலையைப் போல காந்த சிரிப்புடனும் இருப்பான். உலகம் முழுவதும் அவனுடன் சுற்றுவேன். அனுஷ்கா மாதிரியும், நயன்தாரா மாதிரியும் உடைகள் வாங்கி போட்டுக் கொள்ள வேண்டும். அதுவும் குறிப்பாக முதல் முறை பாரினிலிருந்து விமானத்தில் இறங்கும்போது ‘ஊரெல்லாம் உன்னைக் கண்டு’ பாட்டில் நயன்தாரா அணிந்து வருவதைப் போன்ற கருப்பு நிற காக்ரா சோளி அணிந்து கொண்டு, அதில் வருவது போலவே முதுகில் ‘மயில் டாட்டூ’ போட்டுக் கொண்டு  பந்தாவாக ஊருக்கு வரவேண்டும். அதைக் கண்டு உறவினர்கள் “அமுதாவா வந்திருக்கு நாங்க நயனதாரான்னுல்ல நினைச்சோம். சினிமா கதாநாயகி மாதிரி இருக்க. அம்மாகிட்ட சொல்லி திருஷ்டி சுததிப் போடணும்” என்று சொல்ல வேண்டும்.

 

இப்படியான அரைவேக்காட்டுத்தனமான கனவுகள் மட்டுமே அவளுக்கு மனதில் ஆழமாகப் பதிந்து இருந்தது. வெளியுலகு தெரியாமல் இருந்தது வேறு அதற்கு உதவியாகவே இருந்தது. கற்பனைக் கோட்டையில் வாழும்  அந்த மனதில் நிதர்சன வாழ்க்கை வாழும் பாரியை பொருத்திப் பார்க்க முடியவில்லை. திருமணம் என்பது வினாடி நேரத்தில் உணர்ச்சி வேகத்தில் எடுக்கும் முடிவா என்ன. அவளது குழம்பிய மனது வேறொருவருக்கு சாதகமானது கூட தெரியாமல் நிற்கிறாள் அமுதா.

 

சற்று முன்பு கோவிலில் நிலவிய மங்களகரமான சூழ்நிலை மறைந்து ஒரு கலவரபூமியாகிவிட்டிருந்தது. சரவணன் தனது விவரமறியா தங்கையின் கழுத்தில் தாலி கட்டிய வெங்கடேசனின் சட்டையைப் பிடித்து பளார் பளாரென அடிக்க, அவனது காலைப் பிடித்துக் கொண்டு வெங்கடேசன்

 

“என்னை மன்னிச்சுடுங்க மாமா… அமுதா சொன்னதுக்காகத்தான் தாலி கட்டினேன். உங்க காலில் நாயா கெடப்பேன் மாமா” என்று வெங்கடேசன் கெஞ்ச, இதென்ன நம்ம படக் கதாநாயகன் ஊரையே எதிர்த்து நின்னு காதலியைக் காப்பாத்துவானே இவன் என்ன அண்ணன் காலைப் பிடிச்சுக் கெஞ்சுறான் என்று அமுதா தூணுக்குப் பின் மறைந்து கொண்டு விழித்தாள்.

 

“அடச்சீ… ஆம்பளை சிங்கமா நிமிர்ந்து நில்லுடா… அப்படி என்ன கொலைக் குத்தமா பண்ணிட்ட… நீ தாலி கட்டினது குத்தம்னா அவங்க வீட்டு பொண்ணு கழுத்தை நீட்டினதும் குத்தம்தானே… உனக்கு மட்டும் தண்டனை தருவாங்களா பெரிய மனுசங்க… அய்யா பெரியவங்களே… அந்தப் பொண்ணு தூண்டுதல் இல்லாம என் மவன் தாலியைக் கட்டிருக்க மாட்டான். அதுதான் அப்பப்ப வீடியோ எல்லாம் எடுத்து பாரியைப்  பிடிக்கலைன்னு என் மகனுக்கு அனுப்பும். இவன் பாவம் அப்பிராணி. இரக்கப்பட்டு தாலி கட்டிடானுங்க” என்று தைரியமாக வெங்கடேசனின் தாய் பேச…

