அத்தியாயம் – 20
பாரியின் தந்தை கபிலர் அந்த காலத்தில் ஓரிடத்தில் நிலம் ஒன்றை வாங்கிப் போட்டிருந்தார். அந்த நிலத்தில் மண் சரியில்லை அதனால் விவசாயம் செய்ய முடியாது என்று வந்த விலைக்கு விற்றுவிட்டு சென்று விட்டார் உரிமையாளர்.
கபிலர் வாங்கியபொழுது அவரது முட்டாள் தனமான செயலைப் பார்த்து உறவினர்கள் அனைவரும் நகைக்க ‘மண்ணில் போடும் பணம் என்னைக்கும் வீணாகாது. வீணான பூமின்னு உலகத்திலேயே கிடையாது. அதைப் பயன்படுத்தும் முறையை நம்ம இன்னும் தெரிஞ்சுக்கலன்னு வேணும்னா சொல்லலாம்’ என்றார் இளரத்த வேகத்தில்.
அதன்பின்னர் யார்யாரிடமோ அறிவுரை பெற்று அந்த இடத்தில் மூங்கில் கன்றுகளை நட்டார். அதன் பின்னர் மண் வளம் பெற மண்புழுக்கள், சிகப்பு எறும்புகளைக் கைகள் புண்ணாகப் பிடித்துச் சென்று அந்த நிலத்தில் விடுவது என்று வாங்கிய விலையைவிட நான்கு மடங்கு செலவும் செய்தார்.
இயற்கை அன்னை அவரைக் கண்டு இரக்கப்பட்டு மூங்கிலில் மட்டும் பலன் கொடுத்தாள். அன்று அவர் பட்ட பாடு சில வருடங்களாக லட்சக்கணக்காகக் கிடைத்தது. அதில் சரிபாதி உழைப்பின் பங்கு பாரிக்கும் இருந்ததை மறுப்பதற்கில்லை. அந்த மூங்கில் காட்டின் வருமானம் இப்போது ஊரார் கண்களை உறுத்த ஆரம்பித்தது. நம் ஊர் நண்டுகள் எப்போது தன்னுடைய இனமான நண்டை முன்னேற விட்டிருக்கிறது. ஏதாவது கதை கட்டிவிட்டு மன உறுதியைக் குலைப்பதை ஒரு சபதமாகவே அல்லவா எடுத்துக் கொண்டிருக்கிறது.
அப்படி ஒரு நாள் அவர்கள் மூங்கில் காட்டில் சில மூங்கில் பூத்து நெல்மணிகளை வாரி இறைத்தது.
“போச்சு போச்சு. மூங்கில் பூத்தா சொத்தே அழிச்சு போகும்னு பழமொழி. கபிலா ஜாக்கிரதை “ என்று அவர்களை கலைத்துவிட்டனர்.
“மூங்கில் பூத்த காட்டை யாருப்பா வாங்குவா… மூங்கில் காட்டில் பாம்பு வேற அதிகம். கல்யாணத்தை வேற நிச்சயம் பண்ணிருக்க. வரப்போற மகராசி நல்லாருக்க வேண்டாமா. அதை யோசிச்சு ஒரு முடிவுக்குக் வந்திருக்கேன். வேணும்னா நீ நிலத்தை வாங்கின விலைக்கே நான் இன்னைக்கு வாங்கிக்கிறேன். அந்தக் காலத்தில் நீ பத்தாயிரத்துக்கு வாங்கினதா நினைவு” என்று இழுத்தார் மற்றொருவர்.
‘பத்தாயிரத்துக்கு உனக்குத் தரதுக்கு அப்படியே போட்டு வைப்பேன்’ என்று சொல்லத் துடித்த மனதை அடக்கிவிட்டு “நான் இந்த ராசி கீசி எல்லாம் பாக்குறதில்லைங்க”
“கருப்பு சட்டையோ… இல்லையே கோவில் திருவிழாவுல பாத்திருக்கேனே”
“ஆமாங்க ராசி பாக்குறப்ப கருப்பு சட்டை, திருவிழாவுக்கு மஞ்ச சட்டை, நிலத்தில் இறங்குறப்ப பச்சை சட்டை இதுதாங்க எங்க கலர் கோட்” என்று பாரி இடையிட்டு அவர்களிடம் பதமாக சொல்லி அனுப்பினான்.
