அத்தியாயம் – 23
“இந்தக் கடவுள் மேல் எனக்கு நம்பிக்கையே போயிடுச்சு அமுதா” என்றான் வெங்கடேசன்.
“ஏன் வெங்கடேசு”
“காது கேட்காதவனுக்கு இளையராஜாவோட இன்னிசை கேட்க டிக்கெட் கிடைகிறதும், சாப்பிட முடியாத நோயாளிக்கு விருந்து சாப்பாடு போடுறதும்…. இதெல்லாம் நல்லாவா இருக்கு”
“ஏன் அப்படி சொல்ற”
“தக தகன்னு தங்கம் மாதிரி மின்னுற உன்னைப் பாத்து ரசிக்காம இந்தப் பாரி பானையை உடைச்சுட்டேன்னு சத்தம் போடுறானே. இந்த மடையனை என்ன சொல்றது”
“அவரை ஏன் மடையன்னு சொல்ற”
“பாரி மடையன் இல்லை நீதான் அதிர்ஷ்டம் இல்லாதவ”
அமுதாவின் முகத்தில் புதிர்.
வெங்கடேசன் அவளது அண்ணி வளர்மதியின் தம்பி. அண்ணி வீடு வசதி இல்லை. இருந்தாலும் தூரத்து சொந்தம் என்று அண்ணனுக்கு பெண் எடுத்தார்கள். அவ்வப்போது வந்து பணம், பொருள் என்று அண்ணியை சந்தித்து வாங்கிச் செல்வார்கள் வளர்மதியின் வீட்டினர். வீட்டுக்கு வரும்போதெல்லாம் அமுதாவைக் கண்டாலே அண்ணியின் தாய் உருகி விடுவார்
“தங்கம் எப்படி இருக்க… வெய்யிலில் கருத்துடப் போற… வெங்கடேசு அந்தக் குடையை எடுத்து அமுதா முகத்துக்குப் பிடி” என்பதும்
“போன தடவை அதிரசம் பிடிச்சு சாப்பிடுவான்னு வளர்மதி சொன்னா… அதனால உனக்குன்னு செஞ்சு கொண்டுவந்தேன்” என்று அவள் பக்கத்தில் நின்று ஊட்டி விடுவதும்
“அமுதா… போனதடவை நீ போட்டிருந்த பச்சை பாவடைக்கு மேட்ச்சா ரிப்பனும், வளையலும் கிடைக்கலைன்னு சொன்னியே… அதுதான் எங்க ஊர்லேருந்து வாங்கிட்டு வந்தேன்” என்று வெங்கடேசன் கொண்டு வருவதும் அமுதாவிற்குத் தான் ஒரு மகராணி என்ற உணர்வையே தரும்.
பத்தாவது பரிட்சையில் அவள் தேர்ச்சியடையாமல் போனதும் அவளது தந்தை திட்டித் தீர்த்து விட்டார். அதுவும் அவள் பரம வைரியாக வரித்திருந்த போஸ்ட் மாஸ்டர் மகள் பத்மாவுடன் ஒப்பிட்டு.
“போஸ்ட் மாஸ்டர் பொண்ணுதான் ஸ்கூல் பஸ்ட்டாம். நீ அந்த மாதிரி படிக்கணும்னு சொல்லல. பாஸாவது ஆயிருக்கக் கூடாது”
அப்போது கூட அவளது மனம் நோகாமல் பேசியது வெங்கடேசும் அவனது தாயாரும்தான்.
“வளர்மதி எதுக்கு உன் மாமனார் அமுதாவை இந்தத் திட்டு திட்டுறார். போஸ்ட் மாஸ்டர் வீட்டில் ஒரு மாசம் சம்பளம் இல்லைன்னா சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்க. தொழிலாளி வீட்டில் படிப்பு உடுத்திருக்க துணி மாதிரி. துணி இல்லாம இருக்க முடியுமா…
நம்ம அப்படியா… நம்ம அமுதாவுக்கு படிப்பு தலைல வச்சிருக்குற மல்லிகை மாதிரி. பூ ஒரு அழகுக்குத்தான். அது இல்லைன்னாலும் ஒண்ணும் குறைஞ்சு போயிடாது” என்று வெங்கடேசின் தாயார் சொன்னதும்தான் அமுதாவிற்கு சற்று ஆறுதலாக இருந்தது.
