Tamil Madhura

இனி எந்தன் உயிரும் உனதே – 21

அத்தியாயம் – 21

 

தூரத்தில் நீ வந்தாலே என் மனசில் மழையடிக்கும்

மிகப் பிடித்த பாடல் ஒன்றை உதடுகள் முணுமுணுக்கும்

 

என்று பாடியபடி புதுப் பொங்கல் பானையை எடுத்து வைத்த அமுதாவைப் புரிந்துக்கொள்ளவும் முடியவில்லை ஆனால் வெறுக்கவும் முடியவில்லை லலிதாவால். பாரியின் மனைவியாகப் போகிறவள் என்ற நினைவை கஷ்டப்பட்டுப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஒரு தோழமை உணர்வை ஏற்படுத்திட முயன்றாள்.

 

பாரியின் தாய் லலிதாவிடம் அமுதாவை ஒப்புவித்துவிட்டு “லலிதா இவ கூட நின்னு பொங்கலை வச்சுக் கொடும்மா. கொஞ்சம் விளையாட்டுப் பொண்ணு யாராவது பக்கத்தில் இல்லைன்னா பொங்கல் சரியா வராது. சொந்தக்காரங்க அதுக்கும் சேர்த்து ஏதாவது கொறை சொல்லுவாங்க” என்று கேட்கவும் மறுக்கவே முடியவில்லை அவளால்.

அமுதா பொங்கல் வைக்க வந்தபோது உதவிக்கென்று அவளது அண்ணியோ தாயோ இல்லை வேறு தோழிகளோ ஏன் வரவில்லை என்று நினைக்கக் கூடத் தோன்றவில்லை லலிதாவுக்கு.

 

லலிதாவை முதலில் அலட்சியமாகவே பார்த்தாள் அமுதா. அவளுக்கு விறகடுப்பின் முன் நிற்கவே முடியவில்லை. லலிதா,  பாரி வீட்டில் உதவிக்கு வந்த சொந்தக்காரப் பெண் போல என்று நினைத்துக் கொண்டாள்.

 

“இந்தா… வெல்லத்தை இன்னும் நுணுக்கல” என்று அமுதா சொல்லியது வேறு யாரிடமோ என்று நினைத்தபடி தான் பாட்டுக்கு வேலையை செய்துக் கொண்டிருந்தாள் லலிதா.

 

“ஏ.. உன்னைத்தான். போயி வெல்லத்தை நுணுக்கிட்டு வா” என்று அதிகாரமாய் தோளைத் தட்டிக் கொடுக்கவும் சுருக்கென்றது.

 

“என் பேரு லலிதா”

 

“சரி அதனால என்ன”

 

“பேரை சொன்னேன் அமுதா”

 

இளக்காரமாக சிரித்தவள்“சரி… லலிதா மசமசன்னு நிக்காம இந்த வெல்லத்த.. “

 

அதற்குள் மேலும் பேச்சைக் கேட்க விரும்பாமல் வெல்லத்தை வாங்கிக் கொண்டு நகர்ந்தாள் லலிதா. அவள் இடித்துக் கொண்டு வந்தபோது செல்போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தாள் அமுதா. ‘களுக்’கென சிரிப்பு வேறு.

 

லலிதா வெல்லத்தை வைத்தவுடன் விறகு ஈரமாக இருக்கிறது என்று கூறி வேறு விறகு வாங்கி வர சொன்னாள். அதன் பின் அவளுக்கு கிறுகிறுப்பாக இருக்கிறது என்று சொல்லி சோடா கிடைக்குமா என்று பார்க்க சொன்னாள். மொத்தத்தில் லலிதாவை அங்கு நிற்கவிடாமல் விரட்டோ விரட்டென்று விரட்டினாள்.

 

களைத்து லலிதா வந்தபொழுது “நிஜமாவே ப்ளூ பட்டுப் புடவைல அனுஷ்கா மாதிரியே இருந்தேனா…” என்று கேட்டுக் கொண்டிருந்தவள் லலிதாவைக் கண்டதும் எரிச்சலுடன்

 

“இந்தா… இந்த அரிசியை அலசி எடுத்துட்டு வா” என்றாள்.

 

“அமுதா… பொங்கல் வைக்கிற அரிசியைக் களைய மாட்டாங்க”

 

“எங்க வீட்டில் இதுதான் பழக்கம் போயி கழுவி எடுத்துட்டு வா” என்றாள்.

 

லலிதாவை அனுப்பிவிட்டு மறுபடியும் போனில் அரட்டையைத் தொடர்ந்தாள்.

 

என்ன செய்வதென்று புரியாமல் கையில் அரிசிப் பாத்திரத்துடன் தவித்துக் கொண்டிருந்தாள் லலிதா.