“ஏம்பா இதெல்லாம் நம்புறிங்களா”
“அடப்போடா… மண்ணுக்கு என்னடா ராசி. நிஜத்தை சொன்னா இந்த பூமிக்கே கெட்ட ராசி மனுஷன்தான். துரோகி, அது தர இடத்திலேயே நின்னுட்டு உண்ட இடத்துக்கே ரெண்டகம் பண்ணிட்டு இருக்கான். பூமியை மனுஷன் படுத்துற பாட்டைப் பாத்து மத்த கிரகங்களெல்லாம் பயந்து ஓடிட்டு இருக்கு. இது புரியாம சனிகிரகம் ராசி இல்லை, புதன் பார்வை நல்லால்லன்னு சொல்றது வேடிக்கையா இல்லை”
“நினைச்சுப் பார்க்கும் போது மத்த கிரக உயிரினங்கள் எல்லாம் மனுஷ பார்வை படக்கூடாதுன்னு பரிகாரம் செஞ்சுட்டு இருக்கலாம்பா. வாய்ப்பிருக்கு” என்று சொல்லி பாரி சிரிக்க, இந்த சிரிப்பு பார்வதியிடம் இல்லை.
“எனக்கென்னவோ கவலையா இருக்குங்க. பேசாம குலதெய்வத்துக்கு பூஜை ஒண்ணு ஏற்பாடு பண்ணுங்க. அண்ணன் வீட்டில் கூட அண்ணி சொன்னாங்க…” என்றார் தணிந்த குரலில்
“ஏண்டி காலைலதான் மூங்கில் பூத்ததே தெரியும் அதுக்குள்ளே உங்கண்ணன் வீட்டுக்குத் தகவல் சொல்லி, என்ன செய்யணும்னு அங்கிருந்து உத்தரவு வந்துருச்சா. நம்ம மாப்பிள்ளை வீடு அந்த நெனப்பாவது உன் அண்ணனுக்கு இருக்கா”
“இதுக்கும் எங்கண்ணன்தான் உங்க கண்ணுக்குத் தெரிவாரா… தகவல் சொன்னது உங்க தங்கச்சி. உன் தங்கச்சி பொண்ணு கொடுக்குறாளா இல்லை பொண்ணு எடுக்குறாளான்னு கேட்டு சொல்றிங்களா”
“எந்தங்கச்சிக்கு என்னடி தெரியும் யாராவது சொல்றதை அப்படியே நம்பி பயந்துக்கும்”
“அப்பா ரெண்டு பேரும் பட்டி மன்றத்தை நிறுத்துறிங்களா… “ என்று பாரி விலக்கிவிட்டான்.
ஓரிரு நாட்களில் மனதிருப்திக்காகப் பூஜை செய்வது என்று ஒரு மனதாக அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
இந்த சம்பவத்தைக் கிணற்றடியில் தெய்வானையிடம் விவரித்தார் பார்வதி. அதே நேரத்தில் கோவிலில் அமுதாவின் அண்ணன் சரவணன் அதே போல சொல்லிக் கொண்டிருக்கொண்டிருக்க அவன் சொல்வதற்கெல்லாம் தலையாட்டி அவனைப் பெரியாளாக்கிக் கொண்டிருந்தனர் அவனது மாமனார் வீட்டினர்.
“என்ன மாமா இப்படி நம்பிக்கை இல்லைன்னு பொசுக்குன்னு சொல்லிட்டிங்க. மூங்கில் பூத்தா பஞ்சம் வந்துடுமாம் மாமா. உங்களுக்கு மட்டுமில்ல ஊருக்கே பஞ்சம் வந்துடுமாம். மூங்கில் காடு இருக்குற இடத்தில் பாம்பு வேற அதிகம். மூங்கில் பூ தாழம் பூவை விட பவர்புல். எல்லா பாம்பும் உங்க தோட்டத்தில்தான் நிக்கும். எனக்குத் தெரிஞ்ச பிரெண்ட் ஒருத்தர் ரியல் எஸ்டேட் வச்சுருக்காப்பில பேசாம அவர்கிட்ட வந்த விலைக்குத் தள்ளி விட்டுடுங்க…
அந்தக் காசில் தென்னந்தோப்பு, நெல்லு இப்படி ஏதாவது விவசாயம் பண்ணுங்க” என்று கபிலருக்கு அறிவுரை சொன்னான்.
