அத்தியாயம் – 15
லலிதாவுக்கு என்னவோ அந்தக் காரில் பாரியுடன் செல்லும் பயணம் ஏதோ தேரில் பவனி வருவது போன்ற உணர்வைத் தந்தது.
இதோ லலிதாவை அவளது வீட்டினரிடம் ஒப்புவிக்கும் பயணம் ஆரம்பித்து விட்டது. அவளை விட்டுப் பிரிவது ஏதோ மனதின் அடியாழத்தில் வலித்தது பாரிக்கு.
அவனது ஆசைகள் கனவுகள், தமிழ் சுவை எல்லாம் ஆவலுடன் பகிர்ந்து கொண்டான். அவளும் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டாள். ஒரு சில மணி நேரம் மட்டுமே லலிதாவுடன் அவன் பகிர்தல் என்பதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இந்த சில மணி நேரத்தை காலம் முழுவதும் நீட்டித்துக் கொள்ளும் வெறி அவன் மனதில்.
அந்த காலை வெளிச்சத்தில் லலிதா பாரியைப் பார்த்த பார்வை புதிது. ‘கொஞ்சம் கருப்புத்தான் பரவல்ல கருப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு. அவன் முகத்தில் பதின்பருவத்தின் வந்த பருக்களின் அடையாளங்கள் சில இடங்களில். மீசை ரொம்ப அடர்த்தியாய் இருக்கு கொஞ்சம் குறைக்க சொல்லணும்’. உரிமை உள்ளவளாய் நினைத்துப் பேதை மனது கணக்குப் போட்டது.
களைப்புத் தெரியாமல் இருக்க அவன் பேசிய தமிழ் வாழ்க்கை பற்றிய குறிப்பு முழுவதும் அவளது மனதில் அழியா கல்வெட்டாய். அவனது தமிழில் சொக்கிக் கிடந்தது அவளது மனம்.
அழகா அழகா குயிலாவேன் உன் தோளில்
அழகி அழகி இது போதும் வாழ்நாளில்
என்று மனதில் கானம் இசைத்தவண்ணம் அவர்கள் பயணம் தொடர்ந்தது எவ்வளவு முடியுமோ அவ்வளவு மெதுவாக.
சாலையின் இருமருங்கும் இருந்த குப்பைகளையும் மண்ணையும் அரித்துத் தள்ளி செவிலிமேட்டின் அருகே இருந்த ஆற்றின் தடத்தில் தள்ளிய தண்ணீர் பெருக்கெடுத்து ஆற்றில் ஓடியது.
“இங்க வரத்தான் இத்தனை வேகம்” என்றான் பாரி லலிதாவிடம்.
“தண்ணீரும் மனசும் ஒண்ணு பாரி அதுக்கான இடத்தைத் தேடி அடையும் வேகம் அதிகம்” என்றாள் அவனிடம்.
இருவரின் பயணமும் தொடர்ந்த சமயம் சாலையோரத்தில் இருந்த உணவு விடுதி ஒன்று அவர்களை வரவேற்றது. அங்கே அவர்கள் மட்டுமின்றி பயணம் செய்த பலரும் தஞ்சம் அடைந்திருந்தனர். அந்தப் பகுதி மட்டும் மழையின் சேதாரம் குறைவாகத் தெரிந்தது.
“இதெப்படி” என்றான் பாரி வியப்புடன்.
“இங்க அய்யங்கார்குளம்-னு ஒரு ஊர் பக்கத்தில் இருக்கு. அங்க ஒரு ஊர் இருக்கு. அங்க இருக்குற பெருமாள் ஒவ்வொரு சித்ரா பௌர்ணமி அன்னைக்கும் அவர் கோவில் குளத்திற்குக் கீழ கட்டிருக்குற மண்டபத்தில் எழுந்தருவார். சித்ரா பவுர்ணமி அன்னைக்கு மட்டும் அதில் இருக்கும் தண்ணியை மோட்டர் வச்சு இறைச்சுட்டு சுத்தம் பண்ணி பெருமாளை அந்தக் குளத்துக்குக் கீழ இருக்குற மண்டபத்துக்குக் கூட்டிட்டுப் போவாங்களாம். மத்த நாளெல்லாம் அங்கிருக்குற தண்ணி எல்லாம் மண்டபத்தில் நிறைஞ்சுருக்கும்னு சொல்வாங்க. இந்தத் வெள்ளத் தண்ணி அந்த மண்டபத்தையும், படித்துறையும் நிறைச்சிருக்கும்னு நினைக்கிறேன்” என்றாள்.