 

‘என்ன இந்தப் பெண் இப்படி அடுத்தவர்களை மதிக்காமல் ஏவுகிறது. பாரிக்கு இப்படி ஒரு பெண்ணை பார்த்திருக்கிறார்களே. அவர்கள் வீட்டிலிருந்து யாராவது பக்கத்தில் இருக்கலாமே. இவளிடம் என்னைத்  தனியாக மாட்டிவிட்டார்களே” என்று நொந்துகொண்டிருந்தவளுக்கு ஆறுதலாக அந்தப் பக்கம் வந்தான் பாரி. அவளது முக வாட்டத்தைக் கண்டே ஏதோ என்று உணர்ந்தவனாக

 

“என்னாச்சு லல்லி” என்று கேட்டபடி விரைந்து வந்தான்.

 

“வந்து அரிசி கழுவணுமா இல்லையான்னு தெரியல… நீங்க ஆன்ட்டியை வந்து செய்முறையை ஒரு தரம் சொல்லித்தர சொல்லுறிங்களா” என்றாள்.

 

அவளை ஆழ்ந்து பார்த்தான். “வழக்கமா என்ன செய்வாங்க லல்லி”

 

“வந்து எங்க வீட்டில் கோவிலில் சாமிக்குப் பொங்கல் வைக்கிறப்ப கழுவ மாட்டாங்க”

 

“ஒரே கோவில்னா ஒரே பழக்கம் தானே. இப்ப எதுக்கு சந்தேகம்”

 

“உங்க குடும்பப் பழக்கம் என்னன்னு தெரியலையே”

 

“அம்மா வேலையா இருக்காங்க… நீ அரிசியைக் கழுவாம எடுத்துட்டுப் போ. நான் யாரையாவது அனுப்புறேன்” என்று அவளை அனுப்பினான்.

 

உள்ளே நுழைந்தவளைக் கண்டு கோபமாக

“ஏய்… உன்னை என்ன சொன்னேன். சொன்னதைக் கேட்கணும் ஒரு அறிவு கூட இல்லையா” என்று அமுதா கத்தியது லலிதாவுக்கு அவமானமாய் இருந்தது.

 

“அமுதா… வார்த்தையை அளந்து பேசுங்க… இது பழக்கமில்லைன்னு சொன்னேனே…”

“ஓஹோ… எங்க வீட்டுப்பக்கம் இப்படித்தான் செய்வாங்க… வீட்டாளுங்க சொன்னா உதவியாளுங்க வாயை மூடிட்டு செய்யணும். நல்லா அனுப்பினா என் மாமியார் ஒரு வாயாடியை என் உதவிக்குன்னு” என்று ஆரம்பிக்கவும்

 

“அமுதா…” என்ற ஒரு அதட்டல் குரல் ஒன்று ஒலிக்க முகம் முழுக்க கோவத்தில் ஜிவுஜிவுக்க நின்றுக் கொண்டிருந்தான் பாரி.

 

“லலிதாகிட்ட மன்னிப்பு கேளு… அவங்க யாருன்னு உனக்குத் தெரியுமா” என்று கர்ஜிக்க அந்த சிம்மக்குரலில் சப்தநாடியும் ஒடுங்கி நின்றாள் அமுதா

 

“அவங்க அப்பா எவ்வளவு பெரிய வேலைல இருக்காங்க தெரியுமா… லலிதா அடுத்தமாசம் கல்யாணம் முடிஞ்சு வெளிநாடு போறாங்க… எங்கம்மா ஒரு வார்த்தை கேட்டுகிட்டதுக்காக உனக்கு பொங்கல் வைக்க உதவியா நின்னா அவங்களை இந்த அளவுக்கா மரியாதையில்லாம பேசுவ… நம்ம குடும்பத்தைப் பத்தி என்ன நினைப்பாங்க… உன்கிட்ட இந்த மாதிரி ஒரு குணத்தை எதிர்பார்க்கல”  என்று கோவக் குரலில் அவன் சொன்னது அங்கு வந்த கபிலரின் காதிலும் விழுந்தது.

 

மகன் பொங்கல் வைப்பதில் ஏதோ சந்தேகம் என்று சொன்னதைக் கேட்டு தனது உறவுக்காரரான சின்னம்மாவை அழைத்து வந்தவர், அங்கு நடந்ததை கிரகித்துக் கொண்டார்.

 

“விடுப்பா சின்னப் பொண்ணு விவரம் தெரியாம செஞ்சுருச்சு. மன்னிச்சுக்கோ லல்லிம்மா” என்று சமாதனப் படுத்தினார்.

 

“ஐயோ அங்கிள் பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதிங்க. அமுதாவுக்குத் தெரியாதில்லையா” என்று அந்த டாபிக்கை மூடியவள் யாருமறியாமல் பாரியிடம் தவறு என்று கண்களால் ஜாடை காட்டினாள்.

 

“பாரி நீங்க பூஜை வேலையைப் பாருங்க… நாங்க ரெண்டு பேரும் பொங்கலை செஞ்சு கொண்டு வர்றோம்” என்று அழுத்தமாய் சொல்லி  பாரியையும் கபிலரையும் அவ்விடத்தைவிட்டு அனுப்பி வைத்தாள்.

 

லலிதாவிடம் மன்னிப்புக் கூடக் கேட்க மனமின்றி அழுத்தமாய் நின்றுக் கொண்டிருந்தாள் அமுதா.