 

“அட வாயை மூடு. என் பொண்ணுக்கு இரக்கப்பட நீ யாரு… சரவணன் ஆசைப்பட்ட ஒரே காரணத்துக்காக உன் பொன்னுக்கு நகை போட்டுக் கல்யாணம் பண்ணிட்டு வந்ததோட மட்டுமில்லாம  கட்டின நாளிலிருந்து நாங்கதான் இரக்கப்பட்டு உங்க குடும்பத்துக்கு மாசாமாசம் பணம் அனுப்பிட்டு இருக்கோம். உன் மகன் இந்தப் பாவியைப் படிக்க வச்சு, வேலை வாங்கித்தந்து, டிக்கெட் போட்டு வெளிநாட்டுக்குக் கூட்டிட்டு போறதுக்கு நீங்க காட்டுற நன்றிக் கடன் ரொம்ப நல்லாருக்கு.

ஏண்டி அமுதா… காலைல கூட பாரி வாங்கிக் கொடுத்த சேலையை ஆசையா கட்டிகிட்டியே… இப்ப எங்க தலைல கல்லைத் தூக்கிப் போட்டுட்டியே” என்று அமுதாவை இழுத்து வைத்து அவளது அம்மா இரண்டு மொத்து மொத்த…

 

“ஏண்டி… அவளே ஒரு லூசு… ஐஸ் வச்சுப் பேசி கவுத்துரக் கூடாதுன்னுதானே உங்கம்மாவும் தம்பியும் வீட்டுப் பக்கமே வரக்கூடாதுன்னு சொல்லிருந்தேன்… உங்க குடும்பமே சேர்ந்து எங்களைக் கவுத்துட்டிங்களே… “ என்று வளர்மதியிடம் சரவணன் கத்த, வளர்மதி என்ன செய்வது என்று தெரியாமல் பெண்கள் பக்கம் ஒளிந்து கொண்டாள்.

 

“ஏம்பா… உங்க இஷ்டத்துக்குத் தாலி கட்டிக்கிறதெல்லாம் விளையாட்டா இருக்கா… பொம்மை கல்யாணம் மாதிரி நடக்குறதெல்லாம் நாங்க ஒத்துக்க முடியாது. ஏண்டா பஸ்ஸில் துண்டைப் போட்டு சீட்டு பிடிக்கிற மாதிரி தாலியை பொசுக்குன்னு கட்டிப் புட்ட…

 

பெத்தவங்க பெரியவங்க யாரும் கவலைப்படாதிங்க… யாரு வேணும்னாலும் ஆசைப் படுற பொண்ணு கழுத்தில் மஞ்சள் கயித்தைக் கட்டலாம். அப்படி கட்டிட்டா உடனே அந்தப் பொண்ணு அவனுக்கு சொந்தம்னு சொல்ற காலமெல்லாம் மலையேறிப் போச்சு. தீர விசாரிச்சுட்டுத்தான் எங்க முடிவை சொல்லுவோம்” என்றனர் அங்கிருந்த பெரியவர்கள்.

 

தம்பிக்கு நாத்தனாரைக் கல்யாணம் செய்து வைத்தால் புகுந்த வீட்டிலும் தனது கொடி பறக்கும் அதே சமயத்தில் பிறந்த வீட்டுக்குத்தான் செய்வது நாத்தனாருக்கு செய்யும் கணக்கில் வந்துவிடுவதால் மாமனார் மாமியார் முனுமுனுக்க மாட்டார்கள் என்று எண்ணியே வளர்மதி தனது தம்பிக்கு அமுதாவைக் கல்யாணம் செய்து வைக்க விருப்பப்பட்டாள். இவை எல்லாம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடந்தால்தானே சாத்தியப்படும். அவளது முட்டாள் நாத்தியும், பேராசைக்காரப் பிறந்தவீடும் செய்த காரியத்தால் வளர்மதியின் வாழ்க்கையும் அல்லவா ஆட்டம் கண்டு விட்டது.  இனி காலம் முழுவதும் அவளது கணவன் சொல்லிக் காண்பிப்பானே…