அடுத்தபடியாக தன் தம்பி வெங்கடேசனை பொறியியல் சேர்க்க வேண்டும் என்று அண்ணனிடம் அண்ணி கேட்டதும் அதற்கு அண்ணன் மறுத்துவிட்டதும் அவளுக்கும் சற்று வருத்தமே…
“இவன் நல்லா படிக்கிறவனா இருந்தா பரவால்ல… அட்டெம்ப்ட்ல பாஸ் பண்ணவனை என்ஜினியருக்கு சேர்த்துவிட முடியாது. பாலிடெக்னிக் வேணும்னா சேர்த்துவிடுறேன்” என்று அண்ணன் சொன்னதும் அதன் பின் குடும்பத்தில் சரவணனுக்கும் வளர்மதிக்கும் சற்று மனத்தாங்கல் வந்ததும் அமுதாவும் அறிந்ததே.
“தகுதிக்கு மீறி ஆசைப் படக்கூடாதுன்னு உங்கண்ணன் சொல்லிட்டாங்க. அதுவும் நல்லதுதான். இனிமே உன்னைப் பாக்கவும் வரமாட்டேன். எனக்கு அது கஷ்டம்தான் இருந்தாலும் பரவால்ல” என்று வெங்கடேசன் அவளிடம் செல்லில் சொன்னது பாதி புரிந்தது பாதி புரியவில்லை அவளுக்கு. ஒருவேளை நம்மை லவ் பண்றானோ என்று நினைத்தாள்.
ஆனால் அவளுக்கு அதிலெல்லாம் நாட்டம் இல்லை. அவளுக்கு பாரினிக்குப் போக வேண்டும். அங்கு கட்டுப்பாடற்ற சுதந்தரத்தை அனுபவிக்க வேண்டும்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு விடுமுறைக்கு ஊருக்கு வந்த அமுதாவின் அண்ணன் சரவணனிடம் அவளது தந்தை துரை தனியாக “சரவணா உன் மச்சினனும் மாமியாரும் அடிக்கடி வீட்டுக்கு வந்து அமுதாகிட்ட வழியிறது நல்லால்ல. வளர்மதியைக் கூட நீ பிடிச்சிருக்குன்னு சொன்ன ஒரே வார்த்தைக்காகத் தான் கட்டி வச்சேன். ஆனால் அந்தக் குடும்பத்துக்கு அமுதாவை அனுப்புவேன்னு நீயோ உன் பொண்டாட்டியோ கனவு கூட காணாதிங்க” என்று கண்டிப்புடன் சொன்னார்.
இதை சரவணன் வளர்மதியிடம் கேட்டபோது “ஏன் என் தம்பிக்கு என்ன குறைச்சல். ஒரு ஆம்பளை ஒரு பொண்ணு மேல ஆசைப்படுறது ஊரு உலகத்தில் நடக்காததா. நீங்களும் என் மேல ஆசப்பட்டுத்தானே கல்யாணம் பண்ணிகிட்டிங்க. அதையே என் தம்பி பண்ணா தப்பா” என்று வம்புக்கு நின்றாள்.