 

“அமுதா மாதிரி ஒரு பொண்ணை நீ கல்யாணம் பண்ணிட்டு போற பாரின்ல பாக்க முடியாதுல்ல… இங்கேயே பாத்துக்கோ லல்லி” என்று சின்னம்மா இடக்காகச் சொல்ல அமுதாவின் முகத்தில் சிறிது மாற்றம்.

 

“நீங்க பாரினுக்கா போறீங்க… மாப்பிள்ளை அமெரிக்காவா”

 

“இல்லைம்மா மிடில் ஈஸ்ட்ல வேலை பார்க்கிறார்”

 

“அப்ப, நீங்க சவுதிக்கா போறீங்க… “ என்று கேட்ட அமுதாவின் நடவடிக்கைகளில்தான் எத்தனை மாற்றம். அதன்பின் இவளா முன்பு அந்த அளவுக்குக் கடுமையாகப் பேசியவள் என்று உணரமுடியாத வண்ணம் தன்மையாகப் பேசினாள்.

 

கல்யாணத்துக்கு எத்தனை பவுன் நகை போடுகிறார்கள், அங்கு போடுவதற்கு உடை வாங்கி விட்டீர்களா, தோழிகள் யாராவது அந்த இடத்தில் இருக்கிறார்களா, வீடு பார்த்தாகிவிட்டதா, எந்த விலாசம்… சவுதி குறுக்கு சந்து, விவேகானந்தர் தெருவா… என்று கேட்டு லல்லியின் காது வலிக்கச் செய்தாள்.

 

லலிதாவிடம் சொன்ன வீம்புக்காக சின்னம்மா சொல்லியும் கேட்காமல் அரிசியைத் தானே களைந்து எடுத்து வந்து பொங்கலை வைத்தாள்.

 

“நீ விடு லலிதா அது ஒரு அடங்காபிடாரிதான். எங்க பாரியை நினைச்சாத்தான் கவலையா இருக்கு” என்று சொல்லி சின்னம்மா லலிதாவை சமாதனப் படுத்த, இந்த பொருத்தமில்லா திருமணத்திற்குத் தான் இத்தனை பாடா பாரி… அமுதாவைக் கெட்டவள் என்று சொல்லவில்லை. ஆனால் நிச்சயம் உங்களுக்கானவள் இல்லை. இது உங்களுக்கு எப்போது புரியும். உணரும்போது காலம் கடந்துதிருந்தால் நம் இருவரின் வாழ்க்கையும் திரும்பி வர முடியாத தூரத்திற்கு நம்மை இழுத்து சென்றிருக்குமே.

 

அது தவிர அமுதா செய்த ஒவ்வொரு காரியத்திலும் ஒரு அசிரத்தை தெரிந்தது லலிதாவை கவலை கொள்ளச் செய்தது. அது மட்டுமின்றி நிமிடத்திற்கு ஒரு முறை செல்போனை செக் செய்துகொண்டே  வெண்பொங்கல் வைத்திருந்த கொடி அடுப்பில் வெல்லத்தைப் போடப் போனாள். லலிதா அதை கவனித்துத் திருத்தினாள்.

 

கழுத்தில் செல்லைக் கட்டி ஒரு ஆபரணத்தைப் போலத் தொங்கப் போட்டிருந்தாள். அமுதாவே மனம் உவந்து காலைக்  கட் செய்த மறுநிமிடம் ஒரு செய்தியோ, அல்லது அழைப்போ அவளுக்குத் தொடர்ந்து வந்தது.

 

இதில் பொங்கல் கிண்டுவது போல, வியர்வையைத் துடைப்பது போல கரண்டியை கையில் வைத்துக் கொண்டு இடுப்பில் மற்றொரு கையை வைத்துக் கொண்டு ஒரு போஸ், ரெசிபி யோசிப்பது போல ஒன்று என்று செல்பிகள் மட்டுமில்லாது லலிதாவை  வேறு புகைப்படங்கள் எடுத்துத் தர சொன்னாள். அதுதான் டார்ச்சருக்கெல்லாம் டார்ச்சராக இருந்தது லலிதாவுக்கு. ஏனென்றால் அமுதாவிற்கு திருப்தியாக வரும்வரை மறுபடி மறுபடி எடுக்க செய்தாள்.

 

கடைசியில் எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல பொங்கல் பானையை இறக்கி வைக்கும் போஸில் ஒரு புகைப்படத்தைத் திருப்பித் திருப்பி எடுக்க சொல்லி ஒரு கட்டத்தில் சூடு பொறுக்காமல் பானையைக் கீழே போட்டுவிட்டாள். பானை உடைந்து சூடான பொங்கல் தரையில் மண்ணுடன் கலப்பதைக் கண்டு லலிதா திகைக்க, சின்னம்மா “அறிவு கெட்டவளே” என்று திட்ட, சத்தம் கேட்டு, அந்தப்பக்கமே அடிக்கொருதரம் வந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த  கபிலரும், பாரியும் என்ன செய்வது என்று புரியாது ஸ்தம்பித்து நின்றனர்.