அத்தியாயம் – 17
பாரி வீட்டிற்கு வந்ததும் ஓடி வந்து வரவேற்ற அவனது அன்னை கூடுதல் விவரமாக
“லலிதா பத்திரமா வீட்டுக்கு வந்துட்டியான்னு போன் பண்ணிக் கேட்டுச்சு அப்படியே எங்க எல்லாருக்கும் நன்றி சொல்லுச்சு. தன்மையான பொண்ணுப்பா…
ஏண்டா, லலிதா பொண்ணு வீட்டில் ரெண்டு நிமிஷம் மட்டும் இருந்துட்டு, என்னமோ காலில் சுடுதண்ணி கொட்டினாப்புல ஓடி வந்துட்டியாமே… ஒரு காப்பி கூட குடிக்காம தம்பி கிளம்பிட்டாருன்னு லலிதாவோட அம்மா வருத்தப்பட்டுட்டாங்க.”
கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைத்த வீட்டினரிடம் “வழியெல்லாம் வெள்ளம்மா… கஷ்டப்பட்ட நிறைய மக்களை வீட்டு வாசலில் இறக்கி விட்டேன். ஒரு நாள் முழுசும் ஓய்வே இல்லாம அலைஞ்சுட்டு வந்திருக்கேன் ஒரு வாய் சாப்பாடு கூடப் போடாம இப்படி வாசலில் நிக்க வச்சுக் கேள்வி மேல கேள்வி கேக்குறியே” என்றான்.
“வெந்நீர் போட்டு வச்சிருக்கேன். போயி குளிச்சுட்டு வா… நான் அதுக்குள்ளே சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று அனுப்பி வைத்தார் அன்னை.
“அம்மா இதன்ன போனித் தண்ணி பச்சையா இருக்கு” குளியலறையிலிந்து குரல் கொடுத்தான் பாரி.
“வேப்பிலை தண்ணிதான் வச்சிருக்கேன்… அதை ஊத்திக்கோ” என்று குளியலறை வாசலில் நின்று பதிலளித்தார் அன்னை.
குளித்துவிட்டு வந்தவுடன் “என்னடா உன் மாமனாரோட வண்டியை எடுத்துட்டு அப்படியே வீட்டுக்கு வந்துட்ட… “
“வண்டியை காஞ்சிபுரத்தில் ஒருத்தர் கிட்ட ஒப்படைக்க சொன்னாருப்பா… அவரு அங்க இல்ல… அப்பறம் அப்படியே ஓட்டிட்டு வந்துட்டேன்”
“வண்டி நல்ல கண்டிஷன்ல தானே இருக்கு எதுக்கு விக்கிறாராம்”
“மச்சான் புது வண்டி வாங்கித் தந்திருக்காராம். அதனால இதை விக்க சொல்றாரு போலிருக்கு” என்றவன் தயங்கி… “அப்பா… நம்ம கூட ஒரு வண்டி வாங்கனும்னு நினைச்சோம்ல இதையே கேட்டுப் பாத்தா என்னப்பா” என்றான்.
ஆரம்பத்திலேயே வெட்டி விட்டார் “சம்பந்தார் வீட்டில் கொடுக்கல் வாங்கல் வச்சுக்கக் கூடாதுடா… பன மரத்துக் கீழ நின்னு பாலைக் குடிக்கிற மாதிரி… என்னதான் நம்ம காசு கொடுத்து வாங்கினாலும் எல்லாரும் வரதட்சணை வாங்கினதாத்தான நினைப்பாங்க…”
மகனின் கண்கள் அந்த வண்டியை ஆசையுடன் பார்த்ததைக் கண்டு வியப்புடன் “ஏண்டா இந்தப் பழைய வண்டில அப்படியென்ன ஈடுபாடு உனக்கு. வேணும்னா இதே மாதிரி புதுசு வாங்கலாமா” என்றார்.
“வேண்டாம்பா” ஏமாற்றத்துடன் சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான். லலிதாதான் கிடைக்க மாட்டாள் அவளுடன் கழித்த பொக்கிஷப் பொழுதுகளை பாதுகாக்கும் நினைவுச் சின்னம் கூடவா கிடையாது.
“வண்டி புழுதியா இருக்கு… ரெண்டு நாள் போகட்டும்… கிளீன் பண்ணி, சர்விஸ் பாத்து, சம்பந்தி வீட்ல விட்டுட்டு வந்துடு”
“ஆகட்டும்பா”
பாரி உணவுண்ண அமரும்பொழுதுதான் அவ்வளவு நேரமும் சாப்பிடாமல் பெற்றோர் காத்திருந்ததையே உணர்ந்தான்.