 

வளர்மதியின் தாய், மகளின் இந்தக் கவலை எல்லாம் புரியாமல் தங்களுக்கு இரக்கப்பட்டு உதவி செய்கிறேன் என்று சொன்ன சம்பந்தியைப் பழி வாங்கிவிடும் வேகத்தில் “வெங்கடேசு உன் போனைக் கொடுடா…” என்று வாங்கி

 

“எனக்கு வீடியோ எல்லாம் பாக்கத் தெரியாது. என் பய்யன் காமிக்கிறதுதான். இதுல பூரா இந்த அமுதா கட்டாயக் கல்யாணத்தைப் பத்தியும், அதுக்கு உதவி செய்ற உறவுக்காரங்களை என்ன செய்யணும்னும் பேசி அனுப்பிருக்கு. என் மகன் ஒவ்வொன்னா காமிச்சு வேதனைப் பட்டிருக்கான். அந்தப் பிள்ளைக்கு ஆறுதலா பேசிருக்கான். அப்படி அன்பா பேசினவனை உங்க வீட்டுப் பொண்ணு வளைச்சுப் போட்டுட்டான்னு நான் சொல்றேன்” என்றார் மனசாட்சி இல்லாமல்.

 

காணொளிகளை அனைவரும் பார்க்க ஆரம்பித்தார்கள். அமுதா ஏதோ விளையாட்டுக்கு செய்த விடியோக்கள் அவளுக்கு எதிராக வேலை செய்ய, ஊரார் அனைவரும் “ரெண்டு பேரும் காதலிச்சிருப்பாங்க போல. நம்ம துரை கொஞ்சம் மொரட்டு ஆளா… அதுனால அப்பாவுக்கு பயந்து பாரி கூட கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிருக்கு. இருந்தாலும் அமுதாவுக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கலைன்னு அழுது வெங்கடேசுக்கு வீடியோ அனுப்பிருக்குப்பா… அதனாலதான் ரெண்டு பேரும் ஒரு முடிவுக்கு வந்து கல்யாணம் பண்ணிருக்காங்க போலிருக்கு. நம்ம பாரிக்கு என்ன குறைச்சல் வேற நல்ல பொண்ணைப் பாக்கலாம். அமுதா பிடிச்ச இடத்தில் வாழட்டும். பாரிக்கு வேணும்னா என் அக்கா பொண்ணைக் கட்டி வைக்கலாம்”  என்று வம்பு பேச்சை ஆரம்பித்தனர். அது வேறு அமுதா வீட்டினரைக் கொதிப்படையச் செய்தது.

சிறிது நேரம் “க்…கும்.. “ கனைத்த வண்ணம் பெரியவர்கள் அனைவரின் கவனத்தையும் தங்கள் பக்கம் திருப்பினார்கள்.

“இந்த வீடியோ எல்லாம் பாக்குறப்ப… ரெண்டு விஷயத்தை சொல்லலாம். அந்தப் பொண்ணு எதையோ சொல்லனும்னு நினைக்குதுன்னும் சொல்லலாம். இல்ல… ஏதோ விளையாட்டுக்கு வசனம் பேசி அனுப்பிருக்கு அதை இவங்க தப்பா புரிஞ்சிருக்காங்கன்னும் சொல்லலாம். ஏன்னா ‘உன்னைக் கொன்னுடுவேண்டா’ன்னு ஒரு பிள்ளிங்கோ விடியோ அனுப்பினா அது உங்களைக் கொல்லப் போகுதுன்னு அர்த்தம் இல்லை. அதனால இந்த விடியோவை ஏத்துக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது. அதனால சம்பந்தப் பட்டவங்ககிட்ட பேசிட்டு சொல்றோம். அமுதா, வெங்கடேசு இவங்க ரெண்டு பேருகிட்டயும் முதல்ல பேசுறோம். அமுதாவுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லைன்னா பாரிகிட்ட மேற்கொண்டு பேசுறோம்” என்று சொல்லிவிட்டு அமுதா வெங்கடேசு இருவரையும் விசாரிக்க கோவிலில் இருந்த அலுவலக அறைக்கு அழைத்து சென்றார்கள்.

