Tamil Madhura

இனி எந்தன் உயிரும் உனதே – 19

அத்தியாயம் – 19

 

தான் வெட்கம் விட்டு தனது மனக்கிடக்கை அலைபேசித் தகவலாக அனுப்பியும் பாரியிடமிருந்து ஒரு எதிரொலியும் இல்லாதது கண்டு லலிதா கலங்கித்தான் போயிருந்தாள். கோவலில் வராஹியிடம் தனது மனக்குறையை கொட்டித் தீர்த்துவிட்டாள்.

‘இயற்கையாய் விரிந்திருக்கும் இறைவியே… என் மனசிலிருக்கும் மனிதரை நீயே அறிவாய். அவருடைய மனதிலும் வாழ்க்கையிலும் ஒரு பகுதியாய் கலந்து, இருவரும் தம்பதியாய் உன் முன் நிற்கும் வரம் வேண்டும்’ என்று மனமுருகி வேண்டியபின் கண்விழித்தவள், தன் முன் முகம் மலர்ந்த சிரிப்போடு நின்ற பாரியைக் கண்டதும் கனவோ என்றுதான் நினைத்தாள்.

தன் கையிலிருந்த பன்னீரில் கொஞ்சம் கையில் ஊற்றி அவள் மேல் தெளித்து அது கனவல்ல என்று உணர்த்தினான் பாரி. பன்னீரின் சில துளிகள் பட்டுத் திரும்பிப் பார்த்த ப்ரீதா “ஹாய்… பாரி மாமா” என்றாள்.

 

அவளது குரல் கேட்டு லலிதாவின் பெற்றோரும் பாரியை கவனித்துவிட்டு “அடடே பாரி… நீ எங்கப்பா இங்க” என்று வியந்தனர்.

“இதுதாங்க எங்க குலதெய்வம் கோவில். பூஜைக்கு வந்தோம். நீங்களும் எங்க பூஜையில் கலந்துக்கத்தான் வந்திங்களா” அவர்கள் ஆமாம் என்று சொல்லிவிடமாட்டார்களா என்ற நப்பாசையில் கேட்டான்.

 

“இல்ல மாமா… எங்க கோவிலும் இதுதான். எங்க தாத்தா கூட அடிக்கடி வருவோம். இப்ப வர்றதில்லை. அக்கா வெள்ளத்தில் மாட்டிக்கிட்டதும் அப்பா இங்க வர்றதா வேண்டிகிட்டாராம். அதுனால வந்தோம். அதுவும் நல்லதா போச்சு. உங்களையும் பாத்துட்டோம்” என்று கட கடவென ஒப்பித்தாள் ப்ரீதா.

 

அதற்குள் பாரி யாரிடமோ பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு உறவினர்கள் யாரும் வந்துவிட்டார்களோ என்றெண்ணி வரவேற்க வந்தனர் பார்வதியும் கபிலரும்.

 

“நல்லாருக்கிங்களா” என்றபடி பார்வதியின் கரங்களைப் பற்றிக் கொண்டார் தெய்வானை.

 

“நாங்க நல்லாருக்கோம். நீங்க… லல்லி எப்படி இருக்கம்மா” என்றபடி பெண்கள் அனைவரும் பலநாள் உறவினர் போலக் கலந்து பேச,

 

கபிலர் “எங்க வீட்டு பூஜைல கலந்துக்காம டிமிக்கி கொடுக்கப் பாத்திங்களே… எங்க சாமி எப்படி கூட்டிட்டு வந்துச்சு பார்த்திங்களா” என்றபடி தனது மீசையை நீவினார்.

 

“நம்ம சாமின்னு சொல்லுங்க… “ என்றபடி அவர்களையும் குடும்பத்தில் இணைத்தார் பார்வதி.

 

“வராஹா சித்தேஸ்வரி எங்க அப்பாவோட அம்மா வீட்டுக் குலதெய்வம். அப்பாவுக்கு என்னமோ அவரோட பாட்டி ஊரு கோவில் மேல ஒரு பிடிப்பு, அடிக்கடி வந்துடுவார்” என்று குணசீலன் தகவல் தந்தார்.

 

“உங்கப்பா பேரென்ன” என்று விசாரித்தார் கபிலர்.

 

விவரங்கள் அறிந்தபின்னர் வியப்புடன் “நல்லசிவம் மாமாவோட மகனா நீங்க. எங்கப்பாவும் உங்கப்பாவும் நல்ல பழக்கம். விவசாயம், சித்தர் பாடல்கள்னு ஒரு குழு ஒண்ணு சுத்துவட்டாரத்தில் இருக்கு. அதில் மாமா கூட ஒரு மெம்பர்” என்றார்.