தாய் அவனுக்கு இலையைப் போட்டுவிட்டு பக்கத்தில் அவனது அப்பாவுக்கும் ஒரு இலையைப் போட்டு சாதத்தைப் பரிமாறினார்.
“நீங்க சாப்பிடல…”
“ஏண்டா நீ சாப்பிட்டியா இல்லையான்னு தெரியல. உன்னை நம்பி ஒரு பொண்ணு வேற வந்திருக்கு… அவளையும் வீட்டில் பாதுகாப்பா இறக்கிவிடணும். இந்த மழை வெள்ளத்தில் நீ பாதுகாப்பா வந்து சேரணும். இந்தக் கவலைல ஒரு வாய் சோறு கூடத் தொண்டைல இறங்கல”
“நான் லலிதா வீட்டிலிருந்து கிளம்பினப்ப ஒரு போன் பண்ணிருக்கலாம்மா… சாரி தோணலை” என்றான் உண்மையான வருத்தத்துடன்.
“இருக்கட்டும்டா… லலிதா போன் பண்ணி நீ நல்லாருக்கன்னு சொல்லிருச்சு. பசியோட வீட்டுக்கு வந்திட்டிருக்கார் ஆன்ட்டி, நல்ல சாப்பாடு செஞ்சு வைங்கன்னு சோர்ந்து உக்காந்திருந்த உங்கம்மாவை முடுக்கி விட்டிருக்கு. அந்தப் பொண்ணோட யோசனைப்படிதான் ஒரே சூட்டில் சுடுதண்ணி போட்டு, கொஞ்சம் வேப்பிலைக் கொத்தைப் பிடுங்கி சுடுதண்ணில காய்ச்சிக் கலந்து சொம்பில் எடுத்து வச்சோம். என்னமோ ஆன்ட்டிபயாட்டிக்காமே… இன்னைக்கு அலைச்சலில் உடம்புக்கு எதுவும் வந்திரக்கூடாதுல்ல ” என்றார் கபிலர்.
அவளது அக்கறையில் தடுமாறிய அவனது உள்ளம் இது கூடாது என்று தனக்குள் உரைத்தபடி “அந்தப் பொண்ணு ஏதோ இயற்கை அது இதுன்னு சொல்லிட்டு இருக்கும்… அம்மா நீ வழக்கமா எனக்கு என்ன செய்வியோ அதையே செய். எல்லாம் நம்ம வீட்டு வழக்கப்படியே நடக்கட்டும். மத்தவங்க சொல்லி எதுவும் மாற வேண்டாம். சரியா…” என்று சொல்லிவிட்டு எழுந்தான்.
“என்னங்க மறுசோறு கூட வாங்கல… வத்தல், துவையல் எல்லாம் வச்சது வச்சபடியே இருக்கு… எந்திருச்சுட்டான்” என்றார் அன்னை.
“ராப்பூரா கொசுக்கடிலயும், வெள்ளத்திலையும் வண்டி ஓட்டிருக்கான். பாரியும் அலைச்சல் முடிஞ்சு வழக்கத்துக்கு வரட்டும் பார்வதி. அதுவரை அவன் கிட்ட நொய்நொய்ங்காதே” என்றார் யோசனையுடன்.
பாரி ஊருக்கு வந்து சில நாட்களாகி விட்டன. இரவு சிலமணி நேரத் தூக்கம், காலை விழிப்பு, வயல் வரப்பு, அலுவலகம் என்று அவனது நாட்கள் மிக மெதுவாகவே கழிந்தன.
வீட்டுத் தொலைப்பேசி மணியடிக்க ரிசீவரை எடுத்த பார்வதி “எப்படி இருக்கிங்க… நேத்து நான் சொன்ன மாதிரி பக்குவத்தில் பனீர் செஞ்சிங்களா… நல்லா வந்ததா”
…
“ஆமா… எருமைப்பாலில் தான் கொழுப்பு அகம்.
என் மகன் படிச்சுட்டு வட இந்தியாவில் நிறைய இடத்தில் மில்க் ஸ்வீட் செய்ய எருமைப் பால் தான் உபயோகிப்பாங்கன்னு சொல்லுவான்”
…
“ஆமாம் குழந்தைங்க குடிக்க பசும்பால்தான் நல்லது. எருமைப்பால் செரிக்க நேரமெடுக்கும்”
எருமைப்பாலும் பசும்பாலும் என்ற தலைப்பில் லலிதா வீட்டினருடன் அன்னை தனது வெட்டிப் பேச்சினைத் தொடங்கிவிட்டதைக் கண்டான். வாரத்திற்கு இரண்டு முறைகளாவது அவர்கள் அழைப்பதும் அதன் பின் இவர்கள் அழைப்பதும் என்று அன்னைகள் இருவரும் பரஸ்பரம் பேசிக் கொண்டார்கள். மழை இரவின் போது இருவரும் ஆறுதலாகப் பேசத் தொடங்கி பின்னர் ஆரம்பித்த நட்பு அதன் பின்னரும் தொடர்ந்ததை அவனால் தடுக்க முடியவில்லை.