 

அமுதா வெங்கடேசனைப் பார்க்க அவனோ கண்களால் அவளிடம் என்னை விட்டுப் போய்விடாதே என்று கெஞ்சினான். அமுதா வீட்டுக்குப் போனாலும் செருப்படி அவளுக்குக் காத்திருக்கிறது. இந்தக் கல்யாணம் முறிந்து போனால் இந்த ஊரார் முன்பு அவளுக்கு அவமானமாகி விடும். அவளைப் பாரிக்கு மறுபடியும் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். பாரியும் அவர்கள் குடும்பத்தினரும் சற்று முற்போக்கானவர்களே… அவர்கள் சொந்தத்தில் விதவைகள், விவாகரத்தான பெண்ணுக்குத் திருமணம் செய்து வைப்பது, வேலை வாங்கித் தருவது என்று அவர்கள் முன்னின்று செய்வது வழக்கம். இருந்தாலும் பாரியைப் பிடிக்காததற்கு அவள் கற்பித்துக் கொண்ட காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன. இவை எல்லாம் அவன் மட்டும் பாரினில் இருந்தால் மறைந்துவிடும். ஆனால் பாரினுக்கு செல்வதால் வெங்கடேசனின் குறைகள் அனைத்தும் மன்னிக்கக் கூடியவையாகவே பட்டது அமுதாவிற்கு.

 

முட்டாள்கள் என்ன செய்வார்கள் அதையே அமுதாவும் செய்தாள்.

“துரை, சரவணா… அமுதா வெங்கடேசு கூட வாழ விருப்பப்படுது. அதனால நாங்க அவங்க இஷ்டத்துக்கு விடுறதுதான் நல்லதுன்னு நினைக்கிறோம்”

 

“அவளுக்கு ஒரு எழவும் தெரியாது சித்தப்பா… ஏதோ உளறுறா” என்றார் துரை பல்லை கடித்தபடி.

 

“இங்க பாரு துரை. நம்ம பெத்தவங்களா நல்லது பொல்லாதது சொல்லித் தர முடியும், கையைப் பிடிச்சு குறிப்பிட்ட தூரம் கூட்டிட்டு போக முடியும். ஆனால் நம்ம கையை மீறி ஓடிப் போயி சேத்துல விழுற பிள்ளையை என்ன செய்றது. கேட்டா காதல்னு சொல்வாங்க. தலை நரைச்சதெல்லாம் அந்தஸ்து பாத்து பிரிக்கிறோம்னு நம்மைக் குத்தம் சொல்வாங்க. காதல் கெட்டதில்லை ஆனால் எல்லாமே காதல் இல்லை. சந்தர்ப்பவாதம், மோகம், ஏமாத்து, சுயலாபம், துரோகம்  எல்லாம் காதல்னு ஒரு பசுத்தோல் போத்திட்டுதான் வரும்னு புரிஞ்சுக்குற பக்குவம் இல்லையே… “

 

“அதுக்காக அப்படியே விட்டுற முடியுமா தாத்தா” என்றான் சரவணன்.

 

“வெங்கடேசன் சொந்தக்காரன். நல்லா அமுதாவோட குணத்தைப் பத்திப் படிச்சுட்டு, ப்ளான் பண்ணியே எல்லார் முன்னாடியும் தாலிகட்டிருக்கான். நம்ம பொண்ணும் அவன் கூடதான் வாழுவேன்னு வீம்பு பிடிக்குது. அதனால நீ விட்டுத்தான் கொடுக்கணும்” என்றார் அவர்.