“மாப்பிள்ளை சொல்றது நல்ல ஐடியா… அதை மாதிரியே செய்ங்க. மூங்கில் அரிசியை எப்படி வித்து காசு பாத்து அதுக்கு பேசாம பொன்னி, கின்னின்னு போகலாமே” என்றார் அவனது மாமனார்.
கபிலர் கடுப்பை அடக்கிக் கொண்டார்.
“பிராண வாயுவை அரசமரத்துக்கு அடுத்ததா அதிகமா வெளியிடுற ஒரே மரம் மூங்கில் மரம்தான். ஒரு மூங்கில் தோப்பு ஆக்சிஜன் தொழிற்சாலை. மூங்கில் பூ வைக்கிறது சாதாரணமில்லை. நாப்பது வயசான ஆயுளை முடிக்கும் போது பூ பூத்து அந்தப் பூவை சிதறவிடும். மூங்கிலரிசி வாசம் பரவி அதை சாப்பிட யானைகள் எல்லாம் படையெடுக்கும். பறவைகள் பறந்து வரும். எலிகள் வந்துடும். எலிகளை சாப்பிடப் பாம்பு வரும். அதனாலத்தான் பஞ்சம் வரும்னு சொல்றாங்க. நல்லதை மனுஷன் மட்டும்தானே அனுபவிக்கனும். இயற்கையின் மேல ஏக போக உரிமை நமக்குத்தானே இருக்கு” என்றார் குணசீலன் சிரித்துக் கொண்டே.
அவரைப் பார்த்து முறைத்த சரவணன் “இவரு உங்க பிரெண்டா” என்றான் கபிலரிடம்.
“ஆமாம்” என்ற கபிலர் அமுதாவின் உறவினர்களிடம் நம்ம நல்லசிவம் மாமாவின் மகன் என்று அறிமுகப்படுத்தினார்.
எப்படிப் பழக்கம் என்ற கேள்வி எழாமல் “கோவிலுக்கு வந்தப்ப சந்திச்சுகிட்டிங்களா” என்று கேட்க அவர்களும் தலையாட்டினார்கள்.
தெய்வானையிடம் பேசிவிட்டுத் தெளிவான முகத்துடன் கோவிலுக்குள் தண்ணீரை சுமந்து வந்தார் பார்வதி. மனகலக்கத்துடன் கோவிலுக்கு வந்தவருக்கு இப்போது மனம் நிறைந்திருந்தது.
“நல்லாருக்கியா பார்வதி” என்று விசாரித்து வந்த அவரது சின்னம்மாவிடம் பார்வதி நடந்ததை சொல்ல.
“இதென்ன முட்டாள்தனம். யாரு இப்படி சொன்னது” என்றார் சின்னம்மா. சின்னம்மா என்பது பார்வதிக்கு உறவு முறை மட்டுமில்லை அவரது பெயர் கூட அதுதான்.
“அமுதாவோட அண்ணி வீட்டில் சொன்னாங்களாம்”
“ஊரு ஆயிரம் சொல்லும், இவங்களுக்கு எங்க போச்சு புத்தி. நீ தைரியமா இரு. என் முன்னாடி அவங்க சொல்லட்டும் நல்லா கேட்டு விடுறேன்” என்றார் சின்னம்மா.
தன்னுடன் நிற்க இருவர் கிடைத்த தெம்புடன் “வாம்மா அமுதா “ என்று அழைத்து மல்லிகைப் பூச்சரத்தைத் தந்தார்.
“இன்னைக்கு நீதான் பொங்கல் வைக்க ஒத்தாசை பண்ணுற” என்றார் பார்வதி.
அது சிலருக்குப் பொறுக்கவே இல்லை. “ஆமாம் அமுதா… பாரி வீட்டில் இனியாவது நல்லது நடக்கணும் ஒரு விடிவு காலம் பொறக்கணும்னு வேண்டிகிட்டு பொங்கல் வைடியம்மா” என்றார் ஒரு பெண்மணி. அது சரவணனின் மாமியார்.
சின்னம்மா குறுக்கிட்டார் “அப்படி விடிவு காலம் வர்ற அளவுக்கு அப்படி என்னடியம்மா நடந்தது” என்று அப்பாவியாகக் கேட்க.
“இல்லையா பின்ன… புடவை வாங்கப்போறப்ப வெள்ளம் வந்து…” என்று இழுக்க
“வெள்ளம் ஊருக்கேதான் வந்தது. எல்லாரு வீட்லயும் வெளில மாட்டிக்கிட்டாங்க. பாரிதான் ஜம்முனு வந்து நின்னானே. அதுவே நம்ம நல்லநேரம்தானே”
சின்னம்மாவின் பதில் அங்கிருந்த பெண்மணிகளுக்கு சுவாரஸ்யத்தைத் தர, அவர்களின் உரையாடலை கவனிக்க ஆரம்பித்தனர்.