அம்மாவிடம் லலிதா இரவில் சில நேரம் பேசுவதை அறிந்திருந்தான். அவன் ஒரு முறை கூட அவளைத் தொடர்பு கொள்ள முயலவில்லை. அவன் வீட்டில் இருக்கும் நேரம் அவனது அன்னை பேச ஆரம்பித்தால் கூட அவ்விடத்தை விட்டு ஓசை எழுப்பாமல் நகர்ந்து விடுவான்.
அங்கிருந்தால் அவனைப் பார்வதி பேசச் சொல்லுவார். இவனுக்கு லலிதாவின் குரலைக் கேட்க கேட்க உள்ளத்தின் உறுதி தளர்ந்து விட வாய்ப்பிருக்கிறது.
என்னைப் பற்றி அறியாமல் தெரியாமல் இருப்பதுதான் லலிதா என்னை மறக்க ஒரே வழி. ஏதோ ஒரு வழிப் போக்கனாக எண்ணி மறந்து விடலாம் அதை விட்டுவிட்டு வலிய எனது நினைப்பை வர வைத்துக் கொள்கிறதே இந்தப் பெண் என்று எரிச்சலோடு நினைத்த வண்ணம் அன்னை பேசுவதைக் கேட்க அவர் கண்ணில் படாத இடத்தில் அமர்ந்து கொள்வான்.
லலிதாவைப் பற்றிய விவரம் அவனுக்குத் தெரிய வேண்டும் ஆனால் அவள் அவனை மறக்க வேண்டும். இதென்ன கிறுக்குத்தனமான எண்ணம் என்றெண்ணிக் கொள்வான் சில முறை.
மண்வெட்டியால் மண்ணைத் தோண்டி எதிர்பக்கம் இருந்த தென்னை மரங்களை நோக்கி மடையைத் திருப்பி விட்ட பாரியின் கவனத்தை களையெடுக்கும் பெண்கள் கலைத்து “பாரி களைப்பு தெரியாம இருக்க ஏதாவது பாட்டு பாடுறது” எனக் கேட்க
“பாட்டு எதுவும் நினைவுக்கு வரலைக்கா” என்றான் காரியத்தில் கண்ணாக…
“அமுதாவை நெனச்சுக்கோங்கண்ணே பாட்டு பிச்சுகிட்டு வரும்” என்றாள் இன்னொரு இளம் வயது பெண்.
அமுதாவைப் பார்த்தே நாள் கணக்காகிவிட்டது. வண்டியை வேறு அவன் வீட்டில் நிற்கட்டும் பிறகு வந்து எடுத்து செல்கிறேன் என்று அவள் தகப்பன் சொன்னது பாரிக்குத் தனது சந்தோஷம் சற்று நேரம் நீடித்ததைப் போலவே தோன்றியது.
அவர்கள் தோட்டத்தில் பம்பு செட்டுக்கருகே மோட்டாருடன் சேர்த்து ஒரு சிறிய அறை ஒன்று கட்டி வைத்திருந்தனர். இரவில் காவல் காக்கும் போது அங்கு தங்கிக் கொள்வது வழக்கம். அறுவடை சமயம் அங்குதான் பாரி தங்கியிருப்பான். அந்த இடத்திற்கே வண்டியை ஓட்டி வந்துவிட்டான். இரவு நேரத்தில் அங்கேயே பாதி நாள் தங்கிக் கொள்கிறான். மனம் கனக்கும் பொழுது அந்த வண்டியில் சற்று நேரம் படுத்துக் கொண்டு பாட்டு கேட்பான் அல்லது பாட்டு பாடுவான்.
“அண்ணே பாட்டு” என்றாள் அந்தப் பெண்ணும் விடாமல்
முதன் முதலில் லலிதாவை சந்தித்த பொழுதும் அவளின் சிரிப்பும் நினைவுக்கு வர அவனது வாய் தன்னால் ராகத்தை இழுத்தது.