 

“இனிமே என் மூஞ்சிலே முழிக்காதே… டேய் வெங்கடேசா… உன்னை பாரினுக்குக் கூட்டிட்டுப் போறதுக்காக இதுவரைக்கும் ரெண்டு லட்சம் செலவு செஞ்சிருக்கேன். அந்தப் பணத்தை வைத்திய செலவு பண்ணிட்டதா நெனச்சுக்குறேன். உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ண உன்னை வெளிநாடு கூட்டிட்டு போவேன்னு கனவு காணாதே… எனக்குத் தங்கச்சியும் கிடையாது மாமியார் வீடும் கிடையாது.

 

வளர்மதி நீ எந்த வீட்டுக்கு போகணும்னு முடிவு பண்ணிட்டு வர்ற” என்றபடி அங்கிருந்து நகர்ந்து காருக்கு சென்றான் சரவணன்.

 

காரில் இருளடித்த முகத்துடன் அமர்ந்திருந்தார் துரைராஜ். சில நிமிடங்களில் வளர்மதியும் வந்து சேர, அப்படியும் டிரைவர் சீட்டில் அமர்ந்தபடி வண்டியை எடுக்காமல் யோசனையில் இருந்தான் சரவணன்.

 

“முதலில் வண்டியை எடுடா.. “ கத்தினார் துரை.

 

“முதலில் பாரிகிட்ட மன்னிப்பு கேட்கணும். அவன்தான் இதில் அதிகமா பாதிக்கப் பட்டிருக்கான்”

 

“பாரி மாமா ஆஸ்பத்திருக்கு போயிருக்கார்” என்றான் சரவணனின் மகன்.

 

“ஆஸ்பத்திரிக்கா”

 

“நீங்க சண்டை போட்டுட்டு இருந்திங்கள்ள, அப்ப நிறைய பேர் மேல வந்து விழுந்தாங்களா.. அப்ப நான் படியில விழப் போனேனா… லல்லி அத்தைதான் என்னைப் பிடிச்சுகிட்டாங்க. என்னை ஓரமா தள்ளிட்டு அவங்க பாவம் விழுந்துட்டாங்க. கல்லு ஒண்ணு அவங்களைக் கீறி ரத்தம் வந்துருச்சா வலில அழுதுட்டாங்க… பாரி மாமாதான் அவங்களைத் தூக்கிட்டு ஜீப்பில் ஏத்திட்டு வேகமா போனார். கூட சின்னம்மா பாட்டியும் போயிருக்காங்க… பாவம் மாமாவும் அழுதார். அவர் ஏம்பா அழுதாரு நம்ம அமுதா அத்தை வெங்கடேசு மாமாவைக் கல்யாணம் பண்ணிகிட்டாங்களாமே. அதுதான்  காரணமா… “ என்று கேட்க

 

“பாரிக்கு இன்னைக்கு ஒரு நாள்தாண்டா கஷ்டம். உங்கத்த ஒரு உருப்படதாவனைக் கல்யாணம் பண்ணிட்டு வாழ்க்கை முழுசும் அழப் போறா” என்றார் வெறுப்புடன்.

“விடுங்கப்பா… பெரிய மீசை வச்ச முரடன் எல்லாம் காதலுக்கு எதிரின்னு தானே நினைக்கிறாங்க. நம்ம அவளோட நல்லதுக்கு சொல்றோம்னு இனிமேல் புரிஞ்சு என்ன பிரோஜனம். பாரி மனசுக்கு நல்ல பொண்ணு கிடைக்கும்பா … “ என்று மனமார சொன்னான் சரவணன்.

 

அவர்கள் பாரி திருமணம் நின்றதால் அவமானத்தில், மனக் கஷ்டத்தில் அழுகிறான் என்று நினைத்து வருந்த, மருத்துவமனைக்கு சென்ற வண்டியிலோ லலிதா வலியில் துடிப்பதைக் கண்ட பாரி அவனுக்கே அந்த வலி வந்ததைப் போல் துடித்தான்.