 

“இருக்கலாம்… எங்கப்பாவுக்கு ஏராளமான நண்பர்கள். அதில் பாதி பேரு கூட எனக்குத் தெரியாது” என்று உண்மையை ஒத்துக் கொண்டார் குணசீலன்.

 

“அதே மாதிரிதான் நானும். எங்கப்பா தினமும் ரெண்டு மூணு பேரோடத்தான் வீட்டுக்கு வருவார். மனுஷங்க கூடக் கலந்து பழகுறதுன்னா அலாதி ஆசை “

 

இருவரும் தங்களது தந்தையை  நினைத்து நியாபகம் வருதே என்று மலரும் நினைவில் ஆழ்ந்தனர்.

 

“அண்ணே… அந்த குடத்தை எடுங்க, பக்கத்துல கேணில நாலு குடம் தண்ணி இறைச்சு வச்சுடுறோம். குழாய்ல தண்ணி வரல… “ என்று உரிமையுடன் கபிலரிடம் கேட்டு குடத்தை வாங்கிக் கொண்டு சென்றார் தெய்வானை.

 

“இன்னொரு குடம் இருந்தா தாங்க… “ என்று லலிதா கேட்க,

 

“அட கல்யாணம் நிச்சயமான பொண்ணு, தண்ணி பிடிக்கக் கேணிக்கு வர்றதாவது…  நிழல்ல போய் உக்காரு” என்று பார்வதி அதட்டினார்.

“எனக்கும் ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்க ஆன்ட்டி”

“கோவில் சன்னிதி முன்னாடி கோலம் போட்டுட்டு, பொங்கல் வைக்குற அடுப்பை சுத்தி செம்மண் கரை போடுறியா”

“சரி”

“அப்படியே பொங்கல் பானையில் கொஞ்சம் மல்லிகை சரத்தை சுத்திக் கட்டு”

“ரெண்டு பானைல வைக்கணும்ல… ஒண்ணு சர்க்கரை பொங்கலுக்கு இன்னொன்னு வெண்பொங்கலுக்கு”

“ஏம்மா அப்படியா” என்று கேட்டான் பாரி

“ஆமாம் பாரி, எங்கம்மா கூட இங்க சர்க்கரை பொங்கல் வைக்கும்போது கொடியடுப்பில் வெண்பொங்கல் வைக்கிறது வழக்கம்” என்றாள் லலிதா.

“சமத்து…” லலிதாவின் கன்னத்தைக் கிள்ளிவிட்டு தண்ணீரை எடுக்கச் சென்றார்கள் அம்மாக்கள் இருவரும். நீர் இறைத்துத் தர ப்ரீதா செல்ல, கோலத்தை விறுவிறுவென குனிந்து போட்டு முடித்தாள் லலிதா. செம்மண்ணை எடுத்து கோலத்தை சுற்றிலும் கரையைப் போல போட்டுவிட்டு நிமிர்ந்தவள் கண்ணில் அவளை யாருக்கும் தெரியாது என்று எண்ணிக் கொண்டு  ஓரக் கண்ணால் சைட் அடித்தவண்ணம் விறகை  வெட்டிக் கொண்டிருந்த பாரி பட்டான்.

 

மெதுவாக அவனருகே நடந்து வந்தவள் “அடேங்கப்பா… இன்னமுமா விறகு வெட்டி முடிக்கல… இந்த ஏரியா வீட்டுக்கெல்லாம் நீங்க வெட்டுற விறகுதானா… ஆமா… இன்னும் எத்தனை நாளுக்கு இந்த மௌன சாமியார் வேஷம் போடுறதா ப்ளான்” என்றாள் நக்கலாக

“என்னது”

“அதுதான் போன் பண்ணா ஓடிப் போறது. மெசேஜ் படிச்சுட்டு ரிப்ளை பண்ணாம இருக்குறது. அம்மா வழியா எனக்குத் தகவல் சொல்றது இதெல்லாம்”

“என்னது… அம்மா வழியா தகவல் சொன்னேனா… “

“எனக்குப் பிடிச்ச பழம், பாட்டு, கலர் இதெல்லாம் உங்கம்மாட்ட சொல்லாம அவங்களுக்கு எப்படித் தெரியுமாம்”

‘அம்மா என் வாயைப் பிடுங்கி எல்லா விஷயமும் கறந்தாச்சா’ என்று திகைத்தான்.