அச்சு வெல்லப் பேச்சுக்காரி
ஆரா மீனு கண்ணுக்காரி
பச்சரிசி பல்லுகாரி
பவள வாய் சிரிப்புக்காரி
வட்ட நிலா பொட்டுக்காரி
வஞ்சமில்லா மனசுக்காரி
“பாத்தியாக்கா அண்ணியை நினைச்சதும் அண்ணனுக்குப் பாட்டு பிச்சுகிட்டு வருது பாரு” என்று தங்களுக்குள் பேசிச் சிரித்தனர்.
“அக்கோய் அச்சு வெல்லப் பேச்சுகாரின்னு அண்ணாத்த பாடுறாரே. நம்ம அமுதா வெடுக் வெடுக்குன்னுல்ல பேசும். போன மாசம் அவங்கம்மா மில்லுல ஒரு டின் ‘கடலை எண்ணை’ அரைச்சுட்டு வர சொல்லிருந்தாங்க. கொண்டு போயி கொடுத்துட்டு, அமுதாகிட்ட ஒரு வா தண்ணி கேட்டா வெடுக் வெடுக்குன்னு திட்டிட்டே குடுக்குதுக்கா. இந்நேரம் நம்ம பாரிஆண்ணன் வீட்ல தண்ணி கேட்டா அவங்கம்மா நீர் மோரே கொடுப்பாங்க”
“அப்ப நமக்கு மட்டும் பச்சை மிளகாய் பேச்சுன்னு சொல்லுடி. கல்யாணத்துக்கப்பறம் அண்ணன் வீட்ல கூட நமக்கு நீர்மோர் கிடைக்காது போலிருக்கே” என்று கவலையாக சொன்னாள் ஒருத்தி.
“அச்சு வெல்லப் பேச்செல்லாம் அண்ணனுக்கு நமக்கு எப்போதுமே பச்சை மிளகாய்தான். வேலையப் பாப்பியா” என்று அங்கு வேலை செய்த மற்றொரு பெண் ஒருத்தி வம்பு பேசியவர்களை அடக்க, பெண்டீர் தங்களது வேலையைத் தொடர்ந்தனர்.
“என்ன சம்பந்தி எப்படி இருக்கிங்க. வீட்ல தங்கச்சி, மாப்பிள்ளை எல்லாம் நல்லாருக்காங்களா. சின்ன தம்பி ஹாஸ்டலில் இருந்து வந்துடுச்சா” என்ற வண்ணம் கடைத்தெருவில் பாரியின் அப்பாவும் அமுதாவின் அப்பாவும் எதிர்எதிரே பார்த்த போது குசலம் விசாரித்துக் கொண்டனர்.
“நல்லா இருக்கோம் மாப்பிள்ளை. உங்க வீட்டில் தங்கச்சி, மருமக எல்லாரும் சவுக்கியமா… “
“எல்லாரும் நல்ல சுகம். நானே உங்களைப் பாக்க வரணும்னு நினைச்சேன். மழையும் வெள்ளமும் வந்து நிச்சயம் செய்ய வேண்டிய தேதி தள்ளி போயிருச்சுன்னு வீட்டில் உங்க தங்கச்சி ஒரே குடைச்சல். அதனால குலதெய்வம் கோவிலுக்கு போயி ஒரு பூஜை போட்டுட்டு சுப காரியத்தைத் தொடங்கலாம்னு பாக்குறேன்” என்றார்.
“அப்படியே செய்யுங்க மாப்பிள்ளை. நீங்க சொன்னதும்தான் எனக்கும் யோசனை வந்திருக்கு. உங்க தங்கச்சி கிட்ட கலந்து பேசிட்டு நானும் இந்த வெள்ளிக் கிழமையே பூஜை போட்டுட்டு வந்துடுறேன். நீங்க எப்ப கோவிலுக்குப் போறிங்க”
“பையன் அடுத்த வாரம் வர்றான். அவன் வந்ததும் தான் பூஜை போடணும்”
“இந்த தடவை எத்தனை நாள் லீவு”
“தங்கச்சி கல்யாணத்துக்கு ஒரு மாசம் லீவு சேத்து வச்சுருக்கான் போலிருக்கு. இந்த தடவை போறப்ப என் மருமகளோட தம்பியையும் கூட்டிட்டுப் போறதால விசா விஷயமா ரெண்டு மூணு நாள் வேலை இருக்குன்னு சொன்னான். அது முடிஞ்சதும்தான் அவனுக்கு வசதிப் படுற தேதியாப் பாத்து பூஜையை வைக்கணும்”
“சரி மாப்பிள்ளை முடிவு பண்ணிட்டு ஒரு வார்த்தை சொல்லுங்க. ஏன்னா ரெண்டு பேரு பூஜையும் ஒரே நாளில் வந்துடக் கூடாதே” என்று சொல்லிவிட்டு விடை பெற்றார்.