“இங்க பாருடி… நான் படிச்சு உத்தியோகத்துக்கு போயி சொந்தக் காலில் நின்னப்பறம் உன்னைக் கல்யாணம் பண்ணிகிட்டேன். உன் தம்பிக்கு என்னடி தகுதி இருக்கு என் தங்கச்சியைக் கல்யாணம் பண்ணிக்க”
“ஏன் என் தம்பிக்கு ஒரு பிஸினஸ் ஆரம்பிச்சுத் தந்தா இப்ப இல்லைன்னாலும் ஒரு பத்து வருஷத்தில் நம்ம நிலைக்கு வந்துட்டுப் போறான். அந்தப் பாரிக்கு உங்க தங்கச்சியைத் தரப் போறிங்களாமே. அவனுக்கு என் தம்பி என்ன குறைஞ்சுட்டான்”
“பாரி உழைப்பாளி. அவனுக்கு இருக்குற செல்வாக்குக்கு நம்ம ஊரில் எலெக்ஷனில் நின்னா இன்னைக்கே போட்டியில்லாம கவுன்சிலர் ஆயிடுவான். அவனை விட நல்ல மாப்பிள்ளை அமுதாவுக்கு எங்க தேடினாலும் கிடைக்காது.
ஆனால் உன் தம்பிக்கு நேர்மை இல்லைடி. தடிமாடு வயசாகுது ஒரு பொறுப்பில்லாம சுத்திட்டு இருக்கான். அவன் தகுதிக்கு மீறி ஆசை பட்டுட்டு, பொம்பளைங்க பின்னாடி நின்னு எங்ககிட்ட சண்டை போடுறான். நேரில் நின்னு என்கிட்டையோ அப்பாகிட்டயோ ஒரு வார்த்தை கூட பேச தைரியமில்லாத கோழை அவன். நீயும் உங்கம்மாவும் அவனுக்காக ஆடிட்டு இருக்கீங்க. இன்னொரு தரம் உங்க வீட்டாளுங்க அமுதாவை உன் தம்பிக்குக் கல்யாணம் பண்ற நினைப்போட வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்சா நடக்குறதே வேற” என்று கர்சித்துவிட்டே ஊருக்கு சென்றான்.
ஏமாற்றம் தாங்காமல் அன்றிலிருந்து பாரியைப் பற்றி ஏதாவது குத்தலாக அமுதாவிடம் சொல்லி அவளைத் தூண்டி விடுவதே வளர்மதிக்குப் பிழைப்பாக இருந்தது. முட்டாள் அமுதாவும் அந்தத் தாளத்திற்கு ஆடியதுதான் பரிதாபம்.
வெங்கடேசுக்கும் வேலை எதுவும் செட்டாகவில்லை. அமுதாவின் அண்ணனின் தோழன் பேக்டரி ஒன்றில் வேலைக்கு சேர்ந்தவனை மனைவியின் நச்சரிப்புத் தாங்காமல் சரவணன் வெளிநாட்டுக்குக் கூட்டிச் செல்கிறான். பாரி அமுதாவின் கல்யாண சமயத்தில் இவன் கலாட்டா செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் ஏதாவது லஞ்சம் தந்தே ஆக வேண்டும்.
ஆனால் வெங்கடேசன் வேலை கிடைத்த தைரியத்தில் அமுதாவிடம் பேச ஆரம்பித்து விட்டான். அவனது வார்த்தை ஜாலங்கள் அமுதாவைக் குளிர்வித்தன என்பதே நிஜம். இந்தப் பெண்கள் டிக்டாக் பார்ப்பதோடு மட்டுமில்லாமல் டாக்டர் ஷாலினி போன்றவர்களின் வாழ்வியல் பாடம் சொல்லும் விடியோக்கள் சிலவற்றைப் பார்த்தால் ஓரளவாவது முதிர்ச்சி தெரியும். பேச்சிலேயே மயக்கும் ஆண்களின் புகழ்ச்சி புரியும்.
இப்போது இந்த வெங்கடேசன் என்ன சொல்கிறான் என்று கேட்போம்.
“நானா இருந்திருந்தேன்னா எப்படி எல்லாம் பேசிருப்பேன் தெரியுமா…
மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையான கையை தொட்டு
அள்ளி அள்ளி அணைக்க தாவுவேன்
நீயும் அச்சத்தோடு விலகி ஓடுவாய்
துள்ளி ஓடும் மானை பார்த்து துடியிடையில் கை சேர்த்து
பிள்ளைப்போல தூக்கிக்கொள்ளுவேன்
கூந்தல் பின்னலினால் விலங்கு போடுவேன்
பட்டு மெத்தை மஞ்சத்தின்மேல் பவளம் போன்ற உன்னை வைத்து
பாய்ந்து சென்று கதவை மூடுவேன்
வந்து பக்கத்திலே அமர்ந்து கொள்ளுவேன்
“இதுக்கு மேல சொல்லாத வெங்கடேசு எனக்கு வெட்கமா இருக்கு” என்றாள் அமுதா.