“மண்டபத்துக்குக் கீழ தண்ணீர். தெர்மாக்கோல் போடாமலேயே தண்ணி ஆவியாறது தடுக்கப்படும். கோவிலுக்குப் பக்கத்தில் குளம். வெள்ளம் வரும்போது அதிகமான தண்ணீர் எல்லாம் தன்னால குளத்துக்குப் போயிடும். வீட்டுக்கு வீடு கிணறு. மழை காலத்தில் தண்ணீர் எல்லாம் கிணத்தில் வடியும். அதனால வெயில் காலத்திலும் தண்ணீர் பிரச்சனை இல்லை. இதெல்லாம் நம்ம ஊர்ல அந்த காலத்திலேயே எத்தனையோ திட்டங்கள் போட்டு நிறைவேற்றி இருக்காங்க. அந்தத் திட்டத்தை எல்லாம் எல்லாம் மறுபடியும் ஆய்வு செஞ்சு இம்ப்ரூவ் செய்தாலே வந்தாலே நமக்குப் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைச்சுடும்” என்றான் பாரி.
அங்கு தென்பட்ட விடுதியில் பயணிகள் பலர் இளைப்பாறிக் கொண்டிருந்தனர். விடுதியின் உரிமையாளர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களுக்கு உதவும் பொருட்டு உணவு விடுதியைத் திறந்து வைத்திருந்தார். அது தவிர உடைமாற்றுவதர்க்காக ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனியாக விடுதி அறைகளைத் திறந்து விட்டிருந்தார். வாசலில் அவசரத் தேவைகளுக்காக சில முதலுதவி மருந்துகள், பேஸ்ட் பிரஷ் கைத்தறித் துண்டுகள் எல்லாம் சலுகை விலையில்.
சிறு பழுதுகளை சரி செய்ய மெக்கானிக் ஒருவன் கூட. சேதமடைந்த வண்டிகளை வீடு போகும் வரையாவது சரி செய்து ஓட்ட முடியுமா என்று கேட்டு அவனை மக்கள் மொய்த்துக் கொண்டிருந்தனர்.
“ஓனர் நல்ல மனிதர் அதைவிட நல்ல வியாபாரி” என்றான் பாரி லல்லியின் கையைப் பிடித்து இறங்க உதவி செய்தவாறே.
“எப்படி சொல்றிங்க பாரி”
“இலவசமா காப்பி டீ எல்லாருக்கும் தந்துட்டு இருக்கார். மெக்கானிக் ஏற்பாடு செய்தாலும் கார் டேமேஜ் ஆனவங்களுக்கு டாக்சியும் ஏற்பாடு செய்றார். அனேகமா டாக்சி நிறுவனம் கூட அவரோட சொந்த நிறுவனமாத்தான் இருக்கனும். ஹோட்டலுக்கும் டாக்சி நிறுவனத்திற்கும் ஒரே மாதிரியான பெயர்” என்று சுட்டிக் காட்டினான்.
“இதை நான் கவனிக்கவே இல்லை பாரி” என்றாள் லல்லி
“ஒரு பெண்ணின் பாதுகாவலனாக இருக்குற ஆண் தான் நாலு திசையையும் கவனிச்சுப் பாதுகாப்பா கூட்டிட்டுப் போகணும்” என்றான் அவளிடம்.