“உங்கம்மா எப்படிம்மா உன்னைப் பத்தி இவ்வளவு விஷயமும் தெரிஞ்சுகிட்டான்னு என்னைக் கேக்குறாங்க. நான் அன்னைக்கு நைட் ட்ராவல் பண்ணவங்க எல்லாரும் ஒரு இடத்தில் மாட்டிகிட்டோம். அப்ப ஒரு டீக்கடையில் உக்காந்து பேசிட்டு இருந்தோம். அப்பப் பொழுது போகாம பேசினது இதெல்லாம்னு சொல்லிருக்கேன்”

அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டான் “நான் சொன்னதுக்குத் தகுந்தாப்பில அந்த டீக்கடை மயிலும் உங்களுக்கு போன் பண்ணிருக்கான். அதனால தப்பிச்சோம்” என்றாள் மேலும்.

“தப்பிக்கிற அளவுக்கு நம்ம ஒரு தப்பும் பண்ணல”

“நீங்க ஒண்ணும் பண்ணலயா…”

“நான் என்ன பண்ணேன். பத்தரை மாத்துத் தங்கத்தை ஒப்படைச்ச மாதிரி உங்க வீட்டில் பத்திரமா திருப்பி ஒப்படைச்சேன்”

“ அனுமதி இல்லாம ஒரு இடத்தில் குடியிருக்குறது எவ்வளவு பெரிய தப்பு…

 

குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்

குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்னு நீங்க கேட்க

குமரிப் பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சைத் தரவேண்டும்

காதல் நெஞ்சைத் தந்துவிட்டு குடியிருக்க நீ வரவேண்டும்னு நான் பதில் சொல்லிருப்பேன்.

எப்படி பாரி”

 

“லலிதா உனக்கு எல்லாமே விளையாட்டா போச்சு. இந்த விளையாட்டெல்லாம் உன்னைக் கட்டிக்கப் போறவன் கிட்ட வச்சுகிட்டா நல்லது”

 

“அந்த நல்லதைத்தான் செஞ்சிட்டிருக்கேன் பாரி” என்றாள் அப்பாவியாக.

 

இவர்கள் உரையாடலுக்கு இடையூறாக பட்டுப் புடவைகள் சரக்க பெண்கள் கூட்டம் ஒன்று காரை விட்டு இறங்கி கோவிலுக்கு வந்தது. அவர்களை வழி நடத்தியவண்ணம் பட்டு வேஷ்டி சட்டையுடன் அமுதாவின் தந்தை.

 

“நான் காஞ்சிபுரத்தில் வாங்கின ப்ளூ கலர் பாகுபலி சேலை கட்டிட்டு நடுவில் வர்றாளே அவதான் அமுதா. எங்கம்மா அப்பா நிச்சயம் செஞ்ச பொண்ணு” என்று உணர்ச்சியற்ற குரலில் அவளிடம் சொன்னான்.

 

நெக்லெஸ், ஆரம், கைக்கு அரை டசன் தங்க வளையல், உடம்பின் ஒரு உறுப்பாகவே மாறிவிட்ட ஐபோன்  என்று அலங்காரப் பொம்மையாக வந்த அமுதாவை வெறித்து நோக்கினாள் லலிதா.

 

“இந்தக் கல்யாணம் நல்லா நடக்கனும்னு தான் பொங்கல் வைக்கிறாங்க. இதில் கலந்துக்கிறவங்க  எல்லாம் கல்யாணம் நல்லா நடக்கனும்னு மனசார நினைக்கணும். நீயும் அப்படியே நினைக்கிறதுதான் உன் வாழ்க்கைக்கு நல்லது” என்றான் பாரி.

 

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாது திகைத்த லலிதா மனதினுள் தெய்வத்திடம் “இந்தப் பொண்ணு அமுதாவோட வாழ்க்கையைக் கெடுக்கனும்னு நான் மனசார நினைக்கல. ஆனால் என்னை மனசில் வச்சுட்டு பாரி இவளைக் கல்யாணம் பண்ணிக்கிறது அவளோட வாழ்க்கைக்கும் நல்லதில்ல. எங்களை ஏன் சந்திக்க வச்ச. எங்க வாழ்க்கையை ஏன் சிக்கலாக்கின. சிக்கலைப் போட்ட நீ அதை எப்படி விடுவிக்கப் போற” என்று கேள்வி கேட்டாள்.

“இன்னொரு விஷயம்… ஒரே குலதெய்வம் பங்காளி முறை உள்ளவங்களுக்குத்தான் வரும். ஆக மொத்தம் எல்லா பக்கத்திலும் தப்பான ஆசைன்னு எச்சரிக்கை வருது. தயவுசெய்து உன் மனசை மாத்திக்க லல்லி” வேதனையுடன் சொல்லிவிட்டு அமுதா வீட்டினரை வரவேற்க விரைந்தான் பாரி.

அதே சமயத்தில் கிணற்றடியில் பாரியின் தாய் லலிதாவின் தாயிடம் “லலிதாம்மா… இன்னைக்குப் பொங்கல் வைக்கிறதுக்கு இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கு” என்று ஆரம்பித்தார்.