“அமுதா… பூஜை அங்க பின்னாடி கோவிலில் நடக்குது. நம்ம ரெண்டு பேரும் மட்டும்தான் இங்க இருக்கோம். நீ மட்டும் சரின்னு சொன்னா ரசனையில்லாத பாரிக்கு உன்னை விட்டுத் தர்றதை விட, அம்மன் கழுத்தில் இருக்குற தாலியை உன் கழுத்தில் கட்டி உன்னை என் மனைவி ஆக்கிக்குவேன். ஏன்னா உன்னை நான் அந்த அளவுக்கு லவ் பண்றேன்.
உனக்குக் கல்யாணம் நிச்சியமானதிலிருந்து நான் ஒரு நடைபிணமா வாழுறேன் ” என்றவன் முகத்தைக் கைகளால் பொத்திக் கொண்டு குலுங்கி குலுங்கி அழத் தொடங்கினான்.
“அழாதே வெங்கடேசு” என்ற அமுதாவின் குரலில் திணறல்.
“உன்னை அந்த லலிதாகிட்ட மன்னிப்பு கேட்க சொல்ல அந்தப் பாரிக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும். உன்னோட அருமை தெரியாதவன் அவன். கல்யாணத்துக்கு அப்பறம் உன்னை எப்படி வச்சுக்கப் போறானோ தெரியலை அமுதா. ஆனால் என்னைக் கல்யாணம் பண்ணிட்டா உன்னை ராணி மாதிரி பாத்துக்குவேன்” என்றான் அவளது கைகளைப் பற்றிக் கொண்டு.
அமுதா பார்த்த சில திரைப்படங்களில் கதாநாயகன் தனது காதலை கதாநாயகிக்கு உணர்த்துவான். அந்த நிலையில்தான் தானும் வெங்கடேசும் இருக்கிறோம் என்றே நம்பத் தொடங்கினாள். ஒரு புடவை கூட எனக்குப் பிடித்த நிறத்தில் எடுக்கவிடாமல் அவருக்குப் பிடித்ததை வாங்க வற்புறுத்தும் தந்தை. அவர் சொன்னதிற்கு தலையாட்டும் தாய். மென்மையான காதலை புரிந்து கொள்ளாத முரட்டு அண்ணன். இவர்கள் பார்த்து வைத்த பட்டிக்காட்டான் பாரி. இந்தக் காட்டுமிராண்டிகளுக்காக நான் ஏன் என் கனவுகளைப் பலி கொடுக்கவேண்டும். ஒரு முடிவோடு
“நீ சொல்றதுதான் சரி. நம்ம மனசை யாரும் புரிஞ்சுக்க மாட்டாங்க. நமக்குக் கல்யாணமும் பண்ணி வைக்க மாட்டாங்க. அந்த சூலத்தில் கட்டிருக்குற தாலியை எடுத்து என் கழுத்தில் கட்டு வெங்கடேசு” என்றாள்.
பாரியும் சொந்தக்காரர்களும் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று பொங்கலைப் படைத்துக் கொண்டிருக்க, அவர்கள் மணமகளாக நினைத்துக் கொண்டிருந்த பெண்ணோ வேறொருவனின் கைகளில் தாலியை வாங்கிக் கொண்டிருந்தாள்.
வெங்கடேசு அமுதாவின் கழுத்தில் தாலியின் மூன்றாவது முடிச்சினைப் போட்டு முடித்தபோது அங்கு வந்த உறவினர் ஒருவர் “டேய்… என்னடா இங்க நடக்குது. எல்லாரும் இங்க ஓடி வாங்களேன்… “ என்று கத்தினார்.