“எல்லாரும் ஈர டிரஸ்சை மாத்திட்டு வேற டிரஸ் போட்டுக்கிறாங்க. நீ வேணும்னா காஞ்சீபுரத்தில் எடுத்த புது சேலையைக் கட்டிக்கிறியா” என்றான்.
“எது பாரி… அந்தப் பட்டு சேலையா…”
“ஆமா”
“அந்தப் பட்டு சேலை உங்க நிச்சியத்துக்கு எடுத்ததில்லையா”
“அதுக்கு வேற எடுத்துக்குறேன். இப்ப உன் ட்ரெஸ் எல்லாம் கசங்கிருக்குப் பாரு”.
அவனை அதிர்ச்சியோடுப் பார்த்தவள் “கசங்கிருக்கு ஆனால் கிழியலையே… நான் இதுவே போட்டுக்குறேன்” என்று அவனிடம் முணு முணுத்துவிட்டு இறங்கினாள்.
“இந்தா பிரஷ் பண்ணிட்டு வா…” என்று பேஸ்ட் பிரஷை அவள் கைகளில் திணித்தான்.
பல்விளக்கி, முகம் கழுவி தன்னை சீர் செய்து லலிதா ஒவ்வொரு காரியங்களையும் தன்னால் செய்தாலும் அவள் மனதின் ஒவ்வொரு இணுக்கும் பாரி நிறைந்திருந்தான். வேலிகளை உடைத்து, பள்ளத்தை நோக்கிப் பாயும் வெள்ளம் போல அவள் மனம் தடைகளைத் தகர்த்து அவனைத் தஞ்சம் அடைந்தது. இந்தப் பயணம் அவளுக்கு ஒரு முடிவைத் தர வேண்டும். அவளால் பாரியை விட்டு இருக்க முடியாது. லல்லியின் வாழ்க்கையின் ஒரு பங்காகப் பாரியால் மட்டும்தான் தொடர முடியும்.
பாரி காபி இரண்டும் சாப்பிட தோசைகளும் ஆர்டர் செய்துவிட்டு லலிதாவின் வரவிற்காக காத்திருந்தான். அவன் மனது தீவிரமாக எதையோ அசை போட்டுக் கொண்டிருந்தது. லலிதாவிடம் தனது எண்ணத்தை எப்படித் தெரிவிப்பது என்று தெரியவில்லை. அவளுக்குத் தன் மேல் மரியாதை இருக்கிறது. ஆனால் அது அவன் மனதைத் திறந்து காட்டப் போதுமா என்று தெரியவில்லை. அவளைப் பார்த்த போது காதலில்லை. ஆனால் இந்த நொடி தனது தாய்க்கு அடுத்த நிலையில் அவள் இருந்தாள் என்பது நிஜம்.
அவனது யோசனையைக் கலைக்கும் வண்ணம் அருகிலிருந்த மனிதர் ஒருவர் சத்தம் போட்டு தொலைபேசியில் பேசினார்
“ஏண்டா உன்னை நம்பித்தானே பொருளைக் கொடுத்தேன். திருப்பி பத்திரமா ஒப்படைக்கிறேன்னு வாக்குறுதி தந்தியே. இப்ப நீயே உரிமை கொண்டாட நினைக்கிறது என்ன விதத்தில் நியாயம். இதெல்லாம் கடவுளுக்கே அடுக்காது. நம்பிக்கை துரோகத்துக்கு பலன் கைமேல கிடைக்கும்”
தூக்கி வாரிப் போட அமர்ந்தான். அது பக்கத்திலிருந்த மனிதர் சொன்னது போல அவனுக்கு ஒலிக்கவில்லை. லலிதாவின் தந்தை அவனிடம் கேட்பது போலவே தோன்றியது. திருமணம் நிச்சியமான பெண் வெள்ளத்தில் மாட்டியதை நினைத்து பரிதவித்துக் கொண்டிருப்பவர்களிடமிருந்து அவர்களது பெண்ணைப் பறிப்பது எவ்வளவு பாவம்.
‘ஆனால் அந்த மாப்பிள்ளை அவளுக்குத் தகுதியானவன் இல்லை பாரி’ என்ற மனதின் குரலை அடக்கினான்.