சரவணனின் மாமியாருக்கு முகம் சுண்டிப் போனாலும் சமாளித்துக் கொண்டு “அடுத்து மூங்கில் பூத்தது எவ்வளவு பெரிய அபசகுனம் தெரியுமா” என்றார்
“எங்க நீங்க விவரம் தெரிஞ்சு பேசுறிங்களா இல்லை தெரியாம பேசுறிங்களா…” என்றார் சின்னம்மா சீரியசாக.
திரு திருவென விழித்தார் அந்தப் பெண்மணி.
“மூங்கிலரிசியை சாப்பிட எதுக்கு அத்தனை எலிகள் படை எடுக்குது. வம்ச விருத்திக்குத்தான். பார்வதி சாமியே உன் குலம் தழைக்க மூங்கிலரிசியை உன் தோட்டத்திலேயே தந்திருக்காரு. நீ சாமி கும்மிட்டு முடிச்ச கையோட உன் தோட்டத்து மூங்கிலரிசியை பொறுக்கி பாட்டிலில் போட்டு வை. கல்யாணம் முடிஞ்சதும் பொண்ணு மாப்பிள்ளைக்குத் தாங்க” என்றார் அமர்த்தலாக.
“நிஜம்மாவா சின்னம்மா” என்று மற்றொரு உறவுப் பெண்மணி கேட்க, தெய்வானை அவரிடம் “நிஜம்தாங்க… நானே அண்ணிகிட்ட கொஞ்சம் கடன் வாங்கிட்டுப் போகலாம்னு பாக்குறேன்” என்றார்.
“நீங்களா… “
“அடப்போங்கக்கா… இந்த வயசில் என்னைக் கிண்டல் பண்ணிக்கிட்டு. என் மூத்த பொண்ணுக்கும் கல்யாணம் நிச்சயமாயிருக்கு. அடுத்தவருஷம் எங்க வீட்லயும் ஒரு தொட்டில் ரெடி பண்ணனும்ல” என்றார் தெய்வானை அவர்களிடம்.
“பார்வதி இது தெரியாம இருந்திருக்கோமே… வீட்டுக்குப் போனதும் நாங்க எல்லாரும் அரிசியைக் கடன் வாங்க கியூல நிப்போம் பாரு” என்றார் ஒருவர்.
“நான் இப்பவே கிளம்பிப் போயி அந்த அரிசி எல்லாத்தையும் பொறுக்கிட்டு வீட்டுக்கு எடுத்துட்டுப் போகப் போறேன். பார்வதிக்கு வேணும்னா கூட என்கிட்டத்தான் வரணும்” என்று மற்றொரு பெண்மணி சொல்ல அந்த இடமே கல கலவென சிரிப்பாய் மாறியது.
“அம்மா பொங்கல் வைக்காம என்ன இங்க நிக்கிற” என்றபடி பார்வதியை அழைக்க வந்தான் பாரி.
“பாரி நடத்து நடத்து… “ என்று வயதான பெண்மணி ஒருவர் கூற, அந்த இடத்தில் மறுபடியும் சிரிப்பலை எழுந்தது.
“என்னாச்சும்மா” என்று பாரி விழிக்க.
“ஒண்ணுமில்ல பாரி இன்னும் ஒரு ஒண்ணரை வருஷத்தில் உன் பிள்ளைக்கு மொட்டை போட வேற வரணுமேப்பா. அதைப் பத்திப் பேசிகிட்டு இருந்தோம்” என்றாள் பாரியின் அத்தை.
“உங்க அத்தைகளுக்கு எல்லாம் உன்னைக் கிண்டல் பண்றதைவிட வேற என்னடா வேலை இருக்க முடியும்” என்று பார்வதி பதில் சொல்ல.
“அத்தை, பிள்ளை இல்ல பிள்ளைகள்… ரெட்டை பிள்ளை போதுமா… “ என்று பதில் சொல்லிவிட்டு எதற்கு இந்தப் பெண்கள் அனைவரும் இத்தனை காட்டுத்தனமாக சிரிக்கிறார்கள் என்று புரியாமலேயே புன்னகையுடன் நகர்ந்தான் பாரி.