‘இத்தனை அருமையா அவளைப் பெத்து வளர்த்தவங்களுக்குத் தெரியாதா அவளுக்கு எது நல்லது கெட்டதுன்னு. அவள் வார்த்தைகள் மூலமே உனக்குத் தெரிஞ்ச நபர் நல்லவன் கெட்டவன்னு முடிவு பண்ண நீ யார். உன் வீட்டுப் பொண்ணுக்குக் கல்யாணம் நிச்சியமானதும் வேற யாராவது மனசைக் கலைச்சா சும்மா விட்டுடுவியா. பாரி உனக்கு ஒரு நியாயம் மத்தவங்களுக்கு ஒரு நியாயமா’ என்று அதட்டி அவனது மனசாட்சி அவனைத் தட்டி எழுப்பி நியாயத்தை உணர்த்தியது.
லலிதா பாரி அமர்ந்திருந்த சாப்பாட்டு மேஜையை அடைந்தபோது ஏனோ பாரியின் முகம் மிக இறுக்கமாய் இருந்தது.
“சாப்பிட்டுட்டுக் கிளம்பணும். என் போனை இங்கயே சார்ஜ் போட்டு வச்சிருக்கேன். வீட்டுக்குப் பேசிடலாம்” என்றான் அவளிடம்.
இருவரும் பேசியபோது லலிதாவின் பெற்றோரின் குரலில் தெரிந்த கவலை அவர்கள் யாரும் அன்று தூங்கவில்லை என்று காட்டியது. தந்தையின் குரலில் தெரிந்த தழுதழுப்பையும் தாயின் கண்ணீரும் அவளுக்கு பாசத்தை உணர்த்தியது.
“அம்மா அழக்கூடாது… நான் தான் பத்திரமா இருக்கேனே. பாரி என்னை நல்லா பாத்துக்கிறார். அவர் என் பக்கத்தில் இருக்குற வரை என் பாதுகாப்பை நினைச்சு நீங்க பயப்பட வேண்டயதில்லை” என்றாள் தாயிடம்.
“அக்கம் பக்கத்தில் கேள்வி கேட்டவங்களுக்கு நீ பரிமளா வீட்டில் ராத்திரி தங்கிட்டன்னு சொல்லிருக்கேன்” என்றார் அன்னை.
“சரி நானும் அதையே சொல்றேன்”
“உன்னைக் கூட்டிட்டு வர, அப்பாவை வந்து பஸ்டாண்ட் கிட்ட நிக்க சொல்லட்டுமா” என்றார் அடுத்த கேள்வியாக.
“பாரி கூட பாதுகாப்பா வீட்டுக்கு வந்து இறங்குறேன். சாப்பாடு எதுவும் சமைச்சு வைங்க” என்றாள் அழுத்தமாக. அன்னை சொன்ன மறைமுக செய்தி அவளையும், அவள் சொன்ன மறைமுக செய்தி அன்னையையும் அடைந்தது.
அதன் பின்னர் லலிதாவின் தந்தையிடம் ஓரிரு வார்த்தைகள் பேசினான் பாரி. அலைப்பேசியை வாங்கி அவனிடம் நன்றி தெரிவித்த லலிதாவின் தாயார்
“அவளுக்கு கூடப் பிறக்காத உடன் பிறப்பாட்டம் பாதுகாத்துக் கூட்டிட்டு வர்றிங்க தம்பி. உங்களுக்கு எங்க குடும்பமே கடன் பட்டிருக்கோம்” என்றார்.
பதில் சொல்ல முடியாமல் சில வினாடிகள் திகைத்தான் பாரி பின் சுதாரித்துக் கொண்டு
“நன்றிமா நான் முன்னாடியே வாக்குக் கொடுத்த மாதிரி உங்க பொண்ணு பத்திரமா உங்க கிட்ட வந்து சேருவாங்க” என்று மனம் கனக்க பதிலளித்தான்.